:ஆசியா
Tidal wave wreaks death and destruction throughout
Sri Lanka
பேரலைக் கொந்தளிப்பு இலங்கை முழுவதும் பேரழிவையும், இறப்புக்களையும்
கொடுத்துள்ளது
By our correspondents
28 December 2004
Use this
version to print |
Send this link by email |
Email the author
எந்தவித எச்சரிக்கையும் இன்றி, ஞாயிறு காலை, இலங்கையை தாக்கிய பேரலைக்
கொந்தளிப்பு, அதையொட்டி மிகப் பெரிய அழிவு, துன்பங்கள் மற்றும் இறப்புக்களை விட்டுச் சென்றுள்ளது. கடைசியாக
வெளிவந்துள்ள அதிகாரபூர்வ மடிந்தோர் எண்ணிக்கை 12,000 க்கும் மேல் ஆகும்; ஆனாலும் சில கடுமையான
பாதிக்கப்பட்டுள்ள இடங்களில் இருந்து துல்லியமான மதிப்பீடு இன்னும் கிடைக்கவில்லை. மீட்பு, மற்றும் உதவிப் பணியாளர்கள்
தகர்ப்பிற்குட்பட்டுள்ள பகுதிகளில் சடலங்களுக்காக இன்னமும் தொடர்ந்து தேடிவருகின்றனர். போக்குவரத்தும்,
தொடர்புகளும் பெருந்தடைக்கு ஆளாகியுள்ளன.
தீவின் முழு கிழக்கு, மற்றும் வடக்கு கடலோரப் பகுதிகளையும் சுனாமி தாக்கியதோடன்றி,
தெற்குப் பகுதிகளையும் தாக்குதலுக்கு ஆளாக்கியுள்ளது. வீடுகள், வணிகங்கள், சாலைகள், பாலங்கள்,
தொலைத்தொடர்புகள் என்று அனைத்துமே சேதத்திற்கு உட்பட்டுள்ளன அல்லது அழிக்கப்பட்டுவிட்டன. அதிகாரபூர்வமான
தகவலின்படி ஒரு மில்லியன் மக்கள், கிட்டத்தட்ட மொத்த மக்கட்தொகையில் 5 சதவிகிதத்தினர் இடம் பெயர்ந்துள்ள
நிலைக்கு தள்ளப்பட்டுளளனர். பலரும் தங்கள் பிரியமானவர்கள், வீடுகள், அனைத்து உடைமைகள் என்று எல்லாவற்றையும்
இழந்து விட்டனர்.
நாட்டில் 20 ஆண்டுகளாக நடைபெறும் உள்நாட்டுப் போர் மையம் கொண்டுள்ள,
வடக்கிலும் கிழக்கிலும் கடுமையான சேதங்கள் ஏற்பட்டுள்ளன. இலங்கையின் இராணுவம் அம்பாறையில் 2,183;
திருகோணமலையில் 586; யாழ்ப்பாணத்திலும், கிளிநொச்சியிலும் 3,700 என்று இறந்தவர் எண்ணிக்கை
இருக்கக்கூடும் என்று மதிப்பிட்டுள்ளது. இறுதி எண்ணிக்கை இன்னும் கூடுதலாகத்தான் இருக்கும.
LTTE இன் கட்டுப்பாட்டின்
கீழ் உள்ள பகுதிகளைப் பற்றி முழு மதிப்பீடுகள் இல்லை என்று அதிகாரிகள் ஒப்புக் கொண்டுள்ளனர்.
தெற்கு மாவட்டங்களில் இருந்து நேரில் கண்டவர்கள் கூறும் தகவல்களின்படி, காலியில்
650, மாத்தறையில் 389 என்று இறந்தவர் எண்ணிக்கை அதிகாரபூர்வமாக கொடுக்கப்பட்டது மிகவும் குறைவு
என்று தெரியவருகிறது. மாத்தறையில் ஞாயிற்றுக் கிழமை கூடிய சந்தை ஒன்றில் நூற்றுக்கணக்கான மக்கள் கடலில்
மூழ்கடிக்கப்பட்டனர். காலி பஸ் நிறுத்தத்தம் முழுவதுமே சீறிவந்த அலைகளினால் தகர்ந்து போயிற்று.
தொலைக்காட்சியில் வரும் காட்சிகள் சுழன்று, சீறும் அலைகள் நிறைந்த கடலில் ஆயிரக்கணக்கான மக்கள்
உயிருக்குப் போராடுவதைக் காட்டுகின்றன. வரலாற்றுப்புகழ் மிகுந்த காலி கோட்டை அழிந்து விட்டது.
மாத்தறையில் வாழும் ஒருவர், லக்பிமா செய்தித்தாளுக்கு, ஏழு மீட்டர் உயரம்
கொண்டிருந்த நீர்ப்பரப்பு நகரத்தை தாக்கியதாகக் கூறினார். இந்தப்பகுதி தாழ்வான, பரந்த
கடலோரப்பகுதியாகும்; பல நீர்நிலைகளையும் கொண்டுள்ள இவ்விடம் சுனாமியின் நேர் பாதையில் உள்ளது.
சாதாரண நாட்களிலியே இந்தப் பகுதியுடனான தொடர்புகள் எளிதல்ல. இப்பொழுது அது முற்றிலும் சிதைந்துள்ளது.
காலிக்கும், தீவின் தென்மேற்கு கடலோரத்திலுள்ள கொழும்பிற்கும் இடையே
பாதிக்கப்பட்டுள்ள பகுதிகள் ஒவ்வொரு சிறுநகரம், மீன்பிடிப்பில் ஈடுபடும் கிராமம் இவற்றின் பட்டியல் போல்
உள்ளது. கடலோரப்பகுதியை ஒட்டி முற்றிலும் அமைக்கப்பட்டுள்ள இரயில்பாதை மறைந்துவிட்டது.
அம்பலங்கொடாவில் இருந்து காலிக்கு அமைந்துள்ள 35 கிலோமீட்டர் தூர இரயில்பாதை கடல்மட்டத்திற்கும் கீழே
போய்விட்டது. 1000 பயணிகளோடு பயணித்திருந்த இரயில் வண்டி ஒன்று பெரும் அலைகளால் தாக்குண்டு
இரண்டாகப் பிளந்து அடித்துச் செல்லப்பட்டது.
பாதிப்பிற்காளானவர்களில் பெரும்பாலானவர்கள் மிகவும் வறியவர்கள். பல
சதாப்தங்களாக, இலங்கையின் கடலோரப் பிரிவுகள் மீன்பிடிப்பில் ஈடுபடும் கிராமங்கள் அவற்றிலுள்ள பழமையான
குடிசைகள், மரச்சட்டங்கள், இரும்புக் கூரைகள் என்ற அடையாளங்களுடன் இருந்து வருகின்றன. இத்தகைய வீடுகள்,
பேரலைகள் கொந்தளிப்பு ஒரு புறம் இருக்க, வேகமாக வீசும் காற்றுக்கு எதிராகவே போதிய பாதுகாப்பை
அளிக்க முடிவதில்லை.
சுனாமி தாக்கியபோது, நூற்றுக்கணக்கான சிறிய மீன்பிடிக்கும் படகுகள் கடலுள்
சென்றிருந்தன. ஒரு மிகப் பெரிய ஆபத்து வரவுள்ளது என்பதற்கான அறிகுறிகள் ஏதும் தென்படவில்லை: ஆகாயம்
அசைவற்றும், ஒளிவீசிய நீலவண்ணத்தையும் கொண்டிருந்தது; நிலத்தில் இருந்து காற்று வந்து கொண்டிருந்தது.
மீனவர்களைப் பொறுத்தவரையில் இது மிகவும் ரம்மியமான வானிலை ஆகும். கிறிஸ்துமஸ் தினத்திற்கு மறுதினமாக
இல்லையென்றால் இன்னும் ஏராளமானவர்கள் கடல்பரப்பிற்குள் வந்திருப்பர். மிக, மிக ஏழைகள்தாம், இரண்டு
நாட்கள் கூட விடுமுறை என்று எடுத்துக் கொள்ள முடியாதவர்கள்தாம், மீன்பிடிக்க வந்திருந்தனர்.
மிக மோசமாக பாதிப்பிற்காளான பகுதி என்று கூறமுடியாத, கொழும்பிற்கு உடனடி
வடக்கில் உள்ள கரையோரப்பகுதி, மற்ற இடங்களில் ஏற்பட்ட சேதம் பற்றிய பரப்பைப் பற்றிய உணர்வை நன்கு
புலப்படுத்துகிறது. 3 கிலோமீட்டர் தூரம் உள்ள கொழும்புத் துறைமுகத்தில் இருந்து கலனி ஆற்றின் முகத்துவாரம்
வரை, பெரும்பாலான குடிசைகள் திடீரென வெளிப்பட்ட வெள்ளத்தால் அழிந்து போயின. அங்கு வசிக்கும்
மீனவர்களில் பெரும்பாலானவர்கள் வறியவர்கள் ஆவர். சிமென்ட் வீடு கட்டும் வசதியுடையவர்கள், அவர்களுடைய
குடும்பத்தில் இருக்கும் பெண்கள் மத்திய கிழக்கில் வீடுகளில் பணிபுரிபவர்களாக இருந்து அனுப்பிவைக்கும் பணத்தை
நம்பி இருப்பவர்கள் ஆவர்.
கொழும்பிற்கு சற்றே வடக்கில் உள்ள ஒரு மீனவக் கிராமமான மாத்ராவிற்கு
WSWS
செய்தியாளர்கள் சென்றிருந்தனர். அங்கு சென்ட் ஜேம்ஸ் சேர்ச், சாந்தி நிவாஸ் இல்லம், சென்ட் ஜோசப்
சேர்ச், விஸ்வைக் பூங்கா என்ற இடங்களில் 300 குடும்பங்களுக்கும் மேல் தற்காலிகமாக உறைவிடம்
கொடுக்கப்பட்டிருந்தனர்.
அங்கு நடந்தவற்றை ஆர். தனபாக்கியம் விவரிக்கிறார்: "பத்து அடி (3
மீட்டர்கள்) உயரத்திற்கு அலைகள் எழும்பி வந்ததை நான் பார்த்தேன். நாங்கள் அனைவரும், கிட்டத்தட்ட 40
குடும்பங்கள் அங்கிருந்து ஓட்டம் பிடித்தோம். நாங்கள் அணிந்திருந்த உடைகளைத் தவிர வேறு எதையும் எங்களால்
எடுத்துச் செல்ல முடியவில்லை." இவ்வம்மையாரின் உடமைகள் அனைத்தும், கிட்டத்தட்ட 100.000 ரூபாய்கள்
[$US 2,000]
அடித்துச் செல்லப்பட்டுவிட்டன.
"எங்களுக்கு எந்த எச்சரிக்கை அறிவிப்பும் கொடுக்கப்படவில்லை. கொடுக்கப்பட்டிருந்தால்
சிலவற்றை நாங்கள் காப்பாற்றியிருப்போம். அரசாங்கத்தில் இருந்தோ, கொழும்பு மாநகர சபையில் இருந்தோ
எங்களுக்கு எதுவும் கிடைக்கவில்லை. இங்கு பலரும் முன்பு ஆட்சி நடத்தியிருந்த
UNP (United National Party)
க்கு வாக்குகளை அளித்திருந்தோம். அக்கட்சியில் இருந்து சில அரசியல் வாதிகள் எங்களைக் காண வந்திருந்தனர்;
ஆனால் அவர்கள் எங்களுக்கு எந்த உதவியையும் தரவில்லை. அரசாங்கத்தில் இருந்து எவரும் எங்களுக்கு என்ன
ஆயிற்று என்று பார்க்கக்கூட வரவில்லை" என்று தனபாக்கியம் விளக்கிக் கூறினார்.
பல தகவல்களின்படி, சுநாமி, இலங்கையின் கடலோரப் பகுதியை காலை சுமார்
9.30 ஐ ஒட்டித் தாக்கியது; இது சுமத்ராவிற்கு வடக்கே மிகப் பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டு அதனால் உந்துதல்
பெற்று மூன்றரை மணி நேரத்திற்குப் பின் வந்த நிகழ்வாகும். அப்படியும் கூட எந்த எச்சரிக்கைகளும்
கொடுக்கப்படவில்லை.
பேராதனை பல்கலைக்கழகத்தின் பூமி இயல் பேராசியராக இருக்கும் டாக்டர்
கபிலா தகநாயகே, WSWS
இடம், தக்க கருவிகளும் வசதிகளும் வழங்கப்பட்டிருந்தால், நாடு முழுவதும் உரிய காலத்தில் முறையான
எச்சரிக்கை விடுத்திருக்க முடியும் என்று கூறினார். மிகக் குறைந்த அளவில் இருக்கும் கருவிகளைப்
பராமரிப்பதற்குக்கூட அரசாங்கம் போதிய பணத்தை ஒதுக்குவதில்லை என்று அவர் சுட்டிக்காட்டினார்.
அலைக் கொந்தளிப்பால் ஏற்பட்டுள்ள மோசமான அழிவுகளுக்கு இடையே, முன்னெச்சரிக்கை
கொடுக்கக்கூடிய கருவிகள் முறை இல்லாதது உணர்வைத் தூண்டும் அரசியல் பிரச்சினையாக மாறிக்கொண்டிருக்கிறது.
அமெரிக்காவை அடிப்படையாகக் கொண்டுள்ள ABC
வர்ணித்ததாவது: "இலங்கை கடலோரப் பகுதியில் உள்ள
சமூகங்களுக்கு, உயிரை மாய்க்கும் திறனுடைய அலைகள் பற்றித் தெரிவிக்கும் சர்வதேசத் தொடர்புமுறையுடன்
இணைந்திருந்தால், இந்தப் பெரும் சமுதாய அழிவு தவிர்க்கப்பட்டிருக்கக் கூடும்."
ஆனால், ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவின் தலைமையில் இயங்கும், மானுடப்
பேரழிவு நிர்வாகக் குழு எந்தப் பொறுப்பையும் ஏற்க மறுத்துள்ளது. ஒரு செய்தித் தொடர்பாளர்
WSWS இடம்
தெரிவித்தார்: "பேரழிவு நிர்வாகம் பற்றிய நிறுவனம் அவற்றைத் தடுக்கும் முயற்சிகளைப் பற்றிப்
பொருட்படுத்துவதில்லை; மாறாக அதன் விளைவுகள் எப்படி எளிதாக்கப்படலாம், கிடைக்கும் உதவிகள் எந்த
வகையில் கூடுதலான நலன்களில் பங்கிட்டுக் கொடுக்கப்படலாம் என்பதைத்தான் கருத்திற் கொண்டுள்ளது."
மற்றொரு அதிகாரபூர்வ அமைப்பான
Disaster Information Cetnree,
பேரழிவுத் தகவல் மையம், எனப்படுவது, இதைப் பற்றி எந்தக் கருத்தையும் கூறாததோடு, அதிகத்
தகவல்களையும் கொடுக்க இயலவில்லை. "பல்லாயிரக்கணக்கான மக்கள் மடிந்து போயினர் என்று மட்டுமே
நாங்கள் அறிவோம்." என்று அவர்களுடைய பிரதிநிதி ஒருவர் தெரிவித்தார்.
பிரதம மந்திரி மகிந்தா ராஜபக்சேயின் செயலாளரான லலித் வீரதுங்கா
Agence France Presse இடம் ஒப்புக்கொண்டார்:
"நாங்கள் சற்று மெத்தனப் போக்கில் இருந்துவிட்டோம். மக்கள் முன்கூட்டியே நிலநடுக்கங்கள், பேரலைக்
கொந்தளிப்புக்கள் பற்றி கணித்துக் கூறிவந்துள்ளனர்; நாங்களோ சிறு நில அதிர்வைத்தான் உணர்ந்திருந்தோம்.
நாங்கள் இத்தகைய எச்சரிக்கைகளை தீவிரமாக கருத்திற்கொள்ளவில்லை."
ஒரு விசைப்படகைச் செலுத்துபவருக்கும் கொழும்புத் துறைமுகத்தில் மாலுமிகள் நிலையத்தில்
இருந்தவருக்கும் இடையே நிகழ்ந்த உரையாடல் பற்றி
WSWS க்குத் தகவல் கொடுக்கப்பட்டது. இது எந்த அளவிற்கு
சுனாமி தாக்குவதற்குச் சற்று முன்பு பெருங்குழப்பம் நிலவியிருந்தது என்பதைத் தெரிவிக்கிறது. கடலில் அசாதாரணமான
இயக்கங்களையும், வினோதமான நுரையின் தோற்றத்தையும் கண்ட பின்னர், இந்த மாலுமி ஏதேனும் விசேஷமான
நடப்பு உண்டா என்று கேட்டார். அவருக்குக் கிடைத்த விடையாவது: "ஏதோ நடந்து கொண்டிருக்கிறது என்று வதந்திகள்
வந்துள்ளன; ஆனால் இதைப் பற்றி நான் உறுதியாகக் கூறுவதற்கில்லை."
பல நூறு ஆண்டுகளில் நாட்டைத் தாக்கிய மிகப் பெரிய பேரழிவு பற்றி முழு அரசியல்
நடைமுறையும் "ஒற்றுமை" வேண்டும் என்ற அழைப்பைத்தான் விடுத்துள்ளன. உதவியை நாடி பல அழைப்புக்கள்
கொடுக்கப்பட்டுள்ளன. பரிவுணர்வு நிறைந்த அறிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளன. ஆனால் இவற்றின் முக்கிய நோக்கம்
அரசாங்கங்களுடைய -முந்தைய, தற்போதைய- பெரும் கவனக் குறையை மூடிமறைப்பதும், அளிக்கப்பட்டு வரும்
உதவி மற்றும் மீட்புப் பணியின் தரத்தைப் பற்றிய பெருகிவரும் சீற்றத்தைத் திசை திருப்புவதும்தான்.
ஆளும்வட்டங்களுக்குள் இதை எதிர்கொண்ட நிலை, சாதாரண மக்கள் கொண்டதிற்கு முற்றிலும்
எதிராக இருந்தது. தொன் கணக்கில் உணவு, மருந்து, உடைகள் என்று, இரவோடு இரவாகத் தோன்றியுள்ள
தன்னார்வ அமைப்புக்கள் ஏற்கனவே சேகரித்துள்ளன. பல்கலைக்கழக மாணவர்கள் கொழும்புவின் முக்கிய தெருக்களுக்கு
வந்து, வாகனங்களை நிறுத்தி நன்கொடைகள் அளிக்குமாறு வேண்டுகின்றனர். மேலும் அவர்கள் சேகரிக்கும் உதவிப்
பொருட்கள் இலவசமாக தமிழர்கள், சிங்களவர், முஸ்லிம்கள் என்று பேதமில்லாமல் கொடுக்கப்படுகின்றன; இது
ஆளும் வர்க்கங்கள் கடந்த பல தசாப்தங்களாக மத, இனச் சமூக நெருக்கடிகளைத் தூண்டி விட்டு வரும் நாட்டில்
முக்கியத்துவம் வாய்ந்த வளர்ச்சித் தன்மை ஆகும்.
See Also:
தொற்றுநோய் பரவும் அபாயங்களுடன், சுனாமியினால் இறந்தோர் எண்ணிக்கை 60,000 க்கும் மேல் உயர்கிறது
தெற்கு ஆசியாவில் பேரழிவு அலைக்
கொந்தளிப்பு 13,000 உயிர்களைக் கவர்ந்தது
Top of page |