World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Killing of LTTE leader raises danger of war in Sri Lanka

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவரின் கொலை இலங்கையில் யுத்த ஆபத்தை உயர்த்துகிறது

By Vilani Peiris and K. Ratnayake
11 February 2005

Use this version to print | Send this link by email | Email the author

தமிழீழ விடுதலைப் புலிகளின் உயர்மட்ட தலைவர்களில் ஒருவர் கடந்த திங்களன்று கிழக்கிலங்கையில் படுகொலை செய்யப்பட்டமை, தீவு மீண்டும் உள்நாட்டு யுத்தத்திற்கு திரும்புவதற்கான ஆபத்தை உக்கிரப்படுத்தியுள்ளது. இந்தப் படுகொலையை இலங்கை அரசாங்கம் கண்டனம் செய்கின்ற அதேவேளை இந்தத் தாக்குதலில் இராணுவம் சம்பந்தப்பட்டிருப்பதாக விடுதலைப் புலிகள் குற்றம் சாட்டியுள்ளதோடு, இது "மனிதாபிமான நிவாரண நடவடிக்கைகளிலும்" மற்றும் "சமாதானப் பேச்சுக்களை மீண்டும் ஆரம்பிப்பதிலும்" கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

கிழக்கில் உள்ள விடுதலைப் புலிகளின் அரசியல் தலைவரான இ. கெளசல்யனும் இன்னும் மூன்று விடுதலைப் புலி உறுப்பினர்களும் வடமத்திய மாகாணத்தில் உள்ள வெலிகந்தைக்கு அருகில் அரசாங்கக் கட்டுப்பாட்டுப் பிரதேசத்திலேயே கொல்லப்பட்டுள்ளனர். கெளசல்யனுடன் பயணித்துக்கொண்டிருந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான ஏ. சந்திரநேரு கயாங்களுக்குள்ளாகி பின்னர் வைத்தியசாலையில் உயிரிழந்தார். சந்திரநேருவின் இரு பொலிஸ் மெய்பாதுகாப்பாளர்களும் மற்றும் ஐந்தாவது விடுதலைப் புலி உறுப்பினரும் மட்டுமே உயிர் தப்பினர்.

கெளசல்யன், 2002 பெப்பிரவரியில் கொழும்புக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் யுத்த நிறுத்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டதில் இருந்து படுகொலை செய்யப்பட்ட முக்கிய சிரேஷ்ட விடுதலைப் புலி உறுப்பினராவார். விடுதலைப் புலிகளின் அறிக்கையின்படி, அவர் வடக்கின் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டிலான கிளிநொச்சியில் விடுதலைப் புலி தலைமைத்துவத்துடன் நிவாரண நடவடிக்கைகளைப் பற்றி கலந்துரையாடிய பின்னர் அங்கிருந்து கிழக்கு நோக்கித் திரும்பிக்கொண்டிருந்தார். இலங்கையில் குறைந்தபட்சம் 40,000 உயிர்களைப் பலிகொண்டதோடு பல கரையோரப் பிரதேசங்களில் பேரழிவுகளை ஏற்படுத்திய டிசம்பர் 26 சுனாமி, கிழக்கு கரையோரத்தை முழுவீச்சில் அழித்துள்ளது.

மிகத் தெளிவாக யுத்த நிறுத்தத்தை கீழறுப்பதை இலக்காகக் கொண்டிருந்த இந்தப் படுகொலை, புதன் மற்றும் வியாழக் கிழமைகளில் மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் பொது கடையடைப்பைத் தூண்டிவிட்டது. இந்த எதிர்ப்புக்கள் வன்முறை உணர்வையும் மற்றும் இந்த ஆத்திரமூட்டல் படுகொலை மோதலை ஊக்குவிக்கும் என்ற பீதியையும் சக்திவாய்ந்த முறையில் வெளிப்படுத்தின. சுனாமி பேரழிவை அடுத்து, பல தமிழ், முஸ்லிம் மற்றும் சிங்கள மக்களும் ஒருவருக்கொருவர் உதவிக்கொண்டதோடு 20 ஆண்டுகால உள்நாட்டு யுத்தம் மீண்டும் தொடருவதையும் அவர்கள் விரும்பவில்லை.

கொலை நடந்த அடுத்த நாள், இராணுவம் கிழக்கு மாகாணத்தை "சிவப்பு எச்சரிக்கையில்" இருத்தியது மேலும் பதட்ட நிலைமைகளை உக்கிரமாக்கியது. விடுதலைப் புலிகளுக்கு சார்பான தமிழ்நெட் இணையத் தளத்தின் செய்தியின்படி, விசேட அதிரடிப் படை பொலிசார் மாந்தனை அகதி முகாமில் மக்கள் கறுப்புக் கொடியேற்றுவதை தடுத்தனர். அதிரடிப் படையினர் மட்டக்களப்பு மாவட்டத்தின் கோமாரி என்ற இடத்தில் விடுதலைப் புலி உறுப்பினர் ஒருவர் கொடியேற்றும் போது அவரையும் தாக்கியுள்ளனர்.

புதனன்று பதட்டம் நிறைந்த பாராளுமன்றக் கூட்டமொன்றில், இந்தக் கொலைக்கு அரசாங்கம் பொறுப்புச் சொல்லவேண்டும் என தமிழ் கூட்டமைப்பு உறுப்பினர்கள் குற்றம்சாட்டினர். தமிழ் கூட்டமைப்பின் தலைவர் ஆர். சம்பந்தன், இந்தத் தாக்குதல் முன்கூட்டியே சிறப்பாக ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது என்றும், பல இராணுவ முகாம்களுக்கு நெருக்கமான பிரதேசத்திலேயே இடம்பெற்றுள்ளது என்றும் சுட்டிக்காட்டினார். "இராணுவத்தின் சக்திவாய்ந்த கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் இந்தத் தாக்குதல் எவ்வாறு நடந்தது? இராணுவத்தின் இருப்பையிட்டு கொஞ்சமும் பீதியில்லாமல் இந்தத் தாக்குதலை யாரால் தொடுக்க முடியும்? எனக் கேள்வியெழுப்பிய அவர்: "இந்தத் தாக்குதல் சமாதான முன்னெடுப்புகளை கவிழ்ப்பதையே இலக்காகக் கொண்டுள்ளது," எனவும் குறிப்பிட்டார்.

இந்தப் படுகொலைகளில் எந்தவொரு தலையீட்டையும் இராணுவம் நிராகரிக்கின்றது. மட்டக்களப்பு பிராந்திய கட்டளைத் தளபதி வஜிர விஜேகுணவர்தன, இராணுவ வழித்துணையுடன் பயணிப்பதற்கு இராணுவ ஆலோசனையைப் பெற கெளசல்யன் தவறிவிட்டார் என குற்றஞ்சாட்டினார். ஆனால் இந்த அறிக்கை பல கேள்விகளை எழுப்புவதோடு விடையும் அளிக்கின்றது. வெலிகந்தை இராணுவ முகாமுக்கு அருகில் உள்ள ஒரு பிரதேசத்திற்குள் தாக்குதல்காரர்களால் ஊடுருவ முடிந்தது எப்படி? சந்திர நேருவின் வாகனத்தில் பயணிப்பது யார் என்பதையிட்டு அவர்களுக்கு தெரியவந்தது எப்படி? யுத்த நிறுத்த உடன்படிக்கையின் கீழ், அரசாங்கக் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் விடுதலைப் புலி உறுப்பினர்கள் பயணிக்கும்போது இராணுவத்திற்கு அறிவிக்க வேண்டும்.

இராணுவத்தின் மறுப்பு பற்றி கொழும்பு ஊடகங்களும் கூட கேள்வியெழுப்பியுள்ளன. டெயிலி மிரர் பத்திரிகை, "இந்த சம்பவம் அரசாங்கக் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் இரு இராணுவ முகாம்களுக்கு இடையில் நடந்துள்ளதுடன், கெளசல்யன் குழுவினர் நிராயுதபாணிகளாகவே சென்றார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகவே, பாதுகாப்புப் படைகள் இந்த சம்பவத்தில் கொஞ்சமாவது பொறுப்பேற்றிருக்க வேண்டும்," என கருத்து வெளியிட்டுள்ளது. முன்னைய மோதல்கள் மற்றும் தாக்குதல்களின் காரணமாக இந்தப் பிரதேசம் இறுக்கமான இராணுவக் கண்காணிப்பின் கீழ் உள்ளது.

இலங்கை தொலைக்காட்சி அறிக்கைகளின்படி, விடுதலைப் புலிகளில் இருந்து பிரிந்து சென்ற, கருணா என்ற பெயரால் பிரசித்தி பெற்ற வி. முரளீதரன் தலைமையிலான குழு இந்தப் படுகொலைகளுக்கு பொறுப்பேற்றுள்ளது. விடுதலைப் புலிகளின் கிழக்குக் கட்டளைத் தளபதியாக இருந்த கருணா, கிழக்குக்கான செலவுகளில் "வடக்கு" தலைவர்கள் ஏகபோக அதிகாரம் கொண்டுள்ளதாக குற்றம் சாட்டி கடந்த மார்ச் மாதம் பிரிந்து சென்றார். வடக்கு தலைமைத்துவத்தை தாக்குவதில் இராணுவம் கருணா குழுவுடன் சேர்ந்து செயற்படுகிறது என்ற விடுதலைப் புலிகளின் குற்றச்சாட்டை இராணுவம் நிராகரித்துள்ளது. ஆயினும், அது கடந்தாண்டு அம்பலத்திற்கு வந்தது. பிளவை அடுத்து, புகலிடம் கொடுத்தல் மற்றும் கருணாவுடனும் மற்றும் அவரது குழுவினருடனும் கொழும்பில் கலந்துரையாடல் செய்தல் உட்பட விடுதலைப் புலிகளின் எதிரிகளை திறமையுடன் கையாள்வதில் இலங்கை இராணுவப் புலனாய்வு பிரிவுக்கு ஒரு வரலாறே உண்டு.

டெயிலி மிரர் பத்திரிகையின் ஒரு கட்டுரை, கருணாவுடனான இராணுவத்தின் கூட்டுக்கு மேலும் ஆதாரங்களை வழங்குகிறது. இந்தக் குழு பொலன்னறுவை மாவட்டத்தின் ஒரு தூரக் கிராமமான ஓமடியாமடுவில் தங்கியிருப்பது இராணுவத்திற்கு தெரியும். கருணாவுக்கு நெருக்கமான பிள்ளையான் மற்றும் இளைய பாரதி ஆகிய இருவர் மட்டக்களப்பு நகரில் இருந்து இயங்குகின்றனர். "இலங்கை ஆயுதப் படைகள் தளம் அமைத்துள்ள புறநகர்ப் பகுதிக்கு அருகாமையில், இராணுவ புலனாய்வு பிரிவு தளம் அமைத்துள்ள 'பொற்பதி முகாமில்' இருந்தே அவர்கள் இயங்குவதாக அந்த இருவரையும் அறிந்த மட்டக்களப்புவாசிகள் தெரிவிக்கின்றனர்," என அந்தக் கட்டுரை குறிப்பிடுகின்றது.

அதிகரித்துவரும் இராணுவப் பதட்டநிலைமைகள்

ஐ.நா செலாளர் நாயகம் கொபி அனான் அறிக்கையொன்றை வெளியிடத் தள்ளப்பட்டதிலிருந்து கெளசல்யனின் படுகொலையுடனான தொடர்புகளை கோடிட்டுக் காட்டியுள்ளது. ஒரு பேச்சாளரின்படி, "யுத்த நிறுத்த உடன்படிக்கையை தகர்க்கக் கூடிய நடவடிக்கைகளை தவிர்த்து அனைவரும் அமைதியையும் கட்டுப்பாட்டையும் கடைப்பிடிக்க வேண்டும்" என அனான் கேட்டுக்கொண்டுள்ளார். இலங்கையில் பெயரளவிலான சமாதான முன்னெடுப்புகள் பொறிவின் விழிம்புக்கே வந்துவிட்டன என்ற பீதி பூகோள வல்லரசுகள் மத்தியில் நிலவுவதையே அனானின் கருத்துக்களின் பின்னணியில் தங்கயிருக்கின்றது.

சுனாமியை அடுத்து, இந்தப் பேரழிவு சமாதானப் பேச்சுக்கள் மீண்டும் ஆரம்பிக்கப்படுவதற்கும் உள்நாட்டு யுத்தத்திற்கு பேச்சுவார்த்தை மூலம் முடிவு கட்டுவதற்குமான நிலைமைகளை உருவாக்கிவிடும் என பல ஆய்வாளர்கள் கருத்துத் தெரிவித்திருந்தனர். ஹட்டன் நஷனல் வங்கியின் பங்கு தரகர்களின் தலைமை ஆய்வாளர் ஹசித பிரேமரட்ன எடுத்துக்காட்டாக பின்வருமாறு குறிப்பிட்டார்: "யுத்த எதிர்பார்ப்பு பின்வாங்கியிருப்பதானது கெட்டகாலத்திலும் நன்மை தரும் அம்சமாகும். அது முதலீட்டாளர்களின் நம்பிக்கையை புதுப்பித்துள்ளது... அரசாங்கமும் விடுதலைப் புலிகளும் மோதிக்கொள்வதை விட இப்போது நல்லதை செய்யக் கிடைத்துள்ளது."

உண்மையில், இந்தப் பேரழிவு அரசாங்கத்திற்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான பதட்ட நிலைமைகளை மட்டுமே விரிவுபடுத்தியுள்ளது. சில நாட்களுககுள், இந்த இரு சாராரும் வடக்கு மற்றும் கிழக்கில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் நிவாரணம் மற்றும் மீள் கட்டுமான வேலைகளை கையாள்வது சம்பந்தமான பிரச்சினையில் முட்டிக்கொண்டன. எந்தவொரு நிவாரண நடவடிக்கையும் தனது நிபந்தனைகளின் கீழேயே இடம்பெறும் என கொழும்பு வலியுறுத்திய அதே வேளை, விடுதலைப் புலிகள் எல்லா நிவாரண உதவிகளும் அதனது தமிழர் புணர்வாழ்வுக் கழகத்தின் ஊடாகவே விநியோகிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி வந்தனர்.

ஜனாதிபதி குமாரதுங்க அவசரகால நிலைமையை பிரகடனம் செய்ததோடு நிவாரண நடவடிக்கைகளை இராணுவத்தின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்ததை அடுத்து இந்தப் பிளவுகள் மேலும் ஆழமடைந்தன. நாட்டின் தமிழ் சிறுபான்மையினருக்கு தொல்லை கொடுப்பது மற்றும் துஷ்பிரயோகம் செய்வதில் இராணுவம் பிரசித்தி பெற்றிருந்தது. யுத்தத்தின்போது, ஆயிரக்கணக்கான தமிழர்களை சுற்றிவளைத்து விசாரணைகளின்றி தடுத்து வைக்கவும் மற்றும் சில சந்தர்ப்பங்களில் சித்திரவதை செய்யவும் அவசரகால சட்டம் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. யுத்த நிறுத்தம் நடைமுறையில் இருந்தபோதிலும், அரசாங்கக் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களில் விடுதலைப் புலிகள் நிவாராண உதவிகளில் ஈடுபடுவதை அதிரடிப்படை பொலிஸ் உத்தியோகத்தர்கள் தடைசெய்து வருவதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

விடுதலைப் புலிகள் "சர்வதேச சமூகத்திடம்" ஆதரவு கோருகின்றனர். ஆனால் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கம், விடுதலைப் புலிகள் ஊடாக நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்ளும் நடைமுறைகள் கிடையாது என வலியுறுத்தியுள்ளது. கொபி அனான் தீவுக்கு விஜயம் செய்தபோது, எதிரிகளின் கட்டுப்பாட்டிலான சுனாமியால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு அவர் விஜயம் செய்வதை குமாரதுங்க தடுத்தார்.

சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி வழங்குவதற்காக ஒரு கூட்டு இயக்கத்தை ஸ்தாபிக்க நோர்வே மத்தியஸ்தர்கள் எடுத்த முயற்சி ஒன்றுமில்லாமல் போய்விட்டது. ஜனவரி பிற்பகுதியில் வெளியுறவு அமைச்சர் ஜேன் பீட்டர்சன் தலைமையிலான ஒரு உயர்மட்ட பிரதிநிதிகள் குழு இலங்கைக்கு நான்கு நாட்கள் விஜயத்தை மேற்கொண்டிருந்த போதிலும் முட்டுச் சந்தை தகர்ப்பதில் தோல்வி கண்டது.

சுதந்திர முன்னணியின் இரண்டாவது பெரும் பங்காளியான மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி), தமிழர் விரோத பேரினவாதத்தை கிளறுவதிலும் மற்றும் சுனாமியால் உயிர்தப்பியவர்களுக்கு உதவுவதன் பேரில் அரசாங்கத்திற்கும் விடுதலைப் புலிகளுக்கும் எந்தவொரு மட்டுப்படுத்தப்பட்ட கூட்டுழைப்பைக்கூட குழப்புவதிலும் பிரதான பாத்திரம் வகிக்கின்றது. எந்தவொரு கூட்டு நிவாரண சபையையும் எதிர்த்த ஜே.வி.பி பேச்சாளர், அனான் விடுதலைப் புலிகளின் பிரதேசங்களுக்கு செல்வதற்குத் தடைவிதித்தை பாராட்டியதோடு உதவி என்ற பெயரால் இராணுவத் தளவாடங்களை கடத்துவதாக விடுதலைப் புலிகளையும் மற்றும் சர்வதேச நிவராண அமைப்புக்களையும் குற்றம் சாட்டினார்.

விடுதலைப் புலிகளுக்கு எந்தவொரு சலுகையும் வழங்கப்படுவதை எதிர்ப்பதானது, "சமாதான முன்னெடுப்புகள்" சம்பந்தமாக கொழும்பு ஆளும் வட்டாரத்தில் நிலவும் ஆழமான விரிசல்களை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. பெரும் வல்லரசுகளின் ஆதரவைக் கொண்ட வர்த்தகப் பிரிவினர், தீவை பூகோள உட்பத்தி நடவடிக்கைகளுக்குள் ஒன்றிணைப்பதற்கும், மற்றும் குறிப்பாக இந்தியாவில் அரும்புவிடத் தொடங்கியிருக்கும் வெளிநாட்டு முதலீடுகளில் முன்னேற்றம் பெறுவதன் பேரிலும் யுத்தத்திற்கு பேச்சுவார்த்தை மூலமான முடிவு காண நெருக்கி வருகின்றனர்.

இந்த யுத்தம் இராணுவம், அரச அதிகாரத்துவம் மற்றும் பெளத்த பீடங்களுக்குள் சக்திவாய்ந்த நலன்களை உருவாக்கிவிட்டுள்ளது. 1948 சுதந்திரத்தில் இருந்து, முதலாளித்துவம் தனது அரசியல் கட்சிகளுக்கு அடித்தளம் அமைக்கவும் மற்றும் தொழிலாள வர்க்கத்தை பிரிக்கவும் தமிழர் விரோத பேரினவாதத்தை கிளறிவிட்டுள்ளது. 1972ல் இனவாதம் அரசியலமைப்புக்குள் நுழைந்து பெளத்தத்தை அரச மதமாக்கியது. இத்தகைய ஒரு அரசியல் சூழ்நிலைக்குள் விடுதலைப் புலிகளுடனான எந்தவொரு சமரசமும் காட்டிக்கொடுப்பு என்ற கண்டனத்திற்குள்ளாகின்றது.

நடப்பில் உள்ள யுத்த நிறுத்த உடன்படிக்கை 2002 பெப்பிரவரியில் ஐக்கிய தேசிய முன்னணியால் (ஐ.தே.மு) கைச்சாத்திடப்பட்டது. ஆனால், ஆரம்பத்தில் இருந்தே எதிர்க் கட்சி தலைவி குமாரதுங்க, இராணுவ உயர் மட்டத்தினரின் உதவியுடனும் ஜே.வி.பி யின் ஆதரவுடனும் சமாதானப் பேச்சுக்களை கீழறுக்க முயற்சித்து வந்தார். குமாரதுங்கவும் அவரது பங்காளிகளும், ஐ.தே.மு விடுதலைப் புலிகளுக்கு ஏற்றுக்கொள்ள முடியாத சலுகைகளை வழங்குவதாகவும் மற்றும் தேசியப் பாதுகாப்பை ஆபத்துக்குள்ளாக்குவதாகவும் கண்டனம் செய்தனர்.

2003 ஏப்பிரலில் விடுதலைப் புலிகள் பேச்சுவார்த்தைகளில் இருந்து விலகியதை அடுத்து "சமாதான முன்னெடுப்புகளை" மீண்டும் ஆரம்பிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆயினும், விடுதலைப் புலிகள் வடக்கு மற்றும் கிழக்கில் ஒரு இடைக்கால நிர்வாக சபைக்கான பிரேரணையை முன்வைத்தவுடன், குமாரதுங்க தனது நிறைவேற்று அதிகாரத்தை பயன்படுத்தி பாதுகாப்பு அமைச்சு உட்பட முக்கிய மூன்று அமைச்சுக்களின் கட்டுப்பாட்டை அபகரித்துக் கொண்டார். மூன்று மாதகால விட்டுக்கொடுப்பற்ற நிலையை அடுத்து அவர் அரசாங்கத்தை பதவி விலக்கியதோடு 2004 ஏப்பிரலில் புதிய தேர்தல்களுக்கும் வழிவகுத்தார்.

குமாரதுங்கவின் சுதந்திர முன்னணி அரசாங்கம் சற்றே தேர்தலில் வெற்றி பெற்றபோதும், முன்னைய ஐ.தே.மு அரசாங்கம் முகம் கொடுத்திருந்த எந்தவொரு பிரச்சினையையும் தீர்ப்பதில் இலாயக்கற்றது என்பதை நிரூபித்தது. சர்வதேச நிதி உதவியை பெற்றுக்கொள்ளும் ஒரு முயற்சியாக, விடுதலைப் புலிகளுடனான பேச்சுக்களை மீண்டும் ஆரம்பிப்பதாக ஜனாதிபதி வாக்குறுதியளித்தார். ஒன்பது மாதங்களின் பின்னரும் பேச்சுவார்த்தைகளுக்கான எந்தவொரு அடிப்படை உடன்பாடும் காணப்படவில்லை.

"சமாதானப்" பேச்சுக்களை மீண்டும் தொடங்குவதாக வாக்குறுதியளித்ததை அடுத்து, குமாரதுங்க தனது ஆதரவாளர்களான இராணுவம் மற்றும் முதற் தடவையாக இப்போது ஆட்சியில் பங்குவகிக்கும் ஜே.வி.பி யினதும் உடனடியான எதிர்ப்புக்கு முகம்கொடுத்தார். இடைக்கால நிர்வாக சபைக்கான விடுதலைப் புலிகளின் கோரிக்கையின் அடிப்படையில் பேச்சுக்கள் ஆரம்பிக்கப்பட்டால் அரசாங்கத்தில் இருந்து விலகுவதாக ஜே.வி.பி அச்சுறுத்தியது. அதே சமயம், விடுதலைப் புலிகளாலும் மற்றும் அவர்களின் எதிரிகளான கருணா குழுவாலும் கிழக்கில் ஒரு தொகை படுகொலைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

சுனாமியை அடுத்து, ஆளும் கும்பலில் உள்ள சில தட்டுக்கள், விடுதலைப் புலிகளின் பலவீனமான நிலைமையில் இலாபம் அடைவதன் பேரில் இராணுவத் தோல்வியை ஏற்படுத்துவதற்காக ஆயுதப் படைகளுக்கு அழுத்தம் கொடுக்கின்றனர். ஜனவரி 30 பத்திரிகையாளர் மாநாட்டில், குமாரதுங்கவே "விடுதலைப் புலிகளின் காரியாளர்கள் இழப்பு மற்றும் அவர்களின் தளங்களில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை" பாதுகாப்புடன் சுட்டிக்காட்டினார். அவர், யுத்த ஆபத்து மிகவும் பின் தள்ளப்பட்டுள்ளது என பகிரங்கமாக விவாதித்த போதிலும், தனிப்பட்ட முறையில் இராணுவ ரீதியிலான கணிப்பீடுகள் மேற்கொள்ளப்படிருந்தன என்பதில் சந்தேகம் கிடையாது.

கெளசல்யனின் படுகொலை சம்பந்தமாக கருத்து தெரிவித்த ஐலண்ட் பத்திரிகையின் ஆசிரியர் தலையங்கம், "கிழக்கு எதிர்த்து தாக்கிக்கொண்டிருக்கின்றது" என ஒரு ஊக்குவிப்பு தொனியில் குறிப்பிட்டிருந்தது. விடுதலைப் புலிகள் யுத்தத்திற்கு மீண்டும் திரும்புவதற்கான நிலைமையில் இல்லை என சுட்டிக்காட்டிய பின்னர்: "அது அவ்வாறு செய்யுமானால், அடிப்படை நிலைமையையே இழக்க நேரிடும்..." இத்தகைய கருத்துக்கள், இந்த சந்தர்ப்பத்தை விடுதலைப் புலிகளை நசுக்குவதற்காக பயன்படுத்திகொள்ள ஆவலாக உள்ள இராணுவ உயர்மட்டத்தினரின் ஒரு பகுதியினரின் சிந்தனையை பிரதிபலிக்கின்றது. கெளசல்யனின் கொலையில், விடுதலைப் புலிகளை யுத்தத்திற்கு தள்ளுவதற்கு மிகவும் உபயோகமானதாக அமையும் என்ற எண்ணத்தில் இராணுவத்தின் சிலர் தலையீடு செய்திருப்பதற்கான முழு சாத்தியக்கூறும் உள்ளது.

உண்மையில் சுனாமியை அடுத்து நாடு சமாதானத்திதற்காக அன்றி, யுத்தத்தை நோக்கி நகர்வதற்கான பழி ஆளும் கும்பலின் அனைத்துப் பிரிவினர் மீதும் சுமத்தப்பட வேண்டும். இந்தப் பேரழிவில் 40,000 பேர் உயிரிழந்திருப்பதோடு அதற்கும் மேலாக உள்நாட்டு யுத்தத்தில் 65,000 பேர் கொல்லப்பட்டுள்ளனர். நிதி மற்றும் உதவிப் பற்றாக்குறை சுனாமியால் பாதிக்கப்பட்டவர்கள் மத்தியில் ஏற்கனவே எதிர்ப்பையும் ஆத்திரத்தையும் தூண்டி விட்டுள்ளது. பல பிரதேசங்களில் ஆர்ப்பாட்டங்களும் இடம்பெற்றுள்ளன.

நோர்வேயின் சர்வதேச அபிவிருத்தி அமைச்சர் ஹில்டி ஜோன்சன் கொழும்பு பத்திரிகைகளுக்கு கருத்துத் தெரிவிக்கையில், "பொறுமையும் அதிருப்தியும் வளர்ச்சியடைந்து வருகின்றன (நிதி சம்பந்தமாக மக்கள் மத்தியில்) இது பதட்ட நிலைமைக்கு வழிவகுக்கும் முன் அரசாங்கம், விடுதலைப் புலிகள் மற்றும் சர்வதேச சமூகமும் இதையிட்டு அக்கறை செலுத்த வேண்டும்," என வெளிப்படையாக குறிப்பிட்டார். ஆயினும் இந்த எச்சரிக்கையையிட்டு அக்கறை செலுத்துவதாக தோன்றவில்லை. உழைக்கும் மக்களின் தேவைகளை திருப்திப்படுத்துவதில் இலாயக்கற்றுள்ள ஆளும் வர்க்கம், கடந்த அரை நூற்றாண்டு காலமாக அரசியல் நெருக்கடிகளுக்கு எவ்வாறு பிரதிபலித்ததோ, அதேபோல் இம்முறையும் யுத்தம் மீண்டும் வெடிப்பதற்கான சாத்தியங்களை ஏற்படுத்தினாலும் வேண்டுமென்றே இனவாத முரண்பாடுகளை கிளறிவிடும்.

Top of page