World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :  மத்திய கிழக்கு : ஈராக்

Despite US pressure, no agreement reached on Iraqi constitution

அமெரிக்க அழுத்தங்கள் இருப்பினும், ஈராக் அரசியலமைப்பு தொடர்பாக எந்த உடன்பாடும் அடையப்படவில்லை

By James Cogan
16 August 2005

Back to screen version

ஆறு வாரங்களாக நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் மற்றும் வாஷிங்டனிலிருந்து வந்த தீவிர அழுத்தங்களுக்கு பின்னர் ஈராக்கை அமெரிக்கா ஆக்கிரமிப்பதை ஆதரிக்கும் ஈராக் அரசியல் கன்னைகளுக்கிடையே புஷ் நிர்வாகம் குறித்துள்ள ஆகஸ்ட் 15 காலக்கெடுவிற்குள் புதியதொரு அரசியலமைப்பை எழுதுவதற்கு உடன்பாடு காணத்தவறிவிட்டன. அதற்கு மாறாக நள்ளிரவிற்கு 20 நிமிடங்களுக்கு முன்னர், பாராளுமன்றம் ஆவணத்தை வரைந்துகொாண்டிருக்கும் குழுவிற்கு ஆகஸ்ட் 22 வரை நகலை இறுதியாக்குமாறு வாக்களித்தது.

ஒட்டுமொத்த நிகழ்ச்சிபோக்கின் சட்ட விரோத தன்மையையும், முற்றிலும் ஜனநாயகத்திற்கு விரோதமான போக்கையும் எடுத்துக்காட்டுவதாக இந்த தாமதத்திற்கான காரணங்கள் அமைந்திருக்கின்றன. ஆயிரக்கணக்கான அமெரிக்க துருப்புக்களின் பாதுகாப்பின் கீழ் மற்றும் ஈராக் மக்களிடமிருந்து முற்றிலும் தனிமைப்பட்டுவிட்ட நிலையிலுள்ள ஈராக்கிய ஆளும் வர்க்க தட்டுகள் தங்களது நாட்டை காலனித்துவத்துக்குள்ளாக்கியவர்களுடன் ஒத்துழைக்கத் தயாராக இருப்பதுடன், அந்தப் போர் அழிவின் ஒரு பகுதியை பெறுவதற்கு அதற்கான உரிமை கொண்டாடுவதற்கும் முயற்சிகளை மேற்கொள்வதற்கும், வகுப்புவாதத்தையும், குறுங்குழுவாதத்தையும் பயன்படுத்தி வருகின்றன.

ஒரு பலவீனமான மத்திய அரசாங்கம் மற்றும் ஒரு சக்திவாய்ந்த தன்னாட்சி பிராந்தியங்கள் அடங்கிய ஒரு கூட்டாட்சி அமைப்பாக ஈராக் எதிர்கால அரசு அமைய வேண்டும் என்று குர்திஸ் தேசியவாதிகளும், பிரதான ஷியிட் அடிப்படைவாத அமைப்புக்கள் விடுத்த கோரிக்கையையும், ஏற்க அரபு சுன்னி நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஏற்றுக்கொள்ள மறுத்ததால் ஆகஸ்ட் 15 வாக்கில் ஒரு உடன்பாடு காண முடியாத நிலை ஏற்பட்டது.

தங்களது சொந்த பிராந்திய அரசாங்கமும் ஆயுதப்படைகளை கொண்டு வடக்கு ஈராக்கிலுள்ள மூன்று குர்திஸ் மாகாணங்களும், ஏற்கனவே ஒரு தன்னாட்சி பிராந்தியமாக இயங்கி வருகின்றன. கிர்க்குக் நகரத்தை சுற்றியுள்ள எண்ணெய் வளம் மிக்க பகுதியையும் தங்களது எல்லைக்குள் சேர்த்துக்கொள்கின்ற அளவிற்கு அரசியலமைப்பு விரிவுபடுத்தப்பட வேண்டும் என்று குர்திஸ் தலைமை கோரி வருகிறது. ஒரு குறிப்பிட்ட புள்ளியில், குர்திஸ் பிரதிநிதிகள் குர்திஸ் பிராந்தியம் 8 ஆண்டுகாலத்தில் ஈராக்கிலிருந்து பிரிந்து செல்வதற்கு அரசியலமைப்பில் திட்டவட்டமாக வகை செய்யப்பட வேண்டும் என்று முன்மொழிந்தது.

ஈராக்கின் தென்பகுதியிலுள்ள பெரும்பாலும் ஷியாக்கள் நிறைந்த நாட்டின் மொத்த எண்ணெய் தொழிற்துறையில் 50 சதவீதம் அடங்கியிருக்கும் ஒன்பது மாநிலங்களை உள்ளடக்கிய ஒரு தன்னாட்சி பிராந்தியத்தை உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை ஈராக் இஸ்லாமிய புரட்சிக்கான ஷியைட்டுக்களின் சுப்ரீம் கவுன்சில் (SCIRI) கோரியது. ஷியைட் மற்றும் குர்திஸ் பிரிவுகள் இரண்டுமே எண்ணெய் தொழிற்துறையில் கிடைக்கும் வருவாயில் மிக பெரும்பகுதி தங்களது பிராந்திய அரசாங்கங்களிடம் இருக்க வேண்டுமென்று கோரின.

கூட்டாட்சி முறையை ஏற்றுக்கொண்ட பிரதான ஷியைட் மதகுருமாரான அலி அல்-சிஸ்தானி தொடர்ந்து ஈராக் மீது அமெரிக்கா படையெடுத்ததை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு ஷியைட் செல்வந்தத்தட்டினருக்கும், மத குருமார்களுக்கும் அரசியல் அதிகாரமும் பெரும் செல்வம் கிடைக்கவேண்டும் என்று இடைவிடாது வாதிட்டு வருகின்றார். அத்துடன் தன்னாட்சியுரிமையும், வேண்டுமென்று வற்புறுத்தினார். SCIRI ம் தாவாக்கட்சியும் ஷியைட் மதகுருமார்களுக்கு ''ஒரு தலைமைவகிக்கும் பங்கு'' வழங்குவதாக ஈராக் அரசியலமைப்பு இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டன மற்றும் நாட்டின் சட்ட நெறிமுறைகளுக்கு இஸ்லாம் ''முக்கிய மூலாதாரமாக'' விளங்கவேண்டுமென்று வலியுறுத்தின. அத்தகையதொரு நடவடிக்கை ஈரான் பாணியில் மத நீதிமன்றங்களை அமைக்க வகை செய்யும்---- அதன் மூலம் சிஸ்தானிக்கும் ஷியைட் மத ஸ்தாபனத்திற்கும் சலுகைகளுக்கான மற்றொரு மூலாதாரம் கிடைத்துவிடும்.

நாடு சுதந்திரம் பெற்றது முதல் ஈராக் அரசிற்கு உயிர்நாடி ஆதரவாக அமைந்திருந்த சுன்னி அரபுக் குழுவின் பிரதிநிதிகள், கூட்டாட்சிற்காக அழைப்புவிடுக்கப்பட்டதை நாடு சிதறுவதற்கு வழிவகுத்துவிடும் என்று கண்டித்தனர். அரசியலமைப்பு குழுவில் இடம்பெற்றுள்ள சுன்னி பிரமுகர்களின் தலைவரான ஷாலே முத்தலக் ''நாம் கூட்டாட்சியை ஏற்றுக்கொண்டோம் என்றால், நாடு முடிவுகட்டப்பட்டுவிடும்'' என்று அறிவித்தார்.

அரசியலமைப்பு குழுவில் பங்கெடுத்துக்கொண்ட சுன்னிகள், கூட்டாட்சி கட்டமைப்பிற்கு எதிராக பாக்தாத்தில் எண்ணெய் வருவாயில் பெரும்பகுதியை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் வலுவானதொரு மத்திய அரசாங்கத்தை பராமரிக்கவேண்டுமென்று வாதிடுகின்றனர். ஷியைட் மற்றும் குர்திஸ் முதலாளித்துவத்தினரை போன்று அவர்களது நோக்கமும் இழிவான தன்மை கொண்டதாகும். பாத்திஸ்டுகளின் கீழ் பாக்தாத்தில் ஒரு சர்வாதிகார ஆட்சி பாத்திஸ்ட்டுகளின் கீழ், குர்திஸ் மற்றும் ஷியைட் போட்டியாளர்களுக்கு எதிராக ஒரு குறுகலான சுன்னி செல்வந்தத்தட்டினருக்கு ஈராக் எரிசக்தி செல்வத்தில் பெரும்பங்கு சரியாக உபயோகித்துக்கொண்டது. பெரும்பாலான சுன்னிக்கள் வாழ்கின்ற நாட்டின் மத்திய மற்றும் மேற்கு பகுதிகளில் எண்ணெய் மற்றும் எரிவாயு வளம் எதுவுமில்லை.

மறைமுக பேரங்கள் நடந்துகொண்டிருந்த நேரத்திலேயே, ஒரு ஆவணத்தை உருவாக்க ஈராக் கன்னைகள் தவறிவிட்டதால், தனக்கு ஏற்பட்டுவிட்ட விரக்தியை மறைப்பதற்கு அமெரிக்கா முயலவில்லை. புஷ்சும் இதர அதிகாரிகளும் திரும்பத்திரும்ப காலகெடுவிற்குள் அதை அடைந்துவிடமுடியும் என்றே கூறி வந்தார்கள்.

குறிப்பாக, ஈராக் அரசாங்கத்தில் ஆதிக்கம் செலுத்தி வருகின்ற ஷியைட் கட்சிகள் மீது அமெரிக்க தனது அழுத்தங்களை கொண்டுவந்தது. சுன்னி செல்வந்தத்தட்டினரோடு நேசக்கரம் நீட்டுமாறு கேட்டுக்கொண்டது. இந்த ஆண்டு ஆரம்பத்தில் நடைபெற்ற தேர்தல்களை புறக்கணிக்குமாறு பிரதான சுன்னி அரசியல் மற்றும் மத அமைப்புக்கள் கேட்டுக்கொண்டன. அதே நேரத்தில், சுன்னி குழுக்கள் ஈராக்கிலுள்ள அமெரிக்க படைகளுக்கு எதிராக பெரும்பகுதி கெரில்லா போர்களை நடத்தி வந்தன. அந்தப் போர்கள் நீடித்துக்கொண்டே சென்றதால், அமெரிக்காவில் பொதுமக்களது எதிர்ப்பு வளர்ந்து. சுன்னி அமைப்புக்களில் ஒரு பிரிவை விலைக்கு வாங்கி கிளர்ச்சியை பலவீனப்படுத்திவிட முடியும் என அப்போது வாஷிங்டன் நம்பியது. அதனால் சுன்னி அமைப்புக்கள் தொடர்ந்து ஒரு சலுகை நிலையை அனுபவிக்கலாம் என்று உறுதியளிக்கப்பட்டது.

மிக அடிப்படையாக, அரசியல் சட்டமும் தொடர்ந்து டிசம்பரில் நடக்கும் தேர்தலும் ஈராக்கை அமெரிக்காவின் ஆதரவான அரசாக மாற்றுவதில் முக்கியத்துவம் நிறைந்ததாக கருதப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு இறுதி வாக்கில் நியமிக்கப்படவிருக்கும் அரசாங்கம் ஈராக்கில் அரசிற்கு சொந்தமான எண்ணெய் தொழில்துறையை தனியார்மயமாக்க ஆரம்பிக்கவியலும், மற்றும் நீண்டகால அடிப்படையில் அமெரிக்க இராணுவத்தளங்களை அமைப்பதற்கு ஒப்பந்தங்களில் கையெழுத்திடும். அமெரிக்க துருப்புக்களின் எண்ணிக்கையை படிப்படியாக 60,000 அளவிற்கு குறைத்து இதர இடங்களில் அந்தத் துருப்புக்களை பயன்படுத்திக்கொள்கின்ற அளவிற்கு வகை செய்வதற்கு ஈராக் அரசாங்கம் போதுமான அளவிற்கு சட்டபூர்வமான தன்மை கொண்டதாக இருக்க வேண்டும் என்பது அமெரிக்க இராணுவத் திட்டங்களின் மையக் கருத்தாகும்.

கடந்த சில வாரங்களாக ஷியைட்டுக்கள் தன்னாட்சி கோரிக்கைகளை எழுப்புவதும், சுன்னிக்கள் குற்றம் சுமத்துவதும் ''புஷ் நிர்வாகத்தை அதிர்ச்சியடைய செய்துவிட்டது'' என்று ஆகஸ்ட் 14ல் நியூ யோர்க் டைம்ஸ் பெயர் குறிப்பிடப்படாத அதிகாரிகளை மேற்கோள் காட்டி தகவல் தந்திருக்கிறது. பிரிட்டிஷ் ஒப்சேர்வர் பத்திரிகை தந்துள்ள ஒரு அறிக்கையின்படி, ஞாயிறன்று பொறுமையிழந்து ஆத்திரம் எந்த புள்ளிக்கு வந்துவிட்டதென்றால், ஈராக்கிலுள்ள அமெரிக்கத் தூதர் சல்மே கலில்ஷாத், ஈராக்கியர்களிடம் அமெரிக்க அதிகாரிகள் எழுதிய ஒரு அரசியல் சட்டத்தை தந்தார் மற்றும் ''அது சமரசத்திற்கான ஒரு வழிகாட்டி'' என்று அவர்களிடம் கூறினார்.

பின்னர் CNN இற்கு பேட்டியளித்த கலில்ஷாத்: ''இந்த அரசியலமைப்பு தீவிரவாதிகளையும், பாதிஸ்ட் கடும்போக்கினரையும் தனிமைப்படுத்தி, காலப்போக்கில் அவர்களை முறியடிப்பதற்கான கட்டத்தை உருவாக்குகிற வகையில் சுன்னிக்களை ஒரு தேசிய உடன்படிக்கைக்கு கொண்டு வருவதாக அமையும்.'' என்றார்

அமெரிக்கா தந்துள்ள நகல் தென்பகுதியில் ஷியைட்டுக்கள் கோருகின்ற தீர்வுகாண முடியாத நிலையில் பிளவுபட்டு நிற்கும் தன்னாட்சி உரிமை பற்றிய எந்த முடிவையும் டிசம்பரில் தேர்தல்கள் நடக்கின்ற வரை தள்ளி வைக்க வகை செய்கிறது. என்றாலும் அமெரிக்க அழுத்தங்களின் கீழ் ஷியைட்டுக்கட்சிகள் சம்மதித்தாலும், சுன்னிக் குழு அதை உடனடியாக புறக்கணிப்பதற்கு பதிலாக தாமதப்படுத்தி இறுதியாக வெளியேற்றுவதாக கூறப்படுகிறது.

அடுத்த சில நாட்களில் ஆகஸ்ட் 22ல் அந்த மூன்று பிரதான குழுக்களும் ஒரு உடன்பாட்டிற்கு வந்து ஒரு நகல் அரசியலமைப்பிற்கு சம்மதிக்கச் செய்வதற்கு மிகப்பெரும் அழுத்தங்கள் கொண்டுவரப்படும் என்பதில் சந்தேகத்திற்கு இடமில்லை. இரண்டே மாற்றீடுக்கள்தான் உண்டு----- அவை இரண்டும் ஈராக்கில் அமெரிக்க ஏகாதிபத்தியம் எதிர்கொண்டுள்ள பிரச்சனைகளை திடீரென்று உக்கிரமடையச்செய்யும்.

இதில் ஒன்று ஜனவரி 30ல் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்றத்தை கலைத்து, புதிய தேர்தல்களையும் மற்றும் புதியதொரு அரசியலமைப்புக் குழுவையும் அமைப்பதாகும். மற்றொன்று ஷியைட் மற்றும் குர்திஸ் குழுக்கள் தற்போதுள்ள நாடாளுமன்றத்தில் தங்களுக்குள்ள கட்டுப்பாட்டை பயன்படுத்தி எதிர்ப்பை பற்றி கவலைப்படாமல் தங்களது கோரிக்கைகளை மட்டுமே திருப்திப்படுத்துகிற ஒரு அரசியலமைப்பை அவசரமாக நிறைவேற்றுவதாகும்.

பாக்தாத்தில் ஈராக் நியமித்துள்ள ஆட்சி சுன்னி மக்களுக்கு எதிராக ஒரு உள்நாட்டு போர் பிரகடனத்தை வெளியிடுவதற்கு இணையாக இது அமைந்துவிடும் மற்றும் கிளர்ச்சிக்கு தூபம் போடுவதாகவும் அக்டோபர் 15ல் நடத்தப்படுவதற்காக திட்டமிடப்பட்டுள்ள கருத்தெடுப்பில் ஆவணத்தை சுன்னி அரசியல் மற்றும் மத அமைப்புக்கள் புறக்கணித்துவிட வேண்டுமென்று ஒருங்கிணைந்ததொரு பிரச்சாரம் நடத்தப்படுவதற்கும் வகை செய்துவிடும். ஈராக்கின் 18ல் மூன்று மாகாணங்களில் மூன்றில் இரண்டு பகுதியினர் ''வேண்டாம்'' வாக்களிப்பார்களானால், அந்த அரசியலமைப்பு ஏற்றுக்கொள்ளப்படாமல் தடுக்கப்பட்டுவிடும்.

இந்த மூன்று மாகாணங்களின் இரத்து அதிகார ஷரத்து அரசியல் கட்டுக்கோப்பில் சேர்க்கப்பட்டது, அமெரிக்க ஆதரவோடு குர்திஸ் கட்சிகள் வலியுறுத்தியதால்தான், அதன் மூலம் தன்னாட்சிக்கு வகை செய்யாத எந்த அரசியலமைப்பையும் தோற்கடித்துவிட முடியும். இப்போது அது அவர்களுக்கே எதிராக திரும்புகின்ற சாத்தியக்கூறு ஏற்பட்டிருக்கிறது. குறைந்தபட்சம் நான்கு மாகாணங்களில் தெளிவானதொரு சுன்னி பெரும்பான்மையினர் உள்ளனர்.

இந்த விவாதங்கள் மற்றும் மோதல்கள் எதுவும் எந்த வகையிலும் மிகப்பெரும்பாலான ஈராக் வெகுஜனங்களின் தேவைகள் மற்றும் அபிலாஷைகளை பற்றிய அடிப்படையை பிரதிபலிக்கவில்லை. அமெரிக்கா முற்றுகையாலும் அதன் ஆக்கிரமிப்பினாலும், மில்லியன் கணக்கான மக்கள் நிலையான வருவாயின்றி உயிர்வாழ போராடுகின்ற சூழ்நிலையும், ஒழுங்கான முறையில் மின்சாரம், குடிதண்ணீர் மற்றும் இதர அடிப்படை சேவைகளும் கிடைக்காமல் வாடிக்கொண்டிருக்கின்றனர். ஒவ்வொரு நாளும் அமெரிக்கா தலைமையிலான துருப்புக்களால் டசின் கணக்கான சிவிலியன்கள் கொல்லப்படுகின்றனர் அல்லது உடல் ஊனமடைகின்றனர், அல்லது இஸ்லாமிய தீவிரவாத ஆக்கிரமிப்பு எதிர்ப்பாளர்கள் கண்மண் தெரியாமல் நடத்துகின்ற குண்டு வெடிப்புக்களுக்கு இலக்காகின்றனர். ஜனவரி 30ல் தேர்தல்கள் நடந்த பின்னர் ஏறத்தாழ 4,000 சிவிலியன்கள் தங்களது உயிரை இழந்திருக்கின்றனர்.

ஈராக்கின் தொழிலாள வர்க்கத்தை எதிர்கொண்டுள்ள சமூகப் பேரழிவு பெருகிக்கொண்டே வருகின்ற நேரத்தில், அதற்கேற்ப ஆளும் வர்க்கத்தை சேர்ந்த ஒவ்வொரு கன்னைகளும், அவர்களது அதிகாரத்தையும், சலுகைகளையும் பாதுகாப்பதற்கும் மற்றும் நெருக்கடியிலிருந்து கவனத்தை திசைதிருப்புவதற்குமான வகுப்புவாதத்தை வளர்த்துக்கொண்டிருக்கின்றன. இதன் தர்க்க ரீதியிலான விளைபயன் என்னவென்றால் சகோதர போர் மூளும். இது இறுதியில் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கும் அதன் செயல்திட்டமான மத்திய கிழக்கு எல்லையை பிடித்து அதன் வளங்கள் மீது மேலாதிக்கம் செலுத்துவதற்கு சேவை செய்யும்.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved