:
இலங்கை
Behind the LTTE's boycott of the Sri Lankan
election
இலங்கை தேர்தலை தமிழீழ விடுதலைப் புலிகள் பகிஷ்கரித்ததன் பின்னணியில்
By M. Vasanthan and S. Jayanth
26 November 2005
Back to screen
version
தமிழீழ விடுதலைப் புலிகள் (புலிகள்), இலங்கையில் நவம்பர் 17 ஜனாதிபதித் தேர்தல்
நடைபெற்றதை அடுத்து, தேர்தல் பகிஷ்கரிப்பை தாம் ஏற்பாடு செய்யவில்லை என்ற ஒரு மறுப்பு அறிக்கையை வெளியிடத்
தள்ளப்பட்டுள்ளனர். புலிகளின் அரசியல்துறை பொறுப்பாளர் சு.ப. தமிழ்செல்வன், தீவின் வடக்கு மற்றும் கிழக்கில் வாக்களிப்பு
வீதம் குறைவாக இருந்தமை "இலங்கைத் தலைவர்கள் பற்றிய தமிழ் மக்களின் உணர்வின் வெளிப்பாடாகும்" எனவும் அது
தமது அமைப்பால் தூண்டிவிடப்பட்டதல்லை எனவும், கடந்த வியாழக் கிழமை தமிழ்நெட் இணையத்திற்குத் தெரிவித்துள்ளார்.
தமிழ்செல்வனின் கருத்துக்கள், கடந்த வாரத் தேர்தலை அடுத்து அமெரிக்கா, ஐரோப்பிய
ஒன்றியம், ஜப்பான் மற்றும் இந்தியாவும் வெளியிட்ட பகிரங்க விமர்சனங்களின் பின்னரே வெளிவந்துள்ளது. கடந்த திங்கழன்று
அமெரிக்க அரச செயலகம் பிரகடனப்படுத்தியதாவது: "தமிழீழ விடுதலைப் புலிகளின் தெளிவான அச்சுறுத்தல் பிரச்சாரத்தின்
காரணமாக, தீவின் கிழக்கு மற்றும் வடக்குப் பகுதிகளில் உள்ள தமிழ் வாக்காளர்களில் கணிசமான அளவினர் வாக்களிக்காததையிட்டு
கவலையடைகின்றது."
"சமாதான முன்னெடுப்புகளும்" மற்றும் 2002ல் கைச்சாத்திடப்பட்ட புலிகளுக்கும் இலங்கை
இராணுவத்திற்கும் இடையிலான யுத்த நிறுத்தமும் "பலப்படுத்தப்பட" வேண்டும் எனவும் அமெரிக்கா சுட்டிக்காட்டியுள்ளது.
இந்தியத் துணைக்கண்டத்தில் வளர்ச்சிகண்டுவரும் அமெரிக்காவின் பொருளாதார மற்றும் மூலோபாய நலன்களுக்கு குறுக்கே
இருந்து அச்சுறுத்தும் தீவின் 20 வருடகால உள்நாட்டு யுத்தத்திற்கு முடிவு காண வேண்டுமென வாஷிங்டனும் ஏனைய பெரும்
வல்லரசுகளும் நெருக்கிக்கொண்டிருக்கின்றன.
ஆயினும், 2003ல் பேச்சுவார்த்தைகள் இடைநிறுத்தப்பட்டதுடன், கொழும்பில் ஆட்சிக்கு
வந்த அரசாங்கங்கள், புலிகளுக்கு எதிராக கடுமையான நிலைப்பாட்டை எடுக்கக் கோரும் சிங்களத் தீவிரவாதிகளின்
அழுத்தத்திற்குள்ளாகியது. சிங்களப் பேரினவாத மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) மற்றும் ஜாதிக ஹெல உறுமயவின்
பக்கபலத்துடன், விடுதலைப் புலிகளுக்கு விடுக்கும் ஒரு தொகை இறுதி நிபந்தனைகளுக்கு சமமான ஒரு வேலைத் திட்டத்தின்
அடிப்படையில் மஹிந்த இராஜபக்ஷ ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
தமிழ்செல்வனின் அறிக்கையானது புலிகள் எதிர்கொண்டுள்ள இக்கட்டுநிலையை
பிரதிபலிக்கின்றது. உத்தியோகபூர்வ தேர்தல் பகிஷ்கரிப்பு பெரும் வல்லரசுகளின் பகைமையை தூண்டும் என்பதையிட்டு
மிகவும் கவனமாக இருந்த புலிகள், தமிழர்களுக்கு வாக்களிக்க முடியும் என பகிரங்கமாக பிரகடனப்படுத்தியது. அதே
சமயம், புலிகளுக்குச் சார்பான தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன்: "எதிர்வரும் இலங்கை
ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் அக்கறை காட்டுவது அவர்களுக்கு நன்மை தரும் என நாம் நம்பவில்லை," என
ஊடகங்களுக்கு தெரிவித்தார்.
தமிழ் மக்களின் "ஏக பிரதிநிதிகள்" என போலியாகக் கூறிக்கொள்ளும் விடுதலைப் புலிகளை
பொறுத்தளவில், இந்த அறிக்கையானது பகிஷ்கரிப்பு சமமான ஒரு மூடிமறைக்கப்பட்ட பிரகடனமாகும். விடுதலைப்
புலிகளின் தலைமைத்துவம், நவம்பர் 17 ஐ "ஒரு துக்க தினமாக" பிரகடனம் செய்ததன் மூலம் இந்தச் செய்தியை
மேலும் வலுப்படுத்தியது. வடக்கு கிழக்கில் வாக்களித்தோர் தொகை நாடகபாணியில் வீழ்ச்சியடைந்துள்ளது. வடக்கின்
யாழ்ப்பாண மாவட்டத்தில் 1.2 வீதமான வாக்குகளே பதிவுசெய்யப்பட்டிருந்தன. நாடு முழுவதிலும்
பதிவுசெய்யப்பட்டிருந்த 75 வீதமான வாக்குகளுடன் ஒப்பிடுகையில், கிழக்கு மாவட்டங்களில் பொதுவில் 50 வீதத்திற்கும்
குறைவாகவே இருந்தது.
வாஷிங்டனின் பிரதிபலிப்பு, சமாதான முன்னெடுப்புகளை மீண்டும் ஆரம்பிக்க பரிந்துரைத்த
ஐக்கிய தேசியக் கட்சியின் (ஐ.தே.க) வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்க அரிதாக தோற்கடிக்கப்பட்டுள்ளார்
என்பதையிட்டு அதிருப்தியை வெளியிட்டது. வடக்கு கிழக்கில் அதிகளவு வாக்களிப்பு இடம்பெற்றிருந்தால் அது ஐ.தே.க க்கு
சாதகமானதாகவே இருந்திருக்கும் என்ற கருத்து பரந்தளவில் ஏற்றுக்கொள்ளப்பட்டதாகவே இருந்தது. தேர்தலுக்கு
இரண்டு நாட்களுக்கு முன்னதாக முன்னெப்போதும் இல்லாத நகர்வை மேற்கொண்ட அமெரிக்க செனட் சபை, கட்சிகள்
"தீவிரவாதத்தை" நிராகரிக்க வேண்டுமெனவும் "பேச்சுவார்த்தை மூலமான முன்னெடுப்புகளுக்கு அர்ப்பணிக்க வேண்டும்"
எனவும் அழைப்பு விடுத்து இரு கட்சிகளும் சார்ந்த ஒரு பிரேரணையை நிறைவேற்றியது.
புலிகளின் பகிஷ்கரிப்பு கொழும்பு ஊடகங்களில் ஆர்ப்பாட்டமான முறையில்
கண்டனத்திற்குள்ளாகியது. புலிகள் ஐ.தே.க யை ஆதரிக்காதது ஏன் மற்றும் புலிகளின் நடவடிக்கைகள் அவர்கள்
யுத்தத்திற்கு தயாராகின்றார்கள் என்பதையா சமிக்ஞை செய்கின்றன என்பது பற்றி நீண்ட அனுமானங்களை ஆய்வாளர்கள்
எழுதியிருந்தனர். புலிகள் தமது இராணுவ நிலைமையை பெரிதாக்கிக்கொள்ள யுத்த நிறுத்தத்தை சுரண்டிக்கொண்டனர்
என்பதே ஜே.வி.பி மற்றும் ஜாதிக ஹெல உறுமய போன்ற சிங்களத் தீவிரவாதிகளின் நிலையான கருத்தாக இருந்தது.
புலிகள் தமது பகிஷ்கரிப்பை திணிப்பதற்காக குண்டர் படைகளையும் பயமுறுத்தல்களையும்
பயன்படுத்தினார்கள் என்பதில் சந்தேகமே கிடையாது. தேர்தலுக்கு ஒரு வாரத்திற்கு முன்னதாக அதன் முன்னணி
அமைப்புக்கள் வாக்காளர்களை வெளிப்படையாக அச்சுறுத்தின. மக்கள் படை ஒட்டியிருந்த சுவரொட்டிகளில்,
வாக்களிப்பவர்கள் "தக்க பதிலடியை" எதிர்நோக்க வேண்டியிருக்கும் என பிரகடனம் செய்தது. தேர்தலுக்கு இரண்டு
நாட்களுக்கு முன்னதாக, புலிகளுக்கு சார்பான தமிழீழ மாணவர் பேரவை விடுத்த அறிக்கையில், தேர்தல் தினத்தன்று
மக்கள் வீட்டுக்குள் இருக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டிருந்தது.
தேர்தலுக்கு முதல்நாள், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி (ஈ.பி.டி.பி) அலுவலகங்கள் மீது
கைக்குண்டுத் தாக்குதல்கள் நடத்தப்பட்டிருந்தன. இந்தக் கட்சி இராணுவத்துடன் துணைப்படையாக செயற்படுவதோடு
இராஜபக்ஷவிற்கு சார்பாக பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தது. தேர்தல் தினத்தன்று உலக சோசலிச வலைத் தள
நிருபர்கள் தேர்தல் அலுவலர்களை சந்தித்த போது, வாக்காளர்களை அச்சுறுத்துவதற்காக புலிகள் தமது
காரியாளர்களை வாக்களிப்பு நிலையங்களுக்குள்ளும் நுளைத்திருந்தனர் என்பதை அவர்களும் உறுதிசெய்தனர்.
ஆயினும், இத்தகைய நடவடிக்கைகள் பலம் அன்றி பலவீனத்தின் அறிகுறிகளேயாகும். யுத்த
நிறுத்தமானது புலிகள் எதிர்கொண்டிருந்த அரசியல் பிரச்சினைகளை மேலும் குவித்துள்ளது. 2003ல் சமாதான பேச்சுக்கள்
இடைநிறுத்தப்படுவதற்கு முன்னதாக, புலிகள் தனியான தமிழீழ அரசுக்கான தமது நீண்ட கால கோரிக்கையை
பகிரங்கமாக கைவிட்டதுடன் இலங்கை அரசாங்கத்துடன் ஒரு தீர்மானத்தை எட்டுவதற்கு உடன்பட்டது.
இதற்குப் பிரதியுபகாரமாக இலங்கை அரசாங்கம் சலுகைகளை வழங்கவில்லை. எல்லாவற்றுக்கும்
மேலாக, யுத்த நிறுத்த உடன்படிக்கை வடக்கு கிழக்கில் வாழும் சாதாரண உழைக்கும் மக்களுக்கு குறிப்பிடத்தக்க நன்மைகள்
எதையும் பெற்றுக் கொடுக்காததோடு புலிகள் மீதும் அதே போல் கொழும்பு மீதும் அதிகரித்துக்கொண்டிருக்கும்
பகைமைக்கும் எதிர்ப்புக்கும் வழிவகுத்தது. இந்த உணர்வுகள் புலிகளின் சொந்தப் பிரிவுகளுக்குள்ளேயே அதிருப்தியை தவிர்க்க
முடியாமல் முன்வைத்தது --ஒரு வெளிப்படையான பெரும் பிளவினால், புலிகள் கிழக்கில் அதிகளவிலான போராளிகளை இழந்துள்ளனர்.
யுத்த நிறுத்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டு மூன்று வருடங்கள் கடந்த பின்னரும்,
300,000 ற்கும் மேற்பட்ட தமிழர்கள் இன்னமும் அகதி முகாங்களில் வாழ்கின்றனர் அல்லது பல இடங்களிலும்
இடம்பெயர்ந்துள்ளனர். வீடுகளைக் கைப்பற்றி அதில் உயர் பாதுகாப்பு வலயங்களை பேணிவரும் இராணுவம் அவற்றை கைவிடாமல்
உறுதியாகப் பற்றிக்கொண்டுள்ளது. இந்த உயர் பாதுகாப்பு வலயங்கள் யாழ்ப்பாண குடாநாட்டில் பெரும் பகுதியை சுற்றி
வளைத்துக்கொண்டுள்ளன. தீவில் வேலையற்றோர் வீதம் வடக்கு கிழக்கிலேயே மிக உயர்ந்த மட்டத்தில் உள்ளது. புலிகள்
அமுல்படுத்தியுள்ள வரி வெட்டுக்கள் சமூக நெருக்கடியை மோசமாக்கியுள்ளதோடு, புலிகளை மக்கள் மத்தியில் மேலும்
மதிப்பிழக்கச் செய்துள்ளன.
இதன் பெறுபேறாக, அரசியல்ரீதியில் பேசும் விடயத்தில் புலிகள் சூனியப் பிரதேசத்திலேயே
உள்ளனர். புலிகளால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள யுத்த நிறுத்த உடன்படிக்கையால் மக்கள் ஆதரவு சரிந்து
போய்க்கொண்டிருக்கின்றதே அன்றி, பேச்சுவார்த்தைகள் அல்லது இறுதித் தீர்வுக்கான உடனடி வாய்ப்புகள் எவையும் தென்படவில்லை.
பெரும் வல்லரசுகளை ஒரு ஓரத்தில் வைக்க முயற்சித்துக்கொண்டிருக்கும் அதே வேளை, புலிகள் குறிப்பாக புதிய
விட்டுக்கொடுப்புக்களை வழங்கக் கோரும் வாஷிங்டனின் அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளனர். இது புலிகளின் நிலைமையை
மேலும் பலவீனப்படுத்தவே செய்யும்.
புலிகளின் பகிஷ்கரிப்பு, சமாதான முன்னெடுப்புகள் பற்றிய அதிருப்தியையும் மற்றும்
தமிழர்கள் மத்தியில் வளர்ச்சியடைந்துகொண்டிருக்கும் எதிர்ப்பு பற்றிய கவலையையும் பிரதிபலிக்கின்றது. இந்த
ஆழமடைந்துவரும் அரசியல் நெருக்கடிக்கு பதிலளிக்கும் வகையில், கொழும்பில் உள்ள பிரதான கட்சிகளைப் போலவே,
புலிகளும் தமது நிலைமையை தூக்கி நிறுத்துவதற்காக இனவாத அரசியலை கிளறிவிடுகின்றனர். எடுத்துக்காட்டாக, புலிகளின்
கடற்படைத் தளபதி சூசை, "பேச்சுவார்த்தை நடத்தி எல்லாப் பிரச்சினைகளையும் தீர்ப்பதற்கு" "சிங்களத்
தலைவர்கள்" முன்வருகிறார்கள் இல்லை என குற்றஞ்சாட்டினார். அதே முறையில் "சிங்கள மக்களையும்" குற்றஞ்சாட்டிய
அவர், "கடந்த நான்கு வருடங்களாக எமது பிரச்சினைகளை முற்றாக மறந்துவிட்டார்கள், கடந்த காலத்தை மறந்து
விட்டு அவர்கள் இனவாதத்தை பலப்படுத்த இன்று வாக்களித்துள்ளார்கள்," என்று குறிப்பிட்டார்.
இராஜபக்ஷ தேர்வு செய்யப்பட்டிருப்பதும் மற்றும் புலிகளின் நிலைப்பாடு
கடினமாக்கப்படுவதும் நிலைமை யுத்தத்தை நோக்கி சரிந்து செல்லும் அபாயத்தை உக்கிரப்படுத்தியுள்ளது. சோசலிச
சமத்துவக் கட்சியும் அதன் ஜனாதிபதி வேட்பாளர் விஜே டயஸும் எல்லா வகையிலுமான பேரினவாத அரசியலுக்கும்
எதிராக --புலிகளினது அல்லது கொழும்பு அரசியல் ஸ்தாபனத்தினது-- பிரச்சாரம் செய்ததோடு, யுத்தத்திற்கும் சமூக
சமத்துவமின்மைக்கும் எதிராக ஒரு சோசலிச தீர்வின் அடிப்படையில் உழைக்கும் மக்களின் சுயாதீனமான வர்க்க
நலன்களுக்காக போராட சிங்களத் தமிழ் தொழிலாளர்களின் ஐக்கியத்திற்காக அழைப்பு விடுத்தனர். |