WSWS :Tamil
:
செய்திகள்
ஆய்வுகள்
:
ஆசியா
:
இந்தியா
India takes a more direct hand in Sri Lankan affairs
இலங்கை விவகாரங்களில் இந்தியா மிக நேரடியாக தலையீடு செய்கின்றது
By Vilani Peiris
6 December 2005
Use this version
to print |
Send this link by email |
Email the author
கடந்த மாதம் நடைபெற்ற தேர்தலில் இலங்கை ஜனாதிபதி மகிந்த இராஜபக்ஷ வெற்றியடைந்தது
சம்பந்தமாக பிரதிபலித்த புது டில்லி, தீவின் பெயரளவிலான சமாதான முன்னெடுப்பை புதுப்பிக்குமாறு கொழும்பின்
மீது அழுத்தத்தை அதிகரித்துள்ளது. தற்போதைய போர்நிறுத்தம் முறிந்துவிடுமோ என்ற பீதியின் இடையே, மீண்டும்
ஆயுதப் போர் ஏற்பட்டால் அது இப்பிராந்தியம் முழுவதிலும் ஸ்திரநிலைமையை சீர்குலைத்துவிடுமென இந்திய அரசாங்கம்
கவலை கொண்டுள்ளது.
நவம்பர் 17 தேர்தலில், மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி), ஜாதிக ஹெல
உறுமய ஆகிய பேரினவாதக் கட்சிகளின் ஆதரவுடனேயே இராஜபக்ஷ வெற்றி அடைந்தார். இந்த கட்சிகளுடன் அவர்
செய்துகொண்ட தேர்தல் உடன்படிக்கை, தமிழீழ விடுதலைப் புலிகளுடனான யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை மீளாய்வு செய்தல்,
சுனாமி நிவாரணங்களை விநியோகிப்பதற்கான பொதுக் கட்டமைப்பை இரத்து செய்வது மற்றும் எந்தவொரு சமாதான
உடன்பாட்டின் பாகமாக சமஷ்டி அரசு நிறுவப்படுவதை நிராகரித்தல் போன்ற ஆத்திரமூட்டல் நடவடிக்கைகளை உள்ளடக்கிக்
கொண்டுள்ளது.
இராஜபக்ஷவை உத்தியோகபூர்வமாக பாராட்டிய இந்தியப் பிரதமர் மன்மோகன்
சிங், பேச்சுவார்த்தைகளுக்காக விரைவில் புது டெல்லிக்கு வருமாறும் அழைப்பு விடுத்துள்ளார். இதைடுத்து
இடம்பெற்ற ஆரவாரமான இராஜதந்திர செயற்பாடுகளில்,
புலிகளுக்கு எதிராக எந்தவொரு ஆக்கிரோஷமான நடவடிக்கைகளில்
ஈடுபடுவதை தவர்க்குமாறும் சமாதானப் பேச்சுக்கள் புதுப்பிக்கபடுவதற்கான அடித்தளத்தை இடுமாறும் இந்தியா
அழுத்தம் கொடுத்துள்ளது.
நவம்பர் 26 அன்று புதிய பிரதமர் ரட்னசிரி விக்கிரமநாயகவை சந்தித்த
கொழும்பில் உள்ள இந்திய உயர் ஸ்தானிஹர் நிருபமா ராவ், "இலங்கையின் இனப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு இந்தியா
முழு ஆதரவு வழங்கும்" எனத் தெரிவித்தார். இதில் இந்தியாவிற்கு உள்ள பொறுப்பை வலியுறுத்திய அவர்: "இலங்கையின்
தேசிய பாதுகாப்பில் இந்தியாவிற்கும் பொறுப்புள்ளதாக இந்தியா கருதுவதுடன் மற்றும் இலங்கையின் இறைமை மற்றும்
பிராந்திய ஒருமைப்பாட்டை பாதுகாப்பதற்கு சாத்தியமான அனைத்தையும் இந்தியா செய்யும்," என பிரகடனம் செய்தார்.
ராவ் வெளியிட்ட கருத்துக்கள், தனித் தமிழ் நாட்டிற்கான போரை எந்தவகையிலும்
புதுப்பிப்பதற்கு எதிராக புலிகளுக்கு ஒரு தெளிவான எச்சரிக்கையை விடுத்திருப்பதோடு அன்றி, இந்தியா இந்த
பிராந்தியத்தில் பிரதான அதிகார முகவராகும் அதன் பரந்த குறிக்கோளையும் சுட்டிக்காட்டியுள்ளன. புது டெல்லி
எந்தவொரு இராணுவ மோதலின் போதும் கொழும்புக்கு ஆதரவு கொடுப்பதாக மீண்டும் உறுதிப்படுத்திய
அதேவேளை, தன்னுடைய மூலோபாய நலன்களை பாதுகாப்பதற்காக அதற்கு தலையிடும் உரிமை உண்டு என்பதையும்
பூரணமாக பிரகடனப்படுத்தியுள்ளது.
இலங்கையின் புதிய வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீர தனது முதல் கடல்கடந்த
பயணமாக டிசம்பர் 1 அன்று இந்தியாவிற்கு பயணித்தமை, கொழும்பு அரசாங்கத்திற்கு இந்தியாவுடன் ஒரு நெருக்கமான
உறவை ஏற்படுத்திக்கொள்ள வேண்டியதன் முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. இராஜபக்ஷ ஜே.வி.பி
மற்றும் ஜாதிக ஹெல உறுமயவின் கோரிக்கைகளுக்கு தன்னுடைய ஆதரவை மீண்டும் வலியுறுத்திய பின்னர் இந்த விஜயத்தை
அவர் மேற்கொண்டிருந்த அதேவேளை, சமரவீர புதிய அரசாங்கம் போர் நிறுத்த உடன்படிக்கையை தொடர்ந்தும்
கடைப்பிடிக்கும் என்ற உத்தரவாதத்தை இந்தியாவிற்கு கொடுத்தார். கொழும்பு எதிர்பார்ப்பது என்னவென்றால்,
"மிகவும் விளைபயனுள்ள வகையில்" யுத்த நிறுத்தத்தை "மீளாய்வு" செய்வதாகும், என அவர் குறிப்பிட்டார்.
கொழும்பில் உள்ள இராஜதந்திர பட்டாளங்களுக்கு இராஜபக்ஷ கொடுத்த அதே அறிக்கைகளை
சமரவீர பிரதிபலித்தார். சிங்கள பேரினவாத உணர்வை கிளறிவிட்டு ஜனாதிபதி தேர்தலில் வெற்றியடைந்த இராஜபக்ஷ,
சமாதான முன்னெடுப்புகளை மீண்டும் தொடங்குவதற்கான கதவுகளை திறந்து வைக்குமாறு கோரும், உள்ளூர் வணிகத்
தலைவர்களினதும், அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் இந்தியாவினதும் அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளார்.
இந்த ஆபத்தான சமநிலைப்படுத்தும் நடவடிக்கையில், குறிப்பாக இந்தியாவின் உதவியை இராஜபக்ஷ எதிர்பார்த்துள்ளார்.
சமரவீர, பிரதமர் சிங்கை சந்தித்தார். செய்தி ஊடக தகவல்களின்படி, போர்நிறுத்த
ஒப்பந்தம் கடைப்பிடிக்கப்படுவதை இந்தியா விரும்புகிறது என பிரதமர் தெளிவாக குறிப்பிட்டிருந்தார். இரு நாடுகளுக்கும்
இடையே ஒரு விரிவான பொருளாதாரக் கூட்டு உடன்படிக்கை (Comprehensive
Economic Partnership Agreement) பற்றி முடிவெடுப்பதற்கான
அடுத்த நடவடிக்கைகள் பற்றியும் சிங் நம்பிக்கை தெரிவித்துள்ளார். விரிவடைந்துவரும், மிகப்பெரும் இந்தியப்
பொருளாதாரத்துடனான நெருக்கமான உறவானது ஆட்டங்கண்டு போயுள்ள இலங்கை பொருளாதாரத்திற்கு ஒரு வரவேற்பை
பெறும் பெருக்கத்தை வழங்கும்.
சமரவீராவின் பயணம் இம்மாதக் கடைசியில் இராஜபக்ஷ அங்கு விஜயம் செய்வதற்கு
வழிவகை செய்துள்ளது. இலங்கை ஜனாதிபதி, பொருளாதார வாய்ப்புக்களை சுரண்டிக்கொள்வதற்கு ஆர்வமாக இருப்பதோடு,
சமாதான முன்னெடுப்புகளிலும் "பிரதான பாத்திரத்தை" ஆற்றுமாறும் இந்தியாவிற்கு அழைப்பை விடுக்கின்றார்.
அத்தகைய நடவடிக்கையானது சமாதானப் பேச்சுக்களின் உத்தியோகபூர்வ மத்தியஸ்தர்களான நோர்வேயை ஒரங்கட்டும்.
நோர்வே புலிகளுக்குப் "பக்கச் சார்பாக" இருக்கின்றது என்று குற்றஞ்சாட்டிய சிங்கள பேரினவாதிகளின் எரிச்சலுக்குள்ளாகியுள்ளது.
புலிகளுடன் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றால், எந்தவொரு அதிகாரப் பகிர்வு
ஒப்பந்தத்திலும் புலிகளுக்கு ஒப்பீட்டளவில் ஒரு இரண்டாந்தரப் பங்கை அளிக்கும் ஒரு உடன்படிக்கைக்கு இந்தியா
ஆதரவு தரும் என்றே இராஜபக்ஷ கணக்கிடுகின்றார். இந்திய அரசாங்கங்கள் தனித் தமிழ் அரசுக்கான புலிகளின்
கோரிக்கையை பல முறையும் எதிர்த்துவந்துள்ளன. 2003 கடைப் பகுதியில் விரிவான சுயாட்சி அதிகாரங்களை
கொண்ட ஒரு இடைக்கால நிர்வாகத்திற்கான புலிகளின் கோரிக்கையையும் கூட புது டில்லி விமர்சித்திருந்தது.
இலங்கையில் எந்தவிதமான சமாதான உடன்படிக்கையும் துணைக்கண்டத்தில் ஏனைய பிரிவினைவாத மோதல்களுக்கு,
குறிப்பாக காஷ்மீர் சம்பந்தமாக பாகிஸ்தானுடனா நீண்டகால முரண்பாடுகளுக்கு ஒரு முன்னோடியாக தோன்றும்
என்பதையிட்டு இந்தியா அக்கறை கொண்டுள்ளது.
கடலில் புலிகளின் நடவடிக்கைகளைத் தடுப்பதற்காக கூட்டு கடற்படை ரோந்துப்
பணிகளை நடத்துவது உட்பட கொழும்புடன் செய்துகொள்ளும் பாதுகாப்பு ஏற்பாடுகளின் மூலம், புலிகள் மீதான இராணுவ
அழுத்தத்தை இந்தியா முன்னெடுத்துக் கொண்டிருக்கின்றது. டிசம்பர் 1 அன்று, இந்தியாவின் தெற்குப்பகுதி இராணுவத்
தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் பி.எஸ். தக்ஹர் இலங்கைக்கு ஐந்து நாள் பயணத்தை மேற்கொண்டிருந்தார். குறிப்பாக
அவர் தீவின் வடக்கில் புலிகளின் கட்டுப்பாட்டிற்குள் இருக்கும் பகுதிக்கு நெருக்கமாக அமைந்துள்ள வவுனியா இராணுவத்
தளத்திற்கு சென்றுவந்தார்.
அதே சமயம், இந்தியப் பிரதமர் சிங், இலங்கையில் இருக்கும் தமிழர்களின் அவலநிலையை
பற்றி அதிக அனுதாபம் கொண்ட தென் இந்திய மாநிலமான தமிழ் நாட்டில் உள்ள நட்புக் கட்சிகளில் இருந்து தனிமைப்பட்டு
விடக்கூடும் என்ற பீதியில், கொழும்புடன் மிக நெருக்கமாக இருப்பதாக வெளிப்படையாக காட்டிக் கொள்ள
முடியாதுள்ளார். சிங்கின் ஐக்கிய மக்கள் முன்னணியின்
(UPA) பங்காளிகளாக உள்ள மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்
கழகம் (MDMK),
திராவிட முன்னேற்றக் கழகம் (DMK),
மற்றும் பாட்டாளி மக்கள் கட்சியும் இலங்கை முரண்பாடுகளை தங்களுடைய வகுப்புவாத அரசியலுக்கு உரைகல்லாக
பயன்படுத்த சுரண்டிக்கொள்கின்றன.
டிசம்பர் 4
அன்று செய்தி ஊடகத்திற்கு கருத்து தெரிவித்த மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக பொதுச் செயலாளரான
வை. கோபாலசாமி, சமாதான பேச்சுக்களில் இந்தியா "முன்நிற்க வேண்டும்" என்னும் இராஜபக்ஷவின்
பிரேரணையானது "ஒரு திட்டமிட்ட பொறியாகும்" என்று சிங்கிற்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். அவர் சமாதான
முன்னெடுப்புகளில் நோார்வே தனது மத்தியஸ்த பாத்திரத்தை தொடர்வதற்கு அனுமதித்து அதற்கு ஆதரவு தறுமாறு
சிங்கை வற்புறுத்தியுள்ளதோடு, 1987ல் இந்திய இலங்கை ஒப்பந்தத்தையடுத்து விளைந்த பேரழிவுகள் மீண்டும்
ஏற்படாமல் தவிர்த்துக்கொள்ள வேண்டும் என்றும் அவர் முன்னெச்செரிக்கை விடுத்துள்ளார்.
அந்த ஒப்பந்தத்தின்படி, புலிகள் ஆயுதங்களை களைவதைச் செயல்படுத்துவதற்காக,
இந்தியா 100,000 "அமைதி காக்கும் படையினரை" இலங்கைத் தீவின் வடக்கு கிழக்குப் பகுதிகளுக்கு அனுப்பி
வைத்தது. உடனடியாக வெடித்த மிகக் கசப்பான போரினால் 2,000 இந்திய இராணுவத்தினர் உயிரிழந்தனர்.
"இந்திய ஏகாதிபத்தியத்திற்கு" எதிராக ஜே.வி.பி முன்னெடுத்த சிங்களப் பேரினவாத கிளர்ச்சியை அடுத்தும்
மற்றும் துருப்புக்களை வெளியேறுமாறு இலங்கை ஜனாதிபதி ஆர். பிரேமதாச கேட்டுக்கொண்டதை அடுத்தும்
இறுதியாக இந்தியா துருப்புக்களை விலக்கிக்கொள்ளத் தள்ளப்பட்டது.
இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி 1991ல் படுகொலை செய்யப்பட்டதை அடுத்து,
புலிகள் மீது குற்றம் சாட்டிய இந்தியா அதை ஒரு பயங்கரவாத அமைப்பாகப் பட்டியலிட்டது. நேரடியாக இந்த
மோதலில் தலையீடு செய்வதற்கு தயங்கினாலும், 1990 களின் கடைப் பகுதியில் இருந்து ஒரு மாற்றத்திற்கான
அறிகுறிகள் தென்பட்டுவந்துள்ளன. இந்தியா இலங்கை இராணுவத்திற்கு பயிற்சியையும் ஏனைய உதவிகளையும்
கொடுத்துள்ளது. சமாதான முன்னெடுப்புகளில் உடனடியாகத் தலையீடு செய்யாவிட்டாலும், புது டில்லி நோர்வேயின்
முயற்சிகளுக்கும் 2002ல் யுத்த நிறுத்தம் கைச்சாத்திடப்படுவதற்கும் ஆதரவு கொடுத்தது.
குறிப்பாக 2001 செப்டம்பருக்கு பின்னர், அமெரிக்காவுடனான இந்தியாவின்
வளர்ந்துவரும் மூலோபாய உறவுகளும் கூட, இலங்கை உட்பட இந்தப் பிராந்தியத்தில் அதிகம் தலையீடுசெய்யும்
பாத்திரத்தை இட்டுநிரப்ப புது டில்லிக்கு ஊக்கம் கொடுத்துள்ளன. இப்பொழுது இலங்கைப் பிரச்சினைக்கு முடிவுகட்டுவதிலும்
அமெரிக்க இந்திய நலன்கள் மிக நெருக்கமான முறையில் பிணைந்துள்ளன. இலங்கையில் உள்ள நாட்டு யுத்தம், இந்தப்
பரந்த பிராந்தியத்தில், குறிப்பாக அமெரிக்காவும் ஏனைய வெளிநாட்டு நிறுவனங்களும் பெருகிவரும் தகவல்
தொழில்நுட்பத் துறையில் மிகப் பெரிய அளவில் முதலீடுகளைச் செய்துள்ள தென்னிந்தியாவில் அரசியல் ஸ்திரநிலைமைக்கு
ஆபத்தானதாக அமைந்துவிடும் என இந்த இரு நாடுகளும் கருதுகின்றன.
இந்திய ஆளும் தட்டுக்களில் சில பிரிவுகள் இந்திய--இலங்கை உடன்படிக்கையின் கசப்பான
அனுபவத்தை ஒதுக்கி வைத்து விட்டு, இலங்கை விவகாரங்களில் மிக நேரடியாக தலையீடு செய்யுமாறு புது டில்லிக்கு
அழுத்தம் கொடுக்கின்றனர். கடந்த மாதம் ஒரு UPI
அறிக்கை, பல ஆய்வாளர்களின் கருத்துக்களை மேற்கோள் காட்டியிருந்தது. இராஜபக்ஷ "சிங்கள தேசியவாதத்திற்கு"
முன்னேறியிருப்பதைப் பற்றி எச்சரித்திருந்த இந்த ஆய்வாளர்கள், "இலங்கை சம்பந்தமான இந்திய கொள்கைகள்
ஆபத்தான திருப்பத்தை ஏற்படுத்துவதற்கு முன் அந்தக் கொள்கைகளை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருமாறு" சிங்கை
வலியுறுத்தியிருந்தனர்.
அரசியல் பகுப்பாய்வாளர் ஏ.பி. மஹாபற்றா குறிப்பிட்டிருந்ததாவது: "புது
டில்லிக்கு பிரச்சினைகளை ஏற்படுத்தும் அயல் நாடுகள் குழுவில் இலங்கை விரைவில் சேரக்கூடும்". இதன் வெளிப்படையான
உட்பொருள், இந்திய ஆளும் வர்க்கம் தன்னுடைய செல்வாக்கு மண்டலம் என்று கருதும் இந்தப் பிராந்தியத்தில்
தன்னுடைய நலன்களுக்காக தலையிடாமல் இந்தியா ஒதுங்கி இருக்க முடியாது என்பதாகும். ஆயினும், அத்தகைய தலையீடு
இலங்கையில் உள்ள அரசியல் ஸ்திரமின்மையை குவிப்பது மட்டுமன்றி அது புது டெல்லிக்கும் பெரும் வல்லரசுகளுக்கும்
இடையிலான முரண்பாடுகளுக்கும் வழியமைக்கலாம்.
இலங்கை மீண்டும் உள்நாட்டு யுத்ததை நோக்கி சரிந்து செல்லக்கூடிய நிலைமையின்
கீழ், சிங் மற்றும் இராஜபக்ஷ ஆகியோர் இம்மாதக் கடைசியில் சந்திக்கும்போது ஒரு மெல்லிய கயிற்றில் நடந்துகொண்டிருப்பர்.
Top of page
|