World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : இத்தாலி

Italy's constitutional "reform": the gravedigger of post-war democracy

இத்தாலிய அரசியலமைப்புச் "சீர்திருத்தம்": போருக்குப் பிந்தைய ஜனநாயகத்திற்கு சவக்குழிதோண்டல்

By Marianne Arens and Marc Wells
2 December 2005

Back to screen version

நவம்பர் 16ம் தேதி இத்தாலிய செனட்டினால் நிறைவேற்றப்பட்ட சில்வியோ பெர்லுஸ்கோனியின் அரசியலமைப்பு சீர்திருத்தச் சட்டம், பிரதம மந்திரிக்கு ஜனாதிபதி அதிகாரங்களை கொடுக்கும் வடிவமைப்பில் உள்ளது. அதற்கு சில வாரங்கள் முன்புதான், இத்தாலியின் பெரும் பணக்கார தொழில்முயல்வோரான பெர்லுஸ்கோனி வரவிருக்கும் தேர்தலில் தனக்கு நன்மைகளை அடைவதற்காக தன்னிச்சையாக தேர்தல் விதிகளை மாற்றினார். (See: "Italy: Berlusconi changes electoral law to remain in power")

சட்ட மன்றத்தின் பிரதிநிதிகள் அவையில் அக்டோபர் 20ம் தேதி ஏற்கப்பட்ட அரசியலமைப்பு சீர்திருத்தம் இப்பொழுது செனட்டின் ஒப்புதலுடன் சட்டமாகிவிட்டது. இதனுடைய முக்கியமான பணி அரசாங்கத்தின் செயலாட்சிப் பிரிவை மிகப் பெரிய முறையில் வலுப்படுத்துவதாகும்; அதன்மூலம் அதன் அதிகாரவரம்பை பாராளுமன்றத்தின் சட்டமியற்றும் அதிகாரம், மற்றும் 1948 அரசியலமைப்பின் கீழ் குடியரசின் ஜனாதிபதி பெற்றிருந்த கட்டுப்படுத்்தல் மற்றும் சமநிலைப்படுத்தல் அதிகாரங்கள் ஆகியவற்றின் மீது பெரிய அளவில் விரிவாக்கம் செய்வதாகும். பிரதம மந்திரி இத்தாலிய மக்களால் இனி நேரடியாகவே தேர்ந்தெடுக்கப்படுவார்: இத்தாலிய பாராளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கு அவருக்கு தேவைப்படாது.

இச்சீர்திருத்தம் பிரதம மந்திரிக்கு மந்திரிகளை நியமித்தல், நீக்குதல் அதிகாரத்தையும் பாராளுமன்றத்தை கலைக்கும் அதிகாரத்தையும் கொடுத்துள்ளது. இதைத்தவிர, பிரதம மந்திரி பொது நிர்வாக நிலையை அளித்து, நிர்வாகம் அதைப் பின்பற்றுவதற்கு உத்தரவாதமும் அளிப்பார்.

இந்த நடவடிக்கை மூலம், பெர்லுஸ்கோனி 1948ம் ஆண்டு அரசியலமைப்பின் மிக முக்கியமான கூறுபாடு ஒன்றை அகற்றியுள்ளார். முசோலினியின் கீழ் பாசிச ஆட்சி அனுபவத்திற்கு பின்னர், இத்தாலிய அரசியலமைப்பு மன்றம் முழு உணர்வுடன் பிரதம மந்திரியின் அதிகாரத்தை வரையறுத்திருந்தது. அரசாங்கத்தில் அவ்வலுவலகத்தின் பங்கு primus inter pares (சமமானவர்களில் முதல்வர்) என்று இருந்து, அரசின் ஜனாதிபதியின் கட்டுப்பாட்டின் கீழும், சட்ட மன்றப் பிரிவின் நம்பிக்கைக்கும் உட்பட்டும் இருந்தது.

குடியரசின் ஜனாதிபதி (presidente della Republica) பிரதம மந்திரியை நியமிக்கும் அதிகாரம் உட்பட, சில முடிவான அதிகாரங்களை இப்பொழுது இழக்கிறார். பிரதம மந்திரியின் வெளிப்படையான பரிந்துரை இல்லாமல், குடியரசின் ஜனாதிபதி பாராளுமன்றத்தை கலைத்தல், முன்கூட்டிய தேர்தல்களுக்கு ஏற்பாடு செய்தல் போன்ற அதிகாரங்களையும் இழப்பார்.

பாராளுமன்றம் அமைக்கப்படும் முறையும் கூட மாறுதலுக்கு உட்படும். பிரதிநிதிகள் மன்றம் ஒன்றுதான் முழு சட்டமியற்றும் அதிகாரத்தையும் தக்கவைத்துக் கொண்டுள்ளது; கூட்டாட்சி செனட் மன்றத்தின் அதிகார வரம்பு "இணைவரம்புடைய" சட்டங்களுக்கு மட்டும்தான் பொருந்தும். அதாவது முற்றிலும் மத்திய அரசு அல்லது பிராந்தியங்களுக்கு மட்டும் இயற்றும் அதிகாரமில்லாத துறைகளில்தான் இது சட்டமியற்ற முடியும். ஒரு தேசிய மேல்மன்றம் என்ற நிலையில் இருந்து வட்டாரப் பிரதிநிதித்துவத்தின் கூட்டமைப்பாக, கூட்டாட்சி செனட் மன்றம் என்று வட்டார சட்டமியற்றும் மன்றங்களுடன் ஒன்றாகத் தேர்ந்தெடுக்கப்படும்.

பாராளுமன்றத்தின் செயல்பாடும் மாறுதலுக்கு உட்படும்; முந்தைய முறையில், ஒரு சட்டமானது பிரதிநிதிகள் மன்றம் மற்றும் செனட்டினால் ஏற்கப்பட்ட ஒரே மாதிரியான பொருளுரையை கொண்டிராவிடில் இயற்றப்பட முடியாது (இது உண்மையான இரு மன்ற முறை செயல்பாடுதான்.) இப்பொழுது ஒரு சட்டத்தை பற்றி இரு மன்றங்களும் முழு ஒற்றுமையை கொள்ளாவிடில், பாராளுமன்றத்தின் இரு பிரிவுகளுடைய தலைவர்களும் 30 பிரதிநிதிகள், 30 செனட் உறுப்பினர்கள் அடங்கிய குழு ஒன்றை நியமிப்பர்; அவர்கள் இரண்டு அவைகளும் பின்னர் ஏற்பதற்காக புதிய, விரிவான சட்டத்தின் பொருளுரையை வழங்குவர்.

பாராளுமன்றத்தை கலைக்கும் அதிகாரம் உண்டு என்று வந்துள்ள பிரதம மந்திரியின் விரிவுபடுத்தப்பட்ட அதிகாரத்துடன் இணைத்துப் பார்க்கும்போது, இந்த புதிய வழிவகை அரசாங்கத்தின் தலைவர் பாராளுமன்றத்தை கட்டாயப்படுத்தி நடவடிக்கைகளை செய்ய முடியும் என்று உதவுகிறது.

மேல்மன்றமான செனட்டும் பிரதம மந்திரிக்கு எதிராகப் போடும் நம்பிக்கையில்லா தீர்மான வாக்குரிமையை இழந்துள்ளது. இந்த உரிமை இனி பிரதிநிதிகள் மன்றத்திடம்தான் உறைந்திருக்கும். மன்றத்தின் அறுதிப்பெரும்பான்மை இதற்குத் தேவை என்று வந்துள்ளது. புதிதாக இயற்றப்பட்ட தேர்தல் சட்டத்தில் கூடுதலான வெற்றியை கொண்டுள்ள கட்சிக் கூட்டணி இயல்பாகவே மன்றத்தில் அறுதிப் பெரும்பான்மையை பெற்றிருக்கும் ஆதலால், இப்படி நேரிடக் கூடிய நிகழ்ச்சி வெறும் ஒப்புக்காகக் கூறப்படுவதாகும்.

வலுவான வட்டாரத் தன்னாட்சி

புதிய அரசியலமைப்பில் உள்ள இரண்டாம் முக்கிய கூறுபாடு "அதிகாரம் ஒதுக்கித் தரப்பட்டுள்ளது" என்று அழைக்கப்படுவதாகும். கூடுதலான அதிகாரம் இத்தாலியின் 20 வட்டாரப் பகுதிகளுக்கு கொடுக்கப்பட்டுள்ளது; இப்பொழுது அவை சுகாதார முறை, பள்ளிகள், வட்டார, உள்ளூர் போலீஸ் ஆகிய துறைகளில் தனித்த சட்டமியற்றும் அதிகாரத்தை பெற்றுள்ளன. தொழிலாளர்கள் கல்வி, சுகாதாரப் பாதுகாப்பு உரிமைகள் மீது இது கடுமையான தாக்குதலை தொடுத்துள்ளது.

பெர்லுஸ்கோனி அதன் தொடர்ந்த ஆதரவை தக்க வைத்துக் கொள்ளுவதற்காக Lega Nord (வடக்கு கழகம்) உடன் கொண்டுள்ள உடன்பாட்டின் விளைவுதான் இது. 1994ம் ஆண்டு Lega Nord முதல் பெர்லுஸ்கோனி அரசாங்கத்திற்கு கொடுத்திருந்த ஆதரவில் இருந்து விலகிக் கொண்டது; அதன் விளைவாக அரசாங்கம் கவிழ்ந்தது. Lega Nord இன் முக்கிய கோரிக்கை, வடக்கிலுள்ள தொழிற்துறை முதலாளிகளின் விருப்பமான வறிய தெற்கிற்கு பயன்படுத்தக் கூடிய தேசிய வரிவிதிப்பு முறையை தவிர்ப்பதைப் பிரதிபலிக்கும், அதிகாரப் பரவலாக்கல் ஆகும். இந்த அடுக்கின் செல்வத்திற்கு ஆதாரம் தொழில்துறை தொழிலாள வர்க்கம் ஆகும்; இதில் பெரும்பாலானவர்கள் தெற்கில் இருந்து வருபவர்கள் ஆவர்.

இறுதிப் பகுப்பாய்வில், அதிகாரத்தை கீழே கொடுத்தல் என்பது கல்வி, சுகாதாரம் போன்ற முழுமையான துறைகளை தனியார் மயமாக்கும் நோக்கத்தை உடைய ஒரு மூலோபாயத்தின் ஆரம்ப கட்டமாக உள்ளது; இரண்டாம் உலகப்போருக்கு பின் இவை அனைத்துக் குடிமக்களுக்கும் உறுதியளிக்கப்பட்டிருந்தவையாகும். இது பல தசாப்தங்கள் இத்தாலிய தொழிலாள வர்க்கம் பாடுபட்டுப் பெற்ற வெற்றிகளின்மீதான நேரடித் தாக்குதல் ஆகும்.

ஒரு பிளவுற்ற அரசாங்கம்

சர்வாதிகாரத்தை திறம்பட அவருக்குக் கொடுக்கும் பெர்லுஸ்கோனியின் அரசியலமைப்பு சீர்திருத்தம், நடைமுறையில் அரசாங்கத்தின் மீது அவர் கொண்டுள்ள பிடியை தக்கவைத்துக் கொள்ளும் முழு முயற்சியின் வெளிப்படையான அடையாளம் ஆகும். ஆனால் அதிகாரப் பரவலாக்கலின் கூறுபாடுகள் சில அவருடைய Casa delle Liberta (சுதந்திரங்களின் மன்றம்) என்னும் அரசாங்கப் பெரும்பான்மைக்குள்ளேயே ஆழ்ந்த பிளவுகளை ஏற்படுத்தியுள்ளது

இதற்கு மிக வெளிப்படையான உதாரணம், தற்போதைய அரசாங்கத்தின் ஒரு பகுதியான, Gianfranco Fini உடைய புதிய பாசிச Alleanza Nazionale (AN - National Alliance) ஆகும். பிரதம மந்திரியின் கைகளில் அதிகாரக்குவிப்பிற்கு இது ஆதரவு கொடுக்கிறது; ஆனால் வறிய தெற்குப் பகுதியில் தன்னுடைய அரசியல் தளத்தை இழக்கக் கூடும் என்பதால் "அதிகாரம் பிரித்துக் கொடுக்கப்படுவதை" கடுமையாய் விமர்சிக்கிறது. பீனியும் மற்ற AN அரசியல்வாதிகளும் ஆறு மாதங்களுக்கு முன்பு குறுகிய காலத்திற்கு அரசாங்கத்தை விட்டு விலகியிருந்தனர். செனட் மன்றத்தின் துணைத் தலவரும் AN உடைய நிறுவன உறுப்பினருமான Domenico Fisichella அதிகாரத்தை மாற்றிக்கொடுக்கும் கூட்டாட்சி நடவடிக்கைக்கு எதிராக தன்னுடைய எதிர்ப்பை தெளிவாக வெளிப்படுத்தும் வகையில் கட்சியில் இருந்து தனது விலகிக்கொள்ளலை அறிவித்துள்ளார்.

நேரடியாக "அதிகாரப் பரவலை" AN தடுக்க முடியாததால், அது புதிய சட்டத்தில், "தேசிய நலன்கள்" என்ற விதியை அறிமுகப்படுத்தியுள்ளது; இதன்படி அரசாங்கம் ஒரு வட்டாரச் சட்டத்தை, "நாட்டின் தேசிய நலன்களுக்கு எதிரானது" என்று தடுத்து நிறுத்திவிட முடியும்.

முதுகெலும்பு இல்லாத எதிர்க்கட்சிகள்

முன்னாள் ஐரோப்பிய ஆணையாளரும், எதிர்க்கட்சியின் தலைவருமான Romano Prodi "சுதந்திரங்களின் இல்லம், பாராளுமன்றத்தின் மீது பிரதம மந்திரியின் ஆபத்தான சர்வாதிகாரத்தை நோக்கி ஆதரவாகச் சென்றிருப்பது" பற்றி புலம்பியுள்ளார். ஆனால், Catholic Margherita கட்சி, பசுமைக் கட்சி, இடது ஜனநாயகவாதிகள் என்று மட்டும் இல்லாமல், எதிர்க்கட்சித் தொகுப்பில் Rifondazione Comunista (Communist Refoundation) என்ற கட்சியும் தன்னுடைய இயல்பின்படி அதிக செயலற்ற நிலையில்தான் உள்ளது. வாக்கெடுப்பு வேண்டும் என்று இது அழைப்பு விடுத்தபோதிலும், பெர்லுஸ்கோனிக்கு எதிராக உண்மையான அரசியல் பிரச்சாரம் எதையும் அது மேற்கொள்ளவில்லை.

மக்கள் வாக்கெடுப்பு நடத்துவதற்கு தேசிய சட்ட மன்றத்தின் இரு பிரிவுகளில் ஏதேனும் ஒன்றிலாவது ஐந்தில் ஒரு பங்கு உறுப்பினர்கள் ஆதரவு அல்லது 500,000 வாக்காளர்களுடைய ஆதரவு வேண்டும். இதை திரட்டுவதற்கு எதிர்க்கட்சிக்கு மூன்று மாதம் தேவைப்படும். மத்திய வாக்கெடுப்பு அமைப்பு 30 நாட்களுக்குள் இது நெறியானது என்று கூறும் கருத்தை வெளியிட்ட பின்னர் ஜனாதிபதி வாக்கெடுப்பிற்கு அழைப்பு விடுவதற்கு 60 நாட்கள் எடுத்துக் கொள்ளலாம். இதன் உண்மை விளைவு என்ற வென்றால் கருத்துவாக்கெடுப்பு நடத்துவதற்கான முடிவு ஏப்ரல் தேர்தல்கள் முடிந்த பின்னர்தான் எடுக்கப்பட முடியும்.

ஆனால் எந்த எதிர்க் கட்சி அரசியல்வாதியும் தொழிலாள வர்க்கத்திற்கு அரசியில்ரீதியாக முறையீடு செய்தல் ஏன் சாத்தியமில்லை என்பதற்கு விளக்கம் கொடுக்கவில்லை. இத்தாலிய தொழிலாளர்கள் பெருகிய முறையில் தீவிரப்போக்கை அடைந்துள்ளனர். தொடர்ச்சியான வேலை நிறுத்தங்கள், எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் ஆகியவை சமூக நலச் செலவின குறைப்புக்களுக்காகவும், இத்தாலியப் படைகள் ஈராக்கில் இருந்து வெளியேறவேண்டும் என்பதற்காகவும் நடைபெற்றுள்ளன. உதாரணமாக கடந்த வெள்ளி, நவம்பர் 25 அன்று பெர்லுஸ்கோனியின் பொருளாதாரக் கொள்கைக்கு எதிரான ஆறாவது பொதுவேலைநிறுத்தம் இத்தாலி முழுவதும் நடைபெற்றது.

ஆறு மாதங்களுக்கு முன்பு, Olive Tree கூட்டணி என்னும் எதிர்க்கட்சி வட்டாரத் தேர்தல்களில் 13 வட்டாரங்களில் 11ல் வெற்றியை கண்டது. இன்று அனைத்து கருத்துக் கணிப்புக்களும் அடுத்த ஏப்ரலில் வரவிருக்கும் பாராளுமன்றத் தேர்தல்களில் பெர்லுஸ்கோனிக்கு தோல்வி என்று கூறியுள்ளன.

ஆனால் இத்தாலிய தொழிலாளர்கள் ஒன்றுபடுவதை அரசாங்கம் போலவே எதிர்க்கட்சிகளும் அச்சத்துடன் காண்கின்றன. பெர்லுஸ்கோனியின் கொள்கைகள் பெரு வணிக நலன்களின் ஆணைகளுக்கு ஏற்ப இருப்பதைப் போலவேதான் ரோமனோவ் பிரோடின் கொள்கையும் உள்ளது. பெர்லுஸ்கோனியுடன் கொண்டுள்ள இவருடைய கருத்து வேறுபாடு தந்திரோபாயம் சார்ந்ததே அன்றி கொள்கை ரீதியானது அல்ல. இவருடைய புதிய தாராளவாத பொருளாதாரக் கொள்கை ஜேர்மனியில் அங்கேலா மேர்க்கல், கிரேட் பிரிட்டனில் டோனி பிளேயர் ஆகியோர் பின்பற்றுவதை ஒட்டித்தான் உள்ளது.

பத்து வருஷங்களுக்கு முன்பு ஒரு மையவாத-இடது கூட்டணிக்கு Prodi தலைமைதாங்கியபோது, அவரே அரசியலமைப்பில் அதிகாரப் பிரித்தல் கூறுபாடுகளை கொண்டுவந்து, பிரதம மந்திரிக்கு கூடுதலான அதிகாரங்கள் வேண்டும் என்று கோரியிருந்தார். 1990களின் நடுப்பகுதியில் பிரோடிதான் IRI (Institute for the Industrial Reconstruction) ஐ தனியார்மயமாக்கியதில் இருந்து தொடக்கி, பொதுத் துறைகளை முற்றிலும் தகர்க்கும் முயற்சியில் ஈடுபட்டார்.

"எதிர்க்கட்சி" எனக் கூறிக்கொள்பவைகளின் தந்திரோபாய சூழ்ச்சிகளுக்கும் உண்மையான தொழிலாளர்களுடைய போராட்டத்திற்கும் இடையே உள்ள பெரிய பிளவு தொழிலாள வர்க்கத்திற்கு ஒரு புதிய கட்சி தேவை என்பதை தெளிவாக எடுத்துக் கூறுகிறது; அந்த அமைப்பு சர்வதேச சோசலிசத்தை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும். நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவும் உலக சோசலிச வலைத் தளமும் தான் அத்தகைய முன்னோக்கை வழங்க முடியும்.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved