World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : சுனாமி பேரழிவு

First-hand report

Forgotten tsunami victims: Burmese immigrants in Thailand

நேரடி அறிக்கை

மறக்கப்பட்டுவிட்ட சுனாமி பாதிப்பாளர்கள்: தாய்லாந்திலுள்ள பர்மிய புலம் பெயர்ந்தோர்

By John Hulme
2 February 2005

Back to screen version

சுனாமிப் பாதிப்பாளர்களில் ஒரு பிரிவினர் கிட்டத்தட்ட புறக்கணிக்கப்பட்டுள்ளனர். தாய்லாந்தின் தெற்கு பகுதிகளில், சுற்றுலாத் தலங்களிலோ அல்லது மீன்பிடிக்கும் படகுகளிலோ வேலை செய்துவந்த பல்லாயிரக்கணக்கான பர்மிய புலம் பெயர்ந்தோர் டிசம்பர் 26 சுனாமி தாக்கியபோது அங்கு இருந்தனர். அவர்களுக்கு நிவாரணமோ, உதவியோ கிடைப்பதற்கு மாறாக அவர்களில் பலரும் குற்றம் சாட்டப்பட்டும், போலீஸ் துன்புறுத்தல்களையும், நாட்டை விட்டுக் கடத்தப்படும் அபாயத்தையும் எதிர் நோக்கியுள்ளனர்.

கடந்த மாதம் தாய்லாந்தின் தென்பகுதி பாங்கா மாகாணத்திற்கு, 10 நாட்கள் சென்றிருந்தபோது, பர்மாவில் இருந்து குடிபெயர்ந்திருந்தவர்களின் நிலைமை மிகவும் பரிதாபத்திற்குரியதாக இருந்தமை வெளிப்படையாயிற்று. இவர்களில் பலரும் "சட்டவிரோதமாக" குடியேறியிருந்து, முறையான அனுமதி இல்லாததால், கைதுசெய்யப்படும் ஆபத்தை எதிர்நோக்கியிருந்தனர். இப்பகுதியில் சேரிகளிலும், அகதிகள் முகாம்களிலும் போலீசார் சோதனைகளை நடத்தி வந்தனர். சில குடியேறியோர், மருத்துவ உதவி அல்லது உணவைப் பெறுவதற்கு அஞ்சியும், உறவினர்களை தேடமுடியாத நிலையிலும், மலைகளில் இருந்த காட்டுப் பகுதியின் உள்ளே மறைந்திருந்தனர் அல்லது ரப்பர் தோட்டங்களில் பதுங்கியிருந்தனர்.

கிராமப்புற வள மற்றும் அபிவிருத்தி குழுவின் (பர்மிய) ஒருங்கிணைப்பாளரான Htoo Chit இன் கருத்தின்படி, பாங்காவில் 31,353 பதிவு செய்யப்பட்ட தொழிலாளர்களும், பதிவுசெய்யப்படாத 60,000 தொழிலாளர்களும் இருந்தனர். சுனாமியால் பாதிக்கப்பட்ட ஆறு மாநிலங்களில் கிட்டத்தட்ட 3,000 பர்மியர்கள் இறந்திருக்கக் கூடும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

பாதிப்பிற்குட்பட்ட பெரும்பாலான பர்மியர்கள் எந்த விதமான மனிதாபிமான உதவிகளையும் பெறவில்லை. தாய்லாந்து செஞ்சிலுவைச் சங்கம் உணவு, உடை இவற்றைத் தான் வழங்கும் என்று கூறியிருந்தது; ஆனால் பெரும்பாலான புலம்பெயர்ந்தோர் கைது செய்யப்பட்டுவிடுவோமோ என்ற பயத்தில் அச் சங்கம் உதவி வழங்கிய இடத்திற்கு செல்லவில்லை. கிராமப்புற வள மற்றும் அபிவிருத்தி குழு (பர்மா) தேவையான உணவையும், குடிநீரையும் சில தப்பிய பாதிப்பாளர்களுக்கு கொடுத்தனர். ஆனால் எட்டு பணியாளர்களை மட்டுமே கொண்டிருந்த இந்த அமைப்பின் திறன் மிகவும் குறைந்தது ஆகும்.

சுனாமித் தாக்குதல் நடந்தபின் முதல் வாரத்தில், பாங்கா மாநிலத்தில், கொருபுரியில் உள்ள வாட் பாசன் (ஒரு கோயில்) பர்மிய புலம்பெயர்தந்தோருக்கு உணவையும், உடைகளையும் அளித்தது. போலீஸ் சுற்றிவளைக்க தொடங்கியவுடன், கோவிலுக்கு செல்வது ஆபத்து நிறைந்ததாகி விட்டது. ராக்ஸ் தாய் நிறுவனம் கொருபுரியில் 20 பர்மிய குடும்பங்களுக்கு அடிப்படை உதவிகளை கொடுத்தது. சில முதலாளிகளும் உதவினர்.

உலகப் பார்வை (World Vision) என்ற அமைப்பின் பிரதிநிதிகள், அவசர காலத்திற்கு தேவையான உதவியை கொடுத்து வந்தனர்; ஆனால் அவர்களுடைய உயிருக்கு ஆபத்து என்ற எச்சரிக்கை கிடைத்தவுடன் அவர்கள் பாங்காவில் இருந்து வெளியேறிவிட்டனர். ஜனவரி 12ம் தேதி, உலகப் பார்வை அமைப்பின் டாக்டர் ஒருவரும் அவருடைய இரண்டு உதவியாளர்களும் -இவர்கள் பர்மியர்கள்- பிடிக்கப்பட்டு, அடைத்துவைக்கப்பட்டு கம்மன் என்னும் உள்ளூர் முதலாளியால் அடிக்கப்பட்டு, அவர்களையும் மருத்துவ விடுதியில் சேர்க்க வேண்டியதாயிற்று. உலகப் பார்வை அமைப்பு, 40 பர்மிய தொழிலாளர்களை பாதுகாப்புடன் பர்மாவிற்கு திரும்பக் கொண்டு செல்வதற்கு முயன்று கொண்டிருக்கிறது. ஆனால் உள்ளூர் முதலாளிகள் தங்களுடைய பணியாளர்கள் குறைவதால் கோபமுற்றிருக்கின்றனர்.

பாங்காவில் யான்யோ கோவிலில் பல இறந்துவிட்ட பர்மியர்களின் சடலங்கள் உரிமை கோருபவர்கள் இல்லாமல் விடப்பட்டுள்ளன; உறவினர்கள் தாங்கள் நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டுவிடுவோம் என்ற பயத்தில் இருப்பதால், இவ்விடத்தில்தான் அடையாளம் கண்டுபிடிக்கப்படாத சடலங்கள் இன்னும் உள்ளன. ஜனவரி 18ல் 2,000க்கும் அதிகமான பர்மியர்கள் கைது செய்யப்பட்டு பர்மாவிற்கு திருப்பி அனுப்பப்பட்டனர். ரானோங்கில் ஒரு படகுப் போக்குவரத்து உரிமையாளர் கிட்டத்தட்ட 2,500 பர்மியர்கள் தங்கள் நாட்டிற்கு அவர்கள் விருப்பப்படி சென்றுவிட்டதாக தெரிவித்தார்.

Irrawaddy.org என்ற வலைத் தளத்தில் வந்துள்ள கட்டுரை ஒன்றில் விளக்கப்பட்டுள்ளதாவது: "பொதுவாக சட்டவிரோதமான அயல்நாட்டினரை வெளியேற்றுவதற்கு முன் அவர்கள் நீதிமன்றத்தின் முன் விசாரிக்கப்படுவது வழக்கமாகும். ஆனால் பேரழிவைத் தொடர்ந்து, தெற்கு தாய்லாந்தில் உள்ள பர்மிய வெளியேற்றப்படுவோர், தடுப்பு முகாம்களில் அடைத்துவைக்கப்பட்டு, பின்னர் எந்த நீதிமன்ற நடவடிக்கையும் இல்லாமல் அனுப்பப்பட்டுவிட்டனர்."

USA Today என்ற ஏட்டில் வந்துள்ள அறிக்கை, சுனாமித் தாக்குதலால் தன்னுடைய பணிநியமன சான்றை இழந்துவிட்ட வான் என்னும் பர்மிய தொழிலாளி பற்றிக் கூறுகிறது. அவர் தன்னுடைய இழப்பை ஒரு பர்மிய சமூகநலப் பணியாளர் ஒருவரிடம் தெரிவித்தார்; ஆனால் குடியேற்ற அதிகாரிகள் அந்த முகாமைச் சோதித்தபோது, அவர் மற்றும் ஒரு 21 பேருடன் சேர்த்து சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் ஒரு வாகனத்தின் பின்பகுதியில் ஏற்றப்பட்டு பாங்காவில் இருந்து இரண்டு மணிநேர பயணத் தொலைவில் உள்ள குடியேற்ற மையம் ஒன்றுக்கு அனுப்பப்பட்டார். அந்தத் தடுப்பு மையத்தில் மற்றும் 40 பர்மியர்கள் அடைக்கப்பட்டிருந்தனர்; இவர்களில் சிலர் அடைக்கப்பட்டிருந்த வாகனங்களின் ஜன்னலுக்கு குறுக்கே கம்பிகள் அடிக்கப்பட்டிருந்தன; சிலர் மிகச் சிறிய அறைக்குள் அடைபட்டிருந்தனர். இவர் பின்னர் என்ன ஆனார் என்பது தெரியவில்லை.

தாய்லாந்தில் அடக்கி நசுக்கப்பட்டுவரும் தொழிலாளர்களில் பர்மிய புலம்பெயர்ந்தோரும் அதிகமாக உள்ளனர். அவர்கள் அழுக்குப் படிந்த, ஆபத்தான கடின வேலைகளை மீன்பிடிக்கும் துறையிலும் கட்டிடப் பணிகள், ரப்பர் தோட்டங்கள், துறைமுக அமைப்புக்கள், மீன் பண்ணைகள் இவற்றில் பெற்றுள்ளதோடு, சுற்றுலாத் துறையிலும் குறைவூதியத் தொழிலாளர்களாக இருக்கின்றனர். பாங்காவில், ஐந்து-நட்சத்திர சுற்றுலா விடுதிகள் மற்றும் கேளிக்கை தளங்களுக்கு அருகில்தான் பர்மிய புலம்பெயர்ந்தோரின் சேரிகளும் வசதியற்ற முகாம்களும் உள்ளன.

அரசு-சாரா நிறுவன குழு ஒன்றின் அதிகாரிகளுடன், சுனாமியால் பாதிக்கப்படாத பர்மிய மக்கள் வாழும் சேரிகளுக்கு அவர்களை காண நானும் சென்றிருந்தேன். அவர்கள் சுற்றிலும் தகரச் சுவர்களால் ஆன தடுப்புக்கள் மற்றும் மேலும் உள்சுவரிலும் கான்வாஸ் துணிகளால் ஆன மறைப்பும் உள்ள வரிசையான வீடுகள் அல்லது அறைகளில்தான் வசிக்கின்றனர். குடிநீர் வசதி மிகக் குறைவாகவும், பிற சுகாதார வசிகள் இன்னும் குறைவாகவும்தான் அங்கு இருந்தன. ஒரு 3 அம்பியர் மின்வசதிதான் அறைகளில் ஒளிரும்குழாய் விளக்குகளுக்குப் பயன்படுத்தப்படுகிறது.

பெரும்பாலான குழந்தைகள், சுகாதாரக் குறைவினாலும், போதிய குடிநீர் இல்லாததாலும் ஏற்பட்டிருந்த வயிற்றுப் போக்கு நோயினால் பெரும் அவதிக்கு ஆளாகியிருந்தன. இக்கட்டுரை எழுதப்படும் நேரத்தில், இச்சமூகத்தினருக்கு எவ்வித மருத்துவ உதவியும் கிடைக்கவில்லை. தாய் செஞ்சிலுவை சங்கமும் ஏனைய அமைப்புக்களும் சாலையோரங்களில் மருத்துவ முகாம்களை அமைத்திருந்தன. ஆனால் கைதுசெய்யப்பட்டு, நாடுகடத்தப்பட்டுவிடுவர் என்ற வதந்தியை அடுத்து, மிக ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் மட்டுமே பயத்துடன் உதவியைப் பெற முன்வந்துள்ளனர்.

குவாக் கக் கடற்கரையில் ஒரு சமூகத்தை சேர்ந்த, 26-வயதான தான் சோ என்னும் ரப்பர் தோட்ட பொருட்களை காவிச்செல்லும் (Forklift) டிரைவரிடம் நான் பேசினேன். அவருடைய மனைவியார் Mi Htay தேபட்ரோ லகூன் கடற்கரை விடுதியில் சுனாமித் தாக்குதல் நடைபெற்ற அன்று பணியில் இருந்தார். அவ்வம்மையாரை அதற்குப் பின் இவர் காணவில்லை. அவர் ஆறு மாத கர்ப்பிணியாக இருந்தார். அவர் இறந்துவிட்டதாகத் தான் சோ கருதவேண்டியதாயிற்று. இவருக்கு பணி அனுமதியும், தற்காலிக தங்குவதற்கான அடையாள அட்டையும் இருந்தாலும், அவளைத் தேடி அலைவதால் வரக்கூடிய, அதையொட்டி தாய் அதிகாரிகளால் பிடிபட்டு வெளியேற்றப்பட்டு விடக்கூடிய ஆபத்தை ஏற்க அவர் தயாராக இல்லை.

வறுமை, போலீஸ் துன்பங்கள் இவற்றைத் தவிர, பர்மிய புலம்பெயர்ந்தோர் பாரபட்சம் மற்றும் துன்புறுத்தல் இவற்றை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. Khao Sod என்ற நாளிதழின் ஜனவரி 8ம் தேதி பதிப்பு, ஆயிரக்கணக்கான பர்மிய கொள்ளையடிப்போர் காவோ ஏரிப்பகுதியில் கொள்ளையடித்து அனைத்தையும் எடுத்துச் சென்றுவிட்டதாக எழுதியுள்ளது. "மாவுங் கொள்ளையர்கள்" என்ற தலைப்பில் - பர்மியரை பற்றிய இகழ் சொல் மாவுங் என்பதாகும் - இக்கட்டுரை வெளிவந்துள்ளது.

இதற்கு எந்த ஆதாரமும் கொடுக்கப்படவில்லை. நான் காவோ ஏரிப்பகுதியில் இருந்தபொழுது ஏராளமான பர்மிய அல்லது தாய்லாந்து கொள்ளையர்கள் பற்றி எந்த அடையாளத்தையும், அவ்விடத்தை ஒன்றுமில்லாமல் தாக்கியதற்கான குறிப்புக்களையும் காணவில்லை. சுனாமி அதை ஏற்கனவே செய்துவிட்டிருந்தது. கடலோரப் பகுதிக்கு அருகில் பேரழிவு கிட்டத்தட்ட முழுமையாக இருந்தது. சற்று உயர்மட்டத்தில் இருந்த சில கட்டிடங்களுக்கு ஆபத்து ஏதும் ஏற்படவில்லை. ஆனால் கடலில் இருந்து ஒரு கிலோமீட்டர் வரை பெரும் பாதிப்பிற்குட்பட்டிருந்ததற்கான அடையாளங்கள் இருந்தன.

Bangkok Post, ஜனவரி 11 பதிப்பில், சுரபோங் கோங்சன்டுக் என்னும் தாய்லாந்து சட்ட சங்கத்தின் உறுப்பினர், இத்தகைய பர்மியர்களுக்கெதிரான சூனியத்தனமான நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு கொடுக்க முற்பாட்டார்; தாய் மக்கள்தான் சுனாமி பாதிப்புப் பகுதிகளில் இத்தகைய குற்றங்களில் ஈட்பட்டுள்ளனர் என்று அவர் தெரிவித்தார். திருட்டு, அனுமதியின்றி உடைத்து இல்லங்களில் நுழைந்தமை போன்ற குற்றங்களில் ஈடுபட்டிருந்த 27 பேரில் 20 பேர் தாய்லாந்தை சேர்ந்தவர்கள் ஆவர். எந்நாட்டைச் சேர்ந்தவர்களாயினும், இது ஒன்றும் பெரும் திரளானோர் நடத்திய கொள்ளை என்ற சித்திரத்தை தரவில்லை.

பர்மிய புலம்பெய்ர்ந்தோருக்கு எதிராக கூடுதலான அடக்குமுறையை கையாள்வதற்கான சூழ்நிலையை உருவாக்கும் முறையில் வேண்டுமென்றே இன உணர்வை தூண்டிவிடும் முயற்சி, வடிவமைக்கப்பட்டுள்ளது; புலம்பெயர்ந்தோரில் பலரும் பேரழிவு பாதிப்பாளர்களுக்கு உதவும் பணியிலும் தங்களை ஈடுபடுத்திக் கொண்டுள்ளனர். அரசு-சாரா அமைப்பு ஒன்று மேலை நாடுகளின் சுற்றுப் பயணிகள் இந்த தொழிலாளர்களை தங்களுக்கு உதவி செய்ததற்காக பாராட்டினர் என்றும் தாய் மக்கள் மிருதுவான உள்ளம் படைத்தவர்கள் என்றும் கூறினர். தாங்கள் பர்மியர்களுடன்தான் பேசிக் கொண்டிருக்கிறோம், மற்றும் அவர்கள் எத்தகைய நிலைமைகளில் பணியாற்றியும் வாழ்ந்தும் வருகின்றனர் என்பதை அறிந்தவுடன், இந்த மேல்நாட்டு சுற்றுலாப் பயணிகள் வியப்பில் ஆழ்ந்தனர்.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved