World Socialist Web Site www.wsws.org |
WSWS :Tamil: செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பாEuropean governments make their peace with Washington on abductions, tortureகடத்தல்கள், சித்திரவதை தொடர்பாக வாஷிங்டனுடன் சமாதானம் செய்து கொண்ட ஐரோப்பிய அரசாங்கங்கள் By Chris Marsden ஐரோப்பிய விமான நிலையங்களையும் கிழக்கு ஐரோப்பாவில் அமைக்கப்பட்டுள்ள CIA தளங்களையும் பயன்படுத்தி கைதிகள் வெளிநாடுகளுக்கு சித்திரவதை செய்வதற்காக அனுப்பப்படுவது சம்மந்தப்பட்ட அமெரிக்கா கடைபிடித்து வரும் கடத்தல் என்கின்ற நடைமுறையை போலியாக எதிர்க்க கூட முற்றுப்புள்ளி வைத்துவிட ஐரோப்பிய அமைச்சர்கள் சமிக்கை காட்டியுள்ளனர். நேட்டோ வெளியுறவு அமைச்சர்கள் கூட்டம் நடப்பதற்கு முதல் நாளில் டிசம்ர் 7ல் பிரஸ்ஸல்சில் நடைபெற்ற ஒரு சம்பிரதாய இரவு விருந்திற்கு பின்னர் பிரான்சு, ஜேர்மனி, பெல்ஜியம் மற்றும் நெதர்லாந்து ஆகிய அனைத்தும் கைதிகள் நடத்தப்படுவது தொடர்பாக ஜெனீவா ஒப்பந்தத்தின்படி அமெரிக்கா நடந்து கொள்கிறது என்று வெளியுறவுத்துறை அமைச்சர் கொண்டலிசா ரைஸ் தந்த மறு உறுதிமொழிகளில் தாங்கள் திருப்தி கொண்டிருப்பதாக அறிவித்தனர். அதற்கு முன்னர் உக்ரைனில் ரைஸ் ''[சித்திரவதைக்கு எதிரான ஐக்கிய நாடுகள் சபை உடன்படிக்கையின்] கீழ் கண்டுள்ள கடமைகளின்படி அமெரிக்காவின் கொள்கை செயல்படுத்தப்பட்டு வருகிறது, அது கொடூரமான மனிதநேயமற்ற அல்லது இழிவுபடுத்தும் வகையில் நடத்துவதற்கு தடைவிதிக்கிறது. அமெரிக்க அதிகாரிகள் அமெரிக்காவிலிருந்தாலும் அல்லது அமெரிக்காவை விட்டு வெளியில் இருந்தாலும் அவர்களுக்கு இந்த சட்டம் நீடிக்கப்பட்டிருக்கிறது'' எனக்குறிப்பிட்டார். புதன் கிழமையன்று இரவு விருந்தில் அதேபோன்று அறிக்கைகளை அவர் வெளியிட்டதாக கூறப்படுகிறது. இதுபற்றிய நேட்டோ மற்றும் ஐரோப்பிய அதிகாரிகளின் பிரதிபலிப்பு மகிழ்ச்சி பொங்குவதாக இருந்தது. பிரெஞ்சு வெளியுறவு அமைச்சர் பிலிப் டுஸ்த்-பிளாசி நேட்டோ கூட்டணியினர்கள் ரைசிடமிருந்து சர்வதேச ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா முழுமையாக இணங்குகிறது மற்றும் இதர நாடுகளின் ''இறையாண்மை மீது முழு மரியாதை'' கொண்டுள்ளது என்ற உறுதிமொழிகளை பெற்றனர்'' என்று குறிப்பிட்டார். அவர் வாஷிங்டன் ''சர்வதேச விதிப்படி நடப்பதை'' வரவேற்றார் குறிப்பாக சித்திரவதைக்கு எதிரான ஐ.நா. உடன்படிக்கை பற்றி கருத்து தெரிவித்த அவர் ''அமெரிக்கா, அவர்கள் எமது நண்பர்கள். நான் திரும்பவும் கூறுகிறேன், அவர்கள் எமது நண்பர்கள்." ஜேர்மனியின் வெளியுறவு அமைச்சர் பிராங்க்-வால்டர் ஸ்ரைன்மையர் நிருபர்களிடம் ''சர்வதேச சட்டத்திற்கு விளக்கும் தருவதில் ஒருவருக்கொருவர் வேறுபட்டு நிற்கக்கூடாது என்பதில் நேட்டோ மற்றும் ஐரோப்பிய ஒன்றிய அமைச்சர்கள் தங்களது கவலைகளை எழுப்ப முடிந்தது என்று நான் நினைக்கிறேன்'' என குறிப்பிட்டார். ''சர்வதேச ஒப்பந்தம் தொடர்பாக ஐரோப்பாவை காட்டிலும் அமெரிக்காவில் எந்தவித வேறுபட்ட விளக்கம் இல்லை என்று அமைச்சர் ரைஸ் உறுதியளித்தார்''. அந்தக் கூட்டம் ''எங்கள் அனைவருக்கும் மிகவும் திருப்தி தருவதாக அமைந்தது'' என்று அவர் மேலும் குறிப்பிட்டார். டச் வெளியுறவு அமைச்சர் பென் பாட் ரைசின் கருத்துகளால் தாம் புதன்கிழமை இரவு விருந்திலிருந்து ''மிகுந்த திருப்தியாக'' வந்ததாக குறிப்பிட்டார். பெல்ஜியன் வெளியுறவு அமைச்சர் காரல் டி குச்ட் சொன்னது என்னவென்றால் ரைஸ் தனக்கு மறு உறுதிமொழி தந்ததாகவும் அது ''எந்த நேரத்திலும் அமெரிக்கா மனித நேயமற்ற செயல்கள் அல்லது சித்திரவதைக்கு இணங்கியது இல்லை அவர்கள் சம்மந்தப்பட்ட அரசுகளின் இறையாண்மையை எப்போதுமே மதித்து வருகின்றனர் மற்றும் பயங்கரவாதிகள் ஜெனீவா ஒப்பந்தங்களின் கீழ் வரவில்லை என்றாலும் அவர்கள் இன்னமும் அந்த ஜெனீவா ஒப்பந்தங்களின் கொள்கைகளைத்தான் செயல்படுத்தி வருகின்றனர்..... எல்லா அமைச்சர்களும் அதை பொதுவாக வரவேற்றனர் என்ற கருத்தை நான் கொண்டிருக்கிறேன்''. நேட்டோ பொதுச் செயலாளர் ஜெனரல் ஜேப் டி ஹூப் ஷேவர் அதே போன்று தெளிவுபடுத்திவிட்டதாக குறிப்பிட்டார். ரைஸ் ''நிலைமையை தெளிவுபடுத்தினார். இந்த விவாதம் தொடர்ந்து நடப்பதை நீங்கள் பார்க்க முடியாது.'' என்றார். அவரது வார்த்தைப்படியே நடந்தது. அடுத்த நாள் நேட்டோ வெளியுறவு அமைச்சர்கள் ஆப்கனிஸ்தானில் நேட்டோவின் இராணுவத்தை அதிகரிப்பது பற்றியும் அமெரிக்கா நிறுத்தியுள்ள துருப்புக்களின் எண்ணிக்கையை வாஷிங்டன் குறைத்துக் கொள்வதற்கு அனுமதி வழங்குவது பற்றியும் விவாதிக்க கூடினர். இரகசிய சிறைகள் மற்றும் கைதிகள் நடத்தப்படுவது குறித்து விவாதம் எதுவும் நடைபெறவில்லை. இந்த அறிக்கைகள் முக்கிய ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளிடமிருந்து வந்திருப்பது மிகவும் தெளிவுபடுத்துவதாக உள்ளது. அது என்னவென்றால் ஐரோப்பிய ஒன்றியம் எதிர்ப்பது ஒருபுறம் இருக்க, ஒட்டுமொத்தமாக கடுமையான புலன்விசாரணை செய்யும் எண்ணம் கொண்டிருக்கவில்லை. வாஷிங்டன் சர்வதேச சட்டத்தையும் அதன் நடைமுறைகளையும் மீறி பயங்கரவாதிகள் என்று குற்றம்சாட்டப்பட்டவர்களை கடத்திச் சென்று CIA இன் இரகசிய சிறைகளுக்கோ அல்லது மூன்றாவது நாடுகளுக்கோ கொண்டு சென்று அங்கு காலவரையற்று காவலில் வைத்தும் சட்டபூர்வ நடைமுறைகளுக்கு இடமில்லாமலும் அவர்களை சட்டவிரோதமானது என்று தடைவிதிக்கப்பட்டுள்ள கொடூரமான புலனாய்வு முறைகளுக்கு உட்படுத்தப்படுவதை விசாரணை செய்தவற்கு ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் ஒட்டுமொத்தமாக தயாராக இல்லை. மனித உரிமை குழுக்கள் ரைசின் மறுஉறுதிமொழிகளை புறக்கணித்துள்ளன. அமெரிக்காவை தளமாகக்கொண்ட மனித உரிமை கண்காணிப்பு குழு கூறியிருப்பது என்னவென்றால் புஷ் நிர்வாகம் சித்திரவதைக்கு தந்துள்ள விளக்கம் மிகக் குறுகலாக இருப்பதால் அமெரிக்க ஊழியர்கள் நீரில் மூழ்கடித்து கொன்று விடுவதாக அச்சுறுத்துவது, உணவு, உறக்கம் அல்லது வெப்பம் ஆகியவை கிடைக்காமல் செய்வது மற்றும் உயிருக்கு பாதிப்பு இல்லாமல் இதர உடல் கூறு அடிப்படையிலோ உளவியல் அடிப்படையிலோ பல்வேறுவகைப்பட்ட முறைகேடான மற்றும் சட்டவிரோதமான நடைமுறைகளை பின்பற்றுவதற்கு அது சாத்தியத்தை வழி திறந்துவிடுகிறது. ''சித்திரவதையையும் கொடூரமான மற்றும் மனித நேயமற்ற இழிவுபடுத்தும் நடவடிக்கைகளை பல ஆண்டுகளாக மிகப்பெரும்பாலோர் விளக்கம் தருகின்ற முறையில் அவர்கள் விளக்கம் தருகிறார்களா என்பதை நாம் அறிந்தாக வேண்டியது அவசியம்'' ''எனது கருத்து என்னவென்றால், அவர்களை பொறுத்தவரை, உடலில் காயவடுக்களை ஏற்படுத்துவதுதான் சித்திரவதை என்று எடுத்துக் கொள்கிறார்கள்'' என்று டோம் மலினோவ்ஸ்கி கூறினார். கொடூரமான இழிவுபடுத்துகின்ற நடவடிக்கை என்பதற்கு தாம் என்ன பொருள் கொள்கிறார் என்பதை ரைஸ் எப்போதுமே விளக்கவில்லை. அது எப்படி இருந்தாலும் அமெரிக்க ஊழியர்கள் சித்திரவதையில் சம்மந்தப்பட்டிருக்கவில்லை என்ற கூற்று அபு கிரைப் மற்றும் குவாான்டனாமோ குடா துயர நடவடிக்கைகளை ஏற்கனவே தெரிந்திருப்பவர்களுக்கு அவர் கூறியதில் ஒன்றும் இல்லை என்பது தெரியும். வாஷிங்டனின் கறைப்படிந்த பணியை வெளிநாடுகளில் மேற்கொள்வதற்கு தனியார் ஒப்பந்தக்காரர்களையும் அல்லது புலனாய்வாளர்களையும் பயன்படுத்தி வருவது சித்திரவதையில் நேரடியாக அமெரிக்காவை உடந்தையாக்குவதை தவிர்ப்பதற்கு ஒரு வழியாக இந்த கடத்தல் முறைகளை முன்னெடுப்பது ஆகிய அனைத்தும் மிகவும் இரட்டை வேடமாகும். கீவிலும், பிரஸ்ஸல்சிலும் ரைஸ் தனது அறிக்கைகளை விட்டுக் கொண்டிருந்த நேரத்திலேயே புஷ் நிர்வாகமும் நாடாளுமன்ற குடியரசுக் கட்சிக்காரர்களும் அமெரிக்கா கைதிகளுக்கு எதிராக சித்திரவதை நடவடிக்கை மேற்கொள்வதற்கு தடைவிதிக்கும் ஒரு தீர்மானத்தை எதிர்த்தனர். ''பயங்கரவாதத்தின் மீதான பூகோள போர்'' என்றழைக்கப்படுவதன் பெயரால் இப்போது செய்து வரும் எந்த நடவடிக்கையையும் அமெரிக்கா நிறுத்தி விட வேண்டும் என்று எவரும் கேட்கவில்லை அல்லது ரைஸ்சும் அப்படிச் சொல்லவில்லை. ரைஸ் எதையும் ஒப்புக் கொள்ளவில்லை அல்லது எதுவும் செய்வதில்லை என்றும் உறுதிமொழி தரவில்லை. மொட்டையான முற்றிலும் நம்ப முடியாத சம்பிரதாய அறிக்கையை வெளியிட்டு சர்வதேச சட்டத்தின் மீது அமெரிக்காவின் நம்பிக்கையை வலியுறுத்திக் கூறினார். சர்வதேச சட்டத்தின் கீழ் ஒரு நாடு சர்வதேச செஞ்சிலுவை சங்கம் அதன் சிறைகளுக்கு விஜயம் செய்வதற்கு அனுமதி தர வேண்டும் கைதிகள் நடத்தப்படுவது தொடர்பாக அதிகாரப்பூர்வமாக கூறப்படும் தகவல்களையும் கைதிகளின் நிலையையும் சோதனையிடுவதற்காக அவ்வாறு அனுமதிக்க வேண்டும் என்பதையும் குறிப்பிட வேண்டும். அமெரிக்கா சர்வதேச செஞ்சிலுவை சங்கத்திற்கு அதன் இரகசிய சிறைகள் பற்றி எந்தத் தகவலும் தர மறுத்துவிட்டதுடன் ஏற்கனவே தெரிந்த குவாண்டாநாமோ வளைகுடா மற்றும் ஈராக் மற்றும் ஆப்கனிஸ்தானிலுள்ள சிறைகளை அந்த சர்வதேச அமைப்பு சோதனையிடுவதற்கும் தடை விதித்திருக்கிறது. இந்த ஆண்டின் பெரும்பகுதி நாட்களில் ஊடகங்களிலும் இணைய தளங்களிலும் வந்திருக்கின்ற செய்திகள் நூற்றுக்கணக்கான CIA விமானங்கள் வெளிநாட்டு அரசாங்கங்களின் சிறைச் சாலைகளுக்கும் அல்லது CIA நடத்தும் இரகசிய ''மறைமுக தளங்களுக்கு'' சென்றதாக தெரிவித்தன. ஐரோப்பிய குடிமக்கள் உட்பட முன்னாள் கைதிகள் பலர் எப்படி தாங்கள் சித்திரவதை செய்யப்பட்டோம் என்பதை பகிரங்கமாக வெளியிட்டிருக்கின்றனர். இந்த வாரத்தில்தான் ஒரு கடத்தப்பட்டு சித்திரவதை செய்யப்பட்ட ஜேர்மன் குடிமகனும் லெபனானை பிறப்பிடமாக கொண்டவருமான காலித் அல்-மாஸ்ரி அமெரிக்க அரசாங்கத்திற்கு எதிராக ஒரு வழக்கை தாக்கல் செய்திருக்கிறார். இத்தாலியின் மிலான் தெருக்களில் எகிப்திலிருந்து வந்த அரசியல் அகதியான ஹசன் முஸ்தபா ஓஸாமா நாசரை கடத்திச் சென்ற சம்பவத்தில் சம்மந்தப்பட்டிருப்பதாக இத்தாலிய வழக்குதொடுனர்கள் கூறுகின்ற 22 CIA இரகசிய உளவாளிகளை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று தற்பொழுது கேட்டுக்கொண்டிருக்கின்றனர். எட்டு நாடுகளுக்கு மேலாக ஐரோப்பிய ஒன்றியமும் CIA விமானங்கள் பறந்தது குறித்தும் கடத்தப்பட்டது தொடர்பாகவும் மறைமுக தளங்கள் பற்றியும் விசாரித்து வருகின்றனர். அப்படியிருந்தும் ரைஸ் தவிர்க்கும் அறிக்கைகளின் முன்நிலையில் இவை எதற்கும் செல்லுபடியாகாதவை. இந்த வார தொடக்கத்தில் ரைஸ் கொடுத்த வெற்று உறுதி மொழிகள் தமக்கு மன நிறைவு அளித்ததாக அதிபர் அங்கேலா மேர்க்கல் அறிவித்ததை தொடர்ந்து ஜேர்மன் வெளியுறவு அமைச்சர் அந்த நிலைப்பாட்டை எடுத்திருக்கிறார். ஐரோப்பாவில் குறைந்தபட்சம் ஒரு புலன் விசாரணையான ஸ்பெயின் அதிகாரிகள் அதன் மல்லோர்கா தீவு விமான நிலையங்கள் பயங்கரவாதிகள் என்று சந்தேகிக்கப்பட்டவர்களை வேறு நாட்டிற்கு மாற்றுவதற்காக பயன்படுத்தப்பட்டது பற்றிய விசாரணை ஏற்கனவே கைவிடப்பட்டுவிட்டது. ஒரு ''குற்றம் நடைபெற்றது என்பதற்கு பொருத்தமான சான்று எதுவும் கிடைக்கவில்லை'' என்று புலனாய்வு அதிகாரிகள் அறிவித்ததை தொடர்ந்து ஸ்பெயினின் சட்டமா அதிபர் கான்டிடோ கோண்டே-பம்பிடோ மாட்ரீட்டிலுள்ள தேசிய நீதிமன்றம் இந்த பிரச்சனையை எடுத்துக் கொள்ளும் என்று தான் நம்பவில்லை என குறிப்பிட்டார். 2001 முதல் 2005 வரையிலான காலத்தில் CIA ஐரோப்பாவிற்கு 800 இற்கு மேற்பட்ட விமானப் பயணங்களை மேற்கொண்டது என்று சர்வதேச பொது மன்னிப்பு சபை மதிப்பிடப்பட்டிருக்கிறது. சென்ற மாதம் போலந்திலும் ரூமேனியாவிலும் வைத்திருந்த இரகசிய சிறைகளை CIA மூடிவிட்டதாக இந்த வாரம் ABC அமெரிக்க தொலைக்காட்சி வலைபின்னல் தகவல் தந்தது. அம்பலத்திற்கு வந்திருக்கும் தகவல்களின் அளவு அமெரிக்காவின் குற்றமிக்க நடவடிக்கைகள் தொடர்பாக ஐரோப்பிய வல்லரசுகளுக்கு எதுவும் தெரியாது என்று தவிர்த்து விட முடியாது. ஏற்கனவே ஸ்வீடன் மற்றும் ஜேர்மன் அரசாங்கங்கள் சித்திரவதை மூலம் CIA பெற்ற சாட்சியத்தை பெறுவதற்கு எப்படி முயன்றன என்ற செய்திகள் ஏற்கனவே வெளியிடப்பட்டிருக்கின்றன. பிரிட்டனில் பயங்கரவாதிகள் என்று சந்தேகிக்கப்பட்டவர்கள் தொடர்பாக வெளிநாடுகள் சித்திரவதை மூலம் பெறப்பட்ட சாட்சியத்தை பயன்படுத்துவதற்கு உரிமை உண்டு என்று டோனி பிளேயரின் அரசாங்கம் மேற்கொண்டுள்ள முயற்சி வெற்றி பெறவில்லை. என்றாலும் ஐரோப்பியாவின் பதில்கள் அவை நேரடியாக கடத்திலில் சம்மந்தப்பட்டிருக்கின்றனவா என்பதை பொறுத்ததல்ல. ஈராக் போர் தொடர்பாக என்ன நிலை எடுத்திருந்தாலும் எல்லா ஐரோப்பிய வல்லரசுகளுமே ''பயங்கரவாதத்தின் மீதான போர்'' என்றழைக்கப்படுவதில் முழுமையாக பஙகு பெற்றிருக்கின்றன அதில் ஒரு முக்கிய அம்சம் கடத்துதல். வாஷிங்டனை போன்று அவர்களும் மத்திய கிழக்கிலும் சர்வதேச அளவிலும் தங்களது சூறையாடும் அபிலாஷைகளை நியாயப்படுத்துவதில் கவலை கொண்டிருக்கின்றனர் அதே நேரத்தில் தங்களது உள்நாட்டு எதிர்ப்பை சமாளிக்கவும், வாழ்க்கை தரத்தையும், சமூக பாதுகாப்பையும் இல்லாதொழிப்பதற்கு எழும் எதிர்ப்பை சமாளிப்பதற்கு ஒடுக்குமுறை அதிகாரங்களை வலுப்படுத்துவதிலும் கவலை கொண்டிருக்கின்றன. கண்டம் முழுவதிலும் அரசாங்கங்கள் ஜனநாயக உரிமைகளுக்கு எதிராக ஒரு இடைவிடாத தாக்குதலை முடுக்கி விட்டிருக்கின்றன------இது சர்வாதிகார ஆட்சி வடிவங்களை நோக்கி செல்கின்ற ஒரு மாற்றமாகும் அந்த மாற்றத்தின் மிக உயர்ந்த வெளிப்பாடு பிரான்சில் செயல்படுத்தப்பட்டு வரும் அவசரகால நிலை நடவடிக்கைகளாகும். எனவேதான் புஷ் நிர்வாகத்தின் சட்ட ஒழுங்கற்ற நிலையை சவால் விடுகின்ற எண்ணம் எதுவும் இல்லை மற்றும் ஏன் பாரிஸ் இந்த நேரத்தில் ஐரோப்பாவை ''அமெரிக்காவின் நண்பன்'' என்று அறிவித்துள்ளது. |