World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா

Vote "no" in Spanish referendum on European Union constitution

ஐரோப்பிய ஒன்றிய அரசியலமைப்பிற்கான ஸ்பெயினின் வாக்கெடுப்பில் "வேண்டாம்" என்று வாக்களிக்கவும்

Statement of the Socialist Equality Party (Britain)/ Partei für Soziale Gleichheit (Germany)

19 February 2005

Use this version to print | Send this link by email | Email the author

பெப்பிரவரி 20, ஞாயிற்றுக் கிழமையன்று, திட்டமிடப்பட்டுள்ள ஐரோப்பிய ஒன்றியத்திற்கான அரசியலமைப்பு பற்றிய வாக்கெடுப்பை நடத்தும் முதல் நாடாக ஸ்பெயின் விளங்கும்.

ஸ்பெயினின் அரசாங்கத்தாலும் ஐரோப்பிய அரசியல் தட்டின் பெரும்பாலோராலும் முன்வைக்கப்பட்டிருக்கும் இந்த வாக்கெடுப்பு அடுத்த 18 மாதங்களுக்குள் இப்பிரச்சினை பற்றி 10 நாடுகளில் நடத்தப்பட இருக்கும் வாக்கெடுப்புக்களைக் காணவிருக்கும் தொடர்ச்சியான ஜனநாயக கருத்தெடுப்புகளில் முதலாவதாக இருக்கிறது. சாராம்சத்தில், இந்த வாக்கெடுப்பு கண்டம் முழுவதிலும் தன்னுடைய நலன்களுக்கு ஏற்ப பொருளாதார மற்றும் சமூக உறவுகளை மறுசீரமைத்துக் கொள்ளும் ஐரோப்பிய முதலாளித்துவ வர்க்கத்தின் முயற்சிகளை நியாயப்படுத்தும் ஒரு முயற்சியாகும்.

ஐரோப்பிய ஒருங்கிணைப்பு செயல்திட்டம் என்பது தொழிலாள வர்க்கத்தின் தற்போது நிலவும் வாழ்க்கைத் தரங்களையும், ஜனநாயக உரிமைகளையும் அழிப்பதன் மூலம் ஐரோப்பிய ஆளும் செல்வந்தத்தட்டுக்களால் ஐரோப்பாவின் பெரிய சக்திகளையும், நாடுகடந்த நிறுவனங்களையும், உலக அரங்கில் அவர்களின் அமெரிக்க, ஜப்பானிய, சீனப் போட்டியாளர்களுக்கு எதிராக போட்டிமிக்க ஒர் அமைப்பாக உருவாக்குவதற்கான வழிமுறைகளைக் கருக்கொண்டிருக்கிறது.

இந்தத் தாக்குதல் முதலாளித்துவ வர்க்கத்தால் ஒரு சுதந்திரமான ஐரோப்பிய இராணுவ தகமையை உருவாக்கும் உந்துதலுடன் பிணைந்துள்ளது. ஐரோப்பிய சக்திகள் உலகின் வளங்களை நவ காலனித்துவ முறையில் மறுபங்கீடு செய்து கொள்ளும் தன்மையில் ஒரு பங்கை உறுதிப்படுத்திக் கொள்ளுவதற்கு பெரும்பாடுபடுகின்றன: இது அமெரிக்காவும் அதனுடைய நட்பு நாடுகளும் ஈராக்கின் எண்ணெய் வளத்தை எடுத்துக் கொண்டு, மத்திய கிழக்கு முழுவதும் தங்களுடைய மேலாதிக்கத்தை செலுத்தவேண்டும் என்பதற்காக உருவாக்கப்பட்ட சட்டவிரோதமான, ஆக்கிரமிப்புப் போரால் சுருக்கமாகக் காட்டப்பட்டுள்ளது.

இந்த வாக்கெடுப்பில், ஸ்பானிய மற்றும் ஐரோப்பிய தொழிலாள வர்க்கத்திற்கு எதிராக நடாத்தப்படும் தாக்குதலுக்கும் மனிதகுலத்தைப் புதிய காட்டுமிராண்டித்தனத்திற்குக் கொண்டு செல்லுவதை அச்சுறுத்தும் இராணுவவாதத்தின் வெடிப்புக்கும் அரசியல் எதிர்ப்பை வெளிப்படுத்தும் வகையில், "வேண்டாம்" என்று வாக்களிக்குமாறு உலக சோசலிச வலைத் தளம் வலியுறுத்திக் கேட்டுக்கொள்ளுகிறது.

கொள்கையளவில், கண்டத்தின் ஐக்கியம் சாத்தியமானதும் அத்தியாவசியமானதும் என்று நாங்கள் ஏற்கிறோம்: ஆனால் அது ஒரு ஜனநாயக மற்றும் சமூகரீதியாக முற்போக்கானவகையில் நிறைவேற்றக்கூடியதாய், பெரு வணிகம் மற்றும் அதன் அரசியல் பிரதிநிதிகளுக்கு எதிரான சமரசத்திற்கு இடம்கொடாத போராட்டத்தில் ஐரோப்பிய தொழிலாள வர்க்கத்தின் சுயாதீனமான நடவடிக்கை மூலம் மட்டுமே அடையப்படமுடியும் என்று கருதுகிறது. முதலாளித்துவ அடித்தளங்களில் ஐக்கியத்திற்கான ஐரோப்பிய ஆளும்தட்டுக்களின் திட்டங்களுக்கு எதிராக தொழிலாள வர்க்கம் ஓர் சுதந்திரமான நலன்களை பொதிந்திருக்கும் ஒரு மூலோபாயத்தை கட்டாயம் முன்னெடுக்க வேண்டும். அந்த மூலோபாயம்தான் ஐக்கிய ஐரோப்பிய சோசலிச அரசுகளின் உருவாக்கத்திற்கான போராட்டத்தில் உள்ளடங்கி இருக்கிறது.

ஏகாதிபத்தியங்களுக்கு இடையேயான முரண்பாட்டின் அதிகரிப்பு

ஐரோப்பிய முதலாளித்துவ வர்க்கம் அதன் ஒருங்கிணைப்புத் திட்டத்திற்காக ஒரு புதிய அரசியலமைப்பு வடிவத்தை உருவாக்குவது என்ற முயற்சிகள், உற்பத்தியின் பூகோள மயமாக்கத்தாலும் அதனால் விளைவான ஏகாதிபத்திய சக்திகளுக்குள்ளேயான போட்டிகளினால் உக்கிரப்படுத்தப்பட்டுள்ளது.

உலகளாவிய பெரு நிறுவனங்களும், நிதியமைப்புக்களும் இப்பொழுது தங்களுடைய உற்பத்தியை தேசிய எல்லைகளை கருத்திற்கொள்ளாது உலகில் எங்கு வேண்டுமானாலும் நிறுவும் திறனைக் கொண்டுள்ளன. பல நாடுகளின் உள்நாட்டு மொத்த உற்பத்தியை கடுகின் அளவினதாக்கும் வருமானத்தைக் கொண்டுள்ள நிலையில், இந்த நிறுவனங்கள் தேசிய அரசாங்கங்களிடம் இருந்து வரிவெட்டுக்களையும், உற்பத்தி செலவினங்களை குறைப்பதற்கான நடவடிக்கைகளையும் கோருகின்றன.

ஐரோப்பிய முதலாளித்துவ வர்க்கம், அமெரிக்கப் போட்டியாளர்களுக்கு சவால் விடக்கூடிய வகையில், உள்சந்தையுடன் ஐக்கியப்படுத்தப்பட்ட வணிக முகாம் ஒன்றை வலுப்படுத்திக் கொள்வதன் மூலம், இந்த அபிவிருத்திக்கு விடையிறுத்தது. அதில் மூலதனம் சுதந்திரமாக நகர்வதற்கான அனைத்துத் தடைகளும் அகற்றப்பட்டுள்ளதுடன், மற்றும் வரிகளை குறைத்தல் மற்றும் சமூகநல சேவைகளுக்கான செலவுகளை குறைத்தலுக்கு வங்கிகளுக்கும் பங்குச் சந்தைகளுக்கும் பொறுப்புக் கூறும் வகையில் ஒவ்வொரு தேசிய அரசாங்கமும் வைக்கப்பட்டிருக்கின்றது.

ஆனால் அமெரிக்காவிற்கு எதிரான அத்தகைய பொருளாதார சவால் மட்டுமே போதாது. புஷ் நிர்வாகம், தன்னுடைய அமெரிக்காவின் பூகோள மேலாதிக்கத்தை வலியுறுத்தும் வகையில் ஐரோப்பா பிரதிநிதித்துவப்படுத்தும் பொருளாதார அறைகூவலை ஈடுசெய்ய தன்னுடைய இராணுவ வலிமையைப் பயன்படுத்துகிறது. இந்தத் தாக்குதல் ஈராக் போன்ற சிறிய நாடுகளுக்கு எதிராக மட்டுமில்லாமல், அமெரிக்காவின் பெரிய ஏகாதிபத்திய போட்டி நாடுகளுக்கும் எதிராக செலுத்தப்படுகிறது; அவை வாஷிங்டனுடைய ஆணைகளுக்கு அடிபணிந்து நிற்க வேண்டும் என்று கூறப்படுகிறது.

இது தங்களுடைய கூட்டு வளங்களை ஒன்று திரட்டி, நலன்புரி மற்றும் சேவைப்பணிகளுக்கான பொதுச் செலவினங்களை விலக்கி இராணுவம் மற்றும் ஆயுதத் தொழிலைக் கட்டி எழுப்ப தொகை ஒதுக்கீடு செய்வதற்கு ஐரோப்பிய அரசுகளின் முயற்சிகளைத் தூண்டி விடுவதாகும். இதற்கு இன்னும் கூடுதலான வகையில் ஐரோப்பிய தொழிலாளர்கள் மீது பெரும் தாக்குதலைக் கட்டவிழ்த்துவிடுவது தேவைப்படும் .

ஐரோப்பிய ஒன்றியத்தின் உட்சந்தைக்குள்ளேயே, மலிந்த கூலி உழைப்பின் அளிப்பை அபரிமிதமாக உருவாக்குவதற்காக தொழிலாள வர்க்கத்தை சுரண்டுவதற்கு இருக்கும் தடைகள் அனைத்தும் அகற்றப்பட்டு, அனைத்து சமூகப்பாதுகாப்பும் அகற்றப்பட்டு வருகின்றன.

கண்டம் முழுவதிலும், கெளரவமான ஊதியத்திற்கான உரிமை, ஓய்வூதிய, உடல்நலப் பாதுகாப்பிற்கான கொடுப்பனவு ஆகியவை அரசியல் வாழ்வில் ஆதிக்கம் செய்துவரும், பெருநிறுவனங்கள், பெருநிதியங்களின் சிறுகுழுக்கள் இவற்றிற்குப் பொறுத்துக் கொள்ள முடியாத சுமையாக உள்ளன எனக்கூறி தகர்க்கப்பட்டு வருகின்றன. இதன் விளைவு இன்னும் அதிகரித்தவகையில் மிகக் குறைவான வாழ்க்கைத் தரத்தை நிர்ணயித்தலும், தொழிலாளர்களை ஒருவருக்கு ஒருவர் எதிராக ஐரோப்பாவிற்குள்ளும் உலகந்தழுவிய முறையிலும் போட்டியிடுதலை ஊக்கப்படுத்தலும் அதிகமாகிவிட்டதுடன் ஊதியங்கள், வேலைநிலைமைகள் போன்றவை கீழ்நோக்கி செல்வதையும் உருவாக்கியுள்ளது.

அத்திலாந்திற்கு இடையிலான உறவுகளின் முறிவு

சர்வதேச சமூக அரசியல் உறவுகளில் உலகந்தழுவிய பொருளாதாரத்தினால் தீவிரமாக்கப்பட்டுள்ள பெரும் மாறுதல்களால், ஸ்பானிய அரசியல் ஆழ்ந்த பாதிப்பிற்கு ஆளாகியுள்ளது.

ஜோஸ் மரி அஸ்நாரின் மக்கள் முன்னணி கட்சியின் (The Popular Party -PP) அரசாங்கம், ஈராக்கிற்கு எதிரான சட்டவிரோதப் போரில், புஷ் நிர்வாகத்தின் மிக நெருக்கமான கூட்டாளியாக விளங்கி, அமெரிக்காவின்பால் ஸ்பெயினின் வெளிநாட்டுக் கொள்கையை மறு ஒழுங்கமைக்கப்படுத்த முற்பட்டது. இதற்கு ஸ்பானிய மக்களுடைய பெரும் விரோத எதிர்ப்புணர்வு வெளிப்பட்டு, 2003ல் போருக்கு எதிராக மில்லியன் கணக்கில், தங்கள் எதிர்ப்புக்களை வெளியிட தெருக்களில் இறங்கினர். இஸ்லாமிய சக்திகளால், மார்ச் 11 2004 ல் நிகழ்த்தப்பட்ட பயங்கர குண்டுத்தாக்குதல்களும், தங்கள் தேர்தல் நலன்களுக்காக அஸ்நார் அரசாங்கம் அவற்றைப் பயன்படுத்திய நம்பிக்கையற்ற முயற்சிகளும், ஒரு பரந்த இயக்கத்தை தூண்டிவிட்டு மக்கள் முன்னணிக் கட்சியின் தோல்விக்கு வழிவகுத்தது மற்றும் ஸ்பெயின் சமூக ஜனநாயக கட்சியின் (PSOE) ஜோஸ் ஷபடேரோவின் தலைமையிலான சமூக ஜனநாயகக் கட்சியைப் பதவியில் இருத்தியது.

ஆனால் நிகழ்வுகளோ, ஸ்பெயின் சமூக ஜனநாயகக் கட்சியோ அல்லது எந்தவொரு ஐரோப்பிய அரசாங்கமோ அமெரிக்க இராணுவவாதத்தை அக்கறையுடன் எதிர்க்கும் திறனையோ விருப்பத்தையோ கொண்டிருக்கும் என்ற பிரமைகள் தொழிலாள வர்க்கத்தை நிராயுதபாணி ஆக்கும் என்பதை உறுதிப்படுத்தியுள்ளது. பிரான்சையும் ஜேர்மனியையும் போன்றே அமெரிக்காவை ஸ்பெயின் எதிர்ப்பது, தன்னுடைய ஏகாதிபத்திய அபிலாஷைகளை அமெரிக்க ஏகாதிபத்தியம் ஊடுருவித் தடுத்துவிடுமோ என்ற அளவில்தான் உள்ளது.

ஸ்பானிய, ஐரோப்பிய முதலாளித்துவ வர்க்கத்தின் கொள்கை இரண்டு கூறுபாடுகளை கொண்டுள்ளது; வாஷிங்டனை திருப்தி செய்யவேண்டும் என்ற முயற்சிகளும், அதே நேரத்தில் தங்களுடைய இராணுவ வலிமையைப் பெருக்கிக் கொண்டு அதன் மூலம் தங்களைவிட சக்திமிக்க போட்டியாளரை எதிர்த்து நிற்கவேண்டும் என்ற உணர்வும்தான் இணையாக இயைந்து, இக்கொள்கைக்கு உந்துதல் கொடுக்கிறது.

ஷபடேரோ, ஈராக்கில் இருந்து ஸ்பானிய துருப்புக்களை திருப்பிப் பெற்றுக் கொண்டது மக்களுடைய உணர்வை சமாதானப்படுத்தத்தான்; ஆனால் இது அமெரிக்காவுடன் இராணுவமுறையில் ஆப்கானிஸ்தானில் தொடர்ந்து ஒத்துழைப்பைக் கொடுத்துவருகிறது. அங்கு இரண்டாவது அதிக எண்ணிக்கையான இராணுவம் ஸ்பெயினினதாகும். பால்கன்களிலும் இதே நிலைமைதான் உள்ளது. அதே நேரத்தில், ஷபடேரோ ஒருங்கிணைந்த ஐரோப்பிய இராணுவ திறனுக்காக பிரான்சுடனும், ஜேர்மனியுடனும் கூட்டை வளர்த்தெடுக்கும் வகையில் ஒரு கொள்கையை முன்னெடுத்துள்ளார், "உலக ஒழுங்கை அது பிரதிநிதித்துவப்படுத்துவதாக எடுத்துக்கொண்டால் ஒரு வலிமையான ஐரோப்பா மிகவும் முக்கியமானது என்றும், இந்நூற்றாண்டின் வரலாற்றுத் திட்டம் அதுதான்" என்றும் அவர் வலியுறுத்திக் கூறியுள்ளார்.

அமெரிக்காவுடனான முரண்பாடு விரைவில் நேரடி மோதல் என்ற சீரழியும் நிலையை அடையும். இப்பொழுதும் கூட வாஷிங்டன் ஈரானுக்கு எதிராக ஏதேனும் ஒரு முறையில் கூட்டு இராணுவ நடவடிக்கை தலையீட்டை தோற்றுவிக்கும் நிலைமைகளுக்கு முயன்று கொண்டிருக்கிறது; இதுவோ நீண்ட நாட்களாக தெஹ்ரானுடன் ஐரோப்பிய நாடுகள் கொண்டுள்ள பொருளாதார, அரசியல் உறவுக்கு முற்றிலும் எதிரானதாகும். ஐரோப்பாவிற்கும் ஈரானுக்கும் இடையே வலுவான வணிக உறவுகள் உள்ளன. ஸ்பெயினுக்கு எண்ணெய் வழங்குவதில் ஈரான் இரண்டாம் இடத்தை வகிக்கிறது; இதையும் தவிர ஸ்பானியப் பொருட்களை வாங்குவதில் மத்திய கிழக்குப் பகுதியில் நான்காவது பெரிய நாடாகவும் இருக்கிறது. 2004ம் ஆண்டு முதல் பத்து மாதங்களில் ஸ்பெயின் ஈரானுக்கு 403 மில்லியன் யூரோக்கள் மதிப்புடைய பொருட்களை ஏற்றுமதி செய்துள்ளது மற்றும் 942 யூரோக்களுக்கு மேல் மதிப்புள்ள பொருட்களை இதேகாலத்தில் ஈரானில் இருந்து இறக்குமதியும் செய்துள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் தன்மை

வருங்காலம் எவ்வாறாக இருந்தாலும், ஏகாதிபத்திய சக்திகளுக்கு இடையே உள்ள எதிர்ப்பு என்பது ஐரோப்பிய ஒருங்கிணைப்பு செயல்திட்டத்தில் ஓர் அடிப்படை மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

இரண்டாம் உலகப் போருககுப் பின்னரான ஐரோப்பாவின் ஒருங்கிணைப்பு என்பது வாஷிங்டனின் மேற்பார்வையில் நடைபெற்றது: இது ஐரோப்பாவில் தன்னுடைய கரங்களை வலுப்படுத்தும் ஒரு சாதனமாகவும் குளிர் யுத்தத்தின்பொழுது சோவியத் ஒன்றியத்திற்கு எதிரான ஒரு தடையையும் வழங்கும் ஒரு சாதனமாகவும் அமெரிக்கா கருதியது. அது வர்க்க பகைமைகளை குறைப்பதற்கும் அதன்மூலம் கண்டம் முழுவதும் அரசியலில் உறுதித்தன்மைக்கான நிலைமைகள் தோற்றுவிக்கவும் வடிவமைக்கப்பட்ட பொருளாதார சமூகக் கொள்கைகளின் தன்மையை கொண்டிருந்தது.

ஐரோப்பிய ஒன்றியத்தில் கடைசியாக சேர்ந்த நாடுகளில் ஒன்றாக ஸ்பெயின் இருந்தது, ஆனால் இது இந்தக் கூட்டினால் ஆரம்பத்தில் பல நன்மைகளை பெற்றது. உண்மையில், ஐரோப்பிய முதலாளித்துவ வர்க்கம் ஸ்பானிய தொழிலாள வர்க்கத்தின் மத்தியில் ஐரோப்பிய ஒன்றியத்தின் தன்மையை பற்றி எஞ்சியுள்ள கற்பனை தோற்றத்தால் ஸ்பெயினில் "வேண்டும்" என்ற வாக்கு குவிந்துவிட்டால் மற்ற நாடுகளிலும் ஐரோப்பிய ஒன்றியத்தின் அரசியலமைப்பு ஏற்கப்பட உதவும் என்ற கருத்தை ஆழமாகக் கொண்டுள்ளது. உழைக்கும் வர்க்கம் தான் எதிர்கொள்ளும் அச்சுறுத்தல்களின் முக்கியத்துவம் பற்றி நன்கு உணரவேண்டும் என்றால் இத்தகைய பிரமைகள் கட்டாயம் அகற்றப்பட வேண்டும்.

1976ம் ஆண்டில் பிராங்கோவின் சர்வாதிகாரம் முடிவிற்கு வந்ததை அடுத்து, ஸ்பெயினின் ஆளும் செல்வந்தத்தட்டு நாட்டின் பொருளாதாரத்தை உலகப் பொருளாதாரத்துடன் மீள ஒருங்கிணைக்கும் வகையில், தன்னுடைய ஐரோப்பாவுடனான தொடர்புகளை மீளக்கட்டமைக்கும் பணியிலும், இலத்தீன் அமெரிக்கா, மத்தியதரைக் கடல் பகுதிகளில் தன்னுடைய பாரம்பரிய செல்வாக்கு மண்டலங்களை மீண்டும் நிறுவவும் முற்பட்டது. பிலிப் கொன்சாலெஸ் தலைமையிலான சோசலிசக் கட்சி அரசாங்கம் 1982ல் தேர்ந்தெடுக்கப்பட்டதை அடுத்தும், ஸ்பெயின் ஐரோப்பிய சமுதாயத்தில் 1986ல் சேர்ந்ததையும், மேற்கு ஐரோப்பிய ஒன்றியத்தில், அதாவது ஐரோப்பிய பாதுகாப்புப் பிரிவில் 1988ல் சேர்ந்ததையும் அடுத்து இந்தக் கொள்கை சாத்தியமானது.

ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைந்ததால் ஸ்பெயினின் முதலாளித்துவம் பெரும் நன்மைகளைப் பெற்றது. ஐரோப்பிய வணிகம் ஒழுங்குபடுத்தப்படவும் பொது நாணய முறை ஏற்படுத்தப்படுவதற்கும் பெரும் தாராளமான உதவித் தொகைகளையும் பெற்றது. 2002ல் மட்டும் ஐரோப்பிய ஒன்றியம் ஸ்பெயினுக்கு 9 பில்லியன் யூரோக்களை உதவித் தொகையாக அளித்துள்ளது அல்லது ஸ்பெயினின் உள்நாட்டு மொத்த உற்பத்தியில் 1.3 சதவிகிதத்தை பெருக்கி உள்ளது. இது தொழிலாளர்களிடையே ஐரோப்பிய ஒன்றியம் அடிப்படையில் தங்களுடைய வாழ்க்கையில் ஒரு வழமான ஆதிக்கம் செலுத்தும் ஒன்றாக இருக்கும் என்ற கருத்தை ஊக்கப்படுத்தியது.

இவையனைத்தும் இப்பொழுது மாறிக் கொண்டிருக்கிறது. சோவியத் ஒன்றியத்தின் பொறிவு, ஐரோப்பாவிற்குள்ளே தன்னுடைய ஆதிக்கத்தை உறுதிப்படுத்துவதை நோக்கிய அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் கொள்கையில் ஒரு மிகப் பெரிய மாற்றத்தை சமிக்கை செய்கிறது, மற்றும் ஜேர்மனிய, பிரெஞ்சு செல்வாக்கை தடுத்து நிறுத்த பிரிட்டன் மற்றும் கிழக்கு நாடுகளான போலந்து, ஓரளவு இத்தாலி, போர்த்துக்கல் என்பவற்றை பயன்படுத்துவதன்மூலம் அது ஐரோப்பிய கண்டத்தை அரசியல் அளவில் பிரிகிறது. இதுதான் அமெரிக்க பாதுகாப்பு செயலர் டொனால்ட் ரம்ஸ்பெல்ட்டால் "புதிய", "பழைய" ஐரோப்பா என்று குறிப்பிடப்பட்டதில் சுருக்கிக் கூறப்பட்டுள்ளது ஆகும்.

இதற்கு இணையாகத்தான், ஜேர்மனி, பிரான்ஸ் தலைமையிலான ஐரோப்பிய முதலாளித்துவ வர்க்கம் ஐரோப்பிய ஒன்றிணைவை, கண்டம் முழுவதும் அமெரிக்காவில் உள்ளதுபோன்ற பொருளாதார, சமுதாய நிலைமைகளை முன்மாதிரியாக தோற்றுவித்தலுடனும் உலக அரங்கில் தங்களின் செல்வாக்கை விரிவுபடுத்துதலுடனும் இணைந்துள்ளதாக பார்க்கிறது.

இந்த மாறுதல்கள் ஐரோப்பிய ஒன்றியத்தில் பத்து புதிய உறுப்பு நாடுகள் இணைக்கப்படுவதில் தெளிவாக வெளிப்படுத்தப்பட்டுள்ளன, இவை பெரும்பாலும் வறிய, முந்தைய ஸ்ராலினிச ஆட்சிக்கு உட்பட்ட நாடுகள் ஆகும். கிழக்குப் புற விரிவாக்கம் என்பது தொழில், விவசாயம், உள்கட்டமைப்புத் துறைகளில் உதவித் தொகைகள் வழங்குவது முடிவுக்குக் கொண்டு வருவதை முன்னின்று நடத்துகிறது. 2000-2006க்கான கட்டுமான, ஒன்றிணைப்பிற்கான நிதியங்களின் கிட்டத்தட்ட 55 பில்லியன் யூரோக்கள் வெட்டப்பட இருக்கின்றன.

ஸ்பெயின் பெரிதும் விரும்பத்தகுந்த இடமாக முதலீட்டிற்குக் கருதப்படுகிறது: இதற்குக் காரணம் அங்கு குறைவூதிய தொழிலாளர்கள் கிடைப்பதும், ஐரோப்பிய ஒன்றியத்தின் உதவித்தொகைகள் நிறைந்து இருப்பதும்தான். இப்பொழுது இது ஊதிய விகிதம் ஸ்பெயினில் இருப்பதில் ஏழில் ஒரு பங்காக இருக்கும், மொத்தம் 75 மில்லியன்பேருடைய இணைந்த மக்கள் தொகையுடைய நாடுகளுடன் கட்டாயம் போட்டியிட வேண்டும்.

இதுதான் ஊதிய வெட்டு, பெருகிய சுரண்டல்தன்மை, வேலையிழப்புக்கள் ஆகியவற்றின் தயாரிப்பிற்கு வழிகாட்டுவது ஆகும். ஐரோப்பிய ஒன்றியத்தின் புதிதாக நுழையும் நாடுகளின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கு பதிலாக, முதலாளித்துவ வர்க்கம் ஐரோப்பா முழுவதுமே வாழ்க்கைத் தரத்தை புதிய உறுப்பு நாடுகளின் மட்டத்திற்கு மட்டுமல்லாமல், இலத்தீன் அமெரிக்கா, ஆபிரிக்கா, ஆசிய நாடுகளில் உள்ள மட்டத்திற்கு கொண்டுவர அது முயற்சிக்கிறது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் அரசியல் அமைப்பு

இந்த இரண்டு கட்டாயங்களான, கண்டம் முழுவதும் பொருளாதார சமூக உறவுகளை அமெரிக்கமயமாக்குதல், ஐரோப்பிய இராணுவவாதத்தின் வளர்ச்சிக்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் என்பவை திட்டமிடப்பட்டுள்ள ஐரோப்பிய ஒன்றிய அரசியல் அமைப்பில் உருக்கொண்டுள்ளது.

இது ஐரோப்பிய குடிமக்களுடைய உரிமைகளின் அடிப்படையில் எழுப்பப் பெறும் அரசியலமைப்பு அல்ல, மாறாக ஐரோப்பிய ஒன்றியம் முழுவதும் ஒரு பொதுப் பொருளாதார மூலோபாயத்தை வளர்க்கும்பொருட்டு உழைக்கும் மக்களின் மேல் மூலதனத்தின் மற்றும் ஆளும் செல்வந்தத்தட்டின் உரிமைகளை உறுதிப்படுத்தி, உறுப்பு நாடுகளுக்கு இடையே உள்ள உறவுகளை ஒழுங்குபடுத்துவதாகும். இந்த இலக்கை அடிப்படையாகக் கொண்டு, "பணிகள், பொருட்கள், மூலதனங்கள்" சுதந்திரமாக இயங்குவதற்கான உரிமையை தொகுத்துக் கூறும் அதேவேளை, உழைக்கும் மக்களுடைய உரிமைகள் கடுமையாய் வெட்டிக்குறைக்கப்பட்டு, பெருவணிகத்தின் தேவைக்கேற்ற வகையில் கீழ்ப்படுத்தப்பட்டுள்ளது. "சுதந்திரம், பாதுகாப்பு, நீதி" என்ற கருத்துக்கள், "போட்டி சுதந்திரமாகவும், சிதைக்கப்படாமலும் இருக்கும் ஒரு தடையற்ற ஒற்றைச் சந்தை முறையைக்" காப்பதற்காகப் பயன்படும் என்று கூறப்பட்டுள்ளது.

உறுப்பு நாடுகள் அனைத்திலும் பொருளாதாரம், வேலைவாய்ப்பு, சமூகக் கொள்கைகள் ஒருங்கிணைப்பதற்கான பொறுப்பு ஐரோப்பிய ஒன்றியத்திற்கு கொடுக்கப்பட்டுள்ளது. இந்த அரசியல் அமைப்பில், "உட்சந்தை தொழிற்படுவதற்கு தேவையான போட்டி விதிகளை ஏற்படுத்துதல்", "யூரோவை நாணயமாகக் கொண்டுள்ள உறுப்பு நாடுகளின் நிதிக் கொள்கை" மற்றும் "பொது வணிகக் கொள்கை" உள்பட, பல பகுதிகளிலும் பிரத்தியேகமான முறையில் செயல்படும் திறமையை அரசியல் அமைப்பு ஐரோப்பிய ஒன்றியத்திற்கு வழங்குகிறது.

ஒரு பிரச்சினையில் அரசியல் அமைப்பு வெளிப்படையாக உறுப்பு நாடுகளின் இறைமை உரிமைகளைப் பாதுகாக்கிறது: அது, போலீஸ், இராணுவ சாதனங்களை பயன்படுத்தி உள்நாட்டில் ஒழுங்கைப் பராமரிப்பதுதான். பிரிவு 1ல், விதி 1-.5 , "அரசியல் அமைப்பு நாட்டின் நிலப்பரப்பின் முழுமை பாதுகாக்கப்படல், சட்டம் ஒழுங்கு பராமரிப்பு மற்றும் தேசியப் பாதுகாப்பு உத்திரவாதப்படுத்தல் உள்பட" இவற்றின் [உறுப்பு நாடுகளின்] அடிப்படை அரசாங்கச் செயற்பாடுகளை மதிக்கும் என்று கூறுகிறது.

அமெரிக்கா, நேட்டோ இராணுவ முறைகளில் இருந்து சுதந்திரமாக செயல்படும் வகையில், ஐரோப்பா தன்னுடைய ஆணையிடும் அமைப்பு மற்றும் வெளியுறவு அமைச்சர்களை கொண்ட ஒரு சக்தியாக அதனை நிறுவுதற்கு ஒரு பொது இராணுவக் கொள்கையை உருவாக்க அரசியல் அமைப்பு மேலும் கருதுகிறது. விதி 1-16ன்படி, திட்டமிடப்பட்டுள்ள அரசியல் அமைப்பு, "உறுப்பு நாடுகள் ஒன்றியத்தின் பொது வெளிநாட்டு மற்றும் பாதுகாப்புக் கொள்கைக்கு எந்தத் தயக்கமும் இல்லாமல் செயலூக்கத்துடன் ஆதரவைக் கொடுக்க வேண்டும்" என்று வலியுறுத்துவதுடன், "ஒன்றியத்தின் நலன்களுக்கு மாறாகவோ அதன் திறனைப் பலவீனப்படுத்தவோ எந்த செயல்களிலிருந்தும் விலகிக் கொள்ள வேண்டும் " என்றும் வலியுறுத்தி உள்ளது.

ஐக்கிய சோசலிச ஐரோப்பிய அரசுகளுக்காக

ஸ்பானிய மற்றும் ஐரோப்பிய தொழிலாள வர்க்கம் ஆட்சியாளர்களின் திட்டங்களுக்கு தக்க பதிலடி கொடுக்க வேண்டியது இன்றியமையாதது ஆகும். ஆனால், "வேண்டாம்" என்ற வாக்கு ஸ்பெயினில் ஐக்கிய இடதின் (Izquierdz Unida-IU) தலைமையில் உள்ள எதிர்க்கட்சியின் பிரச்சார அணிக்கு ஆதரவு என்று பொருள் ஆகிவிடாது: ஏனெனில் இதன் தலைவர் Gaspar Llamazares அரசியலமைப்பு "ஐரோப்பிய மக்களுடைய சமுதாய மற்றும் போர் எதிர்ப்பு மனப்பான்மைகளை பிரதிபலிக்கவில்லை... ஐரோப்பா தன்னுடைய சமூக முன்மாதிரியை, வட அமெரிக்காவில் இருந்து முற்றிலும் வேறுபட்ட தன்மையை கொண்டதாக உருவாக்குவதற்கான சீரிய சந்தர்ப்பமாகும். ஆனால் இந்த அரசியலமைப்பு அத்தகைய கருத்தில் இருந்து வெகு தொலைவில் உள்ளது, ஐரோப்பிய சமூக மற்றும் பொருளாதார முன்மாதிரியை சுக்குநூறாக்கி விட்டிருக்கிறது" என்று குறை கூறியுள்ளார்.

எந்த ஐரோப்பிய நாடும் அல்லது நாடுகளின் கூட்டும், முதலாளித்துவ அடிப்படைகளில் தளம் கொண்டுள்ளமை, போருக்குப் பிந்தைய பொருளாதார, சமூக மாதிரியை தொடர்வதற்காக வழங்க முடியும் என்ற கருத்து தவறானதாகும். ஐரோப்பாவில் இருந்த மிகப்பரந்த உதவித்தொகைகளும், சமூகநலன்புரி அமைப்பும் போருக்குப் பிந்தைய, அமெரிக்காவின் தலைமையிலான, பொருளாதார எழுச்சியின் விளைவுகள் ஆகும். பூகோளமயமாக்கப்பட்ட உற்பத்தியின் வளர்ச்சி அரசாங்கங்கள் அத்தகைய கொள்கைகளை செயல்படுத்துவதை இல்லாதொழித்துவிட்டன. பழைய முறையிலான கீன்சியப் பொருளாதாரக் கொள்கைகளில் (Keynesian economic policies) இருந்து, கட்டுப்பாடுகளை தளர்த்தல், தனியார்மயமாக்கல் என்று மாற்றப்பட்டதிற்கான உந்துதல் சக்திதான் இது.

தங்களது பல்வேறு பிரிவினைவாத நிகழ்ச்சிநிரலை முன்னெடுப்பதற்கான கருவியாக "பிராந்தியங்களின் ஐரோப்பா" என்ற வேலைத்திட்டத்தை முன்வைக்கும் ஸ்பெயினில் உள்ள தேசிய, பிராந்தியக் கட்சிகளின் செயற்பட்டியலுக்கு தொழிலாளர்கள் எந்த ஆதரவும் கொடுக்கக் கூடாது. இவற்றில் பெரும்பாலான கட்சிகள், மத்திய அரசாங்கத்தை ஓரம் கட்டி, கற்றலன் (Catalan) அல்லது பாஸ்க் (Basque) தொழிலாள வர்க்கத்தை குறைந்த ஊதிய உழைப்பின் ஆதாரமாக வழங்குதல் மூலம் தங்களுடைய பகுதிக்கு மூலதனத்தை ஈர்த்தல் மற்றும் சமூக சேவைகளை அகற்றிக் கிடைக்கும் பணத்தினால், குறைந்த வரி ஆட்சி அடிப்படையில் நாடுகடந்த நிறுவனங்களை கவர்ச்சிகாட்டி ஈர்த்தல் மூலம் ஐரோப்பிய முதலாளித்துவ வர்க்கத்துடன் நேரடித் தொடர்பை கட்டி எழுப்புதற்கான ஒரு வழிமுறையாக வாக்கெடுப்பை ஆதரிக்கின்றன.

தேசிய இறைமை அல்லது பிராந்திய சுயாட்சிக்கான கோரிக்கைகள் புரூஸல்சில் இருந்து வரும் ஆணைகளுக்கு எந்த மாற்றையும் கொடுத்துவிடாது, மாறாக, அவை பல சிறிய கூண்டுகளுக்கு ஒரு பெரிய மத்திய சிறையை பதிலீடாக்கும். மக்களை தேசிய, இன, சமய வழிகளில் பிரித்தல் என்பது கண்டத்தையே பால்கன்மயமாக்கி (சிறுதுண்டுகளாக்கி) பெரும் கொடூரமான விளைவுகளுக்கு வழிவகுக்கும்.

உழைக்கும் மக்களுடைய நலன்களை நன்கு பாதுகாக்கும் திறன் படைத்த, ஐரோப்பாவிற்கான ஒரு உண்மையான மாற்று, முதலாளித்துவ இலாப அமைப்பை சவாலுக்கு ஆளாக்காமல் சாத்தியம் இல்லை. அதற்கு கண்டத்தை போட்டியிடும் தேசிய நாடுகளின் பிளவுகளில் இருந்து கடந்து வருவதற்கான ஒரே அடிப்படையாக ஐக்கிய சோசலிச ஐரோப்பிய அரசுகள் அமைக்கப்படுவது தேவைப்படுகிறது. அது ஒன்றுதான் முழு கண்டத்தின் உற்பத்தி சக்திகளையும், பெருவணிக, உயர்நிதிய செல்வந்தத் தட்டுகளுடைய நலன்களுக்கு என்றில்லாமல், தொழிலாள வர்க்கத்தின் ஜனநாயகக் கட்டுப்பாட்டின்கீழ் வளர்ச்சியுற அனுமதிக்கும்.

ஓர் ஒன்றுபடுத்தப்பட்ட ஐரோப்பிய தொழிலாள வர்க்கத்திற்கு, அமெரிக்க ஏகாதிபத்தியத்தை எதிர்ப்பதற்கு ஒரு வலுவான அடிப்படையை கொடுக்கும். அது உலகெங்கிலும் இருக்கும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஊக்கம் கொடுப்பதோடு மட்டும் அல்லாமல், அமெரிக்க தொழிலாள வர்க்கம் வெள்ளை மாளிகை மற்றும் பென்டகனில் உள்ள போர் வெறியர்களுக்கு எதிராக தங்களுடைய சொந்த போராட்டத்தை மேற்கொள்ளுவதற்கும் உதவும். இதனை அடைவதற்கு, அமெரிக்க மக்களை புஷ்ஷின் குழுவுடன் ஒன்றுபடுத்தி பார்க்கும் பெரும்பாலான ஸ்ராலினிச, சமூக ஜனநாயக இடதுகள் கொண்டுள்ள பண்பற்ற அமெரிக்க எதிர்ப்புவாதத்தை உறுதியாய் எதிர்த்தல் ஐரோப்பிய தொழிலாள வர்க்கத்தை அரசியல் ரீதியாக மறுநோக்குநிலைப்படுத்த அத்தியாவசியமானதாகும்.

See Also:

ஐரோப்பிய ஒன்றிய அரசியல் யாப்பின் கையெழுத்திடலை மங்கச்செய்யும் ஐரோப்பிய ஒன்றிய கமிசனின் நெருக்கடி

ஐரோப்பிய யூனியன் தேர்தல் படிப்பினைகள்

Top of page