World Socialist Web Site www.wsws.org |
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :ஐரோப்பா : பிரான்ஸ்France: New law requires teachers to present a "positive" account of French colonialism பிரான்ஸ்: பிரெஞ்சு காலனித்துவம் பற்றி ஆசிரியர்கள் "சிறந்த குறிப்பை" தருமாறு புதிய சட்டம் கட்டளையிடுகிறது By Antoine Lerougetel பிரெஞ்சு காலனித்துவ வெற்றிகள், பிரெஞ்சுப் பேரரசு பற்றி பெருமைப்படுத்திப் பேசுதலையும் ஆசிரியர்கள் இந்த கொடூரமான கடந்தகால வரலாற்றை விரும்பத்தக்க வகையில் பூசி மெழுகுதலையும், கட்டாயமாக்கும் சட்டம் ஒன்றிற்கான அதன் ஆதரவை பிரெஞ்சு பாராளுமன்றம் நவம்பர் 29ம் தேதி உறுதிப்படுத்தியது. இச்செயல், ஆளும் கட்சியான UMP (Union for a Popular Movement) என்னும் கோலிசக் கட்சியின் தலைவரும் உள்துறை மந்திரியும், மற்றும் ஜனாதிபதி சிராக்கிற்குக் கட்சியின் வலதுபுறத்தில் எதிர்ப்பாளராகவும் உள்ள நிக்கோலா சார்க்கோசியால் செயல்படுத்தப்பட்டுள்ள கருத்தியல் ரீதியான வலதுபுற மாற்றத்தின் ஒரு பகுதி ஆகும். பிரெஞ்சு சமுதாயத்தின் மிகப் பிற்போக்கான பகுதிகளிலிருந்து ஆதரவைத் திரட்டும் நோக்கத்தை இம்முயற்சி கொண்டுள்ளது: குறிப்பாக அதிகாரிகள் படைப்பிரிவு, தங்களுடைய காலனித்துவ தீரச்செயல்கள், தேசியப் பெருமையை பற்றிக் கொண்டிருக்கும் நினைவில் ஆழ்ந்துள்ளது; அவர்கள் பிரான்ஸ் தன்னுடைய பேரரசை விட்டுக் கொடுத்தே இருந்திருக்கக் கூடாது என்று கருதுபவர்கள்; 1962ம் ஆண்டு ஜனாதிபதி சார்ல்ஸ் டு கோல் அல்ஜீரியாவை தேசியவாதிகளுக்கு கொடுத்த பொழுது இவர்களில் மில்லியன் கணக்கான நபர்கள் அல்ஜீரியாவை விட்டு செல்லுமாறு நிர்பந்திக்கப்பட்டனர். இவர்கள் வலது மற்றும் அதி வலதின் தேர்தல் மற்றும் அரசியல் தளத்தில் முக்கிய பங்கைக் கொண்டு, குறிப்பாக தென்கிழக்கில் வாழ்ந்து வருகின்றனர். 1962ம் ஆண்டு பிரெஞ்சு இராணுவம் அல்ஜீரியாவை விட்டு அகன்றதும், குடியேற்றப் படைகள் மற்றும் நிர்வாகத்தில் பணிபுரிந்துவந்திருந்த பல ஹர்க்கிகளையும், அது வெற்றிபெற்ற FLN (தேசிய விடுதலை முன்னணி) உடைய தயவில் கைவிட்டுவிட்டது; பிந்தைய அமைப்பு இவர்களில் பலரை ஆயிரக்கணக்கில் படுகொலை செய்தது; இதன் கதி பற்றி பிரெஞ்சு அரசாங்கம் நன்கு அறிந்திருந்தது. பிரான்சிற்கு தப்பிவரமுடிந்திருந்த ஹர்க்கிகள் சேரிகளில் வாழ்ந்து வருவதுடன் இன்னமும் கூட ஓய்வூதியம், மற்ற பல உரிமைகளுக்காகப் போராடி வருகின்றனர். புதிய சட்டம் இந்நிலையைச் சீர்திருத்தும் இலக்கைக் கொண்டுள்ளதுடன், OAS (Secret Army Organisation) அமைப்பின் உரிமைகளையும் அங்கீகரிக்க விழைகிறது. பிரான்சில் டு கோலுக்கு எதிராக கிளர்ச்சி ஒன்றை OAS விரும்பியது மற்றும் 1962ம் ஆண்டு அல்ஜீரியாவில் காலனித்துவ ஆட்சிக்கு முற்றுப் புள்ளி வைத்த எவியன் உடன்பாட்டை எதிர்த்து ஒரு இராணுவ சர்வாதிகாரத்தையும் தோற்றுவிக்க முற்பட்டிருந்தது. ஆயினும், UMP யின் மிகத் தீவிர சார்கோசி பிரிவில் இருந்துதான் இத்தகைய பேரினவாத சிந்தனையின் வளர்ச்சிக்கான தொடக்க முயற்சிகள் வெளிவந்துள்ளன என்று நினைப்பது தவறாகிவிடும். இந்த ஆண்டின் தொடக்கத்தில் Francois Fillon மேற்கொண்டிருந்த கல்விச்சீர்திருத்தத்தில் தேசிய கீதமான "The Marseillaise" உடைய முழுச் சொற்களும் மனப்பாடம் செய்தல் கட்டாயம் என்று ஆரம்பப்பள்ளிகளில் கொண்டுவரப்பட்டது. சிராக்கின் முன்னாள் பிரதம மந்திரியான ஜோன் பியர் ரஃப்ரனால் நியமிக்கப்பட்ட பிரதிநிதியான Michel Diefenbacher பெப்ரவரி 2003ல், "rapatries [pieds noirs] தற்காலிக தங்கியோரின் தேசிய ஒற்றுமைக்கான நடவடிக்கைகள பூர்த்திசெய்வதை நோக்கமாகக் கொண்டு", "வெளிநாட்டில் இருந்த பிரெஞ்சு வீரர்களின் கூட்டுச் சாதனைகளை விளம்பரப்படுத்த வேண்டும்" என்று ஓர் அறிக்கையை அளித்தார்: மார்ச் 2003ல், தற்போதைய வெளியுறவு மந்திரியான Philippe Douste-Blazy ஒரு கருத்தை முன்வைத்தார்: "அல்ஜீரியா, பிரான்சின் ஆட்சியில் இருந்த காலம் முழுவதும் நம்முடைய குடிமக்கள் அங்கு புரிந்த நலம் மிகு சாதனைகளின் அனுபவங்கள் பகிரங்கமாக அங்கீகரிக்கப்படுகின்றன." தற்போதைய பாதுகாப்பு மந்திரியான, சிராக் ஆதரவாளரான Michele Alliot-Marie, மார்ச், 2003ல் அறிவித்தார்: "அப்பகுதிகளில் நம் குடிமக்களின் சிறந்த சாதனைகளை அங்கீகரித்தல் என்பது பிரான்ஸ் நாட்டின் கடமை ஆகும்" என்று கூறினார். சார்க்கோசி, ஜனாதிபதி ஜாக் சிராக் மற்றும் பிரதம மந்திரி டொமினிக் டு வில்ப்பன் ஜோன் மரி லூ பென்னின் புதிய பாசிச தேசிய முன்னணி வாக்காளர்களை ஈர்த்து வெற்றி கொள்ளுவதில் நம்பிக்கையை மட்டும் வைத்திருக்கவில்லை. உலகந்தழுவிய பொருளாதாரத்தில் போட்டியிடும் வகையில் பிரான்சின் பெருவணிகத்திற்கு தேவைப்படும் வாழ்க்கை தரத்தை அழித்தலுக்கு எதிரான தொழிலாளர், இளைஞர்களின் எதிர்ப்பை முறியடிப்பதற்கு தேவையான சக்திகளை திரட்டுவதற்கும் ஒரு கருந்தியற் சூழலை தோற்றுவிப்பதற்கும் கூட அவர்கள் முயலுகின்றனர். இச்சட்டத்தின் நான்காம் விதியின் பந்தி மிகப் பரந்த எதிர்ப்பை தூண்டியுள்ளது, அது கூறுவதாவது: "பிரான்ஸ் செயல்பட்டவிதம் பற்றி, குறிப்பாக வடக்கு ஆபிரிக்காவில் எத்தகைய சிறந்த நலன்களை அளித்தது என்பது பற்றி பள்ளிப் பாடத்திட்டங்கள் உணருகின்றன. அதையொட்டி இப்பகுதிகளில் இருந்த "பிரெஞ்சு இராணுவத்தின்" வீரர்களுடைய தியாகத்தை பற்றிய வரலாறு அதில் அடங்கும். அவர்களுக்கு உரிய பெருமையான இடம் அங்கீகரிக்கப்டுகிறது. "பிரெஞ்சு இராணுவத்தின் வீரர்கள்" என்று இங்கு குறிக்கப்படுவது பிரெஞ்சு ஏகாதிபத்தியத்துடன் இரண்டு உலகப் போர்களிலும் இணைந்து பங்கேற்ற, அதிலும் குறிப்பாக அல்ஜீரிய போரில் (1954-62) பங்கேற்ற ஹர்க்கிகளை குறிப்பிடுகிறது. UMP இன் பிரதிநிதி Christian Vanneste, Club de l'Horloge என்ற தீவிர வலது அமைப்பின் உறுப்பினர், தேசிய முன்னணி கல்வியாளர்கள், அறிவுஜீவிகளுடன் சேர்ந்து கொண்டு மேற்கூறிய விதியை ஒரு திருத்தமாக, தேசிய சட்ட மன்றத்தின் ஜூன் 11, 2004 கூட்டத்தன்று பிற்பகலில் கொண்டுவந்தனர் என்றும், "அது இளைய தலைமுறைகளுக்கு கூடுதலான முறையில் ஆபிரிக்கா, ஆசியாவில் பிரான்சின் செயற்பாடு உயர்ந்த முறையில் இருந்ததை தெரியப்படுத்த உதவும்" என்றும் குறிப்பிட்டதாக மார்ச் 15, 2005 பதிப்பில் Liberation கூறியுள்ளது."சோசலிச அல்லது கம்யூனிச எதிர்க்கட்சிகளில் இருந்து எந்த உறுப்பினரும் முன்வரத்தயாராக இல்லை. திருத்தங்கள் வாக்கிற்கு விடப்பட்டன. மேல்மன்றத்திலோ, மக்கள் மன்றத்திலோ, இரண்டாம் வாசிப்பின்போது எந்த வினாவும் எழுப்பப்படவில்லை. சட்டம் இயற்றப்பட்டதாக பிரகடனப்படுத்தப்பட்டது" என்று செய்திதாள் சுட்டிக்காட்டியுள்ளது. பெப்ரவரி 23, 2005ல் அனைத்துக் கட்சிகளும் ஒப்புதல் தெரிவித்த பின் சுற்றறிக்கைக்கு விடப்பட்டபோது, பல்கலைக்கழக மற்றும் உயர்நிலைப் பள்ளி ஆசிரியர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் ஆரம்பநிலைப்பள்ளி ஆசிரியர்கள் அனைவரும்தான் இச்சட்டத்தை எதிர்ப்பதற்கு முன்னின்றனர். அவர்களுடைய இயக்கம் இச்சட்டத்தின் விதிகளுக்கு அல்ஜீரிய அரசாங்கம் ஜூன் 6ம் தேதி கொடுத்த விடையிறுப்பின் மூலமும் இச்சட்டம் திரும்பப் பெற்றுக் கொள்ளப்படாவிடில் பிரான்சுக்கும் அல்ஜீரியாவிற்கும் இடையே நட்புறவு உடன்பாடு திட்டமிட்டபடி கையெழுத்திடப்படுவது பற்றி கேள்விக்குள்ளாக்கும் என்று அவ்வரசாங்கம் கூறியதாலும் வலுவடைந்தது. பிரான்சின் கடல்கடந்த எல்லைப்பகுதிகளில் இச்சட்டத்திற்கு உள்ள விரோதப்போக்கின் தீவிரம் சார்க்கோசியை முன்னாள் கரிபியன் தீவிலுள்ள அடிமைக் காலனித்துவப்பகுதிகளான Guadeloupe, Martinique ஆகியவற்றிற்கு திட்டமிட்டிருந்த பயணத்தை இரத்து செய்யுமாறு நிர்ப்பந்தித்தது. இதன் விளைவாக சில மந்திரிகளும் ஆளும் கோலிச UMP உறுப்பினர்களும், குறிப்பாக அப்பகுதியின் பிரதிநிதிகளாக உள்ளவர்களும், விதி எண் 4ஐ எதிர்த்து பேச நேரிட்டது. ஜனாதிபதி சிராக், "வரலாற்றை எழுதுவது ஒன்றும் சட்டத்தின் வேலை அல்ல" என்று கூற நேர்ந்தது. மேலும் பல கட்சி உறுப்பினர்களையும் கொண்ட குழு ஒன்று போற்றத்தக்க நினைவுகள், வரலாறு பற்றிய பாராளுமன்ற நடவடிக்கை பற்றி மதிப்பீடு செய்ய நியமிக்கப்படும் மற்றும் அதன் அறிக்கை மூன்று மாத காலத்திற்குள் அளிக்கப்பட வேண்டும் என்றும் கூறியதன் மூலம் ஜனாதிபதி ஜாக் சிராக் சூழ்நிலையை சக்தியற்றுப்போகவைக்க முயற்சி செய்தார். இதற்கிடையில் இயற்றப்பட்ட சட்டத்திற்கு முழுச் சட்ட அந்தஸ்து உள்ளது. இடது எதிர்ப்பின் போலித்தனம் "தேசத்தின் நன்றியறிதல் மற்றும் மீண்டும் இங்கு குடிபெயர்ந்துள்ள பிரெஞ்சு மக்களுக்கான ஆதரவில் தேசிய பங்களிப்பிற்கு நன்றி செலுத்துபவர்கள்" பற்றிய ஜனவரி 23, 2005 சட்டத்தில் நான்காம் விதிக்கு எதிராக இப்பொழுது திரண்டுள்ளவர்களில் (சோசலிஸ்ட் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி, பசுமைக் கட்சி, இடது குடியரசுக் கட்சி) மற்றும் லுத் உவ்றியேர் (Workers Fight) மற்றும் புரட்சி கம்யூனிஸ்ட் கழகம் (Ligue Communiste Revolutionaire) உள்ளிட்ட அனைத்து இடது கட்சியும் உள்ளன. லியோனல் ஜோஸ்பன் (1997-2002) இன் பன்முக இடது அரசாங்கத்தில், பொருளாதாரம், நிதி, தொழிற்துறைக்கான முன்னாள் சோசலிஸ்ட் கட்சி மந்திரியாக இருந்த Dominique Strauss Khan உடைய முயற்சியில் டிசம்பர் 15 அன்று நடைபெற்ற செய்தியாளர் கூட்டம் ஒன்று, அனைத்து அரசியல் அமைப்புக்களின் தலைவர்களையும் ஒன்றாகக் கொண்டுவந்து விதி எண் 4 நான்கு அகற்றப்பட வேண்டும் என்று அழைப்புவிடுப்பதற்கு ஆதரவாக கூட்டப்பட்டது. குடி உரிமைகளின் பாதுகாப்பாளன் என்ற இடது நற்சான்றுகளின் ஓரளவு வெளித்தோற்றத்தை சோசலிஸ்ட் கட்சிக்கு மீட்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட இந்நிகழ்விற்கு "தீவிர இடது" கட்சித் தலைவர்களின் முழு ஆதரவும் இருந்தது; LO உடைய Arlette Laguiller, LCR உடைய Alain Krivine, சோசலிஸ்ட் கட்சி தலைவரான Francois Hollande உடன் இதில் பங்கு பெற்றார். "விதி 4 முறையற்றது என்றால் சட்டமே ஏற்கத்தக்கது அல்ல" என்று அவதானித்திருந்தபோதிலும், வாராந்திர ஏடான Rouge- ன் டிசம்பர் 16 தலையங்கம் கோரியவாறு, டிசம்பர் 12 தேதியிடப்பட்ட, இந்தவாரத்திய LCR ன் துண்டுப்பிபிரசுரம், விதி 4 அகற்றப்பட வேண்டும் என்று மட்டும் கோருகிறது. லுத் உவ்றியேரை பொருத்த வரையில், முழுச்சட்டமும் அகற்றப்படவேண்டும் என்றும் பிரான்சின் ஏகாதிபத்திய காலனித்துவ போர்கள் மற்றும் அடக்குமுறைக்கான ஆதரவில் சோசலிஸ்ட் கட்சியின் பங்கு பற்றிய விஷயங்களை வெளியிடுமாறும் அழைக்கிறது. இது Strauss-Khan, Hollande செய்தியாளர் கூட்டத்தில் Arlette Laguiller அடக்கமாய் பங்கு பெற்றதையும், பிரான்சின் அரசியல் ஸ்தாபனத்தின் இடது புறத்தில் அவரது இருப்பிடத்தை ஆக்கிரமித்துக்கொள்ளும் அக்கறையையும் தடுத்துவிடவில்லை. சோசலிஸ்ட் கட்சி, சட்டத்துடன் கொண்ட தொடர்பு பற்றிய சான்று அதன் தலைவர்களுக்கு குறிப்பாக சங்கடத்தை அளித்துள்ளது. ஒரு சில பிரதிநிதிகள் மட்டும் அக்கூட்டத்தொடரில், 2004ல் "தவறாக" சோசலிஸ்ட் கட்சி வாக்களித்துவிட்டதாக Hollande குறிப்பிட்டார். பாராளுமன்ற குழுவைக் கொண்டு ஜோஸ்பனின் பன்முக இடது கூட்டணியின் அங்கமாக இருந்த கம்யூனிஸ்ட் கட்சியும் சிறந்த நிலைமையில் இல்லை. விதி 4 அகற்றப்படவேண்டும் என்னும் பாராளுமன்ற தீர்மானம் சோசலிஸ்ட் கட்சியினால் கொண்டுவரப்பட்டது; இது நவம்பர் 29 அன்று UMP யால் நிராகரிக்கப்பட்டது; அதேதினத்தில்தான் சார்க்கோசியின் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் சோசலிஸ்ட் கட்சி வாக்களிக்காத நிலையில், எதிர்ப்பு இல்லாமல் இயற்றப்பட்டது. தற்போழுதுள்ள நெருக்கடி நிலைமை மற்றும் பயங்கரவாத சட்டத்தை திணித்தலுடன் தொடர்புடைய 1955 சட்டத்தால் பிரதிநித்துவம் செய்யப்படும் மக்கள் உரிமைகள் மீதான தாக்குதலில் இருந்து கவனத்தை திசைதிருப்ப, செய்தி ஊடகத்தின் ஆர்வமான ஆதரவுடன் சோசலிஸ்ட் கட்சி வரலாற்றாளர்கள், மாணவர்கள் ஆகியோர் பிரெஞ்சு காலனித்துவத்தை அரசாங்க தலையீடு இல்லாமல் கற்பிக்க வேண்டும் என்று அவர்களின் உரிமைகளை பாதுகாப்பதாக காட்டிக்கொள்ள பயன்படுத்திக்கொண்டது. இந்த இரண்டு சட்டங்களும் இணைந்து அரசாங்கத்திற்கு குடிமக்கள் அனைவரையும் தொலைக்காட்சி காமிராக்கள் மூலம் கண்காணித்தல், தொலைபேசி, இணையதள சேவை கொடுப்போர் மூலம் ஆதாரங்கள் திரட்டுதல் மற்றும் செய்தி ஊடகத்தின்மீது முழுக் கட்டுப்பாடு கொண்டுவருதல் உட்பட பல அதிகாரங்களை வழங்கியுள்ளன. விதி எண் 4 ற்கு எதிரான இத்தகைய செய்தியாளர் கூட்டத்தின் போலித்தனம், இடது ஏற்கத்தயாராக உள்ள சட்டத்தின் மற்ற பகுதிகளை ஆராயும்போது நன்கு தெளிவாகும். முதல் விதி கூறுவதாவது: "பிரான்சின் ஆட்சிக்கு உட்பட்டிருந்த பகுதிகளான அல்ஜீரியா, மொரோக்கோ, துனீசியா மற்றும் இந்தோ சீனாவிலும் முன்னாள் பிரெஞ்சு இறைமைக்கு உட்பட்டிருந்த மற்ற பகுதிகளிலும் பிரான்சிற்காக சாதனை புரிந்த ஆடவர், பெண்டிருக்கு இந்த தேசம் தன்னுடைய நன்றியை வெளிப்படுத்திக் கொள்ளுகிறது." பேரரசிற்காகத் தங்களை தியாகம் செய்தவர்களுக்கு புகழாரம் சூட்டுகையில், காலனித்துவத்தின் விளைவாக பாதிக்கப்பட்டவர்களுக்கும், பிரான்ஸ், அதன் குடியேற்றங்கள் ஆகியவறன்றில் இருந்து அதன் கொள்ளைமுறைகளுக்கு எதிராக போரிட்ட மற்றும் அதன் தளைகளில் இருந்து விடுவித்துக் கொள்ள போராடியவர்கள் பற்றிய குறிப்பு ஏதும் இல்லை. பிரான்சின் காலனித்துவ வரலாற்றுப் பதிவு இச்சட்டத்தை காத்து பேசுபவர்கள் 16ம் நூற்றாண்டில் இருந்து தொடங்கி 1848ல் அகற்றப்படும் வரை அதன் காலனிகளில் இருந்த அடிமை முறை தொடர்தலிலும் அடிமை வியாபாரத்தில் பிரெஞ்சு ஏகாதிபத்தியத்தின் பங்கேற்பு பற்றி சொல்லத் தவறிவிட்டனர். கல்வி, மருத்து அறிவியல் போன்ற நாகரிகத்தின் நலன்கள் பேரரசின் பல மக்களுக்கும் கொண்டு செல்லப்பட்டது மட்டுமே இவர்களால் சுட்டிக்காட்டப்படுகிறது; ஆனால் காலனித்துவ நாடுகளில் ஒரு சிறு சதவிகித மக்களுக்கு மட்டும்தான் இவை கிட்டின என்ற உண்மையைக் கூறவில்லை. சாலைகள், இரும்புப் பாதைகள் அறிமுகப்படுத்தப்பட்டது பற்றி அவர்கள் பேசுகின்றனர், ஆனால் அவற்றைக் கட்டிய ஆயிரக் கணக்கான தொழிலாளர்களின் வாழ்க்கையை அழித்த கட்டாய உழைப்பு மூலம் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள், அவற்றைக் கட்டியவர்கள் உயிர் அழிப்பு பற்றி ஏதும் கூறவில்லை அல்லது வெற்றி கொள்ளப்பட்ட பகுதிகளில் கூடுதலான முறையில் சுரண்டுவதற்காகத்தான் இச் சாதனங்கள் பயன்படுத்தப்பட்டன என்பதையும் கூறவில்லை. வெற்றி முறையில் மிருகத்தனம், உள்ளூர் மக்கள் பற்றிய நெறி எனக் கூறப்பட்டது எப்படி குடியேற்ற அதிகாரிகளின் முழு ஆதிக்கத்திற்கு உட்பட்டிருந்தது என்றும், பூர்விக மக்களின் பொருளாதாரம், விவசாயம் ஆகியவை அழிக்கப்பட்டது, அதனால் விளைந்த பஞ்சம் ஆகியவை இந்த சட்டத்தின் ஆதரவாளர்களால் கூறப்படவில்லை. அதேபோல் அல்ஜீரியாவில் 1830க்கும் 1870க்கும் இடைப்பட்ட காலத்தில் மக்கட்தொகையில் இழப்பால் குறைந்துவிட்ட 700,000 எண்ணிக்கை, ஐவரி கடற்கரைப் பகுதியின் ஒரு மில்லியன் மக்கள் இழப்பு, மக்கள் இழந்துவிட்ட நிலம் பற்றியும் ஏதும் கூறப்படவில்லை. 1954ம் ஆண்டு அல்ஜீரிய நிலத்தில் 25 சதவிகிதம் அங்கு குடியேறியிருந்த 2 சதவிகித மக்களின் சொத்தாகப் போயிற்று. சட்டத்தின் நான்காம் விதிக்கு மட்டும் எதிர்ப்பு என்று குறுக்கப்படுவது வராலாற்றாளர்கள், ஆசிரியர்கள் ஆகியோரின் பணியின் விவாதத்தன்மையையும் குறைக்கிறது. பிரெஞ்சு காலனித்துத்தின் வரலாறு பற்றிய உண்மையான அறிதலை இது தடுக்கிறது; தொழிலாள வர்க்கத்தின் தற்கால அரசியல் இயக்கங்களின் வளர்ச்சிக்கு அத்தகைய படிப்பினை இன்றியமையாததாகும். சோசலிஸ்ட் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவை காலனிகளில் பிரெஞ்சு ஏகாதிபத்தியம் கொண்டிருந்த பங்கு பற்றி விவாதிக்கக் காட்டும் தயக்கம் அவர்களுடைய உடனடி முன்னுரிமையான அரசு அமைப்புக்களின் தேசியவாத பாதுகாப்பு மற்றும் தேசிய முதலாளித்துவத்தின் நலன்களிலிருந்து மேலெழவில்லை, அவை பிரெஞ்சுக் காலனித்துவத்தின் குற்றங்களில் அவர்களுடைய கடந்தகால உடந்தைத்தனம் இருந்ததை மறைக்கும் முயற்சியில் இருந்தும் மேலெழுந்ததாகும். 1945ம் ஆண்டு மே 8ம் தேதி அல்ஜீரிய நகரான Setif ல் நாஜிக்களுக்கு எதிரான வெற்றியை கொண்டாடும்போது, அல்ஜீரிய தேசியவாதிகள் தங்களுடைய கொடிகளை அசைத்தனர். இச்செயலை அடக்குவதற்குக் கொள்ளப்பட்ட முயற்சியினால் ஓர் எழுச்சி ஏற்பட்டது; அதைத்தொடர்ந்து பல்லாயிரக்கணக்கான அல்ஜீரிய மக்கள் படுகொலை செய்யப்பட்டது நிகழ்ந்தது; இது உள்ளூர் வெள்ளை குடியேறியவர்கள் மற்றும் இராணுவத்தால் மேற்கொள்ளப்பட்டது. சோசலிஸ்டுகளும், கம்யூனிஸ்டுகளும் மந்திரிகளாக பங்கு கொண்டிருந்த அரசாங்கம் அனைத்து எதிர்ப்பையும் நசுக்குவதற்கு 40,000 வீரர்கள் கொண்ட படையை அனுப்பி வைத்தது. விமானப் பிரிவு கம்யூனிஸ்ட் மந்திரியான எதிர்ப்பு வீரர் Charles Tillon விமானங்களை ஒதுக்கினார். 1947ம் ஆண்டு சோசலிஸ்ட் Vincent Auriol தலைமையில் அரசாங்கக் கட்சிகள் மீண்டும் காலனித்துவ ஆட்சிக்கு எதிராக மடகாஸ்காரில் நடந்த எழுச்சியை குருதிதோய்ந்தமுறையில் நசுக்குவதற்கு ஆதரவைக் கொடுத்தன. 1955ம் ஆண்டு, பின்னால் பிரான்சின் சோசலிச ஜனாதிபதியாக வரவிருந்த, அப்பொழுது உள்துறை மந்திரியாக இருந்த, பிரான்சுவா மித்திரோன், தேசிய விடுதலை இயக்கத்தை எதிர்த்து கூறியதாவது: "அல்ஜீரியா என்பது பிரான்ஸ்... ஒரே பேச்சுவார்த்தை என்பது போர்தான்..." 1956ம் ஆண்டு சோசலிஸ்ட், கம்யூனிஸ்ட் பிரதிநிதிகள் சோசலிசத் தலைவர் Guy Mollet க்கு முழு அதிகாரங்களை கொடுத்து வாக்களித்தனர்; அவர் அதைப்பயன்படுத்தி மிகப் பெரிய இராணுவப்படையையும் இகழ்வான சித்திரவதை புரிந்த தளபதிகளான Massu, Bigeard, Aussaresses ஆகியோருக்கு எழுச்சியை அடக்குவதற்கு முழு அதிகாரத்தை கொடுத்தார். தளபதிகளின் வழிமுறைகள் Gillo Pontecorvo இன் திரைப்படமான The Battle of Algiers -ல் நான்கு காட்டப்பட்டுள்ளது (See "A timeless portraint of the anti-colonial struggle in Algeria") 1987ம் ஆண்டு ஜனாதிபதி மித்திரோனும் பிரதம மந்திரி சிராக்கும், அல்ஜீரிய போரில் சித்திரவதை செய்தவரும் அதைப்பற்றி சிறிதும் வருத்தம் காட்டாதவருமான Maurice Schmitt என்னும் தளபதியை பிரான்சின் ஆயுதப்படைகளுக்கு தலைமைத் தளபதியாக ஆக்கினர். |