World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இந்தோனேசியா

Sharp divisions in Jakarta over foreign presence in Aceh

ஆஷேயில் வெளிநாட்டுப்படைகளின் பிரசன்னத்தால் ஜகார்த்தாவில் மேலும் கூர்மையான பிளவுகள்

By John Roberts
26 January 2005

Back to screen version

சுனாமி பேரழிவைத் தொடர்ந்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள வடக்கு சுமத்ராவின் ஆஷே மாகாணத்தில் கடைபிடிக்க வேண்டிய கொள்கை தொடர்பாக இந்தோனேஷிய ஆளும் வட்டாரங்களில் பிளவுகள் தோன்றியுள்ளன. நேற்றைய நிலவரப்படி, அதிகாரிகள் அதிர்ச்சியூட்டும் வகையில் 2,28,000 பேர் மடிந்துவிட்டதாக குறிப்பிட்டனர். குறைந்த பட்சம் 5,00,000 வீடிழந்து தவிக்கின்றனர், அந்த மாகாணத்தில் குறைந்த உள்கட்டமைப்பு வசதிகளும் சிதைந்துவிட்டன மற்றும் தொற்று நோய் பரவும் ஆபத்து நீடிக்கிறது.

ஜகார்த்தாவில் நிலவுகின்ற அரசியல் கருத்து வேறுபாடுகளுக்கும் உயிர்தப்பியவர்களின் நிலைக்கும் சம்மந்தமில்லை. ஆஷே சுதந்திர இயக்கத்தின் பிரிவினைவாத கிளர்ச்சிக்காரர்களுக்கு எதிராக நடவடிக்கைகளை தீவிரப்படுத்தவேண்டும் என்பது இராணுவத்தில் சில பிரிவை சார்ந்தவர்கள் ஆதரிக்கின்றனர் மற்றும் வெளிநாட்டு துருப்புக்கள், உதவி ஊழியர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் தொடர்பாக திட்டவட்டமாக பீதியடைந்துள்ளனர். என்றாலும் ஜனாதிபதி Susilo Bambang Yudhoyono நிர்வாகத்திற்கு பெரிய நாடுகள் குறிப்பாக அமெரிக்கா அழுத்தம் கொடுத்தும், அந்த நிர்வாகம் தனது போக்கை மாற்றிக்கொண்டு ஆஷே சுதந்திர இயக்கத்தின் தலைவர்களுடன் சமாதான பேச்சுவார்த்தைகள் நடத்துமாறு அமெரிக்கா அழுத்தம் கொடுத்து வருகிறது.

ஆஷேயில் அவசர நிவாரணப்பணியில் ஈடுபட்டுள்ள 30 நாடுகளை சேர்ந்த இராணுவப்படைகள் மார்ச் 26 இற்கு முன் வெளியேறியாக வேண்டும் என்று ஜனவரி 12 ல் துணை ஜனாதிபதி Jusuf Kalla அறிவித்தார். பிப்ரவரி 26 வாக்கில் துருப்புக்கள் வெளியேறும் நடவடிக்கைகள் துவக்கப்படவேண்டுமென்று தாம் விரும்புவதாக Kalla குறிப்பிட்டார். எவ்வளவு விரைவாக வெளிநாட்டுத் துருப்புக்கள் வெளியேறுகிறார்களோ அந்த அளவிற்கு நல்லது என்று அவர் அறிவித்தார்.

இந்தோனேஷிய ஆயுதப்படைகளின் (TNI) தலைவர் Endriartono Sutarto, அமைச்சரவை செயலாளர் Sudi Silalahi மற்றும் நலன்புரி அமைச்சர் Alwi Shihab ஆகிய மூத்த பிரமுகர்களும் கல்லாவுடன் சேர்ந்து கொண்டனர். அனைவரும் வெளிநாட்டவர் விரைவாக வெளியேற வேண்டும் என்று கோரினர், மற்றும் அவர்களது நடமாட்டத்தின் மீது கட்டுப்பாடுகள் விதிக்கப்படவேண்டுமென்று கேட்டுக்கொண்டனர். இராணுவ அனுமதி இல்லாமல் தலைநகர் பண்டா ஆஷே மற்றும் மேற்கு கடற்கரை நகரமான Meulaboh நீங்கலாக பிற பகுதிகளில் வெளிநாட்டவர் நடமாட்டத்தை கட்டுப்படுத்த வேண்டும் என்று Endriartono கேட்டுக்கொண்டார்.

இந்த அறிக்கைகள் இந்தோனேஷிய தேசியவாதத்திற்கு அழைப்புவிடும் நோக்கில் திட்டமிட்டு வெளியிடப்பட்டவையாகும். அமெரிக்கா தலைமையில் ஈராக் மீது சட்டவிரோதமான ஆக்கிரமிப்பு நடத்தப்பட்டிருப்பதற்கு பரவலான எதிர்ப்பு நிலவுவதை கருத்தில் கொண்டு பார்க்கும்போது, புஷ் நிர்வாகம் ஆஷேவிற்கு துருப்புக்களை அனுப்பியிருப்பதன் நோக்கங்களை மக்களில் பலர் சரியாகவே சந்தேகிக்கின்றனர். சுமத்ராவிற்கு அருகாமையிலுள்ள உலகின் முக்கிய மூலோபாய கப்பல் வழித்தடங்களில் ஒன்றான மலாகா ஜலசந்தி மீது நீண்ட நெடுங்காலமாக வாஷிங்டன் கண்வைத்து திட்டம் தீட்டி வருகிறது---- ஆஷேவிலேயே கணிசமான எரிவாயு மற்றும் எண்ணெய் இருப்புகள் உள்ளன.

இந்த துயரம் தொடர்பாக புஷ்ஷூம் இதர உலகத் தலைவர்களும் துவக்கத்தில் புறக்கணிப்பு மனப்பான்மையோடு நடந்து கொண்டது அமெரிக்காவிற்கு எதிரான வெறுப்பிற்கு மேலும் தூபம் போட்டிருக்கிறது. ஜனவரி 12-ல் நியூயார்க் டைம்ஸ் வெளியிட்டிருந்த ஒரு கட்டுரை குறிப்பிடுவது வெளிநாட்டு உதவிக்கு தருகின்ற விலை, தேசிய இறையாண்மையை தியாகம் செய்வது என்று இந்தோனேஷியாவில் புகார் கூறுகின்ற அளவிற்கு ''மடைதிறந்த வெள்ளம்போல் கருத்து'' உருவாகியுள்ளது. அந்த செய்தி பத்திரிக்கை தலைநகரில் பரவலாக சுற்றுக்கு விடப்பட்டுள்ள ஒரு அறிக்கையில் எழுப்பப்பட்டுள்ள கேள்வியை குறிப்பிட்டிருக்கிறது. "ஈராக்கிற்கு பின்னர் இந்தோனேஷியா அமெரிக்காவின் அடுத்த இலக்காகுமா?"

காலாவும் இராணுவமும் உதவி நடவடிக்கைகளுக்கு கட்டுப்பாடுகளை விதித்திருக்கும் நோக்கம் முற்றிலும் வேறுபட்டதாகும். ஏறத்தாழ மூன்று தசாப்தங்களாக ஆஷே சுதந்திர இயக்கத்தை அழித்து உள்ளூர் மக்களை அச்சமூட்டுகிற வகையில் இந்தோனேசிய ஆயுதப்படைகள் ஒரு கொடூரமான போரை நடத்தி வருகிறது. 1998 இல் சுகார்ட்டோ வீழ்ச்சியடைந்த பின்னர் மோதலில் ஒரு தொய்வு ஏற்பட்டது, அதற்கு பிறகு 2003 மேயில் ஜனாதிபதி மேகவதி சுகர்னோபுத்திரி அந்த மாகாணத்தில் ஒரு அவசர நிலை பிரகடனத்தை திணித்தார் மற்றும் 50,000 துருப்புகளும் இணைராணுவ போலீசும் முழுவீச்சில் தாக்குதலை தொடுக்க அங்கீகாரம் அளித்தார்.

கடந்த 20 மாதங்களுக்கு மேலாக குறைந்தபட்சம் ஆஷேவில் 2000 மக்கள் கொல்லப்பட்டனர். இராணுவ சட்ட நெறிமுறைகளின் கீழ் அந்த மாகாணத்தில் எல்லா வெளிநாட்டவருக்கும் பத்திரிக்கையாளர்களுக்கும் தடைவிதிக்கப்பட்டதற்கு முன் இந்தோனேஷிய பாதுகாப்பு படைகளால் சிவிலியன் மக்களுக்கெதிராக நடத்தப்பட்ட அட்டூழியங்கள் பற்றி பரவலாக செய்திகள் வெளியிடப்பட்டன. கட்டுப்பாடுகள் இருந்தாலும், முறையற்ற கைதுகள், சித்திரவதை, நீதிமன்றங்களுக்கு புறம்பான கொலைகள் மற்றும் இந்தோனேஷிய துருப்புக்களின் இதர முறைகேடுகள் பற்றி தொடர்ந்து செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன, அவற்றை உலகின் கவனத்திலிருந்து மறைத்துவிட ஜகார்த்தா விரும்புவது தெளிவாகிறது.

என்றாலும், காலாவின் அறிவிப்பைத் தொடர்ந்து, திடீரென்று கொள்கையில் மாற்றம் ஏற்பட்டது. ஜனவரி 16 இல் அமெரிக்க பாதுகாப்பு துணை செயலாளர் போல் உல்போவிச்சை சந்தித்த பின்னர், பாதுகாப்பு அமைச்சர் Juwono Sudarsono வெளியிட்டுள்ள ஒரு அறிக்கை காலாவின் கருத்துக்களை மறுப்பதாக அமைந்திருக்கிறது. மார்ச் 26, வெளிநாட்டு இராணுவத்தினர் வெளியேறுவதற்கான ஒரு "காலக்கெடு அல்ல" ஆனால், மாறாக, இந்தோனேஷிய ஆட்சி தனது உதவி நடவடிக்க்ைகளை மேம்படுத்துவதற்கான, "ஒரு அடையாளச் சின்னம்" மற்றும் உதவி நடவடிக்கைகளின் பெரும் சுமையை தான் எடுத்துக்கொள்வதுமாகும் என்று பாதுகாப்பு அமைச்சர் விளக்கினார்.

பின்னணியில் இருந்து கொண்டு அழுத்தம் தரப்பட்டது என்பது தெளிவாகத் தெரிகிறது. கடந்த ஓராண்டிற்கு மேலாக, அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் இதர நாடுகள் கண்ணை மூடிக்கொண்டிருந்தன, ஆஷேயில் இந்தோனேஷிய பாதுகாப்பு படைகள் மேற்கொண்ட ஒடுக்குமுறை நடவடிக்கைகளை மன்னித்துவிட்டன. என்றாலும் சுனாமியைத் தொடர்ந்து, அந்த மோதல் வாஷிங்டன் இந்தத் துயரத்தை இந்த பிராந்தியத்தில் தனது நலன்களை முன்னெடுத்துச் செல்வதற்கு உருவாக்கியுள்ள திட்டங்களை செயல்படுத்துவதில் இடையில் வெட்டி முறிப்பதாக அமைந்திருக்கிறது. இதன் விளைவாக, அமெரிக்கா தற்போது ஆஷே சுதந்திர இயக்கத்துடன் ஒரு பேச்சுவார்த்தைக்கு வருமாறு வற்புறுத்தி வருகிறது.

அமெரிக்கா திரும்பியதும் உல்போவிச், PBS "செய்திகள் நேரம்" நிகழ்ச்சியில் கூறினார். "ஆஷே பிரச்சனையில் ஒரு அரசியல் தீர்வு காண்பதை நோக்கி குறிப்பாக நகர்வதற்கு முயற்சி செய்வது உட்பட ஒரு சிறந்த எதிர்காலத்தை நோக்கி (சுனாமி) துயரத்தை துடைப்பதற்கான நடவடிக்கைக்கு செல்வதற்கு நமக்கு ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது என்று கூறினார். அதற்கு பின்னர், (இந்தோனேஷிய) இராணுவம் அந்த வழியில் குறுக்கிடுமானால் அப்போது இராணுவம் அந்த வழியிலிருந்து ஒதுக்கித் தள்ளப்பட வேண்டும்" என்று எச்சரித்தார்.

என்றாலும், இராணுவத்தின் சில பிரிவுகள் அந்தப் போரை தடுத்து நிறுத்தத் தயாராக இல்லை. ஆஷே மற்றும் மேற்கு பாப்பூவா போன்ற வளம் மிக்க மாகாணங்கள், இந்தோனேஷிய பாதுகாப்பு படை தலைமைக்கு இலாபம் தருகிற வளங்களாக நீண்ட நெடுங்காலமாக விளங்கி வருகின்றன. இராணுவ நடவடிக்கைகளுக்கான செலவில் சுமார் மூன்றில் ஒரு பகுதிதான் பாதுகாப்பு துறை வரவுசெலவுத்திட்டத்திலிருந்து வருகிறது. மீதி பணம் வளங்களை பயன்படுத்தும் திட்டங்களை செயல்படுத்துவோரிடமிருந்து "பாதுகாக்கப்பட்ட பணம்" என்று சொல்லி மிரட்டி பணம் பறிப்பது உட்பட விரிவான சங்கிலித் தொடர் போன்று நடந்து வருகின்ற சட்டபூர்வ மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகளிலிருந்து வருகின்ற பணமாகும்.

ஆஷேயில் பேரழிவிற்கு பின்னரும் இராணுவம் ஆஷே சுதந்திர இயக்கத்திற்கு எதிராக தொடர்ந்து தனது நடவடிக்கைகளை நீடித்துக் கொண்டிருக்கிறது. உதவி வினியோகங்களை கிளர்ச்சிக்காரர்கள் அச்சுறுத்தினர் என்று கூறிற்று. உல்போவிச்சிற்கு பதிலளிக்கின்ற முறையில் இராணுவ தலைமை அதிகாரி ஜெனரல் Ryamizard Ryacudu ஜனவரி 20 இல் வெளியிட்ட அறிவிப்பில், குறைந்த பட்சம் 120 ஆஷே சுதந்திர இயக்க கிளர்ச்சிக்காரர்களை கொன்று அவர்களது ஆயுதங்களை கைப்பற்றுவது தவிர இராணுவத்திற்கு வேறு வழியில்லை என்று குறிப்பிட்டார். Borneyo Bulletin வலைதள அறிக்கை ஒன்று தற்போது ஆஷேயில் 35,000 துருப்புக்கள் இருப்பதாகவும் அவற்றில் 15,000 நிவாரண நடவடிக்கைகளுக்கு உதவிகளுக்கு பயன்படுத்தப்பட்டு வருவதாகவும் 20,000 பேர் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டிருக்கிறது.

ஜனவரி 20 இல் நடைபெற்ற ஒரு நாடாளுமன்ற குழு கூட்டத்தில் அரசாங்க புலனாய்வுத்துறை (BIN) தலைவர் Syamsir Siregar வெளியிட்டுள்ள விமர்சனங்கள் இராணுவ வட்டாரங்களுக்குள் நிலவுகின்ற சிந்தனையை கோடிட்டு காட்டுவதாக அமைந்திருக்கிறது. பல ஆஷே சுதந்திர இயக்க போராளிகளின் குடும்பங்கள் ஒழித்துக்கட்டப்பட்டு விட்டதாகவும், ஆஷே சுதந்திர இயக்க பிரிவுகளை சார்ந்தவர்கள் தற்போது மனித சக்திகளிலும் ஆயுதங்களை கொண்டு செல்வதிலும் கடுமையான பற்றாக்குறை இருப்பதாக அவர் குறிப்பிட்டார். இதன் விளைவு என்னவென்றால் இந்தோனேஷிய பாதுகாப்பு படை தாக்குதல் நடத்துவதற்கு இதுதான் நல்ல நேரமென்று அவர் சொல்கிறார்.

உள்ளூர் மக்கள் மீது தங்களது கட்டுப்பாட்டை அதிகரித்து கொள்கின்ற வகையில் உதவி முகாம்களை இராணுவம் பயன்படுத்திக்கொண்டிருக்கிறது என்பதற்கும் கோடிட்டுக்காட்டுகின்ற தகவல்கள் உள்ளன. இடம் பெயர்ந்துள்ள ஆஷே மக்கள் இராணுவத்தின் நேரடி பார்வையில் 24 மறுவாழ்வு மையங்களில் குடியமர்த்தப்பட்டிருப்பது குறித்து கவலைகள் கொண்டிருப்பதை ஜனவரி 18-ல் வெளியிடப்பட்டுள்ள நியூயோர்க் டைம்ஸ் செய்தி குறிப்பிடுகிறது.

"ஏராளமான மக்கள் இராணுவத்தினர் காவல் புரிவதற்கு அருகில் நெருக்கமான பகுதிகளில் குடியமர்த்தப்பட்டிருப்பது, கசப்பான நினைவுகளை மற்றும் சில உண்மையான அச்சத்தை உருவாக்குகிறது. நீண்டகாலமாக நடைபெற்றுக்கொண்டுள்ள உள்நாட்டு போரில் பல்வேறு கட்டங்களில் அரசாங்கம் மாற்று குடியிருப்பு முகாம்களில் அடைத்து வைத்திருக்கிறது, அடிக்கடி வீடுகள் இராணுவத்தால் அழிக்கப்பட்ட பின்னர், இவ்வாறு செய்திருக்கிறார்கள். பாதுகாப்பின் பெயரால் உள்ளூர் மக்களோடு பிரிவினைவாத கிளர்ச்சிக்காரர்கள் கலந்துவிடாது பிரிப்பதற்காக இவ்வாறு அரசாங்கம் செய்தது" என்று அந்த செய்தி பத்திரிக்கை எழுதியிருக்கிறது.

பாதுகாப்பு அமைச்சர் Sudarsono இதர, இந்தோனேஷிய ஆளும் செல்வந்தத்தட்டு பிரிவுகளை சார்ந்தவர்கள் இராணுவம் உட்பட வாஷிங்டனுடன் நெருக்கமான கூட்டணி தேவைப்படுபவர்களாகும். ஜகார்த்தாவிற்கு விஜயம் செய்தபோது உல்போவிச் அமெரிக்காவிற்கும் இந்தோனேஷிய ஆயுதப்படைகளுக்குமிடையே நெருக்கமான உறவுகள் மீண்டும் புதுப்பிக்கப்படும் வாய்ப்புகள் இருப்பதாக குறிப்பிட்டார், 1991ல் கிழக்கு தீமோரில் இந்தோனேஷிய பாதுகாப்பு படை புரிந்த அட்டூழியங்களைத் தொடர்ந்தும் அதற்கு பின்னர் 1999இலும் அமெரிக்க இந்தோனேஷிய இராணுவ உறவுகள் முறிந்தன.

1997-98 ஆகிய பொருளாதார நெருக்கடிக்கு பின்னர் இன்றைக்கும் இந்தோனேஷிய பொருளாதாரம் தத்தளித்து கொண்டிருக்கிறது, எனவே, நிதியுதவியும் வெளிநாட்டு முதலீடுகளும் மிகத் தீவிரமாக அவசரமாக தேவைப்படுகிறது. ஜனவரி 17 இல் வெளிநாட்டு மூதலீட்டாளர்களிடையே உரையாற்றிய Yudhoyono நாட்டின் உள்கட்டமைப்பு வசதிகளை பாரியளவு மேம்படுத்துவதற்காக அரசிற்கு 145 பில்லியன் அமெரிக்க டாலர்கள் தேவையென்றும் ஆஷேயில் அழிக்கப்பட்டுவிட்ட உள்கட்டமைப்பு வசதிகளை மறுசீரமைக்க மேலும் 4 பில்லியன் டாலர்கள் தேவையென்றும் குறிப்பிட்டார். இதில் 10 பில்லியன் டாலர்கள் வெளிநாட்டு நன்கொடையாளர்களிடமிருந்தும், 80 பில்லியன் டாலர்கள் வெளிநாட்டு முதலீட்டாளர்களிடமிருந்தும் வரவேண்டுமென்றார்.

வெளிநாட்டு முதலீட்டாளர்கள் அந்த நாட்டின் சட்ட மற்றும் நிதி நிர்வாக அமைப்புக்களில் மேலும் பகிரங்கத்தன்மை பளிச்சிட வேண்டுமென்றும், மலிந்து கிடக்கும் ஊழலுக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் என்பது உட்பட மேலும் பொருளாதார மறுசீரமைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள ஜகார்த்தாவை நெருக்கிக்கொண்டிருக்கின்றனர். ஒரு பொருளாதார மாநாட்டில் அண்மையில் உரையாற்றிய தேசிய மேம்பாட்டு திட்டமிடல் அமைச்சர் Mulyani Indrawati, ஆஷேயில் நடைபெற்றுவரும் நிவாரண பணிகள் Yudhoyono ஆட்சிக்கு ஒரு சோதனை என்று கூறினார், "நிலைமையை எப்படி நாம் நிர்வகிக்கிறோம், சமாளிக்கிறோம் என்பதை அவர்கள் காண விரும்புகிறார்கள், நாம் நம்பிக்கையோடு அல்லது குழப்பமாக இதை செய்கிறோமா என்று பார்க்க விரும்புகிறார்கள்." என்று அவர் கூறினார்.

உல்போவிச்சின் செய்தியை Yudhoyono நிர்வாகம் தெளிவாக புரிந்து கொண்டிருக்கிறது. ஆஷே மோதலுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கான முயற்சிகள் இல்லாமல், அமெரிக்காவின் பொருளாதார மற்றும் இராணுவ உதவி கிடைக்காது. நாடு கடத்தப்பட்டுள்ள ஆஷே சுதந்திர இயக்க தலைவர்களுடன் பேச்சு நடத்துவதற்காக, இன்றைய தினம் அமைச்சர்கள் அடங்கிய உயர் அதிகார குழு ஒன்று பின்லாந்து செல்லவிருக்கிறது. என்றாலும் ஆஷேயில் இந்தோனேஷிய பாதுகாப்பு படையின் செல்வாக்கையும் நலன்களையும் அச்சுறுத்துகின்ற எந்த பேரத்தையும் இராணுவ தளபதிகள் எதிர்த்து நிற்பார்கள் என்பதில் சத்தேகத்திற்கு இடமில்லை.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved