World Socialist Web Site www.wsws.org |
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள்: ஆசியா : சுனாமி பேரழிவுScandinavian governments criticised for poor tsunami response சுனாமி தொடர்பாக அக்கறைகாட்டாதற்காக ஸ்கான்டிநேவிய அரசாங்கங்கள் விமர்சிக்கப்படுகின்றன By Niall Green தங்கள் குடிமக்கள் 52 பேர் உயிரிழந்துள்ளனர், மற்றும் 532 பேரைப் பற்றிய தகவல் தெரியவில்லை என்ற உறுதியான செய்தி தெரிந்த அளவில், டிசம்பர் 26 ஆசிய சுனாமியினால், விகிதாசர முறையில், மிக மோசமாக பாதிக்கப்பட்ட ஐரோப்பிய நாடாக ஸ்வீடன் உள்ளது. கிட்டத்தட்ட 20,000 ஸ்வீடியர்கள் பேரழிவுத்தாக்குதலின்போது அப்பகுதியில் இருந்தனர்; ஆரம்பத்தில் இறந்தோர் எண்ணிக்கை 3,500 ஐ எட்டியிருக்குமோ என்ற அச்சம் கூட இருந்தது. அண்மை நாடுகளான நோர்வே, பின்லாந்து, டென்மார்க் ஆகியவற்றில் இருந்து சிறிய அளவில் சுற்றுலாப் பயணிகள் இருந்தனர்; ஆரம்பத்தில் 1,000 பேருக்கு மேல் இறந்துவிட்டதாக அச்சம் இருந்தது. இதுவரை, 19 நோர்வேஜியர்கள், 7 டென்மார்க்கினர் மற்றும் ஐந்து பின்லாந்தினர் இறந்துவிட்டதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 67 நோர்வே நாட்டவர்கள், 62 டென்மார்க் நாட்டவர் மற்றும் 186 பின்லாந்துக்காரர்கள், இன்னும் காணாமற்போன பட்டியலில் உள்ளனர். ஸ்வீடனை பொறுத்தவரையில் இப்பேரழிவு பெரும் மன அதிர்ச்சி தரும் வகையில், நினைவு தெரிந்தது முதல் ஒரு நிகழ்வில் மிக அதிக உயிர்கள் இழந்த தன்மையை கொண்டுள்ளது. அதனுடைய அண்டை நாடுகளை போலன்றி, ஸ்வீடன் இரண்டாம் உலகப்போரின்போது நாஜிப் படையெடுப்பை தவிர்த்திருந்தது; மேலும், அது 200 ஆண்டுகளுக்கும் மேலாக ஆயுத மோதலிலும் பங்கு கொள்ளவிலை; சமீபத்தில்தான் ஐரோப்பிய ஒன்றியத்தியத்திற்காக பால்கன் பகுதிகளில் காவல் காப்பதற்காக தன்னுடைய படைகளை அனுப்பி வைத்தது. இதுவும், இந்தியப் பெருங்கடல் பகுதியில் வாழும் மக்களின் பெருந்துன்பமும், கோரன் பெர்சனுடைய தலைமையில் இருக்கும் சமூக ஜனநாயக (SAP) அரசாங்கத்தை, மிகத் தாமதமாகவும் மிகக்குறைவாகவும் இந்த பெருந்துன்பத்தை எதிர்கொண்டுள்ளதற்காக விமர்சனம் செய்ய வைத்துள்ளன. வெளியுறவு அமைச்சர் லைலா பிரீவல்ட்ஸ் (Laila Freivalds) கூடுதலான முறையில் விமர்சிக்கப்பட்டுள்ளார்: இதற்கு காரணம் இந்த மகத்தான மனிதப் பெருந்துயரத்திற்கு அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் டபுள்யூ புஷ், இங்கிலாந்தின் பிரதமர் டோனி பிளேயர் ஆகியோர் காட்டிய இகழ்வை நினைவூட்டுவதுபோல் இவருடைய போக்கும் இருந்தது. நிகழ்வுகளின் மாபெரும் தன்மை பற்றி செய்திகள் வெள்ளப் பெருக்கென வந்து கொண்டிருந்த நேரத்தில் இந்த அம்மையார் நாடக அரங்கிற்கு சென்று, தன்னுடைய அலுவலகத்திற்கு 30 மணி நேரம் வராமல் இருந்தார். இந்த தகவல் பற்றி பெரும் கவலையுடன் தெரிவித்த ஆதாரங்களில் ஒன்று இந்தோனேசியாவில் இருந்த ஸ்வீடன் நாட்டுத் தூதரகமாகும். அப்படி இருந்த போதிலும், வெளியுறவு அமைச்சரகத்தில் இருந்து தங்களுடைய பிரியமானவர்களை பற்றிப் பயந்து போன பல்லாயிரக்கணக்கான மக்களுக்கும் ஆறுதல் கொடுக்கும் வகையில் எந்தச் செய்தியும் வெளிப்படவில்லை; அதுபோல் அப்பகுதிக்கு அவசரக் குழுக்களும் பல நாட்களுக்கு அனுப்பப்படவில்லை. ஜனவரி மாத தொடக்கத்தில் எடுத்த கருத்துக் கணிப்பின்படி, விடையிறுத்தவர்களில் 50 சதவிகிதத்தினர் ப்ரீவல்ட்ஸ் ராஜிநாமா செய்யவேண்டும் என்று தெரிவித்தனர். பொதுவாக அரசாங்க நடவடிக்கைகள் பற்றி மெளனமாக இருக்கும், ஸ்வீடிஷ் அரசரான கார்ல் XVI கஸ்டவ் கூட, தொலைக்காட்சியில் தகவல்கள் அதிகம் கொடுக்கப்படாததற்கு விமர்சிக்கவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. பின்னர் பேரழிவு பாதிப்பாளர்களுக்கு நிகழ்ந்த நினைவு பிரார்த்தனைக் கூட்டம் ஒன்றில், கஸ்டவ் நடந்த நிகழ்வுகள் தொடர்பாக ஏற்பட்டிருந்த பொதுத்திகைப்பு பற்றி, அரசாங்கத்தின் அக்கறையின்மை பற்றிக் கூட தெரிவித்தார்: "எனக்கு இதற்கு ஏதேனும் நல்ல விடை கிடைத்தால் நல்லது. ...நான் கற்பனைக் கதைகளில் வரும் அரசர்கள் போல், அனைத்தையும் சரி செய்து ஒரு நல்ல முடிவிற்குக் கொண்டுவர முடியுமானால் நல்லது. ...ஆனால் நானும் உங்களைப் போலத்தான் உள்ளேன்... சரியான விடை கிடைக்காத சராசரி மனிதர்களாகத்தான் நாம் அனைவரும் இருக்கிறோம்" என்றார். ஸ்வீடிஷ் செல்வந்தத்தட்டின் பகுதிகள், மில்லியன் கணக்கான ஸ்வீடியர்கள் கொண்டிருந்த அதிர்ச்சி, நெருக்க உணர்விற்கு முற்றிலும் மாறாக, பெர்சனுடைய அரசாங்கம் ஆபத்தான வகையில்தான் அழிவைப்பற்றிய எதிர்விளைவைக் கொண்டிருந்தது என்று உணர்ந்தனர். ஸ்டாக்ஹோம் போலீஸ் தலைவர், நகரத்தின் செர்கெல்ஸ் சதுக்கத்தில் பிரீவல்ட்ஸ் தோன்றுவாரேயானால், "நிறைய மக்கள் அவரிடம் சில கருத்துக்களைக் கூறுவர்" என்று தெரிவித்தார். ஸ்வீடியப் போலீஸ் வெளிநாட்டு அமைச்சருக்கு உடனே மெய்காப்பாளருக்கு ஏற்பாடு செய்தனர்; இவருக்கும் முன்னர் பதவியில் இருந்த அன்னா லிண்ட்தான் 2003ல் ஸ்டாக்ஹோம் கடையொன்றில் கூரிய கருவியால் குத்திக் கொல்லப்பட்டிருந்தார். மேலும் அரசாங்கம் வெளிப்படையாக எந்த முயற்சியையும் எடுத்துக் கொள்ளாதது நாட்டின் சர்வதேச மதிப்பைப் பாதிக்கும் என்ற கவலைகள் இருந்தன. போருக்குப் பிந்தைய காலம் முழுவதும் ஸ்வீடன் தன்னுடைய இராணுவ, புவிசார்-அரசியல் பலவீனத்தைக் கடப்பதற்கு "நடுநிலை" அந்தஸ்தைப் குளிர்யுத்த காலத்தில் பயன்படுத்தியது; மேலும் மனிதாபிமானம் என்ற போர்வையில் தன்னுடைய பொருளாதார நலன்களையும் வளர்த்துக் கொண்டது. இன்றளவும் ஸ்வீடன் மற்ற ஸ்காண்டிநேவிய நாடுகளுடன் வெளிநாடுகளுக்கு, அரசாங்க உதவியளிக்கும் நாடுகளின் குழுவில், அரசாங்க செலவீனத்தின் சதவீதத்தில் முதன்மை இடத்தைக் கொண்டுள்ளது. முறையான எச்சரிக்கை பெற்றதால், பெர்சன் "இராஜதந்திரி" என்ற தன்மையை காட்டும் வகையில், தாமதமாக செயற்பாடு கொண்டதை விசாரணை செய்வதற்கு ஒரு குழுவை அமைத்தார்: அரசியலமைப்புக் குழுவும் அரசருக்கு தகவல் கொடுக்காமல் இருந்ததை விசாரிக்கும். கிறிஸ்தவ ஜனநாயகக் கட்சியாளர் Kjell Bondevik தலைமையில் இருக்கும் நோர்வே அரசாங்கமும் இதேபோல் தப்பிப் பிழைத்தவர்கள், உறவினர்கள், சுற்றுலா நடத்துபவர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் செய்தி ஊடகத்தால், நெருக்கடியை சமாளித்த முறை பற்றிய விமர்சனத்திற்கு ஆளாகியது. தப்பிப்பிழைத்து மீண்டு வந்தவர்கள், தாங்கள் வீடு திரும்புவதற்கு அரசாங்கம் எந்த முயற்சியையும் எடுத்துக் கொள்ளவில்லை என்றும், அரசாங்கம், உயிர் தப்பியவர்கள், இறந்தவர்கள் பற்றி எந்தத் தகவலையும் கொடுக்கவில்லை என்றும் குறைகூறியுள்ளனர். Dagsavisen என்னும் செய்தித்தாள், உதவி முகவாண்மையை மேற்கோள்காட்டி, நோர்வே அரசாங்கத்தின் பதில்நடவடிக்கை தாமதமாகவும், அதிக ஆர்வமின்றியும் இருந்ததாகக் கூறியுள்ளது. நோர்வே விமான ஆம்புலன்ஸ் பணி மூன்று விமானங்களையும் பத்து மருத்துவர்கள், செவிலியர்களையும் உடனடியாக அனுப்பத் தயார் என்று கூறியிருந்தபோதிலும்கூட, அரசாங்கம் மூன்று நாட்களுக்கு இது பற்றிய பதில் ஏதும் கொடுக்கவில்லை. போலீஸ் கூட வெளியுறவு அமைச்சகத்தை விமர்சித்தது; ஏனெனில் இறந்தவர்கள், காணாமற் போனவர்கள் பற்றிய பட்டியல் தயாரிப்பது, துறைகளுக்குள்ளே இருக்கும் பூசல்களினால் தாமதப்பட்டது. இலங்கை அரசாங்கத்திற்கும், தமிழ்ப்புலிகளுக்கும் இடையே நடக்கும் பேச்சுவார்த்தைகளில் நீண்ட காலமாக அரசாங்கம் நடுநிலை முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்ற, இலங்கைக்கு உதவியளித்தலில் ஆர்வம் காட்டாததற்கும் அரசாங்கம் கண்டனத்திற்கு ஆளானது. பின்லாந்தில், வெளியுறவு அமைச்சகம் பல நாட்கள் மெத்தனப் போக்கு காட்டியதற்காகவும், அக்காலக்கட்டத்தில் பின்னிஷ் மக்கள்பால் பேரழிவின் தாக்கம் பற்றி குறைமதிப்பிடப்பட்டதாகவும், நேரடி அறிக்கைகள் உடனடியாக வந்ததற்கும் எந்த பதிலும் இல்லை என்றும் கூறப்படுகிறது. பின்லாந்தின் ஒளிபரப்பு நிறுவனத்தின் செய்தி, நடப்பு நிகழ்வுகள் பிரிவின் தலைவர் பின்வருமாறு எச்சரிக்கை விடுத்தார்: "அதிகாரிகளிடம் இருந்து கிடைத்த தகவல்கள் முழு உண்மையையும் வெளியிடவில்லை; வருங்காலத்தில் நாம் இன்னும் கூடுதலான வகையில் SMS போன்ற தகவல்களுக்கும் அதிகாரபூர்வமற்ற தகவல் வழிகளான இணைய தளங்களுக்கும் பெருமதிப்புக் கொடுப்போம்." அரசாங்கத்தின் மீதான நம்பிக்கையை மீட்கும் வகையில் விசாரணை ஒன்றிற்கு பழைய பின்லாந்து ஜனாதிபதி மார்ட்டி அக்டிசாரியால் உத்திரவு இடப்பட்டுள்ளது. ஜனவரி 17ஐ ஒட்டி, பெர்சனும் நோர்வே, பின்லாந்து அரசாங்கங்களின் தலைவர்களும் தாய்லாந்திற்கு வந்து தாய் அரசாங்கம் சுனாமியை எதிர்கொள்ள தவறிய வகை பற்றி அதற்கு உபதேசம் செய்தனர். பெர்சன் கேட்டார்: "பூகம்பம், சுனாமி வருவதற்கு நீண்ட நேரம் முன்னரே வந்தது. ...ஏன் எச்சரிக்கை கொடுக்கப்படவில்லை? இதற்கு யார் பொறுப்பு?" என்று. இப்படி உயர்நிலையில் பேசிய பெர்சன் அதிகாரபூர்வமான பரிந்துரை ஒன்றில், எந்த ஸ்வீடன் நாட்டவரும் இப்பகுதிக்கு சுனாமி பற்றிய எச்சரிக்கை முறை கொண்டுவரப்படும் வரை செல்லக் கூடாது என்றும் கூறியுள்ளார். இந்த மூன்று பிரதம மந்திரிகளும், தாய்லாந்தின் சுற்றுலா தலங்கள், விடுதிகள் ஆகியவை உயர்ந்த தரத்தில் சீரமைத்துக் கட்டப்படவேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர். இப்பகுதியில் இருக்கும் பழமையான கட்டுமான உத்திகள் பற்றியோ, பகுதி முழுவதும் அடிப்படைக் கட்டுமான வசதிகள் இல்லாததால் ஏற்பட்ட மிக அதிக இறப்புக்கள் பற்றியோ எந்தக் குறிப்பும் இல்லை. பெர்சன் போண்டெவிக் மற்றும் பின்லாந்தின் பிரதம மந்திரி மாட்டி வான்ஹெனெனை பொறுத்தவரையில், ஸ்கண்டிநேவிய சுற்றுலா பயணிகள், சுற்றுலா நடத்துபவர்கள் மட்டுமே சில முன்னேற்றங்களை எதிர்பார்க்கமுடியும் போலும். |