World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Sri Lankan president imposes anti-democratic emergency laws

இலங்கை ஜனாதிபதி ஜனநாயக விரோத அவசரகாலச் சட்டத்தை அமுல்செய்துள்ளார்

By K. Ratnayake
31 January 2005

Back to screen version

இலங்கை ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க, தீவின் 25 மாவட்டங்களில் 14 மாவட்டங்களுக்கு அவசரகாலச் சட்டத்தை இரகசியமாக பிரகடனம் செய்வதன் மூலம் டிசம்பர் 26 சுனாமி பேரழிவுகளுக்கு விடையளித்துள்ளமை ஒரு அடிப்படை ஜனநாயக உரிமைகள் மீதான மோசமான தாக்குதலாகும். அரசியல் விமர்சனம் அல்லது எதிர்ப்பை நசுக்குவதற்கு பொலிஸ், இராணுவம் மற்றும் அதிகாரிகளுக்கும் அதிகாரமளிக்கும் இந்த தீர்மானம், ஜனவரி 4 அன்று அமுல்படுத்தப்பட்ட போதும் ஜனவரி 25 அன்றே பகிரங்கப்படுத்தப்பட்டது.

இந்த அவசரகால கட்டளை, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்தாலன்றி இலங்கை வெகுஜன உரிமைகள் இயக்கத்தாலேயே முதன் முதலாக பகிரங்கப்படுத்தப்பட்டது. ஜனவரி 13 அன்று வெகுஜன பாதுகாப்பு இயக்கம் வெளியிட்ட ஒரு அறிக்கையில், சட்ட ஒழுங்குகள் வெளியிடப்பட்டிருக்காததையிட்டு அக்கறை செலுத்தியதோடு, மக்கள் தாம் எந்த சட்டத்தின் கீழ் ஆளப்படுகிறார்கள் என்பதை தெரிந்திருப்பது "இன்றியமையாதது" என்றும் பிரகடனப்படுத்தியுள்ளது.

அவசரகால சட்டத்தை அமுலாக்கிய தினத்திற்கு முன்தினமான ஜனவரி 3ம் திகதி, குமாரதுங்க நிவாரண நடவடிக்கைகளுக்கு பொறுப்பாக இராணுவத்தை அமர்த்தினார். பாதுகாப்பு அதிகாரிகளின் தலைவரான அட்மிரால் தயா சந்தகிரி நிவாரண நடவடிக்கைகளின் முழுப்பொறுப்பாளாராக நியமிக்கப்பட்டதுடன், 12 மாவட்டங்களுக்குமான நிவாரண இணைப்பாளர்களாக உயர்மட்ட அலுவலர்களும் நியமக்கப்பட்டனர். இராணுவம் பல இலட்சக்கணக்கான அகதிகளின் புகலிடங்களில் நிவாரண முகாம்களை நிர்வகிக்கவும், மாவட்ட மற்றும் மாகாண மட்டங்களில் சிவில் நிர்வாகத்தை நடத்தவும் பொறுப்பேற்றது.

இந்த அசாதாரணமான நடவடிக்கைகளையிட்டு ஜனாதிபதி நியாயப்படுத்தல்களை வழங்கவில்லை. அவசரகால நிலைமையானது "வெகுஜனப் பாதுகாப்பு நலன்கள்," "பொதுஜன ஒழுங்கைப் பாதுகாத்தல்" மற்றும் "சமுதாயத்தின் ஜீவியத்திற்கு அத்தியாவசியமான வழங்கல்கள் அல்லது சேவைகளை பராமரிப்பது" என பிரகடனம் குறிப்பிடுகிறது. எவ்வாறெனினும், குமாரதுங்கவோ அல்லது அரசாங்கமோ அடிப்படை ஜனநாயக உரிமைகளை நசுக்குவதன் மூலம் சுனாமி பேரழிவில் பாதிப்புக்குள்ளானவர்களுக்கு உதவுவது எப்படி என்பதைப் பற்றி எந்த விளக்கமும் கொடுக்கவில்லை.

கொழும்பு ஊடகங்கள், சுனாமியின் தாக்குதலுக்குள்ளான பிரதேசங்களில் கொள்ளை, துஷ்பிரயோகம் மற்றும் சிறுவர் கடத்தல்கள் பற்றி அதிகம் மிகைப்படுத்தப்பட்ட அறிக்கைகளை சுட்டிக்காட்டுவதன் மூலம் குமாரதுங்கவின் முடிவுக்கு நியாயம் கற்பிக்க முயல்கின்றன. இத்தகைய சம்பவங்கள் தனிமைப்படுத்தப்பட்டவையாக இருப்பதோடு, பலவற்றை உள்ளடக்கிய அவசரகால அதிகாரங்களை அமுல்படுத்துவதை நியாயப்படுத்த முடியாது. சாதாரண உழைக்கும் மக்களின் அசாதாரணமான பிரதிபலிப்புகள் நிதி உதவி மற்றும் தொண்டர் சேவைகளின் மூலம் பேரழிவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதாக இருந்தது. அவசரகால நிலைமையானது, எல்லாவற்றுக்கும் மேலாக, தனது நிவாரண நடவடிக்கைகளின் பூதாகாரமான குறைபாடுகள் சம்பந்தமாக பரந்த அதிருப்தியை எதிர்கொண்டுள்ள அரசாங்கத்தை காப்பாற்றுவதையே இலக்காகக் கொண்டுள்ளது.

அவசரகால சட்டவிதிகளின் இலக்கு நிவாரணப் பணிகளுக்கு மட்டும் வரையறுக்கப்பட்டதல்ல. "தேசியப் பாதுகாப்பு நலன்கள்" மற்றும் "பொதுஜன ஒழுங்கை பேணுதலின்" பேரில் அதிகாரத்தை பயன்படுத்துவதற்கான "மேற்கோள்கள்" ஆவணத்தில் மீண்டும் மீண்டும் காட்டப்படுகின்றன. வேறு வார்த்தைகளில் கூறினால், சுனாமியின் போதோ அல்லது அதன் பின்னரோ பயன்படாத விடயங்கள் சம்பந்தமாக செயற்படுவதற்கு இராணுவம், பொலிஸ் மற்றும் அலுவலர்களுக்கு பரந்த அதிகாரங்களைக் கொடுத்துள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான 20 வருடகால போரின் ஒரு பாகமாக, அடுத்தடுத்து ஆட்சிக்கு வந்த கொழும்பு அரசாங்கங்கள் யாவும் கொடூரமான அவசரகால சட்டத்தை அமுல்செய்வதில் நீண்ட வரலாற்றைக்கொண்டுள்ளன. இராணுவமும் பொலிசும் தமிழ் சிறுபான்மையினரை அச்சுறுத்தவும் நசுக்கவும் பயன்படுத்தியுள்ளதோடு, பயங்கரவாத தடைச் சட்டத்தின் உதவியுடன் ஆயிரக்கணக்கான தமிழர்களை விசாரணையின்றி தடுத்து வைத்துமுள்ளது. இயற்கை அழிவின் பேரில் அவசரகால நிலைமை பிரகடனப்படுத்தப்பட்டிருப்பது இதுவே முதற் தடவையாகும்.

இந்த புதிய சட்ட விதிகள், சுனாமியால் நேரடியாகப் பாதிப்புக்குள்ளான தெற்கு மற்றும் கிழக்கு கடற்கரையோர மாவட்டங்களுக்கு மட்டுமன்றி, கொழும்பு கம்பஹா போன்ற மேற்கு மாவட்டங்களுக்கும் திணிக்கப்பட்டுள்ளது. இவை பெருமளவில் பாதிக்கப்படாத மாவட்டங்களாக இருந்த போதிலும், தலைநகரைச் சுற்றி பாரிய குடித்தொகையை உள்ளடக்கிய பிரதேசங்களாகும். இந்தப் பிரதேசங்களில் பொலிஸ், ஆயுதப் படை அல்லது ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட எவருக்கும் பரந்த அதிகாரங்கள் உள்ளன.

*இச் சட்டவிதிகளின்படி, பொதுத்துறை அலுவலர்கள் மத்தியில் "விசுவாசமின்மையை" உருவாக்குவது; "பொதுஜன பாதுகாப்பு, பொதுஜன ஒழுங்கு அல்லது அத்தியாவசிய சேவைகளுக்கு கேடு விளைவிக்கக் கூடிய" போஸ்டர்கள், விளம்பரங்கள் அல்லது துண்டுப் பிரசுரங்களை விநியோகிப்பது; அல்லது "வெகுஜனத்தை பீதிக்குள் அல்லது ஒழுக்கமின்மைக்குள் ஆழ்த்துவதாகத் தோன்றும்" எந்தவொரு "வதந்தி அல்லது பொய் அறிக்கைகளையும் பரப்புவது" ஒரு குற்றமாகும். ஆகவே, தெளிவுபடுத்தப்படாத இந்த நிபந்தனைகளின் கீழ், அரசாங்கத்தை விமர்சிக்கும் அல்லது எதிர்க்கும் எவரும் மூன்று மாதங்களுக்கு குறைவாகவும் ஐந்து வருடங்கள் வரையும் சிறைத்தண்டனைக்கு ஆளாகக் கூடிய குற்றவாளியாக காணப்படலாம்.

பிரதேசத்தில் உள்ள இராணுவ கட்டளைத் தளபதிகள் எந்தவொரு கட்டிடத்தையோ அல்லது இடத்தையோ கையேற்க முடியும். ஜனாதபதியால் நியமனம் பெற்ற "தகுதிவாய்ந்த அதிகாரியால்" எந்தவொரு வாகனத்தையும் கையேற்க முடியும். அதிகாரிகளுக்கு எந்த நபரையும் எந்தவொரு வேலைக்காகவும் வேண்டுகோள் விடுக்க அதிகாரம் உள்ளது. மற்றும் உதவி அல்லது தேசிய பாதுகாப்புடன் அல்லது அத்தியாவசிய சேவைகளை பாரமரிப்பதுடனும் தொடர்புபட்ட எந்தவொரு தனிநபர் சேவையையும் பெற்றுக்கொள்ள முடியும்

*12வது விதியின் கீழ், வேலை நிறுத்தங்கள் மற்றும் அனைத்து கைத்தொழில் நடவடிக்கைகளையும் சட்டவிரோதமாக்கும் வகையில், "எந்தவொரு சேவையையும் அத்தியாவசிய சேவையாக்கும்" அதிகாரம் ஜனாதிபதிக்கு உண்டு. அவரது அல்லது அவளது பணியை மேற்கொள்ளத் தவறும் எந்தவொரு தொழிலாளியும் வேலையிலிருந்து நீக்கப்பட்டு, அரசாங்க வீடுகளில் இருந்து விரட்ட மற்றும் குற்றம்சாட்டப்பட முடியும். அதே போல், அத்தியாவசிய சேவையில் ஈடுபட்டுள்ள ஒருவரை தொந்தரவு செய்வது, தடுப்பது அல்லது தவிர்ப்பதும் குற்றமாகும். அத்தியாவசிய சேவை ஊழியர்களை அவர்களது தொழில்களை முன்னெடுக்க வேண்டாம் என தூண்டுவது அல்லது உற்சாகப்படுத்துவதும் கூட ஒரு குற்றச்செயலுக்கான காரணமாகலாம்.

*இந்த சட்டவிதிகள், பாதுகாப்பு படையினரால் அல்லது அத்தியாவசிய சேவைகளுக்காக கையேற்கப்பட்டுள்ள பிரதேசங்களுக்குள் "அதிகாரமின்றி நுளைவதை தடுக்க" அனுமதி வழங்குகிறன. இத்தகைய அதிகாரங்கள், தெற்கில் கரையோரத்திலிருந்து 100 மீட்டர்களுக்கிடையிலும் வடக்கு மற்றும் கிழக்கில் கரையோரத்திலிருந்து 200 மீட்டர்களுக்கிடையிலும் வீடுகளை மீள நிர்மாணிக்கும் நடவடிக்கைகளுக்கு எதிராக அரசாங்கத் தடையை திணிப்பதற்குப் பயன்படுத்தப்படலாம். மீனவர்களும் மற்றும் ஏனையவர்களும் தங்களது தொழில்களை மேற்கொள்ளவிடாது தடுக்கும் இந்த நடவடிக்கயை எதிர்க்கின்றனர்.

*16வது விதியின் பிரகாரம், கடத்தல், ஆள் கடத்தல் மற்றும் துஷ்பிரயோகம் போன்ற குற்றவியல் கோவையின் கீழ் அத்தகைய குற்றங்களைப் புரிந்ததாக சந்தேகிக்கப்படும் எந்தவொரு நபரையும் தேடவும், தடுத்துவைக்கவும் மற்றும் பிடி ஆணையின்றி கைதுசெய்யவும் பொலிஸ் மற்றும் இராணுவப் பாதுகாப்புப் படையினருக்கு பரந்த அதிகாரங்கள் வழங்கப்படுகிறது. இந்த சட்டவிதிகள் நடப்பில் உள்ள பொலிஸ் நடைமுறைகளை மாற்றியமைப்பதோடு பாதுகாப்பு படைகளின் கரங்களை உயர்ந்தளவில் பலப்படுத்துகிறது.

*அவசரகாலச் சட்டத்தின் கீழ் அதிகாரங்களை நடைமுறைப்படுத்தும் எவருக்கும் இடையூறு ஏற்படுத்துவதும் ஒரு குற்றமாகும். இந்த சட்டவிதிகளை மீறும் குற்றவாளிக்கு உதவுவதும் ஒரு குற்றமாகும். உள்ளூர் அதிகாரிகளுக்கு ஒரு குற்றத்தைப் பற்றி அறிவிக்காமல் இருப்பதும் ஒரு குற்றமாகும். தடுத்து வைக்கப்பட்டிருக்கும் எவரும் கேள்விகளுக்கு பதிலளிக்கக் கட்டுப்பட்டவராவார். எல்லாவற்றுக்கும் மேலாக, அவர் ஒரு பொலிசார் அல்லது இராணுவ அலுவலரின் பொறுப்பில் தற்காலிகமாக தடுத்துவைக்கப்பட முடியும்.

*இத்தகைய முறையில் பெற்றுக்கொள்ளப்பட்ட எந்தவொரு ஒப்புதல் வாக்குமூலமும் மற்றும் அறிக்கைகளும் குற்றம் சாட்டப்பட்டுள்ளவருக்கு உரித்தானதாக கண்டுபிடிக்கப்பட்ட எந்தவொரு புத்தகம், ஆவனம் அல்லது பத்திரிகைகளையும் சட்ட நடவடிக்கைகளின் போது முன்வைப்பது அனுமதிக்கப்பட்டுள்ளது. அவசரகால சட்டவிதிகளின் கீழான குற்றங்கள் சம்பந்தமான நீதிமன்ற வழக்குகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும். அரசாங்க அதிகாரிகளை எதிர்க்கத் தீர்மானித்திருப்பவர்களை தடுத்துவைக்கவும் விசாரிக்கவும் பரந்த விதிமுறைகள் உள்ள போதிலும், இந்த சட்டவிதிகளின் கீழ் அதிகாரங்களை நடைமுறைப்படுத்தும் எவருக்கும் எதிராக சட்டமா அதிபரைத் தவிர வேறு எவராலும் சட்ட நடவடிக்கைகளை எடுக்க முடியாது.

அவசரகால சட்டத்திற்கான அவசரமான உந்துதல் சுனாமியால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு உதவுவதற்காக அன்றி, அரச இயந்திரங்களின் சுதந்திரமான நடவடிக்கைகளை உறுதிப்படுத்துவதற்கேயாகும். இந்த சட்டவிதிகள், பாதுகாப்புப் படைகளை விமர்சிக்கும், எதிர்க்கும் அல்லது இடையூறு செய்பவர்களை இலக்காகக் கொண்டுள்ளதோடு, அவர்களைக் கைதுசெய்யவும், தடுத்து வைக்கவும், விசாரிக்கவும் மற்றும் நடப்பில் உள்ள குறைந்தபட்ச சட்ட உத்தரவாதங்கள் கூட இன்றி வழக்குத் தொடரவும் அனுமதிக்கின்றன.

இத்தகைய கொடூரமான நடவடிக்கைகளை இரகசியமாக அமுல்செய்யும் குமாரதுங்கவின் முடிவானது அவரது நிர்வாகமும் மற்றும் முழு அரசியல் ஸ்தாபனமும் எதிர்கொண்டுள்ள ஆழமான நெருக்கடிகளையே கோடிட்டுக் காட்டுகின்றது. சுதந்திர முன்னணி அரசாங்கம், கடந்த ஏப்பிரலில் வாழ்க்கைத் தரத்தை முன்னேற்றுவதாகவும் மற்றும் விடுதலைப் புலிகளுடனான சமாதானப் பேச்சுக்களை மீண்டும் தொடங்குவதாகவும் வாக்குறுதியளித்து ஆட்சிக்கு வந்த போதிலும், இரண்டையும் செய்யத் தவறியுள்ளது. சுனாமிக்கு முன்னரே கூட தனது தவறிய வாக்குறுதிகளுக்கு எதிராக வளர்ச்சி கண்டுவரும் எதிர்ப்புக்கும் ஆத்திரத்திற்கும் சுதந்திர முன்னணி முகம்கொடுத்தது.

இப்போது, உத்தியோகபூர்வ மதிப்பீட்டின்படி சுமார் 40,000 பேர் உயிரிழந்துள்ளதுடன் ஏறத்தாள பத்துலட்சம் மக்கள் இடம் பெயர்ந்துள்ளனர். உயிர் மீண்டவர்களில் அநேகமானவர்கள் தமது குடும்ப அங்கத்தவர்கள், வீடுகள், உடமைகள் மற்றும் தமது ஜீவனோபாயங்களையும் இழந்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் தவிர்க்க முடியாத வகையில் மிக வறியவர்களாகவும் ஆதரிப்பதற்கு எவரும் இல்லாதவர்களாகவும் உள்ளனர். பேரழிவுகள் நடந்து ஒரு மாதத்தின் பின்னரும் பலருக்கு எந்தவொரு உதவியும் கிடைத்திருக்கவில்லை.

இந்த ஆரம்ப அதிர்ச்சியானது, அரசாங்கத்தின் நிவாரண நடவடிக்கைகளின் பற்றாக்குறையான மற்றும் ஒழுங்கற்ற தன்மையையிட்டு ஐயத்தையும் ஆத்திரத்தையும் தூண்டுவதாக மாற்றமடைந்துள்ளது. கடற்கரையை அண்மித்த பிரதேசங்களில் வீடுகளை மீளமைப்பதற்கு அரசாங்கம் விதித்துள்ள தடை மற்றும் உதவிகள் வழங்கப்படாமையையிட்டும் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றுள்ளன. சுனாமி, முன்னைய சமூக மற்றும் அரசியல் பதட்ட நிலைமைகளை மேலும் அதிகரிக்கச் செய்துள்ளதுடன், ஜனத்தொகையின் பரந்த தட்டினர் அரசாங்கத்திலிருந்து மட்டுமன்றி முழு அரசியல் அமைப்புமுறையில் இருந்தே தனிமைப்பட்டிருப்பதை உக்கிரமடையச் செய்துள்ளது.

அரசியல் ஸ்தாபனம் சமூக அமைதியின்மையின் ஆபத்து பற்றி மிகவும் கவனமாக உள்ளது. அதன் விளைவாக குமாரதுங்கவின் எதேச்சதிகார முடிவுகளுக்கு எந்தவொரு அரசியல் கட்சியிடமிருந்தோ அல்லது எந்தவொரு ஊடகங்களிடமிருந்தோ எதிர்ப்பு எழவில்லை. குமாரதுங்கவின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு அடுத்ததாக சுதந்திர முன்னணியில் இரண்டாவது பெரும் பங்காளியாகவுள்ள மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி), "பரந்த அதிகாரங்களை உடைய" ஒரு தேசிய நிலையத்தை அடிப்படையாகக் கொண்ட "தேசத்தை மீளக் கட்டியெழுப்புவதற்கான" தனது சுய திட்டங்களை சமர்ப்பித்துள்ளது.

நாற்றமெடுத்துள்ள இடதுசாரி கட்சிகளான லங்கா சமசமாஜக் கட்சி (ல.ச.ச.க) மற்றும் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியும் சுதந்திர முன்னணியில் அங்கம் வகிக்கின்றன. ல.ச.ச.க தலைவர்கள் அவசரகால சட்ட கட்டளையையிட்டு மெளனம் சாதிக்கின்றனர். இதே போல் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவரும் அரசியலமைப்பு விவகார அமைச்சருமான டி.இ.டபிள்யு. குணசேகரவும் கடந்த ஞாயிற்றுக் கிழமை வரை மெளனம் சாதித்துவிட்டு, நிலைமை கட்டுப்பாட்டுக்குள் வந்தபின்னர் அவசரகால சட்டத்தை நீக்கிவிட அரசாங்கம் எண்ணுவதாக விளக்கமளித்துள்ளார்.

பிரதான எதிர்க் கூட்டணியான பழமைவாத ஐக்கிய தேசிய முன்னணி, இந்த அவசரகால சட்டவிதிகள் குறித்து எந்தவித அறிக்கையையும் வெளியிடவில்லை. ஊடகங்களைப் பொறுத்தவரையில், குமாரதுங்கவின் தீர்மானத்தைப் பற்றிய எந்தவொரு அறிக்கையையும் பிரசுரிக்காது அவற்றின் ஒடுக்குமுறை இயல்பு பற்றி எந்தவொரு விமர்சனமும் எழாத விதத்தில் செயலாற்றுகின்றன.

இலங்கையின் அரசியலமைப்பு சட்டத்தின் பிரகாரம், அவசரகால சட்டமானது பிரகடனப்படுத்தப்பட்டு ஒரு மாத காலத்திற்குள் பாராளுமன்ற அங்கீகாரத்தைப் பெற்றிருக்க வேண்டும். அங்கீகாரம் பெப்பிரவரி 6ம் திகதிக்குள் பெற்றிருக்க வேண்டிய நிலையில் பாராளுமன்றம் 8ம் திகதியே கூடவிருப்பதால் அவசரகாலச் சட்டம் பயனற்றதாகிவிடும் என்றே தோன்றுகிறது. ஆனால் இது மிக இரகசியமாக அறிமுகப்படுத்தப்பட்டமையும் அது குறித்து எந்தவொரு எதிர்ப்பும் எழாமையும், முழு ஆளும் வர்க்கமும் தனது ஆளுமையை தக்கவைக்க மிகவும் ஜனநாயக விரோத வழிவகைகளை பயன்படுத்த சற்றும் தயங்கமாட்டாது என்ற கூர்மையான எச்சரிக்கையை உழைக்கும் மக்களுக்கு விடுத்துள்ளன.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved