:
இலங்கை
New Sri Lankan president confronts same
impasse as predecessor
இலங்கையின் புதிய ஜனாதிபதி முன்னையவரைப் போல் அதே முட்டுக்கட்டையை எதிர்கொள்கின்றார்
By Wije Dias
2 December 2005
Back to screen version
இலங்கை ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷ, தனது புதிய அமைச்சரவையை அமைத்து ஒரு
வாரம் ஆவதற்கு முன்னரே, தனது கொள்கைகள் சம்பந்தமான கடினநிலையை நீக்கும் முயற்சியாக நவம்பர் 28 அன்று
சிரேஷ்ட வெளிநாட்டு பிரதிநிதிகளை கொழும்பில் சந்தித்தார். 2002ல் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் (புலிகள்)
கைச்சாத்திடப்பட்ட யுத்த நிறுத்த உடன்படிக்கை சம்பந்தமான புதிய அரசாங்கத்தின் போக்கு மற்றும் இரண்டு வருடங்களுக்கும்
மேலாக கிடப்பில் தள்ளப்பட்டுள்ள சமாதான முன்னெடுப்புகளின் தலைவிதி ஆகியவை இந்த சந்திப்பின் பிரதான விவகாரங்களாக
இருந்தன.
இராஜபக்ஷ, பேரினவவாதம் மற்றும் பொருளாதார தேசியவாதத்தில் மூழ்கிப்போன ஒரு
தேர்தல் மேடையின் மூலம் அதிகாரத்திற்கு வந்துள்ளார். மஹிந்த சிந்தனய (மஹிந்தவின் சிந்தனைகள்) என்ற தலைப்பிலான
அவரது தேர்தல் விஞ்ஞாபனம், அவரது தேர்தல் பங்காளிகளான மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி), ஜாதிக ஹெல
உறுமய ஆகிய சிங்களத் தீவிரவாதிகளின் வேலைத்திட்டத்தை பிரதிபலித்தது. ஜே.வி.பி மற்றும் ஜாதிக ஹெல உறுமயவும்
யுத்த நிறுத்த உடன்படிக்கையை இலங்கையின் இறைமையை காட்டிக்கொடுக்கும் செயலாக கண்டனம் செய்ததோடு புலிகளுடனான
சமாதானப் பேச்சுக்கள் நாட்டைப் பிரிப்பதற்கும் தனியான தமிழ் அரசை உருவாக்குதவற்குமான ஒரு கருவி என அதை
நிராகரித்தன.
எவ்வாறெனினும், வெளிநாட்டு பிரதிநிதிகள் முன்னால் ஆற்றிய தனது உரையில், மீண்டும்
யுத்தத்திற்கு திரும்பும் பீதியை குறைக்க இராஜபக்ஷ முயற்சித்தார். "யுத்த நிறுத்தத்தை தொடர்வதற்கான எனது அரசாங்கத்தின்
கடப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்துகிறேன். யுத்த நிறுத்தத்தை தொடர்ந்து செயற்படுத்துவதன் மூலம், இலங்கையில் உள்ள
மக்களும் சர்வதேச சமூகமும் விடுத்துள்ள அழைப்பையிட்டு புலிகள் கவனம் செலுத்துவர் என நான் எதிர்பார்க்கிறேன்,"
என அவர் குறிப்பிட்டார்.
அதே சமயம், தனது பேரினவாத பங்காளிகளை பகைத்துக்கொள்ளாத விதத்தில், ஜனாதிபதி
மேலும் குறிப்பிட்டதாவது: "யுத்த நிறுத்தம் தொடங்கி மூன்றரை வருடங்களின் பின்னர், யுத்த நிறுத்த உடன்படிக்கையின் செயற்பாட்டையும்
மற்றும் எவ்வாறு அதன் அமுலாக்கம் மேலும் விளைபயனுள்ள வகையிலும் செயலாற்றக்கூடியதாகவும் உள்ளது என்பதை கவனிக்க
வேண்டிய நேரம் இப்போது உருவாகியுள்ளது என்பதை நான் கூறிவைக்க வேண்டும்."
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி என்ற சக்திவாய்ந்த பதவியை
வெற்றிகொண்டுள்ள இராஜபக்ஷ, தனக்கு முன்னர் பதவியில் இருந்த சந்திரிகா குமாரதுங்கவைப் போல் அதே இக்கட்டு
நிலையை எதிர்கொண்டுள்ளார். குமாரதுங்க 2004 பொதுத் தேர்தலில் ஒரு குறுகிய வெற்றியை பெறுவதற்காக
ஜே.வி.பி உடனான ஒரு கூட்டணியில் தங்கியிருந்தார். அவரது பிரச்சாரம் "சமாதான முன்னெடுப்புகளை" தாக்குவதை
இலக்காகக் கொண்டிருந்த போதிலும், சமாதானப் பேச்சுக்களை மீண்டும் தொடங்கவும் மற்றும் மேலதிக சந்தை
மறுசீரமைப்பையும் கோரிய முதலீட்டாளர்கள் மற்றும் பெரும் வல்லரசுகளுக்கு அடிபணியத் தள்ளப்பட்டார்.
அது போலவே இராஜபக்ஷவும் தனது தேர்தல் களத்தில் இருந்து பின்வாங்க வேண்டிய
அழுத்தத்திற்கு உள்ளானார். அவர்களது முதலாவது பாராட்டுச் செய்தியில், அமெரிக்க இராஜாங்கச் செயலகமும்
ஐரோப்பிய ஒன்றியமும் சமாதான முன்னெடுப்புகளை மீண்டும் தொடங்க வேண்டிய தேவையை வலியுறுத்தின.
அமெரிக்கா, புதிய ஜனாதிபதி எதிர்கொண்டுள்ள, "பல குறிப்பிடத்தக்க மற்றும்
உடனடியான சவால்களைப்" பற்றி ஆராய்ந்த பின்னர் பிரகடனம் செய்ததாவது: "இவை யுத்த நிறுத்த உடன்படிக்கையை
பலப்படுத்துவதையும் சமாதான முன்னெடுப்புகளுக்கு புதிய வலிமையை சேர்ப்பதையும் உள்ளடக்கியுள்ளது. இந்த
முன்னேற்றமானது அனைத்து இலங்கையர்களதும் அபிலாஷைகளை அடையும் ஒரு பேச்சுவார்த்தை மூலமான தீர்வை நோக்கி
நகர வழிவகுக்கக் கூடும்."
அதேபோன்ற ஒரு வரியில் ஐரோப்பிய ஒன்றியம் குறிப்பிட்டதாவது: "ஐரோப்பிய
ஒன்றியத்தின் ஐக்கிய இராச்சிய தலைமைத்துவமானது யுத்த நிறுத்தத்தை பேணுவதன் மூலமும் மற்றும் இலங்கையில் உள்ள
அனைத்து சமூகத்தவரதும் அபிலாஷைகளை அடையும் விதத்தில் இனப்பிரச்சினைக்கு சமாதானமாக முடிவு காண்பதற்காக
ஒன்றிணைந்து செயற்படுவதன் மூலமும் சமாதானத்திற்கான தமது அர்ப்பணிப்பை உறுதிப்படுத்துமாறு இலங்கையின் அனைத்துத்
தரப்பினருக்கும் அழைப்பு விடுக்கின்றது."
அதே சமயம், அமெரிக்காவும் ஐரோப்பாவும் வடக்கு கிழக்கில் தேர்தலில் "தலையீடு"
செய்ததற்காக புலிகளை விமர்சித்தன. புலிகள் உத்தியோகபூர்வமற்ற பகிஷ்கரிப்பை திணிப்பதற்காக குண்டர் வழிமுறைகளை
நிச்சயமாகப் பயன்படுத்தியிருந்த போதிலும், இந்த விவகாரம் புலிகள் மீதான சர்வதேச அழுத்தத்தை
உக்கிரப்படுத்துவற்காக சிடுமூஞ்சித்தனமாக பற்றிக்கொள்ளப்பட்டது. அமெரிக்காவும் பிரித்தானியாவும் ஈராக்கை விட
இலங்கையில் "ஜனநாயகத்தைப்" பற்றி இதற்கும் மேலாக வருந்தியதில்லை. அவர்கள் யுத்தத்திற்கு முடிவுகாண விரும்புவது
இலங்கை மக்கள் மீதான அக்கறையினால் அன்றி, இந்த மோதல்கள் பிராந்தியத்தில் அவர்களது வளர்ச்சிகண்டுவரும்
நலன்களுக்கு அச்சுறுத்தலாக இருப்பதாலேயே ஆகும்.
கொழும்பில் உள்ள கூட்டுத்தாபன தட்டுக்களின் இதே போன்ற அக்கறையை பிரதிபலித்த
உள்ளூர் பத்திரிகைகளின் சில பிரிவுகள், கடந்த வாரம் இராஜபக்ஷவின் மிகவும் யுத்தத்தை நாடும் அறிக்கைகளை
விமர்சித்திருந்தன. ஜனாதிபதி சமாதான பேச்சுக்கள் பற்றி பேசியபோது, தான் யுத்த நிறுத்த உடன்படிக்கையை
மீளாய்வு செய்யப்போவதாகவும் சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நிவராணங்களை விநியோகிக்க புலிகளுடன்
கைச்சாத்திட்ட பொது நிர்வாகக் கட்டமைப்பை ஒதுக்கித் தள்ளுவதாகவும் பிரகடனம் செய்தார். "யுத்த நிறுத்த
உடன்படிக்கையை மீளாய்வு" செய்வது என்பதன் மூலம் அவர் இலங்கை இராணுவத்தின் நிலைமையை பலப்படுத்துவதை
அர்த்தப்படுத்துகின்றார். இது புலிகளால் ஏற்றுக்கொள்ள முடியாத நிலைமைகளை திணிப்பதாக அமையும்.
கடந்த வார சண்டே டைம்ஸ் பத்திரிகையின் ஆசிரியர் தலையங்கம் மிகவும்
அமைதியாக கருத்துக் கூறியிருந்தது: "இங்கு நுணுகிக் காணக்கூடிய தடுமாற்றமான சிந்தனைகளின் சுவடு உள்ளது.
ஜனாதிபதி, ஒரு புறம் முரண்பாடுகளுக்கு தீர்வுகாணும் விளையாட்டை சம்பிரதாயபூர்வமான ஆளுமையின் மூலம் ஆட
முயற்சிக்கும் அதே வேளை, மறுபுறம் தான் சவாரிசெய்து ஜனாதிபதி பதவியை வென்ற அதே தோள்களுக்கு சொந்தமான
சக்திகளை மனநிறைவுபடுத்த முயற்சிக்கின்றார். அவர் தேசப்பற்று கோஷங்களுக்கு பதிலாக தேசியவாதத்தை ஒலிக்கச்
செய்ய முயற்சிக்கின்றார்."
புலிகளின் பிரிதிபலிப்புகள் பற்றி அக்கறை செலுத்திய இந்த ஆசிரியர் தலையங்கம்:
"ஜனாதிபதி தன்னை ஒரு ஒற்றை ஆட்சிக்காக அர்ப்பணித்துக்கொண்டுள்ளதோடு, இது உயர்ந்தளவில் எதிர்பார்க்கப்படும்
புலிகளின் தலைவரின் மாவீரர்தின உரையில் அநேகமாக எதையாவது பலமான முறையில் சொல்ல அவரைத்
தள்ளிச்செல்லும்," என எச்சரித்துள்ளது.
புலிகளின் பிரதிபலிப்பு
எவ்வாறெனினும், புலிகளும் இந்த பாதையில் செல்வதற்கான பெரும் வல்லரசுகளின்
நெருக்குவாரத்திற்கு உள்ளாகியுள்ளனர். புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் கடந்த ஞாயிறன்று தனது மாவீரர்
தின உரையில், தான் யுத்த நிறுத்தத்தை பின்பற்றுவதோடு யுத்தத்திற்கு முடிவு காண்பதற்காக "ஒரு
நியாயமான அரசியல் தீர்வுத் திட்டத்தை" முன்வைப்பதற்காக புதிய ஜனாதிபதிக்கு கால அவகாசம் கொடுப்பதாகவும்
பிரகடனம் செய்தார். இடைநிறுத்தப்பட்ட சமாதான முன்னெடுப்புகள் சம்பந்தமாக தனது சொந்த பிரிவினருக்குள்
வளர்ச்சிகண்டுவரும் அதிருப்திகளை கண்ட பிரபாகரன், எதிர்வரும் காலத்தில் எந்தவொரு வாய்ப்பும் வழங்கப்படாவிட்டால்
"அடுத்த வருடம்" புலிகள் "போராட்டத்தை உக்கிரப்படுத்துவார்கள்" என்ற எச்சரிக்கையுடன் தனது உரையை
முடித்தார்.
புலிகளின் பிரதான பேச்சாளரும் பிரபாகரனின் உரைகளில் பலவற்றை எழுதியவர் என
அறியப்பட்டவருமான அன்டன் பாலசிங்கம், லண்டனில் நடந்த ஒரு கூட்டத்தில், உடனடியாக யுத்தத்திற்கு மீண்டும் திரும்பும்
நிலைமை இருக்காது எனத் தெளிவுபடுத்தினார். "எமது தலைவரின் அறிக்கையில், அடுத்த வருடம் வரை கால அவகாசம்
கொடுப்பதாக கூறியதை சிலர் ஒரு மாதகால அவகாசம் என திரிபுபடுத்த முயற்சிக்கின்றனர். அவர் ஒரு மாத கால
எல்லையையோ அல்லது எந்தவொரு தீர்க்கமான நேர அவகாசத்தையோ வழங்கவில்லை. அவர் வெறுமனே புலிகள்
அடுத்த வருடம் வரை கால அவகாசம் கொடுப்பதாகவே குறிப்பிட்டுள்ளார். இது அடுத்த ஆண்டின் முற்பகுதியோ,
நடுப்பகுதியோ அல்லது அதற்குப் பின்னராகவும் இருக்கலாம்."
திங்களன்று வெளிநாட்டுப் பிரதிநிதிகளுக்கு மத்தியில் உரையாற்றிய போது: "என்னுடைய
நடைமுறைசார்ந்த அனுகுமுறையையும் சினேகிதத்தை விரிவுபடுத்தும் வகையில் பேச்சுவார்த்தைக்கான எனது அழைப்பையும்
புரிந்துகொண்ட திரு. பிரபாகரனின் குறிப்புகளை நான் வரவேற்கின்றேன். இந்த சந்தர்ப்பத்தில் பேச்சுவார்த்தைக்காக
திரு. பிரபாகரனுக்கு விடுக்கும் அழைப்பை வலியுறுத்த என்னை அனுமதியுங்கள்... யுத்த நிறுத்த அமுலாக்கத்தைப் மீளாய்வு
செய்வதன் ஊடக வேலைகளை மீண்டும் உடனடியாக தொடங்க எம்மால் முடியும். அதே வேளை நிரந்தரத் தீர்வுக்கு வழிவகுக்கும்
உண்மையான பேச்சுக்களுக்கு நாம் தயாராகின்றோம். இந்த முன்னெடுப்புகள் சமாந்தரமாக மேற்கொள்ளப்பட முடியும்.
இவை வரிசைக் கிரமமாக இடம்பெற வேண்டிய தேவை இருக்காது," என இராஜபக்ஷ பிகடனம் செய்தார்.
இந்த கருத்துக்கள், இராஜபக்ஷ செப்டம்பர் 8 ஜே.வி.பி யுடன் கைச்சாத்திட்ட தேர்தல்
உடன்பாட்டில் இருந்து ஒரு தெளிவான பின்வாங்கலாகும். "தெரிவு செய்யப்படும் ஜனாதிபதி இலங்கையில் தேசியப் பிரச்சினைக்கான
ஒரு இறுதி அரசியல் தீர்வின் அடிப்படையிலேயே புலிகளுடன் பேச்சுவார்த்தைகள் நடத்த உடன்படுவார்," என கூர்மையாக
குறிப்பிடும் அந்த உடன்படிக்கையின் 2ம் பிரிவு, எந்தவொரு இடைக்கால பேச்சுக்களையும் ஒதுக்கித் தள்ளுகிறது.
திங்கட்கிழமை, புலிகளுக்கு "பக்க சார்பானவர்கள்" என ஜே.வி.பி யும் ஜாதிக ஹெல
உறுமயவும் கடுமையாக விமர்சித்த நோர்வே மத்தியஸ்தர்கள் சம்பந்தமாகவும் இராஜபக்ஷ ஒரு மென்மையான நிலைப்பாட்டை
எடுத்தார். அவர் "பரந்த அடிப்படையிலான ஆலோசனைகளின் ஊடாகவும் மற்றும் கடந்த காலத்தில் எமக்கு உதவிய
அனைத்து நேச நாடுகளின் உதவியுடனும் சமாதான முன்னெடுப்புகளை பின்பற்றுவதற்கு தனது ஆழமான விருப்பத்தை" வலியுறுத்தினார்.
"நான் ஜப்பான், அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் நோர்வே ஆகிய இணைத் தலைமை நாடுகளின் அறிவுறுத்தலை
பெறுவதை ஆரம்பிக்குமாறு வெளிநாட்டு அமைச்சருக்கும் சமாதான செயலகத்திற்கும் கட்டளையிட்டுள்ளேன்," என அவர்
மேலும் தெரிவித்தார்.
ஜே.வி.பி யுடனான முன்நாள் ஜனாதிபதி குமாரதுங்கவின் கூட்டணி 15 மாதங்கள்
மாத்திரமே நீடிதிருந்தன. பேச்சுக்களை மீண்டும் ஆரம்பிப்பதை நோக்கிய முன்நடவடிக்கையாக புலிகளுடன் சுனாமியில்
பாதிக்கப்பட்டவர்களுக்கான நிவராணக் கட்டமைப்பை பயன்படுத்திக்கொள்ள முயற்சித்தார். இந்த வரையறுக்கப்பட்ட
நடவடிக்கையை கூட தேசிய இறைமையை "காட்டுக்கொடுக்கும்" செயல் என ஜே.வி.பி யும் ஜாதிக ஹெல உறுமயவும்
கண்டனம் செய்ததை அடுத்து அதுவும் தோல்வியில் முடிந்தது. இராஜபக்ஷ பிரதமாராக இருந்த சிறுபான்மை அரசாங்கம்,
ஜனாதிபதித் தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்னர் அடுத்தடுத்து தடுமாற்றத்திற்குள்ளாகியது.
ஜனாதிபதியாக வெற்றிபெற்றுள்ள இராஜபக்ஷ, குமாரதுங்கவை போல் அதே
முட்டுக்கட்டையை எதிர்கொண்டுள்ளார். அவர் தனது சிறுபான்மை அரசாங்கம் கவிழ்வதை தவிர்ப்பதற்காக ஜே.வி.பி
மற்றும் ஜாதிக ஹெல உறுமயவின் ஆதரவுக்கு தொடர்ந்தும் வேண்டுகோள் விடுக்கின்ற அதேவேளை, சமாதானப்
பேச்சுக்களை மீண்டும் தொடங்கக் கோரும் பெரும் வர்த்தகர்கள், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் மற்றும் பெரும்
வல்லரசுகளையும் அவரால் நிராகரிக்க முடியாது. கயிற்றின் மீது நடக்கும் இராஜபக்ஷவின் நடவடிக்கையின் மூலம் அவர்
குமாரதுங்கவை விட வெற்றி பெறப்போவதில்லை. மற்றும் அது தாமதமின்றி வெகு சீக்கிரத்தில் ஒரு அரசியல்
நெருக்கடியை தோற்றுவிக்கவுள்ளது போல் தெரிகிறது. |