:
ஐரோப்பா :
ரஷ்யா மற்றும் முந்தைய USSR
Two mysterious deaths in the Georgia's
"Rose Revolution" regime
ஜோர்ஜியாவின் "ரோசாப் புரட்சி" ஆட்சியில் இரு மர்ம மரணங்கள்
By Patrick Richter
16 February 2005
Back to screen version
பெப்ரவரி 3ம் தேதி இரவு, தன்னுடைய நண்பரும் சக கட்சி உறுப்பினருமான 25 வயதான
ராவுல் யுசுபோவின் இல்லத்தில், 41 வயதான ஜோர்ஜிய பிரதம மந்திரி ஜுராப் ஜுவானியா இறந்து கிடந்தார். "குறுகிய
காலம்தான்" அங்கு இருப்பேன் என்று கூறியிருந்த அவர், பின்னர் எவருடனும் பல மணி நேரம் ஆகியும், எந்தத்
தொடர்பும் கொள்ளவில்லை. வெளியிலே காத்துக் கிடந்த இவருடைய மெய்க்காப்பாளர்கள் இருவரும் குடியிருப்பில் வழியை
உண்டாக்கி இறந்து கிடந்ததை கண்டனர்; நண்பர் சமையல் அறையில் கிடந்தார்; ஜுவானியா வரவேற்பு அறையில் ஒரு
சாய்வுநாற்காலியில் மடிந்திருந்தார்.
அதிகாரபூர்வமாக இறப்புக்களுக்கு காரணம், ஈரானில் வந்திருந்த எரிவாயு கொதிநீர் கலத்தில்
(Gas Heater) இருந்து வெளிவந்த கார்பன் மோனாக்சைடு
(Carbon Monoxide)
விஷவாயு என்று குறிப்பிடப்பட்டது. ஜோர்ஜியாவில் கடந்த 50 ஆண்டுகளாக அத்தகைய
80 மரணங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளபோதிலும், இந்த விளக்கத்தில் அதிக நம்பகத்தன்மை இல்லை. பல வினாக்கள் விடையளிக்கப்படாமல்
உள்ளன.
குற்றத் தடயவியல் ஆய்வினர் முடிவு காண்பதற்கு முன், மரணத்திற்கு காரணம் கார்பன்
மோனா க்சைட் நச்சு என்பதை அதிகாரிகள் ஏன் ஒப்புக்கொண்டனர் என்பது கேள்விக்கு உரியதாகத்தான் உள்ளது.
சம்பவம் நடந்த இடத்தை பார்வையிடுவதற்கு செய்தியாளர்களுக்கு அனுமதி கொடுக்கப்படவில்லை மற்றும் பல முரணான
தகவல்கள்தான் எஞ்சி நிற்கின்றன.
கொதிகலன் (Heater)
சரியாக இயங்கவில்லை என்பதே இன்னும் நிரூபிக்கப்படவில்லை. அது மிக நல்ல நிலையில் இருந்ததாகவும், பல மாதங்களாக
ஒழுங்காக செயல்பட்டு வந்ததாகவும்தான் கூறப்படுகிறது, இதைத்தவிர, யுசுபோவின் உறவினர்கள் அவர் இந்தக்
கட்டிடத்தை வாடகைக்குக்கூட எடுக்கவில்லை என்றுதான் கூறுகின்றனர். அவர் தன்னுடைய மனைவியுடனும் ஒன்றரை வயது
மகனுடனும் 15 கிலோமீட்டர் தள்ளியிருக்கும் ஓரிடத்தில் வசித்துவந்தார். இதையொட்டி பல மந்திரிசபை உறுப்பினர்கள்
இது போன்ற, "சதி நடத்தப்படும் இடங்கள்" என்று அழைக்கப்படும் இடங்களுக்கு சென்றுவந்தனர் என்றும் செய்தி வெளியாகியுள்ளது.
மேலும், ஜுவானியா "தன்னுடைய நண்பர்" வசிக்கும் இடத்திற்குத் தன் மெய்க்காப்பாளர்கள்
இல்லாமல் ஏன் போனார் என்பதும் தெளிவாகத் தெரியவில்லை. இந்தச் சந்திப்பு ஒரு மூன்றாம் மனிதரின் தலையீட்டின் பேரில்
ஏற்பாடு செய்யப்பட்டது எனக் கூறப்படுகிறது; அதாவது "நட்பு" அந்த அளவு நெருக்கம் இல்லை போலும்.
மேலும் மெய்க்காப்பாளர்களின் பங்கும் பல வினாக்களை எழுப்பியுள்ளது. ஒரு தெரியாத
இடத்தில் மெய்க்காப்பாளர்கள் எப்பொழுதும் ஆபத்துத் திறன் இருக்கக்கூடிய ஆதாரங்களை தவிர்த்தல் நடைமுறையாகும்.
மேலும் அவர்கள் ஜுவானியாவுடன் ஒவ்வொரு முப்பது நிமிஷமும் தொடர்பு கொண்டு அவருடைய நிலைமையை அறிந்திருக்க
வேண்டும். உண்மையிலேயே இருவரும் இந்த இடத்தில்தான் இறந்தனரா என்றே சில சந்தேகங்கள் எழுந்துள்ளன.
ஆரம்பத்தில் முடியாமலும் பின்னர் பூட்டியிருந்த கனமான கதவுகளை உடைக்கத் தலைப்பட்டு முடியாமற் போயிற்று என்று மெய்க்காப்பாளர்கள்
கூறியுள்ளதை அண்டைவீட்டார்கள் எவரும் உறுதி செய்யவில்லை. பின்னர் ஜன்னல்கள் உடைக்கப்பட்டதும் எவருடைய கவனத்திற்கும்
வரவில்லை.
ஒரு நாள் கடந்த பின், பெப்ரவரி 4ம் தேதி மாலை, 32 வயது ஜோர்ஜி ஷேலஷ்விலி
என்பவரும் தன்னுடைய வீட்டில் இறந்து கிடந்த நிலையில் காணப்பட்டார். அவர் தற்கொலை செய்து கொண்டார் என்று
கூறப்படுவதும் மர்மமாகத்தான் உள்ளது. ஒரு வேட்டைத் துப்பாக்கியால் தன்னையே சுட்டுக்கொண்டுவிட்டதாக கூறப்படுகிறது.
நிகழ்விற்கு முன், தான் உயிரை மாய்த்துக் கொள்ளப்போவதாக அவர் சிறு குறிப்பு கூடக் காட்டவில்லை.
ஷேலஷ்விலி, ஜுவானியின் நேரடிப் பார்வையின் கீழ் இயங்கிவந்த அதிகாரபூர்வ குழு ஒன்றின்
உறுப்பினர் ஆவார். முதல் நாள் அவர் ஜுவானியாவின் மரணச் சூழ்நிலை பற்றி போலீசாரால் விசாரிக்கப்பட்டிருந்தார்.
அவர் என்ன தகவல்கள் கொடுத்தார் என்பதும் தெரியவில்லை.
"ரோசா புரட்சி"
இரண்டு அரசியல் வாதிகள் இறந்ததற்கு உண்மையான காரணங்கள் எதுவாக இருந்தாலும்,
"ரோசா புரட்சியில்" இருந்து எழுந்த ஆட்சி பற்றி அவை விளக்கும் வகையை கொண்டுள்ளன.
மேலைச் செய்தி ஊடகங்களால் பெரிதும் போற்றப்பட்டும், மேலை அரசாங்கங்கள் நிறைய
நிதி செலவழித்து, ஆதரவு கொடுத்து அதிகாரத்திற்கு இவ்வாறு வந்துள்ள "ஜனநாயக" ஆட்சிகள் அனைத்திலுமே மர்மமான
மரணங்களும் ஒரு மூலக்கூறாகத்தான் வெளிப்பட்டு வருகின்றன. சேர்பியாவில் இப்படி பாதிக்கப்பட்டவர், "அமைதிப்
புரட்சிக்கு", முக்கிய தலைமை வகித்திருந்த ஜோரன் டிஜின்ட்ஜிக், பின்னர் எத்தகைய சூழ்நிலையில் கொலை செய்யப்பட்டார்
என்பதற்கு இன்னும் விளக்கம் கிடைக்கவில்லை. உக்ரைனில் போக்குவரத்து மந்திரி ஜோர்ஜி கிர்பா "ஆரஞ்சுப் புரட்சியின்"
உச்சக் கட்டத்தில் கொலையுண்டமை தற்கொலை என்று மீண்டும் கூறப்பட்டது. வெளியேறும் ஜனாதிபதி லியோனிட்
குச்மாவின் ஆதரவாளர் என்று கருதப்பட்ட கிர்பா, பழைய பிரதம மந்திரி விக்கடர் யானுகோவிச்சிற்கு ஒரு
போட்டியாளராகவும் இருந்தவர் ஆவார். இப்பொழுது ஜுவானியாவும், ஷிலேஷிவிலியும் ஜோர்ஜியாவில் மடிந்துள்ளனர்!
இந்த மரணங்கள் அனைத்திலுமே ஒரு பொதுத் தன்மை காணப்படுகிறது: இதற்குக் காரணம்
எனச் சந்தேகிக்கப்படுபவர்கள் என, தேசிய பாதுகாப்பு எந்திரங்களையும், அரசாங்கத்துடன் நெருங்கிய தொடர்பு உடைய
மாபியா மூலங்களையும் சுட்டிக்காட்ட முடியும். இந்த இறப்புக்கள் அனைத்துமே கட்டற்றவகையில் பணம் பண்ணுதலின் பின்னணியிலும்
அதனோடு சேர்ந்த தேசிய உடைமை தனியார் மயமாக்கப்படுதல் என்பதின் பின்னணியிலும் இடம்பெற்றுள்ளன. இவைதான்
"சுதந்திரம்" என்பதின் முக்கிய காரணி என்று அனைத்து புதிய அரசாங்கங்களாலும் பெரும் ஆர்வத்துடன் தழுவப்படுகின்றன.
சுருங்கக் கூறின், மாபியாவிற்குள் இருக்கும் நிலைமபோல், கொலைகள், மர்ம இறப்புக்கள் இவைகள் நிறைந்த ஓர்
அரசியல் சூழ்நிலைதான் கொலைகளையும் மர்மமான இறப்புக்களையும் ஊக்குவிக்கின்றன.
"ரோசா புரட்சிக்குப்" பின்னர் ஜோர்ஜியாவில் வந்த அரசாங்கம் தனக்கு என்று நிர்ணயித்திருந்த
எந்த இலக்குளையும் அடையாமல் பெருந்தோல்வியை கண்டுள்ளது. மக்களுடைய சமூக நிலைமையில் சிறிதும் குறிப்பிடக்கூடிய
முன்னேற்றத்தை காண்பதற்கில்லை; ஜனநாயக உரிமைகள் தவறாக பயன்படுத்தப்படுதல் முன்னைவிட கூடுதலாகத்தான் வெளிப்படையாகியுள்ளது.
நவம்பர் 2003ல் நிகழ்ந்த "ரோசா புரட்சி" ஜனாதிபதி எட்வார்ட் ஷவர்ட்நாட்சேயின்
அரசாங்கம் சரிவதற்கு காரணமாயிற்று. அமெரிக்காவிடம் இருந்தும், ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்தும் கணிசமான நிதிய,
அரசியல் ஆதரவைக் கொண்டிருந்த ஷவர்ட்நாட்சேயின் பழைய ஆதரவாளர்கள், வயதான ஜனாதிபதிக்கு எதிராக "மக்கள்
இயக்கம்" என்ற பெயரில் நாட்டின் மகத்தான சமுதாய வறுமையினால் விளையும் பரந்த அதிருப்தியை சூழ்ச்சியுடன் கையாண்டனர்.
நவம்பர் 2, 2003 பாராளுமன்ற தேர்தல்களில் நிகழ்ந்த மோசடிகள், மற்றும் ஷவர்ட்நாட்சே ஆட்சியில் ஜனநாயக
உரிமைகள் அடக்கப்பட்டதும், பெருகிவந்த ஊழலை பற்றி மக்கள் கொண்ட இகழ்வுணர்வும், புரட்சியை தூண்டிவிட்டிருந்தன.
இந்த இயக்கத்தின் ஆதரவுடன், அமெரிக்கா ஜோர்ஜியாவில், மேலை நாடுகள் சார்புடைய
மற்றும் அமெரிக்க நலன்களை தெற்கு காகசஸ் பகுதியில் பெருக்கக்கூடிய அரசாங்கம் ஒன்றை நிறுவ முற்பட்டது. எண்ணெய்
மற்றும் இயற்கை எரிவாயு வளம் மிகுந்த இப்பகுதியில் தன்னுடைய புவிசார் அரசியல் மூலோபாயம் மற்றும் சக்தி நலன்களுக்காகவும்,
ரஷ்யா பாரம்பரியமாக கொண்டிருந்த செல்வாக்கிற்கு எதிராக செயலாற்றும் வகையிலும் அத்தகைய அரசாங்கம்
இருக்கவேண்டும் என்று அமெரிக்கா விரும்பியது. இந்த செயல்திட்டத்தின் மையத்தானத்தில், சமீபத்தில் நிறைவு செய்யப்பட்ட
எண்ணெய் குழாய்த்திட்டமும் இருந்தது; இது அஜர்பைஜானின் தலைநகர் பாக்குவில் இருந்து துருக்கியின் செய்ஹன் வரை
நிறுவப்பட்டு, ஜோர்ஜியாவிலும் படர்ந்து, காஸ்பியன் எண்ணெய்ப்படுகையில் இருந்து உலகச் சந்தைக்கு செல்லும் எண்ணெயில்
பெரும் விகிதத்திற்கான விற்பனைக்கு பொறுப்பையும் கொண்டுள்ளது; அதே நேரத்தில் இந்த குழாய் திட்டம் ரஷ்யா,
மற்றும் ஈரானை தவிர்த்திருக்கிறது.
ஷவர்ட்நாட்சே ஆட்சியானது, எண்ணெய் குழாய் திட்டத்தை கட்டமைக்கவும், அமெரிக்க படைகள்
நிறுத்தப்படவும், அமெரிக்க இராணுவம் ஜோர்ஜிய இராணுவத்திற்கு பயற்சி அளித்து அமெரிக்க செயற்கருவிகளை அளிப்பதற்கும்
உடன்பட்டிருந்தாலும், சிறிது காலத்தில் அமெரிக்கா இங்கு உறுதியற்ற நிலைதான் இருக்கும் என்பதை கண்டது. ரஷ்யாவிற்கு
எதிராக இந்த ஆட்சி உறுதியான நிலைப்பாட்டை கொள்ள முடியவில்லை. 1999ம் ஆண்டு, மூன்று ஜோர்ஜிய எதிர்ப்பு
பகுதி குடியரசுகளான அப்காஜியின், சூடோஸ்டேசியென் மற்றும் அஜாரியாவில் தன்னுடைய படைகளை தொடர்ந்து நிறுத்திக்
கொள்ளுவேன் என்று ரஷ்யா ஒருதலைப்பட்சமாக அறிவித்துவிட்டது.
ஜூரப் ஜுவானியா
ஷவர்ட்நாட்சே அகற்றப்படுவதில் நீண்டகால திட்டங்கள் தயாரித்து செயல்படுத்தப்பட்டதில்,
ஜுவானியாவிற்கு முக்கிய பங்கு இருந்தது. பாராளுமன்ற தலைவர் நினோ புர்ஜனட்ஜேயுடனும் தற்போதைய தலைவர் மிகையில்
சாகேஷ்விலியுடனும் இவர் "மூவர் புரட்சிக்குழு" என அழைக்கப்பட்ட இயக்கத்திற்கு தலைமை தாங்கிய குழுவின் ஒரு பகுதியாக
இருந்தார்.
ஓர் உயிரியில் வல்லுனரான ஜுவானியா, 1980களில் ஜோர்ஜிய பசுமை இயக்கத்தினரை
ஒரு அரசியல் கட்சியாக நிறுவிய வகையில் பெயர் பெற்றார். 1992ம் ஆண்டு பாராளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டு,
அப்பொழுது ஜனாதிபதியாக இருந்த ஸ்வியட் கம்சசூர்டியாவின் முக்கிய விரோதிகளில் ஒருவராகக் கருதப்பட்டார். ஷவர்ட்நாட்சேயின்
"குடிமக்கள் ஒன்றியத்தில்" அவர் கட்சியின் தலைவர் என்ற பதவிக்கு உயர்ந்து ஷவர்ட்நாட்சேயின் நெருக்கமான ஆதரவாளரானார்.
1995ல் இருந்து பாராளுமன்றத்தின் தலைவராகவும் செயல்பட்டார். அக்காலக்கட்டத்தில் ஷவர்ட்நாட்சேயின் அபிமானம்
பெற்று பின்னால் பதவிக்கு வரவுள்ளார் என்ற கருத்தும் இருந்தது.
ஆயினும் ஷவர்ட்நாட்சேயின் ஆட்சிக்கு எதிர்ப்பு பெருகியபின்னர், ஜூவானியா தன்னுடைய எதிர்காலம்
இருண்டுவிடும் என்று நினைத்து அவருடைய வட்டத்தில் இருந்து விலகிவிட நினைத்தார். "சுதந்திரத்திற்கான மற்றும்
காம்சசூர்டியாவின் ஊழலுக்கு எதிரான போராட்டத்தில்" இருந்து தோன்றிய ஷவர்ட்நாட்சே ஆட்சியின் தன்மை, இன்னும் தெளிவாக
உணரத்தக்கதாக ஆனது.
ஷவர்நாட்சேயின் ஆட்சியின்கீழ், முன்என்றுமிராத வறுமைத் தரத்திற்கு நாடு தாழ்ந்தது.
சமூக ஒழுங்கு சரிந்தது, ஓய்வூதியங்களும் சராசரி வருமானங்களும் மாதம் ஒன்றிற்கு அமெரிக்க டாலர் 7ல் இருந்து 20
வரை குறைந்தது; நீர்த்தட்டுப்பாடும், மின்தட்டுப்பாடும் அன்றாட வாடிக்கையாயின. மாஃபியா எதிர்க்குழுக்களின் துப்பாக்கிச்
சண்டைகளும் 1990 இறுதிவரை வாடிக்கையாயின. அவர் மீது தீட்டப்பட்ட கொலைமுயற்சிகளில் இருந்து மூன்று முறை ஷவர்நாட்சே
தப்பிப் பிழைத்தார். அதே நேரத்தில் அவருக்கு நெருக்கமாக இருந்த குலக்கூட்டம் தன்னை பெரிதும் செல்வம்
கொழிக்கும் குழுவாக மாற்றிக் கொண்டது. அவருடைய மகள் மனா, நாட்டின் திரைப்பட, தொலைக்காட்சி துறைகளை
கட்டுப்படுத்தினார்; அவ்வம்மையாரின் கணவர் ஜோர்ஜி, நாட்டின் செய்தித்தொடர்பு நிறுவனமான
Magti GSM இன்
சொத்தில் மூன்றில் ஒரு பங்கிற்கு உரிமையாளராக இருந்தார். அவருடைய சகோதரர் மகன் நுக்சர் எண்ணெய், எரிவாயு
நிறுவனங்களை தன் கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருந்தார்.
இத்தகைய நிலைமைகள் மீது மக்கள் கொண்ட சீற்றம் கட்டுக்கடங்காமல் வெளிவருமோ
என்ற அச்சம் ஏற்பட்டது. 2001 கோடைகாலத்தில் இந்நெருக்கடியின் உச்சக் கட்டம் ஏற்பட்டது. ஜூலை மாதத்தில்,
சுதந்திரமான தொலைக்காட்சி நிறுவனம் Rustwi-2ல்
நடுவராக புகழ்பெற்றிருந்த ஜோர்ஜி சனை என்பவர் கொலைசெய்யப்பட்டுவிட்டார். செப்டம்பர் மாதம் அரசாங்கம்
தொலைக்காட்சி நிறுவன அலுவலகங்களை சோதனை செய்வதற்கு வரிவிதிப்பு அதிகாரிகளுக்கு அனுமதி கொடுத்ததுடன்,
வரிபாக்கிக்காக நிறுவனத்தையே மூடிவிடுவதாகவும் பயமுறுத்தியது. ஆயிரக்கணக்கான மக்கள் தெருவிற்கு வந்து ஆர்ப்பாட்டம்
நடத்தினர்; நவம்பர் மாதம் ஷவர்ட்நாட்சே, அரசாங்கத்தை பதவிநீக்கம் செய்யுமாறு கட்டாயப்படுத்தப்பட்டார்.
அந்நேரத்தில் ஜுவானியா, தான் மூழ்கிக் கொண்டிருக்கும் கப்பலைவிட்டு நீங்க வேண்டிய
நேரம் வந்துவிட்டது என்பதையும், தன்னுடைய அரசியல் விதியை தான் ஒத்துழைப்பவர்களுடைய கைகளில் விட்டுவிடக் கூடாது
என்பதையும் உணர்ந்தார். 2000-ம் ஆண்டில் ஷவர்ட்நாட்சேயிடம் இருந்து தொலைவில் செல்ல முதல் முயற்சிகளை மேற்கொண்டு,
அவருடைய ஊழலைப் பற்றியும் பகிரங்கமாக குற்றம் சாட்டினார். அரசாங்கம் கலைக்கப்பட்ட பின்னர் அவர் பாராளுமன்ற
தலைவர் என்னும் பதவியில் இருந்தும் ராஜிநாமா செய்தார். செப்டம்பர் மாதம் நீதி மந்திரிப் பதவியில் இருந்து விலகி,
எதிர்க்கட்சிக்கு சென்றுவிட்டிருந்த மிகைல் சாகேஷ்வில்லியின் உதராணத்தை இவர் பின்பற்றினார்.
இதையடுத்து, ஷவர்ட்நாட்சேயின் செல்வாக்கு விரைவில் மங்க ஆரம்பித்தவுடன் ஜுவானியா,
சாகேஷ்வில்லி மற்றும் புர்ஜனட்ஜே ஆகியோரின் "சீர்திருத்த முகாம்கள்" நெருக்கமாக வந்தன. 2002 கோடை
காலத்தில் இவருடைய கட்சி உள்ளூர் தேர்தல்களில் 1 சதவிகித வாக்கைத்தான் பெற்றது.
அமெரிக்க உதவியுடன் இவர்கள் நவம்பர் 2, 2003 ல் நடைபெற்ற பாராளுமன்றத்
தேர்தல்களில் வெளிப்படையாக அதிகாரத்திற்கான போராட்டத்திற்குத் தயாரானார்கள். அதிகாரபூர்வமாகவும், அதிகாரமற்ற
வகையிலும் அமெரிக்காவிற்கு பல முறை சென்ற இவர்கள் வாஷிங்டனில் உள்ள பல சிந்தனைக் குழுக்கள், அமைப்புக்கள்
இவற்றுடன் நெருக்கமான உறவைக் கொண்டனர். அப்பொழுது வெளிவந்த கருத்துக்களுக்கு மாறாக, அவர்களுடைய முக்கிய
நோக்கம் "ஜனநாயக நிலைமைகளை" தோற்றுவித்தல், "செல்வக் கொழிப்பை" ஏற்படுத்துதல் என்றில்லாமல், இருக்கும்
ஆட்சி நடைமுறையை காப்பாற்றுவதும், நாட்டை முற்றிலும் வாஷிங்டனுக்கு தாழ்ந்து நிற்பதற்கான ஏற்பாடுகளை செய்வதும்
ஆக இருந்தது.
புதிய ஆட்சியின் உண்மையான முகம்
சாகேஷ்விலி ஜனாதிபதியாகவும், ஜுவானியா பிரதம மந்திரியாக சற்று தாமதித்தும் பதவி
ஏற்ற பின்னர், கடந்த ஆண்டுகளின் கொள்கைகள் இந்தப் போக்கைத்தான் உறுதிப்படுத்தியுள்ளன. ஆட்சியின் உண்மையான
முகம் இப்பொழுது தெளிவாகத் தெரிகிறது: வேண்டியவருக்கு ஆதரவு கொடுத்தல், முற்றிலும் ஐயத்திற்குரிய வணிக உடன்பாடுகள்,
சதித்திட்டங்கள், அவதூறு பரப்புதல், ஷவர்ட்நாட்சே ஆட்சியின்போது வெளிவந்திருந்த கொள்ளை இலாபக்கரார்களின்
தொடர்ந்த ஆதிக்கம் மற்றும் தாங்கள் சட்டவிரோதமாக சேர்த்திருந்த சொத்துக்களை சட்டபூர்வமாக்குதல் ஆகியவை
இம்முகத்தின் தன்மைகள் ஆகும்.
உதாரணமாக ஊழல் அகற்றப்பட்டுவிட்டது என்று சாகேஷ்விலி பறைசாற்றிக் கொள்ளலாம்;
ஏனென்றால் பழைய செல்வந்தத்தட்டினர் அரசாங்கத்திற்கு "தாராளமாக" திருப்பிக் கொடுத்துவிட்டனர் என்பதால்.
சமீபத்தில் அவ்வளவு ஆர்ப்பாட்டம் இல்லாமல் போனாலும், எந்த அளவிற்கு இந்த திருப்பிக் கொடுக்கப்பட்ட பணம்
இருந்தது என்பது வெளிப்படுத்தப்பட்டது; மொத்தத்தில் 25 மில்லியன் யூரோக்கள்தான் அரசாங்க கருவூலத்தை வந்து
அடைந்தன. திருட்டிற்காகவோ, சந்தேகத்திற்குரிய வணிக உடன்பாடுகளுக்காகவோ எவரையும் பொறுப்பு கேட்கப்படவில்லை;
அரசாங்கம் உண்மையில் செய்ததெல்லாம் கடந்த ஆண்டுகளில் நிகழ்ந்த கொள்ளையடிப்புக்கள் அனைத்தையும் சட்டபூர்வமாக்கியதுதான்.
இதற்கு மாறாக, இது புதிய அரசாங்கக் குழுவிற்கு கொள்ளைப் பணத்தை புதுமுறையில்
மறுபகிர்வு செய்து கொள்ளுவது என்றுதான் இருக்கிறது. ஜுவானியா இந்த வழிவகையில் முக்கிய பங்கை கொண்டிருந்ததால்
பெருகிய முறையில் விமர்சனத்திற்கு ஆளானார். அவருடைய அதிகாரத்தின்கீழ், மறுபகிர்விற்கான இயக்குமுறை
செயல்பாட்டிற்கு வந்தது; 1990களில் இருந்து மேற்கொள்ளப்படாத மிகப் பேராசை தன்மையுடைய தனியார்
மயமாக்கல் கொண்டுவரப்பட்டது. இந்தத் திட்டம் கடந்த வசந்த காலத்தில் அளிக்கப்பட்டு, 200க்கும் மேற்பட்ட அரசு
நிறுவனங்களை விற்கும் திட்டம் வந்துள்ளது. இப்படி விற்பனைக்கு வந்துள்ள நிறுவனங்களில் பழைய சோவியத் நிறுவனங்களும்,
கருங்கடல் பகுதியிலும் மலைப்பகுதிகளிலும் இருக்கும் விடுமுறை உல்லாச விடுதிகளும், இன்னும் இதேபோன்ற பல
நிறுவனங்களும் அடங்கியுள்ளன.
இப்படிப்பட்ட தனியார்மய திட்டத்திற்கு பொறுப்பான இரண்டாம் நபர் சீர்திருத்த மந்திரி
காகா பென்டுகிட்ஜேயாகும். இவர் ஒரு சிறு தன்னலக்குழுவின் தலைவராக செயல்பட்டு, 1990களில் ரஷ்ய இயந்திரப்
பொறியியல் நிறுவனங்கள் தனியார் மயமாக்கப்பட்டபோது, பல நூற்றுக்கணக்கான மில்லியன் டாலர்களை கட்டுப்படுத்தும்
வகையில் புகழ் பெற்றார்; இவர் பின்னர் சாகேஷ்விலியினால் பொருளாதார மந்திரி பதவி வகிப்பதற்காக ஜோர்ஜியாவிற்கு
அழைத்து வரப்பட்டார்.
புதிய அரசாங்கத்தின் மிகவும் மதிப்பிழந்த உறுப்பினர்களில் ஒருவராக ஜுவானியா
விளங்கினார். Deutschlandfunk
என்னும் ஜேர்மனிய வானொலியில், இவருடைய பழைய நெருங்கிய
தோழர்களில் ஒருவர், இவர் எவ்வாறு செயற்பாடுகளை மேற்கொள்ளுகிறார் என்பதை விளக்கினார். 1980 களின்
இறுதியில் பசுமையினரின் இணைப்பு நிறுவனரும், "ஜோர்ஜிய பொருளாதார வளர்ச்சிக் கூடத்தில்" இருப்பவருமான,
நிக்கோ ஓர்வேலஷ்விலி, அஜாரியத் தலைநகர் பாடுமியின் கருங்கடல் கடற்படை எவ்வாறு தனியார் மயமாக்கப்பட்டது
என்பது பற்றியும், புதிய அரசாங்கத்தின் முக்கியமான இரு தனியார் மயமாக்கல் திட்டங்களில் இதுவும் ஒன்று என்பது
பற்றியும் குறிப்பிட்டார்.
16 கப்பல்கள் மொத்தத்தில்
107 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு விற்கப்பட்டன என்றும் அது ஒரு
நல்ல விலை என்று கருதப்பட்டதாகவும், ஓர்வேலஷ்விலி அறிந்தார். ஆனால் இந்த துறைமுகத்தில் ஆண்டு ஒன்றுக்கு 20 மில்லியன்
அமெரிக்கடாலர்கள் சரக்கு மாற்றம் இருப்பதுடன் அரசாங்கத்திற்கு முக்கியமான வருவாய் இருந்தும், அந்த உடன்பாட்டில்
வாங்கியவர்களுக்கு மாற்றப்பட்டுவிட்டது. இது நாட்டின் அரசியலமைப்பை மீறுவதாகும் என்று ஓர்வேலஷ்விலி தெரிவிக்கிறார்.
இத்தன்மையான நடவடிக்கைகள் ஜுவானியாவின் சந்தேகத்திற்குரிய வணிக நடவடிக்கைகளின் மாதிரியாகும்; பொதுவாக
காலை 2 மணியில் இருந்து 3 மணிக்குள் இத்தகைய உடன்பாடுகள் முடிக்கப்படும்.
சொல்லப்போனால், ஜுவானியா அனைத்து தனியார் மயமாக்கும் திட்டங்களிலும் தொடர்பு
கொண்டு இறுதி முடிவையும் எடுத்திருந்தார். கடந்த ஆண்டு மட்டும், இத்தகைய மாறுதல்களுக்கு சட்டபூர்வ பொறுப்புக்
கொண்டுள்ள பொருளாதார மந்திரிப்பதவி குறைந்தது மூன்று முறையேனும் மாறுதலுக்கு உட்பட்டது. எந்தச் சொத்து விற்பனைக்கு
என்பது பற்றிய சரியான தகவல் வெளியிடப்படுவதில்லை. கணக்கிலடங்கா வகையில், பெயரறியப்படாத வாங்குவோர் வெளிப்பட்டு,
வாங்கும் திறனைக் கொண்டிருந்த வெளிநாட்டு முதலீட்டாளர்களை கசப்புணர்விற்கு தள்ளிவிட்டனர்.
இந்த குற்றச் சிந்தனை செயற்பாட்டு பின்னணியில், புதிய அரசாங்கம் மனித உரிமைகளுக்கு
பாதிப்பு ஏற்படும் வகையில் பெருகிய முறையில் நடந்து கொள்ளுவதற்காக விமர்சனத்திற்கு ஆளானது வியப்பை அளிக்கவில்லை.
Frankfurer Allgemeine Zeitung
தன்னுடைய பெப்ரவரி 4ம் தேதி பதிப்பில் வெளியிட்டுள்ளதுபோல், "ஜனநாயகம்,
மனித உரிமைகள் ஆகியவை ஜனாதிபதியால் மீறப்படுகின்றன" என்று ஐரோப்பிய கவுன்சில் கூட ஜோர்ஜிய அரசாங்கத்தை
குறைகூறிக் கண்டனத்திற்குட்படுத்தும் நிலை ஏற்பட்டது.
இதைத் தவிர, இளைய வக்கீல்கள் சங்கத் தலைவரான
Tina Khidasheli, ஷவட்நாட்சேயின் ஆட்சிக்காலத்தில் மொத்தம்
நடந்தவற்றைவிடக் கூடுதலான வகையில் சித்திரவதைகள் கடந்த வசந்தகாலத்தில் மட்டும் நிகழ்ந்ததாகக் குறிப்பிட்டதை,
FAZ,
மேற்கோளிட்டுக் காட்டியுள்ளது. சாகேஷ்விலியின் கோபத்திற்கு உட்பட்டவர்கள் ஒருதலைப்பட்சமான மோசமான நடவடிக்கையையும்,
தவறாக நடத்தப்படுதலையும் ஏற்றல் என்பது அடிக்கடி நடக்கும் நிகழ்வுகளாயிற்று. பழைய தணிக்கை அலுவலக இயக்குனரும்
ஷவர்நாட்சேயின் முன்னாள் நெருங்கிய நண்பருமான சுல்க்கான் மோலஷ்விலிக்கு நேர்ந்த கதியை கிடாஷேலி விவரித்துள்ளார்.
மின்வசதி, சூரியவெளிச்சம், தண்ணீர், நாற்காலி என்ற எந்த வசதியும் இவருக்கு கொடுக்கப்படாமல் சிறையில் தள்ளப்பட்டுள்ளார்.
ஒரு சர்வதேச செய்தியாளர் சங்கம் ஓராண்டிற்கு முன் இருந்த நிலையுடன் ஒப்பிட்டு 2004ல் இன்னும் கூடுதலான முறையில்
தடையற்ற பேச்சுக்களுக்கு தடைகள் வந்துள்ளதாக தெரிவிக்கிறது.
ஜுவானியா கடந்த சில மாதங்களாக சாகேஷ்விலியுடன் நட்புறவுடன் இல்லை என்று
கூறப்படுகிறது. ஜுவானியாவின் இரு நெருங்கிய ஆதரவாளர்கள் அரசாங்கத்தில் அவருடைய செல்வாக்கை குறைப்பதற்காக
வேலையில் இருந்து நீக்கப்பட்டனர். அரசாங்கத்தில் ஜுவானியா ஒரு "புறா" போலக் கருதப்படுகிறார். அதிகாரத்தை
ஏற்ற சில நாட்களிலேயே, ஜோர்ஜியாவுடன் இணைய மறுப்பதற்காக, சாகேஷ்விலி மூன்று எதிர்ப்பு குடியரசுகளான
அப்கஜியன், சூடோஸ்டேஜியன் மற்றும் அஜாரியா ஆகியவற்றிற்கு எதிராகப் படைகளை அனுப்புவதாக அச்சுறுத்தினார்; கடந்த
பத்து ஆண்டுகளாக ஜோர்ஜியாவின் மீது அழுத்தம் கொடுப்பதற்கு இவற்றை ரஷ்யா பயன்படுத்திவந்தது. மே
மாதத்திலேயே சாகேஷ்விலி மாஸ்கோவிடம் நட்புக் கொண்டிருந்த அஜாரிய கவர்னரை பதவியை விட்டு இறக்க முடிந்தது.
ஆனால் சூடோஸ்டேஜியன் மற்றும் அப்கஜியன் ஆகியவற்றில் அவ்வளவு எளிதாக அவரால் செயல்படமுடியாது.
ஜோர்ஜியாவில் நடக்கும் நிகழ்வுகள் செல்வந்த தட்டினர் மேலாதிக்கம் பெற்றுள்ளபாராளுமன்ற
குழுக்கள் எதுவுமே, "ஜனநாயகம்", "சீர்திருத்தம்" என்ற பேசுவதெல்லாம் ஒரு புறம் இருக்க, மக்களுடைய நலன்களை
பிரதிபலிக்கவில்லை என்பதைத்தான் புலப்படுத்துகின்றன. வரவிருக்கும் மாதங்களிலும், ஆண்டுகளிலும் உக்ரேனிய மக்கள் தவிர்க்கமுடியாதவாறு
இதேபோல்தான் யுஷ்செங்கோ-டிமோஷெங்கோ அரசாங்கங்களின் செயற்பாடுகளிலும் அனுபவத்தை கொள்ளுவர். |