ஆபிரிக்கா
Report reveals the catastrophe in Sierra
Leone and Liberia
லைபீரியாவிலும் சியரா லியோனிலும் பேரழிவை வெளிப்படுத்தும் அறிக்கை
By John Farmer
14 January 2005
Back to screen version
ஐ.நா. தலையிட்டதன் மூலம் மேற்கு ஆப்பிரிக்க நாடுகளான சியரா லியோனிலும், லைபீரியாவிலும்
அமைதி ஏற்பட்டு ஜனநாயகம் திரும்ப நிலைநாட்டப்பட்டு விட்டதாக கூறப்பட்டாலும், அண்மையில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை
ஒன்று, அந்நாடுகளில் இன்னும் பேரழிவு நிலவுவதாக அம்பலப்படுத்தியுள்ளது. சியரா லியோனில் உள்ள ஒரு கிளர்ச்சி இயக்கத்தை
நசுக்குவதற்காக 2000 ம் ஆண்டில் பிரிட்டிஷ் துருப்புக்கள் தலையிட்டன. மற்றும் உலகிலேயே மிகப்பெரிய அளவிற்கு (அதிகபட்சமாக
17,000 திற்கு மேற்பட்ட) ஐ.நா படைகள் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக, அந்த நாட்டை ஆக்கிரமித்துக்
கொண்டிருக்கின்றன. அந்த நாட்டின் சிவில் மற்றும் இராணுவ நிர்வாகத்தை பிரிட்டன் 2000 லிருந்து நடத்தி வருகிறது.
2003 கோடை காலத்தில் அமெரிக்க மெரைன் படையினர்கள் தலையிட்டு ஜனாதிபதி
சார்ல்ஸ் டெய்லர் நீக்கப்பட்ட பின்னர், லைபீரியா தற்போது 15,000 திற்கு மேற்பட்ட ஐ.நா துருப்புக்களால் நிர்வகிக்கப்பட்டு
வருகிறது. அமெரிக்க விமானப் படையின் ஓய்வு பெற்ற ஜெனரல்
ஜாக் போல் கிளேன் இந்த நடவடிக்கைகளை கண்காணித்து வருகிறார்.
சியரா லியோனில் வாழுவோரின் வயது எல்லை 34 என்றும் பிறக்கும் குழந்தைகளில்
கால்வாசிப்பேர் 5 ஆண்டுகள் வளரும் முன்னரே இறந்து விடுவதாகவும் அந்த அறிக்கை சுட்டிக் காட்டுகிறது. இப்படி கடுமையான
சுகாதாரத் தேவைகள் இருந்தும், அண்மையில் உலக வங்கி நடத்திய ஓர் ஆய்வில், அரசாங்க சுகாதார திட்டத்தின் கீழ்
5 சதவீத மருந்துகள் மட்டுமே உரியவர்களுக்கு சென்று சேர்வதாக மதிப்பிடப்பட்டுள்ளது. ஆளும் தட்டினரிடையே நிலவுகின்ற
ஊழலும் நாட்டின் பொருளாதார நடவடிக்கைகளில் எந்தவிதமான கட்டுப்பாடும் இல்லாத நிலையும், மிச்சமிருக்கிற 95
சதவீத மருந்துகள் கூட, மிகப்பெரும்பாலான மக்கள் வாங்க முடியாத விலையில் கள்ளச் சந்தையில் விற்கப்படுகின்றன.
UNDP யின் மனித வள மேம்பாட்டு குறியீட்டு
எண்ணின்படி, சியரா லியோன் உலகிலேயே பரம ஏழை நாடாக உள்ளது. சியரா லியோனில் வளமான வைரச் சுரங்கங்கள்
இருந்தாலும் பிரிட்டனின் ஆலோசனைப்படி, நடைபெற்று வருகின்ற அரசாங்கம் வைர ஏற்றுமதி மீதான சுங்கத் தீர்வைகளில்
மிகப் பெரும்பகுதியை வசூலிக்கத் தவறிவிடுகிறது. சென்ற ஆண்டு சுங்கத் தீர்வை வசூலில் முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாக
கூறப்பட்டாலும், மொத்தமாக வசூலாக வேண்டியதில் 15 முதல் 30 சதவீதம்தான் வசூலிக்கப்பட்டிருக்கிறது. இதற்கு
பொறுப்பு ஊழல்தான். இதில் தலைசிறந்த உதாரணமாக 2003 ல் ஒரு வழக்கு நடைபெற்றது. அன்றைய போக்குவரத்து
மற்றும் தகவல் தொடர்பு அமைச்சரிடம், சட்ட விரோதமாக 26,000 டாலர் மதிப்புள்ள வைரங்கள் இருப்பதாக
கண்டுபிடிக்கப்பட்டது. அவர் மீது, குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டு அவருக்கு இரண்டாண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
ஆனால், அவர் அந்த தீர்ப்பிற்கு எதிராக மேல் முறையீடு செய்து வெற்றி பெற்றார்.
இந்த அளவிற்கு ஊழலும் பொருளாதார நிர்வாக சீர்கேடும் நிலவுவதுடன், உலகிலேயே
வறுமை அதிகமாக இந்த நாட்டில் இருப்பதால் உள்நாட்டுப் போர் உருவாகியுள்ளது என்று அந்த அறிக்கை
சுட்டிக்காட்டுகிறது. ஒரு மேற்கு நாட்டுத் தூதர் ஒருவர் மிகுந்த சிடுமூஞ்சித்தனமான முறையில், சமாதான பேரம்
உருவாக்கப்பட்டதிலிருந்து ''எங்களது வளங்கள் அனைத்துமே அந்த மோதலை உருவாக்கிய சூழ்நிலைகளை திரும்ப
உருவாக்குவதற்கே செலவழிந்துவிட்டது" என்று அறிவித்தார்.
சியரா லியோனின் உழைப்பவர்களில் முக்கால்வாசிப்பேர் விவசாயத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மற்றும் (GDP)
மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 45 சதவீதம் விவசாயத்தின் மூலம் கிடைக்கிறது.
அப்படியிருந்தும் இந்த நாடு அரிசியை இறக்குமதி செய்கிறது. சியரா லியோனிலும் லைபீரியாவிலும் நில உடைமையானது
கிராம முதியவர்களின் கையில் உள்ளது. இந்த நிலங்களில் வேலை முடிந்து வீடு திரும்புகிற இளைஞர்கள் மற்றும் இளம்
பெண்களுக்கு விவசாயம் செய்வதில் தொழில் பாதுகாப்பு எதுவுமில்லை. அத்துடன் முதலீடும் இல்லை, பயனுள்ள
உள்கட்டமைப்பும் இல்லை, சியரா லியோனின் அரசாங்கமும் அதன் மேற்கு நாட்டு ஆதரவாளர்களும் விவசாய உற்பத்தியை
சீரியசாக எடுக்கவில்லை என்று அந்த அறிக்கை கூறுகிறது.
உள்நாட்டுப் போரில் சேதமடைந்துவிட்ட சாலைகள் பழுதுபார்க்கப்படவில்லை.
தலைநகரான ப்ரி டவுனுக்கு கிழக்கு பகுதி நகரான Bo
விலிருந்து காரில் பயணம் செய்வதற்கு சாதாரணமாக இரண்டு மணி நேரமாகும். ஆனால், தற்போது அந்த பயணத்திற்கு
ஐந்து முதல் எட்டு மணி நேரமாகிறது.
லைபீரியாவில் இதைவிட படுமோசமான நிலைதான் கானப்படுகிறது. நாட்டின் எப்பகுதியிலும்
மின்சாரமில்லை, தொலைபேசி வசதியில்லை, அல்லது கழிவு நீரகற்றும் வசதியில்லை. செலவந்தர்கள் குடியிருக்கும்
பகுதிகளில், அவர்களது வீட்டு மாடிகளில் வைத்திருக்கும் தொட்டிகளில் லாரிகள் மூலம் குடிதண்ணீர் வழங்கப்படுகின்றன.
அதேவேளை ஏழைகள் வாழ்கின்ற பகுதிகளில் பீப்பாய்களில் இருந்து மக்கள் விலை கொடுத்து தண்ணீர் வாங்க
வேண்டியுள்ளது.
சியரா லியோனிலும் லைபீரியாவிலும் வழக்கமாக அரசு முன்னெடுக்க வேண்டிய பணிகளுக்கு
அரசு சாரா அமைப்புகள் (NGO)
நிதியளித்துக் கொண்டிருக்கின்றன. லைபீரியாவில் சுகாதார சேவை முழுவதையும்
NGO கள் நடத்தி
வருகின்றன.
லைபீரியா உள்நாட்டுப் போரில் ஈடுபட்ட முன்னாள் போராளிகளின் ஆயுதங்கள்
ஒப்படைப்பு, படைக்கலைப்பு ஆகியவற்றுடன் சமுதாயத்தில் அவர்களை ஒருங்கிணைக்கின்ற பணிகள் மேற்கொள்ளப்பட
வேண்டும் என்று அந்த அறிக்கை கூறுகிறது. அங்கு 100,000 ற்கு மேற்பட்டவர்களிடமிருந்து ஆயுதங்கள்
சேகரிக்கப்பட்டுள்ளன. ஆனால், மூன்று போராளிகளுக்கு ஒரு ஆயுதம் என்ற வகையில்தான், ஆயுதங்கள்
கைப்பற்றப்பட்டிருப்பதாக லைபீரியாவின் ஐக்கிய நாடு கண்காணிப்புக்குழு
(UNMIL)
குறிப்பிடுகிறது. இருப்பினும், இந்த நடவடிக்கைகள் துவங்குவதற்கு முன்னர் ஒவ்வொரு போராளியும் சராசரியாக மூன்று
ஆயுதங்களை வைத்திருந்தனர் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
இத்தகைய முன்னாள் போராளிகளது சமூக, சுகாதார தேவைகளையும் மனோதத்துவ
அடிப்படையிலான நடவடிக்கைகளையும் மூன்று வாரங்களுக்குள் பூர்த்தி செய்துவிட முடியுமென்று மதிப்பிடப்பட்டது. இறுதியில்
அந்த நடவடிக்கை 150 டாலருக்கு ஒரு ஆயுதம் என்ற அளவிற்கு பணத்திற்கு துப்பாக்கி மாற்றமாக அமைந்துவிட்டது.
இப்படி ஆயுதங்களை ஒப்படைப்பவர்களில் மிகப்பெரும்பாலோர், உள்நாட்டு யுத்தத்தில் ஈடுபட்ட சார்லஸ் டெய்லரின்
அரசாங்க ஆதரவாளர்களும் அல்ல. அல்லது கிளர்ச்சி குடிப்படை குழுக்களின் உறுப்பினர்களும் அல்ல. மாறாக, "இதர''
போராளிகள் என்று வகைப்படுத்தப்பட்டு உள்ளவர்களிடமிருந்துதான் கைப்பற்றப்பட்டு வருகின்றன. மிகக் கடுமையாக
போரிட்டவரிடமிருந்து ஆயுதங்கள் கைப்பற்றப்படவில்லை என்று இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. போரின் போது
பரவலாக பயன்படுத்தப்பட்ட கனரக ஆயுதம் என்று வகைப்படுத்தப்பட்டுள்ள ஆயுதங்களில் 3.3 சதவீதம் மட்டுமே
கைப்பற்றப்பட்டிருக்கிறது. லைபீரியாவில் எதிர்காலத்தில் போர்கள் நடக்கக் கூடும் என்று எதிர்பார்த்து அல்லது
Guinea
மற்றும் ஐவரி கோஸ்ட் போன்ற பக்கத்து நாடுகளுக்கு உள்நாட்டுப் போரை ஏற்றுமதி செய்ய முடியும் என்று
எதிர்பார்த்து போராளிகளும் ஆயுதங்களும் சேமித்து வைக்கப்பட்டிருக்கின்றன என்பதில் சந்தேகத்திற்கு இடமில்லை.
தற்போது லைபீரியாவை அமெரிக்காவின் கட்டளைப்படி ஆட்சி செய்து கொண்டிருக்கிற
அரசியல் தட்டுக்கள்தான் மக்களுக்கெதிராக நடத்தப்படுகின்ற வல்லுறுவு, கொலை, அங்கங்கள் சிதைப்பு மற்றும் இதர
அட்டூழியங்களுக்கு பொறுப்பாகும். அப்படியிருந்தும், நடைபெறவிருக்கும் தேர்தல்களில், இதே யுத்த பிரபுக்கள் மற்றும்
அவர்களுக்கு உடந்தையாக செயல்பட்டுக் கொண்டிருப்பவர்களில், இருந்துதான் பெரும்பாலும் வேட்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.
முறையாக வாக்காளர்களை பதிவு செய்வதற்கு இயலாது என்றாலும் அமெரிக்காவின் வற்புறுத்தலின் கீழ் 2005 அக்டோபரில்
தேர்தல்களை நடத்துவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
2002 தேர்தல்களில் மேற்கு நாடுகளின், ஆதரவோடு ஜனாதிபதியாக அஹமது கப்பா
தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தாலும், அந்த அறிக்கையில் சியரா லியோனில் அவரது அரசாங்கத்தின் ஊழல் தன்மை குறித்து
கோடிட்டு காட்டுகிற சில விவரங்கள் தரப்பட்டுள்ளன. ஆட்சியை எதிர்த்து விமர்சித்ததற்காக கப்பா பத்திரிக்கையாளரான
பால் காமராவை இரண்டாண்டுகள் சிறையில் அடைத்தார். 1967 ல் நடைபெற்ற ஒரு விசாரணைக் கமிஷனின் விசாரணை
அறிக்கையை அடிப்படையாக கொண்டு காமரா 2003 ல் தொடர் கட்டுரைகள் எழுதினார். அப்போது நிதி மந்திரியாக
இருந்த கப்பாவின் கண்காணிப்பில் இயங்கி வந்த சியரா லியோன் சந்தை வாரியத்தில் நடைபெற்ற ஊழல்கள் சம்மந்தமாக,
இந்த விசாரணை கமிஷன் விசாரித்தது. அந்த ஊழல் குற்றச்சாட்டுகளை தொடர் கட்டுரைகளை வெளியிட்ட செய்திப் பத்திரிக்கைக்கு
ஆறு மாதங்கள் பிரசுரம் செய்வதற்கு தடை விதிக்கப்பட்டது. "அதே கார், ஆனால் டிரைவர்தான் வேறொருவர்" என்று
சியரா லியோன் மக்கள் அந்நாட்டு அரசியல் பரிணாமம் பற்றி குறிப்பிடுவதை அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
இந்த அறிக்கையை மேற்கு நாட்டு அரசுகளுக்கான முக்கிய ஆலோசனை அமைப்பான
சர்வதேச நெருக்கடி குழு தயாரித்திருக்கிறது. இந்த அமைப்பு ஆப்பிரிக்காவில் ஐக்கிய நாடு அமைதி காப்பு
தலையீடுகளை முழுமையாக ஆதரிப்பதாகும். "சியரா லியோனில் 5 ஆண்டுகள் தலையிட்ட பின்னரும் நிரந்தரமான
பாதுகாப்பை உறுதி செய்து தருவதற்கு இந்தத் தலையீடு தவறிவிட்டது என்றும், பல ஆண்டுகளுக்கு முன்னர் அந்நாடு இருந்த
நிலைக்கே திரும்பிக் கொண்டிருக்கிறது" என்றும் இந்தக் குழுவினர் ஒப்புக்கொள்கின்றனர்.
இந்த இரண்டு நாடுகளிலும் அதிக அளவில் ஸ்திரத்தன்மையை உருவாக்கி, நவீன
காலனித்துவத்திற்கு ஏற்ற வகையில், அதன் கனிம வளத்தை சுரண்டுவது எப்படி என்றும், அடுத்த 15 முதல் 25 ஆண்டுகள்
வரை இவ்விரு நாடுகளிலும் பொருளாதார அடிப்படையில் மேற்கு நாடுகள் தலையிட வேண்டுமென்றும் இந்தக் குழுவினர்
ஆலோசனை கூறியுள்ளனர். ஏனென்றால், அந்த அரசை கட்டுப்படுத்தும் ஊழல் மிக்க செல்வந்த ஆளும் தட்டுகளுக்கு
துறைமுகங்கள், விமான நிலையங்கள், சுங்கத் தீர்வைகள் மற்றும் இதர வகைகளில் வருமானம் வருகிறது. இந்த
அதிகாரங்களை பறிப்பது லைபீரியாவின் இறையாண்மையை பறிப்பதாகும் என்பதை அவர்கள் ஒப்புக்கொள்கின்றனர்.
ஆனால், நாடு மேலும் சீர்குலைந்து விடுவதை தடுப்பதற்காக இவ்வாறு பறிப்பதை அவர்கள் நியாயப்படுத்துகின்றனர்.
லைபீரியாவில் இந்த திட்டம் குறிப்பாக செயல்படுமானால் அதே போன்ற திட்டம் சியரா லியோனுக்கும் பொருந்துமென்று
அவர்கள் கருதுகின்றனர்.
பிரிட்டன், அமெரிக்கா மற்றும் ஐக்கிய நாடுகள் மேற்கொண்ட ''அமைதியை
கட்டியெழுப்பும்'' நடவடிக்கை மேற்கு ஆப்பிரிக்க நாடுகளின் மக்களுக்கு எந்தவிதமான பொருளாதார வளர்ச்சி அல்லது
பாதுகாப்பை தந்துவிடவில்லை என்பதால், அடுத்தகட்ட தர்க்கவியல் நடவடிக்கை அப்பட்டமான காலனித்துவத்திற்கு
திரும்புவதாகத்தான் இருக்க முடியும். |