:
இலங்கை
More rural suicides in Sri Lanka
இலங்கையில் அதிக கிராமப்புற தற்கொலைகள்
By G.G. Senaratna
21 November 2005
Use this version
to print |
Send this link by email |
Email the author
ஜனாதிபதி தேர்தல்களுக்கு சற்று முன்னதாக, இலங்கையின் வடக்கு-மத்திய
மாகாணத்தில் சோகம் ததும்பிய வகையில் நான்கு விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டது, பெருகிவரும் கடன்கள்,
உயரும் விலைவாசிகள், பாதுகாப்பற்ற வருமானங்கள் என்ற நிலையைக் கொண்ட பல சிறிய விவசாயிகளின் பரிதாபகர
நிலையை உயர்த்திக் காட்டியது. பல்வேறு வாக்குறுதிகளுடன் கிராமப்புற வாக்காளரின் ஆதரவை பெறுவதற்கு இரு
பெரும் கட்சிகளின் வேட்பாளர்களினால் பல முயற்சிகள் இருப்பினும், அவர்களுக்கு எதிரான கிராமப்புற ஏழைகளின்
விரோதப்போக்கு வளர்ந்துகொண்டுதான் வருகிறது.
இந்த நான்கில், மூன்று தற்கொலைகள் செப்டம்பர்
மாதம் நடைபெற்றது. கடைசி நிகழ்வு நவம்பர்
தொடக்கத்தில் நடந்தது. ஒருவரை தவிர மற்றவர்கள் வடக்கில் உள்ள போர்ப்பகுதிகளின் விளிம்பில், இரண்டு தசாப்தங்களாக
உள்நாட்டுப் போரால் பெரும் சேதத்திற்குட்பட்டுள்ள, மிகத் தொலைவில் உள்ள கிராமங்களில் வாழ்கின்றனர். பல
விவசாயிகளும் ஏழை சிங்கள குடியேறியவர்களாவர்; இவர்கள் தமிழீழ விடுதலை புலிகளுக்கு எதிராக இராணுவம்
போரிட்ட காலத்தில் இராணுவத்தால் இடைத்தடையாக பயன்படுத்தப்பட்டவர்கள் ஆவர். நாட்டின் மிகவும் வறிய
பகுதியில் அவர்கள் வாழ்கின்றனர்.
* அரளகன்விலாவை
சேர்ந்த
44 வயதான
M.P. ஜெயசிங்கா
என்பவர் செப்டம்பர் 24 அன்று தன் உயிரை மாய்த்துக் கொண்டார். இவர் 90,000 ரூபாய்கள் (US
$900) கடன் சுமையை கொண்டிருந்ததோடு, அவருடைய ஒரு
ஹெக்டேர் நெல்வயலை மீட்கமுடியாமல் இருந்தார். இவர் பணம் கடன் கொடுக்கும் தனியார் ஒருவரிடம் கடந்த
இரண்டு விதைவிதைக்கும் காலத்தில் இந்த நிலத்தை அடகு வைத்திருந்தார். தன்னுடைய மிகக் கடுமையான நிதிநிலை
பற்றி அவர் பெரும் மன வேதனையில் இருந்ததாக அவருடைய மனைவி நளினி மல்காந்தி
WSWS
நிருபர்களிடம் கூறினார். தன்னுடைய நிலத்திலேயே ஒரு குத்தகைக்காரராக வேலை செய்பவராக ஜெயசிங்கா
இருந்ததாக அவருடைய மனைவி கோபத்துடன் விளக்கினார். நிலத்தை உழுதாலும்கூட, அதன் விளைச்சலில் பெரும்
பங்கு கடன்கொடுத்தவரைத்தான் சென்று அடைந்தது. 80 வயதான தன்னுடைய பெற்றோர்களிடம் இவர் இப்பொழுது
வசிக்கிறார்.
* வெலிகந்தையிலுள்ள போவத்தா
கிராமத்தை சேர்ந்த 38 வயதான, இரண்டு குழந்தைகளுக்கு தகப்பனாரான டி.எச். சுனில் இராஜபக்ஷ
செப்டம்பர் 27 அன்று தற்கொலை புரிந்து கொண்டார். தன்னுடைய கணவர் பெரும் கடன் சுமையைக்
கொண்டிருந்ததாக, அவருடைய மனைவி காந்தி திலக அபேசிங்கா உலக சோசலிச வலைத் தளத்திடம்
தெரிவித்தார். இந்த ஆண்டு மே மாதத்தில் தொடங்கி ஜூலை-ஆகஸ்ட்டில் அறுவடை நடந்த யாலா பருவத்தில்,
ஓர் அரசு வங்கியில் இருந்து இராஜபக்ஷாவிற்கு 30,000 ருபாய்தான் கடன் வாங்க முடிந்தது மற்றும் மற்றொரு
15,000 ரூபாய் கடனுக்காக அவர் பணம் கடன் கொடுக்கும் தனியார் பக்கம் திரும்ப நேர்ந்தது.
வெள்ளத்தினால் பெரும் நாசமுற்ற இவருடைய பயிரினால் 65,000 ரூபாய்தான் கிடைத்தது. எந்த அரசாங்க
உதவியும் கிடைக்கவில்லை. வங்கி, வட்டிக்கு பணம் கொடுப்பவர் மற்றும் உள்ளூர் கடைகளுக்கு 47,000
ரூபாய்களை அவர் திருப்பித் தரவேண்டிய நிலை இருந்தது.
அவருடைய மனைவி விளக்கினார்: "இந்தக் கடன்களை நாங்கள் எப்படி அடைப்பது
என்று என்னை அவர் பெரும் வருத்தத்துடன் கேட்பார். வட்டிக்கு பணம் கொடுத்தவர்கள் வீட்டிற்கு வந்து பணத்தை
திருப்பி கொடுக்குமாறு கேட்டபோது பலநாட்கள் அவர் கவலையுற்றார். அவர் வெட்கமுற்று இருந்தார். வீட்டு
உபயோகத்திற்காக அவர் சேமித்து வைத்திருந்த கடைசி நெல்மூட்டையை விற்றதன் மூலம் சிறிது விஷத்தை வாங்கி
வந்து, அதைக் குடித்துத் தன்னுடைய உயிரை மாய்த்துக் கொண்டார். குறைந்த பட்சம் உறுதியளிக்கப்பட்ட விலைக்கு
அரசாங்கம் நெல்லை வாங்கியிருந்தால்கூட என்னுடைய கணவர் தற்கொலை செய்து கொண்டிருக்க மாட்டார்.
இப்பொழுது எங்கள் நிலைமை இன்னும் மோசமாகிவிட்டது. எங்களுடைய அண்டையில் வசிப்பவர்கள் ஏதோ
உதவுவதால் நாங்கள் எப்படியோ வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
"குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பும் சுமை அதிகம். என்னுடைய பையனை பள்ளிக்கு
அனுப்புவதற்கு, கிட்டத்தட்ட 2,000 ரூபாய்கள் செலவுசெய்ய நேர்ந்தது. இன்னும் பல செலவினங்கள் இருக்கின்றன.
பள்ளிகளிலும் தேவையான குறைந்த வளங்கள்கூட இருப்பதில்லை. எனவே சில மாணவர்கள் பள்ளிக்கு ஒழுங்காக
செல்லுவதில்லை. வெலிகந்தைவின் அசேலபுர பள்ளியில் 800 மாணவர்கள் இருந்தபோதிலும்கூட, 20 ஆசிரியர்கள்தான்
இருக்கின்றனர்.
"இரவு நேரங்களில் காட்டு யானைகள் இப்பகுதியில் சுற்றுகின்றன.
LTTE யினரும்
கிராமத்திற்கு வருகின்றனர். 1995ம் ஆண்டு அவர்கள் இங்கு இருந்தவர்கள் பலரை கொன்றனர். அத்தகைய
பிரச்சினைகள் எழுந்தால் கிராமக் கோவிலுக்குள் கூடி நிற்குமாறு இராணுவம் ஆலோசனை கூறியுள்ளது. பயத்திலேயே
எங்கள் வாழ்க்கையை கழிக்கிறோம். எங்களை யாரும் கண்டுகொள்வதில்லை. ஆயினும், [இந்த அரசியல்வாதிகள்]
தேர்தல் நெருங்குவதன் காரணமாக எங்களை காண வருகின்றனர்" என்று வெறுப்புணர்வுடன் அவர் கூறினார்.
* வெலிகந்தைவில் நகஸ்தென்ன
கிராமத்தில் வசித்த, 24 வயது JM
சமன் குமார செப்டம்பர் 29 அன்று தன்னையே மாய்த்துக் கொண்டார்.
10 வது வகுப்பிற்கு பிறகு பள்ளிப்படிப்பை நிறுத்திய அவர் குடும்பத்திற்கு ஆதரவாக நிலத்தில் வேலைசெய்து
வந்தார். மற்றொருவருடைய நிலத்தில் பயிர்ச்செய்கை செய்துவந்த அவர், அறுவடைக்கு பிறகு 1,100 கிலோ
நிலச் சொந்தக்காரருக்கு தருவதாக உறுதி மொழி கொடுத்திருந்தார். அவருடைய கடன்கள் 55,000 ரூபாய்க்கு
குவிந்துவிட்டன. ஆனால் அறுவடையினால் அவருக்கு கிடைத்ததோ 19,980 ரூபாய்கள்தான். ஒரு தனியார்
வியாபாரியிடம் தன்னுடைய அரிசியையும் கிலோ 11 ரூபாய் வீதம் விற்க கட்டாயத்திற்கு உள்ளானார். எனவே,
நிலச் சொந்தக்காரரிடம் பணமும் கொடுக்க முடியவில்லை அல்லது அவரது கடன்களையும் அடைக்க முடியவில்லை.
தன்னுடைய ஒரு ஹெக்டேர் நிலத்தில், ஒரு கிராமிய வங்கியில் இருந்து 15,000
ரூபாய்கள் கடன் வாங்கி குமார விவசாயம் செய்து வந்ததாக அவருடைய தந்தையார் விளக்கினார். ஆனால்,
அரசாங்க பாசன வசதித் திட்டத்தில் இருந்து அவருக்கு உரியகாலத்தில் தண்ணீர் கிடைக்கவில்லை. இதனால், நெல்
வயல் காய்ந்து போய் அவருக்கு நல்ல அறுவடை கிடைக்கவில்லை.
''இந்த இடத்திற்கு நாங்கள் 1993ல் அழைத்துவரப்பட்டபோது, இது ஒரு காடாக
இருந்தது. எங்களுக்கு ஒரு ஹெக்டேர் நிலம் கொடுக்கப்பட்டது. இங்கிருந்த தமிழர்களை விரட்டிவிட்டு கிராமங்களில்
சிங்களவர்கள் குடியேற்றப்பட்டனர். முன்பு எங்களுக்கு இராணுவ பாதுகாப்பு கிடைத்து வந்தபோதிலும் பின்னர் அது
விலக்கிக் கொள்ளப்பட்டது. சோதனை சாவடிகளில் பகல் நேரத்தில் போலீசாரும், இரவில்
LTTE யினரும்
இருப்பர். ஒரு அவசரத்திற்குக்கூட இரவில் நாங்கள் வெளியே செல்லமுடியாது. பிரேமதாசா அரசாங்கம் எங்களை
இங்கு கொண்டுவந்தது. அது எங்களுக்கு பேரழிவாகும்."
கடைசி மரணம் நவம்பர் மாதம் மெடிரிகிரியாவில் இருக்கும் கலிங்கபுரவில் உள்ள
லங்காபுராவில் நடந்தது. இதற்கான சூழ்நிலை பற்றி அதிகம் தெரியவில்லை என்றாலும், நிச்சயமாய் அதே
போன்ற ஒன்றுதான் அங்கும் நடந்துள்ளது. 74 வயதான போதிதாச 24,000 ரூபாய் கடனை அடைக்க
முடியாமல் பூச்சி நாசினி மருந்தைக் குடித்துத் தற்கொலை செய்துகொண்டார்.
கடுமையான வறுமை
இலங்கையின் வறிய விவசாயிகளின் மீது தொடர்ந்து திணிக்கப்படும் தற்கொலைகளுள்
சமீபத்தியவைதான் இவை. இதற்கு முந்தைய வரிசையான இறப்புக்கள் இந்த வருட மார்ச், ஏப்ரல் மாதங்களில்
நிகழ்ந்தன. இது மகா பருவத்திற்கான (Maha
season) அறுவடைக்கு பின்பு உடனடியாக நடைபெற்றதாகும்.
ஐயத்திற்கு இடமின்றி காரணங்கள் மேற்கூறியவை போலத்தான் இருந்தன. எந்த தீர்வும் இல்லாத நிதி
நெருக்கடியினால் மக்கள் விரக்தியின் உச்சநிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
மிகச் சிறந்த அறுவடை காலத்திலும்கூட இப்பகுதியில் உள்ள விவசாயிகள் கடுமையான
வறுமையைத்தான் எதிர்கொள்ளுகின்றனர். அவர்களுடைய வீடுகள் மூங்கில்கள், இலைகள் ஆகியவற்றால்
அமைக்கப்பட்டிருக்கின்றன. யுத்தம் நடக்கும் பகுதியில் இது இருப்பதால் பல நெல் வயல்கள்
பயன்படுத்தப்படுவதில்லை. அடிக்கடி நிலக்கண்ணிகள் இருப்பதாக எச்சரிக்கைகளும் வருகின்றன. சரளைக்கல்
சாலைகள் முழுவதும் பள்ளங்கள் விழுந்து கிடக்கின்றன.
வெலிகந்தை, பொலநறுவவிற்கு 30 கி.மீ. கிழக்கில் இருக்கும் ஒரு சிற்றூராகும்.
இது 1990 களில், சிங்களவர்கள் குடியேற்றப்பட்டபின் கட்டமைக்கப்பட்ட புதிய இடமாகும். வெலிகந்தைக்கு
கிழக்கே இருக்கும் அரலகன்வில அருகில், பெரிய அசேலாபுர இராணுவ முகாம் உள்ளது. வெலிகந்தையில் இராணுவம்
இருப்பது அனைத்து இடமும் ஊடுருவி பரவும் வகையிலாகும். எங்கு பார்த்தாலும் இராணுவ, போலீஸ் படையினர்,
மற்றும் சீருடையுடன் அல்லது சாதாரண உடையுடன் துணைப் பாதுகாப்பு படைகளை காணலாம். ஒவ்வொரு
சந்திப்பிலும் போலீஸ் அல்லது இராணுவத்தினர் கட்டுப்பாட்டுக்குள் இயங்கும் சோதனைச் சாவடிகள் உண்டு.
அவ்வழியே செல்லும் வண்டிகளும், மக்களும் சோதனக்குள்ளாவர்.
நாகஸ்தென்ன என்னும் கிராமம் வெலிகந்தையில் இருந்து 1.5 கிலோமீட்டர் தூரத்தில்
உள்ளது. இங்கு பொதுப் போக்குவரத்து வசதி ஏதும் கிடையாது. மக்கள் நடக்கவேண்டும். அல்லது "land
masters" எனப்படும் விளைபொருட்களை எடுத்துச் செல்லும்
சிறிய டிராக்டர் வண்டியை அவர்கள் பயன்படுத்த வேண்டும். இந்த கிராமத்தை அடைவதற்கு இராணுவ முகாமிற்குச்
செல்லும் சாலையில் இருந்து ஒரு சிறிய, மோசமான பாதை வழியே போக வேண்டும்.
2004ம் ஆண்டில் மட்டும் தற்கொலைக்கு முயற்சி செய்த 94 பேர் மருத்துவமனைக்கு
சிகிச்சைக்காக அழைத்துவரப்பட்டதாக வெலிகந்தையில் உள்ள டாக்டர் உலக சோசலிச வலைத் தளத்திடம்
விளக்கினார். இவர்களில் 48 பேர் ஆண்கள், 46 பேர் பெண்களாவர். பெரும்பாலானவர்கள், பெண்களில் 14
வயது முதல் 20 வரை, ஆண்களில் 16ல் இருந்து 24 வரை என்று இளவயதினராக இருந்தனர்.
"பெரும்பாலான இளைஞர்கள் பள்ளித் தேர்வுகளில் தோல்வியடைந்த பின்னர் அல்லது
வருங்காலத்தை பற்றிப் பெரும் கவலையடைந்த வகையில் தற்கொலை முயற்சியில் ஈடுபடுகின்றனர். பலரும் 7
அல்லது 8 வது வகுப்பிற்கு பின் பள்ளிக்குச் செல்வதில்லை. நல்ல கல்வி வசதிகளோ, கல்வியை தொடர்வதற்கான
வழிவகையோ இல்லாத நிலையில், கல்விமூலம் முன்னுக்கு வரமுடியும் என்ற நம்பிக்கை அவர்களுக்குக் கிடையாது.
பள்ளியை விட்டு நீங்கும் சிறுவர்கள் குடும்ப வயலில் வேலை பார்ப்பார்கள். பெண்கள் வாழ்வதற்கு வேண்டி திருமணம்
செய்து கொள்ளுவர்.
"சிறு வயதில் இருந்து, பொருளாதார கஷ்டங்களை எதிர்கொள்ளுவதினால் ஆண்களும்
பெணகளும் பலவிதமான உடல்ரீதியான பாதகங்களை அடைந்துள்ளனர். அவர்களுக்கு அதையொட்டி மன,
உடல்ரீதியான பிரச்சினைகள் உள்ளன. மற்ற இடங்களுடன் ஒப்பிடும்போது, இங்கு நிலைமை மோசமாக உள்ளது.
30-32 வயதிலேயே மக்கள் மெலிந்து போய்விடுகின்றனர். இது ஒரு பெருந்துயரமாகும். அவர்கள் உருகுலைந்து,
35-40 வயதிற்குள்ளேயே அவர்கள் முதுமைத் தோற்றத்தை அடைந்து விடுகின்றனர்'' என்று அவர் குறிப்பிட்டார்.
சிறுநீரக பிரச்சினை உட்பட பல வியாதிகளிலிருந்து மக்கள் அவதிக்குள்ளாகின்றனர்.
ஓடையில் இருந்து வரும் பாதுகாப்பற்ற நீரைக் குடிப்பதைத் தவிர வேறு வழியில்லாததால் இந்த நிலைமை
ஏற்பட்டுள்ளது. பெரும்பாலான கிராமவாசிகளுக்கு மழைநீரை சேகரிக்கும் நீர்நிலைகள் இல்லை. ஓடைத் தண்ணீர்
பலநேரமும் வயல்களில் இருந்து வரும் தண்ணீரினால் மாசுபடுத்தப்படுகிறது. அவை விவசாய இரசாயனத்தால்
மாசுபட்டவையாகும். பொலநறுவ மாவட்டத்தில் 3.5 சதவிகித மக்களுக்குத்தான் குழாய் மூலம் தண்ணீர் வசதி
உண்டு.
சில பெற்றோர்கள் துறவிகளாக பயிற்சி பெற வேண்டி தங்களுடைய குழந்தைகளை
கோயில்களுக்கு காணிக்கையாக கொடுத்து விடுகின்றனர். ஏனெனில், குடும்பத்தால் அவர்களுக்கு உணவூட்ட
வழியில்லாததன் காரணமாக ஆகும் என்று கிராம வாசிகள் உலக சோசலிச வலைத் தளத்திடம் விளக்கினார்கள்.
நிதி நெருக்கடி
இப்பகுதியில் பல விவசாயிகள் எதிர்கொள்ளும் வறுமையின் இரக்கமற்ற தர்க்கம்
உள்ளது. அவர்களுடைய செலவினங்கள் பெருகி வருகின்றன. இதற்கு காரணம் தொடர்ச்சியான அரசாங்கங்கள்
சர்வதேச நாணய நிதியம் (IMF)
இயக்கும் சந்தை சீர்திருத்தத்தையொட்டி உதவி தொகைகளை நிறுத்தியுள்ளது என்பது ஒரு பகுதியாகும். அதே
நேரத்தில் தமது உற்பத்தி பொருட்களின் விற்பனை விலையும் குறைந்து கொண்டு வருகிறது. இதற்கு காரணம் முன்பு
அரசாங்கத்தின் ஆதரவு பெற்ற சந்தைத் திட்டங்கள் அகற்றப்பட்டுவிட்டன. பல விவசாயிகளுக்கும் தடையற்ற சந்தை
என்பது அழிவைத்தான் கொடுத்துள்ளது.
இப்பொழுதுள்ள அரசாங்கம் உறுதியளித்துள்ளபடி அரிசி கிலோ 15.50 ரூபாய் என்று
உள்ளது. இதுகூட செலவினங்களை சமாளிக்க போதுமானதாக இருக்காது. "இது தேர்தல் நேரமாகையால்,
கூட்டுறவு சங்கங்கள் அரிசியை வாங்கி கொள்ளுகின்றன. அது ஒரு பாவனைதான்" என்று விவசாயிகள் உலக சோசலிச
வலைத் தளத்திடம் கூறினர். அனைத்து விளைச்சலையும் வாங்குவதற்கு அரசாங்கம் போதுமான பணத்தை ஒதுக்குவதில்லை.
பொலநறுவ மாவட்டத்தில் மட்டும் விளைவதாக மதிப்பிடப்பட்டுள்ள 30 மில்லியன்
கிலோகிராம் பயிரை வாங்குவதற்கு உறுதியளிக்கப்பட்டுள்ள விலையில், தேவைப்படும் ஒதுக்கீடு 465 மில்லியன்
ரூபாய்கள் என்றாகிவிடும். அரசாங்கம் நாடு முழுவதற்கும் 1,000 மில்லியன் ரூபாய்கள்தான் ஒதுக்கீடு
செய்துள்ளது. செப்டம்பர் தற்கொலைகளுக்கு முன்னர், தம்புலகல கூட்டுறவுச் சங்கம் அதன் கிளைகளுக்கு
உறுதியளிக்கப்பட்ட விலைக்கு நெல்லை வாங்கவேண்டாம் என்று கடிதம் எழுதியது. இதற்குக் காரணம் போதிய பணம்
இல்லாதது என்று கூறப்பட்டது. ஆதலால், விவசாயிகளின் வீடுகளில் நெல் குவிந்தன.
சமன் குமாரவின் கிராமத்தில் உள்ள 37 வயதான
E.B. பியதாச
பினவருமாறு விளக்கினார்: "நாங்கள் ஒரு ஹெக்டேர் நிலத்தில் விவசாயம் செய்ய கிட்டத்தட்ட 50,000 ரூபாய்கள்
செலவழிக்கிறோம். ஒரு கிலோ 11 ரூபாய்க்கு விற்றால், நாங்கள் செலவழித்த பணத்தைக் கூட திருப்பியெடுக்க
முடியாது. கடந்த பருவ காலத்தில் ஒரு ஹெக்டேர் பயரிடுவதற்கு நாங்கள் 6,500 ரூபாய் டீசலுக்கு மட்டும் செலவழித்தோம்.
டீசல் விலை அதிகரித்து விட்டதால் எங்கள் செலவும் 2,000 ரூபாய் மேலும் அதிகமாகிவிட்டது."
சில விவசாயிகள் கூடுதலான கடனை பெற்றுவிட்டதால் தனி வியாபாரிகள், வட்டிக்கு
பணம் கொடுப்பவர்களை நாடவேண்டியுள்ளது என்று விளக்கினர். வியாபாரிகள் உரங்களையும் மற்ற இரசாயன
பொருட்களையும் முதலிலேயே தருகின்றனர். ஆனால், சற்று உயர்ந்த விலைக்குதான் இது கொடுக்கப்படுகிறது.
அரசாங்கம் 50 கிலோ உரத்திற்கு 550 ரூபாய் உதவித் தொகை கொடுத்தாலும் விவசாயிகள் 650 அல்லது
700 ரூபாய்க்குத்தான் வாங்க முடியும். வட்டிக்கு பணம் கொடுக்கும் தனியார் அளவு கடந்த வட்டி விகிதமாகிய
30ல் இருந்து 50 சதவிகிதத்தை 5-6 மாத மகசூல் பருவத்திற்குப் பெறுகின்றனர். பணம் கொடுக்கப்பட்டதற்கு
சமமான வகையில் விளைச்சலைப் பெறுகின்றனர். அதைத் தவிர அறுவடைக்கு பின்னர் வட்டியையும் பெறுகின்றனர்.
கிராம நெருக்கடி சிறு விவசாயிகளை மட்டும் பாதிக்கவில்லை. பெரிய அரிசி ஆலைகளுடன்
போட்டிபோட முடியாத ஆயிரக்கணக்கான சிறு அரிசி ஆலைகளும் மூடப்பட்டுள்ளன. தீவில் 7,000 ஆலைகளில்
2000க்கு மேல் மூடப்பட்டுள்ளன. மற்றவற்றின் நிலைமையும் வேகமாக சரிந்து வருகிறது. இதன் விளைவாக ஆயிரக்கணக்கான
வேலைகள் கிராமப் புறங்களில் அழிக்கப்பட்டுவிட்டன. கடந்த ஆண்டு சிறு ஆலைகளின் முதலாளிகள் தற்கொலை செய்த
நிகழ்வுகளும் ஏற்பட்டுள்ளன.
இப்பொழுது தேர்தல் முடிந்து, மகிந்த இராஜபக்ஷ ஜனாதிபதியாக பதவிப் பிரமாணம்
செய்து கொண்டுவிட்டதால், அவர் கொடுத்த உறுதிமொழிகள் விரைவில் கைவிடப்படும். முந்தைய அரசாங்கங்கள்
போலவே, அடுத்ததும் உலக வங்கி, சர்வதேச நாணய நிதியங்களுடைய ஆணைகளை சுமத்தவேண்டிய கட்டாயத்திற்குட்படும்.
அவை தீவு முழுவதும் இருக்கும் சிறிய விவசாயிகளின் ஆபத்தான நிலைமையை இன்னும் கீழறுக்கும். இது பெருந்துயரத்திற்கு
இட்டுச்செல்லும் என்பது சந்தேகத்திற்கு இடமில்லை.
Top of page |