World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா

After the 2004 US elections: the Socialist Equality Party and the struggle for the political independence of the working class

2004 அமெரிக்கத் தேர்தல்களுக்குப் பின்னர்: சோசலிச சமத்துவக் கட்சியும் தொழிலாள வர்க்கத்தின் அரசியல் சுயாதீனத்திற்கான போராட்டமும்

பகுதி 1 | பகுதி 2

By Barry Grey
15 January 2005

Use this version to print | Send this link by email | Email the author

சோசலிச சமத்துவக் கட்சியின் தேசிய உறுப்பினர்கள் குழு, மிச்சிகனிலுள்ள அன் ஆர்பரில் கடந்த 8-9 ஜனவரி வார இறுதியில் ஒரு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தது. 2004 அமெரிக்கத் தேர்தல்களுக்குப் பின்னரான அரசியல் நிலைமை பற்றி, உலக சோசலிச வலைத் தளத்தின் ஆசிரியர் குழு உறுப்பினர்களுள் ஒருவரான பாரி கிரே அளித்த அறிக்கையின் இரண்டாம் பகுதியை கீழே வெளியிடுகிறோம்.

இம்மாநாட்டிற்காக சோசலிச சமத்துவக் கட்சியின் தேசிய செயலாளரும், உலக சோசலிச வலைத் தளத்தின் ஆசிரியர் குழுத் தலைவருமான டேவிட் நோர்த் அளித்த ஆரம்ப அறிக்கைகள் மூன்று பகுதிகளாக ஜனவரி 15, 18, 23 ம் தேதிகளில் தமிழில் வெளிவந்தன.

கெர்ரியின் பிரச்சாரம் நிலைகுலைந்து, புஷ் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டதை அடுத்து, தொழிலாள வர்க்கத்தின் முன் ஒரு தீவிரமான, புதிய அரசியல் மூலோபாயத்தின் தேவை பற்றிய வினா உடனடியாகவும், உறுதியாவும் வைக்கப்பட்டுள்ளது. கீழிருந்து வரும் மக்களுடைய அழுத்தத்தின் விளைவாக, ஜனநாயகக் கட்சி, உழைக்கும் மக்களின் நலன்களை பாதுகாக்கும் கருவியாகவும் முற்போக்கான மாறுதல்களுக்கு ஒரு கருவியாகவும் மாற்றப்படும் என்ற கருத்தை அடிப்படையாகக் கொண்ட அனைத்து முன்னோக்குகளின் மோசடிகளும் கடுமையான தாக்குதலுக்கு ஆளாகியுள்ளன.

ஆயினும் கூட, இந்தக் கட்சி இப்போதுள்ள அணியற்ற, சீர்குலைந்துள்ள தன்மை ஒருபுறம் இருக்க, அரசியல் அரங்கில் இருந்தே மறைந்துவிடும் என்று எதிர்பார்ப்பது பெரும் தவறுமிக்க அரசியல் கருத்தாகும்; இன்னும் சொல்லப்போனால், அவ்வாறே நடந்தாலும் கூட, தொழிலாள வர்க்கத்தினால் உண்மையாக கட்டுப்படுத்தப்படும், அதேநேரத்தில் அதன் நலன்களை பிரதிநிதித்துவம் செய்யும் ஒரு வெகுஜனக்கட்சி தன்னியல்பாகவும், சுயாதீனமாகவும் தோன்றிவிடும் என்று எதிர்பார்ப்பதும் பிழையானதாகும்.

தொழிலாள வர்க்கத்தின் சுயாதீனம் என்பதற்கு முதலாளித்துவ அரசியல் கட்சிகளில் இருந்து மேலோட்டமாக பிரிந்து செல்லுவதைவிட ஆழமான பொருள் உண்டு. தொழிலாள வர்க்கத்தின் கணிசமான பிரிவு சோசலிசத்திற்கான புரட்சிகர அரசியல் போராட்டத்தின் தேவையை உணர்ந்துள்ளது என்பதையும் மற்றும் அத்தகைய போராட்டத்தை தொடர்ந்து நடத்துவதற்கு தொழிலாள வர்க்கத்தின் திறனில் நம்பிக்கை உள்ளதையும் அது குறிக்கிறது.

வரலாற்றுக் கண்ணோட்டத்தில் பார்க்கும்போது, அமெரிக்க தொழிலாளர் இயக்கத்தின் மிகப் பெரிய பலவீனம் முதலாளித்துவ கட்சிகளிடம் இருந்து அது முறித்துக் கொண்டு, தன்னுடைய சொந்த வெகுஜன கட்சியை அமைத்துக் கொள்ள முடியாத தன்மைதான். அமெரிக்காவில் இருக்கும் இரண்டு முக்கிய முதலாளித்துவக் கட்சிகளில், ஜனநாயகக் கட்சி நீண்ட காலமாகவே இத்தகைய வளர்ச்சி வரக்கூடாது என்பதை குறிப்பாக தடைசெய்யும் வகையில்தான், தன்னை மக்களுடைய கட்சி என்று காட்டிக் கொண்டு, தொழிலாள வர்க்கத்தின் உள்ளுணர்வால் உந்தப்பெற்ற மற்றும் தொடக்கநிலை முதலாளித்துவ எதிர்ப்பு உணர்வுகளை, முதலாளித்துவ அரசியல் வடிவமைப்பிற்குள் மீண்டும் செலுத்திவிடும் வகையில்தான் செயல்பட்டு வந்துள்ளது.

அமெரிக்காவில் பல மூன்றாம் கட்சிக்கான இயக்கங்கள் இருந்துவருகின்றன; ஆனால் அவை மத்தியதர வர்க்க சமுதாய, தேசியவாத அரசியல் அஸ்திவாரங்களில் தங்கி இருக்கும்வரை, வெளிப்படையான சீர்திருத்தங்கள் அல்லது மிகவும் தீவிரத் தன்மையைக் கொண்டிருந்தாலும் கூட, பொதுவில் அவை முதலாளித்துவ அரசியலுக்கும், குறிப்பாக ஜனநாயகக் கட்சிக்கும் ஓர் இடது அணி போலத்தான் தவிர்க்க முடியாமல் செயல்பட்டு வந்துள்ளன. அமெரிக்க தொழிலாள வர்க்கத்திற்கு சுயாதீனமான அரசியல் வளர்ச்சி இல்லாமற்போனமை, போராடுவதற்கு விருப்பமில்லாமல் இருக்கின்றது என்ற பொருளைத் தராது. மாறாக, அமெரிக்க தொழிலாள வர்க்கத்தின் போராட்டங்கள் பலமுறையும் மிகுந்த போர்க்குணமிக்க, வெடிக்கும் வடிவங்களை மேற்கொண்டு இருந்திருக்கிறது.

அவ்வாறு இருந்திருந்தபோதிலும், தொழிலாளர்கள் தாங்கள் தெருக்களிலும், ஆலைகளிலும் எதிர்க்கும் அதே முதலாளிகளின் சார்பாளர்களாக இருக்கும் கட்சிகளின் செல்வாக்கு பிடியில் இருந்து தங்களை விடுவித்துக் கொள்ள இயலாமல் இருக்கிறார்கள் என்றால், ஜனநாயக கட்சியுடனான அரசியல்ரீதியான உண்மையான உடைவு என்பது பாரிய புரட்சிகர தாக்கங்களை கொண்டுள்ளது என்பதும், திட்டவட்டமாக அந்த காரணத்திற்காக, ஏராளமான கருத்தியல் மற்றும் அரசியல் அழுத்தங்களும் சக்திகளும் அதற்கு எதிராக இருக்கும்.

சர்வதேச சோசலிசத்திற்கான கொள்கைகளையும், வேலைத்திட்டத்தையும் மார்க்சிச இயக்கத்திற்கான போராட்ட முழு மரபையும் அடித்தளமாகக் கொண்டுள்ள ஒரு புரட்சிகரமான கட்சியை, பதிலீடான ஒரு கருவியாக கொள்ளாது தொழிலாள வர்க்கத்தால் இந்த தடைகளை கடக்க முடியாது. எனவேதான் தொழிலாள வர்க்கத்தின் அரசியல் சுயாதீனத்திற்கான போராட்டம் என்பது அமெரிக்காவிலும், சர்வதேச அளவிலும் ட்ரொட்ஸ்கிச இயக்கத்தை அமைப்பதில் பிரிக்கமுடியாதவகையில் பிணைந்து இருக்கிறது.

அரசியலில் ஏதோ ஒரு விதத்தில் "குறைந்த தீமைவாதம்" என்ற வாதத்தை வளர்ப்பவர்களிடம் விவாதம் செய்யும்போது ஜனநாயகக் கட்சியுடன் முறித்துக்கொண்டு, சுயாதீனமான தொழிலாள வர்க்க பதிலீட்டை காண்பதில் அடிப்படைப் பிரச்சினைகள் எழுப்பப் படுகின்றன என்பதை நிலைநிறுத்த அதிக நேரம் பிடிப்பதில்லை. அவ்வடிப்படைப்பிரச்சனைகள் (1) சர்வதேசிய வாதத்திற்கு எதிராக தேசிய வாதம்; (2) உற்பத்திச்சாதனங்கள் மீதான தனிச்சொத்துடைமை, பொருளாதார வாழ்வின் மீது சந்தையின் ஆதிக்கம், இலாபத்திற்கான உற்பத்திக்கு எதிராக உற்பத்திச் சாதனங்கள் மீதான சமூக உடைமை, விஞ்ஞானரீதியாக திட்டமிடல், மனிதத் தேவைகளுக்காக உற்பத்தி செய்தல் என்பனவாகும்.

இந்தப் பிரச்சினைகள் தொழிலாள வர்க்கத்தின் சோசலிச நனவின் வளர்ச்சியுடன் பிணைந்துள்ளன. தொழிலாள வர்க்கம் ஒரு புரட்சிகர வர்க்கமாகும். அது ஒரு ஒடுக்கப்பட்ட வர்க்கமும் ஆகும். ஆளும் வர்க்கம் கல்வி, தகவல் துறைகளின் அனைத்துப் பிரிவுகளையும் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கிறது. அதன் கருத்தியல்தான் ஆதிக்கம் செலுத்தும் கருத்தியல் ஆகும். முதலாளித்துவ உற்பத்தி மற்றும் பரிமாற்றம் வடிவங்கள் என்பன மார்க்ஸ் விளக்கியுள்ளபடி, அடிப்படையில் சுரண்டும் தன்மையுடைய முதலாளித்துவ அமைப்பு மற்றும் அது சேவைசெய்யும் வர்க்க நலன்களை மறைக்கும் வகையில் சமுதாயத் தொடர்புகளின், சிந்தனைகளின் வடிவங்களை இன்றியமையாத வகையில் தோற்றுவிக்கும்.

அதே நேரத்தில், இந்த அமைப்புமுறையின் முரண்பாடுகள் தொழிலாள வர்க்கத்தை அதற்கெதிரான போராட்டத்திற்கு உந்த வைக்கும். மிகப் பெரிய வரலாற்றுப் பிரச்சினை என்னவெனில் தொழிலாள வர்க்கத்திற்குள்ளேயே முதலாளித்துவ சமுதாயத்தில் தன்னுடைய புறநிலை ஸ்தானம் என்ன மற்றும் சமுதாயப் புரட்சிக்கான ஒரு சக்தியாக அதன் பங்கு என்ன என்பது பற்றிய நனவான புரிதல் தோன்றல் ஆகும். இதைத்தான் மார்க்ஸ், தொழிலாள வர்க்கம் தான் ஒரு வர்க்கம் என்பதில் இருந்து தனக்கான ஒரு வர்க்கமாக மாற்றம் அடைதல் என்று குறிப்பிட்டுள்ளார்.

முதலாளித்துவ அமைப்பின் புறநிலை நெருக்கடி இந்த வளர்ச்சிக்கான நிலைமைகளை தோற்றுவிக்கின்றது. ஆனால் இந்த மாற்றத்தை அடைவதற்கு இன்றியமையாத கருவி புரட்சிகர மார்க்சிச கட்சி ஆகும்; அது விஞ்ஞான சிந்தனையின் முழு மரபியம் மற்றும் பாரம்பரியத்தின் மீது தன்னையே தளமிட்டுக்கொண்டுள்ளது. மார்க்சின் சொற்களில் அது சோசலிசப் புரட்சியின் செவிலித்தாய் ஆகும்.

அமெரிக்க ட்ரொட்ஸ்கிச இயக்கம், தன்னுடைய வரலாறு முழுவதும் தொழிலாள வர்க்கத்தை ஜனநாயகக் கட்சியில் இருந்து முறித்துக் கொள்ளுவதற்காக, அயராமல், கொள்கை நிறைந்த போராட்டத்தை நடத்திவந்துள்ளது. தொழிலாளர் இயக்கத்திற்குள்ளேயே இருக்கும் அதிகாரத்துவத்திற்கு எதிராகவும் -அதாவது தொழிற்சங்க அதிகாரத்துவம், அதன் ஸ்ராலினிச சமூக ஜனநாயக, மத்தியதர வர்க்க தீவிரப்போக்கின் கூட்டாளிகள் ஆகியோருக்கு எதிராக என்று- சலிப்பின்றி இந்தப் போராட்டத்தை நடாத்தியுள்ளது. இந்தப் போராட்டத்தை தொழிலாள வர்க்கத்தின் உடனடித் தேவைகளில் இருந்து புறப்படும் இடைமருவுக் கோரிக்கைகளின், வேலைத்திட்டத்திற்கான போராட்டத்துடனும் அதனை தொழிலாளர் ஆட்சியதிகாரம், சோசலிசம் இவற்றிற்கான போராட்டமாக வழிப்படுத்துவதுடனும் இணைப்பதற்கு எப்பொழுதும் முயன்று வந்திருக்கிறது.

இவ்விடத்தில் இப்போராட்டம் பற்றிய ஆய்வை முழுமையாக விவரித்தல் சாத்தியமில்லாதது. ட்ரொட்ஸ்கிச இயக்கம், முதலில் சோசலிச தொழிலாளர் கட்சியாக (SWP), பின்னர் வேர்க்கர்ஸ் லீக் (சோசலிச சமத்துவக் கட்சியின் முன்னோடி) என்று சோசலிச தொழிலாளர் கட்சியின் சந்தர்ப்பவாத சீரழிவிற்கு எதிரான போராட்டத்தில் தோன்றியது, மற்றும் ஒரு தொழிற் கட்சியை அமைத்திடுவதற்கான தேவை மைய தந்திரோபாயமாக எழுந்தது எப்படி, என்ற முக்கியமான கட்டத்தை மட்டும் சுருக்கமாகக் கூறுவேன். ("ஈராக் போர், ஜனநாயகக் கட்சி, மற்றும் ஹோவர்ட் டீன்" என்ற கட்டுரையில், டேவிட் நோர்த் இப்பிரச்சினையை பற்றி விளக்கியுள்ளார்; இக்கட்டுரை புதிதாக வெளிவந்துள்ள அமெரிக்க ஜனநாயகத்தின் நெருக்கடி என்ற புத்தகத்தில் சேர்க்கப்பட்டுள்ளது.)

தொழிற்துறை தொழிற்சங்க பேரவையின் (Congress of Industrial Organizations-CIO) மூலம் தொழிற் சங்கங்கள் வெடித்து தோன்றியிருந்த நிலைமைகளின் கீழ், 1938ல் தொழிற்சங்கங்களின் அடிப்படையாக கொண்டு ஒரு தொழிற்கட்சியை அமைக்கவேண்டும் என்ற கோரிக்கையை ஏற்குமாறு ட்ரொட்ஸ்கி, சோசலிச தொழிலாளர் கட்சியை வலியுறுத்தினார். இந்தப் பெரும் மக்கட்திரள் நிறைந்த தொழிற்சங்க இயக்கம், உள்ளிருப்பு போராட்டங்கள் மற்றும் மோட்டார்வாகனத்தொழில், எஃகுத் தொழில், மின் உற்பத்தி தொழில் இவற்றின் தொழிலாளர்கள், இன்னும் பல தொழிலாளர்களுடன் இணைந்து நிர்வாகத்தின் அடியாட்கள், போலீஸ், தேசியப்பாதுகாப்பு படைகளுக்கு எதிராக நிகழ்த்திய போராட்டங்கள் முரண்பாடுள்ள இயல்நிகழ்ச்சிகளாகும். ஒருபுறம், இது அமெரிக்க தொழிலாள வர்க்கத்தின் புரட்சித் திறன்களையும், இயல்புகளையும் வெளிப்படுத்தியது. இப்போராட்டங்களில் பலவும் சோசலிசச் சிந்தனைப் போக்குடைய போராளிகளின் தலைமையில் நிகழ்ந்தன. மறுபுறமோ, தங்களுடைய புதிய இயக்கம் ரூஸ்வெல்ட் நிர்வாகம் மற்றும் ஜனநாயகக் கட்சியுடன் இணைத்த, உயர்மட்டத்தில் உள்ள வர்க்க சமரச தொழிற்சங்க அதிகாரத்துவத்தினர், கம்யூனிஸ்ட் கட்சியின் ஸ்ராலினிஸ்டுகள் ஆகியோரால் மேலாதிக்கம் செய்யப்பட்டிருந்தது.

இது தோன்றிய ஓராண்டிற்குள்ளேயே, CIO இயக்கம், ரூஸ்வெல்ட்டிற்கு அடிபணிந்து நடந்ததால், ஒரு செயலற்ற தன்மைக்கு தள்ளப்பட்டது. இயக்கத்தின் இறுதிப்பாதை, வர்க்க ஒத்துழைப்பா அல்லது புரட்சிகரமான அரசியல் போராட்டமா என்பது தீர்க்கப்படாமலேயே இருந்தது.

முதலாளித்துவ சார்பு CIO அதிகாரத்துவம், ஸ்ராலினிச அதிகாரத்துவம் இவர்களின் பிடியை பலவீனப்படுத்தும்பொருட்டு மற்றும் சோசலிச தொழிலாளர் கட்சியை தொழிலாள வர்க்கத்தின் அரசியல் சுயாதீனத்திற்கான போராட்டத்தை முன்னணியில் கொண்டு செல்ல சக்திமிக்க இடத்தில் இருத்தவும், SWP தொழிற் கட்சி கோரிக்கையை முன்வைக்க வேண்டும் மற்றும் இடைமருவு கோரிக்கைகளின் வேலைத்திட்டத்துடன் அதைத் தொடர்புபடுத்த வேண்டும் என்றும், ட்ரொட்ஸ்கி முன்மொழிந்தார். மேலும் தான், பிரிட்டனிலும், ஆஸ்திரேலியாவிலும் இருப்பது போல், ஒரு சீர்திருத்தவாத தொழிற்கட்சி அமைக்க வேண்டும் என வாதாடவில்லை என்றும், ஒரு புரட்சிகரமான சோசலிச அரசியலுக்கு செல்லும் பாதையில் மிக அசாதாரண இயற்கை நிலைமைகளினால், அமெரிக்க தொழிலாள வர்க்கம் சீர்திருத்தவாத தொழிற் கட்சி என்ற வழிவகையை கடக்க கடமைப்பட்டுள்ளது என்ற கருத்தையும், தான் ஏற்கவில்லை என்று கூறினார். இதற்கு மாறுபட்ட வகையில், தொழிற் கட்சி கோரிக்கை அரசியல் அதிகாரத்திற்காகவும், சோசலிசத்திற்காகவுமான ஒரு மூலோபாயத்தை அமெரிக்க தொழிலாள வர்க்கம் விளங்கிக்கொள்வதற்காக முன்வைக்கப்படவேண்டும் என்றும் தெரிவித்தார்.

அதன் பல முயற்சிகள் இருப்பினும், அதன் கட்டுப்பாட்டிற்கும் அப்பாலான உலக நிலைமையின் காரணமாக, SWP ஆல் தொழிற்சங்க அதிகாரத்துவம், தொழிலாளர் இயக்கத்தின் மீது கொண்டுள்ள பிடியை உடைக்க முடியவில்லை. ஜனநாயகக் கட்சிக்கு தொழிற்சங்கங்கள் அடிபணிந்து நிற்பதை உறுதிப்படுத்தியதோடு, அதிகாரத்துவம் ஒரு சுயாதீனமான தொழிலாளர் கட்சிக்கான இயக்கத்தையும் எதிர்த்தது; மேலும் தொழிற்சங்கங்களிலும் கம்யூனிச எதிர்ப்பு முறையில் பலரை அகற்றும் செயற்பாட்டிற்கு தலைமை தாங்கியதோடு, இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் அமெரிக்க ஆளும் தட்டின் குளிர்யுத்தக் கொள்கைகளுடனும் தன்னை கூட்டாளியாக்கிக் கொண்டது. இது தொழிலாளர் இயக்கத்தை ஒரு நீண்ட கால சீரழிவிற்கு, இறுதியில் பொறிவு என்ற நிலைக்கு தள்ளிவிட்டது.

சோசலிசத் தொழிலாளர் கட்சி (SWP) தொழிலாள வர்க்கத்திடம் இருந்து விலகி நின்றதும், 1950 மற்றும் 1960களின் கடைசிப் பகுதியில் மார்க்சிச முன்னோக்கிலிருந்தும் விலகி நின்றதும், தொழிற் கட்சிக் கோரிக்கையை இது கைவிடுவதுடன் சேர்ந்து முடிந்தது. சர்வதேசியம் மற்றும் நான்காம் அகிலத்தின் வேலைத்திட்டம் இவற்றை அடிப்படையாகக் கொண்ட வேர்க்கர்ஸ் லீக் அக்கோரிக்கையை புதுப்பித்து, 1966ல் அது தோற்றுவிக்கப்பட்டதில் இருந்து தொழிற்சங்க அதிகாரத்துவத்துக்கு எதிராகவும், தொழிலாள வர்க்கத்தினுள் சோசலிச நனவின் வளர்ச்சிக்கான போராட்டத்திலும் ஒரு மைய தந்திரோபாயமாக அதற்குப் பாடுபட்டது. இந்தக் கோரிக்கைக்கான போராட்டம், ஜனநாயகக் கட்சியில் பிரமைகளை ஊக்குவிக்கவும், தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகரமான பங்கை நிராகரிக்க முற்பட்ட அனைத்துவித சந்தர்ப்பவாத இடது போக்குகளுக்கு எதிரான போராட்டத்துடன் மாற்றமுடியாத வகையில் சம்பந்தப்பட்டிருந்தது.

AFL-CIO ஆகியவை 1980களில் மிகப்பெரிய முறையில் தொழிலாள வர்க்கத்தை காட்டிக் கொடுத்தது, தொழிலாளர் அதிகாரத்துவம் தொழிலாளர்-நிர்வாகம் "பங்குதாரர்" என்ற முறையில் பெருநிறுவன கொள்கையை ஏற்றது, இன்னும் கூடுதலான முறையில் தேசிய பொருளாதாம், தேசியவெறி இவற்றை ஏற்றது பழைய தொழிற்சங்கங்கள் கிட்டத்தட்ட பெருநிறுவனங்களின் முகவாண்மைகளாக மாறிவிட்ட தன்மையை சுட்டிக்காட்டுகிறது. இந்நிலையில் இத்தகைய அமைப்புக்களின் அடிப்படையில் ஒரு தொழிற்கட்சிக்கான அமைப்புடன் புரட்சிகர நிலைப்பாட்டை சமரசப்படுத்துவது இனி சாத்தியமில்லை. எனவே மீண்டும் 1980களின் முடிவில், வேர்க்கர்ஸ் லீக், சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில் ஒரு தொழிற் கட்சிக்கான அழைப்பை மீள்ஒழுங்குபடுத்தி மற்றும் அது தொழிற்சங்கங்களை அடித்தளமாக கொண்டிருக்கவேண்டும் என்ற நிபந்தனையை கைவிடவும் செய்தது.

இறுதியாக, 1991ல் ஸ்ராலினிச அதிகாரத்துவத்தால் சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டதற்கு பின்னர், வேர்க்கர்ஸ் லீக்கும், நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவும் இந்தக் காட்டிக் கொடுப்பின் சாராம்சத்தை உட்கிரகித்து, காரியாளர்களை தொழிற்சங்கத் தலைவர்கள் மற்றும் அதிகாரத்துவமயப்படுத்தப்பட்ட தொழிற்கட்சிகளுக்கு எதிராக போராட்டம் நடத்துவதன் மீது தந்திரோபாய ரீதியில் மையப்படுத்தும் "லீக்குகள்" (கழகம்) என்ற அடிப்படையில் நாம் இயங்கிவந்த முழுக்கட்டமும் காலம்கடந்ததாகிவிட்டது என்ற முடிவிற்கு வந்தது. எமது சர்வதேச இயக்கம், கழகத்தை கட்சியாக உருமாற்றும் பணிகளை முன்முயற்சித்து, சோசலிச சமத்துவக் கட்சியை பிறக்க வைத்தது.

தொழிற் கட்சிக்கான கோரிக்கை அதன் பயன்பாட்டையும், புரட்சிகர உள்ளடக்கத்தையும் இழந்துவிட்டது. ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் பணி, நேரடியாக அதன் அமைப்புக்களை ஒரு சர்வதேசக் கட்சியின் பகுதிகளாக கட்டி எழுப்புவது என்றுள்ளது. இந்தப் போராட்டத்தில்தான் உலக சோசலிச வலைத் தளமானது ஒரு சோசலிசக் கலாச்சாரம் மற்றும் உண்மையான சர்வதேச தொழிலாளர் இயக்கம் இவற்றைக் கட்டுவதற்கான ஒரு மையக் கருவியாக வெளிப்பட்டது.

இந்த மீழாய்வின் மையக் கருத்தே, தொழிலாள வர்க்கத்தின் அரசியல் சுயாதீனத்திற்கான போராட்டத்தின் வேலைத்திட்ட முக்கியத்துவமும், இந்த போராட்டத்தில் எமது கட்சியின் உறுதியான பங்கு, மற்றும் அதன் சாரமான தொழிலாள வர்க்கத்தினுள் மார்க்சிசத்திற்கான, சோசலிச சர்வதேச முன்னோக்கிற்கான போராட்டம் என்ற கருத்துரு ஆகும்.

இரு-கட்சி முறையின் நெருக்கடி

அமெரிக்காவில் உள்ள பரந்த உழைக்கும் மக்களின் நோக்குநிலை மற்றும் அரசியல் மேற்கட்டுமானம் இரண்டிலும் மிகப்பெரிய மாற்றங்கள் மற்றும் எழுச்சிகளுக்கு தேவையான அரசியல் தயாரிப்புக்களை நாம் கட்டாயம் எதிர்பார்த்து, நனவாகச் செய்யவேண்டும். ஈராக்கிய போரின் தாக்கம், மற்றும் நிதி நெருக்கடியின் ஆழ்ந்த தன்மை தொழிலாள வர்க்கத்தின்மீது இன்னும் கூடுதலான வகையில் சுமத்தப்படும். அமெரிக்க முதலாளித்துவத்தின் பொருளாதார பிரச்சினைகள் பற்றி நிதானப் போக்குடன் ஆராயும் தன்மை உடைய முதலாளித்துவ வர்ணனையாளர்களிடையேகூட, அமெரிக்கா தன்னுடைய நிலைமையை ஒழுங்குபடுத்திக்கொள்ள வேண்டும் என்ற ஒருமித்த கருத்து வெளிப்பட்டுள்ளது; அதாவது, வணிக மற்றும் செலுத்துகை சமநிலைகளின் பற்றாக்குறைகளை குறைப்பதற்கு தன்னுடைய வரவுசெலவுத்திட்டத்தில் தீவிர வெட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும். அமெரிக்க மக்கள் தங்கள் நுகர்வை கூட தீவிரமாக குறைக்க வேண்டிய கட்டாயத்தை பற்றியும் சிலர் வெளிப்படையாக தெரிவித்துள்ளனர்.

இதன் விளைவு நடைமுறையில் எவ்வாறு இருக்கும் என்பதற்கான குறிப்பு, இந்த வாரம், அமெரிக்க விமான பிரிவிற்கும் அதன் எந்திர மேற்பார்வையாளர் தொழிற்சங்கத்திற்கும் இடையே ஏற்பட்ட ஒப்பந்தத்தை நீதிமன்ற தீர்ப்பு ஏற்கத்தக்கது அல்ல என்று கூறியுள்ளதில் இருந்து சுட்டிக்காட்டப்பட்டுள்ளது; அதன்படி தொழிற்சங்க உறுப்பினர்களுடைய ஊதியம் 6ல் இருந்து 35 சதவிகிதம் வரை குறைக்கப்பட்டு, ஆயிரக்கணக்கானவர்கள் வேலைகளை இழப்பர். நிறுவனத்தின் வேண்டுகோளான எந்திரவியலார்கள், விமானப் பணியாளர்கள், ஓய்வுபெற்றவர்கள் இவர்களுக்கான ஓய்வூதிய திட்டத்தை இரத்துசெய்து கொள்ளுவதற்கும் நீதிபதி ஒப்புதல் அளித்துள்ளார். இந்த தீர்ப்பு, ஒரே நேரத்தில் $1.3 பில்லியன் தொகை மதிப்பை ஊதியங்கள், நலன்கள், ஓய்வூதிய தொகைகள் ஆகியவற்றை தொழிலாளர்களிடம் இருந்து முதலாளிகளுக்கு மாற்றிவிட்டது.

இத்தகைய சட்டரீதியான திருட்டு, விமானப் போக்குவரத்து தொழிலில் நிகழ்ந்துள்ளமை முன்னோடியில்லாத வகையில் அலைபோல் ஊதியக் குறைப்பு மற்றும் பொருளாதரம் முழுவதும் தொழிலாளர்களின் ஓய்வுக்கால நலன்களை அழித்துவிடும் நிலையை தொடக்கிவிடும். இத்தகைய நடவடிக்கைகளினால் ஏற்படும் கோபம், அதிர்ச்சி இவற்றோடு தொழிற்சங்கங்கள் முற்றிலும் அடிபணிந்து நிற்கும் நிலையில், சில உண்மைகள் தங்களை உறுதிப்படுத்திக் கொள்ள தொடங்கும்; இதில் "பயங்கரவாதத்தின் மீதான போர்" என்பது உண்மையில் தொழிலாள வர்க்கத்தின் மீதான போரை அதிகப்படுத்துதல் என்று ஆகிவிடும்.

சமூகப் பதட்டங்களின் வளர்ச்சியானது, தற்போதுள்ள முதலாளித்துவ கட்சிகளுக்கு உள்ளேயும் அவற்றை சூழ்ந்துள்ள அமைப்புக்களிலும் தவிர்க்க முடியாமல் ஒரு பிரதிபலிப்பை காட்டும்; அந்த வழிவகை பரந்த சமூகப் போராட்டங்களின் வெடிப்பினால் அது இன்னும் பெரும் தீவிரத்தை அடையும். இந்த வழிவகையின் வேகத்தைப் பற்றி துல்லியமாக நம்மால் முன்கூட்டி கூறவியலாது; எத்தகைய வடிவங்களை அது எடுத்துக் கொள்ளும் என்றும் கூறமுடியாது. ஆனால் மார்க்சிச இயக்கம் வரலாற்று படிப்பினைகளில் இருந்து பற்றியெடுத்துள்ள சில கருத்துக்களை நம்மால் கூற முடியும்.

முதலாவதாக, ஆளும் செல்வந்த தட்டால் தன்னுடைய அரசியல் கருவிகளை மாற்றிக் கொள்ளவும், திருத்தியமைத்துக் கொள்ளுவதற்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும்; முடிந்தால் அத்தகைய சமூக இயக்கங்கள் வராமல் தவிர்ப்பதற்குப் பாடுபடும்; அவை வெளிப்படும்போதெல்லாம் அவற்றை முதலாளித்துவ அரசியல் கட்டமைப்பிற்குள்ளேயே வழிப்படுத்தப்பார்க்கும். நேரடி அடக்கு முறைக்கும் அரசு வன்முறைக்கும் குறைவு இருக்காது. ஆனால் அவை மட்டுமே போதாது. புதிய அரசியல் கண்ணிகள் மற்றும் பொறிகள் தயாரிக்கப்பட்டு பயன்படுத்தப்படும்.

தற்போதுள்ளது போல் எவ்வளவிற்கு செல்வாக்கிழந்து, நிலைகுலைந்துள்ள போதிலும், ஜனநாயகக் கட்சி அப்படியே ஒன்றும் இல்லாது போய்விடாது என்பதை வரலாறு எமக்கு பலமாக ஊகிக்கவைக்கின்றது. தொழிலாள வர்க்கம் திரட்டப்படுவதற்கும், அது சுயாதீனமாய் அணிதிரளவதை நசுக்கும் ஒரு கருவியாக அடக்கப்படுவதற்கு நீண்ட காலம் நல்லமுறையில் பயன்பட்டு வருகிறது மற்றும், முதலாளித்துவ ஆட்சியின் அஸ்திரவாரங்களைப் பாதுகாப்பதற்கும் அது பயன்பட்டிருப்பதால், ஆளும் தட்டிற்குள்ளே தங்களுடைய அரசியல் ஆதரவை இழக்காது இருப்பவர்களை பொறுத்தவரை இக்கட்சியை அழிந்துபோக விடமாட்டார்கள்.

அதே நேரத்தில், தொழிலாள வர்க்கத்தின் ஒரு பாரிய அளவிலான, அரசியல் தீவிரமயமாதல் போக்கு பலவிதமான மத்தியவாத (இடைநிலைவாத) கட்டங்களை கடப்பதை நாம் கட்டாயம் எதிர்பார்க்கலாம். இதன் மிக முன்னேற்றமடைந்த சக்திகள் புரட்சிக் கட்சியின் வேலைத்திட்டத்திற்கு நேரடியாக வென்றெடுக்கப்படுவர் மற்றும் வென்றெடுக்கப்பட முடியும் என்றாலும், பரந்த மக்கள் பெருவணிகத்தின் இரண்டு பெரிய கட்சிகளின் கொள்கைகளால் உண்டுபண்ணப்பட்ட முட்டுக்கட்டைக்கு இன்னும் நடைமுறை ரீதியான மற்றும் மேலோட்டமாக "யதார்த்தபூர்வ" தீர்வுகளை வழங்கும் வேலைத்திட்டங்களுடனும் போக்குகளுடனும், முதலில் தங்களது சொந்த அனுபவங்களை பெற்றுக்கொள்ளவேண்டியிருக்கும்.

உதாரணமாக, இது பசுமைக் கட்சிக்கு அல்லது இன்னும் தோன்றியிராத இடது சீர்திருத்தவாத உருவாக்கம் ஒன்றிற்கு செல்வாக்கின் வளர்ச்சி மற்றும் மக்களுடைய ஆதரவு என்ற வடிவத்தைக் கொள்ளக் கூடும். "இடது" மற்றும் மக்களை திருப்தி செய்யும் தன்மையில் ஓரளவு ஒத்துப் போகும் தன்மை ஜனநாயகக் கட்சியில் இருந்து முன்னேவராது என்று நாம் வலிந்துகூறவுமில்லை. உதாரணமாக, Service Employees Union தலைவரான, முன்னாள் மாணவர் தீவிரப்போக்கினரான ஆண்ட்ரூ ஸ்டெர்ன் மேற்பார்வையின் கீழ், AFL-CIO உயர் தலைமையிடத்தினுள்ளேயான சூழ்ச்சிக்கையாளல், புதிய மற்றும் பெரிய அளவிலான வர்க்கப் போராட்டங்களை முன்னெடுப்பதில் ஜனநாயகக் கட்சியின் நைந்து போயிருக்கும் தோற்றத்தை செப்பனிடுவதற்கான முயற்சிகளுடன் பிணைந்திருக்கிறது என்பதை நான் சமர்ப்பிப்பேன்.

இந்த வளர்ச்சியுறும் மற்றும் மாறிக் கொண்டிருக்கும் நிலைமையில், அரசியல் வலிமையுடனும், கூடுதலான ஆளுமையுடனும் சோசலிச சமத்துவக் கட்சி நுழைகிறது. எமது முழு சர்வதேச இயக்கமும் அரசியல் தெளிவு, கல்வியூட்டல் இவற்றுக்கான ஒரு சாதனமாக உலக சோசலிச வலைத் தளத்தினை கொண்டுள்ளதுடன், ட்ரொட்ஸ்கிச இயக்கத்தில் இதற்கு முன் இருந்திராத அளவிற்கு நம் சக்திகளை கட்டி எழுப்புவதற்கான ஒரு ஆயுதத்தையும் கொண்டுள்ளது. ஆனால் அதுவும், அதைத்திறமையாய் பயன்படுத்தும் கட்சியும் தொழிலாள வர்க்கத்தின் அரசியல் அரங்கில் மீண்டும் எழுச்சிபெறும்போது முன்வைக்கப்படும் கணிசமான அரசியல், தத்துவார்த்த மற்றும் அமைப்பு ரீதியான சவால்களை கட்டாயம் சந்திக்கும் திறனை பெற்றிருக்கவேண்டும்.

மிகச் சிக்கல் வாய்ந்த மற்றும் சவால்நிறைந்த நிறைந்த பணிகள் எம்முன்னே உள்ளது. எந்த ஊசலாட்டமும் இன்றி அல்லது அரசியல் அடிபணிவு இன்றி, நம்முடைய வேலைத்திட்டங்களுக்காகவும் கொள்கைகளுக்காகவும், நான்காம் அகிலத்தின் முழு வரலாற்று மரபுகளுக்காகவும் நாம் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும். அதே நேரத்தில் இடதுபுறம் நகர ஆரம்பிக்கும் பரந்த அளவிலான தொழிலாளர், மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் ஆகியோரின் தவிர்க்கமுடியாத குழப்பங்கள், முரண்பாடுகள் மற்றும் பிரச்சினைகள் இவை அனைத்தும் கருத்திற் கொள்ளப்பட வேண்டும். தொழிற்சங்க அதிகாரத்துவம் பல தசாப்தங்களாக செய்த துரோகத்தால் விளைந்த பிரச்சினைகளையும் கணக்கில் எடுத்துக் கொள்ளவேண்டும்; தொழிலாள வர்க்கத்தின் நனவில் இருந்து, அனைத்து வர்க்க நனவு மற்றும் போர்க்குணமிக்க போராட்டத்தின் தலையாய மரபுகள், ஒற்றுமை, தியாகம் இவை அனைத்தினையும் வேரோடகற்றுவதற்கான அதன் முயற்சியின் தாக்கத்தையும் கணக்கில் எடுத்துக் கொள்ளவேண்டும்.

பல சந்தர்ப்பங்களிலும் ட்ரொட்ஸ்கி கூறியவாறு, நமது ஆரம்பப்புள்ளி புறநிலை சூழ்நிலையும் அது தொழிலாள வர்க்கத்தின் மீது சுமத்தும் கடமைகளுமே அன்றி வர்க்கத்தினது தற்போதைய வர்க்க நனவின் மட்டம் அல்ல. கட்சி என்பது அரசியல் பிற்போக்குத் தன்மையை அகற்றும் ஒரு கருவியாக இருந்து வர்க்கத்தை முதலாளித்துவத்தின் நெருக்கடியால் கோரப்படும் கடமைகளின் உயர்ந்த இடத்திற்கு உயர்த்த வேண்டும். ஆனால் அவர் குறிப்பிட்டுள்ளபடி, அரசியல்ரீதியாக இல்லாமல் பயிற்றுவிக்கும் முறையில் வர்க்கத்தின் தற்போதுள்ள நனவிற்கு அடிபணிந்து தக்கமுறையில் தகமையுடனும் திறமையுடனும் இப்பணி மேற்கொள்ளப்படவேண்டும்.

எனவே மிகப் பொறுமையுடன் விவாதங்களும், உரையாடல்களும் தொழிலாளர்களுடனும், இளைஞர்களுடனும் நடத்துவதற்கு நாம் தயாராக இருக்க வேண்டும்; பசுமைக் கட்சியினர், நாடெர், நோம் சோம்ஸ்கிக்கள் போன்றவர்களின் உலகத்துடனும் இன்னும் இதுபோன்ற சக்திகளில் அவர்கள் கொண்டுள்ள பிரமைகளை கடந்து வருவதற்கு அவர்களுக்கு உதவும் தந்திரோபாய வழிமுறைகளை கண்டறியவேண்டும். எமது அரசியல் விவாதங்களை நம்முடைய மத்தியவாத, சீர்திருத்தவாத அரசியல் எதிர்ப்பாளர்களுடன் உறுதியாகவும், இறுதியாகவும் ஆனால் புறநிலை ரீதியாக, சாத்தியமானவரை சகோதரத்துவ உணர்வுடனும் மேற்கொள்ளவேண்டும்.

கொள்கையில் குன்றுபோல் நாம் உறுதியாக இருப்பதுதான், சோசலிசம், சர்வதேசியம், மற்றும் அரசியல் கட்சிகள், முதலாளித்துவ வர்க்க கட்சிகள் மற்றும் அவற்றின் அரசியலில் இருந்து விடுபட்டு தொழிலாள வர்க்கத்தின் அரசியல் சுயாதீனத்திற்கான போராட்டத்தை தேவையான வளைந்து கொடுக்கும் தன்மை, தந்திரோபாயம் மற்ற வழிவகைகளிலும் மேற்கொள்ள உதவும்.

ஜனநாயகக் கட்சிக்குள்ளும், சற்று வெளியேயும் நடக்கும் விவாதங்கள், விரிவுரைகள் ஆகியவற்றை கவனத்துடன் பின்தொடர்வது அவசியமானதாகும். இந்த அறிக்கையை பொறுத்தவரையில், நான் தற்பொழுது என்ன பேசப்படுகிறது, எழுதப்படுகிறது என்பதை பற்றிய மாதிரியைத்தான் ஆரம்பமாக அளிக்க முடியும்.

ஜனநாயகக் கட்சியினுள்ளே காணப்படும் விவாதத்தின் பொது மட்டம், ஓர் அறிவார்ந்த தன்மை, மற்றும் அரசியல் நிலைப்பாடு, இவற்றில் இருந்து காணும்போது, மிக மட்டமாக இருக்கிறது என்பது முதலில் கூறப்படவேண்டும். உண்மையில், இந்தக் கட்சி எப்பொழுதுமே ஓர் அறிவூற்றாக விளங்கியதில்லை. ஆனால் சோசலிசத்தையும், தொழிலாள வர்க்கத்தின் போராட்டத்தையும் நசுக்குவதுடன் தொடர்ந்துள்ள பொதுக் கலாச்சார இழிநிலை அமெரிக்காவிலேயே பழைய முதலாளித்துவ கட்சிக்குள்ளேயான குறிப்பிடத்தக்க சீரழிவை ஏற்படுத்தியுள்ளது என்பதில் ஐயமில்லை.

2004 தேர்தல்களின் பிரகடனங்களையும், கட்சியின் நல்வாய்ப்புக்கள் புதுப்பிக்கப்படுவதற்காக கூறப்படும் பல கருத்துக்களையும் ஆராயும்போது, கெர்ரியின் படுவீழ்ச்சியை புறநிலை வரலாற்று, சமூக அல்லது பொருளாதார வழிவகைகளுடன் தொடர்புபடுத்துவதற்கு கிட்டத்தட்ட முயற்சிகள் இல்லை என்பதை ஒருவர் காணலாம். பொதுவாக பகுப்பாய்வுகள் சில வாக்குகள் புள்ளிவிவரங்கள், வாக்கு எண்ணிக்கை போன்றவற்றை ஒப்புவிப்பதற்கு அப்பால் செல்வதில்லை; இவை கூட முன்னரே ஒருவர் கொண்டிருக்கும் கருத்துக்களுக்கேற்ப அரசியல் அச்சுக்களில் இருந்து தேவையானவற்றை எடுத்துக் கொள்ளும் வகைமுறைதான். அனைத்து சிக்கல்களும் தோற்றத்தில்தானே அன்றி உண்மையில் இல்லை, வெற்றிக்கான காந்தக்கல் சரியான வகையில் "புனைந்துரைப்பதுதான்" என்ற கருத்துக்கள் ஆழமாய் பதிந்துள்ள நம்பிக்கையும், பின்நவீனத்துவ பிதற்றலின் இழிவான செல்வாக்கையும் எதிரொலிக்கும், கட்சிக்கு ஒரு புதிய வகை "கட்டுக்கதை" கொடுத்துப் புதுப்பித்தலை ஒருவர் வருந்தத்தக்க முறையில் காணலாம்.

ஆனால் பல பிரிவுகளும் போக்குகளும் மேம்பட்டநிலையை எய்துவதற்கு ஒன்றோடொன்று போட்டியிடும் தன்மையையும் காண்கிறோம். வலது புறத்தில் ஜனநாயகக் கட்சி தலைமைக் குழு (Democratic Leadership Council -DLC) என்று கிளின்டன்கள், அல் கோர் மற்றும் கெர்ரி இருப்பதை பார்க்கிறோம். அவர்களுடைய பகுப்பாய்வு 2004 தேர்தலில் போதுமான அளவுக்கு வலதுபுறத்திற்குச் செல்லாததால்தான் கட்சி தோல்வியடைந்துள்ளது என்பதாகும்.

உதராரணமாக, அவர்கள் இஸ்லாமிய பயங்கரவாதத்தின்மீது புஷ் போலவே தானும் "கடுமையாக" இருப்பதாகவும், இராணுவ சக்தியை ஆர்வத்துடன் செயல்படுத்த தயாராக இருப்பதையும் கெர்ரி தெளிவுபடுத்தாததற்கு அவரை சாடியுள்ளனர். தன்னுடைய கொடியசைப்பு, போர்க்கால வீரர் போல நடந்து கொண்ட விதத்தை மாநாட்டில் காட்டியதற்கு அப்பால், அதுவும் ஓய்வு பெற்ற தரைப்படை தளபதிகள் மற்றும் கடற்படை தளபதிகள், இவர் பின் அரங்கில் அணிவகுத்ததைவிட கெர்ரி வேறு என்ன சாதித்திருக்க முடியும் என்பதை இவர்கள் தெரிவிக்கவில்லை. ஆனால் ஜனநாயகக் கட்சியின் நல்வாய்ப்புக்களை புதுப்பிப்பதற்கான தங்களுடைய "இதயத் தான மூலோபாயம்" என்பதின் பகுதியாக அவர்கள் இன்னும் கூடுதலான முறையில் 1970ல் இருந்த கட்சியின் போரெதிர்ப்பு போக்கை வெளிப்படையாக நிராகரித்து, இன்னும் தெளிவான முறையில் இராணுவ வாதத்தை தழுவியிருக்கவேண்டும் என்று கருதுகின்றனர். "கென்னடி-ட்ரூமன் மரபான வலிமையை காட்டும் சர்வதேசவாதம், இராணுவ வலிமையைக் கொண்டிருப்பதுடன் அதைப் பயன்படுத்த தயார் என்பதை, அதுவும் கூட்டுப்பாதுகாப்பிற்கு வலுவான முறையில் உதவ தயாராக இருப்பதன் புதுப்பதிப்புத்தான் நாங்கள்" என்று கூறியிருக்கவேண்டும் என்று ஜனநாயகக்கட்சி தலைமை குழுவின் முற்போக்கு கொள்கை நிலையத்தின் தலைவரும், அமைப்பின் முக்கிய கோட்பாடு இயற்றுபவராக இருப்பவருமான வில் மார்ஷல் தெரிவித்துள்ளார்.

இந்தக் குழுவின் முக்கிய பிரமுகர்கள் அனைவருமே மைக்கல் மூரிடம் விந்தையான, அடக்கமுடியாத வெறுப்புணர்வை காட்டுகின்றனர். மார்ஷலின் பின்வரும் வேதனைக் கூக்குரல் பொதுவான கருத்திற்கு உதாரணமாகும்: "ஹாலிவுட், கான் போன்ற புகழ்மிக்க பகுதிகள் மைக்கல் மூரைப் பாராட்டிக் கொள்ளட்டும்; ஜனநாயகக் கட்சியினர் இந்த நாற்றமிக்க அமெரிக்க-எதிர்ப்பு உணர்வு, சதிகார இடதுகளுடன் எந்தத் தொடர்பையும் கொள்ள வேண்டிய தேவையில்லை." இவர்கள், மூரை, போர் மற்றும் பெருவணிக எதிர்ப்புடன் தொடர்புபடுத்துவதால் அவர் மீது வெறுப்பை காட்டுகின்றனர்.

அவர்கள் தொழிலாள வர்க்கத்தை நல்லிணக்கப்படுத்தும் மக்களை திருப்திப்படுத்தும் கோஷங்களை பயன்படுத்தும் சகல பிரிவினரையும் நிராகரிக்கின்றனர். மாறாக அவர்கள் ஜனநாயகக் கட்சி வாதிகள் "நம்பிக்கை என்னும் மொழியையே" ஏற்றுக்கொண்டுள்ளதாக தெரிவிக்கின்றனர். ஜனநாயகவாதிகள் "தங்களுடைய முறையான விதிகளையும், சமய உரிமையையும் பாதுகாக்க வேண்டும் என்றும் American Civil Liberties Union (ACLU) போன்றோரின் மதச் சார்பற்ற சடங்குமுறைக்காரர்களுடன் தேவையில்லாமல் உடன்பாடு கொள்ளக் கூடாது" என்றும் மார்ஷல் எழுதியுள்ளார்.

ஜனாதிபதி கிளின்டனுடைய முன்னாள் உள்நாட்டுக் கொள்கை ஆலோசகராக இருந்த, மற்றொரு முக்கிய ஜனநாயகக்கட்சி தலைமை குழுவின் பிரமுகரான ப்ரூஸ் ரீட், ஜனநாயகக் கட்சிக்கு முன் வந்துள்ள சவால் பற்றிக் கூறுகிறார்: "ஒரு நீலவண்ணக் கட்சி எவ்வாறு சிவப்பு-வெள்ளை-நீல கட்சி (அமெரிக்க தேசிய நிறம்) என மீண்டும் மாறும் ?"

இந்த அடிப்படை நிலைப்பாடுதான் இன்னும் அப்பட்டமான முறையில் New Republic இன் ஆசிரியரான பீட்டர் பெயினர்ட்டினால், கடந்த மாதம் வாஷிங்டன் போஸ்ட்டில், வெளியிட்டுள்ள ஒரு கட்டுரையில் முன்வைக்கப்பட்டது. "தேசிய பாதுகாப்பு பற்றிய நம்பிக்கை மீட்டலுக்கான பனிப்போர் படிப்பினைகள்" என்ற தலைப்பு கொடுக்கப்பட்டுள்ள இந்தக் கட்டுரையில், கம்யூனிச எதிர்ப்பு ஜனநாயககட்சி தாராளவாதிகளின் முக்கிய அரங்காக 1940களில் ஏற்கப்பட்டிருந்தது என்றும், இந்த பனிப்போர்க்கால நிலைப்பாட்டை, ஒரு முன்மாதிரியாகக் கொண்டு இஸ்லாமிய தீவிரவாதம் என்று கூறப்படுவதை எதிர்க்கவேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். இவர் கம்யூனிச எதிர்ப்புக்காக ஜனநாயக நடவடிக்கைக்கான அமெரிக்கர்கள் என்ற புதிய வடிவத்தை உருவாக்கவேண்டும் என்றும் "இதை அமெரிக்காவின் சர்வாதிகார விரோதிக்கு எதிரான போராட்டம் ஒரு தாராள வாதத்தின் விருப்பமாக இருக்கவேண்டும்" என்றும் அவர் கூறியுள்ளார்.

இடது புறத்திலிருந்து தீவிரம் குறைந்து விட்ட புதிய பேரத்தின் சீர்திருத்தவாதத்தின் எஞ்சிய படிவங்களில் இருந்து, எதிர்ப்பு அரசியல் வரை கருத்துக்கள் வெளிப்பட்டுள்ளன. இங்கு நாம் உண்மையான சீர்திருத்தங்கள் இல்லாத சீர்திருத்தவாதம் பற்றிக் காண்கிறோம்; மரபு வழியிலான முதலாளித்துவ அரசியலை வளர்ப்பதற்கான எதிர்ப்பு மொழியை காண்கிறோம். பிந்தையதின் குறிப்பிடத்தக்க குறைகாணும் உதாரணம் Mother Jones- ன் சமீபத்திய இதழில் முன்னாள் வியட்நாம் எதிர்ப்பாளரும், உண்மையான அரசியல் அயோக்கியரும், தற்போதைய பேராசிரியருமான டோட் கிட்லின் எழுதிய கட்டுரை ஆகும். இவர் கெர்ரியின் பிரச்சாரத்தை மக்கள் எதிர்ப்பின் இணைப்பு மற்றும் ஜனநாயகக் கட்சி "இயந்திரம்" என்ற ஒரு புதிய நிகழ்விற்கு கட்டியம் கூறி வரவேற்கும் நிகழ்வு என்றும் பாராட்டியுள்ளார்.

கிட்லின் எழுதுகிறார்: "தான் ஊக்குவித்திருந்த வெறுப்புணர்வின் விளைவாக, புஷ் "இடது அல்லது தாராளவாதம், அல்லது முற்போக்குவாதம் அல்லது நீங்கள் எப்படி அழைக்க விரும்பினாலும், மாறுபட்டிருந்த கருத்துக்களை ஒரேவிதமான எழுச்சி பெற்றுள்ள குடியரசாக கொண்டுவந்து, வரலாற்றளவில் ஒரு உயிர்த்தெழுதலுக்கான ஒரு முன்னேற்றத்திற்கு திறந்துவிட்டார். ஜனநாயக கட்சியின் பழைய பள்ளியின் உறுதியான காரியாளர்களையும், புதிதாக உந்துதல் பெற்ற செயல்வீரர்களையும், பழைமையில் ஊறிப்போனவர்களையும், புதிதாக வந்துள்ளவர்களையும், தொழிற்சங்கத்தை நம்பியவர்களையும், வாக்குகள் சேகரிப்பவர்களையும், அவர்கள் ஒன்றாகச் சேர்ந்துகொள்ளாவிட்டால், தனித்தனியே நிச்சயமாக தூக்கிலிடப்படுவர் என்று நம்பவைத்தார்...

"எனவே 2004ல், ஒரு பரந்த, நலிவுற்றிருந்த புதுப்பிக்கப்பட்ட இயக்கம் மறுபிறவி எடுப்பதற்கு கஷ்டப்பட்டுக் கொண்டிருந்த ஒரு ஜனநாயகக் கட்சியை சந்தித்தது; இரண்டு சக்திகளும் ஒன்றை ஒன்று ஏறிட்டுப் பார்த்து எப்படி மற்றதை வீழ்த்தி புழுதியில் தள்ளலாம் என்று சிந்திப்பதற்கு பதிலாக, நண்பர்களாக வேண்டும் என்று முடிவு செய்து, அரசியலை மீண்டும் புதிதாக கண்டுபிடிப்பதற்காக -அதுவே ஒரு சிறு பணி அல்ல- உண்மையில் அமெரிக்காவை புதிதாக உருவாக்க கூடினார்கள்..."

போராதரவு கோடீசுவரரான கெர்ரியின் பிரச்சாரத்தை இகழ்விற்குரிய முறையில் அளிக்கும் முயற்சியை ஒரு புறம் ஒதுக்கி வைத்துவிட்டுப் பார்த்தால், கில்ட்டின் அக்கட்சியின் மிகப்பிற்போக்கான கூறுபாடான, புஷ் நிர்வாகத்தின் யுத்தத்திற்கு எதிரான மக்கள் போரெதிர்ப்பு உணர்வை செயலற்ற தன்மையாக்கும் வகையில் வேறுவிதத்தில் திசைதிருப்பியதில் கொண்ட வெற்றியை வெளிப்படையாகவே பாராட்டுகிறார். மற்றும் இதனை எதிர்காலத்திற்கான மாதிரி எனவும் திட்டவட்டமாக மேற்கோள் காட்டுகிறார். 1960களின் போரெதிர்ப்பு முறைக்கும் அக்காலத்திய ஜனநாயகக் கட்சியின் எந்திரத்துக்கும் இடையே இருந்த பூசலின் அரசியல் சோகம் ததும்பிய தன்மையை பற்றி உட்குறிப்பாக புலம்புகிறார்; அந்த வெளிப்பாட்டின் மிருகத்தனமான வெளிப்பாடாக சிக்காகோ நகரசபை தலைவர் ரிச்சர்ட் டாலே 1968 ஜனநாயகக் கட்சியின் மாநாட்டிற்கு வெளியே நிகழ்ந்த ஆர்ப்பாட்டங்கள் மீதான போலீஸ் கலகம் போன்ற தாக்குதலை நடத்தியிருந்தார். வியட்நாமில் ஏகாதிபத்திய படுகொலைக்கு முக்கிய பொறுப்பாளர்களாக இருந்தனர் என்பதால் ஜோன்சன் நிர்வாகத்திற்கும் ஜனநாயகக் கட்சிக்கும் எதிராகவே போர் எதிர்ப்பு இயக்கம் வழிநடத்தப்பட்டிருந்து என்பதை அவர் கவனிக்கவில்லை.

இறுதியாக, டிசம்பர் மாதம் American Prospect இதழில் வெளிவந்த கட்டுரைகள் சிலவற்றை நான் மேற்கோள் காட்டுவேன்; இந்த ஏடு ஜனநாயகக் கட்சியின் தலைமைக் குழுவிற்கு எதிரான தாராளவாத மரபுவழி வகைப்பட்டதும், இதன் சக நிறுவனர் கிளின்டனுடைய தொழிலாளர் செயலாளர் ரோபர்ட் ரீஷ் ஆவார். இந்தக் கட்டுரைகளின் பொது நிலைப்பாடு, சற்று மாறுபட்ட கருத்துக்கள், வேறுபட்ட வலியுறுத்தல்களுடன், ஜனநாயகக் கட்சி தன்னுடைய தாராள சீர்திருத்தவாத தலைமையை மீண்டும் ஏற்றுக் கொள்ளவேண்டும் என்றும் மக்களை திருப்தி செய்யும் வகையில் தொழிலாள வர்க்கத்தின் பொருளாதார நலன்களை பெருக்கும் வகையில் அழைப்புக்கள் விட வேண்டும் என்பதாகும்.

இக்குழுவின் இத்தகைய நவீன சீர்திருத்தவாதத்தின் வெற்றுத்தன்மையின் உணர்வை ஆலன் பிரிங்க்லி என்னும் தாராளவாத வரலாற்றாளரால் எழுதப்பட்டுள்ள முக்கிய கட்டுரையில் இருந்து, எடுக்கப்பட்ட பின்வரும் பகுதியிலிருந்து உணரலாம். "உழைக்கும் மக்களுடன் மீண்டும் தொடர்பு கொள்ளுக" என்ற தலைப்பில் அவர் எழுதுகிறார்:

"ஜனநாயகக் கட்சியினர் அதிகமாக தங்களுடைய கவனத்தை கலாச்சாரத்தில் இருந்து விலக்கி வர்க்கத்தின் பின்னே செலுத்தவேண்டும். ...ரூஸ்வெல்ட், கலாச்சாரத்தை பற்றிப் பேசாமல் வர்க்கத்தை பற்றிப் பேசியே தேசிய சட்ட மன்றத்தில் ஜனநாயக கட்சியினர் மிகப் பெரிய பெரும்பான்மையுடன், இரண்டு மகத்தான வெற்றிகளைப் பெற்றார்.... சில நேரங்களில், ரூஸ்வெல்ட் வர்க்கப் பூசல்களைப் பற்றி பேசிய முறை அமெரிக்க ஜனாதிபதிகளின் வரலாற்றிலேயே முன்னொருபோதும் இல்லாத வகையில் இருந்தது. 1936ம் ஆண்டு நாட்டின் நிலைபற்றிய உரையில், 'பேராசை பிடித்த அதிகாரத்தில் உறுதியானவர்களின் வெறுப்பை நாம் சம்பாதித்துக் கொண்டுள்ளோம். அவர்கள் தங்களுடைய தன்னலம் சார்ந்த அதிகாரம் மீட்கப்படவேண்டும் என்று விழைகின்றனர். ...அவர்களுக்கு இடம் கொடுத்தால், அவர்கள் கடந்தகால சர்வாதிகார போக்கைத்தான், தங்களுக்கு அதிகாரத்தையும் பொது மக்களுக்கு அடிமைத்தனத்தைதையும் கொடுக்கும் போக்கைத்தான் எடுப்பர்" என்று கூறியுள்ளார்.

இப்பொழுது தோன்றியுள்ள ஜனநாயகவாதிகளுக்கு முற்றிலும் அந்நியமான கருத்தான, ரூஸ்வெல்ட்டின் "பேராசைமிக்க அதிகாரத்தில் உறுதியானவர்கள்" என்ற தாக்குதலுக்கு, உடனடியாகச் சென்று, பிரங்க்லி எழுதுகிறார்: "இன்றைய ஜனநாயகக் கட்சி அத்தகைய கடும் சொற்களை ஏற்கவேண்டும் என்றோ, பெரு வணிக உலகத்தின் எதிரி என்று தன்னைச் சித்தரிக்கவேண்டும் என்றோ எவரும் எதிர்பார்க்கவில்லை."

இவருடைய வாசகர்கள் "ஆண்டவரே காத்துக்கொள்ளும்" என்று உட்குரலில் கூறும்போதே, இதை எழுதியவர் சிலுவைக்குறி போட்டுக் கொள்ளக்கூடும் என்று ஒருவர் கற்பனை செய்வார்.

பிரிங்க்லி, "பயங்கரவாதத்தின் மீதான போர்" என்ற கருத்திற்கு ஒப்புதல் கொடுத்தும், ஜனநாயகக் கட்சியினரை "இராணுவக் கலாச்சாரம், தேசிய கெளரவம் இவற்றுடன் இயைந்த உறவை" வளர்த்துக் கொள்ளுமாறும் வலியுறுத்தியுள்ளார். "ஜனநாயகக் கட்சியை" மறுபடியும் அமைத்தல் என்பதற்கு "ஒருவேளை சில தசாப்தங்கள் கூட ஆகிவிடலாம்" என்ற கருத்தை தெரிவிக்கையில் தன்னுடைய சீரழிந்த அவநம்பிக்கையை அவர் புலப்படுத்தியுள்ளார்.

புஷ் நிர்வாகத்தின் நெருக்கடி, தாக்குதலை பெறக்கூடிய அதன் அபாய நிலை பற்றிய முன்கணிப்பும், தக்க ஆய்வும், ஆச்சரியப்படும் விதத்தில், பழைய பனிப்போர்க்கால தாராளவாதியான ஆர்தர் ஷ்லெசிங்கர் ஜூனியரால் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த முகாமில் பல நேரமும் அவர் இருந்திருக்கிறார்; எப்படி "தாக்குதலுக்கு இரையாகாத" நிர்வாகங்கள் பெரும் நிகழ்வுகளின் தாக்கத்தால் சரிந்து இடிந்துள்ளன என்பதையும் கண்டுள்ளார். "வாய்ப்புக்கள் தட்டுகின்றன" என்ற தலைப்பில் ஒரு கட்டுரையில் அவர் எழுதுகிறார்: "சிறிது காலத்திற்குப் பின்னர், அமெரிக்க மக்கள், மதம் சார்ந்த வலதுசாரிகள் கூட ஈராக்கை பற்றிக் களைப்படைந்துவிடுவர். 2006 இடைக்கால தேர்தல்களை ஒட்டி இதுவே நேரலாம் என்று நான் தீர்மானிக்கிறேன். போர்க்கால ஜனாதிபதிகளுக்கு உத்திரவாதம் அளிக்கப்பட்ட விலக்குகள் இருந்ததே கிடையாது. கொரியப் போர் ஜனாதிபதி ட்ரூமனை 1952ல் பின்வாங்கச் செய்தது. வியட்நாம் போர் ஜனாதிபதி ஜோன்சனை 1968ல் பின்வாங்கச் செய்தது."

இன்னும் சீரழிவுக்கு உள்ளாகியிருந்த கட்டுரைகளில் ஒன்று மூத்த ஆசிரியர் Garance Franke-Ruta வால் எழுதப்பட்டுள்ளது. தன்னுடைய, "2004 தேர்தல்களுக்குப் பின்னர்: அமெரிக்க தொழிலாள வர்க்கத்தை எதிர்கொண்டுள்ள அரசியல் சவால்கள்" என்ற கட்டுரையில் (அமெரிக்க ஜனநாயகத்தின் நெருக்கடியில் சேர்க்கப்பட்டுள்ளது), டேவிட் நோர்த் எழுதியுள்ளார்: "தங்களுடைய உண்மையான பொருள்சார் நலன்களையும்விட "மதிப்புகளுக்காக" வாக்காளர்கள் குடியரசுக் கட்சிக்கு அளித்தனர் என்று கூறுதல் விஞ்ஞான ரீதியான சமூக-அரசியல் பகுப்பாய்விற்கு பதிலாக விளங்கா மதரீதியான புதிரைக் கொண்டு வருவதற்கு ஒப்பாகும்."

இதுதான் துல்லியமாக Franke-Ruta இன் நிலைப்பாடாகும்; "அடிப்படையில் மில்லியன் கணக்கான மக்கள் தமது வாழ்க்கையில் எதை பெரிதாக மதிக்கின்றார்கள் என்பதை புரிந்து கொள்ளாது அரசியலை பார்க்கும் பொருள்முதல்வாத நோக்கை" இவர் தாக்குகிறார். "...மேலும் இந்த முற்றிலும் தன்னலமான பொருள்முதல்வாத பார்வை மனித இயல்பை தவறாகத்தான் புரிந்து கொள்ளுகிறது." என அவர் குறிப்பிடுகின்றார்.

இறுதிச் சொல் ரெய்க்கிற்காக ஒதுக்கி வைக்கப்பட வேண்டும்; இவருடைய இறுதிக் கட்டுரை பொருளாதார மக்கள்வாதத்திற்கு (Economic Populism) அழைப்பு கொடுக்கப்பட வேண்டும் என்று கூறுகிறது. அவர் எழுதுகிறார்: "மீண்டும் ஜனநாயகக் கட்சியினர், தங்கள் நிலைப்பாடு பற்றிய 'மறு சிந்தனையில்' ஈடுபட்டுள்ளனர். முந்தைய தோல்விகளுக்கு பின்னர், அத்தகைய 'மறு சிந்தனைகள்' வலதுபுற மாற்றங்களைத்தான் விளைவுகளாகக் கண்டன. ஜனநாயகக் கட்சியினர் புறநகரத்தில் வசதியுடன் இருக்கும் வாக்காளர்களை வலைவிரித்துப் பிடிக்க முயன்று கட்சியின் தொழிலாளவர்க்க வேர்களில் இருந்து ஒதுங்கி நின்றனர்... ஜனநாயகக் கட்சியினர் தீவிர ஆர்வத்துடன் சமூக நீதியை பற்றிப் பேசியதுண்டு; அதுதான் ஜனநாயகக் கட்சியின் ஒழுக்கநெறி மையத்தானமாக இன்னும் இருக்க வேண்டும்.... ஜனநாயகக் கட்சி கலாச்சார மக்கள்வாதம் என்ற கருத்திற்கு எதிராகப் போரிட ஒரே வழி உறுதியான நம்பிக்கையில் ஆழ்ந்துள்ள பொருளாதார மக்கள்வாதம்."

இத்தகைய ரெய்க்கின் நிலைப்பாடு பற்றி சில கருத்துக்கள் கூறத்தான் படவேண்டும். முதலில், அமெரிக்க முதலாளித்துவம் மந்தநிலை இருந்தபின்னரும் கூட ரூஸ்வெல்ட் காலத்திலும், 1960 களிலும் சில சமூக சீர்திருத்தங்களை மேற்கொண்டிருந்ததை, இன்று தொடர முடியாத நிலையில் உள்ளது. இருந்தபோதிலும்கூட, ஜோன்சனுடைய "வறுமையின் மீதான போர்" என்பது கிட்டத்தட்ட ஒரு குறைப்பிரசவம் போல் ஆகிவிட்டது. எனவே, கட்டாயத்தின் காரணமாக, ரெய்க், மற்றும் அவரைப் போன்றவர்களின் சமூக சீர்திருத்த வழிக்கு திரும்பவேண்டும் என்ற உரைகளில் அதிகப் பொருள் ஏதும் கிடையாது.

மிக இழிந்த முறையில் தன்னுடைய சுகாதாரப் பாதுகாப்பு நலன்கள் சீர்திருத்தத்தை கைவிட்டு, சமூகநல திட்டங்களை ஒரு கூட்டரசின் பொறுப்பு இல்லை என அழித்து, "அரசாங்கத்தின் சகல அதிகாரத்தின் முடிவு" என்று பிரகடப்படுத்திய நிர்வாகத்தின் அரசியல் பொறுப்பில், ரெய்க்கிற்கும் பங்கு உள்ளது என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.

எப்படியும், ஜனநாயகக் கட்சியை பொதுமக்களை ஈர்க்கும் பொருளாதார மக்கள்வாதத்திற்கு திருப்புதற்கு தீவிர முயற்சி ஏற்பட்டால், அது உட்பிளவுகளை உருவாக்கி பெரும் பிளவை ஏற்படுத்தக் கூடிய வகையில் விரைவாக எரியூட்டும்.

இவை அனைத்தும் இருந்தபோதிலும்கூட, ஜனநாயகக் கட்சிக்குள்ளேயே முன்வைக்கப்படும் பல நிலைப்பாடுகளும் ஓர் அரசியல் முக்கியத்துவத்தை கொண்டுள்ளவை. எப்படியும் ஒரு விதத்தில் இந்த தன்மையை புதுப்பித்து தொழிலாள வர்க்கத்தை மீண்டும் திசைதிருப்பும் முயற்சிகளைத்தான் அவை பிரதிபலிக்கின்றன. மேலெழுந்தவாரியாக ஜனநாயகக் கட்சிக்கு புறத்தே உள்ள தீவிரவாதக் குழுக்கள், போக்குகள் இவற்றிடையே இத்தகைய முயற்சிக்கு உதவுவதற்கான ஆதரவு இல்லாமற் போய்விடாது.

எனவேதான் எமது காரியாளர்களுக்கு மார்க்சிச இயக்கத்தின் கோட்பாடுகள் மற்றும் அதன் வரலாறும், சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் போராட்டங்கள் பற்றிய படிப்பினைகளை கற்பிப்பது இன்று மிக முக்கியமானதாகும். அத்தகைய உட்தயாரிப்பு உலக சோசலிச வலைத் தளத்தின் வளர்ச்சியுடன் நெருக்கமாக ஒன்றிணைந்து, இன்னும் ஆழமாக தொழிலாள வர்க்கத்தை நோக்கி உறுதியாக திரும்புவதுடன் இணைந்திருக்கும்.

Top of page