World Socialist Web Site www.wsws.org |
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :ஐரோப்பா : பிரான்ஸ்France: half-million-strong protest against government attacks பிரான்ஸ்: அரசாங்கத்தின் தாக்குதல்களுக்கு அரை மில்லியன் மக்கள் கடும் எதிர்ப்பு By our correspondents பிரதமர் ஜோன்-பியர் ரஃப்ரன் அரசாங்கத்தின் பெருகிவரும் தாக்குதல்களுக்கு எதிராக பிரெஞ்சு தெருக்களில் பெப்ரவரி 5 சனிக்கிழமையன்று 500,000திற்கும் மேற்பட்ட மக்கள் கண்டன பேரணிகளை நடத்தினர். அரசாங்கம் ஜனாதிபதி ஜாக் சிராக்கின் ஆதரவோடு தற்போது வாரத்திற்கு 35 மணி நேரம் என்ற பணி நேரத்தை நீட்டிக்க சட்டத்தை விரைவுபடுத்திக் கொண்டிருக்கிற நேரத்திலேயே தொழிலாளர்களது வாழ்க்கை தரத்தை செல்லரிக்க செய்கின்ற விலைவாசி உயர்வு, யூரோ நாணயம் அறிமுகப்படுத்தலுடன் அதிகரித்திருக்கிறது. தொழிலாளர்களிடையே பொதுத் துறையிலும் தனியார் துறையிலும் தோன்றியுள்ள மகத்தான எதிர்ப்பு CGT, CFDT, FO மற்றும் பல்வேறு சிறிய தொழிற்சங்கங்களின் அழைப்புக்கு வியப்பில் ஆழ்த்துகிற வகையில் மக்கள் திரண்டனர். சனிக்கிழமை பேரணிகள் ஆயத்த நிலையிலேயே தொழிற்சங்கத் தலைவர்கள் அதிகபட்சம் 300,000 தொழிலாளர்கள் இந்தக் கண்டனப் பேரணிகளில் கலந்துகொள்வர் என்று ஒருமனதாக மதிப்பீடு செய்தனர். நாடு முழுவதிலும் 120-க்கு மேற்பட்ட ஆர்பாட்டங்கள் நடைபெற்றன. மார்சை போன்ற பெரிய நகரங்களில் 30,000க்கும் மேற்பட்ட ஆர்பாட்டக்காரர்கள் கலந்துகொண்டனர். அதே நேரத்தில் பாரிஸ் நகரத்தில் 50,000திற்கு மேற்பட்ட மக்கள் Place de la Republique லிருந்து Place de la Nation க்கு அணிவகுத்து சென்றனர். பாரிசில் உலக சோசலிச வலைத் தள ஆதரவாளர்கள் தம் ஆசிரியர் குழு அறிக்கையான, ``பிரெஞ்சு தொழிலாளர்களுக்கு ஒரு புதிய அரசியல் முன்னோக்கு தேவை சிராக் மற்றும் ரஃபரன் தாக்குதல்களுக்கு எதிரான போராட்டத்தில் அரசியல் பிரச்சனைகள்`` என்ற அறிக்கையின் 5,000 பிரதிகளை பேரணியில் விநியோகித்தனர். அந்த அறிக்கை தொழிலாளர்களுக்கு விடுத்திருந்த எச்சரிக்கை: ``இந்த தாக்குதல்களுக்கு எதிராக வெகுஜன எதிர்ப்பு வரவேற்கதக்கது மற்றும் அவசியமானது, முன்பு எப்போதும் இருந்ததைவிட தற்போது மிக அவசரமாக தொழிலாளர்களுக்கு ஏற்றதொரு அரசியல் முன்னோக்கு தேவை என்பதை உணர்த்திக் கொண்டிருக்கிறது. கடந்த 10 ஆண்டுகளின் அனுபவங்களில் இருந்து நாம் பெறுகின்ற பெரியதொரு படிப்பினை இருக்குமென்றால் அது இடதுசாரிகள் என்று சொல்லிக்கொள்கின்ற கட்சிகள் மற்றும் அமைப்புகளிடம் இந்த பிரச்சனைகளுக்கு ஒரு பதிலும் இல்லை என்பதுதான்.`` அன்றைய சம்பவங்கள் இந்த எச்சரிக்கையை உறுதிப்படுத்தின. அனைத்து தொழிற்சங்கங்களுமே எந்த தெளிவான கோரிக்கைகளையும் முன்வைக்காமல் மிகக் கவனமாக இருந்தன. பேரணிகளில் திட்டவட்டமான கோரிக்கைகளை எழுப்பும் பதாகைகள் அல்லது அறிக்கைகள் எதுவும் இடம்பெறவில்லை. 2003-ல் நடைபெற்ற ஓய்வூதியங்கள் தொடர்பான கிளர்ச்சியை அவர்கள் கைவிட்டதிலிருந்து அவர்கள் பெற்ற பிரதான படிப்பினை இது என்பது தெளிவாகத் தெரிகிறது. CGT போன்ற தொழிற்சங்கங்கள் எல்லா தொழிலாளர்களுக்கும் முப்பத்து ஏழரை ஆண்டுகள் ஓய்வூதிய சந்தா செலுத்தும் முறை மீண்டும் கொண்டுவரப்பட வேண்டும் என்று விடுத்திருந்த கோரிக்கையை அரசாங்கத்தின் கட்டளைப்படி கைவிட்டது மிகத் தெளிவாகத் தெரிகிறது. மிகுந்த தயக்கத்தோடும் முன்னெச்சரிக்கையாகவும் தொழிற்சங்கத் தலைமைகள் செயல்படுகின்றன என்பதை எடுத்துக்காட்டுகின்ற வகையில் பாரிஸ் அருகில் உள்ள Seine Saint Deins பிராந்தியத்தின் CGT பொதுச் செயலாளர் Thierry Dumez தெரிவித்துள்ள கருத்து அமைந்திருக்கிறது. பேரணியின் போது, தொழிற்சங்கத்தின் நோக்கங்கள் பற்றி WSWS பேட்டி கண்டபோது அவர் மிகவும் தெளிவில்லாமல் தட்டிக்கழிக்கின்ற முறையில் பதிலளித்தார், "CGT-ன் கோரிக்கைகள் இன்றைய தினம் இலாபங்களை சிறப்பாக மறுவினியோகம் செய்வது, ஊதியங்களை உயர்த்துவது, ஊதியம் பெறும் தொழிலாளர்களது வாங்கும் சக்தியை அதிகரிப்பது மற்றும் பிரான்சில் வேலையில்லா திண்டாட்டத்தை குறைப்பதற்காக, பணியாற்றும் கால அளவை குறைப்பது ஆகியவைதான்". பாரிஸ் பகுதியில் பிராந்திய CFDT செயலாளர் Philipe Lengrand அவரைவிட வாய் மூடி மெளனியாக இருந்தார். அவர் சொன்னார்: "எங்களது கோரிக்கைகள் பணி செய்யும் கால அளவை குறைக்கும் பிரச்சனையை சுற்றிச் சுற்றி சுழல்கிறது. நமக்கு இன்றைக்கு இருக்கின்ற அரசாங்கம் 35 மணி நேர வார வேலை நேரத்தை சிதைக்க விரும்புகிறது. அது தொழிலாளர் சட்டங்களை தாக்க விரும்புகிறது. மற்றும் ஊதியம் பெறுகின்ற தொழிலாளர்களை அதிக நேரம் பணியாற்றினால் அதிகம் சம்பாதிக்கலாம் என்று ஆசை காட்டி ஈர்க்கிறது - அது தவறானது." வெகுஜன ஆர்ப்பாட்டங்கள் பற்றி திங்களன்று அரசாங்க கட்டுப்பாட்டிலுள்ள வானொலியான, பிரான்சு இன்டர்-க்கு பேட்டியளித்த பிரதமர் ஜோன்-பியர் ரஃப்ரன் திங்களன்று தெரிவித்த விமர்சனம்: "ஒரு ஜனநாயகத்தில் பேரணிகளை நான் அவமரியாதையாக கருதவில்லை. ஆனால் தொழிற்சங்கத் தலைவர்கள் நாடாளுமன்றத்தை அவமதிக்கும் வகையில் செயல்படக்கூடாது என்றும் கேட்டுக்கொள்கிறேன்... நான் செவிடன் அல்ல, ஆனால் எனக்கு காது கேட்கிறது என்பதற்காக நான் அதற்கு கட்டுப்பட முடியாது. வாரத்திற்கு 35 மணி நேரம் பணி என்பதற்கான சட்டம் முன்கூட்டியே தயாரிக்கப்பட்ட கால அட்டவணையை பின்பற்றுவதாக இருக்கும்", ஏனென்றால், "அதுதான் ஜனநாயக வாழ்வு என்பது". ரஃப்ரன், இதுபோன்ற ஆணவமிக்க அறிக்கைகளை வெளியிடுவதற்கு ஒரே காரணம் ஒரு சமூக இயக்கம் தங்களது கட்டுப்பாட்டை மீறி அரசாங்கத்திற்கு அறைகூவல் விடுகின்ற அளவிற்கு சென்றுவிடாது தடுப்பதில் தங்களது சக்திக்கு உட்பட்ட அனைத்து நடவடிக்கைகளையும் தொழிற்சங்கங்கள் மேற்கொள்ளும் என்பதை அவர் அறிந்திருக்கிறார். WSWS அறிக்கை விளக்கியிருப்பதைப்போல், "இது தொழிற்சங்கங்களின் தேசிய முன்னோக்கின் வெளிப்பாடுதான்: பிரெஞ்சு தொழில்துறை அதன் சர்வதேச போட்டியாளர்களிடம் இருந்து பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில்தான் பிரெஞ்சு தொழிலாளர்களின் பாதுகாப்பு அமைந்துள்ளது என்பதுதான் அந்த முன்னோக்கு. இந்த நிலைப்பாட்டிலிருந்து, பிரான்சின் வணிகமோ அல்லது இதுகாறும் உள்ள அரசியல் நிலைப்பாட்டையோ, தீவிர பாதிப்பிற்கு உட்படுத்தும் எந்தச் செயலையும் அவர்கள் தவிர்க்க விழைகின்றனர்". இதற்கிடையில் சோசலிஸ்ட் கட்சியும் கம்யூனிஸ்ட் கட்சியும் தேசிய நாடாளுமன்ற சித்து விளையாட்டுக்களில் ஈடுபட்டிருக்கிறார்கள். வாரத்திற்கு 35 மணி நேர பணியை நீடிப்பு செய்வதற்கு வகை செய்யும் சட்டத்திற்கு அவர்கள் 2000க்கு மேற்பட்ட திருத்தங்களை தாக்கல் செய்திருக்கிறார்கள், அவை சட்டம் நிறைவேறுவதை ஒரு சில நாட்கள் தாமதப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. தொழிற்சங்கத் தலைவர்களை போன்று ஒரு சமூக இயக்கத்தை உருவாக்கக்கூடிய எந்த கோரிக்கைகளையும் எழுப்புவததை தவிர்த்து விடுவதற்கு சோசலிஸ்ட் கட்சி மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் எல்லா வகைகளிலும் முயன்று வருகிறார்கள். இறுதியாக புதிய சட்டம் வாக்கெடுப்பிற்கு வரும்போது அது நிறைவேறுவதற்கு தாங்கள் அமைதியாக வாக்களித்து நிறைவேற்றிவிடப்போவதை மிகத்தெளிவுபடுத்தியுள்ளனர். லியோனல் ஜொஸ்பனின் பன்மைஇடது அரசாங்கம் இயற்றிய வாரத்திற்கு 35 மணி நேர சட்டம்தான், பணியாற்றும் நேரம் தொடர்பான கண்டிப்பான விதிகளை சீர்குலைத்தது. சோசலிஸ்ட் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் உருவாக்கிய சட்ட உந்துதளத்தை ரஃபரன் அரசாங்கம் தயாரித்துள்ள புதிய சட்டம் பயன்படுத்திக்கொண்டிருக்கிறது, இதன் மூலம் பழைய நடைமுறைக்கு அல்லது அதைவிட நீண்ட பணிசெய்யும் காலத்தை நிர்ணயிக்க உதவியுள்ளது. இடதுசாரி தீவிர இயக்கங்களான ஆர்லட் லாகியே இன் லூற் ஊவ்றியேர் (தொழிலாளர் போராட்டம்) மற்றும் அலென் கிரிவின் இன் புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் (எல் சி ஆர்) போன்றவை தொழிலாளர்களிடம் சொல்வது என்னவென்றால் அவர்களின் ஒரே முன்னோக்கு அரசாங்கம் தனது நடவடிக்கையை கைவிடச் செய்வதற்கு கட்டாயப்படுத்தும் ஒரு தொழிற்சங்கப் போராட்டம்தான் என்று கூறுகின்றனர். சனிக்கிழமை பேரணிகளில் LCR வெளியிட்ட அறிக்கை தனது முடிவுரையில் கூறுவது: தேவையான அளவு தொழிலாளர்களின் ஐக்கியப்பட்ட அணிதிரட்டலை தயாரிக்க ஒரு முன்னோக்கை உருவாக்குவதற்கு, தொழிற்சங்க கூட்டமைப்புக்கள் புதிய முயற்சிகளை முன்மொழிவு செய்யுமா? பலர் அதை எதிர்பார்க்கிறார்கள். இந்த வகையில் செயல்படுவதற்கு தொழிலாளர்களை திரட்டுகின்ற முறையில், போராளிகள், தொழிலாளர்கள் தங்களது சொந்த அமைப்புக்கள் உட்பட, இந்த திக்கில் செயல்பட அணிதிரள்வதற்கு, அவர்களது குரலை ஓங்கி ஒலிக்கச் செய்ய வேண்டும். இதேபோன்ற தொனியில் ஆனால் மேலும் தீவிரவாத வாய்ச்சொல் வீச்சை அடிப்படையாக கொண்டு ஆர்லெட் லாகியேயின் பெப்ரவரி 7 தலையங்கம், குறிப்பிடுவது என்னவென்றால், "1995-ல் (பிரதமர்) யூப்பே என்னதான் ஆணவத்தோடு இருந்தாலும், ரயில்வே ஊழியர்களின் போராட்டத்தைக்கண்டு பின்வாங்க வேண்டிவந்தது. அதே போன்றதொரு தொழிலாளர் அணியை திரட்ட வேண்டியது அவசியம். ஆனால் அது மற்றொரு அளவைக் கொண்டதாக ஒரு தனிப்பிரிவு தொழிலாளர்களை மட்டுமின்றி எல்லாத் தொழிலாளர்களையும் அணிதிரட்டுவதாக இருக்க வேண்டும், இப்படி தொழிலாளர்களை கூட்டாக வெடித்துச் சிதறும் வகையில் கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு தங்களது உணர்வுகளை வெளிப்படுத்தி, MEDEF (பிரான்சின் முதலாளிகள் கூட்டமைப்பு) ஐ பாதுகாக்கும் சிடுமூஞ்சித்தனமான அமைச்சர்களின் வாயை மூடமுடியும், அவர்கள் தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரத்தை பாதிக்கும் நடவடிக்கைகளை எடுக்காது தடுத்து நிறுத்தி தொழிலாளர்கள் வறுமைக்குள் வீழ்வதை தடுத்து நிறுத்த முடியும்". இப்படிப்பட்ட ஒரு மட்டுப்படுத்தப்பட்ட மற்றும் ஒரு தேசிய முன்னோக்கானது, சோசலிஸ்ட் கட்சியிலிருந்து தொழிற்சங்கங்கள் வலதுசாரிகள் மற்றும் LO, LCR வரை, தங்களை முற்றிலும் வெற்று கூக்குரல் எழுப்பும் இயக்கங்கள் என்று -இதுபோன்ற காலாவதியாகிவிட்ட பழைய அமைப்புக்கள் அனைத்தும் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக பலமுறை நிரூபித்துக் காட்டியிருக்கின்றன. WSWS அறிக்கை விளக்கியிருப்பதைப்போல், "ஒரு குறிப்பிட்டதுறை தொழிலாளர்கள் மட்டுப்படுத்தப்பட்ட கோரிக்கைகளின் மீது தங்களின் போராட்டங்களை அடிப்படையாகக் கொண்டு, எஞ்சியிருக்கும் தங்களது சமூக நலன்களை காப்பது கூட இயலாமற் போய்விட்டது என்பதை தொழிலாளர்கள் கட்டாயம் உணரவேண்டும். அவர்களை எதிர்கொண்டுள்ள நெருக்கடி உலக முதலாளித்துவம்தன்னின் நெருக்கடி மற்றும் அது தளமாக கொண்டுள்ள, காலம் கடந்துவிட்ட தேசிய-அரசு முறையின் நெருக்கடி ஆகும். அது தேசிய-அரசு முறை எனும் தளைகளுக்கு எதிரான உலகின் உற்பத்தி சக்திகளின் கலகம் ஆகும், அதுதான் முதலாளித்துவத்தின் நெருக்கடியை இயக்குகிறது."தொழிலாள வர்க்கம் ஒரு சர்வதேச வர்க்கம், அது உலகின் மிகச் சக்திவாய்ந்த உற்பத்தி சக்திகளுடன் மிக நெருக்கமாக பிணைந்துள்ள வர்க்கமாகும். தன்னுடைய சுயாதீனமான அரசியல் நலன்களுக்கு, ஓர் ஐக்கியப்பட்ட சர்வதேச சக்தியாக போராடுவதன் மூலம் மட்டுமே, இந்த பூகோளத்தின் மீது முதலாளித்துவம் கொண்டுள்ள பிடியை உடைக்க முடியும் மற்றும் தற்போது இருக்கும் அமைப்பு முறையில் உள்ள மிகக் கொழுத்த கோடீசுவரர்களான சிறு தட்டினரின் செல்வக்குவிப்பை பூர்த்தி செய்வதற்காக அல்லாமல், மனிதகுலத்தின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வதற்காக உற்பத்தி சக்திகளை விடுவிக்க முடியும். ஒரு புதிய, அறிவார்ந்த முறையில் ஒழுங்கமைக்கப்படும் உலக சோசலிசப் பொருளாதாரம் மற்றும் சமுதாயத்தை கட்டி எழுப்புவதற்கான அத்தகைய சர்வதேச முன்னோக்குத்தான், தொழிலாளர்களின் எதிர்கால போராட்டங்களுக்கான அடிப்படையை கட்டாயம் அமைக்கும்". |