World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Assassination of Sri Lanka's foreign minister threatens a return to civil war

இலங்கை வெளியுறவு அமைச்சரின் படுகொலை மீண்டும் உள்நாட்டு யுத்தத்திற்கான அச்சுறுத்தல்

By K. Ratnayake
15 August 2005

Back to screen version

இலங்கை வெளியுறவு அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமர் கடந்த வெள்ளியன்று படுகொலை செய்யப்பட்டமை, நாடு பூராவும் அரசியல் பதட்டநிலைமைகளையும் மீண்டும் உள்நாட்டு யுத்தத்திற்கு திரும்புவதற்கான ஆபத்தையும் பரந்தளவில் உக்கிரப்படுத்தியுள்ளது. ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவின் உள் வட்டாரத்தின் உறுப்பினரான கதிர்காமர், தமிழீழ விடுதலைப் புலிகளுடன் வாதத்திற்கிடமான பொது நிவாரண கட்டமைப்பை ஸ்தாபிப்பதிலும் மற்றும் சமாதானப் பேச்சுக்களை மீண்டும் ஆரம்பிப்பதற்கான அரசாங்கத்தின் முயற்சிகளிலும் நெருக்கமாக ஈடுபட்டவராகும்.

வெளியுறவு அமைச்சர் மத்திய கொழும்பில் புல்லர்ஸ் ஒழுங்கையில் உள்ள கடுமையான பாதுகாப்புக்கு உட்பட்ட அவரது பிரத்தியேக வீட்டிலேயே சுட்டுக் கொல்லப்பட்டார். பொலிஸ் அறிக்கைகளின்படி, ஒரு கூட்டத்தில் கலந்துகொண்டு வீடு திரும்பிய அவர், தனது தனிப்பட்ட நீச்சல் தடாகத்தில் நீந்த சென்றுள்ளார். தடாகத்தில் இருந்து வெளியேறிய பின்னர், சுமார் 100 மீட்டர்கள் தூரத்தில் அயல் வீட்டின் காலியான மேல் மாடியில் ஒரு ஸ்னைபர் துப்பாக்கியை தயார் நிலையில் வைத்திருந்த ஒரு அடையாளந்தெரியாத துப்பாக்கிதாரியால், கதிர்காமர் மார்பு, தலை மற்றும் காலிலும் சுடப்பட்டார். அவர் உடனடியாக தேசிய வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டிருந்த போதிலும் சுமார் இரண்டு மணித்தியாலங்களின் பின்னர் உயிரிழந்தார்.

இந்தப் படுகொலை, ஐ.நா செயலாளர் நாயகம் கொபி அன்னான், அதே போல் ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் மற்றும் அமெரிக்க, பிரித்தானிய, ஜப்பான் மற்றும் இந்திய அரசாங்கங்கள் உட்பட சர்வதேச கண்டனங்களை உடனடியாகத் தூண்டியது. இது ஒரு "முட்டாள்தனமான கொலை" என கண்டனம் செய்த அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் கொண்டோலீஸா ரைஸ், இலங்கையில் தற்போதைய யுத்த நிறுத்தம் தொடர்ந்து நீடித்திருப்பதை உறுதிப்படுத்துமாறு அனைத்துக் கட்சிகளுக்கும் அழைப்புவிடுத்தார். இந்த துரிதமான பிரதிபலிப்புகள், தீவின் குலுங்கிப்போயுள்ள "சமாதான முன்னெடுப்புகள்" இப்போது ஆபத்துக்குள்ளாகியுள்ளது என்பதையிட்டு சர்வதேச ரீதியில் ஆளும் வட்டாரங்கள் கடுமையாக கவலை கொண்டுள்ளதையே வெளிப்படுத்துகின்றன.

படுகொலை நடந்து சில மணித்தியாலங்களில், தேசிய பாதுகாப்புச் சபையை கூட்டிய ஜனாதிபதி குமாரதுங்க, நாடு பூராவும் அவசரகால நிலைமையை அமுல்செய்தார். "தீவிரமான பாதுகாப்பு நடவடிக்கைகளையும் இந்த கட்டுப்பாடற்ற பயங்கரவாத நடவடிக்கை பற்றிய விளைபயனுள்ள புலன்விசாரணையையும்" சாத்தியமாக்கும் சாக்குப் போக்கின் கீழ், இந்த பிரகடனமானது தேடுதல் மற்றும் குற்றச்சாட்டுக்கள் இன்றி தடுத்து வைத்தல் மற்றும் ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்துவதற்கான உரிமை ஆகிய மிகப்பரந்த அதிகாரங்களை பாதுகாப்பு படைகளுக்கு வழங்குகிறது. இந்த சட்டங்களின் கீழ், ஜனாதிபதியால் ஊடக தணிக்கையையும் திணிக்க முடியும்.

ஹெலிகொப்டர்களின் துணையுடன் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொலிசாரும் இராணுவ சிப்பாய்களும் கதிர்காமர் கொலைக்கான குற்றவாளிகளை தேடிக்கண்டுபிடிப்பதற்காக அனுப்பப்பட்டனர். கொழும்புக்கு வெளியில் செல்லும் பிரதான பாதைகளில் வீதித் தடைகள் அமைக்கப்பட்டதோடு கடற் கரையோரங்களில் கடற்படை படகுகள் நிறுத்தப்பட்டிருந்தன. ஸ்னைபர் பயன்படுத்தப்பட்டிருந்த வீட்டு உரிமையாளர்கள் உட்பட குறைந்தபட்சம் 14 தமிழர்கள் இந்த சதித்திட்டத்துடன் அவர்களின் தொடர்பு பற்றி விசாரிப்பதற்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள். இதுவரை எவருக்கும் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்படவில்லை.

பொலிசாரும் இராணுவத்தினரும் இந்தக் கொலைக்கு விடுதலைப் புலிகளை உடனடியாக குற்றம்சாட்டினர். வெளியுறவு அமைச்சர் கதிர்காமரை விடுதலைப் புலிகளே கொலை செய்துள்ளனர் என்பதில் எந்த சந்தேகமும் கிடையாது என பொலிஸ் மா அதிபர் சந்திரா பெர்னான்டோ ஊடகங்களுக்குத் தெரிவித்தார். அவரது கருத்தை இராணுவப் பேச்சாளர் பிரகேடியர் தயா ரத்னாயக்கவும் ஆதரித்தார். ஆயினும், இது வரை வெளிவந்துள்ள பொலிஸ் ஆதாரங்கள் வெறும் சூழ்நிலைகளைப் பொறுத்தவையே: ஒரு முக்காலி, கிரனேட் லோஞ்சர் மற்றும் கொலையாளிகளால் விட்டுச் செல்லப்பட்ட சைனைட் குளிசைகள் உட்பட ஆயுதங்களும் இதில் உள்ளடங்குகின்றன.

அரசியல் கட்சிகளதும் கொழும்பில் உள்ள ஊடகங்களதும் கூட்டுப் பாடல்களும் விடுதலைப் புலிகளையே கண்டனம் செய்கின்றன. விடுதலைப் புலிகளுடன் சுனாமிக்குப் பிந்திய நடவடிக்கை முகாமைத்துவ கட்டமைப்பை (பொதுக் கட்டமைப்பு) கைச்சாத்திட்டதற்காக அரசாங்கத்தை கண்டனம் செய்து வருகின்ற சிங்களப் பேரினவாதக் கட்சிகளான மக்கள் விடுதலை முன்னணியும் (ஜே.வி.பி) ஜாதிக ஹெல உறுமயவும் மிகப் பெருங்கூச்சல் இடுகின்றன. இந்த உடன்படிக்கை நாட்டைக் காட்டிக்கொடுப்பதற்கு சமமானது என பிரகடனம் செய்த ஜே.வி.பி ஜூன் மாதம் ஆளும் கூட்டணியில் இருந்து விலகிக்கொண்டதோடு, "தேசிய நலன்களுக்கு எதிராக அதிகாரிகளால் வழங்கப்படும் ஆணைகளை புறக்கணிக்குமாறு" பொலிஸுக்கும் இராணுவத்திற்கும் அது அழைப்பு விடுத்தது.

கதிர்காமரை தங்களில் ஒருவர் எனக் கூறிக்கொள்ளும் ஜே.வி.பி, "இலங்கையின் உண்மையான புதல்வன் வீழ்ந்துவிட்டார்" என பிரகடனம் செய்ததோடு விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை "வன்னியில் ஒழிந்திருக்கும் இரத்த வெறிகொண்ட பாசிசவாதி" என கண்டனம் செய்தது. தனது இனவாத பிரச்சாரத்தை தீவிரப்படுத்தும் சபதத்துடன் ஜே.வி.பி தெரிவித்ததாவது: "உலகின் மிக மோசமான குற்றவாளிகளில் ஒருவருக்கு இந்த நாட்டை கொடுப்பதில்லை என்ற எமது உறுதிப்பாடு சக்திவாய்ந்த முறையில் வளர்ச்சியடையும்... பயந்தாங்கொள்ளியாக வாழ்வதை விட பொது மனிதத்துவத்துக்காக போராடி சாவதே சிறந்தது என நாம் நம்புகிறோம்."

இன்றைய ஐலன்ட் செய்தியிதழின் ஆசிரியர் தலையங்கம், அரசாங்கம் மற்றும் எதிர்க் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியுடன் (ஐ.தே.க) சேர்த்து "சமாதான முன்னெடுப்பையும்" கரகரத்த குரலில் கண்டனம் செய்கின்றது. "அவர்கள் போலித்தனமான சமாதானம் என்ற பெயரில், முன்னெப்போதும் இல்லா விதத்தில் தேசிய பாதுகாப்பு நலன்களை ஆபத்துக்குள் தள்ளியுள்ளனர். அவர்கள் விடுதலைப் புலிகள் தங்களது மேலதிக நலன்களுக்காக யுத்த நிறுத்த உடன்படிக்கையை பயன்படுத்திக்கொள்ள அனுமதித்துள்ளனர்... அவர் படுகொலை செய்யப்பட்டவுடன், அரசாங்கம் தேடுதல் நடவடிக்கைகள், சோதனைகள் மற்றும் பரிசோதனை நிலையங்களை நாடியுள்ளது. இந்த நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு கதிர் கொல்லப்படும் வரை அரசாங்கம் காத்திருந்தது ஏன்?"

நேற்று நடைபெற்ற பத்திரிகையாளர் மாநாட்டில், ஜே.வி.பி, ஜாதிக ஹெல உறுமய மற்றும் குமாரதுங்கவின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி (ஸ்ரீ.ல.சு.க) உட்பட அரசாங்கக் கட்சிகளும் விடுதலைப் புலிகளை கண்டனம் செய்தன. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, "சர்வதேச சமூகத்தையும் ஊடகங்களையும் வன்முறைகளைக் கைவிடுமாறு விடுதலைப் புலிகளுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்" என கேட்டுக்கொண்டதோடு "கொலையாளிகளை சட்டத்தின் முன் நிறுத்தவும்" சபதம் செய்தார்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் மறுப்பு

கதிர்காமரை விடுதலைப் புலிகளே படுகொலை செய்தார்கள் என்பது நிச்சயமாக சாத்தியமானதாகும். வெளியுறவு அமைச்சர் என்றளவில், விடுதலைப் புலிகளை சர்வதேச ரீதியில் ஒரு பயங்கரவாத இயக்கமாக வகைப்படுத்தும் அரசாங்கத்தின் பிரச்சாரத்தில் அவர் முன்னணி பாத்திரம் வகித்தார். விடுதலைப் புலிகளும், பொதுக் கட்டமைப்பு உடன்படிக்கையை கைச்சாத்திடுவதில் ஏற்பட்ட நீண்ட தாமதங்களாலும் மற்றும் தீவின் கிழக்கில் விடுதலைப் புலிகளில் இருந்து பிரிந்து சென்ற கருணா என்றழைக்கப்படும் வி. முரளீதரன் தலைமையிலான குழு தமது காரியாளர்கள் மீது மேற்கொண்டுவரும் தாக்குதல்களாலும் மிகவும் அதிருப்தியடைந்திருநத்தனர்.

பாதுகாப்புப் படைகள், குறிப்பாக இராணுவ புலணாய்வுத் துறை கருணா குழுவை ஆதரிப்பதாக விடுதலைப் புலிகள் மீண்டும் மீண்டும் கண்டனம் செய்துள்ளனர். விடுதலைப் புலிகளின் உயர்மட்ட தலைவர்களில் ஒருவரும் பேச்சாளருமான அன்டன் பாலசிங்கம், கிழக்கில் "ஒரு கேடுகெட்ட நிழல் யுத்தத்தை" முன்னெடுப்பதாக இராணுவத்தை குற்றஞ்சாட்டியதோடு யுத்த நிறுத்தம் முறிவடையுமானால் அரசாங்கமே அதற்கு பொறுப்பாளி என பிரகடனம் செய்தார். விடுதலைப் புலிகளே கதிர்காமரை படுகொலை செய்திருந்தால், அது, கருணா குழுவை கைவிடு, பொதுக் கட்டமைப்பு உடன்படிக்கையை அமுல்படுத்துவதோடு சமாதான பேச்சுக்களை மீண்டும் தொடங்கு அல்லது புதுப்பிக்கப்பட்ட யுத்தத்திற்கு முகங்கொடு என அரசாங்கத்திற்கு விடுக்கும் இறுதி நிபந்தனைக்கு சமனானதாகும்.

ஆயினும், கதிர்காமர் கொலையில் சம்பந்தப்படவில்லை என விடுதலைப் புலிகள் வெளிப்படையாக மறுத்துள்ளனர். சனியன்று வெளியிடப்பட்ட அறிக்கையொன்றில், விடுதலைப் புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளர் சு.ப தமிழ்செல்வன், கொழும்பு சிந்திக்காமல் பதட்டத்துடன் முடிவுகளுக்கு பாய்வதாக கண்டனம் செய்ததோடு முழு விசாரணைக்கும் அழைப்புவிடுத்தார். "இலங்கை ஆயுதப் படைகளில் உள்ள பிரிவுகள், யுத்த நிறுத்தத்தை கீழறுப்பதற்காக மறைமுகமான திட்டத்துடன் செயற்படுவது எமக்குத் தெரியும்," என அவர் தெரிவித்தார். அரசாங்கம் இந்தப் படுகொலையின் குற்றவாளிகளை "உட்புறமாக தேட வேண்டும்" என பின்னர் அவர் மேலும் தெரிவித்திருந்தார்.

தமிழ்செல்வன் நேற்று ஊடகங்களுடன் உரையாடிய போது: "நாங்கள் இந்த நடவடிக்கையை (கொலையை) கடுமையாக கண்டனம் செய்கின்றோம்... இந்த கொலையுடன் விடுதலைப் புலிகளை சம்பந்தப்படுத்துவது மிகவும் தவறானது மற்றும் அது தற்போதைய நிலைமையை மேலும் மோசமாக்கும்... விடுதலைப் புலிகளுக்கு அவரைக் கொல்லவேண்டிய தேவை இல்லை," என தெரிவித்தார்.

அரசாங்கப் பேச்சாளர் விடுதலைப் புலிகளின் மறுப்பை ஏற்றுக்கொள்ளாத அதே வேளை, கதிர்காமரின் படுகொலையை சூழ பல பதிலளிக்கப்படாத கேள்விகள் உள்ளன. கொழும்பில் விடுதலைப் புலிகளை கண்டனம் செய்பவர்கள் மிகவும் அடிப்படையான கேள்விகளுக்கு பதிலளிக்கவில்லை: இந்தக் கொலையில் புலிகளின் உள்நோக்கம் என்ன? தமிழ்செல்வனின் கருத்துக்கள் சுட்டிக்காட்டியது போல், விடுதலைப் புலிகள் பொதுக் கட்டமைப்பு ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்தவும் பேச்சுக்களை மீண்டும் தொடங்கவும் நெருக்கிவருகின்றனர். அரசாங்கத்தை சமாதான முன்னெடுப்புகளுடன் முன் செல்ல நெருக்குவதே பாலசிங்கத்தின் எச்சரிக்கைகளின் முயற்சியாக இருந்தது.

கதிர்காமரின் கொலையில் அரசியல் ரீதியில் மிகவும் இலாபமடையவிருப்பது, விடுதலைப் புலிகளுடனான எந்தவொரு உடன்பாட்டையும் விட்டுக்கொடாமல் எதிர்க்கும் ஜே.வி.பி யும் ஜாதிக ஹெல உறுமயவும், இராணுவத்தின் பிரிவுகளும் மற்றும் அரச எந்திரமுமேயாகும். இந்தப் படுகொலை பொதுக் கட்டமைப்பை அமுல்படுத்தும் மற்றும் சமாதானப் பேச்சுக்களை மீண்டும் தொடங்கும் முயற்சிகளுக்கு தடங்கலை ஏற்படுத்தும். அரசாங்கம் யுத்த நிறுத்தத்தை தொடர்ந்தும் கடைபிடிப்பதாக பிரகடனப்படுத்திய போதிலும், யுத்தத்திற்கு மீண்டும் திரும்புவதற்கான ஆபத்து உயர்ந்தமட்டத்தில் உள்ளது. இந்த வாய்ப்பு மிகவும் பிற்போக்கான இனவாத சக்திகளின் வரவேற்பைப் பெறும்.

சிங்கள தீவிரவாதிகளுடன் கூட்டணியில் இருக்கும் சாத்தியம் கொண்ட இராணுவத்தின் பிரிவுகள், தமது இலக்குகளை அடைவதற்காக ஒரு முன்னணி அமைச்சரை கொலை செய்வதற்கு மிகவும் இலாயக்கானவையே. இந்தக் கொலையின் உண்மையான சூழ்நிலைகள் பல கேள்விகளை எழுப்புகின்றன. அரசியல் படுகொலைகளில் ஒரு நீண்ட வரலாற்றைக் கொண்டுள்ள தீவில், குமாரதுங்கவின் வலது கையான கதிர்காமர், மிகக் கடுமையாக பாதுகாப்பு வழங்கப்பட்ட ஒரு அரசியல்வாதியாகும். அவரது இல்லத்தை நோக்கத்தக்கவாறு உள்ள சாத்தியமான இடங்களை அவரது பாதுகாவலர்கள் முன்னெச்சரிக்கையாக சோதனை செய்யாதது ஏன்?

பொலிசாரின்படி, பத்து நாட்களுக்கு முன்னர் கதிர்காமரின் இல்லத்திற்கு அருகில் உளவுபார்த்ததாக இரு விடுதலைப் புலி சந்தேகநபர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். சண்டே டைம்ஸ் பத்திரிகையின் பந்தி எழுத்தாளரும் இராணுவத்துடன் உயர் மட்ட தொடர்புகளைக் கொண்டவருமான இக்பால் அத்தாஸ், நேற்றைய பத்திரிகையில், வெளியுறவு அமைச்சருக்கு எதிரான அச்சுறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக இராணுவ புலணாய்வுத் துறையின் இராணுவ இயக்குனர் எச்சரித்ததாக பிரகடனம் செய்துள்ளார். இன்னும், அவரது வீட்டில் இருந்து 100 மீட்டர் தூரத்தில், ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட துப்பாக்கிதாரிகள் ஸ்னைபர் துப்பாக்கிகள் மற்றும் கிரனேட் லோஞ்சர்களை பொருத்தவும் மற்றும் தமது இலக்கிற்காக பல நாட்கள் அல்லது அதற்கு மேலும் காத்திருக்கும் இயலுமையைப் பெற்றுள்ளார்கள்.

கதிர்காமர் தன்னைப் பாதுகாப்பதற்காக, அதிரடி இராணுவக் கமான்டோக்களின் ஒரு பெரும் படையையும் மற்றும் அமைச்சரவை பாதுகாப்புப் பிரிவின் சிப்பாய்களையும் கொண்டிருந்தது மட்டுமன்றி, அவரது வீடு மத்திய கொழும்பில் செல்வச் சிறப்புள்ளவர்கள் வாழும் கடுமையான இராணுவ ரோந்துக்குட்பட்ட பிரதேசத்தில் அமைந்துள்ளது. எந்தவொரு தமிழரும் பாதுகாப்பு உறுப்பினர்களால் சந்தேகத்துடன் நோக்கப்படுவதோடு சாதாரணமாக விசாரணைக்கு உட்படுத்தப்படுவர். துப்பாக்கிதாரிகள் ஒரு சாத்தியமான இடத்தில் நிலைகொள்வதற்கு வசதியை ஏற்படுத்திக்கொண்டுள்ளதோடு யார் கண்ணிலும் படாமல் தப்பிச் செல்லவும் முடிந்துள்ளது. சண்டே டைம்ஸ் பத்திரிகையின்படி, கதிர்காமரின் பாதுகாப்பு விபரங்கள் கொலையாளிகளுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதற்குப் பதிலாக, வீதித் தடைகளை ஸ்தாபிப்பதற்கு இரண்டு மணித்தியாலங்கள் கடந்துள்ளதோடு கொலையாளிகள் "தப்பிச் செல்வதற்கு போதுமான நேரமும்" வழங்கப்பட்டுள்ளது.

இராணுவத்தில் எதிர்ப்பு

கொழும்பு ஊடகங்கள் படுகொலையை அனுமதித்த "பாதுகாப்பு தவறுகள்" பற்றி கடுமையான விமர்சனங்களை கொண்டுள்ளன. எடுத்துக்காட்டாக, கதிர்காமர் அயலவர்களை எதிர்க்க விரும்பாததால் அவரது வீட்டுக்கு அருகில் உள்ள கட்டிடங்களில் தேடுதல் நடத்தவில்லை என்ற பொலிஸாரின் நகைப்புக்கிடமான சாக்குப் போக்கை அவர்கள் நிராகரித்துள்ளனர். ஆனால் வெளிப்படையானதை ஆலோசிப்பதற்கு ஆய்வாளர்களுக்கு துணிவில்லை: இராணுவம் அல்லது முன்னாள் இராணுவ சிப்பாய்கள் உட்பட பொதுக் கட்டமைப்பு உடன்படிக்கையை எதிர்த்தவர்கள் இந்தக் கொலையை செய்துவிட்டு குற்றத்தை விடுதலைப் புலிகள் மீது சுமத்துவதில் ஈடுபட்டிருக்கலாம். விடுதலைப் புலிகளின் முன்னைய படுகொலைகளில் நுட்பமான துப்பாக்கிச் சூடுகளை விட தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களே தரக்குறியீடுகளாக இருந்துள்ளன என்பதையும் சுட்டிக்காட்ட வேண்டும்.

குறிப்பிடத்தக்க வகையில், தடயங்கள் விடுதலைப் புலிகளையே சுட்டிக்காட்டுகின்றன என குமாரதுங்க நேற்று பிகடனம் செய்த அதேவேளை, அவரின் முதலாவது பிரதிபலிப்பு மிகவும் மாறுபட்டதாகவே இருந்தது. சனிக்கிழமை வெளியான அறிக்கையில், "அரசியல் எதிரிகள் மோதலுக்கு சமாதான மாற்றம் காண்பதை எதிர்ப்பதோடு இன முரண்பாட்டிற்கு பேச்சுவார்த்தை மூலமான அரசியல் தீர்வுக்கான முயற்சிகளை கீழறுக்க முடிவு செய்துள்ளன," என ஜனாதிபதி குற்றம் சாட்டினார். இந்தக் கருத்து உறுதியற்றதாக இருந்தாலும், இராணுவம் அதேபோல் ஜே.வி.பி மற்றும் ஜாதிக ஹெல உறுமய ஆகியைவை இதில் உள்ளடங்குகின்றன.

கடந்த வாரங்களில், குமாரதுங்க இராணுவத்தின் சில பிரிவுகளுடன் முரண்பாடுகளை கொண்டிருந்தார். திருகோணமலையின் மத்திய பகுதியில் ஒரு பெளத்த சிலையை வைத்த சிங்கள பேரினவாத கும்பலுக்கு ஆத்திரமூட்டும் வகையில் ஆதரவளித்தமைக்காக அவர் ரியர் அட்மிரால் சரத் வீரசேகரவை இடம்மாற்ற கட்டளையிட்டார். இந்த நடவடிக்கை, விடுதலைப் புலிகளுக்கும் கருணா குழுவுக்கும் இடையில் கூர்மையான மோதல்களை ஏற்கனவே ஏற்படுத்தியுள்ள ஒரு பிராந்தியத்தில் இனவாத பதட்டங்களை உக்கிரப்படுத்துவதற்காக வேண்டுமென்றே ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன.

ஜூலை 26 அன்று உயர்மட்ட இராணுவ அலுவலர்களின் கூட்டமொன்றில், பொதுக் கட்டமைப்பை அமுல்படுத்துவதற்கு குமாரதுங்க அவர்களின் ஆதரவைக் கோரினார். அதே கூட்டத்தில், கிழக்கில் விடுதலைப் புலி செயற்பாட்டாளர்களுடன் போரிடுவதற்கு பயங்கரவாத தடைச் சட்டத்தையோ அல்லது அவசரகால நிலைமையையோ ஜனாதிபதியால் அமுல்படுத்த முடியுமா என வீரசேகர குறிப்பாக கேள்வியெழுப்பினார்.

கடந்த வார முற்பகுதியில், பூனெவ கடற்படை பயிற்சி முகாமில் பயிற்சியை நிறைவு செய்தோருக்கான விழாவில் வீரசேகர உணர்ச்சியைத் தூண்டும் வகையில் உரையாற்றினார். விடுதலைப் புலிகளின் கொலைகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க மறுப்பதானது "பயந்தாங்கொள்ளித் தனத்தையும் கோழைத் தனத்தையும் காட்டுவதற்கேயாகும்" என பிரகடனம் செய்தார். விடுதலைப் புலிகள் தமது இராணுவ நிலைகளை கட்டியெழுப்ப அனுமதிப்பதாக யுத்த நிறுத்த உடன்படிக்கையை கண்டனம் செய்த அவர், "நாங்கள் யுத்தத்தின் ஊடாக சமாதானத்தை ஸ்தாபிக்க தயாராக இருக்க வேண்டும்" என அங்கிருந்தவர்களுக்கு தெரிவித்தார்.

பாதுகாப்பு அமைச்சர் என்ற வகையில், குமாரதுங்க இராணுவ உயர்மட்டத்தினர் மத்தியிலான எதிர்ப்பை பற்றி நன்கு அறிவார். கதிர்காமரை கொன்றவர் யாராயினும் சரி, அவர், எவரும் படுகொலையில் இருந்து பாதுகாப்பாக இல்லை என்ற செய்தியையே தனக்கு அனுப்பியுள்ளார் என்பதையிட்டு குமாரதுங்க நனவுடன் உள்ளார். அவரது பிந்திய அறிக்கைகள் ஒரு புறம் இருக்க, கொலையாளிகளை தேடி "உள் புறம் பார்க்க வேண்டிய" தேவை இருக்கின்றது என்பதில் அவர் நம்பிக்கை கொண்டுள்ளார் என்பதையே குமாரதுங்கவின் ஆரம்ப கருத்துக்கள் தெளிவுபடுத்துகின்றன.

கதிர்காமரின் படுகொலையானது கொழும்பில் தொடர்ந்துகொண்டிருக்கும் அரசியல் நெருக்கடிக்கு மத்தியிலேயே நடைபெற்றுள்ளது. சமாதான முன்னெடுப்புகள் சம்பந்தமாக ஆளும் கும்பல் ஆழமாக பிளவுகண்டுள்ளது. கூட்டணியில் இருந்த ஜே.வி.பி விலகிக்கொண்ட பின்னர், பாராளுமன்றத்தில் சிறுபான்மையாக விடப்பட்டுள்ள குமாரதுங்கவின் அரசாங்கம், அதன் நீண்டகால எதிரியான ஐ.தே.க வின் மெளன ஆதரவில் தங்கியிருக்கின்றது. எந்தவொரு பிரதான கட்சியும் ஜனத்தொகையில் குறிப்பிடத்தக்க பிரிவினரின் முழுமையான ஆதரவைப் பெற்றிருக்காத அதேவேளை, விலை ஏற்றம் மற்றும் வளர்ச்சிகண்டுவரும் வறுமை மற்றும் வேலையின்மைக்கு எதிராக ஆர்ப்பாட்டங்களும் வேலை நிறுத்தங்களும் அதிகரித்துவருகின்றன.

குறிப்பிடத்தக்க வகையில், தற்போதைய அதிகார சமநிலையை ஒரு புதிய தேர்தல் சீர்படுத்தும் என எவரும் நம்பாததால் எந்தவொரு பிரதான கட்சியும் புதிய தேர்தலுக்கு அழைப்பு விடுக்காமல் உள்ளன. முழு பாராளுமன்ற அமைப்பும் ஒரு முட்டுக்கட்டையை எட்டியுள்ளதோடு எல்லா பிரதான கட்சிகளும் எதேச்சதிகார ஆட்சியைப் பற்றி அக்கறை செலுத்துகின்றன. பெரும் வர்த்தகர்கள் வெளியிடும் லங்கா மந்த்லி டைஜஸ்ட் (Lanka Monthly Digest) சஞ்சிகையின் ஜூலை மாத வெளியீட்டில், "இலங்கையின் சிறந்த நலன்களுக்கு ஒரு இரக்கமுள்ள எதேச்சதிகாரம் சிறந்த அமைப்பாக இருக்கலாம்" என அதன் ஆசிரியர் பகிரங்கமாகவே பிரகடனம் செய்கின்றார். எவரும் அவரை விமர்சிக்கவில்லை.

அவசரகால நிலை பிரகடனத்திற்கோ அல்லது பொலிஸ் மற்றும் துருப்புக்களை பெருமளவில் குவித்ததற்கோ பாராளுமன்ற எதிர்க் கட்சிகளும் சரி அல்லது ஊடகங்களும் சரி எந்தவொரு எதிர்ப்பையும் வெளிப்படுத்தவில்லை. இந்த நடவடிக்கைகள் அடிப்படையில் கதிர்காமரின் கொலையாளிகளை இலக்காகக் கொண்டதல்ல. மாறாக, எல்லாவற்றுக்கும் மேலாக, தொழிலாள வர்க்கத்தின் ஜனநாயக உரிமைகளுக்கும் மற்றும் அவர்களது வாழ்க்கை நிலைமைகள் மீது முன்னெடுக்கப்பட்டிருக்கும் தாக்குதல்களுக்கு எதிரான அவர்களது எதிர்ப்புக்கும் எதிராக இலக்கு வைக்கப்பட்டவையாகும். கடந்த வாரம், படுகொலைக்கு சற்று முன்னதாக, கல்வி வெட்டுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்த ஆயிரக்கணக்கான பல்கலைக்கழக மாணவர்களை பொலிஸ் கொடூரமாகத் தாக்கியதோடு பலரைக் கைது செய்தது.

தற்போதைய அரசியல் நெருக்கடி பற்றிய ஒரு அறிக்கையில், தொழிலாள வர்க்கம் பெரும் ஆபத்துக்களுக்கு முகங்கொடுத்துள்ளதாக சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க) எச்சரித்தது. சோ.ச.க, எல்லா வகையிலான இனவாதத்தையும் நிராகரிக்குமாறும் ஒவ்வொரு முதலாளித்துவ பிரிவுகளில் இருந்தும் முழுமையான அரசியல் சுயாதீனத்தின் அடிப்படையில் தமது போராட்டங்களை ஐக்கியப்படுத்துமாறும் தொழிலாளர்களுக்கு அழைப்புவிடுக்கின்றது. கதிர்காமரின் படுகொலை அத்தகைய எச்சரிக்கைகளின் முன்னறிவிப்பையும் மற்றும் யுத்த ஆபத்திற்கும் சர்வாதிகார வழிமுறைகளுக்கு திரும்புவதற்கு எதிராகவும் மற்றும் அதன் சொந்த வர்க்க நலன்களுக்காக போராடுவதற்கும் தொழிலாள வர்க்கம் சோசலிச வேலைத் திட்டத்தை முன்னெடுக்க வேண்டிய தேவையை வலியுறுத்த மட்டுமே உதவுகிறது.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved