:
ஆசியா
:
சுனாமி பேரழிவு
On-the-spot report from Sri Lanka
Working with a medical team in Hambantota
இலங்கையிலிருந்து ஒரு நேரடி அறிக்கை
ஹம்பந்தொட்டையில் ஒரு மருத்துவக் குழுவுடன் பணியாற்றிய போது
By Ajitha Gunaratna
3 January 2005
Back to screen version
சுனாமி பேரழிவின் பருமன் வெளிப்படையாக தெரியவந்தவுடன், கொழும்பில் உள்ள இலங்கை
தேசிய வைத்திய சாலையில் உள்ள வைத்தியர்கள் மற்றும் தாதிமார் உட்பட நூற்றுக்கணக்கான இலங்கை சுகாதார ஊழியர்கள்
உடனடியாக மருத்துவ நிவாரண வேலைகளுக்காக தொண்டர் நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். அரசாங்க மருத்துவ
உத்தியோகத்தர்கள் சங்கமும் தாதிமார் குழுவொன்றும் பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு மருத்துவக் குழுக்களை அனுப்பிவைத்த
அதே சமயம், இலங்கை தேசிய வைத்தியசாலையின் விபத்துச் சேவை நிர்வாக மற்றும் மருந்தக தலைமைச் செவிலியின்
அலுவலகமும் இந்த முயற்சிகளை ஒருங்கிணைத்தன. ஆனால் அவர்கள் அரசாங்க அதிகாரிகளின் பெருமளவு உதவியோ அல்லது
ஒத்துழைப்போ இன்றி தங்கள் சொந்த முயற்சியிலேயே செயற்பட்டனர்.
அரசாங்க மருத்துவ உத்தியோகத்தர்கள் சங்கத் தலைவர்கள், டிசம்பர் 26 அன்று அரசாங்கத்தின்
பேரழிவு நிர்வாக மையத்துடன் தொடர்புகொண்டபோது, அது பொது சுகாதார ஊழியர்களுக்கான எல்லா விடுமுறைகளையும்
இரத்து செய்திருந்த போதும் கூட, மருத்துவ சேவையாளர்களை அனுப்பிவைப்பதற்கு பயனுள்ள திட்டங்களை வகுத்திருக்கவில்லை.
இதனால் தொண்டர்கள் இரவோடு இரவாக நிவாரண சேவை நிலையங்களை அடையத் தள்ளப்பட்டார்கள். சில தாதியர்கள்
கொழும்பு புறநகர்பகுதியான ரத்மலானையில் உள்ள உள்நாட்டு விமான நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டிருந்த
போதிலும் அவர்களுக்கு எந்தவொரு பாதிக்கப்பட்ட பிரதேசத்திற்கும் செல்ல விமானம் கிடைக்கவில்லை.
அரசாங்கத்திடம் திட்டங்கள் கிடையாது என்பது தெளிவானவுடன், அடுத்தநாள் என்ன செய்ய
வேண்டும் என்பதைக் கலந்துரையாடுவதற்காக தாதிமாரும் மருத்துவ அலுவலர்களும் இருதய-மார்பு சிகிச்சைப் பிரிவில்
கூடினர். பின்னர் வழமையான சிகிச்சை திட்டங்கள் இரத்து செய்யப்பட்டு அவசர நிவாரண நடவடிக்கைகளுக்காக ஊழியர்கள்
அனுப்பப்பட வேண்டும் என ஆலோசனை தெரிவிப்பதற்காக ஒரு பிரதிநிதி இயக்குனரை சந்தித்தார். அரசாங்கத்திடமிருந்து
தனக்கு ஆலோசனைகள் கிடைக்கவில்லை என அந்த இயக்குனர் தயங்கினார். இறுதியாக, இந்தக் கட்டுரையின் ஆசிரியர்
உட்பட மூன்று தாதிமார், மேலும் 16 தேசிய வைத்தியசாலை ஊழியர்களுடன் சேர்ந்து தீவின் தென்பகுதியான
ஹம்பந்தொட்டைக்கு விரைந்தனர். அங்குள்ள ஆதார வைத்தியசாலை உதவியின்றி சிரமத்தில் ஆழ்திருந்தது.
ஒரு வைத்திய நிபுணர், உணர்விழக்கச் செய்வோர் (anesthetists),
மருத்துவ அலுவலர்கள் மற்றும் தாதிமார் உள்ளடங்கிய எமது குழுவை சுமார் மு.ப 11 மணியளவில் ரத்மாலானை விமான
நிலையத்திற்கு அழைத்துச் சென்றோம். எங்கள் அனைவருக்கும் கூடிய விரைவில் ஹம்பந்தொட்டைக்கு செல்ல வேண்டியிருந்த
போதிலும், நாங்கள் மாலை 4.30 மணிவரை விமானத்திற்காக காத்திருக்கத் தள்ளப்பட்டோம். ஐக்கிய மக்கள்
சுதந்திர முன்னணியின் ஒரு முக்கிய புள்ளியான அலவி மெளலானாவை அழைத்துச் செல்லும் விமானத்திற்கு வழிவிடுவதற்காக
எங்களை ஓரங்கட்டி வைக்குமாறு விமானப்படைக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது. இராணுவ நிவராண அலுவலர்களும் கூட
பறப்பதற்காகக் காத்திருந்தனர்.
ஹம்பந்தொட்டையிலிருந்து 20 கி.மீ தொலைவில் உள்ள வீரவில விமானப்படைத் தளத்தை
அடைந்தபோதே நாங்கள் அழிவின் பருமணை உணர்ந்து கொண்டோம். கரையோரத்தில் மிகப் பெருமளவிலான
பிரதேசங்கள் துடைத்துக்கட்டப்பட்டிருந்தன. பிரமாண்டமான பேரழிவுகளால் ஆயிரக்கணக்கான வீடுகள், குடிசைகள், ரயில்
தண்டவாளங்கள், ரயில் பெட்டிகள், கொழும்பு-காலி அதிவேக சாலையின் பகுதிகள் மற்றும் காலி மாநகரமும் அடித்துச்
செல்லப்பட்டிருந்தன. அது நாங்கள் நினைத்துக்கொண்டிருந்ததை விட வேறுபட்ட மற்றும் மிகவும் பயங்கரமாகத்
தோன்றியது.
ஹம்பந்தொட்டை ஆதார வைத்தியசாலைக்கு ஒரு வாகனத்தில் பயணித்துக்கொண்டிருந்த
போது சிதைந்துபோன நகரின் பயங்கரமான காட்சிகளை நாம் கண்டோம். பெரும்பாலான வீடுகள், பள்ளிவாசல்கள்
மற்றும் அரசாங்க அலுவலகங்களும் கழுவிச் செல்லப்பட்டிருந்தன. வாகனங்கள் தலைகீழாகப் புரட்டப்பட்டிருந்தன.
மரங்கள், வீட்டுச் சுவர்கள் மற்றும் கூரைகளும் அழிவுக்குள்ளாகியிருந்தன. இரவாகிக்கொண்டிருந்த போதிலும்,
சோர்வடைந்த இராணுவச் சிப்பாய்கள் அங்கும் இங்கும் பரவலாக உடல்களையும் சடலங்களையும் தேடிக்கொண்டிருந்ததை
காணக்கூடியாதாக இருந்தது. பிரதேசத்தில் உள்ள மக்கள் குடும்ப உறுப்பினர்களையும் உறவினர்களையும்
அவநம்பிக்கையோடு தேடிக்கொண்டிருந்தது நெஞ்சை உலுக்கும் காட்சியாக இருந்தது. நாங்கள் எல்லோரும் ஒன்றையே
சிந்தித்தோம்: முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்க வேண்டும்.
மேட்டு நிலத்தில் அமைந்திருந்த ஹம்பந்தொட்டை ஆதார வைத்தியசாலைக்கு எந்தவொரு
பாதிப்பும் ஏற்பட்டிருக்கவில்லை. அருகில் இருந்த வீடுகள் மற்றும் அரசாங்க அலுவலங்களும் சேதமுற்றிராத போதிலும்,
முற்றிலும் அழிவுக்குள்ளான பிரதேசம் மிகத் தொலைவில் இல்லை. நாங்கள் வைத்தியசாலையை அடைந்த உடனேயே
துர்நாற்றம் எங்களைத் தாக்கியது. எங்கு பார்த்தாலும் இரத்தமும் சேறுமாகக் காணப்பட்டன. ஆஸ்பத்திரியின் ஒரு
பகுதியில் கிடத்தப்பட்டிருந்த நூற்றுக்கணக்கான சடலங்களில் இருந்தே அந்த துர்நாற்றம் வீசியது. ஊழியர்கள் பேரழிவின்
பருமனால் குழம்பிப் போயிருந்தார்கள்.
ஒரு வைத்தியசாலை ஊழியர் நிலைமையை விளக்கினார்: "வைத்தியர்கள், தாதிமார் மற்றும்
மருந்தக சேவகர்கள் உட்பட பல உத்தியோகத்தர்களை நாம் இழந்துவிட்டோம். ஏனையவர்கள் குழும்ப அங்கத்தவர்களை
இழந்துள்ளனர். பலர் தங்களுடைய முழு உடமைகளும் அழிந்து போன நிலையில் சேவைக்கு சமூகமளிக்க முடியாமல்
உள்ளனர். இதற்கு முன்னரும் கூட இந்த வைத்தியசாலை உத்தியோகத்தர்கள் மற்றும் வசதிகள் பற்றாக்குறைக்கு
முகங்கொடுத்தது. விபத்துக்குள்ளானவர்கள் முடிவின்றி வரத்தொடங்கியுள்ளனர். எங்களுக்கு என்ன செய்வதென்றே
தெரியவில்லை. சிறிது நேரம் தாமதமாகியே எங்களுக்கு நிவாரண சேவைகள் கிடைக்கத் தொடங்கின."
எங்களுடைய மருத்துவக் குழு சுமார் இரவு 7.30 மணியளவில் வேலையை ஆரம்பித்தது.
நாங்கள் உள்நோயாளர் பகுதிகளுக்குள் சென்றபோது நோயாளர்கள் வலியால் அலறிக்கொண்டிருந்தனர். அனைவரும்
தங்களது அன்புக்குரியவர்களின் இழப்பால் துயரத்தில் ஆழ்ந்திருந்தனர். பலர் தமது உடமைகளை இழந்திருந்தனர்.
நோயாளர்களின் உடல்கள் எங்கும் சேறும் மணலுமாக இருந்தது. அவர்கள் பெரும் காயங்களுடனும் கிழிந்த மற்றும்
அழுக்கான ஆடைகளை அணிந்திருந்தனர். சிலர் இரத்தத்தில் ஊறிப்போய் விரிப்புகள் இன்றி மெத்தைகளில்
கிடத்தப்பட்டிருந்தனர்.
பலரது காயங்களில் ஏற்கனவே தொற்றுக்கள் பரவியிருந்ததுடன் அவர்களுக்கு
சிகிச்சையளிப்பதும் சிரமமாக இருந்தது. ஜெனடமைசின் மற்றும் சிபுரொக்ஸிமைன் (Gentamicin
and Cefuroxime) போன்ற அடிப்படை தொற்று எதிர்ப்பு
மருத்துகள் கூட இருக்கவில்லை. பெரும்பாலான நோயாளிகளுக்கு ஏற்புவலி தடுப்பூசிகள் கொடுக்கப்பட்டிருக்கவில்லை. சில
நோயாளர் பிரிவுகளில் ஈபுபுரோபென் மற்றும் டிக்லோபெனக் சோடியம் (ibuprofen
and diclofenac sodium) போன்ற வலிநிவாரணிகள் கூட
கிடையாது. நோயாளர்கள் வேதனையால் அழுதுகொண்டிருந்தனர். ஏனைய இடங்களில் மென்மையான பட்டுத் துணிகள்,
பருத்தி மற்றும் போவிடன் அயோடின் திரவங்கள் (gauze,
cotton and povidone iodine solutions) கூட
இருக்கவில்லை.
எங்களது குழுத் தலைவர் சில சாத்தியமற்ற தீர்மானங்களை எடுக்கவேண்டிய தேவையை
எதிர்கொண்டார். மிகவும் மோசமாக சுகயீனமடைந்த கயாமடைந்திருந் ஒரு நோயாளிக்காக நஞ்சருந்தியிருந்த ஒரு
நோயாளி அதி தீவிர சிகிச்சைப் பிரிவிலிருந்து வெளியில் எடுக்கப்பட்டார். அங்கு வேறு வெற்றுக் கட்டில்கள்
இருக்கவேயில்லை. "எங்களிடம் போதுமானளவு உறிஞ்சும் வடிகுழாய்கள், கையுறைகள், குளுதரல்டிஹைட் (gluteraldihide)
மற்றும் ஏனைய அத்தியாவசிய உருப்படிகள் இல்லை. சேவைகளை தொடர்ந்தும் முன்னெடுப்பதற்கு எங்களிடம் ஊழியர்களும்
கிடையாது," என ஒரு தாதி என்னிடம் குறிப்பிட்டார்.
நோயாளர்களின் வருத்தங்களை இலகுவாக்குவதற்காக பல மணித்தியாலங்களாக
முயற்சித்துக்கொண்டிருக்கும் சோர்வடைந்த தாதிமாரையும் சுகாதார ஊழியர்களையும் நாம் கண்டோம். மக்கள்
காணாமல்போன தங்கள் குடும்ப உறுப்பினர்களை எதிர்பார்த்த வண்ணம், மோசமான நாற்றத்தை அடக்குவதற்காக
முகங்களை துண்டுத் துணிகளால் மூடிக்கொண்டு ஒவ்வொரு நோயாளர் பிரிவுக்கும் சென்று நோயாளர்களின் முகங்களைத்
தேடிக்கொண்டிருந்தனர்.
இராணுவச் படைப் பிரிவுகள் இரவு பகலாக இறந்த உடல்களை அகற்றும் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.
உடல்கள் வீங்கிப்போய் தண்ணீர் ஒழுகிக்கொண்டிருந்ததால் அவற்றை தூக்குவதே கடினம் என்று ஒருவர் விளக்கினார். அவை
ஆஸ்பத்திரி தூக்கு இயந்திரங்களைப் பயன்படுத்தி வாகனங்களில் ஏற்றப்பட்டு புதைகுழிகளில் புதைக்கப்படவிருந்தன.
ஆஸ்பத்திரிக்கு வந்த தொண்டர்கள் உணவு, துணி மற்றும் குடி தண்ணீர் போன்ற அடிப்படை
பொருட்களை கையளித்தனர். தனக்கு சிறுவர்கள் அணியும் ஆடைகளைத் தந்துவிட்டதாக ஒரு முதியவர் முறைப்பாடு செய்தார்.
ஏனையவர்கள் கிடைப்பதை பெரிதாக மதித்தனர். அரசாங்கம் அவசர நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுள்ள சுகாதார ஊழியர்களுக்கு
உணவு வழங்காததால் நாங்களும் தொண்டர்களால் வழங்கப்பட்ட உணவுப் பொருட்களிலேயே தங்கியிருக்க வேண்டியிருந்தது.
எங்களது சத்திர சிகிச்சை குழு கடுமையான சிரமங்களை எதிர்நோக்கியது. எண்ணெய்
பற்றாக்குறையால் ஆஸ்பத்திரியில் இருந்த மின்னியந்திரம் பல தடவைகள் நின்றுபோன காரணத்தால் அவசர
சத்திரசிகிச்சைகளை பின்போட வேண்டியதாயிற்று. ஓய்வின் போது, நிலைமையையிட்டு வைத்தியர்கள் ஆத்திரத்தை
வெளிப்படுத்தினார்கள். திட்டம் மற்றும் உதவியின்மைக்காக அரசாங்கத்தை அவர்கள் குற்றம்சாட்டினார்கள். "அரசாங்கம்
ஏனைய நாடுகளில் இருந்து மருத்துவ குழுக்களுக்கு அழைப்பு விடுக்கின்றது. ஆனால் தேவையான இடங்களுக்கு இன்னமும்
அவர்கள் கொழும்பில் இருந்து தொண்டர் வைத்தியர்களை அனுப்பி வைக்கவில்லை," என அவர்கள் குறிப்பிட்டனர்.
டிசம்பர் 28 அன்று, இன்னுமொரு மருத்துவக் குழு எங்களைப் பதிலீடு செய்வதற்காக வந்து
சேர்ந்தது. அதே தாமதங்களை அனுபவித்த அவர்களும் காலையில் தயாராகி இரவாகியே வந்து சேர்ந்தனர். இரவு
முழுவதுமாக சேவையாற்றிய நாம், அடுத்தநாள் காலையில் புறப்படும் போது முற்றிலும் சோர்வடைந்திருந்தோம்.
போக்குவரத்து வழங்கப்பட்டிருந்ததால் நாங்கள் பஸ்ஸில் பயணிக்கத் தீர்மானித்தோம். அந்தப் பயணமும் அதிர்ச்சிகள்
நிறைந்ததாக இருந்தது. ஹம்பந்தொட்டைக்கு அருகில் இருந்த ஒரு ஏரியில் இன்னமும் இறந்த உடல்கள்
மிதந்துகொண்டிருந்தன. அகதி முகாங்களுக்கு வெளியில் மக்கள் உணவு மற்றும் தண்ணீருக்காக குழுமியிருந்தனர்.
வனவிலங்கு திணைக்களத்தில் உள்ள விலங்குகளின் அடிச்சுவடு பார்க்கும் தொழிலாளியும் பஸ்ஸில்
பயணித்தார். "இன்று மீட்புக் குழுக்கள் யால வனவிலங்குகள் காப்பகத்தில் ஒரு ஏழு வயது சிறுவனை கடுமையான
காயங்களுடன் கண்டுபிடித்தனர். சேதமான வள்ளத்தில் ஒருவர் உயிருடன் மிதந்துகொண்டிருக்கும் போது
கண்டுபிடிக்கப்பட்டார். இன்னமும் உயிருடன் இருப்பவர்களைத் தேடுவதற்காக மீட்புப் பணியாளர்களை அரசாங்கம்
அனுப்பாதது ஏன்? என அவர் கேள்வியெழுப்பினார்.
கொழும்புக்கு வந்த பின்னர், இன்னுமொரு தென்பகுதி நகரான மாத்தறைக்கு சென்றிருந்த
ஒரு மருத்துவப் பணியாளருடன் நாங்கள் அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டோம். சிகிச்சைகள் வழங்கப்படாவிட்டால் மேலும்
பலர் உயிர் இழக்கக்கூடும் என அவர் எச்சரித்தார். "குறிப்பிட்டளவு மக்கள் இன்னமும் வெளிப்படையான காயங்களைக்
கொண்டுள்ளனர். சர்க்கரை நோய், உயர் இரத்த அழுத்தம், இதய நோய் மற்றும் சுவாச நோயாளர்களும் அங்கு
உள்ளனர். சிகிச்சையளிக்கப்படாவிட்டால் தொற்று நோய் ஆபத்துக்கு மேலதிகமாக, இந்த நிலைமைகளும்
மோசமாகும்," என அவர் குறிப்பிட்டார். |