World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா

Bush's response to South Asia disaster: indifference compounded by political incompetence

தெற்கு ஆசிய பேரழிவை புஷ் எதிர்கொள்ளும் நிலை: அரசியலில் திறமையற்ற தன்மையினால் அசட்டைப் போக்கின் பெருக்கம்

By Patrick Martin
30 December 2004

Back to screen version

கடந்த அரை நூற்றாண்டில் வெளிப்பட்டிராத மிகப் பெரிய பேரழிவு உலகெங்கிலும் உள்ள தொலைக்காட்சிகளில் காட்டப்பட்டு வரும்போது, மூன்று நாட்கள் அதன் தாக்குதல் நிகழ்ந்த பின்னர், புதன் கிழமையன்று தன்னுடைய விடுமுறையில் இருந்து சற்றே விடுவித்துக் கொண்டு ஜனாதிபதி புஷ் தன் மெளனத்தைக் கலைத்து, ஒரு பொது அறிக்கையை வெளியிட்டார். இவருடைய டெக்சாசிலுள்ள கிராபோர்ட் பண்ணை வீட்டில் குழுமியிருந்த செய்தியாளர்களிடம், அமெரிக்க நிர்வாகம் தெற்கு ஆசிய நிவாரணப் பணிகளுக்கான நன்கொடை பற்றிய அளிப்பை இருமடங்காக்கி அறிவித்த பின், புஷ் மிகச்சாதாரணமானதும், அரைகுறைத் தெளிவுடனும் கூடிய அறிவிப்பு ஒன்றைக் கொடுத்தார்.

ஆரம்பத்தில் அமெரிக்கா உறுதிமொழியளித்திருந்த 15 மில்லியன் டாலர்கள், உலகச் செய்தி ஊடகங்கள் அனைத்திலும் பரந்த முறையில் நகைப்பிற்கு இடமாகியிருந்தது. இது ஒரு F-16 ஜெட் போர்விமானத்தின் விலையைவிடக் குறைவு என்று ஒரு ஏடு வர்ணித்திருந்தது. ஐ.நா.வின் அவசர நிவாரணப் பணி இயக்குனரான ஜோன் எகிலாந்து இதைப்பற்றி குறிப்பிட்டு குறைகூறுகையில், பெயரிட விரும்பாத மேலை நாடுகளின் "கருமித்தனம்" எவ்வாறு பேரழிவை எதிர்கொள்ளுவதில் இருக்கிறது எனத் தெரிவித்திருந்தார். சர்வதேச வளர்ச்சிக்கான அமெரிக்க அமைப்பு பின்னர் மற்றும் 20 மில்லியன் டாலர்கள் அளித்த பின்பு, ஸ்காண்டிநேவிய தூதர் பின்னர் தான், அமெரிக்காவை குறிப்பிடவில்லை என்று மறுத்தார்.

பதவி நீங்கிச் செல்லும் வெளியுறவுத்துறை செயலர் கொலின் பவெல், அமெரிக்கா பேரழிவை அசட்டை செய்கிறது என்ற குற்றச் சாட்டை மறுப்பதற்குப் பணிக்கப்பட்டார். "அமெரிக்கா ஒன்றும் கருமித்தனமான நாடல்ல. உலகெங்கிலும் நிவாரணப் பணிகளுக்கான முயற்சிகளுக்கு நாங்கள்தான் பெரும் நன்கொடை அளிப்பவர்கள்" என்று அவர் அறிவித்தார். (ஈராக்கிலும், ஆப்கானிஸ்தானத்திலும் அமெரிக்க ஆதரவுடனான "நிவாரண" முயற்சிகள், இறைமை பெற்ற நாடுகளை வெற்றிகொண்டுவரும் அமெரிக்க நாட்டினால் நிறுவப்பட்டுள்ள கைப்பாவை அரசாங்களுக்கு ஆதரவனவைதான் ஈராக்கிலும், ஆப்கானிஸ்தானத்திலும் மேற்கொள்ளப்பட்டுள்ள இரு நடவடிக்கைகள் என்ற உண்மைபற்றி அவர் மெளனமாகி விட்டார்.)

இந்த 35 மில்லியன் டாலர்கள் அளிப்புத் தொகை கூட, பெருந்துயரத்தின் மாபெரும் தன்மை மற்றும் அமெரிக்காவின் மகத்தான வளங்கள் என்பதைக் கணக்கில் கொள்ளும்போது, ஒரு மிகக் குறைந்த செயல்பாடாகத்தான் தெரிகிறது. இந்த நன்கொடை ஈராக்கியப் போருக்காக ஒரு நாளில் செலவிடப்படும் பணத்தைவிடக் குறைவு ஆகும். புஷ்ஷின் பதவி ஏற்பிற்காக ஜனவரி 20 அன்று விருந்துகளுக்கும், அரசாங்கக் கேளிக்கைகளுக்கும் செலவிடப்படும் பணத்தைவிட மிகக் குறைவாகத்தான் இருக்கும்.

அமெரிக்க அரசாங்கத்தின் நிவாரண முயற்சி வேறொரு கோலாலும் அளக்கப்படலாம்; இந்த ஆண்டு புளோரிடாவைத் தாக்கிய சூறாவளிப் புயல்களுக்கு அது எத்தன்மையில் விடையிறுத்தது என்பதேயாகும் கூட்டாட்சியின் நெருக்கடி நிர்வாக அமைப்பு மட்டும் 3.17 பில்லியன் டாலர்கள் தொகையை அந்த மாநிலத்திற்கு அளித்தது; இது தெற்கு ஆசிய சுனாமிக்கு அமெரிக்கா திட்டமிட்டுள்ள அன்பளிப்பை விடக் கிட்டத்தட்ட 100 மடங்கு அதிகமாகும். தெற்கு ஆசிய சுனாமி பேரழிவுத் தாக்குதலில் 100,000 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் என்பதை ஒப்பிட்டுப்பார்க்கும்போது, நான்கு புளோரிடா சூறாவளிகளும் மொத்தத்தில் 116 உயிர்களைக் குடித்தன. அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் மிருகத்தனமான கணக்கீட்டின்படி, அமெரிக்காவில், குறிப்பாக ஜனாதிபதித் தேர்தல் ஆரம்பமாவதற்கு பல மாதங்களுக்கு முன்னரே ஒரு போர்க்களத்தன்மையை கொண்டுள்ள மாநிலத்தில், ஓர் உயிரின் மதிப்பு, சிறீலங்கா அல்லது இந்தோனேசிய நாட்டின் ஓர் உயிரைவிடக் கணக்கிலடங்காமுறையில் மதிப்புடையதாகும்.

வெள்ளை மாளிகை பற்றிய செய்தி ஊடக விமர்சனம், டிசம்பர் 29 அன்று வாஷிங்டன் போஸ்ட்டில், கிராபோர்டில் புஷ் தன்னுடைய அறிவிப்பைக் கொடுப்பதற்கு சில மணிநேரங்கள் முன்பு, வெளிவந்த கட்டுரை ஒன்றில் உச்சக்கட்டத்தை அடைந்தது. போஸ்ட் கூறியது: "ஆரம்பத்தில் கூறப்பட்ட நிவாரண நன்கொடைகளும், பேரழிவைப் பற்றி நேரடியாகப் பேசுவதற்குப் பதிலாக, கிறிஸ்துமஸ் விடுமுறைக்காக தன்னுடைய டெக்சாஸ் பண்ணையில் பாதுகாப்புடன் இருந்துவிடலாம் என்று கருதியுள்ள புஷ்ஷின் முடிவும், பெருந்துயரைப்பற்றி மிக அசட்டைத்தனமான மதிப்பீட்டையும், சிறீலங்கா, இந்தியா, தாய்லாந்து, இந்தோனேசியா போன்ற நாடுகள் எதிர்கொண்டுள்ள மீட்புப்பணி, மறுசீரமைப்புப்பணி ஆகியவற்றிற்கும் காட்டப்படும் குறைமதிப்பீட்டையும்தான் புலப்படுத்துகின்றன என்று ஐயுறவாதிகள் கருதுகின்றனர்."

"உலக வர்த்தக மையத்தின் மீதும், பென்டகன்மீதும், நடந்த தாக்குதல்களுக்குப் பின்னர் குவிந்த சர்வதேச ஆதரவைப்பற்றிக் குறிப்பிட்டு, நிவாரண முயற்சிகளுடன் நன்கு பரிச்சயமாகியுள்ள சில நிர்வாக அதிகாரிகள் கூட, சுனாமி பெருந்துயரத்தைப்பற்றி நேரடியாகக் கருத்தைக் கூற புஷ் வராதது பற்றி வியப்பு தெரிவித்தனர்" என்றும் "ஒரு மூத்த அதிகாரி, இது ஒரு அசாதாரண செயல்" என்றும் தெரிவித்ததாகவும் போஸ்ட் கூறியுள்ளது.

இங்கு அரசாங்க எந்திரத்தைப் பற்றிய கவலையையே போஸ்ட் தெரிவித்துள்ளது; உயிரிழப்புக்கள் பற்றிய புஷ்ஷின் அக்கறையின்மை என்றில்லாமல், பிரிட்டிஷ் பிரதம மந்திரி பிளேயர் போலவோ, முன்னாள் ஜனாதிபதி கிளின்டன் போலவோ, உண்மையான போக்கை மறைத்து கூடுதலான திறைமையுடன், மனிதாபிமானம் நிறைந்திருப்பதாகக் காட்டிக்கொள்ளும் தன்மை இவருக்கு இல்லாததைப் பற்றிய கவலைதான் இது.

ஆனால் செய்தியாளரிடையே நிகழ்த்தப்பட்ட புஷ்ஷின் உரை இத்தகைய அக்கறைகளை சிறிதும் அகற்றுவதாக அமையவில்லை. கிராபோர்ட் பண்ணையில் தன்னுடைய, பெரிய, உடனடி அவசரப் பணிகளான சைக்கிள் ஓடுதல், "புதர்களை அகற்றுதல்" இவற்றிற்குத் திரும்பவேண்டும் என்ற அவசரத்தைக் காட்டிய முறையில்தான் அவர் பேசிய பாணி இருந்திருந்தது.

நிலநடுக்கம், சுனாமி போன்ற இயற்கைப் பேரழிவுகளுக்கு எதிராக ஏற்கனவே அமெரிக்கா, ஜப்பான் இன்னும் பல செல்வக்கொழிப்பு உடைய நாடுகள் பசிபிக் பகுதியைக் காப்பதற்காக அமைத்துள்ள முறையில், உலகம் முழுவதும் எச்சரிக்கை முறை அமைப்பதற்குத் தன்னுடைய ஆதரவை புஷ் தெரிவித்தார். உலகம் முழுவதற்குமான எச்சரிக்கை முறை நிறுவுவதற்கு, வெறும் 150 மில்லியன் டாலர்கள் மட்டுமே, அதாவது, ஈராக் போரில் நான்கு நாட்களுக்காக ஆகும் செலவுதான் இதற்கு ஆகும் என்றுள்ள நிலையில், இப்பொழுது ஏன் அத்தகைய வலைத் தளப் பணி இல்லை என்று அவரிடம் கேட்கப்படவில்லை;

நிலநடுக்கத்தினால் உந்துதல் பெறும் சுனாமியை பற்றிய எச்சரிக்கை அமெரிக்க அரசாங்கத்திற்கு கிடைத்திருந்த போதிலும், அது சம்பந்தமுடைய நாடுகளுக்குத் தெரிவிக்கப்படவில்லை என்பதற்குப் போதிய ஆதாரங்கள் ஏற்கனவே உள்ளன. தேசிய கடல்தளம், சுற்றுச் சூழல் நிர்வாக அமைப்பின் ஆதரவில் செயல்படும் ஹவாயில் உள்ள பசிபிக் பகுதிக்கான எச்சரிக்கை மையம், நிலநடுக்கம் ஏற்பட்டவுடனேயே அதைக் கண்டறிந்து இதுவரை பதிவுசெய்யப்படாத அளவு நிறைந்தும், பெருகியும் உள்ள பேரலைக் கொந்தளிப்புக்கள் நிகழக்கூடும் என்று உடனடியாக எச்சரிக்கை விடுத்திருந்தது.

இந்த மையத்தின் இயக்குநரான சார்ல்ஸ் மக்கீரீரி, அவருடைய குழு அமெரிக்க கடற்படை, அமெரிக்க அரசுத்துறை மற்றும் ஆஸ்திரேலிய அரசாங்கம் ஆகியவற்றிற்கு எச்சரிக்கை செய்திகள் அனுப்பியதாக உறுதிசெய்துள்ளார். அரசுத்துறை இந்தியாவிற்கு தகவல் தெரிவித்துவிட்டதாகக் கூறியுள்ளது; ஆனால் இந்திய அரசாங்கம் சுமத்ராவின் நிலநடுக்கம் ஏற்பட்டு, இந்தியக் கடற்கரையில் தென்மாநிலமான தமிழ்நாட்டைத் தாக்குவதற்கு எடுத்துக் கொண்ட இடைப்பட்ட இரண்டு மணி நேரத்தில் அத்தகைய எச்சரிக்கை ஏதும் வரவில்லை என்று தெரிவித்துள்ளது. இதேபோலவே சிறீலங்கா அரசாங்கமும் எந்த எச்சரிக்கையையும் பெறவில்லை.

ஆனால் இந்தியப் பெருங்கடலில் ஒரு தீவு மட்டும் சுறுசுறுப்புடன், உடனடியாக எச்சரிக்கப்பட்டது; இது பிரிட்டிஷ் கட்டுப்பாட்டில் உள்ள Diego Garicia என்னும் தீவு ஆகும்; இதில் அமெரிக்க இராணுவத் தளம் ஒன்று உள்ளது; இங்கிருந்துதான் ஆப்கானிஸ்தானத்திற்கும் ஈராக்கிற்கும் செலுத்தப்பட்ட விமானக் குண்டுவீச்சுக்கள் நிகழ்ந்தன. தென்னிந்தியாவில் இருந்து ஆயிரம் மைல் தொலைவில் இருக்கும் இந்த அமெரிக்கத்தளம் நேரடியாக சுனாமியின் பாதையில் இருந்தும் எந்த பாதிப்பிற்கும் உட்படவில்லை.

கிராபோர்டில் புஷ் வெளியிட்ட அறிக்கை ஒரு விவாதத்திற்கு இடமில்லாத உண்மையைக் கொண்டிருந்தது. "இது ஒரு மிகக் கொடூரமான பேரழிவு. எங்களால் புரிந்து கொள்ள முடியாத தன்மையை இது கொண்டுள்ளது" என்று புஷ் கூறினார்.

இந்தச் சொற்களை புஷ்ஷிற்காக செதுக்கியவர், தான் கூறவேண்டியதையும்விடக் கூடுதலான முறையில் புஷ்ஷைப் பற்றித் தெரிவித்துவிட்டார். தெற்கு ஆசிய பேரழிவின் பரிணாமங்களை புரிந்து கொள்ளுவதில் கொண்ட தோல்வி, இத்தகைய அசட்டைத் தன்மைக்குப் பொதுமக்களிடையே எப்படிப்பட்ட கருத்து தோன்றும் என்பதுபற்றிய எதிர்பார்ப்பும் எந்த அளவிற்கு புஷ்ஷும் அவருடைய குழாமும் தார்மீகச் சீரழிவு மற்றும் அறிவுமந்த நிலையில் உள்ளனர் என்பதற்கான அளவுகோலாகும்.

மில்லியன் கணக்கான மக்களுடைய துயரங்களைப் பற்றிய நிர்வாகத்தின் பெரும் திமிர்த்தனமான, சிறிதும் மறைக்கப்படாத அலட்சியப் போக்கு, இது அடிபணிந்து நிற்கும் ஊழல் மலிந்த சிறுகுழுவைப் பற்றி நன்றாகவே எடுத்துரைக்கிறது. புஷ் நிர்வாகமும், வெள்ளை மாளிகையில் குடியிருப்பவருமே கூட, குற்றம் சார்ந்த, தடையற்ற பேராசையைக் கொண்டுள்ள ஆளும் தட்டினால் சதையும் உயிருமாக உருவாக்கப்பட்டவர்கள்தாம்.

தன்னுடைய டிசம்பர் 28 பதிப்பின் முதல் பக்கத்தில் நியூ யோர்க் டைம்ஸ், தெற்கு ஆசிய பேரழிவு, இறப்புக்கள் பற்றிய கட்டுரைகள், நிழற்படங்கள் இவற்றுடன் காணும் வகையிலேயே, இலேசான முறையில் எப்படி வோல்ட் ஸ்ட்ரீட் நிறுவனங்கள் தங்கள் நிர்வாக அதிகாரிகளுக்கு பல மில்லியன் டாலர் கிறிஸ்துமஸ் போனஸ்களை அளிக்கிறது என்ற கட்டுரையை ("That Line at the Ferrari Dearler? It's Bonus Season on Wall Street") வெளியிட்டதை ஒரு பிழையாகக் கருதவில்லை என்பது உதாரணத்திற்குக் கூறப்படலாம்.

மனிதர்களைப் பற்றிய உண்மையான கணிப்பு பெரும் நிகழ்வுகள் மூலம்தான் வெளிவரும் என்றால், இந்தியப் பெருங்கடலோரப் பகுதிகளில் நிகழ்ந்த மகத்தான துயரங்கள், வெள்ளை மாளிகையில் குடியிருக்கும் ஒரு தீமை மிகுந்த, அற்ப உள்ளம் படைத்த நபரைப் பற்றிய மற்றொரு அளவுகோலை கொடுத்துள்ளது. அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் அறியாமை மிகுந்த, பிற்போக்குத் தன்மையைத்தான் புஷ் உருவகப்படுத்துகிறார்.

See Also:

Tsunami death toll rises to 60,000 amid warnings of epidemics

[29 December 2004]

Devastating tidal wave kills more than 13,000 in southern Asia

[27 December 2004]


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved