World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ரஷ்யா மற்றும் முந்தைய USSR

Ukraine: Yushchenko nominates anti-Russian millionairess as prime minister

உக்ரைன்: ரஷ்ய எதிர்ப்பு கோடீஸ்வரியை, யுஷ்செங்கோ பிரதம மந்திரியாக நியமிக்கிறார்

By Justus Leicht and Peter Schwarz
31 January 2005

Back to screen version

ஜனவரி 23ம் தேதி உக்ரேனிய ஜனாதிபதி பதவி ஏற்பை தொடர்ந்து, உக்ரேனிய ஜனாதிபதி விக்டர் யுஷ்செங்கோ தன்னுடைய அதிகாரபூர்வமான முதல் ரஷ்ய விஜயத்தை மேற்கொண்டு ரஷ்ய ஜனாதிபதியான விளாடிமிர் புடினுக்கு, ரஷ்யா "எஞ்ஞான்றும் உக்ரைனுடைய மூலோபாய நட்பு நாடாக இருக்கும்" என்ற உறுதிமொழியைக் கொடுத்தார். இந்தச் சொற்கள் அநேகமாக தூதரக முறைப்பாட்டை ஒட்டித்தான் இருந்திருக்கும்; அதிலும் உக்ரைன் மிகப் பெரிய அளவில் தன்னுடைய வலிமை வாய்ந்த அண்டை நாட்டுடன் கொண்டிருக்கும் நம்பகத்தன்மையினாலும் உந்துதல் பெற்றதாக இருக்கும். நீண்ட நாட்களாவே உக்ரேனுடைய மிக முக்கிய பொருளாதார கூட்டு நாடாகத்தான் ரஷ்யா இருந்து வருகின்றது.

தன்னுடைய வணிகத்தில் 60 சதவிகிதத்தை உக்ரைன் தன்னுடைய கீழை அண்டை நாடுகளுடன் கொண்டுள்ளது; தன்னுடைய எரிபொருள் தேவை மற்றும் எண்ணெய் தேவைக்கு ரஷ்யாவை பெரிதும் நம்பியுள்ளது. ரஷ்யா வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்யும் எரிவாயுவில் 80 சதவிகிதத்திற்கும் மேலானவை உக்ரைன் மூலம்தான் செல்லுகின்றன.

இவருக்கு முன் பதவியில் இருந்த லியோனிட் குச்மா நிறுவிய, ஒன்றுபடுத்தப்பட்ட பொருளாதாரப் பகுதி (Unified Economic Area) என அழைக்கப்படும் வெள்ளை ரஷ்யா, கஜகஸ்தான், ரஷ்யா மற்றும் உக்ரைன் அடங்கிய தடையற்ற வணிகப் பகுதியானது, தன்னுடைய முக்கிய இலக்கான ஐரோப்பிய ஒன்றியத்திலும், நேட்டோவிலும் உறுப்பினராக சேர்வதற்கு குறுக்கீடு செய்யாத வரை, அதற்கு ஆதரவு கொடுக்கப்படும் என்பதை யுஷ்செங்கோ சந்தேகத்திற்கிடமின்றி தெரிவித்துள்ளார்.

வெளியுறவு அமைச்சராக நியமிக்கப்பட இருக்கும், யுஷ்செங்கோவின் ஆதரவு வேட்பாளர் போரிஸ் டரஸ்யுக் ஒன்றுபடுத்தப்பட்ட பொருளாதாரப் பகுதியை "முற்றிலும் புவிசார்-அரசியல் செயற்திட்டம், நடைமுறையில் அதிக பொருளாதார நலனற்றது" என்று குறைகூறியிருக்கிறார். அதாவது, கிரெம்ளின் தன்னுடைய ஆதிக்கத்தை உக்ரைன் மீது தக்கவைத்துக் கொள்ளும் முயற்சிதான் அது என்று அவர் கருதுகிறார்.

ரஷ்யாவில் யுஷ்செங்கோ இருந்தபோது, செய்தி ஊடகங்கள் அவர் மாஸ்கோ புறப்படுவதற்கு முன்னரே, பிரதம மந்திரி பதவிக்கு உக்ரேனிய தேசியவாதத்திற்கு எடுத்துக்காட்டாக நிற்கும் பெண்மணியான யூலியா டிமோஷெங்கோவை நியமித்ததாக செய்தியை வெளியிட்டுள்ளன. கடந்த வாரங்களில் ரஷ்யா, மற்றும் அதனுடன் நெருக்கமான தொடர்புடைய கிழக்கு உக்ரைனுக்கும் எதிராக அனல் பறக்கும் உரைகளை வருங்கால தலைமை மந்திரி ஆற்றித் தனக்கென ஒரு புகழைத் தேடிக் கொண்டுள்ளார். 44 வயதாகியுள்ள பல மில்லியன்களின் சொத்துக்காரி இப்பொழுது அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற குற்றங்களுக்காக ரஷ்ய போலிசால் தேடப்பட்டு வருகிறார்.

டிமோஷெங்கோவை அரசாங்கத்திற்கு தலைமை தாங்குமாறு யுஷ்செங்கொ விருப்பம் கொண்டுள்ளது தொலைநோக்கில் விளைவுகளை ஏற்படுத்தக் கூடிய உட்குறிப்புக்களை கொண்டுள்ளது. வாஷிங்டனில் இருந்து பச்சை விளக்கு காட்டப்படாமல், புதிய ஜனாதிபதி இத்தகைய நடவடிக்கையை எடுத்திருக்கமாட்டார். ரஷ்யாவை உறுதியற்றதாக்கி, சோவியத் ஒன்றியத்தின் சரிவிற்குப் பின் வந்துள்ள நாடுகளின் இணைப்பான சுதந்திரநாடுகளின் பொதுநல கூட்டமைப்பை (CIS -Confederation of Independent States) உறுதியற்றதாக்கும் தன் திட்டத்தை விரைவுபடுத்துவதற்கு புஷ் நிர்வாகம் தெளிவான சமிக்ஞையை கொடுத்துள்ளது என்பது டிமோஷெங்கோவின் நியமனத்தில் இருந்து தெரிய வருகிறது.

அண்மையில் அமெரிக்க ஜனாதிபதி புஷ் பதவியேற்பு உரையில், உக்ரேனிய தேர்தலில் வாஷிங்டனின் மகத்தான குறுக்கீடு மனச்சிதைவினால் அல்ல என்பதை தெளிவாக்கியிருக்கிறது. மற்ற மேலைநாட்டு அரசாங்கங்களுடன் சேர்ந்து கொண்டு அமெரிக்க அரசாங்கமும் யுஷ்செங்கோ பிரச்சாரத்திற்கு மில்லியன்கள் கணக்கிலான யூரோக்களை அள்ளிக் கொடுத்துள்ளது.

இனி வருங்காலத்தில், அமெரிக்கா மற்றும் அதன் நலன்களுக்கு குறுக்கே நிற்கும் எந்த ஆட்சியும் --கொடுங்கோன்மை பெற்ற ஆட்சி என முத்திரையிடப்பட்டு-- அமெரிக்காவினால் நாசவேலைக்கு உட்படுத்தப்படும் அல்லது இராணுவ ஆக்கிரமிப்பிற்கு உட்படுத்தப்படும் என்றும், மேலும் இச்செயல் "சுதந்திரத்தை" பரப்புதல் என்ற பெயரில் நிறைவேற்றப்படும் என்ற கருத்தை புஷ் குறிப்பிட்டிருக்கிறார்.

மத்திய கிழக்கு மற்றும் தென் அமெரிக்காவில் உள்ள நாடுகளை போலவே, ரஷ்யா உட்பட சோவியத் ஒன்றியத்தின் பின்தோன்றல் நாடுகளும் தலையீட்டுக்கான இலக்காக வாஷிங்டனால் குறி வைக்கப்பட்டுள்ளன. வெள்ளை ரஷ்யா "கொடுங்கோன்மையின் எல்லைப்புற ஆட்சி" என்று புதிதாக நியமனம் பெற்றுள்ள வெளியுறவு அமைச்சர் கொண்டோலீசா ரைஸ் கூறியிருப்பது தற்செயலான நிகழ்வு அல்ல. உக்ரைன் போலவே, வெள்ளை ரஷ்யாவும் ரஷ்யாவுடன் நெருக்கமான பொருளாதார, அரசியல் உறவுகளை கொண்டிருக்கிறது.

யுஷ்செங்கோ, தன்னுடைய பதவி ஏற்பு உரையில், புஷ் தன்னுடைய பதவி ஏற்பு உரையில் கூறிய சொற்களையே பயன்படுத்தியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. தான் தேர்ந்தெடுக்கப்பட்டதானது "கொடுங்கோன்மைக்கு எதிராக சுதந்திரம் அடைந்துள்ள வெற்றி" என்று உக்ரைனுடைய ஜனாதிபதி அறிவித்துள்ளார். ஆரஞ்சுப் புரட்சி என்று அமெரிக்க ஆதரவுடன் நடத்தப்பட்ட "கிளர்ச்சி"யை முன்பு ரஷ்யாவிற்கு நட்பாக இருந்த உக்ரைனுடைய ஆட்சியை கவிழ்த்ததற்கு இடக்கரடக்கலான பெயரைக் கொண்ட கிளர்ச்சியை- ஏற்றுமதி செய்வதுதான் தன்னுடைய விருப்பம் என்று டிமோஷெங்கோ வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.

இதேபோல் அமெரிக்காவில் புஷ்ஷின் ஆதரவாளர்களும், யுஷ்செங்கோவின் வெற்றியை வாஷிங்டன் கூறிக்கொண்டிருக்கும் உலகம் முழுவதற்குமான சுதந்திர பெரும் போரில் ஈடுபட்டுள்ளதற்கு தக்க சான்று என களிப்புற்றுக் கொண்டாடியுள்ளனர்.

கீவில் யுஷ்செங்கோவின் பதவியேற்பு விழாவிற்கு அமெரிக்காவில் வெளியுறவுத்துறை அமைச்சர் பதவியில் இருந்து ஓய்வு பெற்றுச் செல்லும் கொலின் பவலும் கலந்து கொண்டார். உக்ரைன் தேர்தலில் அமெரிக்காவின் நெருங்கிய ஒத்துழைப்புடன் கலந்து கொண்ட போலந்தின் ஜனாதிபதியான அலெக்சாந்தர் க்வாச்நீவ்ஸ்கியும் இவ்விழாவில் கலந்து கொண்டார். அதிகார மட்டத்தில் அவ்வளவு அந்தஸ்தில் இல்லாதவர்கள் ஜேர்மனியில் இருந்தும் ரஷ்யாவில் இருந்தும் அனுப்பப்பட்டிருந்தனர்.

பவலுடனான தன்னுடைய சந்திப்பில், யுஷ்செங்கோ அதன் உதவிக்காக அமெரிக்காவிற்கு நன்றி செலுத்திக் கொண்டதோடு மேலும் வலியுறுத்தியதாவது: "சர்வேதேச ஒத்துழைப்பு, நம்முடைய நட்பு நாடுகளிடமிருந்து பெற்ற உதவியும் ஆதரவும் உக்ரைனில் ஜனநாயகத்தை வேரூன்றச் செய்ய மிகவும் அடிப்படையாக இருந்தது." அமெரிக்க ஆதரவும் மற்றைய உதவிகளும் யுஷ்செங்கோவிற்கு கிடைக்கும் என்றும் உலக வர்த்தக அமைப்பில் உறுப்பினர் பதவியை பெறுவதற்கு அனைத்து உதவியையும் அமெரிக்கா செய்யும் என்றும் பவல் உறுதியளித்துள்ளார்.

தன்னுடைய பங்கிற்கு, தனிப்பட்ட முறையிலும் அரசியல் முறையிலும் டிமோஷெங்கோ அமெரிக்காவின்மீது பெரும் சார்பு கொள்ளுவதற்கு காரணங்கள் உள்ளன. மேலை நாடுகளின் செய்தி ஊடகங்கள் தெரிவிப்பதற்கு மாறாக, டிமோஷெங்கோவிற்கு எதிரான ரஷ்யரின் பிடிவாரண்டு முற்றிலும் அரசியல் காரணங்களுக்காக மட்டும் வெளியிடப்படவில்லை. இந்தப் பிடி வாரண்டு, முன்பு United Energy Systems (UES) என்ற பெருநிறுவனத்தின் தலைவர் என்ற முறையில் மேற்கொண்டிருந்த நடவடிக்கைகளுடன் டிமோஷெங்கோவின்மீது தொடர்பு கொண்டுள்ளதாகும். இவர் ரஷ்யப் பாதுகாப்பு அமைச்சகத்தின் அதிகாரிகளுக்கு 1990களில் இலஞ்சம் கொடுத்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளார்; தன்னுடைய நிறுவனம் விசை மற்றும் கருவிகளை ரஷ்யப் படைகளுக்கு கொடுத்தபோது, மிக மிக அதிகமான முறையில் விலையை நிர்ணயிக்க வைப்பதற்காக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சக அதிகாரிகளுக்கு பணம் கொடுக்கப்பட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டது.

இவர் UES ல் இருந்த பொது சொந்தமுறையில் மில்லியன் கணக்கான டாலர்கள் மதிப்புடைய சொத்துக்களை (சிலர் இது பில்லியன் கணக்கில் என்று கூறுகின்றனர்), குவித்துள்ளார் என்பது மறுக்க முடியாத உண்மையாகும். இவருடைய நண்பரும் புரவலருமான பவேல் லாசெரெங்கோ 1996ல் உக்ரைனின் பிரதம மந்திரியாக பொறுப்பு ஏற்றபோது, சக்தி சந்தையில் UES கிட்டத்தட்ட ஏகபோக உரிமையை நிறுவிக் கொள்ளுவதற்கு உதவினார்; இந்த நலனை டிமோஷெங்கோ பயன்படுத்திக் கொண்டு எரிவாயுப் பொருட்களை வரி செலுத்தாமல் அயல்நாடுகளுக்கு ஏற்றுமதி செய்திருந்தார்.

இப்பொழுது சான் பிரான்ஸிஸ்கோ சிறை ஒன்றில் லாசெரெங்கோ உள்ளார்; ஜூன் மாதத் ஆரம்பத்தில் பணம் அபகரித்தல், மோசடி, கறுப்புப் பணத்தை வெள்ளையாக்கல் ஆகிய குற்றங்கள் சுமத்தப்பட்டு அவை ருசுவாகிவிட்டதாக ஏற்கப்பட்டு அவருக்குத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. அமெரிக்க அரசாங்கம் டிமோஷெங்கோவிற்கு எதிராக பயன்படுத்தக் கூடிய ஆபத்து நிறைந்த தகவல்களையும் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. கடந்த நவம்பர் "புரட்சிகர கோடீஸ்வரி" என்ற தலைப்பில் பிரிட்டனின் மான்செஸ்டர் கார்டியன் மாத்யூ பிரிஜேஜின்ஸ்கி எழுதிய Casino Moscow நூலைச் சுட்டிக்காட்டியுள்ளது. இந்த நூலில் ஒரு அத்தியாயம் முழுவதும் "பதினோரு-பில்லியன்-டாலர்-மதிப்புப்-பெண்மணி" என்று டிமோசெங்கோவைப் பற்றிக் கூறப்பட்டுள்ளது.

உக்ரேனில் லாசெரன்கோவிற்கு ஆற்றல் நலன்களில் ஏகபோக உரிமையை உறுதியாக்கும் வகையில் உடன்பாடு கண்டதற்காக லாசெரெங்கோவிற்கு இலஞ்சம் கொடுத்ததாக டிமோஷங்கோவின்மீது குற்றச் சாட்டுக்கள் உள்ளன. 2001ல் இவர் 40 நாட்கள் இந்தக் குற்றச் சாட்டுக்கள் தொடர்பாக சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

பிரிஜேஜின்ஸ்கி கூறுவதாக கார்டியன் மேற்கொளிட்டு தெரிவிப்பதாவது: "அமெரிக்க அரசாங்கம் இவர் நேரடியாக லாசெரன்கோவிற்கு அவர் பிரதம மந்திரியாக இருந்தபோது பணங்களை மாற்றிக் கொடுத்தற்கு சான்றுகளைக் கொண்டுள்ளது." அமெரிக்க அரசாங்கம் இவ்வம்மையார் வாஷிங்டனுடைய உத்தரவுகளை நன்றியுடன் பின்பற்றாவிட்டால், அவர் மீது அழுத்தத்தை கொண்டுவரலாம் என்பதை தெரிவிக்கிறது.

உக்ரேனுக்குள், டிமோஷெங்கோ தீவிர வலதுசாரி சக்திகளை நம்பியிருக்கிறார். இவருடைய பாராளுமன்ற பிரிவில், யூலியா டிமோஷெங்கோ முகாம் என்று அழைக்கப்படும் அணியில், தந்தை நாட்டுக் கட்சி (Fatherland Party), புதிய பாசிச உக்ரேனிய தேசியப் பேரவை எனப்படும் உக்ரேனிய தற்காப்பு அமைப்பு (UNA-UNSO), மற்றும் ரஷ்ய எதிர்ப்பு உக்ரேனிய கன்சர்வேடிவ் குடியரசுக் கட்சி (UCRP) ஆகியவை அடங்கியுள்ளன.

இந்த பலமில்லியன்கள் சொத்துக்காரரை பிரதம மந்திரியாக நியமனம் செய்தது ஆரஞ்சுப் புரட்சி உக்ரைனின் தன்னலக் குழுக்களின் ஆதிக்கத்திற்கு எதிராக இயக்கப்பட்டது என்ற கற்பனை உரைக்கு சமாதி கட்டியுள்ளது. புதிய அரசாங்கத்தில் டிமோஷெங்கோ ஒருவர்தான் தன்னலக்குழுப் பிரதிநிதியென்றும் இல்லை. நாட்டின் பாதுகாப்பு, படைப்பிரிவுகளின் குழுத் தலைவராக பெட்ரோ போரோஷெங்கோ நியமிக்கப்பட இருக்கிறார்: இவர்தான் யுஷ்செங்கோவின் தேர்தல் பிரச்சாரச் செலவுகள் அனைத்தையும் மேற்கொண்டதோடு முற்றிலும் தோய்ந்த தன்னலக்குழு தன்மையாளரும் ஆவார். உணவுப் பொருட்களை தயார் செய்தலும், கடலோரப் பகுதிகள், ஜவுளிகள், பொறியியல் நிறுவனங்கள் இவற்றை ஏராளமாக கொண்டுள்ள Ukrprominvest என்ற பெயருடைய பெருநிறுவன அமைப்பும் இவருடைய நலன்களில் உள்ளடங்கியுள்ளவைகளாகும். 1990களில் திவாலாகிவிட்ட நிறுவனங்களை வாங்கி விற்பதில் இவர் தன்னுடைய முதல் மில்லியன்களை ஈட்டியவராவார்.

டிசம்பர் மாதத்தில் டிமோஷெங்கோ Donetsk Basin க்குச் சென்று, அப்பகுதியின் இனக்குழுக்களின் தலைமையை கொண்டுள்ள, யுஷ்செங்கோவின் ஜனாதிபதி தேர்தலில் போட்டியாளராக இருந்த யுஷ்செங்கோவின் முக்கிய ஆதரவாளராக இருந்திருந்த, ரினட் அக்மெடொவைச் சந்தித்தார்.

யானுகோவிச்சிற்கு தேர்தலின் இரண்டாம் சுற்றில் வெற்றிபெற வாய்ப்பு இல்லை என்று அறிந்திருந்த அக்மெடோவ், தன்னுடைய கட்டுப்பாட்டின் கீழிருக்கும் உள்ளூர் செய்தி ஊடகத்தில் வருங்கால பிரதம மந்திரிக்கு முழு வாய்ப்பையும் அளித்திருந்தார்.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved