World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :  மத்திய கிழக்கு : ஈராக்

Vietnam 1967 & Iraq 2005: using elections to justify criminal wars

வியட்நாம் 1967 மற்றும் ஈராக் 2005: கிரிமினல் போர்களை நியாயப்படுத்த பயன்படுத்தப்பட்ட தேர்தல்கள்

By Bill Van Auken
5 February 2005

Back to screen version

வாக்காளர்கள் எதிர்பாராத அளவிற்கு மிக அதிக எண்ணிக்கையில் வந்தார்கள், கூட்டு வீரத்தை காட்டுகின்ற ஒரு செயலாக பயங்கரவாதிகளை மறுத்து ஒதுக்கித்தள்ளிவிட்டு திரண்டார்கள், அது ஜனநாயகத்திற்கான போராட்டத்தில் ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்க வெற்றியாகும். மற்றும் அமெரிக்காவின் கடற்கரையிலிருந்து ஆயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பால் நடைபெற்றுக் கொண்டுள்ள நீண்ட மற்றும் இரத்தக்களரியான அமெரிக்க இராணுவ நடவடிக்கையில் ஒரு திருப்பு முனையாகும்.

ஈராக், ஜனவரி 2005? இல்லை, இந்தக் கதை, அரசாங்கமும் அமெரிக்க ஊடகங்களும் அமெரிக்க மக்களுக்காக 37 ஆண்டுகளுக்கு முன்னர் தெற்கு வியட்நாமில் ஏகாதிபத்திய தலையீட்டை நியாயப்படுத்துவதற்காக வாஷிங்டனால் நடத்தப்பட்ட தேர்தலில் அந்நாட்டு மக்கள் பங்கெடுத்துக்கொண்டதை சித்தரித்துக் காட்டியதாகும்.

வியட்நாமிற்கும் ஈராக்கிற்கும் வேறுபாடுகள் பலவென்றாலும் இரண்டு நாடுகளிலுமே தனது சொந்த மூலோபாய நோக்கங்களை முன்னெடுத்துச் செல்வதற்காக வாஷிங்டன் ஏற்பாடு செய்த மோசடி செய்த மற்றும் பயன்படுத்திக்கொண்ட நடைமுறைகளின் ஒற்றுமைகள் மிகத் தெளிவாக தோன்றுகின்றன.

"வியட்நாம் வாக்குப்பதிவினால் அமெரிக்கா உற்சாகம் அடைந்திருக்கிறது" வாக்குப்பதிவு நடந்த மறுநாள் 1967 செப்டம்பர் 4-ல் நியூயோர்க் டைம்ஸ் வெளியிட்ட தலைப்பு செய்தியாகும்.

"வாக்குப்பதிவை சீர்குலைப்பதற்கு ஒரு வியட்காங் பயங்கரவாத பிரச்சாரத்திற்கு பின்னரும் தெற்கு வியட்நாம் ஜனாதிபதி தேர்தலில் கலந்துகொண்ட வாக்காளர்கள் எண்ணிக்கையைக் கண்டு இன்று அமெரிக்க அதிகாரிகள் வியப்படைந்தனர் மற்றும் மகிழ்ச்சி அடைந்தனர்" என்று டைம்ஸ் மேலும் கூறியது.

தெற்கு வியட்நாமில் பதிவு செய்யப்பட்டிருந்த 5.85 மில்லியன் வாக்காளர்களில் 83 சதவீத வாக்காளர்கள் வாக்குப்பதிவில் கலந்து கொண்டதாக வாஷிங்டனும் அதன் பொம்மை ஆட்சியும் கூறின.

"அந்த தேசிய தேர்தலில் நடத்தப்பட்ட ஒரு பூர்வாங்க மதிப்பீட்டில் காணப்பட்ட இரண்டு முக்கிய உண்மைகள் என்னவென்றால் தேர்தல் ஏற்பாட்டை சீர்குலைக்க வியட்காங்கினால் இயலவில்லை என்பதும் பொதுமக்கள் வாக்கெடுப்பில் கலந்து கொண்ட எண்ணிக்கையும்தான்" என்று டைம்ஸ் மேலும் கூறியது.

வாக்குப்பதிவு நடந்த மறுநாள் ஜனாதிபதி லிண்டன் ஜோன்சன் நிர்வாகம் அந்தத் தேர்தலை, "முன்னேற்றப் பாதையில் ஒரு முக்கிய அடியெடுத்து வைத்திருக்கும் நடவடிக்கை" என்று அறிவித்தது. தெற்கு வியட்நாம் மக்கள் தங்களது ஜனநாயக கட்டளையை வெளிப்படுத்தியிருக்கின்றனர் மற்றும், "நமது ஆதரவிற்கு அவர்கள் தகுதியுள்ளவர்கள்" என்று அறிவித்தது.

"வியட்நாம்" என்ற சொல்லுக்கு பதிலாக, "ஈராக்" என்ற சொல்லை சேர்த்துக்கொண்டால் அதே செய்தி அறிக்கைகள் தலையங்கங்கள் உரைகள் ஆகியவற்றை தூசிதட்டிவிட்டு கடந்தவாரம் மீண்டும் எந்தவிதமான மாற்றமும் இல்லாமல் அப்படியே பயன்படுத்திக் கொண்டிருக்க முடியும்.

வியட்நாமில் அமெரிக்கத் தலையீடு தொடர்பாக மிக ஆழமாக ஆய்வு செய்து 1972-ல் Frances Fitzgerald எழுதிய Fire in the Lake என்ற புத்தகத்தில், அமெரிக்க மக்களுக்கு வியட்நாம் தேர்தல் தொடர்பாக ஜோன்சன் நிர்வாகமும் ஊடகங்களும் சித்தரித்திருந்த விதம் பற்றி விமர்சனம் செய்துள்ளார்.

"அமெரிக்க மக்கள் பெற்றவாறு, அந்தச் செய்தி என்னவெனில் அந்த பின்தங்கிய நாட்டிற்கு தனது சொந்த அரசியல் அமைப்பின் எல்லாச் சிறப்புக்களையும் அமெரிக்கா பெருந்தன்மையோடு கொண்டு வந்திருக்கிறது, கம்யூனிச சர்வாதிகாரத்திலிருந்து வியட்நாம் மக்களை வென்றெடுப்பதற்காக ஒரு ஜனநாயகத்தை உருவாக்கியுள்ளது என்பதாகும். வியட்நாமின் சரிபாதி வடக்குபகுதி முழுவதும் பிரிந்து சென்றுவிடும் மற்றும் சைகோனில் ஒட்டுமொத்த குழப்பம் ஏற்படும் என்ற அச்சுறுத்தலின் காரணமாக முதலாவதாக கை அரசாங்கமும் அமெரிக்க தூதரகமும் அந்தத் தேர்தல் நடத்துவதற்கு சம்மதித்தார்கள் என்பதை அந்த தேர்தலை கண்காணிப்பதற்காக வந்திருந்த அமெரிக்க பிரமுகர்கள் எவரும் நினைவில் நிறுத்தாத அளவிற்கு அந்த செய்தி மிகத் தெளிவாக தரப்பட்டது."

மீண்டும் இங்கே இரண்டிற்கும் ஒப்பு உவமைகள் கவனத்தை ஈர்க்கின்றன. புஷ் ஈராக் வாக்குப்பதிவில் வாக்காளர்கள் பெரும் அளவில் கலந்து கொண்டார்கள் என்ற பிரதிபலிப்பு பெருமையில் குளிர்காய்ந்தாலும் நெருக்குதலின் காரணமாகத்தான் வாஷிங்டன் தேர்தல் நடத்துவதற்கு இணங்கியது என்ற கசப்பான உண்மையை ஊடகங்களிலுள்ள எவருமே நினைவுபடுத்தவில்லை. ஷியா மக்களின் முதன்மை மதத்தலைவரான அயத்துல்லா அலி அல் சிஸ்தானி பொதுமக்களது வாக்குப்பதிவு நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்ததை தொடர்ந்து, ஷியா மக்களது முழுவீச்சிலான கிளர்ச்சி நடப்பதை மட்டுப்படுத்துவதற்காகத்தான் அந்தத் தேர்தல் நடத்தப்பட்டது. ஆரம்பத்தில் அமெரிக்க நிர்வாகம் தனது கொத்தடிமை அகமது சலாபியையும் அதுபோன்ற சிஐஏ உளவாளிகளையும் பதவியில் அமர்த்த திட்டமிட்டது. அதற்குப்பின்னர் ஆக்கிரமிப்பு ஆணைய தலைவரான போல் பிரேமர் அமெரிக்கா பொறுக்கி எடுக்கும் ஒரு கவுன்சில் அரசாங்கத்தை அமைப்பதற்கு திட்டமிட்டார்.

அத்தகைய ஒரு தேர்தலை நடத்துவதற்கு கட்டாயப்படுத்தப்பட்ட பின்னர் வியட்நாமிலும், ஈராக்கிலும் அமெரிக்கா ஒரு பிரச்சார பீரங்கியை திருப்பிவிட்டது. அது உள்நாட்டில் அமெரிக்க இராணுவ தலையீட்டிற்கு பொதுமக்களிடையே பெருகிவந்த எதிர்ப்பை ஒடுக்குவதை நோக்கமாக கொண்டது.

இந்த இரண்டு தேர்தல்களில் எது ஒரு பெரிய புரட்டு என்பதை கண்டுபிடிப்பது மிக கடினம். வியட்நாமில் அமெரிக்க இராணுவத்தின் எண்ணிக்கை அரை மில்லியனை தொடுகின்ற அளவிற்கு பெருகிக்கொண்டிருந்த நேரத்தில் அதன் நேரடி அதிகாரத்தின் கீழும் Marshal Nguyen Cao Ky தலைமையிலான இராணுவக் குழுவின் தெற்கு வியட்நாம் ஒடுக்குமுறை மற்றும் ஊழல் மிக்க ஆட்சியின் கீழும் இணைந்து அந்த வாக்குப்பதிவு நடத்தப்பட்டது. "நடுநிலையாளர்கள்" அல்லது கம்யூனிஸ்ட்டுகள் என்று கருதப்பட்ட வேட்பாளர்கள் போட்டியிடுவதற்கு தடைவிதிக்கப்பட்டது.

இறுதியில், இந்தக் கடுமையான கட்டுப்பாடுகளுக்கு பின்னரும் அமெரிக்க ஆதரவு இராணுவ தளபதிகள் ஒரு பெரும்பான்மை வாக்கை வென்றெடுக்கத் தவறிவிட்டனர். கடைசி நேரத்தில் அவசர அவசரமாக வாக்குப் பெட்டிகளில் போலி வாக்குகளை நிரப்பியதால் ஒரு ஏற்றத்தாழ்வுள்ள வாக்குகளைத்தான் அவர்களால் பெற முடிந்தது. தெளிவான பெரும்பான்மை பெற முடியவில்லை. அந்த தேர்தல் சட்டவிரோதமானது என்று கண்டனம் தெரிவித்த எதிர்க்கட்சி வேட்பாளர்கள் சிறையிலடைக்கப்பட்டனர்.

ஈராக் வாக்குப்பதிவு முடிவுகள் இன்னும் அறிவிக்கப்படவில்லை என்றாலும் அந்த நடைமுறை வியட்நாமைவிட குறைந்த சட்டபூர்வதன்மை கொண்டதுதான். ஒரு சட்டவிரோதமான ஆக்கிரமிப்பு போரின் விளைவாக உருவான ஒரு இராணுவ ஆக்கிரமிப்பின் கீழ் வாக்குப்பதிவு நடத்தப்படுவதே ஒரு போர் குற்றத்தை நீடித்துக்கொண்டிருக்கும் ஒரு செயலாகும். ஒரு தேர்தல் பிரச்சாரத்தின் சாயல்கூட இல்லாத அளவிற்கு அது ஏற்பாடு செய்யப்பட்டது. ஈராக் மக்கள் முன் போட்டி செயல் திட்டங்கள் எதுவும் எடுத்துவைக்கப்படவில்லை. வாக்குப்பதிவு நடக்கின்ற நாள்வரை பெரும்பாலான வேட்பாளர்கள் பெயர்களே கூட இரகசியமாக வைக்கப்பட்டிருந்தன.

இந்த நடைமுறையை ஈராக் மக்களில் 20 சதவீதத்தினராக உள்ள சுன்னிகள் பெரும்பாலும் புறக்கணித்தார்கள் மற்றும் அவர்கள் ஒரு நூற்றாண்டிற்கு மேலாக ஈராக்கின் அரசியல் வாழ்வில் ஒரு மைய பங்களிப்பு செய்தவர்கள் என்பதை அமெரிக்க ஊடகங்களே கூட மறைக்க முடியவில்லை.

இதில் மிகவும் அடிப்படையாக கருதிபார்ப்பது என்னவென்றால், ஒரு வெளிநாட்டு ஆதிக்கத்தால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள மக்கள் அந்த ஆக்கிரமிப்பாளர்கள் எந்தவிதமான கட்டுப்பாடும் இல்லாத இராணுவ சர்வாதிகாரத்தை நடத்திகொண்டிருக்கிற நேரத்தில் அந்த மக்கள் ஒரு ஜனநாயக முடிவை நெருங்கி வருகின்ற அளவிற்கு கூட எந்த முடிவையும் செய்வது அடிப்படையிலேயே இயலாத காரியம்.

வியட்நாமில் ஈராக்கில் நடந்ததைப்போல் பொதுமக்கள் தங்களது சொந்த காரணங்களுக்காக வாக்குப்பதிவில் கலந்து கொண்டார்கள் என்பதில் எந்தவிதமான சந்தேகத்திற்கும் இடமில்லை. இந்த இரண்டு நாடுகளிலுமே வாக்குப்பதிவில் கலந்து கொள்ள வேண்டும் என்பதற்கான முதன்மை உந்துதல்களில் ஒன்று தேர்தல் நடப்பது ஏதாவதொரு வகையில் மக்கள் கொல்லப்படுவதற்கு முற்றுப்புள்ளி வைக்கவும் அமெரிக்க ஆக்கிரமிப்புப் படைகள் வெளியேறுவதற்கும் வழி செய்யும் என்ற கண்ணோட்டத்தினால்தான்.

வியட்நாமில் இந்த வகையில் பொதுமக்களது பிரமைகள் எதுவும் உடனடியாக தோல்வி கண்டது. Fitzgerald தனது புத்தகத்தில் குறிப்பிட்டிருப்பதைப்போல, "ஆயினும் அவர்கள் வாக்களித்தார்கள், அவர்கள் என்ன சொல்லியிருந்தாலும் இராணுவத் தளபதிகளும் அமெரிக்கர்களும் அந்த நாட்டை தொடர்ந்து ஆண்டு கொண்டிருப்பர், அவர்களை ஜனநாயகத்தை பயிற்றுவிப்பதற்கு மாறாக 1966-67 தேர்தல்கள் வியட்நாமியருக்கு அரசியல் மோதல்களை தீர்த்து வைப்பதற்கு தேர்தல்கள் ஒரு பயனற்ற வழி என்பதை உணர்த்திற்று".

அதுவேதான் ஈராக்கிலும் நடக்கும் என்பதை சொல்லத்தேவையில்லை. தனது போரிலும் ஆக்கிரமிப்பிலும் 300 பில்லியன் டாலர்களை வாஷிங்டன் கொட்டியிருக்கிறது. அந்த நாட்டின் அரசியல் மற்றும் பொருளாதார வாழ்வில், இதற்கெல்லாம் மேலாக அதன் பெரிய எண்ணெய் கையிருப்புக்கள் மீது, தனது இறுக்கமான பிடியை தானே உறுதி செய்து கொள்வதற்காக கொத்தடிமைகள் குழு ஒன்றை நியமித்திருக்கிறது பல்வேறுபட்ட அமைப்புக்களை உருவாக்கியிருக்கிறது மற்றும் வாக்குப்பதிவின் முடிவு எதுவாக இருந்தாலும் அல்லது தேசிய நாடாளுமன்றத்தின் முடிவுகள் என்னவாக இருந்தாலும் இந்தக் கட்டுப்பாட்டை அமெரிக்கா விட்டுக் கொடுக்காது.

வியட்நாம் தேர்தல் மற்றும் அதை ஒரு பெரிய முன்னேற்ற நடவடிக்கை என்று ஜோன்சன் நிர்வாகம் சொல்லிய பின்னரும் வியட்நாமில் என்ன நடந்தது என்பதை அறிந்து கொள்வது பயனுள்ளது. தேர்தல் முடிந்து 5 மாதங்களுக்குள்ளேயே 1968 ஜனவரியில் டெட் (Tet) தாக்குதல் நடந்தது. வியட்நாம் விடுதலை போராளிகள் பெரிய மற்றும் சிறிய நகரங்கள் மீதும் நாட்டிலுள்ள அமெரிக்க இராணுவத்தளங்கள் மீதும் நடத்திய ஒருங்கிணைந்த தாக்குதல்கள் அமெரிக்க மக்களுக்கு ஒரு அதிர்ச்சியாக அமைந்தது மற்றும் அந்த ஆண்டு மீண்டும் ஜனாதிபதியாக போட்டியிடுவதற்கு ஜோன்சன் தனது வேட்பு மனுவை திரும்ப பெற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

அதன்மூலம் போர் மிகப்பெருமளவிற்கு பரவலாக தீவிரப்படுத்தப்பட்டது. இந்த நடவடிக்கைகளில் சிஐஏ மேற்கொண்ட Operation Phoenix-ம் அடங்கும். நாபாம், ஏஜண்ட் ஆரஞ்சு மற்றும் ஏனைய நாபாம் ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்ட அந்த கொலைவெறி குண்டு வீச்சுக்களில் தேசிய விடுதலை அணியை சேர்ந்தவர்கள் என்று சந்தேகிக்கப்பட்ட 20,000 முதல் 70,000 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் அவர்களது குடும்பங்கள் மற்றும் அண்டை அயலார்கள் ஆகியோர் வடக்கிலும் தெற்கிலும் மடிந்தனர்.

ஈராக் தேர்தலுக்கு பின்னர் அதே போன்ற இரத்தக்களரி தாக்குதல்களில் அமெரிக்கா ஈடுபடும் என்று எதிர்பார்ப்பதற்கு எல்லாவகையான காரணமும் உண்டு. ஈராக்கில் பெருகிவரும் பொதுமக்களது கிளர்ச்சியை ஒடுக்குவதற்கு ஒட்டுமொத்தமாக கொலை செய்யும் Phoenix பாணி தாக்குதல்களை நடத்துவது குறித்து அமெரிக்க தேசிய பாதுகாப்பு அமைப்பில் ஏற்கனவே பகிரங்கமாக விவாதிக்கப்பட்டு வருகிறது. விரோதமாக உள்ள மக்கள் மீது கண்மண் தெரியாத அளவிற்கு விமானப்படை தாக்குதல்களை நடத்துவது அதிகரித்துக்கொண்டு வருகிறது.

தேர்தல்கள் ஈராக்கில் ஒரு அமெரிக்க வெற்றி சமிக்கை என்று கூறுவது புஷ் நிர்வாகம் இதற்கு முன்னர் கூறிய "எல்லா திருப்புமுனைகளையும்" போன்றதே தவிர, அதற்கு மேல் இந்த தேர்தலால் எதுவும் நடந்துவிடவில்லை. இதற்கு முன்னர் புஷ் நிர்வாகம் பாக்தாத் வீழ்ச்சியடைந்ததை "பிரதான போர் நடவடிக்க்ைகள்" முடிவு என்று அறிவித்தது. சதாம் உசேன் கைது செய்யப்பட்டது, மற்றும் "இறையாண்மை கொண்ட" ஈராக்கின் இடைக்கால அரசாங்கம் என்று கூறப்பட்ட சிஐஏ இன் ஒரு சொத்தான அயத் அல்லவாவி -ன் அரசு நிறுவப்பட்டபோதும், அவற்றை திருப்பு முனைகள் என்று புஷ் நிர்வாகம் கூறிக்கொண்டே வந்தது.

அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் காலனியாதிக்க அதிரடி நடவடிக்கை, ஈராக் மக்களது எதிர்ப்பின் மூலம் மற்றும் போருக்கும் அதை நடத்துவதற்கு சதி செய்தவர்களுக்கும் எதிராக அமெரிக்க உழைக்கும் மக்களின் சுதந்திரமான போராட்டத்தை நடத்துவதன் மூலம் முறியடிக்கப்படுகிற வரை கொலை செய்வது நீடித்துக்கொண்டுதான் இருக்கும்.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved