:
ஆசியா
:
இலங்கை
Striking Sri Lankan bus workers defy
government threats
வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள இலங்கை பஸ் தொழிலாளர்கள் அரசாங்கத்தின் அச்சுறுத்தலை
எதிர்க்கின்றனர்
By Saman Gunadasa
17 February 2005
Back to screen version
இலங்கையில் அரசாங்கத்திற்கு சொந்தமான பிராந்திய போக்குவரத்து கம்பனிகளின் பத்தாயிரக்கணக்கான
தொழிலாளர்கள், நீண்ட காலத்திற்கு முன்னர் வாக்குறுதியளிக்கப்பட்ட சம்பள உயர்வுக்காக பெப்பிரவரி 14 அன்று ஒரு
தேசிய வேலை நிறுத்த போராட்டத்தை முன்னெடுத்தனர். தொழிற்சங்கங்களின் எதிர்ப்புக்கு மத்தியிலும் வெடித்த இந்த
வேலை நிறுத்தம், கடந்த ஏப்பிரலில் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவின் கூட்டரசாங்கம் அதிகாரத்திற்கு வந்ததிலிருந்து
நடைபெறும் முதலாவது பிரதான தொழிலாளர் போராட்டமாகும்.
தொழிலாளர்கள், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்தின் 2004 நவம்பர் வரவு
செலவுத் திட்டத்தில் வாக்குறுதியளிக்கப்பட்ட 2,500 ரூபா (25 அமெரிக்க டொலர்கள்) மாத சம்பள அதிகரிப்பையும்,
2001ல் அரசாங்கத் தரத்தில் வழங்கப்பட்ட சம்பள உதவித்தொகையில் இன்னமும் கொடுக்கப்படாதுள்ள 800 ரூபாவையும்
கோருகின்றனர். அவர்களது கோரிக்கைகளில், இரண்டரை தசாப்தங்களுக்கு முன்னர் கொத்தணி பஸ் கம்பனிகள் என்றழைக்கப்படும்
பிராந்திய போக்குவரத்து கம்பனிகளுக்கு கீழிறக்கப்பட்டு மாற்றம் செய்யப்பட்ட இலங்கை போக்குவரத்து சபையை
மீண்டும் ஸ்தாபிப்பதும் அடங்கும்.
வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளவர்கள், ஆளும் சுதந்திர முன்னணி கூட்டணியைச் சார்ந்த,
அதே போல் எதிர்க் கட்சியான ஐக்கிய தேசிய முன்னணியையும் (ஐ.தே.மு) சார்ந்த தொழிற்சங்கங்களின் கடுமையான
அழுத்தங்களை எதிர்த்து நிற்கின்றனர். கடந்த வாரம் களுத்துறையில் உள்ள தொழிலாளர்கள் போராட்டத்தை முன்னெடுப்பதற்கான
ஆயத்தமாக ஒரு சுயாதீனமான குழுவை அமைத்ததை அடுத்து எல்லா பேருந்து வேலைத் தலங்களிலும் இருந்து தொழிலாளர்கள்
வெளியேறினர். இந்த வேலைநிறுத்தமானது தொழிலாளர்களை பிரிப்பதற்காக பிரதான அரசியல் கட்சிகளால் முன்னர்
சுரண்டிக்கொள்ளப்பட்ட இனவாத போக்குகளை குறுக்கே வெட்டிச் சென்றுள்ளது.
இந்த வேலை நிறுத்தம், குமாரதுங்க அரசாங்கத்தின் கீழ் வாழ்க்கைத் தரம் மற்றும்
தொழில் மீதான தாக்குதல்கள் மற்றும் அரசாங்கத்திற்கு சொந்தமான நிறுவனங்களை தனியார்மயமாக்கலை
எதிர்கொண்டுள்ள தொழிலாளர்களுக்கு மத்தியில் போராளிக்குணம் வளர்ச்சி கண்டுவருவதின் வெளிப்பாடாகும். ஏனைய
அரசாங்கத் துறைகளில் உள்ள தொழிலாளர்களும் போராட்டத்தில் இணைந்து கொண்டால், அது அரசியல் நெருக்கடியை
உக்கிரமாக்கும் என்பதையிட்டு விழிப்பாக இருந்த அரசாங்கம், பஸ் வேலைத் தலங்களை பொலிஸ் மற்றும் இராணுவக்
கட்டுப்பாட்டன் கீழ் கொண்டுவருவதாகவும் பஸ்களை ஓட்டுவதற்காக ஆயுதப் படைகளை பயன்படுத்தப் போவதாகவும்
அச்சுறுத்தியது.
வேலை நிறுத்தக்காரர்களுக்கு எதிராக சுனாமியின் எழுச்சியோடு அமுல்படுத்தப்பட்ட பரந்த
அவசரகாலச் சட்ட அதிகாரங்களை நாடக்கூடும். இந்தக் கொடுமையான நடவடிக்கைகள், இராணுவத்திற்கு
அதிகாரங்களைக் கையில் எடுத்துக்கொண்டு வேலை நீக்கத் தண்டனைகள் மற்றும் சட்ட நடவடிக்கைகளின் கீழ் ஊழியர்களை
வேலைவாங்க அனுமதிக்கும். இந்த அவசரகாலச் சட்டங்கள், சிறிய உதவிகளை அல்லது எந்த உதவிகளும் கிடைக்காமல்
இருக்கின்ற சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதை இலக்காகக் கொண்டதல்ல. மாறாக பேரழிவு மற்றும்
வாழ்க்கைத் தரத்திலான சீரழிவையிட்டு வளர்ச்சி கண்டுவரும் அதிருப்திக்கு எதிரானதாகும்.
அரசாங்கம் பெப்பிரவரி 15 அன்று வேலைநிறுத்தத்தை கண்டனம் செய்த தொழிற்சங்கத்
தலைவர்களை ஒரு "கலந்துரையாடலுக்கு" அழைப்பதன் மூலம், போராட்டத்தை நசுக்க வழிபார்த்தது. ஆனால் அந்தப்
பேச்சுவார்த்தைகள் வேலைநிறுத்தத்திற்கு முடிவுகட்டுவதில் தோல்வி கண்டது.
பெப்பிரவரி 8 அன்று, களுத்துறை, மதுகம, ஹொரன, பாணதுர, காலி மற்றும்
அம்பலங்கொட பஸ் வேலைத் தலங்களில் உள்ள தொழிலாளர்கள் வெளியேறியதை அடுத்தே இந்த போராட்டம்
தொடங்கியது. இரண்டு நாட்களின் பின்னர், ஏனைய ஒன்பது பிராந்திய போக்குவரத்து கம்பனிகளின் தொழிலாளர்களும்
நாடுபூராவும் ஒரு மணித்தியால வேலைநிறுத்தத்தையும் மற்றும் வேலைத் தலங்களைச் சூழ மறியல் போராட்டங்களையும்
மேற்கொண்டனர். வேலை நிறுத்தத்தில் இணையாதவர்கள் பஸ் வேலைத் தலங்களுக்குள் நுழைவதை தடுக்க முயற்சித்த
அரசாங்கம், காலியிலும் அம்பலங்கொடையிலும் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை மிரட்டுவதற்காக பொலிஸ்
குழுக்களை நிறுத்தியது.
களுத்துறை மற்றும் ருஹுனு பஸ் தொழிலாளர்கள் வேலைக்குத் திரும்புவதற்கான இறுதி
நிபந்தனையை புறக்கணித்ததையடுத்து, பெப்பிரவரி 12ம் தேதி 2,200 வேலைநிறுத்தக்காரர்களை வேலையிலிருந்து
நீக்கிவிட்டதாக அரசாங்கம் அறிவித்தது. தொழிலாளர்கள் தீவுபூராவுமான வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்து
பதிலளித்தார்கள்.
தற்போது 11 பிராந்திய போக்குவரத்து கம்பனிகளில் சுமார் 35,000 தொழிலாளர்கள்
வேலை செய்கின்றார்கள். அவர்கள் வீட்டுக்கு கொண்டுசெல்லும் சராசரி மாத சம்பளமானது, ஒரு சிறிய குடும்பத்திற்குக்
கூட போதாத 5,000 ரூபாய்களாகும் (50 அமெரிக்க டொலர்கள்). "நாங்கள் பெறுகின்ற சம்பளத்தல் சாதாரண
வாழ்க்கை கூட வாழ முடியாது. சம்பள உயர்வு வாக்குறுதிகளை நிறைவேற்றும் என்று நம்பியே நாங்கள் இந்த
அரசாங்கத்திற்கு வாக்களித்தோம். ஆனால் இப்போது அரசாங்கம் செயற்படுகின்ற முறையால் நாங்கள் உண்மையில்
புண்படுத்தப்பட்டுள்ளோம்," என அம்பலங்கொடை வேலை தலத்திலிருந்து ஒரு பஸ் நடத்துனர் தெரிவித்தார்.
பஸ் ஊழியர்களுக்கு 2001ல் இருந்து சம்பள உயர்வு கொடுக்கப்படவில்லை. அந்த வருடம்
அரசாங்க ஊழியர்கள் 1,200 ரூபா சம்பள கொடுப்பனவு ஒன்றைப் பெற்றுக்கொண்ட போதிலும், அதில் மூன்றில் ஒரு
பகுதியான 400 ரூபாவை மட்டுமே பஸ் ஊழியர்கள் பெற்றுள்ளனர். பிராந்திய போக்குவரத்து கம்பனி முழு
தொகையையும் பின்னர் தருவதாக வாக்குறுதியளிக்கும் அதே வேளை, தன்னிடம் பணம் இல்லை என்றும் கூறுகிறது.
வாழ்க்கைச் செலவுப் புள்ளி 2001ம் ஆண்டில் 2,899 முதல் 2005 ஜனவரியில் 3,896 வரை 2,720 ரூபாக்களுக்கு
சமமாக அதிகரித்துள்ள போதிலும், இதுவரையும் எதுவும் நடைபெறவில்லை.
நிதி அமைச்சர் சரத் அமுனுகம கடந்த நவம்பரில் அரசாங்க ஊழியர்களுக்கு 2,500 ரூபா
சம்பள உயர்வை அறிவித்தார். ஆனாலும் பிராந்திய பஸ் கம்பனி உட்பட அரசாங்கத்திற்கு சொந்தமான
கூட்டுத்தாபனங்களுக்கு இந்த அதிகரிப்பை விரிவுபடுத்த அரசாங்கம் மறுத்துவிட்டது. கடந்த ஏப்பிரலில் பொதுத் தேர்தல்
பிரச்சாரத்தின் போது இசை வேறுபட்டதாக இருந்தது. சுதந்திர முன்னணியும் மற்றும் அதோடிணைந்த தொழிற்சங்களும்,
"அரச போக்குவரத்து சேவையை மீளமைப்பதாக" வாக்குறுதியளித்ததன் மூலம், ஐ.தே.மு அரசாங்கம் சம்பந்தமாக
பஸ் தொழிலாளர்கள் மத்தியில் நிலவிய வெறுப்பை சுரண்டிக்கொண்டன.
எல்லாத் தொழிற்சங்கங்களிலும், ஆளும் சுதந்திர முன்னணியின் இரண்டாவது பெரும்
பங்காளியான மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி) தலைமையிலான தொழிற்சங்கம் வேலை நிறுத்தக்காரர்களை
தாக்குவதில் முன்னணி வகித்தது. எதிர்க் கட்சியாக இருந்த போது ஜே.வி.பி தொழிலாளர் உரிமைகளின் போராளியாகக்
காட்டிக்கொண்ட போதிலும், ஒரு முறை அரசாங்கத்திற்கு வந்த உடனேயே அதன் சாயம் வெளுத்துவிட்டது. இந்த வேலை
நிறுத்தம் அரசுக்கு சொந்தமான போக்குவரத்து கம்பனிகளை சீரழிக்கின்றது என்ற அரசாங்கத்தின் அதிகாரத்
தோரணையிலான குற்றச்சாட்டை ஜே.வி.பி கட்டுப்பாட்டிலான தொழிற்சங்கங்கள் எதிரொலிக்கின்றன.
ஜே.வி.பி தலைமையிலான, அனைத்து இலங்கை போக்குவரத்து ஊழியர்கள் சங்கத்தின்
தலைவர் சேபால லியனகே டெயிலி மிரர் பத்திரிகைக்கு கருத்துத் தெரிவிக்கையில்: "இந்தப்
போராட்டத்தைக் கொண்டுவருவதில் நாங்கள் தலையிடவில்லை," என்று குறிப்பிட்டார். "இந்தப் போராட்டத்தில்
(வேலைநிறுத்தம்) மாபியா தலையீடு செய்திருப்பது தெளிவு" எனவும் அவர் பிரகடனம் செய்தார்.
சுனாமியை அடுத்து, அனைத்தும் "தேசத்தை மீளக் கட்டியெழுப்புவதை" நோக்கி
திருப்பப்பட வேண்டுமெனவும் தொழிற்சங்க நடவடிக்கைகள் தவிர்க்கப்படல் வேண்டும் எனவும் ஜே.வி.பி பிரகடனம்
செய்திருந்தது. போக்குவரத்து ஊழியர்கள் தொடர்பான ஜே.வி.பி யின் நிலைப்பாடானது, தொழிலாளர்களின் நலன்களை
வர்த்தகர்களின் இலாபத்திற்காக கீழ்ப்படுத்துவதை இலக்காகக் கொண்டுள்ளது என்பதை தெளிவுபடுத்தியுள்ளது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி (ஸ்ரீ.ல.சு.க), லங்கா சமசமாஜக் கட்சி (ல.ச.ச.க)
மற்றும் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி போன்ற ஏனைய சுதந்திர முன்னணி பங்காளிக் கட்சிகளுக்கு சொந்தமான
தொழிற்சங்கங்களும் வேலை நிறுத்தத்திற்கு ஆதரவளிக்கப் போவதில்லை என அறிவித்திருந்தன.
ஆயினும் வேலைத்தம் செய்த தொழிலாளர்கள் தொழிற்சங்கத் தலைவர்களை
நிராகரித்தனர். பெப்பிரவரி 14 அன்று அதே செய்தித்தாளுக்கு முறைப்பாடு செய்த லியனகே: "இந்த முழு வேலை
நிறுத்தமும் கை நழுவியுள்ளது. தொழிலாளர்கள் விவகாரத்தை தங்கள் கைகளில் எடுத்துக்கொண்டுள்ளார்கள்," என்றார்.
இதே போன்று கருத்துத் தெரிவித்த ஸ்ரீ.ல.சு.க தொழிற்சங்க தலைவர் நிமால் அபயசிரி, உறுப்பினர்கள் எப்பொழுதும்
எந்த "கட்டளைகளுக்கு" செவிமடுப்பதில்லை என்றார்.
தெற்கு கிராமப்புற பிரதேசமான எல்பிட்டிய வேலைத் தளத்தில் சாரதியாக பணியாற்றும்
விஜேசிங்க, தொழிற்சங்கத் தலைவர்களின் வகிபாகத்தைப் பற்றி கடும் வெறுப்புடன் கருத்து வெளியிட்டார். "எந்தவொரு
தொழிற்சங்கத்தின் தலைவரும் சம்பள உயர்வை பெறுவதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை. ஜே.வி.பி அண்மையில் ஒரு
தொழிற்சங்கத்தை கட்டியெழுப்பியது. ஆனால் அவர்களும் அதே வள்ளத்திலேயே உள்ளனர். இப்பொழுது அவர்கள்
தொழிலாளர்களின் பிரச்சாரங்களை தவிர்க்கின்றார்கள்," என உ.சோ.வ.த நிருபர்களிடம் அவர் தெரிவித்தார்.
ஹொரண பிராந்திய போக்குவரத்து கம்பனியின் ஒரு தொழிலாளி: "தொழிற்சங்கத்
தலைவர்கள், தொழிலாளர்களை தவறாக வழிநடத்துவதன் மூலம் போராட்டத்தை தகர்க்க முயற்சிக்கின்றனர். அரச
மற்றும் ஏனைய ஊடகங்களும் போராட்டத்தை தனிமைப்படுத்துவதும் முயற்சியில் ஒரு பிற்போக்கு பிராச்சாரத்தை
முன்னெடுத்தன," என்றார். உ.சோ.வ.தளத்தின் ஆர்வத்தை பாராட்டிய அவர், தொழிலாளர்களின் உரிமைகளை
காப்பதற்கு ஆதரவளிக்குமாறு வேண்டுகோள் விடுத்தார்.
அரசாங்கம் தொழிலாளர்களின் கோரிக்கைகளை வழங்க முடியாது என வலியுறுத்தியுள்ளது.
போக்குவரத்து அமைச்சர் பீலிக்ஸ் பெரேரா, பிராந்திய போக்குவரத்து கம்பனி "பயனற்றதும்" இலாபமற்றதுமாகும்
என ஊடகங்களுக்குத் தெரிவித்தார். ஆனால் பஸ்சேவையின் சீர்கேட்டுக்கு உத்தியோகபூர்வ கொள்கையே காரணமாகும்.
அரசாங்கத்திற்கு சொந்தமான போக்குவரத்து சேவையானது ஒரு காலத்தில் வறிய மக்களுக்கு முக்கியமான நிவாரணமாக
இருந்தது. இது தங்களது சமூக நிலைமைகளை பாதுகாக்கும் முயற்சியில் உழைக்கும் மக்கள் வெற்றிகொண்ட சலுகைகளில்
ஒன்றாகும்.
கடந்த 25 ஆண்டுகளாக சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியினதும் திறந்த
பொருளாதாரக் கொள்கையின் கீழ், இலங்கை போக்குவரத்து சபை தீவிரமாக கீழ்நிலைக்குத் தள்ளப்பட்டு,
தனியார்மயமாக்கத்திற்கு வழிவகுக்கப்பட்டுள்ளது. ஆனால் வேலைத் தலங்கள் பல கொத்தணி கம்பனிகளாக
பிரிக்கப்பட்டதோடு வேலைத் தளங்கள் தனியாருக்கு விற்கப்பட்டன. சுமார் 15,000 சிறு இயக்குனர்களுக்கு கிட்டத்தட்ட
18,000 தனியார் பஸ்களே சொந்தமாக உள்ளன.
பிராந்திய போக்குவரத்த கம்பனிகளின் பஸ் கட்டணங்களும் வியத்தகு வகையில்
அதிகரித்துள்ளதால், சாதாரண மக்கள் மீது சுமைகள் அதிகரித்துள்ளன. போதுமான வருமானம் இன்மையால் சில்
பிராந்தய போக்குவரத்து கொத்தணி கம்பனிகள் சம்பளங்களை வழங்கத் தவறியுள்ளன. கடந்த ஆண்டுகளாக ஆட்சிக்கு
வந்த அரசாங்கங்கள், தொழிலாளர்களின் எதிர்ப்பினால் தனியார்மயமாக்கப்படாமல் எஞ்சியுள்ள அரச பஸ் மற்றும்
புகையிரத சேவைகளை முழுமையாக கரைத்துவிட முயற்சித்து வந்துள்ளன.
பஸ் வேலை நிறுத்தத்திற்கு எதிரான பிரச்சாரத்தில் ஊடகங்கள் பிரதான ஊற்றாக இணைந்து
கொண்டன. டெயிலி மிரர் பத்திரிகையின் ஆசிரியர் தலையங்கம் ஒன்று, வேலை நிறுத்தத்தை "நேர்மையற்றது"
என முத்திரை குத்தியதோடு பஸ் கம்பனிகளின் சீர் கேட்டிற்காக தொழிலாளர்களை குற்றம் சாட்டியது. ஐலண்ட்
பத்திரிகையின் ஆசிரியர் தலையங்கம், "வேலைத் தளங்கள் அதே முறைப்படி தனியார் பஸ் கம்பனிகளால் நடத்தப்பட
வேண்டும்," ஆதாவது "அவர்கள் பணம் கொண்டுவந்தால், அவர்கள் தொழிலுடனும் சம்பளத்துடனும் இருப்பார்கள்," என
தொழிலாளர்களை எச்சரித்தது.
வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுக்கு எதிரான அரசாங்கத்தினதும், எதிர்க்
கட்சிகளதும், தொழிற்சங்கங்களதும் மற்றும் வெகுஜன ஊடகங்களதும் ஒருமுகப் போக்கு, தொழிலாளர்களின் ஏனைய
பிரிவினர் மத்தியில் வளர்ச்சி கண்டுவரும் அமைதியின்மையை பற்றிய அவர்களின் பீதியை அம்பலப்படுத்துகிறது. இந்த சீற்றமும்
ஆத்திரமும், 40,000 உயிர்களைப் பலிகொண்டு சுமார் அரை மில்லியன் மக்களின் வீடுகளை அழித்த சுனாமி பேரழிவால்
மேலும் குவிந்து வருகிறது. அடிப்படை உதவிகள் பற்றாக்குறையையிட்டு போராட்டங்களும் வெடித்துள்ளன.
பிராந்தியப் போக்குவரத்து கம்பனி ஊழியர்கள், அவர்களது தொழிற்சங்கத் தலைவர்களை
நிராகரித்ததோடு தங்களது தொழில் மற்றும் ஒழுங்கான ஊதியத்திற்குமான போராட்டத்தை முன்னெடுப்பதில் தமது
உறுதிப்பாட்டை பிரகடனம் செய்தனர். ஆயினும், போராளிக்குணமும் விவகாரம் எவ்வளவு உறுதிப்பாட்டுடனும் உற்சாகத்துடனும்
உள்ளது என்பதும் போதுமானதல்ல. உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியத்தால் கோரப்படும், வாழ்க்கை
நிலைமைகளில் ஆழமான பிளவை ஏற்படுத்தும் நிச்சயமான வேலைத் திட்டத்தை அரசாங்கம் அமுல்படுத்திக்கொண்டிருக்கின்றது.
தொழிலாளர்களுக்கு தங்களது வர்க்க நலன்களை பாதுகாக்கும் தொழிலாளர்களது போராட்டத்தை அடிப்படையாகக்
கொண்ட ஒரு அரசியல் வேலைத் திட்டம் மற்றும் கட்சியும் அவசியம்.
பிராந்திய போக்குவரத்து கம்பனியை மிதப்பில் வைக்க தொழிலாளர்கள் அர்ப்பணிக்க
வேண்டும் என்ற அரசாங்கத்தின் அழைப்புக்கு எதிராக, ஒழுக்கமான தொழில் மற்றும் நிலைமைகள் மற்றும் ஒரு திருப்திகரமான
பொது போக்குவரத்து அமைப்புக்காக அரசாங்கத்திலிருந்து நிதி விநியோகிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுப்பப்பட
வேண்டும். ஆஸ்பத்திரிகள், பாடசாலைகள் மற்றும் கைத்தொழில் நிறுவனங்களிலும் உள்ள ஏனைய தொழிலாளர்களும் ஒரே
வள்ளத்தில் இருக்கும் அதே வேளை, அவர்கள் இந்த வேலைநிறுத்தக்காரர்களுக்கு ஆதரவளிக்க வேண்டும்.
அரசாங்கம் சந்தேகத்திற்கிடமின்றி தன்னிடம் பணம் இல்லையென வாதாடும். இது ஒரு
தொழிலாளர் விவசாயிகள் அரசாங்கத்தின் தேவையையும், ஒரு சிலரின் இலாபத்திற்காக அன்றி, உழைக்கும் மக்களின்
தேவைகளை அடைவதற்காக சமுதாயத்தை மீளமைப்பதற்கான சோசலிசக் கொள்கைகளின் தேவையையும் சாதாரணமாக
முன்வைக்கின்றது. இத்தகைய ஒரு போராட்டத்திற்காக, சர்வதேச நிதி மூலதனத்தின் தாக்குதலுக்கு முகம் கொடுத்துள்ள
உலகம் பூராவும் உள்ள தங்களது வர்க்க சகோதர சகோதரிகளுடன் இலங்கைத் தொழிலாளர்கள் ஐக்கியப்பட வேண்டும்.
இந்த முன்னோக்குக்காகவே சோசலிச சமத்துவக் கட்சியும் மற்றும் உலக சோசலிச வலைத் தளமும்
போராடுகின்றன. |