World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :  மத்திய கிழக்கு : ஈராக்

Report outlines plans for corporate plunder of Iraqi oil

ஈராக்கிய எண்ணெய் மீதான பெருநிறுவன கொள்ளையடிப்புக்கான திட்டங்களை அறிக்கை கோடிட்டு காட்டுகிறது

By James Cogan
8 December 2005

Use this version to print | Send this link by email | Email the author

லண்டனை தளமாக கொண்ட சுற்றுச்சூழல், சமூக நீதி வலைப்பின்னல் அமைப்பு திட்டத்தால் நவம்பர் மாதம் வெளியிடப்பட்ட அறிக்கை ஒன்று ஈராக்கிய படையெடுப்பு மற்றும் ஆக்கிரமிப்பு எண்ணைய்க்கான போராகத்தான் இருந்தது, இருக்கிறது என்பதை தெளிவு படுத்தியுள்ளது. "நயமற்ற வடிவமைப்புக்கள்: ஈராக்கிய எண்ணெய் வளத்தை பற்றிக் கொள்ளுதல்" ("Crude Designs: the rip-off of Iraq's oil wealth") என்ற தலைப்பில் வந்துள்ள ஆவணம் பல நூற்றுக்கணக்கான பில்லியன் மதிப்புள்ள ஈராக்கின் பரந்த ஆற்றல் வளங்கள் எவ்வாறு அடுத்த சில ஆண்டுகளில் நாடுகடந்த நிறுவனங்களின் கட்டுப்பாட்டிற்கு மாற்றப்படும் என்பதை சுருக்கமாக எடுத்துரைக்கிறது.

"நயமற்ற வடிவமைப்புக்கள்" லிபியா, ஓமன், ரஷ்யா இவற்றில் உள்ள ஒப்பிடத்தக்க எண்ணெய் வயல்கள் ஈராக்கில் உள்ள 12 வளர்ச்சியுறாத எண்ணெய் வயல்களும் அதே போன்ற ஒப்பந்தத்திற்கு உட்படுத்தப்பட்டால், சர்வதேச நிறுவனங்கள் 2006ல் இருந்து அடுத்த 30 ஆண்டு காலத்தில் 74 பில்லின் டாலர்களிலிருந்து 196 பில்லியன் டாலர்கள் வரை இலாபங்களை பெறும் என்று கண்டுபிடித்துள்ளது. அறிக்கை இந்த மதிப்பீட்டை கூட "மிகக் குறைந்த அளவில் இது நிகழும்" என்று கூறியுள்ளது; மேலும் ஒரு பீப்பாய்க்கு 40 டாலர்கள் என்ற கணக்கிலும் மதிப்பிடப்பட்டுள்ளது. தற்போதைய பீப்பாய் விலை கிட்டத்தட்ட $60 ஆகும்.

ஈராக்கிய படையெடுப்பினால், உண்மையில் எண்ணெய் பெருநிறுவனங்களுக்கு கொட்டக் கூடிய பணமழை டிரில்லியன் கணக்கில் இருக்கக்கூடும். இப்பொழுது அறியப்பட்டுள்ள 80 வயல்களில், 17தான் உற்பத்தியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இன்னும் 63 வளர்க்கப்படவேண்டிய வயல்கள், 75 பில்லியன் பீப்பாய்கள் எண்ணெயை கொண்டிருக்கக்கூடும் என்று மதிப்பிடப்பட்டுள்து; தொழிலில் வல்லுனர்கள் இன்னும் கண்டுபிடிக்கப்படாத வயல்களில் 100 முதல் 200 பில்லியன் பீப்பாய்கள் உற்பத்தி செய்யப்படலாம் என்று நம்புகின்றனர். இதைத்தவிர நாட்டில் மகத்தான அளவிற்கு இயற்கை எரிவாயு இருப்புக்கள் இன்னும் எடுக்கப்படாமல் உள்ளன.

போருக்கான முதன்மையான உந்துதல் இத்தகைய வளங்களின் மீது கட்டுப்பாட்டை நிறுவுதலாகத்தான் இருந்தது என்று அமைப்புத்திட்ட (Platform) அறிக்கை கூறுகிறது. பாரசீக வளைகுடாப்பகுதியில் உள்ள எண்ணெய், எரிவாயு இருப்புக்களை மேலாதிக்கத்திற்குள் கொண்டுவர வேண்டிய மூலோபாய முக்கியத்துவம் பற்றிய விவாதங்கள் அமெரிக்க, பிரிட்டிஷ் ஆளும் வட்டங்களில் இருந்தது பற்றி முதல் அத்தியாயம் கவனத்தை ஈர்க்கிறது. புஷ் நிர்வாகத்தின் ஆற்றல் பணிப்பிரிவு (Energy Task Froce) மே 2001ல் கொடுத்த அறிக்கையை இது மேற்கோளிட்டு காட்டுகிறது; அந்தப் பிரிவிற்கு துணை ஜனாதிபதி டிக் செனி தலைவராக இருந்தார். அதன் முடிவுகள், "அமெரிக்க சர்வதேச ஆற்றல் கொள்கையில் பிரதான குவிப்பாக வளைகுடா இருக்கும்" என அறிவித்தது.

நியூ யோர்க் மற்றும் வாஷிங்டனில் நான்கு மாதங்களுக்கு பின்னர் நிகழ்ந்த பயங்கரவாத தாக்குதல்கள் அப்பகுதியை இராணுவ நடவடிக்கை மூலம் வெற்றிகாண வேண்டும் என்று நீண்ட காலமாக இருந்த திட்டங்களை செயலாக்க பயன்படுத்தப்பட்டன.

2003 மார்ச் 20ல் நடந்த படையெடுப்பிற்கு மூன்று மாதங்களுக்கு முன்பு, வாஷிங்டனின் முக்கிய அக்கறை ஈராக்கிய எண்ணெயை கொள்ளையடித்தல் என்றுதான் இருந்தது. ஏப்ரல் 2002ன் போதே "ஈராக்கின் வருங்காலம்" என்ற திட்டத்தை அமெரிக்க அரசுத்துறை நிறுவியிருந்தது. இத்திட்டத்தின் எண்ணெய் மற்றும் ஆற்றல் குழு டிசம்பர் 2002 முதல் ஏப்ரல் 2003 க்குள்ளாக நடைபெற்ற நான்கு கூட்டங்களில் ஈராக்கிய எண்ணெய் தொழிற்துறை "போர் முடிந்த பின்னர் எவ்வளவு முடியுமோ அவ்வளவு விரைவில் சர்வதேச எண்ணெய் நிறுவனங்களுக்கு திறந்துவிடப்பட வேண்டும்" என்று முடிவெடுத்திருந்தது.

இப்பிரிவில் பங்கு பெற்றவர்களில் ஒருவர், ஒரு ஈராக்கிய புலம்பெயர்ந்தோரும், பெட்ரோலியம் பொறியியற் துறையில் டாக்டர் பட்டத்தை நியூ மெக்சிகோ பல்கலைக்கழகத்தில் இருந்து பெற்றவருமான இப்ராகிம் அல்-உலெளம் ஆவார். அமெரிக்க கட்டுப்பாட்டிற்குள் இருந்த கூட்டணி இடைக்கால அதிகாரத்தில் (CPA) அல்-உலெளம் எண்ணெய்த்துறை மந்திரியாக நியமிக்கப்பட்டிருந்தார். அமெரிக்க ஆதரவுடன் இதே பதவியில்தான் இப்பொழுதுள்ள பிரதம மந்திரி இப்ராஹிம் அல்-ஜபாரியின் "இடைமருவு" அரசாங்கத்திலும் உள்ளார். வாஷிங்டனின் ஆதரவிற்கான காரணத்தை விளக்குவதற்கு சிரமப்படவேண்டிய தேவை இல்லை. பிரிட்டனை தளமாக கொண்ட Financial Times ஏட்டிற்கு செப்டம்பர் 2003 இலேயே கொடுத்த பேட்டியில், உலெளம், ஈராக்கிய எண்ணெய் வயல்களில் அமெரிக்க ஆற்றல் நிறுவனங்கள் "முன்னுரிமை" பெற்றிருக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

உற்பத்தி பகிர்ந்துகொள்ளும் உடன்பாடு (Production Sharing Agreement -PSA), என்பதுதான் அமெரிக்க வல்லுனர்களும் ஈராக்கிய புலம் பெயர்ந்தோரும் ஈராக்கின் எண்ணெய் துறை வளர்ச்சி பற்றி மேற்கொண்டிருந்த ஒப்பந்தத்தின் வடிவமைப்பு ஆகும்.

"இது ஒரு திறமையான ஏற்பாடு" என்று PSA பற்றி அம்மேடை சித்திரித்துக் காட்டியுள்ளது. தேசியமயமாக்கப்பட்ட எண்ணெய் தொழில்களுக்கு அரசியலமைப்பு தடைகள் அல்லது அரசியல் எதிர்ப்புக்கள் இருப்பதை கடந்து வரும் வகையாக இந்த PSAக்கள் 1960 களிலேயே அறிமுகப்படுத்தப்பட்டிருந்தன. ஒரு பகிர்ந்து கொள்ளும் உடன்பாட்டின்படி, சட்டப்படி எங்கு எடுக்கப்படுகிறதோ, அந்த நாட்டின் செல்வமாகத்தான் எண்ணெய் இருக்கும். ஆனால் வயலின் செயற்பாட்டு முறை அயல்நாட்டு இயக்குவோரால் 25 முதல் 40 ஆண்டுகள் கட்டுப்பாட்டிற்குள் வைத்துக் கொள்ளப்படும்.

PSA க்கள், royalty arrangements, பங்குவீத உரிமை ஏற்பாடுகளை விட நாடுகடந்த ஆற்றல் நிறுனங்களுக்கு செல்வத்தை மிக அதிகமாக கொழிக்க வகைக்கும் ஒப்பந்த வடிவமாக நிரூபிக்க இருந்தது. நிறுவனத்தின் உற்பத்திசெலவினங்கள், இலாப விகிதம் ஆகியவற்றை கணக்கில் கொள்ளாமல் பெரும்பாலான பங்குவீத உரிமை உடன்பாடுகளின்படி, அரசாங்கம் ஒவ்வொரு பீப்பாய் எண்ணெய்க்கும் குறிப்பிட்ட சதவிகிதத்தை விலையில் இருந்து எடுத்துக் கொள்ளும். அரசசுதான் பெயரளவிற்கு எண்ணெய் வளத்திற்கு "உரிமையாளர்" ஆதலால், இதில் இருந்து கிடைக்கும் வருமானம் முதலில் நிறுவனத்திற்கு எண்ணெய் கண்டுபிடிப்பு, உற்பத்தி மற்றும் மூலதனச் செலவினங்களுக்கு முழுமையாகக் கொடுக்கும் வகையில் PSA படி ஏற்பாடு செய்யப்படும். எஞ்சியுள்ள இலாபங்கள் அரசாலும், நிறுவனத்தாலும் ஒப்புக்கொள்ளப்பட்டுள்ள விகிதாசாரப்படி பிரித்துக் கொள்ளப்படும்.

பிரித்துக் கொள்ளப்படும் இலாபம் பொதுவாக அரசிற்கு நன்மை தரும் வகையில் 60:40 அல்லது கூடுதலாக இருப்பது போல் தோன்றும். ஆனால் நிறுவனங்களை பொறுத்த வரையில் அவற்றின் செலவுகள் அனைத்தும் இலாபம் பகிர்ந்து கொள்ளப்படுவதற்கு முன்பு கொடுக்கப்படவேண்டுமாதலின், உறுதியளிக்கப்பட்ட தொகையை பெறும். மேலும் மொத்த வருமானத்தில் தங்கள் பங்குகளை அவை செலவினங்களை கூட்டிக் காட்டுவதின் மூலம், அல்லது தங்களுடைய துணை நிறுவனங்களுக்கே துணை ஒப்பந்தம் கொடுப்பதின் மூலம் அதிகரித்துக் கொள்ள முடியும்.

ஒரு பகிர்ந்து கொள்ளும் உடன்பாட்டு ஒப்பந்தத்தில் நிறுவனத்திற்கு வெளிப்படையாய் ஆதரவான விதிகளும் இருக்கலாம். அத்தகைய PSA ஒன்று ரஷ்ய அரசாங்கத்தால் 1990 களில் கையெழுத்திடப்பட்டது. இந்த ஒப்பந்தத்தின்படி Shell நிறுவனம், ரஷ்யாவின் வடகிழக்கில் இருக்கும் Sakhalin தீவிற்கு அருகில் Sakhalin II செயல்திட்டத்தின் கட்டுப்பாட்டை பெற்றது; இதன்படி ரஷ்ய அரசாங்கம் குறிப்பிட்ட இலாபம் கிடைக்கும் வரை எந்தவிதப் பங்கையும் பெறாது என்று நிர்ணயிக்கப்பட்டது.

மேலும், அமைப்புத்திட்ட அறிக்கையானது, எழும் பூசல்கள் எதுவும் அமெரிக்க தளத்தை கொண்ட முதலீட்டு சர்ச்சைகளின் தீர்விற்கான சர்வதேச மையம் (International Centre for the Settlement of Investment Disputes) அல்லது பிரெஞ்சு தளத்தை கொண்ட (International Chamber of Commerce) சர்வதேச வர்த்தக சபை மூலம் தீர்க்கப்பட வேண்டும் என்று PSA குறிப்பிட முடியும். இந்த அமைப்புக்கள் பெரிய சக்திகளின் கட்டுப்பாட்டிற்குட்பட்டவையே ஒழிய எங்கு எண்ணெய் எடுக்கப்படுகிறதோ அந்த தேசிய நாட்டின் அதிகார வரம்பின்கீழ் இருக்காது.

ஒரு PSA உடைய முக்கிய கூறுபாடுகளை சுருக்கிக் கூறுகையில் பிரிட்டிஷ் கல்வியாளர் ஒருவரை மேற்கோளிட்டு அவ்வமைப்புத்திட்டம் எழுதியது: "அரசாங்கம்தான் அனைத்தையும் நடத்துவது போல் தோன்றும்; ஆனால் உண்மையில் தேசிய இறைமை என்று உறுதியான அடையாளத்தின், சட்ட முறையின் மறைப்பில் நிறுவனம்தான் அதை நடத்திக் கொண்டிருக்கும்."

அப்பட்டமான பெருநிறுவனக் கொள்ளை

அமெரிக்க ஆக்கிரமிப்பு முறை இந்த PSA முன்மாதிரியை ஈராக்கில் செயல்படுத்த எடுத்த முடிவு அப்பட்டமான பெறுநிறுவன கொள்ளைக்கு ஒப்பாகும். அதிக அளவில் எண்ணெய், எரிவாயு சேர்மஇருப்புக்கள் இல்லாத நாடுகளிலோ அல்லது கடற்கரைக்கப்பால் எண்ணெய் கிணறுகள் போன்ற வயல்களின் வளர்ச்சி செலவினம் அதிகமாக இருக்கும் நாடுகளிலோ, இத்தகைய முறை சாதாரணமாக காணப்படுவதுதான் என்றாலும், பொதுவாக PSA க்கள் மிகப் பெரிய அளவில் எண்ணெய் உற்பத்தி செய்யும் ஈராக் போன்ற நாடுகளில் கையாளப்படுவதில்லை. அத்தகைய நாடுகள் நேரடியாகவே தங்கள் ஆற்றல் இருப்புக்களை பயன்படுத்திக் கொள்ளும், அல்லது பேச்சுவார்த்தை திறனை கொண்டு கூடுதலான ஆதாயம் கிடைக்கும் ஒப்பந்தங்களை ஏற்படுத்திக் கொள்ளும்.

செளதி அரேபியா, ஈரான், குவைத், ஈராக், ஐக்கிய அரபு எமிரேட்டுக்கள், வெனிசூலா மற்றும் ரஷ்யா என்னும் மிகப் பெரிய எண்ணெய் உற்பத்தி செய்யும் ஏழு நாடுகளும், மொத்தமாக உலகின் அறியப்பட்டுள்ள இருப்புக்களில் 72 சதவிகிதத்தைத் தங்களிடம் கொண்டுள்ளன; இவற்றில் ரஷ்யா ஒன்றுதான் PSA க்களில் கையெழுத்திட்டுள்ளது என்று அவ்வமைப்புத்திட்டம் சுட்டிக்காட்டுகிறது. 1990களின் முதலாளித்துவ மீட்சியின் முதல் கட்டத்தின்போது, ஸ்ராலினிச ஆட்சி அரசாங்கத்திற்கு உடைமையாக இருந்த முன்னாள் சோவியத் ஒன்றியத்தின் சொத்துக்கள் அனைத்தையும் தகர்த்திருந்த நிலையில், மாஸ்கோ அத்தகைய PSA க்கள் மூன்றில் கையெழுத்திட்டது. அச்செயற்பாடுகள் ரஷ்ய நாட்டிற்கு வருவாய் இழப்பில் பில்லியன் கணக்கில் என்று ஆயிற்று; மேலும் கடுமையான குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளாகியிருந்தன.

ஈராக்கிய எண்ணெய் தொழில்துறையின் வரலாற்றில் தாராளமான காலமாக 1970ல் இருந்து 1979 க்கு இடைப்பட்ட ஆண்டுகள் இருந்தன. நேரடியாக அரசாங்க நிதியுதவி இருந்ததால், அரசாங்க உடைமையான ஈராக் தேசிய எண்ணெய் நிறுவனம் உற்பத்தியை 1.5 மில்லியன் பீப்பாய்கள் நாளொன்றுக்கு என்பதில் இருந்து 3.7 மில்லியன் பீப்பாய்கள் ஒரு நாளுக்கு என்று உயர்த்தி, எட்டு புதிய வயல் வயல்களையும் கண்டறிந்தது; அவை இன்னும் முழுமையாக அபிவிருத்தி செய்யப்படவில்லை.

ஆனால் அமெரிக்க அதிகாரிகளாலும், ஆக்கிரமிப்பிற்கு முழுமையாக ஒத்துழைக்கும் ஈராக்கிய ஒத்துழைப்பாளர்களாலும் எழுதப்பட்ட ஈராக்கின் புதிய அரசியலமைப்பு, இது திரும்பவும் நிகழும் சாத்தியத்தை விலக்கி வைத்துள்ளது.

எண்ணெய், எரிவாயு பற்றிய விதிகள் PSA க்களுக்கு சட்டபூர்வ இயங்குமுறையை ஏற்படுத்தியுள்ளன. விதி 108ன் படி, எண்ணெய், எரிவாயு இரண்டும் "ஈராக்கிய மக்கள் அனைவருக்கும், எல்லா பகுதிகளுக்கும், ஆட்சியமைப்புக்களுக்கும் பொதுவானது" என்றும் நேரடியாய் தனியார் மயமாக்குதல் தடைபடுத்தப்பட்டுள்ளது என்றும் கூறுகிறது. ஆயினும், 109வது விதியின் இரண்டாம் பிரிவு, ஈராக்கிய அரசாங்கத்தின் பல பிரிவுகளும், "சந்தைக் கொள்கைகளின் மிக முன்னேற்றமான தொழில்நுணுக்க முறைகளைக் கையாள்வதன் மூலமும் முதலீட்டை ஊக்குவிப்பதன் மூலமும்" அதன் நன்மை ஈராக்கிய மக்களுக்கு மிக அதிகமாகச் சென்றடையும் வகையில், தேவையான எண்ணெய், எரிவாயு வளர்ச்சிக்கான மூலோபாய கொள்கைகளை உருவாக்குவதை நிபந்தனையாகக் கூறுகிறது. (வலியுறுத்தல் கட்டுரையாளருடையது)

PSA க்களின்கீழ், நாடுகடந்த நிறுவனங்கள் ஈராக்கிய எண்ணெய், எரிவாயு வயல்களுக்கு "சொந்தமாக" கொண்டிராது. மாறாக, அவை "சந்தைக் கொள்களின்படி" "முதலீட்டை ஊக்குவிக்கும்" ஒருசார்பு ஒப்பந்தங்களின் அடிப்படையில் அபிவிருத்தி செய்யும்.

மேலும், விதி 109ன் முதல் பிரிவு ஈராக்கிய கூட்டரசாங்கம் "இப்பொழுதுள்ள வயல்களில் இருந்து எண்ணெய், எரிவாயு எடுப்பதற்கான நிர்வாகத்தைத்தான்" கொண்டிருக்கும் என்று கூறியுள்ளது. 111வது விதி, "கூட்டரசு அரசாங்கத்தின் சிறப்பு அதிகாரங்களில் வரையறுக்கப்படாத அனைத்து அதிகாரங்களும் வட்டார, ஆட்சித் தொகுப்புக்களின் அதிகார வரம்பிற்குட்பட்டு இருக்கும்" என்று அறிவிக்கிறது. கூட்டரசு இப்பொழுதுள்ள 17 உற்பத்தி வயல்கள் மீதான கட்டுப்பாட்டை கொண்டிருக்கும், எஞ்சியுள்ள 63 கட்டமைக்கப்படாத வயல்கள் மற்றும் புதிய கண்டுபிடிப்புக்கள் பிராந்தியங்கள் மற்றும் மாகாணங்கள் ஆகியவற்றின் அதிகாரவரம்பிற்குள் இருக்கும்" என்பது இதன் உட்குறிப்பாகும்.

வேறுவிதமாகக் கூறினால், புதிய வயல்களை பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கான ஒப்பந்தங்கள் வட்டார அரசாங்கங்களான, வட ஈராக்கில் Kurdish Regional Government (KRG), அல்லது எண்ணெய் வளம் நிறைந்த தெற்கில் பெரும்பான்மையான ஷியைட் அரபுகள் கட்டுப்பாட்டில் உள்ள மாகாண அரசாங்கங்களிடம் இருக்கும். 1995ம் ஆண்டு ஈராக்கிய எண்ணெய் அமைச்சகம் குறிப்பிட்ட 25 புதிய வயல்கள் "அபிவிருத்தி முன்னுரிமை" அடிப்படையில் இருக்கும், இவற்றில் 11 தெற்கிலும், 11 வடக்கிலும், 4 மத்திய பகுதியிலும் இருக்கும்" என்று அமைப்புத்திட்டம் கூறியுள்ளது.

அக்டோபர் 15 அன்று நடந்த கருத்துவாக்கெடுப்பில் அரசியலமைப்பிற்கு ஒப்புதல் தரப்பட்டுள்ளது. டிசம்பர் 15 தேர்தலுக்கு பின்னர் பாக்தாத்தில் யார் அரசு அமைத்தாலும் அது பொருட்டல்ல, எத்தனை நாட்கள் ஆக்கிரமிபிற்கு எதிர்ப்பு மத்திய ஈராக்கில் முக்கியமாக சுன்னி அரபு மாகாணங்களில் தொடர்ந்தாலும் அது பொருட்டல்ல, ஈராக்கிய எண்ணெயின் கணிசமான பகுதி நாடுகடந்த ராட்சத நிறுவனங்களுக்குக் கொடுக்கப்படும்.

கடந்த வாரம் இந்த வழிவகை தொடங்கிவிட்டது. வடக்கு ஈராக்கில் Tawke வயலில் துளையிடும் வேலை, நோர்வே நாட்டு DNO நிறுவனத்துடன் ஜூன் 2004ல் செய்துள்ள ஒப்பந்தத்தின் அடிப்படையில், தொடக்கப்பட்டுவிட்டது என்று KRG அறிவித்தது. இந்த உடன்பாடு 60 சதவிகித இலாபத்தை குர்திஷ் பகுதிக்கும் 40 சதவிகிதத்தை நிறுவனத்திற்கும் கொடுத்துள்ளது. இந்த திட்டம்தான் ஈராக்கில் 20 ஆண்டுகளுக்கு பின்னர் முதன் முதலாக ஒரு அயல்நாட்டு நிறுவனத்தால் எண்ணெய் வளர்ச்சிக்கு கொடுக்கப்படும் திட்டமாகும்.

வரவிருக்கும் நாட்களில் ஏராளமான PSA க்கள் கையெழுத்திடப்படும் என்றும் வேறு எங்கும் இல்லாத அளவிற்கு நாடுகடந்த நிறுவனங்களுக்கு சாதகமான முறையில் விதிகள் அமையும் என்றும் எதிர்பார்க்கப்படலாம்.

"நயமற்ற வடிவமைப்புக்கள்" கூறுகிறது: "இதில் முக்கிய பிரச்சினை பேரம் பேசும் திறன்தான். ஈராக்கிய அரசு புதிது, வலுவற்றது, நடந்து கொண்டிருக்கும் வன்முறை, ஊழல் ஆகியவற்றால் சேதத்தில் உள்ளது; நாடு இன்னும் இராணுவ ஆக்கிரமிப்பில் உள்ளது... எண்ணெய் நிறுவனங்கள் தற்போதைய பாதுகாப்பு நிலையை சுட்டிக் காட்டி உலகில் மற்ற நாடுகளில் உள்ளதிற்கு ஒப்பான அல்லது அதைவிட சிறந்த நிலைப்பாட்டிற்கு வற்புறுத்தும்; அதேவேளை ஈராக்கில் தடையில்லாத முதலீட்டை செய்யும் பெரும் சேர்மஇருப்புக்கள், குறைவான உற்பத்திச் செலவினங்கள் ஆகியவற்றை குறைமதிப்பிற்குட்படுத்தும்."

இந்த அறிக்கை இன்னும் அப்பட்டமான முறையில் நவ காலனித்துவ வகையிலான ஒப்பந்த விதியை சுட்டிக் காட்டுகிறது; அமெரிக்க, மற்ற ஆக்கிரமிப்பு சக்திகளின் வற்புறுத்தலின்பேரில் PSA க்களில் அரசாங்கம் எண்ணைய் உற்பத்தி விலைகளில் தலையிடக் கூடாது என்ற நிபந்தனையை கோரிக்கையாக இடம் பெறச்செய்யும்.

அவ்வமைப்புத்திட்டம் கூறுவதாவது: "எண்ணெயை நம்பியிருக்கும் நாடு என்ற முறையில் அதன் எண்ணெய் வளங்கள் குறையும் விகிதத்தை ஈராக் கட்டுப்படுத்த முடியாது; ஈராக்கின் வளர்ச்சி மூலோபாயத்திற்கு வளக்குறைவு விகிதம் மிகவும் முக்கியமானதாகும்; ஆனால் இது பெருமளவு அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் இருக்காது. வெளி நாட்டு நிறுவனங்களின் உற்பத்தி விகிதத்தை நிறுத்த முடியாத நிலையில், ஈராக் எண்ணெய் ஏற்றுமதி நாடுகளின் அமைப்பின் (OPEC) ஒதுக்கீட்டுக்கு ஏற்ப நடந்து கொள்ளுவதிலும் இடையூறுகளை எதிர்கொள்ளும்; இது OPEC க்குள் ஈராக்கின் நிலைமைக்கு ஊறு விளைவிக்கும் மற்றும் அது OPEC -ன் திறமையான செயற்பாட்டிற்கே ஆபத்து கொடுக்கும் திறனையுடையது.

1970 களின் எண்ணெய் நெருக்கடிக்கு பின்னர் பெரும் வல்லரசுகளின் முக்கிய நோக்கம், முக்கிய எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகள் உலக எண்ணெய் தேவைகளை அவற்றின் விருப்பப்படி வழங்கும் திறனை தகர்த்துவிட வேண்டும் என்பதாகத்தான் உள்ளது.

மார்ச் 2003 படையெடுப்பிற்கு முன்பு, புஷ் நிர்வாகம் மற்றும் அதன் சர்வதேச கூட்டாளிகளின் பிரச்சாரம், போருக்கான உந்துதல் என்பது "பேரழிவு ஆயுதங்களை" ஈராக் கொண்டிருப்பதை அகற்றவேண்டும் என்பதாக இருந்தது; அதிலும் குறிப்பாக ஈராக் அணுவாயுதங்களை பெற இருந்ததாக கூறப்பட்டது. படையெடுத்திருந்த நாடுகள் சதாம் ஹுசைன் ஆட்சிக்கும் அல் கொய்தா பயங்கரவாத வலைப்பின்னலுக்கும் இடையே தொடர்புகள் இருந்ததற்கு சான்றுகள் இருந்ததாகவும் கூறின.

இந்தப் பொய்கள்தான் ஒரு கொள்ளை முறையிலான சட்ட விரோதப் போரை நியாயப்படுத்த கூறப்பட்டவை. இவ்வமைப்புத்திட்ட அறிக்கையின் அரசியல் உட்குறிப்புக்களை பற்றிக் கூறவில்லை என்றாலும், "நயமற்ற வடிவமைப்புக்கள்" ஈராக்கில் ஆக்கிரமிப்பு தொடரவேண்டும் என்று அமெரிக்க அரசியல் நடைமுறையில் இருக்கும் ஒருமித்த கருத்து அமெரிக்க பெருநிறுவனங்கள், நிதிய உயர் குழு ஆகியவற்றின் மிக சக்திவாய்ந்த பிரிவுகளின்மூலோபாய நலன்கள் மற்றும் முக்கிய பொருளாதார நலன்களை காப்பதுடன் பிணைந்துள்ளது என்பதை அடிக்கோடிட்டு போதிய தகவல்களை கொடுத்துள்ளது.

Top of page