WSWS :Tamil
:
செய்திகள்
ஆய்வுகள்
:
வட அமெரிக்கா
Cheney at Auschwitz: an insult to the
memory of Nazism's victims
அவுஸ்விட்ஸ்சில் செனி:
நாசிசத்தால் பாதிக்கப்பட்டவர்கள் நினைவை இழிவுபடுத்துவதாகும்
By Bill Van Auken
28 January 2005
Use this version
to print |
Send this link by email |
Email the author
சோவியத் செஞ்சேனை துருப்புக்கள் அவுஸ்விட்ஸ் நாசிக் கொலை முகாமிலிருந்து
மக்களை விடுவித்த 60 வது ஆண்டு நிறைவு நாளில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உரையாற்றிய அமெரிக்க துணை ஜனாதிபதி
டிக் செனி "தீங்கு நடப்பது உண்மை என்பதை நமக்கு இது நினைவுபடுத்துகிறது" என்று அறிவித்தார்.
"மனசாட்சியில்லாத மனிதர்கள், மனிதமனம் கற்பனை செய்யக்கூடிய எந்த
கொடுமையையும் செய்கின்ற வல்லமை படைத்தவர்கள். மற்றும் ஒவ்வொரு தலைமுறையிலும், சுதந்திர நாடுகள்
தங்களது உறுதிப்பாட்டையும், முன்னறிவையும் கொண்டு கொடுங்கோன்மையை எதிர்த்து போரிடுகின்ற சக்தியை நிலைநாட்டியாக
வேண்டும். மற்றும் சமாதானத்திற்கு இட்டுச் செல்லும் சுதந்திரத்தை பரப்ப வேண்டும்" என்று அமெரிக்க துணை ஜனாதிபதி
அந்த நினைவு நாளில் குறிப்பிட்டார்.
"தீங்கு நடப்பது உண்மை" என்பதை நமக்கு நினைவுபடுத்துவதற்கு அவுஸ்விட்ஸ்சில்
நடைபெற்ற பயங்கரங்களை குறிப்பிட்டு நினைவுபடுத்த வேண்டிய அவசியமில்லை. ஆனால், 20 ம் நூற்றாண்டில்
நடைபெற்ற மிகப்பெரிய குற்றம் நடந்த இடத்தில் செனி ஆஜராகி வெற்றுரை வழங்குவது ஒரு உறையவைக்கும் முக்கியத்துவமாகும்.
ஐரோப்பாவில் பொதுவாகவும் மற்றும் போலந்தில் குறிப்பாகவும் அந்த நினைவு தின
நிகழ்ச்சியில் புஷ் நேரடியாக கலந்துகொள்ளாதது ஒரு குறிப்பிடத்தக்க அக்கறையற்ற நடவடிக்கையாக எடுத்துக்
கொள்ளப்படுகிறது. வாஷிங்டனின் அலட்சியப்போக்கை மிகத்தெளிவாக எடுத்துக்காட்டுகின்ற ஒரு சம்பவம் கவனிக்கப்படாமல்
விடப்பட்டிருக்கிறது. -----குறைந்தபட்சம் ஒத்தூதுகின்ற ஊடகங்கள் அதை செய்திருக்கின்றன. அதே இடத்திற்கு
ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்னர் அமெரிக்க ஜனாதிபதியும் அவரது மனைவியும் விரைவு சுற்றுப்பயணம் ஒன்றை மேற்கொண்டு
அந்த முகாமிற்கு வந்து ஆற்றிய உரையின் பகுதிகளை செனியின் உரை அப்படியே காப்பியடித்திருப்பதாக அமைந்திருக்கிறது.
(see: "A
presidential visit to Auschwitz: The Holocaust and the Bush family
fortune")
செனி, அவருக்கு முந்தி புஷ் வந்ததைப்போல், அவுஸ்விட்ஸ்சிற்கு வந்தது ஒரே
நோக்கத்தை உள்ளத்தில் வைத்துதான். வாஷிங்டனின் சொந்த ஆக்கிரமிப்பு மற்றும் மனித நேயமற்ற செயல்களை
நியாயப்படுத்துவதற்கு ஹிட்லரது பாசிச அட்டூழியங்களை திரித்து பயன்படுத்திக் கொள்வதற்குதான் ஆகும்.
1995 ல் நடைபெற்ற 50 வது ஆண்டு நிறைவு தினத்தைவிட, இந்த ஆண்டு நிகழ்ச்சி
பல்வேறு காரணங்களால் கவனத்தை அதிகம் கவர்ந்திருப்பதுடன் மேலும் பல அரசுத் தலைவர்கள் கலந்து
கொண்டனர். இதில் ஒரு பக்கம் பெரிய வல்லரசுகளின் நலன்கள் சம்மந்தப்பட்டிருக்கின்றன. அவுஸ்விட்ஸ் நினைவு
தினமும், ஜேர்மன் மூன்றாவது குடியரசின் குற்றங்களை தள்ளுபடி செய்வதும், கிழக்கு ஐரோப்பா நோக்கிய
விரிவாக்கத்திற்கான ஒரு பொதுவான அரசியல் மற்றும் சித்தாந்த கட்டுக்கோப்பை உருவாக்கும் முயற்சியோடு
பின்னிப் பிணைந்து கிடக்கிறது.
இதில் அதிக அளவில் மனிதநேயக் கண்ணோட்டங்களும் உள்ளன. அந்தக் கொலை
முகாமிலிருந்து உயிர் பிழைத்தவர்களது எண்ணிக்கை தற்போது ஒரு சிலராக குறைந்துள்ளது. சோவியத்
படையினர்களில் ஒரு சிலர் தற்போது வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். அந்த முகாமை விடுவித்தபோது, அவர்கள்
நேரில் கண்ட ஒழுக்கம் சிதைந்த காட்சிகளையும், எதிர்கொண்ட சாவுகளையும் கண்டு அதிர்ச்சியடைந்தனர். அந்தத்
தலைமுறை முழுவதும் உலக அரங்கிலிருந்து விடைபெற்றுக் கொண்டு வருகிறது என்ற உணர்வு தற்போது வளர்ந்து
கொண்டிருக்கிறது.
அந்த முகாமிலிருந்து உயிர் தப்பியவர்களில் ஒருவரான 80 வயதான பிரான்சிஸ்க்
ஜோசேபியக் என்பவர், தனது தந்தை அவுஸ்விட்ஸ்சில் விஷவாயு அறையில் மடிந்ததைப் பார்த்தார். மற்றும் அவர்
நாசிக்களின் கையில் கொடூரமான சித்திரவதைகளையும், முறைகேட்டையும் சந்தித்திருக்கிறார். "இன்றைய செய்தி
என்ன? இனி அவுஸ்விட்ஸ்சில் எதுவுமில்லை. ஆனால், உலகம் இதுவரை இதிலிருந்து எதனையும் கற்றுக் கொள்ளவில்லை.
தற்போது உலகின் எல்லா இடங்களிலும் ஒருவருடன் ஒருவர் சண்டையிட்டுக் கொண்டு ஒருவரை ஒருவர் கொலை
செய்து கொண்டிருப்பதை நீங்கள் பார்க்கிறீர்கள். இன்றைய தினம், நினைவு ஆண்டு தினம் என்பதால் ஏராளமாக
பேசுகிறார்கள். ஆனால், நாளை அவர்கள் இதனை மறந்து விடுவார்கள்" என்று அவர் அசோசியேடட் பிரஸ்ஸிடம்
தெரிவித்தார்.
அவுஸ்விட்ஸ் ஆண்டு நிறைவு தினத்தின் மிக முக்கியமான சுண்டியிழுக்கும் மூலாதாரத்தை
தொட்டு இன்றைய தினம் மிக உச்சக் கட்டமாக எதிரொலிக்கும் சோகத்தை ஜோசேபியக் நினைவுபடுத்தினார்.
உலகம் மீண்டும் இராணுவவாத பெருக்கத்தை சந்திக்கிறது. சர்வதேச அளவிலான பதட்டங்கள் ஆழமாகின்றன. ஜனநாயக
மற்றும் மனித உரிமைகள் மீது வளர்ந்து வரும் தாக்குதல்கள் தீவிரமாகின்றன. இந்தப் போக்குகள் நாசி ஆட்சியில்
இறுதி வடிவம் பெற்றன. மற்றும் அதன் "இறுதித் தீர்வாகவும்'' அமைந்தன. உலகம் ஒரு புதிய புத்தாயிரம்
ஆண்டில் அடியெடுத்து வைத்தாலும், முந்திய நூற்றாண்டினது படுமோசமான காட்டுமிராண்டித் தனங்கள் நமக்கு நெருக்கமாகிக்
கொண்டிருப்பதாகத் தோன்றுகிறது. மற்றும் அத்தகைய அட்டூழியங்கள் மீண்டும் நடத்தப்படுவதற்கான சாத்தியக்
கூறுகளும் அதிகரித்துள்ளன.
ஆட்சியில் இருப்பவர்கள் சொல்ல முடியாத கொடுமைகளை செய்கின்ற வல்லமை
படைத்தவர்கள் என்பதை செனி, தனது உரையை கேட்க வந்திருப்பவர்களிடம் ஒரு உரையாற்றி ஞாபகப்படுத்த
வேண்டியதில்லை. அவர் அங்கு அமர்ந்திருப்பதே போதுமானதாகும். உலகின் வேறு எந்தத் தலைவரையும்விட
அத்தகைய படுமோசமான தீங்குகளோடு அவர்தான் அதிகமாக அடையாளப்படுத்துபவராக திகழ்கிறார்.
அமெரிக்க மக்களின் சார்பில் அவுஸ்விட்ஸ்சில் கலந்து கொள்வதற்கு செனி யார்?
அமெரிக்காவில் மிகத் தீவிரமான வலதுசாரி சக்திகளின் பிரதிநிதியாக, அமெரிக்க துணை ஜனாதிபதி அடையாளப்
படுத்தப்பட்டிருக்கிறார். 1980 களில், வைமிங்கிலிருந்து (Wyoming)
குடியரசுக் கட்சியின் சார்பில் நாடாளுமன்றத்தில் பணியாற்றிய அவர், தென்னாப்பிரிக்காவில் இன ஒதுக்கல் ஆட்சியை
ஆதரித்து நின்றார். கால் நூற்றாண்டுகளாக சிறை வைக்கப்பட்டிருந்த நெல்சன் மண்டேலாவை விடுதலை செய்ய
வேண்டும் என்ற தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்தார். உள்நாட்டில் வளர்ந்துவிட்ட இனவாதிகளின் தயவை நாடி
நின்ற அவர், அதே போன்று மார்ட்டின் லூதர் கிங்கின் பிறந்த நாளை அரசாங்க விடுமுறை நாளாக அறிவிக்கும்
தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்தார்.
மூத்த புஷ் நிர்வாகத்தில் பாதுகாப்புத்துறை செயலராக செனி பணியாற்றியபோதும்,
தற்போது துணை ஜனாதிபதியாக பங்களிப்புச் செய்வதிலும் வாஷிங்டனின் பூகோள நோக்கங்களை சாதிப்பதில்
இராணுவ வலிமையை பயன்படுத்துவதை மிக ஆவேசமாகவும் வெளிப்படையாகவும் ஆதரித்து நிற்கிறார். மற்றும்
அவர், முதலாவது பாரசீக வளைகுடா போரை நேரில் கண்காணித்தவர். ஈராக் மீது சட்ட விரோதமான
ஆக்கிரமிப்பு மற்றும் ஆக்கிரமிப்பிற்கு ஒரு முதன்மை ஏற்பாட்டாளராக பணியாற்றியவர். ஹிட்லர் காலத்து "பெரிய
பொய்" காலத்திற்கு பின்னர், வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு பொதுமக்களை ஏமாற்றும் பிரச்சாரத்தை
முன்னின்று நடத்தியவர்.
இதற்கு இடைப்பட்ட காலங்களில் பென்டகனின் பிரதான ஒப்பந்த எண்ணெய்
தொழிற்துறை இராட்சத நிறுவனமான ஹாலிபேர்ட்டனில் பிரதம நிர்வாக அதிகாரியாக செனி பணியாற்றி
செல்வந்தர் ஆனர். ஹாலிபேர்ட்டனுக்கு பென்டகன் ஒப்பந்தம் மூலம் கிடைக்கின்ற கொள்ளை இலாபத்தில் அவர்
துணை ஜனாதிபதியும் ஆனார்.
செனியின் ஒட்டுமொத்த அரசியல் மற்றும் வர்த்தக அனுபவத்தை கொண்டு பார்க்கும்
போது, இரண்டாவது உலகப் போருக்கு பிந்திய அமெரிக்காவில் அவர் பிறந்திருக்காமல், அந்தப் போருக்கு
முந்திய ஜேர்மனியில் பிறந்திருப்பாரானால், அவர்தான் வளரும் பருவத்தில் நாசி ஆட்சியில் இடம்பிடித்திருப்பார்.
அல்லது நாசிக்களுக்கு நிதியளித்து கைதி முகாம்களில் அடிமைத் தொழிலாளர்களை கசக்கி பிழிந்து வேலை வாங்கி
லாபம் சம்பாதித்த பெருநிறுவன கிரிமினல்களில் ஒருவராக ஆகியிருப்பார்.
புஷ் நிர்வாகம் மூன்றாவது குடியரசு அல்ல மற்றும் செனி நாசியல்ல. ஆனால்,
ஜேர்மன் ஏகாதிபத்தியம் 1930 களில் சென்ற வழியும் மற்றும் இன்றைய தினம் வாஷிங்டனிலுள்ள அரசாங்கம் சென்று
கொண்டிருக்கிற வழியும் உண்மையானவை, அதற்கு இணையானவை, அவை மகத்தான புறநிலை வேர்களைக்
கொண்டவையாக உள்ளன. ஒரு வாரத்திற்கு முன்னர் தனது பதவியேற்பு விழா உரையில் புஷ் முன்னெடுத்து வைத்த
பூகோள அமெரிக்க இராணுவ ஆக்கிரமிப்பு அச்சுறுத்தலை எதிரொலிப்பதற்கு அவுஸ்விட்ஸ் நினைவு நாளை செனி
பயன்படுத்தி "கொடுங்கோன்மைக்கு எதிராகப் போரிட்டு சமாதானத்திற்கு இட்டுச் செல்லும் சுதந்திரத்தை பரப்ப
வேண்டும்" என்று பாசுரம் பாடினார்.
அமெரிக்க துணை ஜனாதிபதி போலந்து வந்திருந்தது இந்த ஆக்கிரமிப்பு நீடிப்பதோடு
பின்னிப் பிணைந்திருக்கிறது. அவரது விஜயத்தின் பிரதான புறநிலைகளில் ஒன்று ஈராக்கிலிருந்து தனது 2400
துருப்புக்களையும் விலக்கிக்கொள்ளும் திட்டத்தை கொண்டு செல்ல வேண்டாம் என்று போலந்து அரசாங்கத்தை
கேட்டுக்கொள்வதற்காக ஆகும். ஈராக்கில் அமெரிக்க மற்றும் பிரிட்டிஷ் ஆக்கிரமிப்பு படைகளுக்கு அப்பால்
எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க அளவை கொண்ட படைப்பிரிவு போலந்தாகும்.
ஆக்கிரமிப்பு போரும் நாசிக்களின் குற்றங்களும்
தமது மூலோபாயத்தை முன்னெடுத்துச் செல்வதற்கான ஒரு மேடையாக அவுஸ்விட்சை
செனி பயன்படுத்திக் கொண்டதில் ஒரு இரக்கமற்ற வஞ்சகப் புகழ்ச்சி உள்ளது.
நாசி ஆட்சியில் மீதமிருந்த தலைமையை சேர்ந்தவர்கள் மீது நூரம்பேர்க்கில் ஒரு
சர்வதேச போர்க் குற்றங்கள் தொடர்பான நீதிமன்றத்தின் முன் விசாரணை நடத்தப்பட்டது. அந்த விசாரணையில்,
அவர்கள் ஆக்கிரமிப்பு போரை நடத்துவதற்கு சதி செய்தார்கள் என்பதுதான் பிரதான குற்றச்சாட்டாக இருந்தது.
நாசி தலைவர்களுக்கு தூக்கு தண்டனை விதித்த அந்தத் தீர்ப்பு ஆக்கிரமிப்பு போர் நடத்துவது "அடிப்படையிலேயே
ஒரு தீங்கான செயல்" என்று அறிவித்தது. அத்தகைய ஒரு போரைத் துவக்குவது, "ஒரு சர்வதேசக் குற்றம்
மட்டுமே அல்ல, அது மிக உயர்ந்த சர்வதேசக் குற்றம், இதர போர்க் குற்றங்களிலிருந்து ஒருவகையில்தான்
வேறுபட்டது, அது என்னவென்றால் அதற்குள்ளேயே ஒட்டு மொத்த தீங்குகளும் பொதிந்து கிடக்கின்றன" என்று
அறிவித்தது.
ஆக அரசுத் தரப்பு கருத்தின்படி நாசிக்கள் புரிந்த அட்டூழியங்கள் ----அவுஸ்விட்ஸ்
மற்றும் 6 மில்லியன் ஐரோப்பிய யூதர்களின் கொலை, ஜேர்மனியின் தொழிலாளர்கள் இயக்கம் அழிக்கப்பட்டது,
அனைத்து அரசியல் எதிர்க்கட்சிகளும் கலைக்கப்பட்டது---- ஆகிய அனைத்தும் ஆக்கிரமிப்பு போர் அடிப்படைக்
கொள்கையிலிருந்து ஊற்றெடுத்து வந்தவை ஆகும்.
இந்த நீதிமன்றத்தில் விசாரணை முடிவு அறிக்கையை தாக்கல் செய்த தலைமை
வழக்குரைஞர் அமெரிக்க உச்ச நீதிமன்ற நீதிபதி ரோபர்ட் ஜாக்சன் தங்களது குற்றங்கள் தொடர்பாக குற்றம்
சாட்டப்பட்ட நாசிக்கள் அவர்களது செயல்களை நியாயப்படுத்துவதற்கு எடுத்துரைத்த ஒரு முக்கியமான வாதங்களை
தள்ளுபடி செய்தார். "குற்றம் சாட்டப்பட்டிருப்பவர்களில் சிலர் தாங்கள் துவக்கிய போர் ஆக்கிரமிப்பு போர்
அல்ல என்று வாதிட்டார்கள். மற்றும் அந்தப் போர், 'கம்யூனிச அபாயம்' ஓரளவிற்கு ஆபத்தாக உருவாவதை
எதிர்த்து ஜேர்மனியை பாதுகாக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்தை கொண்டதாக கருதினர், பல நாசிக்களுக்கு
கம்யூனிசம் என்கிற உறுத்தல் ஒரு மன பிதற்றலாகவே ஆகிவிட்டது" என்று ஜாக்சன் கூறினார்.
"கம்யூனிசம்" என்ற சொல்லுக்கு பதிலாக, "பயங்கரவாதம்" என்ற சொல்லை
சேர்த்துக் கொண்டால், புஷ், செனி மற்றும் அவர்களது குழுவினர் தங்களது பாதுகாப்பு போர்க் கொள்கைக்கு
தந்துள்ள அடிப்படை நியாயவாதம் கிடைக்கும். ஈராக்கிற்கு எதிராக அவர்கள் புரிந்த போர்க் குற்றங்கள்
தொடர்பாக அவர்கள் மீது விசாரணை வருமானால், குற்றம்சாட்டும் தரப்பு அவர்களது வழக்கில் நூரம்பேர்க்
கொள்கை பொருந்தி வருவதை நிலைநாட்டுவதற்கு ஜாக்சனது வார்த்தைகளை மட்டுமே மேற்கோள் காட்டிவிட
முடியும்.
அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஆக்கிரமிப்பு போர்க் கொள்கை அவுஸ்விட்ஸ் அளவிற்கு
கொலைகளை இன்னும் நிலைநாட்டவில்லை. ஆனால், இந்த மூலோபாயத்திற்கு புத்துயிர் கொடுத்திருப்பதன் மூலம்
அத்தகைய அட்டூழியங்களுக்கு வழி திறந்து விட்டிருக்கிறது. அது விஷவாயு அறைகளையும் கல்லறைகளையும்
உருவாக்கவில்லை என்றாலும், கியூபாவில் குவாண்டாநாமோ வளைகுடா, ஆப்கானிஸ்தானில் பக்ராம் விமானத்தளம்,
ஈராக்கில் அபு கிரைப் உட்பட வளர்ந்துவரும் சர்வதேச அளவிலான வலைப் பின்னல் போன்ற சித்திரவதை
முகாம்களைக் கட்டுவதற்கு வாஷிங்டன் துவங்கியிருக்கிறது. சித்திரவதையையும் கொலை செய்வதையும் அது
சட்டபூர்வமானதாக ஆக்கியிருக்கிறது. குற்றச்சாட்டுக்கள் எதுவும் கூறப்படாமல் அல்லது விசாரணை எதுவும்
நடத்தப்படாமல் தனது மக்களையும் மற்றும் தமது மக்கள் அல்லாதவர்களையும் ஒருசேர காலவரையற்று சிறையில்
அடைப்பதற்கு தனக்கு உரிமை இருக்கிறது என்று அது கூறி வருகிறது.
அமெரிக்கக் கொள்கையில் ஏற்பட்டுள்ள இந்த மாற்றம், 1930 களில் ஐரோப்பா
முழுவதிலும் பாசிசம் எழுந்ததைப்போன்று உலக முதலாளித்துவ கட்டுக்கோப்பில் தீர்த்துவைக்க முடியாத மகத்தான
முரண்பாடுகளை இறுதி மூலாதாரமாகக் கொண்டிருக்கிறது. தட்டிக் கேட்பாரற்ற தனது பொருளாதார மற்றும்
அரசியல் மேலாதிக்கத்தை இழந்து விட்டதை எதிர்கொண்டிருக்கும் அமெரிக்க ஏகாதிபத்தியம் உலக சந்தைகளிலும்,
கச்சா பொருட்களுக்கான வளங்களிலும், எல்லாவற்றுக்கும் மேலாக எண்ணெய் வளங்களிலும் தனது மேலாதிக்கத்தை
மீண்டும் வலியுறுத்திக் கொள்வதற்கு ஒரு பிரதான வழியாக ஆக்கிரமிப்பு போரை ஆரத் தழுவிக் கொண்டிருக்கிறது.
இந்த முயற்சி தவிர்க்க முடியாத அளவிற்கு அழிவுத் தன்மையை அதிகரிக்கவே செய்யும்.
உடனடியாக இல்லாவிட்டாலும், காலப்போக்கில் அமெரிக்காவின் போட்டி ஏகாதிபத்தியங்கள் எதிர் நடவடிக்கைகளை
எடுப்பதற்கு கிளப்பி விடப்படும். இந்தச் சூழ்நிலையில் அவுஸ்விட்ஸ் "தீங்கு'' என்கிற வறட்டு தத்துவத்தை நினைவு படுத்தும்
ஒரு வரலாற்று சம்பவமாக மட்டுமல்லாமல் நெருக்கடியில் சிக்கிக்கொள்ளும் முதலாளித்துவம் எந்தளவிற்கு மனித இனத்தின்
மீது தனது தாக்குதலை தொடுக்கக் கூடும் என்பதை மிக ஆபத்தான முறையிலும் அவசரமாகவும் எச்சரிப்பதாகவும்
அமைந்திருக்கிறது.
நூரம்பேர்க் நீதிமன்றத்தில் தனது வாதங்களை எடுத்து வைத்த ரோபர்ட் ஜாக்ஸன்
பின்வருமாறு அறிவித்தார்: "இந்த பழமை வாய்ந்த அழகான நகரத்தின் இடிபாடுகளுக்கு இடையில் இன்னமும் எண்ணிறந்த
பொதுமக்கள் புதையுண்டு கிடக்கின்ற நிலையில், ஒரு ஆக்கிரமிப்பு போரை துவக்குவது அல்லது நடத்துவது, மிகக்
கொடூரமான குற்றங்களுக்கு தார்மீக தன்மைகள் உள்ளது என்று வாதிடுவது அவசியமில்லாதது. குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு
புகலிடம் கிடைக்கும் என்ற அவர்களது ஒரே நம்பிக்கை என்னவென்றால், ஒரு தார்மீக நெறிப்படி குற்றம் என்று
கருதப்படுவது சட்டப்படி பழியற்றது என்று கருதப்படும் அளவிற்கு சர்வதேச சட்டம் மனித இனத்தின் தார்மீக உணர்வுகளுக்கு
வெகுதூரம் பின்தங்கி நிற்கிறது என்பதாகும்''.
ஈராக்கில் 100,000 அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் மடிந்திருக்கிறார்கள். பல்லூஜா
மற்றும் இதர ஈராக் நகரங்களின் பெரும்பகுதிகள் குப்பை மேடுகளாக ஆகிவிட்டன. நடப்பு அமெரிக்க
நிர்வாகத்திலுள்ள புஷ், செனி மற்றும் அவர்களது சகாவினர் "படுமோசமான குற்றங்களை'' செய்திருக்கிறார்கள்
என்பதில் எந்தவிதமான சந்தேகத்திற்கும் இடமில்லை. அப்படியிருந்தும் அமெரிக்க துணை ஜனாதிபதி அவுஸ்விட்சில் "தீங்கு"
மற்றும் "கொடுமையை" கண்டித்து தனது ஆபாசமான உரையை வழங்க முடிந்திருக்கிறது என்றால் அது இன்றைய தினம்,
"மனித இனத்தின் தார்மீக" உணர்வுகள் சர்வதேசச் சட்டத்தில் எதிரொலிக்கிற வகையில் இடம்பெறவில்லை
என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது. இந்தப் போர்க் குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்துவதற்கு உள்ள ஒரே வழி,
அத்தகைய சூழ்நிலைகளை உருவாக்குகின்ற தொழிலாள வர்க்கத்தின் சுயாதீனமான சோசலிச அரசியல் இயக்கம்
தோன்றுவதுதான் ஆகும்.
Top of page |