WSWS :Tamil
:
செய்திகள்
ஆய்வுகள்
: மத்திய
கிழக்கு :
ஈராக்
Made in the USA "free press" in Iraq
US military covertly pays to plant
stories in Iraqi media
ஈராக்கின் "சுதந்திர பத்திரிகைகள்" அமெரிக்காவில் தயாரிக்கப்பட்டவை
ஈராக் ஊடகங்களில் திட்டமிட்டு புகுத்தப்பட்ட செய்திகளுக்கு இரகசியமாக பணம்
கொடுக்கும் அமெரிக்க இராணுவம்
By Kate Randall
2 December 2005
Use this
version to print |
Send this link by email |
Email the author
காங்கிரஸ் ஜனநாயக கட்சியினரின் ஆதரவோடு புஷ் நிர்வாகம் ஈராக்கில் ''வெற்றிக்கான
மூலோபாயத்தை'' வகுத்த அதே நாளில், அமெரிக்க இராணுவம் அமெரிக்க-சார்பு பிரச்சார செய்திகளை ஈராக்கிய
பத்திரிகைகள் வெளியிடுவதற்காக இரகசியமாக பணம் கொடுத்து வருகிறது என்ற செய்தி அம்பலத்திற்கு வந்துள்ளது.
இராணுவத்தின் "தகவல் நடவடிக்கைகள் பணிக்குழு'' கட்டளைப்படி அமெரிக்க
துருப்புக்களால் தயாரிக்கப்பட்ட கட்டுரைகள் அரபு மொழியில் மொழிபெயர்க்கப்பட்டு வாஷிங்டனை
தளமாகக்கொண்ட லிங்கன் குரூப் மற்றும் அதன் துணை ஒப்பந்தக்காரரான
BKSH &
அசோசியேட்ஸ் உதவியிடன் பாக்தாத் செய்தி பத்திரிகைகளில் திட்டமிட்டு புகுத்தப்பட்டு வருகிறது என புதன்கிழமையன்று
லொஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸ் செய்தி
வெளியிட்டுள்ளது.
2004-ல் ஒரு பென்டகன் ஆலோசனை குழு ''முஸ்லீம் பொதுமக்களது கருத்தை
வென்றெடுக்கும் நம்பகத்தன்மையின் அடிப்படை பிரச்சனைக்காக அரசாங்கம் தனது தகவல் அறிவிப்பு திட்டங்களை
விரிவாக்கி திரும்பவும் செயல்படுத்த வேண்டும் என்று வேண்டுகோள்விடுத்த பின்னர், லிங்கன் குரூப்பிற்கு 5 மில்லியன்
டாலர்கள் ஒப்பந்தம் அளிக்கப்பட்டது என்று நியூயோர்க் டைம்ஸ் வியாழனன்று செய்தி வெளியிட்டிருக்கிறது.
இந்த நடவடிக்கையை விமர்சிக்கும் இராணுவ அதிகாரிகள் தந்துள்ள தகவலின்படி அமெரிக்க
பணிக்குழு ஒரு ஈராக்கிய செய்தி பத்திரிகையை ஒரேடியாக விலைக்கு வாங்கியிருக்கிறது மற்றும் ஒரு வானொலி நிலையத்தையும்
தனது கட்டுப்பாட்டில் எடுத்துக்கொண்டிருக்கிறது, அவற்றை பயன்படுத்தி ஈராக்கிய மக்களுக்கு அமெரிக்க-சார்பு
பிரச்சாரத்தை தருவதற்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. அமெரிக்க கட்டுப்பாட்டின் கீழ் இருந்தபொழுதும் இந்த செய்தி
எங்கிருந்து வந்தது என்பதை பொது மக்களுக்கு அடையாளப்படுத்தப்படவில்லை.
லொஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸ் தந்துள்ள தகவலின்படி ஈராக்கிய பத்திரிகைகளில்
வெளியிடப்பட்ட இருபதுக்கணக்கான கட்டுரைகளுக்கு அமெரிக்கா பணம் கொடுத்தது அவற்றில் பெரும்பாலானவை
சார்பற்ற உண்மை செய்தி அறிக்கைகளாக வழங்கப்பட்டுள்ளன அடிக்கடி ஈராக்கில் உள்ள லிங்கன் குழுவைச் சேர்ந்த
பணியாளர்கள் அல்லது அதன் துணை காண்டிராக்டர்கள் அலுவலகம் சாராத சுதந்திரமாக செயல்படும் நிருபர்களாக
அல்லது விளம்பர நிறுவன நிர்வாகிகளாக காட்டிக்கொண்டு பாக்தாத் பத்திரிகை அலுவலகங்களில் செய்திகளை
தந்தார்கள்.
''ஈராக்கின் வளர்ச்சிக்கு அதிக பண ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது'' போன்ற
தலைப்புக்களுடன் வெளியிடப்படும் அமெரிக்க மறுகட்டமைப்பு முயற்சிகள் என்று கூறப்படுவனவற்றுக்கு இந்த
அறிக்கைகள் ஆப்பு வைக்கின்றன. "பயங்கரவாதம் இருப்பினும் ஈராக்கியர் வாழ விரும்புகின்றனர்" என்பது போன்ற
தலைப்புக்களில் வெளியிடப்படுகின்ற கட்டுரைகள் அமெரிக்க ஆக்கிரமிப்பை ஈராக்கிய பொதுமக்கள் ஆதரிக்கிறார்கள்
என்ற பிரமையை வீதிவீதியாய் விற்பனை செய்வதாகும்.
இந்த வாரம் அமெரிக்க இராணுவத்தினால் தயாரித்த லிங்கன் குழு மொழிபெயர்த்து
பரப்புவதற்காக தரப்பட்ட கதைகளில் ஒன்றிற்கு "ஒரு ஜனநாயக ஈராக்கை நோக்கி வீசிக் கொண்டிருக்கும் மணல்
காற்று" என்று தலைப்பிடப்பட்டிருக்கிறது. அது இப்படி ஆரம்பிக்கிறது: "மேற்கு நாடுகளின் பத்திரிகைகள் மற்றும்
அடிக்கடி தங்களை தாங்களே ''பாரபட்சமற்ற'' ஈராக்கிய பார்வையாளர்கள் என்றழைத்துக்கொள்பவர்கள்,
ஈராக்கிய மக்கள் தாம் தமது நாட்டிற்கு சிறந்தது எது என்று முடிவு செய்து நடைபோடும் பாதையை அடிக்கடி
கண்டிக்கிறார்கள்." அந்தக் கட்டுரை ஐக்கியத்திற்காகவும் அஹிம்சைக்காகவும் மன்றாடுகிறது மற்றும் முகம்மதின்
வாசகத்தை மேற்கோள் காட்டுகிறது.
போரினால் சீரழிந்த ஒரு நாட்டில் உள்கட்டமைப்புக்களில் பெரும்பகுதி சிதைந்துவிட்ட
நிலையில் மற்றும் 100,000-ற்கும் மேற்பட்ட சிவிலியன்கள் கொல்லப்பட்டிருப்பதாக வந்திருக்கும் மதிப்பீடுகளுக்கு
இடையில்--- மிகப்பெரும்பாலான மக்கள் ஆக்கிரமிப்பு செய்துள்ள படைகள் தங்கள் நாட்டிலிருந்து வெளியேற
வேண்டும் என்று விரும்புகின்ற சூழ்நிலையில் பொதுமக்களது கருத்தை தனக்கு சாதகமாக திருப்புகின்ற ஒரு
முயற்சியாக அமெரிக்கா, இரகசிய உளவியல் போருக்கு திரும்பியிருக்கிறது.
அமெரிக்கா திட்டமிட்டு புகுத்திய கதைகளை வெளியிடுகின்ற பல பத்திரிகைகள் இதர
செய்திகளோடு சேர்த்து வேறுபாடு இல்லாமல் வெளியிட்டன. அத்தகைய பத்திரிகைகளில் ஒன்று பாக்தாத்தை
தளமாகக்கொண்ட Al Mutamar
தினசரி பென்டகனோடு நெருங்கிய தொடர்பு உள்ள துணைப் பிரதமர் அஹமது சலாபியின் நண்பர்களால் நடத்தப்படுவது.
அந்தப் பத்திரிகையின் ஆசிரியரான லுவாய் பால்டாவி, இணையதளம் மூலம் அடிக்கடி கையெழுத்திடப்படாமல் கட்டுரைகள்
வருகின்றன என்று தெரிவித்தார்.
சுதந்திரமான செய்திப் பத்திரிகையான
Addustour-க்கு ஆகஸ்ட் 2-ல் "ஈராக்
வளர்ச்சிக்கு அதிக பணம் செல்கிறது" என்ற தலைப்பில் ஒரு கட்டுரை வெளியிடுவதற்காக ஏறத்தாழ 1500 டாலர்கள்
தரப்பட்டன. அந்த செய்தி ஆதாரம் எங்கிருந்து பெறப்பட்டது என்பது அவருக்கு ''தெரியாது'' என்று செய்திப்
பத்திரிகை ஆசிரியர் கூறினார்.
Al Mada நிர்வாக
ஆசிரியர் அப்துல் ஷாஹ்ரா ஷாகி தனது பத்திரிகையில் பணம் கொடுத்து பிரசுரிக்கப்பட்ட மூன்று கட்டுரைகள்
அமெரிக்க ராணுவத்திலிருந்து வந்தவை என்பதை அறிந்து ஆத்திரமடைந்தார். புலனாய்வு செய்வதிலும் பத்திரிகை
தொழில்சார்ந்த நிபுணத்துவத்திலும் பல ஈராக்கியரிடையே ஒரு பெருமதிப்புப்பெற்ற
Al-Mada
செய்தி பத்திரிகையில், இரகசிய நடவடிக்கைகள் எப்படிப்பட்ட பங்களிப்பு செய்திருக்கின்றன என்பதை ெலாஸ்
ஏஞ்சல்ஸ் டைம்ஸ்
விவரித்திருக்கிறது:
"ஜூலை 30 அன்று பாக்தாத் நடுவிலுள்ள அந்த செய்திப் பத்திரிகை
அலுவலகங்களுக்கு ஒரு சாதாரண அதிகாரி வந்ததாகவும் அவரிடம் அமெரிக்க டாலர் நோட்டுக்கள் பெரியளவில்
இருந்ததாகவும் Al Mada
ஊழியர்கள் கூறினர். அவர் ஆசிரியர்களிடம், "பயங்கரவாதிகள் சுன்னி
தொண்டர்களை தாக்குகிறார்கள்'' என்ற கட்டுரையை பிரசுரிக்க விரும்புவதாக அவர் குறிப்பிட்டார்.
"அவர் பணம் கொடுத்தார் தனது பணியாற்றும் விபரம் பற்றிய எந்த அடையாள
அட்டையையும் தரவில்லை என ஊழியர்கள் கூறினர். அவர் ஒரு ரசீதை பெற விரும்பவில்லை. அவர் கொடுத்த
பெயர்
டைம்ஸ் ஆல் பெற்ப்பட்ட பதிவேடுகளில் இடம்பெற்றுள்ள ஒரு லிங்கன் குரூப் தொழிலாளியின் அதே
மாதிரியான பெயராகவே உள்ளது."
அமெரிக்காவிற்குள் உளவியல் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு அல்லது அமெரிக்க
ஊடகங்களில் திட்டமிட்டு பிரசாரத்தை புகுத்துவதிலிருந்து அமெரிக்க சட்டம் இராணுவத்திற்கு தடைவிதிக்கிறது.
சர்வதேச மக்களுக்காக 24 மணி நேர கேபிள் செய்தி வலைப் பின்னல்களும், வலைத் தளமும் செயல்படுவது
உட்பட நவீன ஊடகங்களின் பூகோளத்தன்மையை கருத்தில் கொண்டு பார்க்கும்போது ஈராக்கில் செய்தி
திட்டவட்டமாக புகுத்துவது இந்த எல்லையை கடந்து செல்கிறது. பென்டகன் தகவல் தரும் நடவடிக்கைகளில்
சம்மந்தப்பட்ட ஒரு தனியார் ஒப்பந்தக்காரர் டைம்ஸ் இடம் கூறும்போது, "உள்நாட்டு
ஊடகங்களிலிருந்து வெளிநாட்டு ஊடகங்களை பிரித்துப் பார்ப்பதற்கு இனி எந்த வழியும் இல்லை. அந்த தூய்மையான
வழி இனியுமில்லை`` என்று கூறினார்.
அது எப்படியிருந்தாலும் அத்தகைய தடைகள் கடந்தகாலத்தில் புஷ் நிர்வாகத்தை தடுத்து
நிறுத்தவில்லை. சென்ற மார்ச் மாதம் நிர்வாகம் அமெரிக்க அரசாங்க அமைப்புக்களுக்கு வெளியிட்ட கட்டளை
அரசாங்க அமைப்புக்கள் "இரகசிய பிரச்சாரங்களை" விநியோகிப்பதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று பொதுக்
கணக்கு அலுவலகம் (GAO)
வெளியிட்ட கட்டளையை புறக்கணிக்க வேண்டும் என்று குறிப்பிட்டது ("அமெரிக்காவில் இரகசிய பிரசாரத்தை பயன்படுத்துவதை
புஷ் நிர்வாகம் பாதுகாத்து நிற்கிறது" என்ற கட்டுரையை காண்க).
வெளியுறவுத்துறை மற்றும் பென்டகன் உட்பட குறைந்தபட்சம் 20 அமெரிக்க
முகவாண்மைகள் தயாரித்த வீடியோ செய்தி வெளியீடுகள் (VNRs)
பெருகியதை ஒட்டி GAO
அந்தக் கட்டளையை பிறபித்தது. இப்படி
ஆயிரக்கணக்கான வீடியோ செய்தி வெளியீடுகள் உருவாக்குவதற்கு தனது முதல்
பதவி காலத்தில் 254 மில்லியன் டாலர்களை புஷ் நிர்வாகம் செலவிட்டிருக்கிறது இவற்றில் மோசடியாக
தயாரிக்கப்பட்ட அரசாங்க அதிகார பேட்டிகளின் ஆவணங்களும் பொதுமக்கள் தொடர்பு ஊழியர்களை நிருபர்கள்
போன்ற வேடத்தில் பயன்படுத்திக் கொண்டதும் அடங்கியிருக்கிறது.
இந்த "செய்திகளில்" பல பிரிவுகள் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை
தயாரிப்பவர்களால் அவை அரசாங்க அமைப்புக்கள் தயாரித்தவை என்ற குறிப்பு எதுவுமில்லாமல்
ஒளிபரப்பப்பட்டன. அமெரிக்க மக்களுக்கிடையில் ஈராக் போரை ஊக்குவிப்பதற்காக நோக்கமாகக்கொண்டு
பென்டகன் மற்றும் வெளியுறவுத்துறையினால் ஏராளமான
VNRs உருவாக்கப்பட்டதும் அவற்றில் அடங்கும்.
இந்த ஆண்டு தொடக்கத்தில் அம்பலப்படுத்தப்பட்ட மற்றொரு சம்பவத்தில்
பழைமைவாத கறுப்பு இன பத்திரிகையாளர் ஆம்ஸ்டிராங் வில்லியம்ஸ், அவரது நாடு தழுவிய தொலைக்காட்சி
மற்றும் வானொலி நிகழ்ச்சிகளில் "எந்தக் குழந்தையும் கைவிடப்படவில்லை" என்ற புஷ்ஷின் கல்வி பிரசாரத்திற்காக
அமெரிக்க அரசாங்கத்திலிருந்து 240,000 டாலர்களை நிதியாக பெற்றார். ("புஷ்சின் கல்வித் திட்டத்தை
முன்னெடுத்துச் செல்வதற்காக 240,000 டாலர்களை பெற்ற பத்திரிகையாளர்" என்ற கட்டுரையை காண்க).
ஆக்கிரமிக்கப்பட்ட நாட்டில் பத்திரிகையாளர்களுக்கான தார்மீக நெறியை வளர்த்துக்
கொண்டு வருவதாக வாஷிங்டன் கூறிக்கொண்டு வருவதற்கு இடையில் ஈராக்கில் பென்டகன் செய்திகளை திரிக்கும்
நடவடிக்கை பற்றிய செய்தி இப்போது அம்பலத்திற்கு வந்திருப்பது அனைத்துவித மிகவும் வெறுக்கத்தக்க
செயலாகும். ஈராக்கிய நிருபர்களுக்கு அடிப்படை பத்திரிகை தொழில் திறமையில் பயிற்சி பெற அரசுத்துறையினால்
நடத்தப்பட்ட ஒரு பயிலரங்கிற்கு "ஒரு ஜனநாயக சமுதாயத்தில் பத்திரிகைகளின் பங்களிப்பு" என்று
பெயரிடப்பட்டிருந்தது.
செவ்வாய் கிழமையன்று பென்டகனில் நடைபெற்ற செய்தியாளர்கள் பேட்டியில்,
பாதுகாப்புத் துறை அமைச்சர் டொனால்ட் ரம்ஸ்பெல்ட், ஈராக் சுதந்திர ஊடகங்களை பெற்றிருக்கிறது-----அது
ஒரு உதவிகர வால்வாக செயல்பட முடியும் என்று கூறி, "ஊடகங்கள் ஜனநாயகத்தை நோக்கி பெருமளவில் முன்னேறிக்கொண்டிருப்பதாக
கூறினார். அவை நூற்றுக்கு மேற்பட்ட பத்திரிகைகளை கொண்டிருக்கக்கூடும். அங்கு 72 வானொலி நிலையங்களும்
உள்ளன, 44 தொலைக்காட்சி நிலையங்களும் உள்ளன. மற்றும் அவர்கள் விவாதிக்கிறார்கள், வாதிடுகிறார்கள்
பேசுகிறார்கள், இதுபோன்ற பல நிகழ்ச்சிகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன" என்று குறிப்பிட்டார்.
இந்த செய்தி ஊடகங்களில் அமெரிக்க-சார்பு பிரச்சாரத்திற்காக அமெரிக்கா பல
மில்லியன் டாலர்களை செலவிட்டு வருகிறது, மற்றும் பலவற்றில் விவாதத்திற்கிடமற்ற வகையில் அவை எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளன!
என்ற உண்மையை பாதுகாப்பு அமைச்சர் குறிப்பிடவில்லை.
புஷ் நிர்வாகம் இரகசிய பிரச்சார நடவடிக்கைகளை ஏற்றுக்கொள்கிறதா என்ற வினாவிற்கு
வியாழனன்று பதிலளித்த வெள்ளை மாளிகை பேச்சாளர் ஸ்கொட் மெக்கல்லன் வெளியிட்ட கருத்தில், "இந்த செய்திகள்
குறித்து நாங்கள் பெரிதும் கவலையடைந்துள்ளோம். பாதுகாப்பு துறையிலிருந்து மேலும் விபரங்களை
கேட்டிருக்கிறோம்" என்று குறிப்பிட்டார்.
உண்மையிலேயே லிங்கன் குரூப்பின் வர்த்தக நடவடிக்கைகள் குறித்து அரசாங்க அதிகாரிகள்
தெளிவாகவே அறிந்திருக்கிறார்கள். இந்த ஆண்டு தொடக்கத்தில் புளோரிடாவிலுள்ள தம்பாவை தளமாகக்கொண்ட
அமெரிக்க சிறப்பு நடவடிக்கைகளுக்கான அலுவலகத்திலிருந்து அந்த நிறுவனம் ஒரு பெரிய ஒப்பந்தத்தை பெற்றிருக்கிறது,
அது ஐந்து வருடத்திற்கு மேலான 100 மில்லியன் டாலர் மதிப்புவாய்ந்ததை பெற்றுள்ளது. உலகம் முழுவதிலும் நிறுத்தப்பட்டுள்ள
அமெரிக்க சிறப்பு நடவடிக்கை துருப்புகளுடன் மூலோபாய தகவல் தொடர்பு பிரச்சார மூலோபாயத்தை வளர்ப்பதற்காக
அந்த நிறுவனத்திற்கு தரகுக்கூலி வழங்கப்பட்டிருக்கிறது.
Top of page
|