:
செய்திகள்
ஆய்வுகள்
:
வட அமெரிக்கா
Facts and myths about Bush's plan for Social
Security privatization
சமூகப் பாதுகாப்பை தனியார்மயமாக்கும் புஷ்ஷின் திட்டத்தின் உண்மைகளும் கற்பனைகளும்
By Patrick Martin
3 February 2005
Back to screen version
புதன்கிழமையன்று புஷ், அரச ஒன்றியத்தில் (State
of the Union) ஆற்றிய உரையில் மையமாக விளங்கிய உள்நாட்டுக்
கொள்கைகளில் ஒன்று சமூக பாதுகாப்பில் ஒரு பகுதியை தனியார்மயமாக்குதல் ஆகும். இதற்கு வெள்ளை மாளிகையின்
திட்ட விவரங்கள் இன்னும் இறுதி வடிவம் தரப்படவில்லை என்றாலும், அத்திட்டத்தின் மேலெழுந்த வாரியான அம்சங்களில்;
(1) சம்பளப் பட்டியலில் சமூக பாதுகாப்பிற்கு என பிடித்தம் செய்யப்படும்
வரிகளை தனியார் முதலீட்டுக் கணக்குகளை உருவாக்கி அதற்கு மாற்றுவது. (2) தற்போது வழங்கப்பட்டுவரும் சமூக
பாதுகாப்பு பயன்களுக்காக பணம் செலுத்துவதற்கு அரசாங்கம் கடன் வாங்குவது (இல்லையென்றால் சம்பளப் பட்டியல்
வரிகளில் இருந்துதான் அதைச் செலுத்த வேண்டி இருக்கும்) மற்றும் (3) எதிர்காலத்தில் ஓய்வு பெறுவோருக்கான சமூக
பயன் ஊதியங்களில் கூர்மையான வெட்டுக்கள் (தனியார் கணக்குகள் மூலம் வருகின்ற வருவாய் அந்த வெட்டுக்களை ஈடுகட்டும்
என்ற கூற்று) ஆகிய அம்சங்கள் இடம் பெற்றிருக்கின்றன.
இன்றைய இளம் தொழிலாளர்கள் ஓய்வு பெறும் வயதை நெருங்கி வரும்போது, நிதி
நெருக்கடி காரணமாக அவர்கள் பெறுகின்ற பயன்களில் பெருமளவிற்கு வெட்டுக்கள் செய்ய வேண்டியிருக்கும் அல்லது
சம்பளப்பட்டியல் வரிகளை பெருமளவிற்கு உயர்த்த வேண்டியிருக்கும். இதற்கு மாற்றுதான் இந்தத்திட்டம் என்று புஷ்ஷூம்
நாடாளுமன்ற குடியரசுக் கட்சிக்காரர்களும் இந்தத் திட்டத்தை கூவி விற்றுக் கொண்டிருக்கிறார்கள். சம்பளப்பட்டியல்
வரியில் எவ்வளவு மாற்றப்படவேண்டும் என்பதில் குடியரசுக் கட்சியின் பல்வேறு குழுக்களுக்கிடையில் கருத்து வேறுபாடுகள்
உள்ளன. தனியார் கணக்குகள் எவ்வளவு பெரியவையாக இருக்க வேண்டும் மற்றும் எதிர்கால பயன்கள் எவ்வளவு பெரியவையாக
இருக்கவேண்டும் மற்றும் எதிர்கால பயன்கள் எவ்வளவு கடுமையாக வெட்டப்படவேண்டும் என்பதில் கருத்து வேறுபாடுகள்
நிலவுகின்றன. வோல் ஸ்ரீட் ஜேர்னல், Cato
கழகம் மற்றும் இதர அதிதீவிர வலதுசாரி பேச்சாளர்கள் மிகப்பெருமளவிற்கு முடிந்தவரை தனியார் கணக்குகள் இருக்க
வேண்டும் என்று கூறுகின்றன.
"தற்போதுள்ள சமூக பாதுகாப்பு முறை 13 ஆண்டுகளில் நெருக்கடிக்கு உள்ளாகும் மற்றும்
2042 ல் அந்த முறையே முறிந்துவிடும்" என்று அண்மையில் வெளியிட்ட ஒரு அறிக்கையில் புஷ் கூறினார். ஆனால், ஒரு 27
சதவீத பற்றாக்குறையினால் இந்த முறைமையே முறிந்து விடுமென்றால், இந்த மாதம் பிற்பகுதியில் புஷ் தாக்கல் செய்கிற
பெடரல் அரசாங்கத்தின் பட்ஜெட் நிலை என்ன? புஷ் ஆபத்தானது என்று கோடிட்டுக்காட்டியுள்ள பற்றாக்குறை அளவை
மத்திய கூட்டாட்சி அரசாங்க பட்ஜெட் எட்டும் நிலை 2042 ல் அல்ல. ஆனால், 2005 லேயே எட்டும்! (பட்ஜெட்
மொத்த அளவு 2 டிரில்லியன் டாலர்களாக இருக்கும். அதில் 21 சதவீதம் அதாவது 427 பில்லியன் டாலர்கள்
பற்றாக்குறை என்று மதிப்பிடப்பட்டிருக்கிறது. அத்துடன் ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தான் போருக்கு ஆகும் செலவு என்று
எதிர்பார்க்கப்படுகிற, பட்ஜெட்டில் சேர்க்கப்படாத தொகையான 100 பில்லியன் டாலரையும் சேர்த்துக்கொண்டால்
பற்றாக்குறை 26 சதவீதமாகும்.)
கடந்த டிசம்பரில் நடைபெற்ற பொருளாதார உச்சிமாநாட்டில் தான் முன்மொழிந்துள்ள
"சீர்திருத்தத்தின்" உண்மையான பொருளடக்கத்தை புஷ் உளறிவிட்டார். "இங்கே எழுந்துள்ள கேள்வி என்னவென்றால், ஒரு
தெளிவாக வரையறுக்கப்பட்ட பயன்தரும் திட்டத்திலிருந்து ஒரு வரையறுக்கப்பட்ட சந்தாச் செலுத்தும் திட்டத்திற்கு தன்னை
மாற்றிக் கொள்வதற்கு தேவையான திட்டத்தை நமது சமூகம் பெற்றிருக்கிறதா? அல்லது இல்லையா? என்பதுதான்" என்று
அவர் கூறினார். இதை வேறு வார்த்தைகளில் சொல்வதென்றால், முதியவர்களை பாதுகாப்பது தொடர்பாக கூறப்படும்
அனைத்து வாய்வீச்சுக்களுக்கும் அப்பால், அமெரிக்க மக்களுக்கு உறுதிசெய்து தரப்பட்ட பயன்களை தந்து வருகிற ஒரு
மத்திய கூட்டாட்சி ஓய்வூதியத் திட்டத்திலிருந்து 401 (K)
என்றழைக்கப்படும் ஒரு வேறுபட்ட திட்டத்திற்கு மாற்றுவதன் மூலம், பெறப்படுகின்ற பயன்கள் நிதிச்சந்தைகளின்
ஏற்றத்தாழ்வுகளுக்கு ஏற்ப பிணைக்கப்படுவது அவருடைய கொள்கையின் சாராம்சமாக உள்ளது என்பதாகும்.
புஷ்ஷினுடைய திட்டம் நடப்பு வடிவத்தில் வருவதை பொதுவாக நாடாளுமன்றத்தில் இடம்
பெற்றுள்ள ஜனநாயகக் கட்சிக்காரர்கள் எதிர்க்கின்றனர். ஆனால், அவர்களில் ஒரு கணிசமான உறுப்பினர்கள், இந்த
சம்பளப்பட்டியல் வரி அதிகரிப்பு மூலம் அல்லது அரசாங்கம் அதிகமாக நிதி சந்தைகளில் கடன் வாங்குவதன் மூலம்
தனியார் கணக்குகளை உருவாக்கும் அணுகுமுறைக்கு "மேலதிக சமூக பாதுகாப்பு" என்று முத்திரை குத்தியுள்ளனர்.
நாடாளுமன்றத்தில் ஆரம்ப உரையாற்றுகின்ற நேரத்தில் செனட் எதிர்க்கட்சி தலைவர்
Harry Reid
(நெவாடா ஜனநாயகக்கட்சி உறுப்பினர்) சம்பளப்பட்டியல் வரி வசூலை தனியார் கணக்குகளுக்கு மாற்றும் எந்த
நடவடிக்கையையும் தடுத்து நிறுத்துவதற்கு ஜனநாயகக் கட்சிக்காரர்களிடம் போதுமான வாக்குகள் இருக்கின்றன என்றும்,
ஜனநாயகக் கட்சி உறுப்பினர் 44 பேரில் 40 பேர் வாக்களித்தால் அதை தடுத்துவிட முடியுமென்றும் அறிவித்தார்.
புஷ் நிர்வாகம் ஒரு அரசியல் பிரச்சாரத்தை, தமது சமூக பாதுகாப்புத் திட்டத்தை
மக்களிடையே விற்பதற்காக அறிவித்திருக்கிறது. நவம்பர் தேர்தலின்போது, குறைந்த பட்சம் ஐந்து மாநிலங்களில்
குறிப்பாக, புளோரிடா, அர்கன்சாஸ், நெப்ரஸ்கா, வடக்கு டகோட்டா மற்றும் மொன்டானாவில் புஷ் பிரச்சார
பயணம் செய்துள்ளார். அது இந்த மாநிலங்களில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 7 ஜனநாயகக்கட்சி செனட்டர்களுக்கும்
அழுத்தம் கொடுக்கும் முயற்சியாக இருந்தது.
சமூகப் பாதுகாப்பு என்றால் என்ன?
பிராங்க்ளின் ரூஸ்வெல்ட்டின் புதிய உடன்படிக்கை (new
deal) கொள்கைகளின் மையமாக அமைந்தது இந்த சமூக பாதுகாப்பு
திட்டமாகும். 1935 ல் நிறுவப்பட்ட இந்தத் திட்டம் சரியாக பார்த்தால் ஒரு காப்பீட்டுத் வேலைத்திட்டமே அல்ல.
ஆனால், இது வயதானவர்களுக்கு தலைமுறைகளுக்கு இடையிலான இடைவெளி அடிப்படையில் மாற்றித் தரப்படும் முதுமைகால
ஓய்வூதியமாகும். இன்றைய தினம் ஓய்வு பெற்றிருப்பவர்கள் தாங்கள் பணியாற்றிய ஆண்டுகளில் சம்பளப்பட்டியலில் பிடித்தம்
செய்யும் வரிகளை செலுத்தினர். இது அவர்களது பெற்றோர்களுக்கு ஓய்வூதியம் தரும் நிதியில் போய் சேர்ந்தது. அப்படி
தங்களது பெற்றோருக்கு தங்களது சம்பளப்பட்டியலில் இருந்து வரிகளை செலுத்திய அவர்களது குழந்தைகள் இப்போது
ஓய்வுபெற்று நடப்பு தலைமுறையில் இத்தகைய வரியை செலுத்துபவர்களின் நிதியிலிருந்து ஓய்வூதியம் பெறுகிறார்கள்.
இந்த வேலைத்திட்டம் ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கும் (இரண்டாவது உலகப்போருக்கு
பின்னர் சேர்த்துக்கொள்ளப்பட்ட ஊனமுற்றவர்கள்) ஊனமுற்றவர்ளுக்கும் அமெரிக்காவில் அவர்களது பொருளாதார
நிலைப்பாட்டிற்கு அடிப்படையாக அமைந்திருக்கிறது. ஏறத்தாழ 48 மில்லியன் மக்கள்----ஓய்வுபெற்ற 33 மில்லியன்
மற்றும் அவர்களை சார்ந்திருப்பவர்கள் உயிர்வாழ்ந்து கொண்டிருக்கிற 7 மில்லியன்பேர், வழக்கமாக உயிரோடு இருக்கும்
கணவன் அல்லது மனைவி மற்றும் 8 மில்லியன் ஊனமுற்றவர்கள் தற்போது சமூகப் பாதுகாப்பு பயன்களை அனுபவித்து
வருகின்றனர்.
சராசரி ஆண்டு சமூக பாதுகாப்பு உதவித்தொகை 11,000 ஆயிரம் டாலர்கள் ஆகும்.
இதில் அதிகபட்சமாக 23,000 ஆயிரம் டாலர்களை பெறுபவர்களும் இருக்கிறார்கள். நடப்பு ஓய்வு பெறும் வயது 66.
62 வது வயதிலேயே குறைக்கப்பட்ட பயன்கள் கிடைக்கின்றன. படிப்படியாக ஓய்வுபெறும் வயது ஒரு சில ஆண்டுகளுக்கு
ஒரு முறையாக சிலமாதங்கள் உயர்ந்து 2022 ல் 67 வயதைத் தொடும்.
அமெரிக்காவில் 20 சதவீத முதியவர்களுக்கும் 38 சதவீத கறுப்பர் மற்றும் ஹிஸ்பானிய
முதியவர்களுக்கும் சமூக பாதுகாப்பு ஒன்றுதான் ஒரே வருமான வளமாக உள்ளது. முதியவர்களில் மூன்றில் இரண்டு
பகுதியினரின் மொத்த வருமானத்தில் இது பாதிக்கு மேற்பட்டதாகும். மருத்துவ பாதுகாப்பு மூலம் முதியவர்களுக்கான
மருத்துவ செலவிற்கான பெரும்பகுதி கிடைக்கிறது. இதையும் சமூகப் பாதுகாப்பு பயன்களோடு சேர்த்து
கொள்ளவேண்டும். கடந்த அரை நூற்றாண்டிற்கு மேலாக முதியவர்களிடையே வறுமை விகிதம் கூர்மையாக
குறைந்திருப்பதற்கு சமூக பாதுகாப்புதான் பெரும்பாலும் பொறுப்பாகும். ஒரு மதிப்பீட்டின்படி, சமூக பாதுகாப்பு
இல்லாவிட்டால் இன்றைய முதியவர்களிடையே நிலவுகின்ற வறுமை விகிதம் தற்போதுள்ள 10 சதவீதத்திலிருந்து 50
சதவீதமாகிவிடும்.
அமெரிக்காவில் சமூக ஏற்றத் தாழ்வுகள் அதிகரிப்பதற்கு பதிலாக அதை மட்டுப்படுத்துகிற
வகையில் செயல்பட்டு வருகின்ற கடைசியாக நிலைத்திருக்கும் அமைப்புகளில் சமூக பாதுகாப்பு முறையும் ஒன்று. அவற்றின்
பயன்கள் ஒன்றின் மீது ஒன்றாக உயர்ந்துகொண்டே செல்கின்ற முறையில் அமைந்திருக்கின்றன. குறைந்த ஊதியம் பெறுகின்ற
தொழிலாளர்கள் தங்களது சராசரி ஆண்டு ஊதியத்தில் ஓய்வு பெறுவதற்கு முன் சுமார் 57 சதவீதத்தை பெறுகின்றனர்.
உயர்ந்த வருவாய் பெறுகின்ற தொழிலாளர்களோடு ஒப்பு நோக்கி இந்த உயர்வு தரப்படுகிறது. இதில், உயர் ஊதியம்
பெறும் தொழிலாளர்கள் பெறுகின்ற பயன்கள் 36 சதவீத அளவிற்கு பல கட்டங்களில் குறைந்து கொண்டே வருகிறது.
சமூக பாதுகாப்பு நெருக்கடியா?
எதிர்காலத்தில் சமூக பாதுகாப்பு வீழ்ச்சியடைந்துவிடும் அல்லது திவாலாகிவிடும் என்று
தனியார்மயமாக்கல் திட்டத்திற்கு மக்களது ஆதரவை ஒட்டுமொத்தமாக விரைவாக குவித்து கொள்வதற்கு ஒரு அச்சமூட்டும்
பிரச்சாரத்தை புஷ் நிர்வாகம் கூறிவருவது, அந்த பொருளில் இதை எடுத்துக்கொள்ளக் கூடாது.
இதில் உள்ள உண்மைகள் வருமாறு:
1935 ல் சமூக பாதுகாப்பு சட்டத்தின்படி, அந்த நிதி அறக்கட்டளை அறங்காவலர்கள் அந்த திட்டத்தின் செயல்திறனை
வசூலிக்கப்பட்ட வரி மற்றும் செலுத்தப்பட்ட பயன்கள் ஆகியவற்றை ஒரு 75 ஆண்டுகால அடிப்படையில் திட்டமிடுகிறார்கள்.
இப்படி அவர்கள் மூன்று எதிர்கால திட்டங்களை மதிப்பீடு செய்து, ஒன்று முற்றிலும் நம்பிக்கையற்ற நிலை மற்றொன்று
நடுத்தர நிலை மற்றொன்று அளப்பரிய பொருளாதார வளர்ச்சி நம்பிக்கை நிலை என்று நாட்டின் பொருளாதார
வளர்ச்சியை மூன்று கட்டங்களாக மதிப்பீடு செய்து திட்டங்களை அறிவிக்கிறார்கள்.
இதில் நடுத்தர அடிப்படை முன்னறிவிப்பு என்னவென்றால், 2018 வாக்கில் இந்தத்
திட்டத்திற்கு வசூலிக்கப்படுகிற வரிகளைவிட வழங்கப்படுகின்ற தொகை அதிகமாக இருக்கும் என்பதாகும். அப்போது சமூக
பாதுகாப்பு அறக்கட்டளை நிதியின் உபரியிலிருந்து கட்டாயமாக பணம் பெறவேண்டியிருக்கும். ஆகவே, 2042 ல்
(நாடாளுமன்ற பட்ஜெட் அலுவலகம் பின்னர் தந்த மதிப்பீட்டின்படி 2052 ல்) அறக்கட்டளை நிதி காலியாகிவிடும் மற்றும்
70 சதவீத பயன்கள்தான் சம்பளப்பட்டியல் வரி வருவாய் மூலம் நிதியளிக்கின்ற நிலைக்கு வந்துவிடும். மீதி 30 சதவீத
தொகையை வெட்ட வேண்டும் அல்லது இதர வளங்கள் மூலம் அதற்கு நிதியளிக்கப்பட வேண்டும்.
இந்த மதிப்பீட்டை சரியாக சொல்வதென்றால்--- ஒரு தோராய அனுமானத்தில், ஒரு
முறையற்ற தன்மையில் எதிர்காலத்தைப்பற்றி அனுமானிக்க முயற்சி நடத்தப்படுகிறது என்பதாகும். (இதில்
எடுத்துக்காட்டாக, 75 ஆண்டுகளுக்கு முன்னர் 1930 ல் ஏற்பட்ட பெரும் பொருளாதார வீழ்ச்சி மந்தநிலையிலிருந்து
கொண்டு 2005 நிலவரத்தை கணக்கிடுவது போன்ற தன்மையை ஒருவர் கற்பனை செய்து பார்க்கலாம்)
சமூக பாதுகாப்பு அறங்காவலர்களின் மதிப்பீட்டு அனுமானங்களில் ஒன்று, அமெரிக்காவில்
2015 முதல் 2080 வரையிலான காலம் முழுவதிலும் சராசரியாக பொருளாதார வளர்ச்சி 1.8 சதவீதமாக இருக்கும்
என்பதாகும். இது கடந்த நூற்றாண்டு வரலாற்று அடிப்படையிலான வளர்ச்சி விகிதத்தில் பாதிதான். இதில் சற்று
அதிகமான நம்பிக்கை அனுமானத்தில் ----2.5 சதவீதம் என்று சொன்னால் கூட அது வரலாற்று சராசரியை விட ஒரு
சதவீதம் குறைவு----- இந்த அடிப்படையில் பார்த்தால் கூட சமூக பாதுகாப்பு ''நெருக்கடி'' என்று கூறப்படுவது
மறைந்துவிடும்.
சமூக பாதுகாப்பு அரசின் அறக்கட்டளை நிதியின் இன்றைய நிலவரத்தை பொறுத்தவரை
1.5 டிரில்லியனுக்கு மேற்பட்ட உபரி இருக்கிறது. இது 1946 முதல் 1965 வரை செழுமை அதிகரித்த காலத்தில்
இளைஞர்கள் ஊதியத்திலிருந்து பிடிக்கப்பட்ட தொகையாகும். இந்த தரப்பை சார்ந்தவர்கள் 2008 ல் பெருமளவில் ஓய்வு
பெறுவார்கள். திட்டமிடப்பட்டுள்ள ''நெருக்கடி'' காலத்தில் அந்த செழுமை
காலத்தவர்கள் 87 க்கும் 106 வயதிற்கும் இடைப்பட்ட முதியவர்களாக
இருப்பார்கள். அவர்கள் ஓய்வு பெற்ற பின்னர், அவர்களுக்கு சமூக பாதுகாப்பு பயன்களை தருவதற்கு அறக்கட்டளை நிதி
போதுமான அளவிற்கு உள்ளது. இதில் பற்றாக்குறை எதுவும் ஏற்படுமானால் இன்றைய தினம் 40 வயதிலுள்ள அடுத்த
தலைமுறையினரைத்தான் பாதிக்கும்.
ஓய்வு பெறுகிற தொழிலாளர்கள் ஒரு பரந்த நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளனர்.
ஆனால், இந்த நெருக்கடி ஒட்டுமொத்த இலாபநோக்கு முறையிலிருந்து உருவாகி வருவதாகும். நீண்ட நெடுங்காலமாக,
அமெரிக்க தொழிலாளர்கள் ஓய்வு பெறும் போது மூன்று வருமான வளங்களைத்தான் நம்பியிருந்தார்கள். அவை சமூக
பாதுகாப்பு, முதலாளிகள் ஏற்பாடு செய்த ஓய்வூதியங்கள் மற்றும் தனிப்பட்ட சேமிப்புகள் ஆகும். இந்த முக்காலியில்
சமூக பாதுகாப்புதான் அரசாங்கத்தினால் உறுதி செய்யப்பட்ட வலுவான ஒரே கால் ஆகும்.
ஊதிய விகிதங்களில் தேக்கநிலை ஏற்பட்ட காரணத்தினால் தொழிலாளர் வர்க்கத்தினுடைய
வாழ்க்கை தரத்திற்கு அழுத்தங்கள் பெருமளவில் உருவாயின. 20 ஆண்டுகளுக்கு முன்னர் செலவிடும் வருவாயில் 11
சதவீதத்தை தனிப்பட்ட முறையில் சேமித்தவர்கள் இன்றைய தினம்
1லு சதவீத அளவிற்கே
சேமித்து வருகின்றனர். தனியார் துறையில் பணியாற்றுகிற ஊழியர்களில் பாதிக்கும் குறைந்தவர்கள் வேலை வாய்ப்பு
அடிப்படையிலான ஓய்வூதியத் திட்டத்தில் இடம்பெறவில்லை. மற்றும் இவர்களில் பெரும்பாலானவர்கள் 401 (K)
திட்டங்களின் கீழ் சேர்ந்திருக்கிறார்கள். இந்த திட்டத்தின் கீழ் இவர்களுக்கு கிடைக்கும் பயன்களானது, பங்கு மற்றும்
பத்திர சத்தைகளின் செயல்பாட்டிற்கு ஏற்றபடி முடிவாகும். அத்துடன் இதற்கு உத்தரவாதமும் கிடையாது.
பாரம்பரியமாக வரையறுக்கப்பட்ட பயன்தரும் திட்டங்களின்கீழ், நடப்பு தொழிலாளர்களில்
20 சதவீதத்திற்கும் குறைந்தவர்கள்தான் சேர்ந்திருக்கின்றனர். ஒட்டு மொத்தமாக பார்க்கும் போது, இவர்களது
நிதியில் 450 பில்லியன் டாலர்கள் இடைவெளி உள்ளது. மத்திய அரசாங்க அமைப்பான, ஓய்வூதியப் பயன் உத்திரவாத
கார்ப்பரேஷன் (Pension Benefit Guaranty
Corporation) இந்தத் திட்டங்களுக்கு ஒரு பாதுகாப்பு வலையாக
உருவாக்கப்பட்டது. இந்த அமைப்பு, எஃகு மற்றும் விமானத் தொழில் நிறுவனங்களின் ஓய்வூதிய நிதி பற்றாக்குறையை
ஈடுகட்டுவதற்காக 23 பில்லியன் பற்றாக்குறையில் இயங்கி வருகிறது. பெரிய நிறுவனங்கள் ஓய்வூதிய நிதி தரவேண்டிய
தங்களது சட்டபூர்வமான கடமையிலிருந்து தப்பிப்பதற்காக, புஷ் நிர்வாகம் பெரிய நிறுவனங்கள் திவால் நோட்டீஸ்
கொடுப்பதற்கு அனுமதியளித்தது. இதனால், ஓய்வூதிய திட்டங்களை செலுத்த தவறும் மிகப்பெரிய நிறுவனங்கள்
பயன்பெறுமே தவிர எந்தவகையிலும் அவை பாதிக்கப்படமாட்டாது.
சமூக பாதுகாப்பு திவாலாகப் போகிறது என்று புஷ் நிர்வாகம் கூறுவது ஏன்?
புதிய உடன்படிக்கை (new
deal) கொள்கைகளில் ஒரு தீவிர தலைகீழ் மாற்றத்தை
உசுப்பிவிடுவதற்காக, ஒரு நெருக்கடி என்ற அச்சத்தை கிளப்பிவிடுவதற்கு புஷ் நிர்வாகம் முயன்று வருகிறது. துவக்கத்தில்
சமூக பாதுகாப்பின் ஒரு பகுதியை தனியார்மயமாக்குவது, இறுதியாக பொது ஓய்வூதிய திட்டத்தையே ஒட்டுமொத்தமாக
ஒழித்துக்கட்டிவிடுவது. அடங்கிச் செல்கின்ற அமெரிக்க ஊடகங்களிலேயே கூட இந்த அச்சம் விளைவிக்கும் பிரச்சாரம்
ஈராக் படையெடுப்பிற்கு ஆயத்தம் நடைபெற்றபோது பயன்படுத்தப்பட்ட முறைகளோடு ஒப்புநோக்கி
ஆராயப்பட்டிருக்கிறது. அப்போது வெள்ளை மாளிகை பேச்சாளர்கள் திரும்ப திரும்ப சதாம் ஹூசேனின் பேரழிவுகரமான
ஆயுதங்களால் வரவிருக்கும் உடனடி அச்சுறுத்தல் பற்றி எச்சரிக்கை செய்துகொண்டிருந்தனர். ஆனால், அவை இறுதியில்
ஒன்றும் இல்லாதவையாகி விட்டன.
ஈராக் நிலைமை போன்று, முன்மொழியப்பட்ட இந்த தீர்வானது வரவிருப்பதாக
சொல்லப்படும் அச்சுறுத்தலோடு எந்தவகையிலும் தர்க்க ரீதியில் பொருந்தி வரவில்லை. சதாம் உசேனிடம்
உண்மையிலேயே பேரழிவுகரமான ஆயுதங்கள் இருந்திருக்குமானால், அந்த பயங்கர ஆயுதங்கள் உள்ள தாக்குதல்
வட்டாரத்திற்குள் லட்சக்கணக்கான அமெரிக்க துருப்புக்களை அனுப்புவது தற்கொலை நடவடிக்கையாக முடிந்திருக்கும்.
அதே போன்று, சமூக பாதுகாப்பு பணம் இல்லாத நிலையை நோக்கி உண்மையிலேயே அரசாங்கம் சென்று
கொண்டிருக்குமானால், சம்பளப்பட்டியல் வரி வருவாயிலிருந்து 2 டிரில்லியன் டாலர்களை தனியார் முதலீட்டு கணக்குகளுக்கு
மாற்றுவது என்பது அந்த நெருக்கடியை படுமோசமாக்கிவிடும்.
சமூக பாதுகாப்பை "காப்பாற்றும்" புஷ்ஷினுடைய திட்டத்தின் துல்லியமான நோக்கமே
உண்மையிலேயே அதுதான். அதன் பிரதான சிற்பிகள் வலதுசாரி சிந்தனையாளர்கள் ஆகும். அவர்களில் பலர் 1970
களிலும், 1980 களிலும் சமூக பாதுகாப்பு திட்டத்தை ஒழித்துக்கட்டிவிட வேண்டும் என்று பகிரங்கமாக வாதிட்டு
வந்தார்கள். இன்றைய தினம் சமூக பாதுகாப்பை மெல்ல திருட்டுத்தனமாக கொலை செய்துவிடுவதற்கான ஒரு
மூலோபாயத்தை உருவாக்கியிருக்கிறார்கள். (Texas
Observer என்ற பத்திரிகையில் அண்மையில்
பிரசுரிக்கப்பட்டிருந்த ஒரு கட்டுரை புஷ்ஷின் கடந்தகால வரலாற்றில் பிறருக்கு அதிகமாக தெரியாத ஒரு கதையை
நினைவுபடுத்தியுள்ளது. அவர் 1978 ல் அமெரிக்க நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.
அப்போது புஷ் சமூக பாதுகாப்பு திட்டத்தில் தனியார் கணக்குகள் ஸ்தாபிக்கப்படாவிட்டால், அது 1988 வாக்கில்
முறிந்துவிடும் என்று வாதாடினார்)
சமூக பாதுகாப்பு "சீர்திருத்த" திட்டத்தை விற்றுத்தள்ளும் பொறுப்பில் உள்ள ஜனாதிபதியின்
சிறப்பு உதவியாளர் Charles P. Blahous
இதற்கு முன்னர் தொழிலாளர் ஓய்வூதிய பாதுகாப்பு கூட்டணி தலைவராக பணியாற்றி வந்தார். இது ஓர்வெல்லியன் பாணியில்
தனியார்மயமாதலை நீண்ட நெடுங்காலமாக வலியுறுத்தி வருகிற ஒரு வர்த்தக ஆதரவாளர்களுக்கு சூட்டப்பட்ட ஒரு இரட்டை
வேடப் பெயராகும்.
சமூக பாதுகாப்பு திட்டத்தை தனியார்மயமாக்கும் மற்றொரு நீண்டகால போராட்ட வீரர்
ஆன்ட்ரூ G.
பிக்ஸ் ஆவர். அவர் ஒருகாலத்தில் கேடோ நிறுவனத்தில் (Cato
Institute) ஆய்வாளராக பணியாற்றியவர். தற்போது ஒய்வு
பெறுவது தொடர்பான கொள்கை வகுப்பதில் சமூக பாதுகாப்பு இணை ஆணையாளராக பணியாற்றி வருகிறார். இந்த
பதவியை ஏற்றுக்கொள்ளும் முன், அவர் ஓய்வு பெற்றவர்களுக்கான அமெரிக்க சங்கத்தை (American
Association of Retired Persons - AARP)
கண்டித்தார். இந்த அமைப்பு தனியார் கணக்குகளினால் வருகின்ற ஆபத்தை சுட்டிக்காட்டியது என்பதற்காக, ''தவறான
தகவலை'' பரப்பி வருவதாக இந்த அமைப்பை அவர் குற்றம் சாட்டினார்.
இப்போது பதவியில் அமர்ந்துவிட்ட ஆன்ட்ரூ
G. பிக்ஸ், சமூக
பாதுகாப்பு நிர்வாக (Social Security
Administration - SSA) ஊழியர்கள் புஷ் நிர்வாகத்தின் சமூக
பாதுகாப்பு திவாலாகும் நிலை உருவாகி கொண்டிருக்கிறது என்பது பற்றிய பிரச்சாரத்தின் ஒலிபெருக்கிகளாக
செயல்படவேண்டும் என்று கேட்டுக்கொண்டிருக்கிறார். அவர் வெளியிட்டுள்ள ஆவணம்
SSA மேலாளர்கள்,
''ஊழியர் கூட்டங்களில் இதன் செயல்திறன் பிரச்சனைகள் குறித்து விவாதிக்க வேண்டும்'' மற்றும் ''சமூக பாதுகாப்பு
வெளியீடுகள் அனைத்திலும் இதன் செயல்திறன் பற்றிய செய்திகள் இடம்பெற வேண்டும்'' என்று கேட்டுக்கொள்கிறது.
வலதுசாரிப் பிரிவு பேச்சாளர்கள் அனைவரும் தங்களது நோக்கத்தை எந்தவிதமான
கட்டுத்திட்டமின்றி வெளிப்படுத்தி வருகின்றனர். சமூக பாதுகாப்பை ஒழித்துக்கட்டுவது அதற்கு அவர்கள் தருகின்ற அரசியல்
முக்கியத்துவம் ஆகியவற்றை எடுத்துக்காட்டி வருகின்றனர். வரி எதிர்ப்பு, வளர்ச்சிக்கான கழகத்தின் முன்னாள் தலைவர்
ஸ்டீபன் மூரேயின் கருத்தை நியூயோர்க் டைம்ஸ் கோடிட்டு காட்டியுள்ளது: "நலன்புரி அரசின் மிருதுவான அடிவயிறு, சமூக
பாதுகாப்பாகும். நீங்கள் உங்களது ஈட்டியை அதற்குள் செருகுவீர்களானால் ஒட்டுமொத்த நலன்புரி அரசையும் நீங்கள்
சிதைத்துவிட முடியும்".
மற்றொரு வலதுசாரி அரசியல் பணியாளர் மற்றும் அமெரிக்க வரி சீர்திருத்த அமைப்பின்
தலைவரான Grover Norquist
என்பவர், திவால் என்ற கூற்றை ஒரு சாக்குப்போக்கு என்று தள்ளுபடி செய்தார். "சமூக பாதுகாப்பு திட்டம்
சீர்திருத்தப்படவேண்டும், அந்த முறை சிதையப்போகிறது என்பதற்காக அல்ல. மாறாக, அது தாறுமாறாக
செயல்படுகின்ற ஒரு திட்டமாக உள்ளது" என்று அவர் குறிப்பிட்டார்.
அடி முட்டாள்தனமாகவும், பொருளாதார அடிப்படையில் மிகுந்த பாமரத் தன்மையோடும்
வந்துள்ள ஒரு கருத்து, அமெரிக்க கீழ்சபையின் முன்னாள் சபாநாயகர்
Newt Gingrich
தந்திருக்கிற கருத்தாகும். நியூயோர்க் டைம்ஸ்ற்கு ஒரு பேட்டியளித்துள்ள அவர் "வரலாற்றிலேயே முதலாவது
100 சதவீத முதலாளித்துவ சமுதாயத்தை அந்த கணக்குகள் உருவாக்கும். இன்றிலிருந்து ஐம்பது ஆண்டுகளுக்கு பின்னர்,
அப்போதிருக்கும் ஏழை அமெரிக்கர்கள் முதல் தடவையாக தங்களது சொந்த சேமிப்பை பெற்றவர்களாக இருப்பார்கள்.
வட்டி காலப்போக்கில் எவ்வாறு பெருகுகிறது என்பதன் வலிமையை அவர்கள் காண்பார்கள். சொத்தின் முக்கியத்துவத்தை
பாராட்டுவார்கள்" என்று கூறியிருக்கிறார்.
குறுநில கொள்ளைக்காரர் காலத்திற்கு பின்னர் இதுவரை நாடு கண்டிராத அளவிற்கு
சமூகத்தில் பொருளாதார ஏற்றத் தாழ்வுகள் பெருகிவிட்ட நிலையில் சலுகைகள் பெற்ற தரப்பினர் எந்தளவிற்கு தங்களுக்கு
தாங்களே தட்டிக்கொடுத்து மெத்தன போக்கில் இருக்கிறார்கள் என்பதையே இத்தகைய கருத்துக்கள்
எடுத்துக்காட்டுகின்றன. திரு. Gingrich
ஒரு உண்மையை கவனிக்கவில்லை. அது என்னவென்றால், முதலாளித்துவத்தின் சாராம்சமே ஒன்றிற்கொன்று எதிரும்
புதிருமாக உள்ள இரண்டு முகாம்களை சமுதாய துருவ முனைப்பாக மாற்றுவதாகும். மிகப்பெருமளவில் குறுகலாக உருவாகி
வருகின்ற முதலாளித்துவ உரிமையாளர்கள் அடங்கிய சிறிய குழு மேலும் மேலும் பெருமளவில் செல்வத்தை
குவித்துக்கொண்டிருக்கிறது. மற்றும் மிகப்பெரும்பான்மையான மக்கள் தங்களது உழைப்பு சக்தியை தவிர தாங்கள்
விற்பதற்கு எதுவுமில்லாதவர்களாக உள்ளனர். எனவே, ஒரு சில டாலர்கள் அல்லது ஒரு சில ஆயிரங்கள் தனது தனிப்பட்ட
ஓய்வு பெறும் கணக்கில் சேருவதன் மூலம் ஒரு தொழிலாளியை ஒரு முதலாளியாக ஆக்கிவிட முடியாது. ஏற்கெனவே 401
(K)
கணக்குகள் மிகப்பெரும்பாலான உழைக்கும் மக்களின் ஓய்வூதிய திட்டங்களை மாற்றியமைத்துவிட்டது.
புஷ் பரிந்துரைக்கும் தனியார் முதலீட்டு கணக்குகளின் தாக்கம் எதுவாகயிருக்கும்?
தனியார்மயமாதல் திட்டத்தை முன்னெடுத்து வைப்பவர்களின் முக்கிய கூற்றுக்கள்
என்னவென்றால், தனியார் கணக்குகள் தேசிய சேமிப்புக்களை அதிகரிக்கும், அதன்மூலம் முதலீடுகள் ஊக்குவிக்கப்படும்
மற்றும் பொருளாதார வளர்ச்சி ஏற்படும் மற்றும் கருவூல கடன் பத்திரங்களில் முதலீடு செய்யப்படும் மற்றும் தனியார்
கணக்குகள் சமூக பாதுகாப்பு அறக்கட்டளை நிதியை விட அதிக வட்டி விகிதங்களைத் தரும் என்பதாகும். இந்தக் கூற்றுகள்
மோசடியானவை.
ஒரு கணிசமான அளவிற்கு சம்பளப்பட்டியல் வரி, தனியார் கணக்குகளுக்கு திருப்பப்படுவதால்
சமூக பாதுகாப்பு திட்ட பயன்களை பெறுபவர்களுக்கு தேவைப்படும் பணத்தை மத்திய கூட்டாட்சி அரசாங்கம் கடன்பெற
வேண்டியிருக்கும். அரசாங்கம் இந்தக் கடன்களை வாங்குவது அரசாங்க கடன் பத்திரங்களை விற்பதன் மூலம்தான். இதன்
விளைவு என்னவென்றால், முதலீட்டாளர்கள் ஒரு கடன் பத்திரத்திற்கு பதிலாக இன்னொரு கடன் பத்திரங்களை
வாங்குகிறார்கள். புதிய தனியார் கணக்குகள் வாங்கும் பங்குகள் மற்றொரு கஜானா பங்குகளுக்கு பதிலானவையாக
அமையும். இதன் மூலம் உண்மையான புதிய மதிப்பு எதுவும் உருவாக்கப்படுவதில்லை. பெரிய முதலீட்டாளர்களின்
இலாபம்தான் அதிகரிக்கிறது. அது கடன் பத்திர மதிப்பு உயர்வதால் கிடைக்கிறது. ஆதலால், முதலீட்டிற்கு
நிதியளிப்பதற்கு அதிகமான சேமிப்புக்கள் திரட்டப்படுவதற்கு வழியில்லை.
உயர்ந்த வட்டி விகிதங்கள் கிடைக்கும் என்ற உறுதி மொழியைப் பொறுத்தவரை பங்குகள்
அவ்வளவு இலாபகரமாக இருக்குமானால் பெரிய முதலீட்டாளர்கள் மற்றும் முதலீட்டு வங்கிகள் போன்ற அமைப்புக்கள்
அரசாங்கத்திற்கு டிரில்லியன் கணக்கான டாலர்களை கடன் கொடுக்கும் வல்லமையுள்ளவை, ஏன் தனியார் கணக்குகளை
துவக்க வேண்டும்? அரசாங்க கடன் பத்திரங்களை வாங்குவதற்கு ஏன் சம்மதிக்க வேண்டும்? மாறாக பங்குச்
சந்தையிலேயே தங்களது முதலை ஏன் முதலீடு செய்திருக்க கூடாது?
நியூயோர்க் டைம்ஸ் கட்டுரையாளர் போல் குருக்மன் வெளியிட்டுள்ள விமர்சனத்தில்:
"ஆக தனியார்மயமாதலை ஆதரிப்பவர்கள், அரசியல்வாதிகள் மிகுந்த சாதுரியமானவர்கள் என்று வலியுறுத்துகிறார்கள்.
அரசாங்க கடன் பத்திரங்களை விட பங்குச் சந்தை பங்குகள் சிறந்த முதலீடு என்று அவர்களுக்கு தெரியும். தனியார்
முதலீட்டாளர்கள் மடையர்கள் மற்றும் அவர்கள் தங்களது மதிப்பு மிக்க பங்குகளை மதிப்பு மிகக் குறைந்த அரசாங்க
கடன்பத்திரங்களுக்காகவா மாற்றிக் கொள்கிறார்கள். இது நம்பிக்கையான சந்தை என்று கூறுகின்றவர்களிடமிருந்து
வருகின்ற மிகவும் தனித்தன்மை கொண்ட ஒரு கருத்தல்லவா?"
போல் குருக்மன் பிப்ரவரி 1 தேதி ஒரு கட்டுரையில் ''தனியார்மயமாதலை ஆதரிப்போர்
Catch -
22'' என்ற தலைப்பில் ஒரு பத்தி எழுதியுள்ளார். சமூக பாதுகாப்பு திவாலாகும் என்பதற்கான மதிப்பீடுகள் 75
ஆண்டுகளுக்கு மேலாக, சராசரி பொருளாதார வளர்ச்சி 1.8 சதவீதம் என்ற அனுமானத்தின் அடிப்படையில்
உருவாக்கப்பட்டிருக்கிறது. ஆனால், தனியார்மயமாதல் காட்சிகளில் பங்குகளில் முதலீடு செய்வது அரசாங்க கடன்
பத்திரங்களில் முதலீடு செய்வதை விட பணவீக்கத்திற்கு பின்னரும் 6.5 சதவீதம் கிடைக்குமென்று அனுமானிக்கிறது. இந்த
இரண்டு அனுமானங்களுமே ஒன்றுக்கொன்று ஒவ்வாமை கொண்டவை. இதற்கு பங்கு விலைகள் ராக்கட் வேகத்தில்
காலவரையின்றி மேலே சென்று கொண்டேயிருக்கும். அதே நேரத்தில் உண்மையான பொருளாதாரத்தின் வேகம் ஊர்ந்து
செல்வதாகவே அமையும். இந்த அனுமானத்தை ஒப்புக்கொள்வதாக இருந்தால்தான் இரண்டு வாதங்களும் பொருந்திவரும்.
"பங்குவிலை பங்கு ஈட்டு வருவாய் விகிதம் ---ஒரு கம்பெனியின் பங்கின் மதிப்பு அதன்
லாபத்தால் வகுக்கப்படுவது-- பரவலாக ஒரு பங்கு விலை அளவிற்கதிகமாக மதிப்பிடப்பட்டிருக்கிறதா? அல்லது குறைத்து
மதிப்பிடப்பட்டிருக்கிறதா? என்பதை மதிப்பீடு செய்யும் விகிதாச்சாரமாகும். வரலாற்று அடிப்படையில் இந்த விகிதாச்சாரம்
சுமார் 14 ஆக இருந்தது. இன்றைய தினம் இது சுமார் 20 ஆகும். ஒரு 6.5 சதவீத வட்டி விகிதத்தை தரவேண்டுமென்றால்
அது எங்கே செல்ல வேண்டும்?... 2050 வாக்கில் பங்கு விலை அதன் ஈட்டுத்திறன் விகிதம் சுமார் 70 ஆக உயரவேண்டும்.
2060 வாக்கில் அது 100 க்கு மேல் செல்ல வேண்டும். இதை வேறு வார்த்தைகளில் விளக்குவதென்றால், தனியார்
மயமாக்கப்பட்ட அதற்கு நட்பான வட்டி விகிதத்தை நீங்கள் நம்பவேண்டுமென்றால், இன்றிலிருந்து ஒரு அரை நூற்றாண்டு
கழித்து சராசரி பங்கு விலை தற்போதுள்ள இணையத்தள யுகத்தில் தொழில்நுட்ப நிறுவன பங்கு விலைகள் நீர்க் குமிழி
போன்று ஓங்கி நிற்கும் காலத்தைப்போல் 75 ஆண்டுகளுக்கு பின்னரும் பங்குகள் விலை உயர்ந்து கொண்டே செல்லும்
என்பதை நம்ப வேண்டும்'' என்று போல் குருக்மன் மேலும் எழுதுகிறார்:
வெள்ளை மாளிகையே, சமூகப் பாதுகாப்பை எதிர்நோக்கியுள்ளதாக கூறப்படும் நிதி
நெருக்கடியை தீர்த்து வைப்பதற்கும் தனியார்மயமாதலுக்கும் எந்தவிதமான சம்மந்தமும் இல்லையென்பதை ஒப்புக்கொண்டிருக்கிறது.
புஷ்ஷினுடைய அரசியல் உதவியாளர்களில் ஒருவரான பீட்டர் வேக்னர் எழுதியுள்ள ஒரு குறிப்பு வாஷிங்டனிலுள்ள வலதுசாரி
ஆதரவாளர்களிடையே விநியோகிக்கப்பட்டு அதற்கு பின்னர் ஊடகங்களுக்கு கசிய விடப்பட்டது. "தனிப்பட்ட ஓய்வூதிய கணக்குகளால்
மட்டும் சமூக பாதுகாப்பு பிரச்சனையை நாம் அவ்வளவு எளிதாக சமாளித்து விட முடியாது---- குறிக்கோள் நிரந்தரமான
செயல்திறனும் நிலைத்து நிற்கும் தன்மையும் என்றிருக்குமானால் அப்படித்தான் இருக்க வேண்டும் என்று நாம் நம்புகிறோம்.
அப்போது தனிப்பட்ட ஓய்வூதிய கணக்குகள் அவற்றின் எல்லா சிறப்புகளுக்கு அப்பாலும் அந்தப் பணிக்கு போதுமானவை
அல்ல" என்று அவர் தனது குறிப்பில் தெரிவித்திருக்கிறார். அரசு பாதுகாப்புத் திட்டப் பயன்கள் கணிசமான வெட்டுக்களுக்கு
உள்ளாக வேண்டியது அவசியம் என்று
பீட்டர் வேக்னர் மேலும் சொல்கிறார்.
இந்த புதிய கணக்குகளின் ஒரு இறுதி அம்சம் என்னவென்றால், புஷ் நிர்வாகத்தின் ஒவ்வொரு
கணிசமான கொள்கை முயற்சியிலும் அமெரிக்க நிதி ஒரு சிலராதிக்கவாதிகளின் (financial
oligarchy) செல்வம் பெருக வேண்டும் என்பதாகும்.
ஜனவரி 30 ல் லோஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸ் வெளியிட்டுள்ள ஒரு கட்டுரையில்,
1983 ல் காட்டோ நிறுவனம் பிரசுரித்திருந்த ஒரு கட்டுரையை வெளிச்சம் போட்டு காட்டுகிறது. அந்தக் கட்டுரை,
"ஒரு சீர்திருத்த மூலோபாயத்தை" எடுத்து வைத்தது. அந்த மூலோபாயம் "நடப்பு சமூக பாதுகாப்பு முறை மற்றும்
அதை ஆதரித்து நிற்கும் கூட்டணி ஆகியவற்றிற்கெதிராக கொரில்லா போர் நடத்த வேண்டும்" என்று கேட்டுக்
கொள்கிறது. "நடப்பு முறையிலுள்ள பலவீனங்களை எடுத்துக்காட்டுகிற வகையில்" ஒரு பிரச்சார இயக்கம் நடத்தப்பட
வேண்டும் என்று அது கேட்டுக்கொள்கிறது. "சமூக பாதுகாப்பு சீர்திருத்தத்தை ஆதரிக்கும் ஒரு அணியை உருவாக்குவதற்கு
இந்த மாற்றத்தால் பயனடைய இருக்கும் பல்வேறு கூட்டணிகளையும் திரட்ட வேண்டியது அவசியமாகும்.... வர்த்தக
சமுதாயமும் குறிப்பாக, நிதி நிறுவனங்களும் இந்த ஆதரவு அமைப்பில் ஒரு தெளிவான சக்தியாகும்" என்று அந்தக்
கட்டுரை குறிப்பிடுகின்றது.
ஒரு அதிகாரபூர்வமான மதிப்பீட்டின்படி, டிரில்லியன் கணக்கான டாலர்களை தனியார்
முதலீட்டு கணக்குகளில் குவித்துக்கொண்டே வரும்போது, வோல் ஸ்டிரிட்டில் (பங்கு சந்தையில்) பாரிய வருவாய்
உருவாக்கப்படும். அடுத்த 75 ஆண்டுகளுக்கு மேலாக 940 பில்லியன் டாலர்கள் கட்டணமாகவே வசூலாகும். இப்போது
அனுபவமில்லாத சிறிய ''முதலீட்டாளர்கள்'' பங்குச் சந்தை வழியாக முன்னேற முயலுவதால் ஏற்படும் அப்பட்டமான
மோசடிகள் மற்றும் களவாடல்கள் என்பன நூற்றுக்கணக்கான மில்லியன்களில் நடப்பதற்கு ஏராளமான வாய்ப்புகள்
உருவாகவே செய்யும். |