World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : நேபாளம்

Nepalese king seizes power with the backing of the military

இராணுவ ஆதரவுடன் நேபாள மன்னர் அதிகாரத்தைக் கைப்பற்றுகிறார்

By W.A. Sunil
8 February 2005

Use this version to print | Send this link by email | Email the author

நாட்டின் அரசியல் நெருக்கடியை தீவிரப்படுத்தக்கூடிய நடவடிக்கையாக, நேபாளத்தின் முடியாட்சியாளரான மன்னர் க்யானேந்திரா, கடந்த வாரம் பிரதம மந்திரி ஷேர் பகதூர் தியூபாவை அகற்றிவிட்டு, நிர்வாக அதிகாரங்கள் அனைத்தையும் முழுமையாக எடுத்துக் கொண்டு, இராணுவத்திற்கு பெரும் அதிகாரங்களை கொடுக்கும் நெருக்கடி நிலைமையையும் பிரகடனப்படுத்தியுள்ளார்.

க்யானேந்திராவின் முடிவு பெப்ரவரி 1ம் தேதி அறிவிக்கப்பட்டு, அரசியல் கட்சிகள், மாணவர் அமைப்புக்கள் மற்றும் எதிர்க்கட்சிக் குழுக்கள் என்று பலரையும் கைது செய்யும் நடவடிக்கையை தொடர்ந்தது. அவர் உலகின் ஏனைய பகுதிகளில் இருந்து நாட்டை தனித்து வைக்கும் முறையில், இணையம், தொலைபேசித் தொடர்புகளை துண்டித்தார். சர்வதேச தொலைபேசி அழைப்புக்கள் இன்னும் தடைக்கு உட்பட்டுள்ளன; உள்ளூர் அழைப்புக்கள் நாள் ஒன்றிற்கு 5 மணி நேரம், இரவு இரண்டரை மணி நேரம்தான் என்று விதிக்கப்பட்டுள்ளது நேபாளத்தில் இருந்து மற்றநாடுகளுக்கு செல்லும் விமானப் போக்குவரத்து, வெளிநாடுகளில் இருந்து வரும் விமானங்கள் ஆகியவையும் மூன்று நாட்களுக்குத் தடை செய்யப்பட்டன.

குறைந்தது 50 அரசியல் தலைவர்களும், மற்றும் 1,500 அரசியல், மனித உரிமை ஆர்வலர்களும், மாணவர் தலைவர்களும் சிறையில் அல்லது வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இதில், நேபாள பிரதம மந்திரி, நேபாள கம்யூனிஸ்ட் கட்சி ஐக்கிய மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் தலைவர் (CPN-UML) மாதவ குமார் நேபாள், நேபாளி காங்கிரஸ் (NCP) தலைவர் கிர்ஜா பிரசாத் கொய்ராலா ஆகியோரும் அடங்குவர். கிட்டத்தட்ட 45 அரசு-சாரா அமைப்புக்களும் மூடப்பட உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

அவசரகால நிலைமைகளின்கீழ், நாட்டின் மட்டுப்படுத்தப்பட்ட அரசியலமைப்பு சுதந்திரங்கள் இல்லாமற் செய்யப்பட்டு விட்டன. இவற்றில் பத்திரிகை உரிமை, பேச்சுரிமை, கூடும் உரிமை, தனிநபர் இரகசிய உரிமை, தடுப்புச் சட்டத்தில் இருந்து காப்பு உரிமை ஆகியவை அடங்கும். அதிகாரத்தை காண்பிக்கும் வகையில், அதிக ஆயுதங்கள் ஏந்தி படைகள் முக்கியமான இடங்களில் நிறுத்தப்பட்டு, தலைநகரின் முக்கிய இடங்களிலும் பாதுகாப்புப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

அச்சிடுதல், மின்னணுச் செய்தி ஊடகமும் கடுமையான தணிக்கைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது; இதில் அரசரது நடவடிக்கை, நெருக்கடி, மற்றும் இராணுவப் படைகள் நடவடிக்கைகள் பற்றி ஆறு மாத காலம் ஏதும் கூறக்கூடாது என்ற தடையும் இருக்கிறது. இராணுவ அதிகாரிகள் தொலைக்காட்சி, வானொலி நிலையங்களில் நிறுத்தப்பட்டு நிகழ்ச்சிகள் ஒலி/ஒளி பரப்பப்படுமுன் தணிக்கை செய்யப்படுகின்றன. Asia Times வலைதளத்திடம் ஓர் பத்திரிகை ஆசிரியர் தெரிவித்தார்: "இப்பொழுதுள்ள ஆட்சியின் நலனுக்கு எதிராக எதையும் செய்யக்கூடாது என்ற தெளிவான எச்சரிக்கையை நாங்கள் பெற்றுள்ளோம்."

நேபாளச் செய்தியாளர் சங்கத்தின் தலைவர் தாராநாட் தஹால் மற்றும் பொதுச் செயலாளர் பிஷ்ணு நிஷ்தூரி இருவரும் மன்னருடைய முடிவைக் கண்டித்து, ஜனநாயக ஆட்சி மீட்கப்பட வேண்டுமென்று கோரி அறிக்கை ஒன்றை வெளியிட்டதற்காக கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த புதன் கிழமையன்று, இராணுவம் ஹெலிகாப்டர்களையும் படைகளையும் பயன்படுத்தி காட்மாண்டுவில் இருந்து சுமார் 200 கி.மீ. தொலைவில் உள்ள பொக்காராவில் உள்ள நாராயண் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற மாணவர் எதிர்ப்பு நசுக்கப்பட்டது. கிட்டத்தட்ட 15 மாணவர்கள் காயமடைந்தனர்.

அதிகாரத்தைக் கைப்பற்றுகையில், அரசர் க்யானேந்திரா, பிரதம மந்திரி தியூபாவை, "பாராளுமன்ற தேர்தல்கள் நடந்ததற்காகவும், மாவோவிஸ்ட் எழுச்சியை அடக்காததற்காகவும்" குற்றம் சாட்டியுள்ளார். ஆனால் அரசரும் உடனடியாக தேர்தல்களை நடத்தும் விருப்பத்தை கொண்டிருக்கவில்லை. "சமாதானத்தையும் திறமை மிகுந்த ஜனநாயகத்தையும்" மீட்க அவர் உறுதிமொழி கொடுத்துள்ளார்; அதேநேரத்தில் அடுத்த மூன்று ஆணடுகள் தன்னிடத்திலேயே அதிகாரத்தை வைத்துக் கொள்ளப் போவதாகவும் வலியுறுத்தியுள்ளார். வியாழக்கிழைமை அவர் தனக்கு நெருக்கமானவர்கள் 10 பேர் அடங்கிய அமைச்சர்குழு ஒன்றை பதவியில் இருத்தினார்.

புதிய மந்திரிசபை மாவோவியிச தலைவர்களை சமாதானப் பேச்சு வார்த்தைகளுக்கு அழைத்துள்ளபோது, இந்த "அழைப்பு" நீண்டகாலமாக நடைபெற்று வரும் உள்நாட்டுப் போருக்குப் பேச்சு வார்த்தகைகள் மூலம் தீர்வு காண வேண்டும் என்ற உண்மையான முயற்சியைக் கொண்டிராமல் ஓர் எச்சரிக்கை விடுப்பதுபோல்தான் உள்ளது. புதிதாக பதவியில் இருத்தப்பட்டுள்ள கல்வி மந்திரி ராதா கிருஷ்ண மைனாலி செய்தி ஊடகத்திடம் கடந்த வாரம் தெரிவித்தார்: "அவர்கள் (பேச்சு வார்த்தைகளுக்கு வருவார்கள் என்றால்), நாமும் உறுதியாக முன்னேறுவோம். அவர்கள் வரவில்லை என்றால் நாம் வேறு விருப்பத்தைப் பயன்படுத்துவோம்."

முடியாட்சியின் முக்கிய தூணாக இருக்கும் இராணுவம் தான் தாக்குதலைத்தான் கையாளும் என்பதை தெளிவாக்கியுள்ளது; இதன் நோக்கம் மாவோயிச எதிர்ப்பாளர்களைப் பேச்சு வார்த்தைகள் நடத்தக் கட்டாயப்படுத்துவது ஆகும். கடந்த வாரம் மூத்த அதிகாரிகளுடன் பேசுகையில், இராணுவத் தலைவர் ப்யார் ஜங் தபா அறிவித்தார்: "மாட்சிமை தங்கிய மன்னரின் அழைப்பான ஆயுதங்களைக் களைந்து விட்டு, நாட்டின் முக்கிய செயற்பாடுகளுடன் இணையாமல் வன்முறையை தொடர்ந்தால், மாவோயிஸ்டுகள்மீது இராணுவம் கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும்."

அதிகாரத்தை எடுத்துக் கொள்ளுகையில், க்யானேந்திரா இராணுவத்தை "பயங்கரவாதத்தை" எதிர்த்து போரிடுவதற்காக புகழ்ந்ததுடன் அரசியல் கட்சிகள் நேர்மையற்று இராணுவத்தைக் குறைகூறுவதாகவும் குற்றம் சாட்டினார். நேபாள முடியாட்சியின் இராணுவம் இப்பொழுது 138,000 படைவீரர்களாகப் பெருகி, கடந்த மூன்று ஆணடுகளாக இந்தியாவிலும் அமெரிக்காவிலும் பயிற்சியையும், ஆயுதங்களையும் பெற்றுள்ளது. இராணுவ அதிகாரி சாதி அரசியல் வாழ்வில் அதிகரித்த அளவில் தலையிட்டுள்ளது. கடந்த டிசம்பர் மாதம் RNA வெளிப்படையாக மாவோயிசக் கொரில்லாக்கள் ஒருதலைப்பட்சமாக அறிவித்திருந்த போர்நிறுத்தத்தை பதிலுக்கு ஏற்றுக்கொண்டதற்காக தியூபாவை வெளிப்படையாக எதிர்த்தனர்.

தங்கள் பங்கிற்கு மாவோயிஸ்டுகள் முடியாட்சியுடன் இணைந்து ஒத்துழைப்பதற்கு தயாராக இருப்பதாக விருப்பத்தை தெரிவித்துள்ளனர். CPN-UML உட்பட அனைத்து பெரிய அரசியல் கட்சிகளும் இரு புறத்தினரையும் சமரசம் காண வேண்டும் என்றும், குறைந்தது 11,000 உயிர்களையாவது குடித்துள்ள ஏழு-ஆண்டு எழுச்சிக்கு முற்றுப் புள்ளி வைக்குமாறும் வலியுறுத்தி வருகின்றனர். பிரதம மந்திரி தியூபா பேச்சுவார்த்தைகளுக்கான தளத்தை நிறுவுவதில் முயற்சி எடுத்துவந்தார். அரசரும், இராணுவமும் தங்கள் தீர்மானத்தின்படிதான் போர் முடிவுக்கு வரவேண்டும் என்ற நிலையில் உள்ளன.

ஆதரவைத் திரட்டும் வகையில் அரசர் அரசியல் கட்சிகளின் உட்பூசல்கள், ஊழல்கள் இவற்றை முடிவிற்கு கொண்டுவருவதாக உறுதிமொழி அளித்துள்ளார். அதேநேரத்தில், அரசருக்கு ஆதரவாக சிறிய முறையில் ஆர்ப்பாட்டங்கள் காட்மாண்டுவில் செய்தி ஊடகத்தின் கவனத்திற்காக நிகழ்த்தவும் பெற்றன.

க்யானேந்திராவோ பெரும் புகழற்ற நிலையில்தான் இருக்கிறார். 200lம் ஆண்டில் இளவரசர் வெறிச் செயல் ஒன்றில் ஈடுபட்டதில் அரசர் பீரேந்திரா (க்யானேந்திராவின் சகோதரர்), மற்றும் நேப்பாள அரசுக் குடும்பத்தின் கணிசமான உறுப்பினர்கள் கொல்லப்பட்டு விட்டனர். இந்தக் குழப்பமான விவகாரம் ஒழுங்காக விசாரணை செய்யப்படவில்லை; பல நேபாளிகளும் இன்னும் க்யானேந்திராவிற்கு கொலைகளில் தொடர்பு இருந்ததாகத்தான் நம்புகின்றனர்.

அரசியல் தலைவர்களை ஊழல் மிகுந்தவர்கள் என்று குற்றம் சாட்டும்போது, க்யானேந்திராவுக்கு கணிசமான சொந்த வணிக நலன்கள் உள்ளன. நாட்டின் மிகப் பெரிய சிகெரெட் தொழிற்சாலை, ஓர் ஐந்து-நட்சத்திர ஓட்டல், மற்றும் கிழக்கு நேபாளத்தில் தேயிலைத் தோட்டம் ஒன்று ஆகியவற்றில் அவருக்கு பெரும் பங்கு உள்ளது என்று பலரும் நினைக்கிறார்கள். அரசர் என்று பதவியில் இருத்தப்பட்டபின்னர், க்யானேந்திரா தன்னுடை பிடியை அதிகாரத்தின்மீது இறுக்கமாகக் கொண்டுள்ளார். 2002ல் அவர் தியூபாவைப் பதவியில் இருந்து அகற்றிவிட்டுப் பாராளுமன்றத்தையும் கலைத்துவிட்டு தொடர்ச்சியாகத் தன்னுடைய ஆதரவாளர்களைப் பதவியில் இருத்தினார். கடந்த ஜூன் மாதம்தான் தியூபாவை அவர் ஜனநாயக ஆதரவாளர்கள் அதிக எதிர்ப்புக் கொடுத்திருந்த போதிலும் மீண்டும் பதவியில் அமர்த்தினார். நேபாளத்தில் 1999க்குப் பிறகு தேசியத் தேர்தல்கள் நடத்தப்படவில்லை.

மாவோயிச தலைவரான பிரச்சண்டா கடந்த புதன் கிழமை, "தேசத்தைக் காட்டிக் கொடுத்தவர்" எனறு அரசரை கண்டித்துள்ளார்; மேலும் தன்னுடைய நேபாள கம்யூனிஸ்ட் கட்சி-மாவோயிசக் கட்சி (CPN-M) "மக்கள் ஆதரவு சக்திகளுடன் பேச்சு வார்த்தைகள் நடத்தும் என்றும் ... [மேலும்] ... எழுச்சியின் தன்மை பெருக்கப்படும்" என்றும் தெரிவித்தார். மாவோயிசத்தினர் அழைப்பு விடுத்திருநத்த மூன்ற நாட்கள் பொது வேலைநிறுத்தம் கடுமையான தணிக்கை, காட்மாண்டுவில் ஏராள இராணுவக் குவிப்பு போன்றவற்றால் நடக்கமுடியாமற் போயிற்று. CPN-M முக்கியமான செல்வாக்கைக் கிராமப்புறத்தில் பெற்றுள்ளது; இதற்குக் காரணம் அங்கு வறுமை, வேலையின்மை இவற்றால் அதிருப்தி பரந்த அளவில் பரவியிருக்கும் தன்மையை அவர்கள் பயன்படுத்திக் கொண்டதுதான். நாட்டின் 75 மாவட்டங்களில் 65 தங்கள் கட்டுப்பாட்டிற்குள் இருப்பதாக மாவோயிஸ்டுகள் கூறியுள்ளனர்.

சர்வதேச எதிர்ப்பு

க்யானேந்திரா அதிகாரத்தை கைப்பற்றியதானது அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் மற்றும் இந்தியாவில் தீவிர எதிர்ப்பை தோற்றுவித்துள்ளது. இந்தியாவும் அமெரிக்காவும் நேபாள இராணுவத்தை பலப்படுத்திக் கொண்டிருந்தாலும் இரண்டு நாடுகளும் எதிர்க்கட்சியடன் சேர்ந்து கொண்டு அரசர் மாவோயிஸ்டுகளை தனிமைப்படுத்தவேண்டும் என்று வலியுறுத்தி வந்துள்ளன. கடந்த ஆண்டு உலக வங்கியும் கொடையளிக்கும் நாடுகளும் ஓர் அறிக்கை வெளியிட்டன; அதில் ஜனநாயகம் அங்கு மீட்கப்படவேண்டும் என்று கோரப்பட்டது. தியூபா பிரதம மந்திரியாக நியமிக்கப்பட்ட தினத்தில்தான், உலக வங்கி $40 மில்லியன் டாலர்கள் உதவித்தொகையை நேபாளத்திற்கு அளிக்கும் அறிவிப்பும் வெளிவந்தது.

அமெரிக்க அரசுத்துறையின் செய்தித் தொடர்பாளரான ரிச்சர்ட் பெளச்சர் தியூபா பதவியில் இருந்து நீக்கப்பட்டதை கடுமையாக விமர்சித்துள்ளதாவது: "நாங்கள் மிகவும் உளைச்சலுக்குட்பட்டுள்ளோம் என்று கூறுவேன்... இந்த நடவடிக்கைகள் நேபாளியர்கள் மாவோயிஸ்டுகளிடம் காட்டும் போராட்டத்தை கீழறுத்துவிடும் என்று நினைக்கிறோம்." நேபாள தூதருடன் நடத்திய பேச்சுவார்த்தையின்போது பிரிட்டனின் வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் டக்ளஸ் அலெக்சாந்தரும் இதேபோன்ற கருத்துக்களைத்தான் கூறியுள்ளார். "இந்த நடவடிக்கை நேபாளத்தின் உறுதியற்ற தன்மையை அதிகரிக்கக் கூடும்" என்ற எச்சரிக்கையை அவர் விடுத்ததுடன் முடியாட்சியைக் கூட இது ஆபத்திற்குட்படுத்தக் கூடும் என்றும் தெரிவித்தார்.

இந்திய வெளியுறவுத்துறை வெளியிட்ட அறிக்கை ஒன்று அரசரின் நடவடிக்கைகள் சுதந்திரத்திற்கு "தீவிரப் பின்னடைவு" என்று குறிப்பிட்டு, பாராளுமன்றத் தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளது. இந்தியப் பிரதம மந்திரி மன்மோகன் சிங், க்யானேந்திரா இக்கூட்டத்தில் பங்கு பெறுவதாகக் கூறியவுடன், SAARC (South Asian Association for Regional Cooperation) பிராந்திய ஒத்துழைப்பிற்கான தெற்கு ஆசிய அமைப்பு பங்களாதேஷில் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் கலந்து கொள்ளுவதை இரத்து செய்துள்ளார்.

மேற்கூறிய அறிக்கைகள் எதுவுமே நேபாள மக்களின் ஜனநாயக உரிமைகளைக் காப்பதில் எந்தப் பங்கையும் கொண்டிருக்கவில்லை. இந்தச் சிறிய ஏழ்மை நிறைந்த இமாலய அடிவார நாடு தீவிரமான போட்டியின் குவிமையமாக மாறிக் கொண்டு வருகிறது. இந்தியா இந்த அரசாட்சி நாட்டை அதன் மூலோபாய காப்பிற்காக கருத்துடன் கவனித்து வருவதால், நேபாளம் இந்தியாவின் மரபுமுறையிலான பகுதிப் போட்டியாளர்களான சீனா அல்லது பாகிஸ்தான் புறம் நற்பார்வையைச் செலுத்தினால், தீவிரமாக எதிர்த்துள்ளது. இந்தியாவுடன் நெருக்கமான தொடர்பை வளர்த்து வரும் வாஷிங்டன் சீனாவைச் சுற்றி வளைக்க வேண்டும் என்ற மூலோபாய முயற்சிகளின் ஒரு பகுதியாக நேபாளத்துடனும் நெருங்கிய தொடர்புகளை கொள்ள முயல்கிறது.

அதிகாரத்தைக் கைப்பற்றியதால், அரசர் க்யானேந்திரா சீனாவிடம் இருந்தும், பாகிஸ்தானிடம் இருந்தும் ஆதரவை எதிர்பார்க்கக் கூடும் என்று இந்திய அரசாங்கம் கவலை கொண்டுள்ளது. உண்மையில் இந்த இருநாடுகளும் நிலைமையை பயன்படுத்திக் கொள்ளக்கூடும் என்ற அடையாளங்கள் இருக்கின்றன; அல்லது அரசரின் நடவடிக்கைகள் பற்றி அவற்றிற்கு முன்னரே தெரிந்திருக்கக் கூடும். தியூபா வெளியேற்றப்படுவதற்கு சற்று முன்புதான் பெய்ஜிங்கின் நீண்ட நாள் கோரிக்கைகளுள் ஒன்றான, நாடுகடத்தப்பட்டிருந்த திபேத்திய தலாய் லாமாவின் காத்மாண்டு அலுவலகத்தை அரசர் க்யானேந்திரா மூடுமாறு உத்தரவிட்டார். இதற்குப் பதிலுதவி என்னும் வகையில் சீனாவின் வெளியுறவுத்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் காங்க்வோன் செய்தி ஊடகத்திடம் க்யானேந்திராவின் செயல் "நேப்பாள உள்நாட்டுப் பிரச்சினை" என்று கூறிவிட்டார்.

பாகிஸ்தான் ஒருபடி மேலேயே சென்று நேப்பாளத்திற்கு "அனைத்து உதவியையும் பயங்கரவாதிகளை எதிர்ப்பதற்கு கொடுக்கப்படும்" என்றும், "பாகிஸ்தான் அந்நாட்டின் இராணுவம் மற்றும் சிவில் அதிகாரிகளுக்கு பயிற்சி தரும்" என்றும் பிரதம மந்திரி செளகத் அஜிஸ் உறுதியளித்துள்ளார். நேபாளத்தில் தன்னுடைய செல்வாக்கு குன்றிவிடும் வகையில் நிகழ்வுகள் ஏற்பட்டுவிடுமோ என்ற எதிர்பார்ப்பில், இந்தியா க்யானேந்திராவிடம் தன்னுடைய நிலையைச் சற்று தளர்த்தியுள்ளது. இந்திய அதிகாரிகள் புதிய அரசாங்கத்திடம் தொடர்பு கொள்ளப் போவதாகக் குறிப்பிட்டுள்ளனர்.

சர்வதேச அரங்கில் மிகச் சக்திவாய்ந்த அரசாங்கங்களிடையே சூழ்ச்சியைக் கையாளும் வகையிலும், உள்நாட்டு எதிர்ப்பை அடக்க இராணுவத்தின் மீதான நம்பிக்கையிலும் ஓரு பெரும் ஆபத்து ஏற்படக் கூடிய விளையாட்டை க்யானேந்திரா செய்துகொண்டிருக்கிறார். இவருடைய வழிவகைகள் தவிர்க்கமுடியாமல் விரோதத்தையும் எதிர்ப்பையும் பெருக்கும்; சொல்லப்போனால் காலம் கடந்து என்பதற்கு பதிலாக முன்னரே இது நிகழக்கூடும். திங்கட்கிழமையன்று 24 மனித உரிமை குழுக்களும், தொழில்முறை அமைப்புக்களும் அரசரின் ஆணைகளை மீறி காட்மாண்டுவில் வியாழக்கிழமை நடக்கவிருக்கும் ஒரு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ளனர். தன்னுடைய சொந்த நிலைமையை தக்கவைத்துக் கொள்ளுவதற்கு க்யானேந்திரா அரசியல் வெடிமருத்துக் குவியலுக்கே நெருப்பை வைத்துள்ளார்.

See Also:

நேபாள மன்னர் புதிய ஆட்சியை நியமித்த பின்னரும் நீடிக்கும் கொந்தளிப்பு

Top of page