World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா

The split in the AFL-CIO

AFL-CIO இல் பிளவு
By Shannon Jones
12 July 2005

Back to screen version

சிக்காகோவில் ஜீலை 24 இன் வாரத்தில் நடைபெறவிருக்கும் அமெரிக்க தொழிற்சங்க கூட்டமைப்பின் நான்கு வருடத்திற்கு ஒரு முறை நடைபெறும் மாநாட்டில் AFL-CIO இல் ஒரு பிளவு ஏற்படும் சாத்தியக் கூறுகள் அதிகரித்திருக்கின்றன.

சேவை ஊழியர்கள் சர்வதேச ஒன்றியத்தின் (SEIU) தலைமையில் இயங்குகின்ற ஐந்து தொழிற்சங்கங்களும் AFL-CIO இன் தலைவராய் இருக்கின்ற John Sweeney பதவியிலிருந்து நீக்கப்படுவது உட்பட தங்களது கோரிக்கை ஏற்கப்படாவிட்டால் கூட்டமைப்பை விட்டு விலகிவிட விருப்பம் தெரிவித்திருக்கிருன்றனர். ஒரு போட்டி அமைப்பை உருவாக்குவதற்கான முதல் நடவடிக்கையாக அண்மையில் அவர்கள் "வெற்றி கூட்டணிக்கான மாறுதல்'' உருவாக்கியுள்ளனர்.

SEIU உடன் இணைந்துள்ள தொழிற்சங்கங்கள் டீம்ஸ்டர்ஸ் (Teamsters), தொழிலாள சர்வதேச ஒன்றியம் (Laborers' International Union) ஐக்கிய உணவு மற்றும் வர்த்தக தொழிலாளர்கள் (UFCW) மற்றும் ஒன்றிணைந்த விடுதி மற்றும் நெசவுத் தொழிற்சங்கங்களான UNITE/HERE ஆகியவையாகும். இந்த தொழிற்சங்கம் அனைத்திலும் கூட்டமைப்பின் 40 சதவீதமான 13 மில்லியன் உறுப்பினர்கள் இடம் பெற்றிருக்கின்றனர்.

Sweeney யை ஆதரிக்கின்ற பெரிய தொழிற்சங்கங்களில் ஐக்கிய கார் தொழிலாளர்கள், ஐக்கிய எஃகு தொழிலாளர்கள், சர்வதேச தொழில்நுட்பவியலாளர்கள் சங்கம், அமெரிக்க தகவல் தொடர்பு தொழிளாலர்கள் மற்றும் அமெரிக்க அரச பிராந்திய மற்றும் நகரசபை ஊழியர்கள் கூட்டமைப்பு ஆகியவையும் அடங்கும்.

ஜீன் 27ல் நடைபெற்ற AFL-CIO செயற்குழு கூட்டத்தில் பிளவுபடுத்துவதாக அச்சுறுத்திக் கொண்டிருக்கின்ற ஐந்து தொழிசங்கங்களுக்கும் அப்பால் உள்ள தொழிற்சங்க தலைவர்களின் நம்பிக்கை வாக்கெடுப்பை Sweeney பெற்றார். இந்த வாக்கெடுப்பை தொடர்ந்து 2001ல் AFL-CIO விலிருந்து முறிவுற்ற மரவேலை மற்றும் தளபாட ஐக்கிய சகோதரத்துவ தொழிற்சங்கமும் (United Brotherhood of Carpenters and Joiners) அதிருப்தி தொழிற்சங்கங்களின் கூட்டணியில் இணைந்தது.

உத்தியோகபூர்வமான அமெரிக்க தொழிற்சங்க இயக்கத்தில் ஒரு தொடர்ச்சியான நெருக்கடியின் விளைவுதான் இந்த முறிவின் அச்சுறுத்தலாகும். பல தசாப்தங்களாக AFL-CIO வில் உறுப்பினர்கள் எண்ணிக்கையில் கடுமையான வீழ்ச்சிகள் ஏற்பட்டதை தொடர்ந்து அது ஒரு பொருளாதார சக்தி மற்றும் அமெரிக்க அரசியலில் ஒரு பிரதிநிதி என்ற இரண்டு நிலைமையிலிருந்தும் கடுமையாக வீழ்ச்சியடைந்தது.

தனியார் துறை தொழிலாளர்கள் தொழிற்சங்கங்களில் ஒழுங்கமைக்கப்பட்டிருக்கும் அளவு, கடந்த 100 வருடத்தை காட்டிலும் மிகவும் குறைவாகும். இதற்கிடையில், தனியார் துறை தொழிலாளர்கள் மத்தியில் AFL-CIO இன் நிலை புஷ் நிர்வாகத்தின் கீழ் தாக்குதலுக்குள்ளாகியுள்ளது.

AFL-CIO தலைமைக்கு போட்டியிடும் பிரிவுகளுக்கிடையில் கொள்கை அடிப்படையில் எந்த வேறுபாடுகளும் இல்லை. SEIU விடுத்திருக்கின்ற கோரிக்கை என்னவென்றால் AFL-CIO தனது வரவுசெலவுத்திட்டத்தை 50 சதவீத மேல் வெட்ட வேண்டும் மற்றும் இப்பணம் உறுப்பினர்களாக உள்ள தொழிற்சங்கங்கள் தொழிற்சங்கத்தை ஒழுங்கமைக்கும் முயற்சிகளுக்கு தர வேண்டும் என்று வாதிடுகிறது. பத்தாண்டுகளுக்கு முன்னர் அன்றைய AFL-CIO தலைவர் லேன் கிர்க்லாண்டிற்கு ஸ்வீனி வெற்றிகரமாக சவால் விட்டபோது, அதே மாதிரியான பிரச்சாரம் செய்து, தொழிற்சங்க உறுப்பினர்கள் எண்ணிக்கை வீழ்ச்சியடைவதை மாற்றுவதாக உறுதியளித்தார்.

அப்பொழுதிலிருந்து AFL-CIO இன் வீழ்ச்சி தொய்வின்றி தொடர்ந்து நடைபெற்றது. 2004ல் தனியார்துறையில் தொழிற்சங்கமயமாக்கலின் உறுப்பினர் எண்ணிக்கை 7.9 சதவீதமாக வீழ்ச்சியடைந்துவிட்டது, 1995ல் இது 10.3 சதவீதமாக இருந்தது. 1900 ஆண்டிற்கு பின்னர் இதுதான் தனியார் துறை தொழிற்சங்கமயமாக்கலின் மிகக்குறைந்தளவாகும். அப்போது அமெரிக்க தொழிற்சங்கங்களில், அமெரிக்க தொழிலாளர்கள் 6.5 சதவீதம் பேர்தான் இடம் பெற்றிருந்தனர். 1905 வாக்கில் தொழிற்சங்கங்களில் சேர்ந்தவர்கள் எண்ணிக்கை 11.1 சதவீதமாக உயர்ந்தது, அது 2004ன் எண்ணிக்கையைவிட அதிகமாகும்.

பொருளாதாரம் மிக வேகமாகவும், மிக பெருமளவிலும் வளர்ந்து வரும் சில்லறை வர்த்தகத்தில் தொழிற்சங்கமயமாக்கப்பட்ட ஏறத்தாழ 15 மில்லியன் ஊழியர் பணியாற்றுகின்றனர். அதில் சேர்ந்திருப்பவர்கள் ஒட்டுமொத்தமாக 5.8 சதவீதம்தான். தற்போது தனியார் துறையில் தொழிற்சங்கங்களில் சேருபவர்களின் எண்ணிக்கை கட்டுமானத்தொழிலில் 14.7 சதவீதமாக உள்ளது. இது 1973ல் 39.5 சதவீதமாக இருந்தது. தனியார்துறை உற்பத்தி பிரிவு தொழிற்சங்கங்களில் உறுப்பினர்கள் எண்ணிக்கை 12.7 சதவீதம்தான். இது 1973ல் மொத்தத்தில் 38.9 சதவீதமாக இருந்தது. சுரங்கத்தொழிலில் இப்போது தொழிற்சங்க உறுப்பினர்களின் எண்ணிக்கை 11.4 சதவீதமாக உள்ளது, இதற்கு இரண்டு தசாப்தங்களுக்கு முன்னர், இது 20.6 சதவீதமாக இருந்தது. தற்போது போக்குவரத்து தொழிலாளர் சங்கங்களில் உறுப்பினர்கள் எண்ணிக்கை 32.2 சதவீதமாக உள்ளது. இது அதே காலகட்டத்தில் 49.9 வீதத்திலிருந்து வீழ்ச்சியடைந்துள்ளது. தகவல் தொடர்புத்துறைகளில், 22.3 சதவீதம் பேர் தொழிற்சங்கங்களை சார்ந்தவர்கள். 1980களின் தொடக்கத்தில் 55.4 சதவீதமாக இருந்து குறைந்து வந்துள்ளது. Unionstats.com இலிருந்து எடுக்கப்பட்ட புள்ளி விவரங்கள்.

2004ல், மொத்த தொழிலாளர்களில் தொழிற்சங்கங்களைச் சேர்ந்தவர்களது எண்ணிக்கை 12.5 சதவீதமாக வீழ்ச்சியடைந்துவிட்டது. இது 1995ல் 14.9 சதவீதமாக இருந்தது. 1979ல் ஒட்டு மொத்தமாக தொழிற்சங்கங்களில் சேர்பவர்களின் எண்ணிக்கை 24.1 சதவீதமாகவும், 1950 களின் தொடக்கத்தில் 35 சதவீதமாக இருந்ததையும் ஒப்புநோக்கத்தக்கது.

AFL-CIO கணணிகள் போன்ற முக்கிய உயர் தொழிற்நுட்ப தொழிற்துறைகளிலும் அல்லது தெற்கு மற்றும் பல மலை மற்றும் சமவெளி மாகாணங்களான தென்மேற்கு மற்றும் மத்திய-மேற்கின் மேல்பகுதிகளிலும் தொழிற்சங்கங்களை அமைப்பதில் என்றைக்குமே வெற்றிபெற்றதில்லை.

SEIU தலைவர் ஆண்ரூ ஸ்டெர்ன் மற்றும் அவரது கூட்டணியினரான, டீம்ஸ்டெர்ஸ் தலைவர் James P Hoffa போன்றவர்களோ தொழிற்சங்கங்களை அமைப்பதற்கு கூடுதல் நிதி ஒதுக்கீடுகளை செய்வதற்கு அப்பால் எப்படி உறுப்பினர்கள் எண்ணிக்கை வீழ்ச்சியடைவதை மாற்றப் போகிறார்கள் என்ற திட்டத்தை விளக்கவில்லை.

அப்படிச் செய்வதற்கு AFL-CIOவின் முழுமுன்னோக்கு பற்றிய ஒரு கடுமையான விமர்சனம் செய்ய வேண்டியிருக்கும். முதலாவதாக, தொழிலாளர் கூட்டமைப்பின் அழிவுமிக்க அரசியல் மூலோபாய பற்றி ஒரு கணக்கெடுப்பு செய்ய வேண்டி வரும். அதன் உருவாக்கத்திலிருந்தே அது தொழிலாள வர்க்கம் எந்த விதமான சுயாதீனமான அரசியல் அமைப்பை உருவாக்குவதை எதிர்த்தே வந்திருக்கிறது மற்றும் மாறாக தொழிலாள வர்க்கத்தை இரு-கட்சி முறைக்குள் முடிச்சு போடுவதற்கு வலியுறுத்தியது. பிரதானமாக ஜனநாயகக் கட்சிக்கு ஆதரவு அளிப்பதன் மூலம் அதைச் செய்தது.

பிளவுபடுத்துவதாக அச்சுறுத்திக் கொண்டுள்ள தொழிற்சங்கங்கள் AFL-CIO வின் அரசியல் மூலோபாயம் குறித்து எந்த கலந்துரையாடலும் நடத்துவதை தவிர்த்திருக்கின்றன. மற்றும் அது பற்றி விமர்சிப்பதும் இல்லை. மிகவும் போர்குணமிக்க தொழிற்துறை கொள்கையை வேண்டும் என்று ஆலோசனை கூறாததுடன் AFL-CIO வேலைநிறுத்த ஆயுதத்தை ஏறத்தாழ கைவிட்டுவிட்டதையும் அவர்கள் விமர்சிக்கவில்லை. ஸ்டேர்னும் அவரது கூட்டணியினர்களும், மேலும் அமெரிக்க தொழிற்சங்கங்களை பெருநிறுவன நிர்வாக கட்டமைப்பில், தொழிலாளி-முதலாளிக்கு இடையிலான ''பங்காளிகள்'' என்ற கூட்டுறவுவாத கொள்கை மூலம் ஒன்றிணைப்பதை எந்த வகையிலும் விமர்சிப்பதை தவிர்த்தது.

முக்கியமான கொள்கை வேறுபாடுகள் ஏதுமில்லாதது, இன்னும் ஆழமாக நெருக்கடிக்குள் மேலும்மேலும் வீழ்ந்து கொண்டே வரும் அதே தொழிற்சங்க அதிகாரத்துவத்தின் இரண்டு பிரிவுகளுக்கிடையே நடைபெறுகின்ற தகராறு ஒரு கொள்கையற்ற மோதல் என்பதை எடுத்துக்காட்டுகிறது. அந்த மோதல் நடைபெற்று வரும் முறைகளும் அதை கோடிட்டுகாட்டுகின்றது. பெரும்பாலும் இரகசியமாக மூடப்பட்ட கதவுகளுக்கு பின்னால் மற்றும் தொழிற்சங்க உறுப்பினர்களுக்கு தெரியாமலும், தொழிற்சங்கங்களுக்கு அப்பாற்பட்ட பரந்தளவிலான தொழிலாளர்களுக்கும் தெரியாமல் இது நடந்து கொண்டிருக்கிறது.

AFL-CIO தொழிற்சங்கங்கள் எதிலும் சாதாரண தொழிலாளர்கள் உண்மையான ஜனநாயகக் கட்டுப்பாட்டையும் கொண்டிருக்கவில்லை. படிப்படியாக தலைமைக்கு அதிகாரம் குவிந்து கொண்டிருக்கும் இடையில், தொழிற்சங்கங்களின் கொள்கைகளை வகுப்பதில் தொழிலாளர்களுக்கு ஒரு துளியளவு செல்வாக்கும் இல்லை.

தொழிற்சங்க உறுப்பினர்களின் உண்மையான ஊதியங்கள் முடங்கிக்கிடக்கின்றன அல்லது வீழ்ச்சியடைந்து விட்டன, அதே நேரத்தில் பெரிய தொழிற்சங்கங்களின் தலைவர்களுக்கு கவர்ச்சிகரமான ஊதியங்கள் தரப்படுகின்றன, மிகப்பெரும்பாலானவர்களுக்கு 1,00,000 டாலருக்கு (six-figure range) மேல் ஊதியமும் பல்வேறு தனி சலுகைகளும் மேலதிக கொடுப்பனவுகளும் அவர்களுக்கும் அவர்களது குடும்பத்தினர்களுக்கும் வழங்கப்படுகின்றன. எடுத்துக்காட்டாக, SEIU தலைவர் ஸ்டேர்ன் மட்டுமே AFL-CIO அதிகாரத்துவத்தை சேர்ந்தவர்களில் உயர்ந்த ஊதியம் பெறுபவர் அல்ல. அவர் 2004ல் 2,30,000 டாலருக்கு மேல் ஊதியம் பெற்றதாக அமெரிக்க தொழில் அமைச்சிற்கு அதிகாரபூர்வமான அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இரண்டு பிரிவுகளையும் சேர்ந்த தலைவர்களும் நீண்டகாலம் பணியாற்றி வருகின்ற அதிகாரிகள் மட்டுமல்லாது வேலை நிறுத்தங்கள் தனிமைப்படுத்தப்பட்ட போது மற்றும் முறியடிக்கப்பட்ட போதும் மற்றும் தொழிற்சாலைகள் மூடப்பட்டபோது அந்த நடவடிக்கைகளுடன் தோளோடு தோள் சேர்ந்து ஒத்துழைத்தவர்கள். ஸ்டேர்ன் ஸ்வீனின் முந்திய ஆதரளவாளர், அவர் AFL-CIO இல் தலைமைப்பதவியை பெறுவதற்கு முன்னர் SEIU விற்கு தலைமை தாங்கினார்.

"சீர்திருத்த" குழு என்றழைக்கப்படுவதில் இடம் பெற்றுள்ள சில தொழிற்சங்கங்கள் நாட்டின் மிகவும் இழிபுகழ்பெற்ற ஊழல் மற்றும் மாபியா நடவடிக்கைகள் நிறைந்த தொழிற்சங்கங்களான டீம்ஸ்டர்ஸ் மற்றும் தொழிலாளர் அமைப்புகளை சார்ந்தவர்கள்.

அழித்துவரும் நிதி மற்றும் பிராந்தியப்போர்

இந்த தகராறில் ஒரு பிரதான காரணி நிதிப்பிரச்சனையாகும். பல தசாப்தங்களாக தொழிற்சங்க அதிகாரத்துவத்தால் காட்டிக்கொடுக்கப்பட்டதன் விளைவாக இந்த கூட்டமைப்பின் சந்தா அடிப்படை வீழ்ச்சியடைந்ததுள்ளது. இது AFL-CIO மற்றும் அதன் இணைந்த அமைப்புகளின் கருவூலங்களில் உணரப்படுகின்றது.

பல ஆண்டுகளாக, தொழிற்சங்க அதிகாரத்துவ பிரிவுகள் உறுப்பினர்கள் எண்ணிக்கை வீழ்ச்சியடைந்து வருவதால் ஏற்படும் நிதிப்பாதிப்புகளில் இருந்து தங்களை பாதுகாத்துக்கொள்வதில் நிபணத்துவமாக நடந்து வருகின்றனர். சந்தாக்கள் எண்ணிக்கை வீழ்ச்சியடைந்து கொண்டே வருகின்ற நிலையில், ஐக்கிய கார் தொழிலாளர்கள் தங்களது வருமானம் மற்றும் நிகர சொத்துக்களை நிலைநாட்டி வந்ததுடன் அதிகரிக்கச் செய்தனர். இதை அவர்கள் எப்படிச் செய்தார்கள் என்றால் கார் தொழிலின் ஒவ்வொரு மட்டத்திலும் கூட்டு தொழிற்சங்க - நிர்வாகக் குழுக்களை அமைத்தனர். அது ஏராளமான ஊழல் நிதிகளையும் அதிகாரத்துவத்தின் வருமானத்திற்கான புதிய வழிகளையும் செய்து தந்தன. இதர சந்தர்ப்பங்களில், தொழிற்சங்க நிர்வாகிகள் நிறுவன நிர்வாகக்குழுக்களில் பதவிகளை பெற்றனர். ஏறத்தாழ ஒவ்வொரு தொழிற்சங்கத்திலும் சந்தா செலுத்துகின்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை குறைவதால், சந்தா பாக்கிகளை சரிக்கட்டுகின்ற வகையில் சந்தாக் கட்டணங்களை உயர்த்தினார்கள்.

அதிகாரிகளுக்கும், உறுப்பினர்களுக்கும் இடையே வளர்ந்து வருகின்ற இடைவெளி, தொழிற்சங்க அமைப்பு எந்த அளவிற்கு தங்களது சாதாரண உறுப்பினர் நலன்களில் இருந்து தனிமைப்படுத்தப்பட்டு நிற்கிறது என்பதை வலியுறுத்திக்காட்டுவதாக அமைந்திருக்கிறது.

அப்படியிருந்தும், அதிகாரத்துவத்திற்கு பிரச்சனைகள் பெருகிக்கொண்டுதான் இருக்கின்றன. 2000 இல் AFL-CIO தலைமை அலுவலகங்களில் நிகர சொத்துக்கள் மதிப்பு 98.04 மில்லியன் டாலர்கள். 2004 வாக்கில் அந்த எண்ணிக்கை 92.4 மில்லியன் டாலர்களாக குறைந்துவிட்டது. அதே காலகட்டத்தில், வருமானம் 183.9 மில்லியன் டாலரிலிருந்து 172 மில்லியன் டாலர்களாக குறைந்து விட்டது (இந்த புள்ளி விவரங்கள் அமெரிக்க தொழில் அமைச்சு தந்தது). இந்தக் கூட்டமைப்பின் நிதிப்பிரச்சனைகள் ஸ்வீனியை அவற்றின் ஊழியர்களின் ஆட்குறைப்பின் மூலம் சீரமைக்க நிர்ப்பந்தித்தது.

உறுப்பினர்கள் எண்ணிக்கை வீழ்ச்சியடைந்து கொண்டே வந்ததால் பல்வேறு தொழிற்சங்கங்களை இணைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது, அண்மையில் ஓட்டல் மற்றும் உணவு விடுதிகள் ஊழியர்கள் சங்கம் (HERE) தையல் வர்த்தகம், தொழிற்துறை மற்றும் நெசவுஊழியர்களின் தொழிற்சங்கத்துடன் (UNITE) இணைக்கப்பட்டது போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. இந்த இணைக்கப்பட்ட இரண்டு தொழிற்சங்கங்களுமே இதற்கு முன்னர் நடைபெற்ற இணைப்புக்களில் சம்மந்தப்பட்டவை.

அச்சுறுத்திக் கொண்டுள்ள பிளவில் சம்பந்தப்பட்டுள்ள சக்திகள் அணிவகுப்பிற்கு பல காரணிகள் உண்டு. அதில் எந்தவிதமான சந்தேகத்திற்கும் இடமின்றி தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சிகளும், பதவிகள் உயர வேண்டும் என்ற எதிர்பார்ப்புகளும் சம்பந்தப்பட்டிருக்கின்றன. என்றாலும், ஸ்வீனியை எதிர்க்கும் முன்னணியில் இருக்கும் தொழிற்சங்கங்கள் பெரும்பாலும் பிரதானமாக சேவைப்பிரிவுகளை (service sector) சார்ந்தவை. அங்கு உறுப்பினர்கள் எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்து கொண்டு வருகிறது அல்லது வீழ்ச்சி அடையாமல் நிலையாக நிற்கின்றது.

ஸ்டேர்னும் அவரது கூட்டணியினர்களும் தங்களது ''பிராந்தியத்தில்'' இதர தொழிற்சங்கங்கள் நடத்திவருகின்ற ஊடுருவலுக்கு எதிராக ஒரு பெரிய கவலை கொண்டிருக்கின்றன. இதில் குறிப்பான கவலை என்னவென்றால், பழைய தொழிற்சங்கமான ஐக்கிய கார் தொழிலாளர்கள் சங்கம் மற்றும் ஐக்கிய எஃகு தொழிலாளர்கள் சங்கம் தங்களது உற்பத்தி அடித்தளங்கள் வீழ்ச்சியடைந்து விட்டதை எதிர்கொண்டுள்ள நிலையில், சேவைத்துறை தொழிலாளர்களை ஒழுங்கமைக்க மேற்கொண்டு வரும் முயற்சிகளாகும். அத்துடன் SEIU விற்கும், ஸ்வீனிக்கு பின்னே அணிவகுத்து நிற்கும் அரச பிராந்திய மற்றும் நகரசபை ஊழியர்களுக்கான அமெரிக்க கூட்டமைப்பிற்கும் (AFSCME) இடையில் ஒரு கசப்பான ஆதிக்க எல்லை பற்றிய தகராறும் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

AFL-CIO வீழ்ச்சியடைந்ததற்கு அடிப்படையாக உள்ள அரசியல் மற்றும் வரலாற்றுரீதியான பிரச்சனைகளை இதில் எந்த பிரிவும் ஆராய விரும்மபவோ அல்லது ஆராய முடியாது உள்ளது. அவை ஒரு உலகரீதியான போக்கின் ஒரு பாகமாகும்-----பழைய தேசிய சீர்திருத்தவாத தொழிலாளர் அமைப்புகளில் ஏற்பட்டுள்ள நெருக்கடியாகும். இது ஏனென்றால், இந்த இரண்டு அதிகாரத்துவ பிரிவின் வேலைதிட்டம் அடிப்படையில் ஒரேமாதிரியானதாகும். அது இலாப முறையையும் அமெரிக்க தேசிய அரசை பாதுகாத்தலுமாகும். AFL-CIO ஜனநாயகக் கட்சியுடன், இணைக்கப்பட்டிருப்பது அடிப்படையில் மிகவும் தீர்க்கமான வெளிப்பாடாக காணமுடியும்.

AFL-CIO நிறுவப்பட்டு 50 ஆண்டுகளிலிருந்து

தொழிலாளர்களின் அமெரிக்க கூட்டமைப்பு (AFL) உம், தொழிற்துறை அமைப்பின் காங்கிரஸும் (CIO) உம் இணைக்கப்பட்ட 50 ஆண்டுகளை குறிக்கின்ற 1955 இல் நடைபெற்ற ஒரு மாநாட்டின் 50 ஆவது நிறைவு விழாவை நோக்கி இந்தப் பிளவு பற்றிய அபாயம் செல்கின்றது. இந்தப்பிளவிற்கான வித்துக்கள் இரண்டு தொழிலாளர்கள் கூட்டமைப்புகளும் இணைக்கப்பட்ட நேரத்திலேயே காணப்பட்டது. AFL-CIO நிறுவப்பட்டதே தொழிற்சங்கங்களுக்குள் வலதுசாரி அதிகாரத்துவ இயந்திரத்தை உறுதிப்படுத்துவதாகும். அதனது சமூக, அரசியல் வெளிப்பாடு பல ஆண்டுகளாக சிவப்பு வெறுப்பு என்ற அடிப்படையில் கம்யூனிச-எதிர்ப்பையும் மற்றும் அமெரிக்க ஆளும் செல்வந்தத்தட்டினரின் பனிப்போர் வெளியுறவுக் கொள்கையை ஆதரித்து வந்ததாலும் உருவமைக்கப்பட்டதாகும்.

அதற்கு 20 ஆண்டுகளுக்கு முன்னர், AFL ஆதிக்கம் செலுத்திய கைவினை தொழில் தொழிற்சங்கத்தில் ஏற்பட்ட முந்திய பிளவில் CIO உருவாகியது. 1935ல் 2005 ஐ போன்றில்லாமல் பழைய தொழிற்சங்கக் கூட்டமைப்பில் ஏற்பட்ட பிளவிற்கு பிண்ணணியாக முக்கியமான கொள்கை வேறுபாடுகள் நிலவி வந்தன. வில்லியம் கிரீன் தலைமையிலான AFL, பெரும்பாலான முதலாவது அல்லது இரண்டாவது தலைமுறை குடிப்பெயர்ந்தோர் குடும்பத்திலிருந்து வந்த தொழிற்துறையை நிரம்பிய, அடிப்படை தொழிற்துறையான எஃகு, கார், மின்சார மற்றும் ரப்பரை உற்பத்தி செய்த தொழிற்பயிற்சி பெறாத பரந்த அளவினரை வெளிப்படையாக கவனத்திற்கெடுக்காதிருந்தது.

முன்னைய AFL இன், சில பாரிய தொழிற்துறை தொழிற்சங்கத்தின் தலைவரும், அமெரிக்காவின் ஐக்கிய சுரங்கத் தொழிலாளர்கள் தலைவரான John L Lewis அடிப்படை தொழிற்துறையில் தொழிற்சங்க மயமாக்கல் முயற்சிக்கு தலைதாங்கி ஒருங்கிணைக்கப்பட்ட ஆடை தொழிலாளர்கள் அமைப்பின் தலைவர் சிட்னிஹில் மேன் மற்றும் சர்வதேச பெண்கள் ஆடைத் தொழிலாளர் சங்கத்தை சேர்ந்த David Dubinsky போன்றோருடன் இணைந்து இந்த முயற்சியை மேற்கொண்டனர்.

கிரீனும் கைவினைஞர் தொழிற்சங்கத்தை சேர்ந்த AFL கட்டுப்பாட்டிலிருந்த, பெரும்பான்மை தலைவர்களும் அடிப்படை தொழிற்துறைக்கு திரும்ப வேண்டும் என்ற கோரிக்கையை எதிர்த்தபோது, 1935ல் லூயிஸ் ஒரு புதிய அமைப்பை உருவாக்கி, அது தொழிற்துறை அமைப்புகளின் காங்கிரஸ் (CIO) என்று அழைக்கப்பட்டது.

பல தசாப்தங்களாக, சோசலிஸ்டுகள் AFL இன் கைவினைஞர் தொழிற்சங்கக் கொள்கையை கண்டித்து வந்ததுடன், பாரிய தொழிற்சங்க அமைப்புகளை உருவாக்க வேண்டும் என்று பிரசாரம் செய்து வந்தனர். 1935ல் தீவிர சோசலிச எதிர்ப்பாளரான லூயிஸ் ஏற்கனவே உருவாக்கப்பட்டுள்ள தொழிற்சங்கங்கள் அடிப்படை தொழிற்துறையில் ஈடுபட்டுள்ள பரந்தளவான தொழிலாளர்களை ஒழுங்கமைக்க முயற்சிக்காவிட்டால் அந்தப்பணியை இதர சக்திகள் எடுத்துக்கொள்ளும் என்பதை உணர்ந்தார்.

அதற்கு முந்தைய ஆண்டில், 1934ல் முக்கியமான தொழில் நகரங்களில் பல பிரதான வேலை நிறுத்தங்கள் சோசலிச அல்லது தீவிரவாத தலைமையால் மேற்கொள்ளப்பட்டது. சில இடங்களில் தொழிலாள வர்க்கத்திற்கு இந்த வேலை நிறுத்தங்கள் முக்கியமான இலாபங்களை பெற்றுத் தந்தது மற்றும் பெருமந்த நிலையால் தீவிரமான நெருக்கடி நிலையில் வாழ்ந்து வந்த பரந்தத்தட்டு மக்களுக்கு எதிர்பார்ப்புகளையும் நம்பிக்கைகளையும் உருவாக்கின.

இதில் மிக முக்கியமான நடவடிக்கைகளில் ஒன்று, மின்னியாபொலிஸ் கனரகவாகன ஓட்டுனர்கள் அன்றைய அமெரிக்க ட்ரொட்ஸ்கிச இயக்கமான அமெரிக்க கம்யூனிச கழகத்தின் தலைமையில் மேற்கொண்ட பல்வேறு வேலை நிறுத்தங்கள் 1934ல் ஒரு சிறிய தொழிற்சங்கமாக இருந்த டீம்ஸ்டர்ஸ் அமைப்பை ஒரு பரந்த தொழிலாளர் அமைப்பாக உருவாக்க உதவிற்று.

ரோலேடோவில் எலக்ட்ரிக் ஆட்டோலைட் நிறுவனத்தில் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்தனர். இதில் உள்ளூர் வேலையில்லாதிருப்போர் கழகத்தின் ஆதரவோடு போலீசார் மற்றும் தேசிய காவலர் துருப்புகள் தாக்குதலை முறியடித்து ஒரு கணிசமான குறிப்பிடத்தக்க வெற்றியை பெற்றனர். சான்பிரான்சிஸ்கோவில், துறைமுக தொழிலாளர்கள் நகரம் தழுவிய ஒரு பொது வேலை நிறுத்தத்திற்கு தலைமை வகித்தனர்.

CIO ஆரம்பிக்கப்பட்டது, அலை போன்று தொழிற்துறை தொழிலாளர் போராட்டங்களை வெடிக்கும் நிலைக்கு இட்டுச்சென்றது. சோசலிச சிந்தனை கொண்ட தொழிலாளர்கள் அடிமட்டத்து மிகத்தாக்கமிக்க தலைவர்களாக செயல்பட்டனர். இவர்கள் 1936-37ல், குளிர்காலத்தில் நடைபெற்ற Flint உள்ளிருப்பு வேலைநிறுத்தம் போன்ற போராட்டங்களில் முக்கிய பங்களிப்புகளை செய்தனர். இந்தப் போராட்டங்கள் சில நேரங்களில் அரை எழுச்சிகரத் தன்மையை பெற்றது. தொழிற்சங்கங்களை அங்கீகரிக்க வேண்டும் என்றும், ஊதியங்களை உயர்த்த வேண்டும் என்றும் பல தொழிற்துறைகளை தொழிலாளர்கள் கைப்பற்றிக் கொண்டனர் மற்றும் தொழிற்சாலைகளை பிடித்துக்கொண்டனர்.

1937 செப்டம்பரில், CIO உறுப்பினர்கள் எண்ணிக்கை 3,700,000 ஆக இருந்தது. அந்த அமைப்பு உருவாக்கப்பட்ட நேரமான 1935ல் உறுப்பினர்கள் எண்ணிக்கை 900,000 ஆக இருந்தது. என்றாலும் அதன் தலைவர்களின் முதலாளித்துவ-சார்பு அரசியல் விதித்த மட்டுப்பாடுகளுக்கு எதிராக இந்த கிளர்ச்சி இயக்கம் மிக வேகமாக எதிர்ப்பை வெளிப்படுத்தியது.

ஆரம்பத்திலிருந்தே, CIO தலைமை பிராங்ளின் ரூஸ்வெல்ட் மற்றும் ஜனநாயகக் கட்சியின் சுட்டு விரல் அசைவின் கட்டுப்பாட்டிற்கு வந்தது. வோல் ஸ்டீரிட்டின் தாராளவாத அரசியல் பிரதிநிதிகள் ஏற்றுக்கொள்ளக் கூடிய கோரிக்கைகளோடு கட்டுப்படுத்திக் கொள்ள தொழிலாளர் கோரிக்கைகளை எப்போதுமே ஜனநாயகக் கட்சிக்கார்களோடு இணைந்து CIO தொழிலாளர் கிளர்ச்சியை அடிபணிந்து போகச் செய்தது. இரண்டு முதலாளித்துவக் கட்சிகளில் இருந்து முறித்துக்கொண்டு ஒரு தொழிலாளர் கட்சியை உருவாக்க வேண்டும் என்று தொழிலாள வர்க்கத்திற்கிடையே, நிலவிய பரவலான உணர்வுகளுக்கு அப்பால் CIO தலைமை அத்தகைய அபிவிருத்திகள் எதையும் எதிர்த்தது.

சுயாதீனமான அரசியல் போரட்டம்

CIO இன் வெடித்தெழும் உருவாக்கம் அமெரிக்க தொழிலாள வர்க்கத்தின் முன்னர், சுயாதீனமான அரசியல் போராட்ட பாதையை தேர்ந்தெடுக்க வேண்டிய அவசியத்தை வைத்தது.

அமெரிக்க ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் தலைவர்களோடு நடத்தப்பட்ட ஒரு விவாதத்தில் அப்போது மெக்சிக்கோவில் தஞ்சம் புகுந்து இருந்த ரஷ்யப்புரட்சியின் இணைத்தலைவர் லியோன் ட்ரொட்ஸ்கி, அமெரிக்க தொழிலாள வர்க்கம் இரண்டு கட்சி முறையிலிருந்து முறித்துக்கொண்டு தனது சொந்த கட்சியை உருவாக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்தினர். இந்த பணிக்கு தீர்க்கமான உருவம் தருவதற்காக, அவர் ஒரு தொழிலாளர் கட்சியை கட்ட வேண்டிய கோரிக்கையை முன்மொழிவு செய்தார்.

ஒரு தொழிலாளர் கட்சி உருவாக்கப் பட வேண்டும் என்ற அழைப்பு, ஒரு இடைமருவு மற்றும் சோசலிச கோரிக்கைகளோடு இணைக்கப்பட வேண்டுமென்று ட்ரொட்ஸ்கி முன்மொழிவு செய்தார். அந்த வழியில், மிக முன்னேறிய தொழிலாளர்கள் அரசியல் அடிப்படையில் தெளிவுபடுத்தப்பட்டு ஒரு சோசலிச முன்னோக்கிற்கு வென்றெடுக்கப்பட முடியும்.

லூயிஸ் மற்றும் இதர CIO தலைவர்கள் அந்தக் கருத்திற்கு வளர்ந்து வந்த செல்வாக்கிற்கு மத்தியிலும் ஒரு தொழிலாளர் கட்சி அமைப்பதை எதிர்த்து வந்தனர். ரூஸ்வெல்ட்டிற்கு எதிராக வேலைநிறுத்தங்களை நடத்துவதற்கு லூயிஸ் விருப்பத்தோடு இருந்தாலும், இரண்டு கட்சி முறையிலிருந்து அரசியல் அடிப்படையில் முறித்துக்கொள்ள வேண்டும் என்று அழைப்பு விடுக்க மறுத்துவிட்டார். இந்த வழியில் லூயிஸ் தொழிலாள வர்க்கத்தின் போர் குணத்தை, முதலாளித்துவ சமூக ஒழுங்கிற்கு எதிராக ஒரு அரசியல் போராட்டம் நடத்துவதிலிருந்து திசை திருப்ப உதவினார். தொழிற்சங்க நடவடிக்கை என்பது ரொட்டிக்கும் வெண்ணைக்குமான பொருளாதார பிரச்சனையோடு மட்டுப்படுத்தப்பட்டது.

ஒரு தொழிலாளர் கட்சியை உருவாக்க வேண்டுமென்ற கோரிக்கையை எதிர்ப்பதில் CIO விற்கு அமெரிக்க கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு காட்டியது. அது சோவியத் ஒன்றியத்தில் ஸ்ராலினிச அதிகாரத்துவத்தை வலுப்படுத்த அணிவகுத்து அதன் பின்னால் நின்றதுடன் மற்றும் 1917ல் நடைபெற்ற ரஷ்யப் புரட்சியில் போல்ஷிவிக் கட்சிக்கு வழிகாட்டிய சோசலிச சர்வதேச முன்னோக்கிற்கு விசுவாசமாக இருந்து வந்த சோசலிச சக்திகளை களையெடுத்தது. அமெரிக்க கம்யூனிஸ்ட் கட்சி முக்கியமான CIO தொழிற்சங்கங்களில் கணிசமான செல்வாக்கு பெற்றிருந்தது. கிரம்ளின் கட்டளையிட்ட மக்கள் முன்னணிக் கொள்கையின் அடிப்படையை பின்பற்றி அமெரிக்க ஸ்ராலினிஸ்டுகள் ரூஸ்வெல்ட்டுடன் ஒரு கூட்டணியை ஆதரித்தனர்.

இது கணிசமான விளைவுகளை ஏற்படுத்தியது. இரண்டாம் உலகப்போரை தொடர்ந்து உடனடியாக உருவான காலகட்டத்தில் தனது அதிகாரம் உச்சக் கட்டத்தில் இருந்த நேரத்திலேயே கூட CIO அமெரிக்காவின் தென்பகுதியில் தொழிற்சங்கங்களை அமைக்க முடியவில்லை. அதில் வெற்றி பெறுவதற்கும் ஜிம் குரோவ் இனப்பிரிவினைக்கு எதிராக ஒரு போராட்டத்தை நடத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டது. என்றாலும், ஜனநாயகக் கட்சியிடமிருந்து பிரிந்து செல்ல மறுத்துவிட்ட காரணத்தினால் CIO அத்தகையதொரு அறை கூவலை முடுக்கிவிடவதற்கு இயலாததுடன் மற்றும் விரும்பவில்லை. அதற்கு முக்கிய காரணம் தென்பகுதியில் வெள்ளையர் மேலாதிக்கத்தை அப்பட்டமாக கொண்டு இயங்கி வந்த மாகாண நிர்வாகங்களை ஜனநாயகக் கட்சி தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்து.

போருக்கு பிந்தைய வேலைநிறுத்த அலை

இரண்டாம் உலகப் போரை தொடர்ந்து அமெரிக்க வரலாற்றில் மிகப் பெரிய வேலை நிறுத்த அலை வெடித்தது. இந்த இயக்கத்திற்கு பதிலளிக்கின்ற வகையில் அமெரிக்க ஆளும் வர்க்கம் தொழிலாள வர்க்கத்திற்கு குறிப்பிடத்தக்க பொருளாதார சலுகைகளை தந்தது. இந்த சீர்திருத்தவாத கொள்கையை அமெரிக்க முதலாளித்துவம் ஏற்றுக்கொள்ள முடிந்ததற்கு காரணம் என்னவென்றால் உலக பொருளாதார மேலாதிக்கத்தில் அது சவால்விட முடியாத நிலையில் இருந்தது.

அதே நேரத்தில், ஐரோப்பா, ஆசியா மற்றும் இதர பகுதிகளில் அதன் பூகோள நலன்களுக்கு அச்சுறுத்தலாக சமூகப் புரட்சி தோன்றும் என்பதற்கு பதிலளிக்கின்ற வகையில் அமெரிக்கா பனிப்போரை போர் தொடக்கியது. இதற்கு அமெரிக்க தொழிலாளர் இயக்கத்திலிருந்து சோசலிஸ்ட்டுகளையும் தீவிரவாதிகளையும் விரட்டிவிட்டு அமெரிக்க தொழிலாளர் இயக்கத்தை நடுநிலைப்படுத்துவதை நோக்கமாக கொண்டு ஒரு அரசியல் மற்றும் கருத்தியல் தாக்குதலை நடத்த வேண்டி வந்தது மற்றும் கலாச்சார மற்றும் அறிவுஜீவிதனமான அமைப்புகளில் களையெடுப்பை நீடிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

CIO இன் தலைமை மக்கார்த்தி (McCarthy) காலத்து கம்யூனிஸ்ட்டுகளை பழிவாங்கும் மூர்க்கத்தனமான நடவடிக்கைகளில் கலந்து கொண்டு அரசாங்கத்திற்கு போர்குணம் கொண்டவர்களை அடையாளம் காட்டுவதில் உதவியது. இது தொழிற்சங்க அதிகாரத்துவத்திற்குள் மிகத்தீவிரமான வலதுசாரி சக்திகளின் மேலாதிக்கத்தை மேலும் உறுதிப்படுத்தியது. இந்தப் பழிவாங்கும் நடவடிக்கைகளில் குறிவைக்கப்பட்ட பல தொழிலாளர்கள் மற்றும் தொழிற்சங்க தலைவார்கள் 1930களிலும் 1940களின் தொடக்கத்திலும் போர் குணம் கொண்ட பிரச்சாரத்தை ஆரம்பித்தவர்களாகும் மற்றும் தலைவர்களாகவும் இருந்தவர்களாவர்.

1955TM CIO மற்றும் AFL மீண்டும் இணைந்து கொள்ள முடிவு செய்தது இரண்டு தொழிற்சங்க கூட்டமைப்புக்களும் அடிப்படை பிரச்சனைகளில் உடன்பட்டிருப்பதை எடுத்துக்காட்டியது. CIO தலைவர் Walter Reuther, மற்றும் AFL தலைவர் George Meany ஆகிய இருவரும் உத்தியோகபூர்வமாக அமெரிக்க தொழிலாளர் இயக்கத்தை வர்க்க ஒத்துழைப்பு, தேசியவாதம் மற்றும் கம்யூனிச-எதிர்ப்போடு முடிச்சு போட்டனர்.

ஒரு சிறிது காலத்திற்கு, AFL-CIO ஆல் தனது உறுப்பினர்களுக்கு கணிசமான அளவிற்கு மேம்பாடுகளை வென்றெடுக்க முடிந்தது. பொருளாதார செழுமை மற்றும் அமெரிக்காவின் தொழிற்துறையில் உலக மேலாதிக்கம் தொடர்ந்து நீடித்துக் கொண்டிருந்ததன் காரணமாக தொழிலாள வர்க்கத்திற்கு சலுகைகளை வளங்க முடிந்தது. அந்த ஒரு கொள்கை ஒரு பொதுவான உடன்பாட்டினால் ஆதரவைப் பெற்றது, ஆனால் ஆளும்தட்டிற்குள் அது சவால்விடமுடியாத தன்மை கொண்ட ஒன்றல்ல.

இதன் விளைவு என்னவென்றால், அமெரிக்க தொழிலாளர் இயக்கம் சாத்தானுடன் ஒரு பேரத்தைச் செய்தது. தொழிற்சங்களில் சேர்ந்துள்ள தொழிலாளர்களுக்கு ஊதியங்கள் மற்றும் சலுகைகள் உயர்த்தப்பட்டதற்கு பதிலாக தொழிலாள வர்க்கத்தின் போர் குணத்தை கட்டுப்படுத்துவது மற்றும் அவற்றை அமெரிக்காவின் பெருநிறுவன அடிப்படை நலன்களுக்கு எந்த வகையிலும் தீங்கு செய்யாத வழிகளில் திசைதிருப்பி விடுவது என்ற AFL-CIO இன் சேவைகளை பெருநிறுவனங்கள் பெற்றன. இந்தக் கொள்கைகள் அமெரிக்க தொழிலாள வர்க்கத்தின் வர்க்க நனவை அழிப்பதற்கு வழிவகுத்து, அது வென்றெடுத்த நலன்களை இல்லாதொழிப்பதை எதிர்த்து நிற்கும் ஆற்றலையும் சிதைத்தது.

தேசிய அரசை அடிப்படையாக கொண்ட தொழிற்துறை உற்பத்தி தொடர்ந்து மேலாதிக்கம் செலுத்தி வந்ததால் அது AFL-CIO இற்கு சாதகமாக செயல்பட்டது. அமெரிக்காவின் நாட்டு எல்லைகளுக்குள் திட்டவட்டமாக வரையறைப்படுத்தப்பட்ட தொழிற் சந்தையை அமெரிக்க பெருநிறுவனங்கள் சார்ந்திருந்தன என்ற உண்மையை தொழிற்சங்கத் தலைமை கணக்கில் எடுத்துக்கொண்டது. இந்த சூழ்நிலைகளில் வேலைநிறுத்த நடவடிக்கை அல்லது ஒரு வேலை நிறுத்தம் பற்றிய அச்சுறுத்தலேகூட முதலாளிகள் மீது அழுத்தங்களை கொண்டு வர முடியும்.

பல விமர்சகர்கள் AFL-CIO அமைக்கப்பட்டதை வலுவான நிலையின் ஒரு அடையாளம் என்று எடுத்துக்கொண்டனர். 1955ல் நடைபெற்ற இணைப்பு ஏற்கனவே நெருக்கடியிலும், வீழ்ச்சியிலும் சிக்கியிருந்த ஒரு இயக்கத்தின் வெளிப்பாடாகும். ஒப்புநோக்கும்போது சாதகமான காலகட்டம் என்று கருதப்பட்ட 1950களின் கடைசியிலும் 1960களின் தொடக்கத்திலும் தொழிற்சங்களில் சேர்ந்திருந்த உறுப்பினர்களின் எண்ணிக்கை மொத்த தொழிலாளர்களோடு ஒப்பிடும்போது ஆண்டிற்கு ஆண்டு குறைந்து கொண்டே வந்தது.

அமெரிக்க பொருளாதார மேலாதிக்கத்திற்கு சவால்

அமெரிக்க தொழிற்துறை சர்வதேச போட்டி நாடுகளிடமிருந்து பிரதானமாக ஜேர்மனி மற்றும் ஜப்பானிடமிருந்து வளர்ந்து வந்த அழுத்தங்கள் காரணமாக அமெரிக்கத் தொழில்துறையின் கட்டுப்பாடு அமெரிக்கச் சந்தைகளிலேயே சிதையத் தொடங்கியது, சிறப்பாக 1960களின் கடைசியிலும், மற்றும் 1970களின் கடைசியிலும் AFL-CIO இன் ஒட்டுமொத்த முன்னோக்கு வீழ்ச்சியடைய தொடங்கியது.

1970èOTM, AFL-CIO இன் முன்னணி தொழிற்சங்கங்கள் சிறப்பாக ஐக்கிய கார் தொழிலாளர்கள் கூட்டுறவுவாத கொள்கையின் பக்கம் திரும்ப ஆரம்பித்தனர். அரசாங்கத்தோடும் முதலாளிகளோடும் சேர்ந்து கொண்டு அமெரிக்க தொழிற்துறையின் போட்டி போடும் திறனை அதிகரிப்பதற்காக உற்பத்தி செலவுகளை குறைப்பதற்கும் வேலை வாய்ப்புகளை வெட்டுவதற்கும் ஊதியங்களையும் வேலைநிலைமைகளை குறைப்பதற்கும் ஆதரவாக நின்றனர்.

இது, ஆளும் வர்க்கத்தின் கொள்கையில் ஒரு பிரதான மாற்றத்தை ஏற்படுத்துகின்ற கட்டத்தை உருவாக்கியது. வர்க்க சமரசத்திற்கு பதிலாக தொழிலாள வர்க்கத்திற்கு எதிரான முனைப்பான தாக்குதலில் ஈடுபட்டார்கள். 1981ல் வேலைநிறுத்தம் செய்து வந்த விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அதிகாரிகளை ரொனால்ட் றேகன் வேலை நீக்கம் செய்தமை, தொழிற்சங்கத்தை உடைப்பதில் நேரடியாக அரசாங்கமே முன்னின்று நடவடிக்கை எடுப்பதை குறிப்பதாக அமைந்தது, அந்தச் சூழ்நிலையில், AFL-CIO அமெரிக்க தொழிலாளர்களை முற்றிலும் தயாரற்ற நிலையில் கைவிட்டுவிட்டது.

விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு அதிகாரிகளது உரிமைகளை பாதுகாத்து நிற்பதற்கு AFL-CIO மறுத்து விட்டதற்கு காரணம் என்னவென்றால், தொழிற்துறையில் தொழிலாளர்களை தீவிரமாக திரட்டுகின்ற எந்த நடவடிக்கையும் உடனடியாக அமெரிக்க அரசாங்கத்தோடு அரசியல் மோதலில் ஈடுபடுகின்ற நிலையை ஏற்படுத்தியிருக்கும். இந்தச் சூழ்நிலை ஏற்படுவதை AFL-CIO அதிகாரத்துவம் விரும்பவில்லை. ஏற்கனவே, தொழிற்சங்க தலைமை ஜனநாயகக் கட்சிக்காரர் ஆன ஜிம்மி கார்டரின் முந்திய நிர்வாகத்தின்கீழ் நேரடியாக அரசாங்கத்துடனும், முதலாளிகளுடனும் ஒத்துழைக்கின்ற ஒரு கொள்கையை கொண்டு வந்து, கிரிஸ்லர் நிறுவனத்தை 1979ல் காப்பாற்றியதை போல், தொழிற்சாலைகளை மூடுவதற்கும், தொழிலாளர்களின் ஒட்டுமொத்த ஆட்குறைப்பிற்கும், ஊதிய வெட்டிற்கும் வகை செய்யும் கொள்கையை ஆரம்பித்து வைத்தனர்.

எவ்வாறிருந்தபோதிலும், அமெரிக்காவிலும், சர்வதேசரீதியாகவும் தொழிலாள வர்க்கம் உடனடியாகவும், வலுவான அடிப்படையிலும் PATCO கட்டுப்பாட்டு அதிகாரிகளை றேகன் பதவி நீக்கம் செய்த்தற்கு பதிலளித்தனர். கனடாவில் விமானக் கட்டுப்பாட்டு அதிகாரிகள் தங்களது அமெரிக்க சக அதிகாரிகளுக்கு ஒற்றுமையை காட்டுவதற்காக நடவடிக்கை எடுத்தனர். அமெரிக்காவில் வேலை நிறுத்தம் செய்வதற்கு ஒரு அழைப்பு விடுக்கப்பட்டிருக்குமானால், அது மகத்தான ஆதரவை பெற்றிருக்கும் என்பதை 1981 செப்டம்பரில் வாஷிங்டன் DC இல் நடைபெற்ற பாரிய ஒருமைப்பாடு நாள் பேரணி எடுத்துக்காட்டியது.

AFL-CIO இந்த ஆதரவை திரட்டி PATCO கட்டுப்பாட்டு அதிகாரிகளை தற்காத்து நிற்க நடவடிக்கை எடுத்திருக்குமானால் றேகன் நிர்வாகத்தின் அடித்தளமே ஆடியிருக்கும். அதற்கு மாறாக, AFL-CIO விமானக் கட்டுப்பாட்டு அதிகாரிகளை கைவிட்டது மற்றும் அரசாங்கம் PATCO தலைவர்களை சிறையில் அடைத்ததையும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களை நிரந்தரமாக வேலை நீக்கம் செய்து மற்றும் தொழிற்சங்கத்தை சிதைத்தபோது எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்காமல் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தது.

இதே முறை 1980கள் முழுவதிலும் திரும்ப கடைபிடிக்கப்பட்டது, AFL-CIO ஒட்டுமொத்தமாக ஊதிய வெட்டு மற்றும் தொழிற்சங்க சிதைப்பிற்கு எதிராக நடைபெற்ற பல்வேறு கசப்பான வேலை நிறுத்தங்களை சீர்குலைத்து தனிமைப்படுத்தியது. கிரேஹவுண்டில் A.T. Massey நிலக்கரி நிறுவனம், பெல்ப்ஸ்டாட்ஜ் துத்தநாக நிறுவனம், ஹார்மல் மாமிச தயாரிப்பு நிறுவனம், பிட்ஸ்பர்க் எஃகு நிறுவனம் கான்டினென்டல் ஏர்-லைன்ஸ் மற்றும் டசின் கணக்கான நிறுவனங்களில் தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டு குற்றச்சாட்டுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. மற்றும் மறியல் செய்யும் போது கொலையும் செய்யப்பட்டனர். இந்தத் தாக்குதல்களுக்கு எதிரான பரவலான தொழிலாளர் பிரிவுகளை திரட்டுவதற்கோ, அல்லது பழிவாங்கப்பட்ட தொழிலாளர்களை பாதுகாத்து நிற்பதற்கோ எந்த ஒரு வழக்கிலும் AFL-CIO முயற்சி எதையும் மேற்கொள்ளவில்லை.

தொழிலாள வர்க்கத்தை பலிகொடுத்து அடிப்படை தொழிற்துறையை சீரமைக்க வேண்டுமெற்ற அமெரிக்க முதலாளித்துவத்தின் ஒரு விரிவான கொள்கைக்கு உதவுகின்ற வகையில் ஓர் அங்கமாக தொழிற்சங்கங்களை உடைக்கின்ற பெருநிறுவனங்களுக்கு AFL-CIO ஒத்துழைத்து வந்தது. ஊதியங்களை குறைத்து, உற்பத்தி வேகத்தை அதிகரித்து மில்லியன் கணக்கான வேலைவாய்ப்புகளை ஒழித்துக்கட்டி இலாபமீட்டும் திறனை பெருக்குவதற்கு தொழிற்சங்கங்கள் உதவின. வெளிநாட்டு போட்டி நிறுவனங்களுடன், அமெரிக்க வர்த்தக நிறுவனங்கள் போட்டியிடுகின்ற வகையில் உதவுவதற்காக அமெரிக்க தொழிலாளர்கள் இந்த தியாகங்களை செய்ய வேண்டுமென்று இந்த அதிகாரத்துவம் நியாயப்படுத்தியது. இந்த சலுகைகள் காட்டும் கொள்கை நடைபெற்ற அதே நேரத்தில் வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு எதிராரன வெறுப்பும் வளர்க்கப்பட்டது. அவை அமெரிக்காவின் வேலைவாய்ப்புக்களை பறித்துக்கொள்வதாக பழிபோடப்பட்டது.

1980களின் இறுதியில் AFL-CIO ஒரு வெற்று கூடாகவே இருந்தது. தொழிலாள வர்க்கத்தின் மத்தியில் அது பெரும்பாலும் வயது முதிர்ந்த தொழிலாளர்களிடம்தான் அடித்தளத்தை நிலைநாட்டி வந்தது. போர்குணத்தை சிதைத்துவிட்ட பின்னர் காட்டிக் கொடுத்தல்கள் மூலம் மில்லியன்கணக்கான தொழிலாளர்களிடம் இருந்து அந்நியப்பட்ட பின்னர், AFL-CIO தொழிற்சங்க அதிகாரத்துவம் சில தேவைகளுக்காக தொழிலாள வர்க்கத்திற்கு எதிரான ஒரு துணைக் கருவி என்று கருதிய பெருநிறுவனங்களின் தயவில்தான் வாழ்ந்துகொண்டிருக்கிறது, அவை.

ஜனநாயகக் கட்சியின் கிளின்டன் நிர்வாகம் 1992ல் தேர்ந்தெடுக்கப்பட்டது, AFL-CIO இற்கு புத்துயிர் கொடுக்க எதுவும் செய்யவில்லை. மாறாக பெருநிறுவன குற்றச் செயல்கள் தொடர்ந்து நடைபெற்றன, அவை கொள்ளைக்கார ஆட்சியாளர் காலத்தையும் மிஞ்சுவதாக அமைந்துவிட்டது. 1930களுக்கு பின்னர் பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையில் நிலவிய இடைவெளி மிக பரந்துவிரிந்து சென்றது. மிகப்பெரும்பாலானவர்களது வாழ்க்கைத்தரம் முடங்கிவிட்டது. மக்களில் மிகப்பெரும் பணக்காரர்களாக இருக்கும் ஒரு சதவீதத்தினர் தங்களது செல்வத்தின் பங்கு மகத்தான அளவிற்கு உயர்வதை பார்த்தனர்.

AFL-CIO சீரழிந்து கொண்டு வந்ததற்கு சமாந்தரமாக உலகம் முழுவதிலும் தொழிற்சங்கங்கள் சிதைந்துகொண்டு வந்தன. இதற்கு காரணம் அல்லது பிரதானமான காரணம்கூட கூடாத தலைவர்கள் மற்றும் தவறான தந்திரோபாயங்களோ அல்ல. முதலாளித்துவத்தையும் கூலி உழைப்பையும் தொழிற்சங்கவாதம் ஏற்றுக்கொண்டதன் அடிப்படையிலேயே அவற்றின் பங்கு பிறப்பில் இருந்தே மட்டுப்படுத்தப்பட்ட ஒன்றாகும். தங்களால் முடிந்தவரை தொழிலாளர்களது உழைப்பு சக்திக்கு சந்தை மதிப்பை பெற்றுத்தர முயன்றார்கள். வரலாற்றுரீதியாக தொழிற்சங்கங்கள் எப்போதுமே வர்க்கப் போராட்டம் தொடர்பாக இரட்டை அணுகுமுறையை கடைப்பிடித்து வருகின்றன.

உற்பத்தியின் பூகோளமயமாக்கல் தொழிற்சங்கங்களுக்குள்ளேயே வர்க்க ஒத்துழைப்பை நோக்கிய போக்குகள் பெருகுவதற்கு காரணமாகிவிட்டதுடன், தொழிற்சங்கங்கள் தொழிலாள வர்க்கத்தின் அமைப்புக்கள் என்ற நிலையே அற்ற நிலைமைக்கு வளர்ந்துவிட்டன. பன்னாட்டு பெருநிறுவனங்களின் வளர்ச்சிக்கும் அவற்றின் விளைவாக தேசிய தொழில் சந்தை இல்லாதொழிக்கப்பட்ட நிலைமையில் தொழிற்சங்கங்கள் தங்களது மிக மட்டுப்படுத்தப்பட்ட எதிர்க்கும் பங்களிப்பையும் கைவிடுவதே அவர்களின் பிரதிபலிப்பாக இருந்தது. பெருநிறுவனங்களுக்கு அழுத்தங்கள் கொடுத்து ஊதியத்தை உயர்த்துவதற்கு பதிலாக, மலிவான ஊதிய தொழிலாளர்களை பூகோள அடிப்படையில் தேடிக்கொண்டிருக்கிற பெரிய முதலீட்டாளர்கள் மற்றும் பெருநிறுவனங்களை ஈர்ப்பதற்காக ஊதிய வெட்டுக்களையும், சலுகைகளையும் இழக்க வேண்டுமென்று தொழிலாளர்களுக்கு அழுத்தங்கள் கொடுக்க முயன்று வருகின்றன.

வரலாற்று மற்றும் அரசியல் படிப்பினைகளை பெற்றாக வேண்டும்

தொழிற்சங்கங்கள் என்ற ஊடகம் மூலம் தங்களது வாழ்க்கை தரத்தையும் வேலை நிலைகளையும் மேம்படுத்துவதற்கும் தற்காத்து நிற்பதற்கும் முயன்று பலதசாப்தங்களுக்கு மேலாக அமெரிக்க தொழிலாள வர்க்கம் மகத்தான ஆற்றலை செலவிட்டதுடன் பல தியாகங்களையும் செய்தது. AFL-CIO வினால் திணிக்கப்பட்ட தேசியவாத சீர்திருத்த அணுகுமுறையின் உள்ளார்ந்த மட்டுப்படுத்தல்களால் இந்த சகல முயற்சிகள் அனைத்தும் தடுக்கப்பட்டுவிட்டன.

இந்த கசப்பான அனுபவங்களிலிருந்து படிப்பினைகளை பெறவேண்டிய தருணம் இது. AFL-CIO இனை ''சீர்திருத்தவோ'' அல்லது தொழிலாளவர்க்கத்தின் நலனுக்காக செயற்படுமாறு அழுத்தம் கொடுக்கவோ இயலாது. 1935ஐ விட தற்போது புதிய அமைப்புக்களை உருவாக்க வேண்டிய தேவை மிக தீவிரமாக முன்வந்துள்ளது. எவ்வாறிருந்துபோதிலும், இந்த முறை தொழிலாள வர்க்கம் 1930களில் செயல்படுத்த முடியாமல் தடுக்கப்பட்ட நடவடிக்கையை, அதாவது தனது சொந்த அரசியல் கட்சியை அமைப்பதற்கு நடவடிக்கை எடுத்தாக வேண்டும்.

உழைக்கும் மக்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சனைகளான, வேலைகள், ஊதியங்கள், வேலைநிலைமைகள், ஓய்வூதியங்கள், சுகாதார சேவை, கல்வி, ஜனநாயக உரிமைகள், போருக்கு எதிரான போராட்டம் ஆகியவை யாவும் அரசியல் பிரச்சனைகளாகும். அந்த பிரச்சனைகளை தொழிற்சங்க நடவடிக்கையின் மட்டத்தில் தீர்த்து வைக்க முடியாது. ஒரு பரந்துபட்ட சுயாதீனமான அரசியல் இயக்கம் தொழிலாள வர்க்கத்திற்கு தேவை. அது நிதி ஆதிக்ககுழுவின் நலன்களுக்கு மாறாக தொழிலாளர்களது தேவைகளை முன்னிறுத்தும் ஒரு வேலைத்திட்டத்தை கொண்டதாக அமைந்திருக்க வேண்டும். அதாவது, ஒரு சோசலிச வேலைதிட்டத்தை கொண்டதாக இருக்க வேண்டும்.

முதலாளித்துவ சந்தையின் கோரிக்க்ைகளுக்கு ஏற்ப தங்களது தேவைகளை தொழிலாளர்கள் மட்டுப்படுத்தி கொண்டு செயல்பட வேண்டும் என்ற கருத்தை கைவிட வேண்டியது அவசியமாகும். மாறாக சமூக உற்பத்தி மனிதனது தேவைகளை திருப்திபடுத்துவதற்கு ஏற்றவகையில் அமைய வேண்டும் என்று தொழிலாள வர்க்கம் கோர வேண்டும்.

அத்தகையதொரு அரசியல் இயக்கத்தை கட்டுவதன் மூலம்தான் புதிய போர் குணமிக்க மற்றும் பொருளாதார போராட்டத்திற்கான ஜனநாயக அமைப்புக்களை தொழிற்சாலைகளில், பணியாற்றும் இடங்களில் மற்றும் தொழிலாள வர்க்க சமுதாயங்களில் உருவாக்க முடியும்.

முதலாளித்துவத்தின் இன்றைய பூகோள தன்மையை கவனத்தில் கொண்டு தொழிலாள வர்க்கத்தின் சர்வதேச ஐக்கியத்திற்கு போராடுவது மற்றும் இலாப முறைக்கு எதிராக போராடுவதோடு என்பதோடு பின்னிப்பிணைந்து நிற்கிறது. இந்த ஐக்கியம் இலாபநோக்கு முறையை பாதுகாத்து நிற்கும் அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் அரசியல்வாதிகளிடமிருந்து தொழிலாள வர்க்கத்தின் அரசியல் சுயாதீனத்தின் அடித்தளத்திலேயே ஸ்தாபிக்க முடியும்.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved