World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா

Why is the media burying new revelations about 9/11?

செய்தி ஊடகம் 9/11 புதிய வெளிப்பாடுகளை ஏன் புதைத்துவிடுகிறது?

By Joseph Kay and Barry Grey
11 August 2005

Back to screen version

9/11 தாக்குதல்களுக்கு ஓர் ஆண்டிற்கு முன்னரே செப்டம்பர் 11 விமானக் கடத்தல்காரர்கள் நால்வரை அல்-கொய்தா இயக்கத்தினர் என்று ஓர் இராணுவ உளவுத்துறைப் பிரிவு அடையாளம் கண்டிருந்தது என வெளிவந்துள்ள செய்தி அதிகார வட்டங்களில் இருந்து மறுப்புக்களையும் எதிர்ப்புக்களையும் கொடுத்துள்ளபோதிலும், பெரும்பாலான செய்தி ஊடகத்தினர் இத்தகவல் முழுவதையும் புறக்கணித்துள்ளனர்.

சில கடத்தல்காரர்களை அரசாங்கம் நீண்ட காலமாக கண்டறிந்து கண்காணித்து வந்திருந்தனர், அவர்களுள் தலைவர் எனக் கூறப்படும் மகம்மது அட்டாவும் இருந்தார் என்ற உண்மை நியூயோர்க் டைம்ஸின் முதல் பக்கக் கட்டுரை ஒன்றில் செவ்வாய்க்கிழமை வெளிவந்தது. தேசியச் சட்ட மன்றத்தின் குடியரசுக்கட்சி உறுப்பினர் கர்ட் வெல்டனையும் ஒரு முன்னாள் அநாமதேய உளவுத்துறை அதிகாரி ஒருவரையும் மேற்கோளிட்டு, இக்கட்டுரை 2000 ஆண்டு நடுப்பகுதியில் Able Danger என்ற பென்டகன் பிரிவு அட்டாவையும் செப்டம்பர் 11 விமானக் கடத்தல்காரர்களான மற்ற மூவரையும் அமெரிக்காவில் செயல்பட்டுவந்த அல்-கொய்தா பிரிவு இயக்க உறுப்பினர்கள் என்று அடையாளம் கண்டதாக இக்கட்டுரை தெரிவிக்கிறது.

Able Danger இந்தத் தகவலை FBI க்கு அனுப்ப வேண்டாம் என்று இராணுவத்தின் சிறப்புச் செயற்பாடுகள் குழு தடை செய்துவிட்டதாகவும் முன்னாள் உளவுத்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.

இந்த முன்னாள் அதிகாரி, 9/11 குழு அதிகாரிகளுக்கு அக்டோபர் 2003ல் இத்தகவலை எடுத்துரைத்த பிரிவு ஒன்றில் தானும் இருந்ததாகக் கூறினார். 9/11 விசாரணைக் குழு இந்த Able Danger ஐப் பற்றித் தன்னுடைய இறுதி அறிக்கையில் எந்தக் குறிப்பையும் காட்டவில்லை என்பதோடு, உலக வர்த்தக மையம் மற்றும் பென்டகனைக் கடத்தல் விமானங்கள் மூலம் தாக்குவதற்கு முன்னரே அட்டா, அல் கொய்தா உறுப்பினர் என அரசாங்கப் பிரிவு எதுவும் அடையாளம் கண்டிருந்தது என்பது பற்றியும் வெளியிடவில்லை.

Able Danger பற்றி, அப்பொழுது தேசியப் பாதுகாப்பு துணை ஆலோசகராக இருந்த ஸ்டீபன் ஹாட்லி உட்பட நிர்வாகத்தின் உயர்மட்ட அதிகாரிகளிடம் 2001 செப்டம்பர் தொடக்கத்தில் அல்லது அக்டோபரில் தான் தெரிவித்திருந்ததாகவும் வெல்டன் கூறியிருக்கிறார்.

செவ்வாய்க்கிழமையும், புதன்கிழமையும் செப்டம்பர் 11 குழு உறுப்பினர்களும் அரசாங்க அதிகாரிகளும் இந்த வெளிப்பாடுகளின் முக்கியத்துவத்தை குறைப்பதற்கு பரபரப்புடன் செயல்ப்பட்டனர்; அதேவேளை செய்தி ஊடகம் இக்கதையை பகிரங்கப்படுத்தாமல் விட்டுவிட்டது. புதன் கிழமை அன்று நியூ யோர்க் டைம்ஸ் தன்னுடைய முந்தைய நாள் முதல் பக்க அறிவிப்பை தொடரந்து ஒரு கட்டுரையை தெளிவில்லா வகையில் 13ம் பக்கத்தில் கீழே பிரசுரித்தது.

வாஷிங்டன் போஸ்ட் உள்பக்கம் ஒன்றில் ஐந்து பத்திகள் அசோசியேடட் பிரஸ் தகவல் ஒன்றை வெளியிட்டது, அது இந்த வெளிப்படுத்தல்களின் முக்கியத்துவத்தைப் பற்றி எதையும் விளக்கவில்லை. ேவால் ஸ்ட்ரீட் ஜேர்னல், டைம்ஸ் வெளியிட்டதை பொருட்படுத்தவில்லை; பெரும்பாலான அமெரிக்க செய்தித் தாட்களும் இவ்வாறுதான் நடந்து கொண்டன.

செவ்வாய்க்கிழமை தொலைக்காட்சி செய்திகளில் மிகக் குறைவாகவே கூறப்பட்ட இத்தகவல் புதனன்று செய்திக் கவிவளைவில் இடம் பெறவில்லை.

இந்த மெளனத்திற்கு என்ன காரணம்? ஒரு அமெரிக்க தேசியச் சட்ட மன்ற உறுப்பினரும், ஒரு முன்னாள் உளவுத்துறை அதிகாரியும், செப்டம்பர் 11 விமானக்கடத்தல்காரர்கள் சிலரின் அடையாளங்கள் நடவடிக்கை பற்றி தாக்குதல்களுக்கு ஓராண்டு முன்னரே அமெரிக்க இராணுவம் அறிந்திருந்தது, ஆனால் அந்தத் தகவலின் அடிப்படையில் மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க அவர்கள் தடுக்கப்பட்டனர் என்று குற்றம் சாட்டியுள்ளனர்.

தேசியச் சட்டமன்ற உறுப்பினர் Able Danger இன் பணிகளை பற்றித் தாக்குதல் நடந்த ஒரு மாதத்திற்குள்ளாக நிர்வாக அதிகாரிகளிடம் தெரிவித்ததாக கூறுகிறார்; முன்னாள் உளவுத் துறை அதிகாரி இதேபோல் 9/11 தாக்குதல்களைப்பற்றி விசாரணை நடத்திய குழுவின் அலுவலர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது என்று கூறுகிறார். ஆயினும்கூட இந்த உண்மைகள் பற்றிய தகவல், நியூ யோர்க், வாஷிங்டன் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டு கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளுக்கு பின்னர் இந்த வாரம்தான் வெளிவருகிறது.

Able Danger பற்றிய கூற்றுக்கள் உண்மையென்றால், அரசாங்கத்திற்குள் மிகப் பெரிய மூடிமறைத்தல் வேலை நடந்துள்ளது என்பதைச் சுட்டிக்காட்டுகிறது; இந்த மூடிமறைத்தலுக்கு அப்பாவித்தனமான விளக்கம் ஏதும் இருக்கமுடியாது. அவை இன்னும் கூடுதலான முறையில் அமெரிக்க வெளியுறவு, உள்நாட்டுக் கொள்கையில் ஆழ்ந்த விளைவுக் கொடுத்துள்ள ஒரு நிகழ்வு பற்றிய அரசியல் வரலாற்றின் அரசாங்கத் தகவலுக்கு பெரும் அடி கொடுக்கிறது. இருப்பினும்கூட செய்தி ஊடகம் பெரும் மெளனத்தை சாதிக்கிறது.

பல வேளைகளில் காண்பது போலவே, செய்தி ஊடகம் செய்தியின் ஆழ்ந்த தன்மைக்கு முற்றிலும் தலைகீழான முறையில் அதைப் பற்றித் தகவலை கொடுக்கிறது.

Able Danger பற்றி கூறப்பட்டுள்ளது அல்லது தகவல் கொடுக்கப்பட்டுள்ளது அனைத்துமே தவிர்க்கப்படுதல், குழப்பமேற்படுத்துதல் என்ற வெளிப்பாடுகளாகத்தான் உள்ளன. கடந்த காலத்தில் செய்யத் தவறியவை, கூறப்பட்ட பொய்கள் இவற்றை மூடிமறைக்கும் பரபரப்பில் புஷ் நிர்வாகத்தின் அதிகாரிகள் மற்றும் 9/11 குழு உறுப்பினர்கள் தங்கள் தகவலைச் சரியாகச் சொல்லுவதில் தோல்வியடைந்து விட்டனர் போலும். தாங்களே தடுமாற்றம் அடைந்து முரணான அறிக்கைகளையும் முட்டாள்தனமான மறுப்புக்களையும் தெரிவிக்கின்றனர்.

செவ்வாய் அன்று நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் பாதுகாப்பு செயலர் டொனால்ட் ரம்ஸ்பெல்ட், Able Danger பற்றித் தனக்கு ஏதும் தெரியாது என்று அறிவித்தார். "எனக்கு ஏதும் தெரியாது. இன்று காலை வரை அதைப்பற்றி நான் ஏதும் கேள்விப்பட்டதில்லை. நம் அதிகாரிகள் அதைப் பற்றி ஆராய்ந்து கொண்டிருக்கின்றனர்."

Able Danger குழு 1999ல் அப்பொழுது முப்படைகளின் கூட்டுத் தலைவராக இருந்த Henry Shelton இன் வழிகாட்டுதலின் கீழ் அமைக்கப்பெற்றதாக வெல்டன் கூறியிருக்கிறார். இருந்தும்கூட செவ்வாயன்று ஷெல்டன் அப்படிப்பட்ட பிரிவு ஒன்றுக்கு இசைவு கொடுத்ததாக தனக்கு நினைவில்லை என்றுள்ளார்.

புஷ்ஷின் தற்போதைய தேசிய பாதுகாப்பு ஆலோசகரான ஹாட்லி இந்தத் தகவல்கள் வெளிப்பாட்டை பற்றி பகிரங்கமாகக் கருத்து ஏதும் தெரிவிக்கவில்லை.

பென்டகன் செய்தித் தொடர்பாளர் ஒருவர் வேறுவிதமான தந்திரத்தைக் கையாண்டுள்ளார்; அதன் உட்குறிப்பின்படி இதைப்பற்றிய விசாரணை எதுவும் பயங்கரவாத அமைப்புக்களுக்குத்தான் உதவியாக இருக்கும். "9/11 தாக்குதல்களுக்கு முன்னால் ஏராளமான உளவுத்துறை நடவடிக்கைகள் இருந்தன. நமக்குத் தீமை பயக்கக் கூடிய நிலையில் இருப்பவர்களுக்கு நலன் தரும் வகையில் செய்திகளை வெளியிடுவது மிகவும் பொறுப்பற்றதனமாக இருக்கும்" என்று லெப்டினன்ட் கேர்னல் கிறிஸ்டோபர் கான்வே கூறியிருக்கிறார்.

குழுவின் தலைவரும் இணைத்தலைவரும் Able Danger உடன் அக்டோபர் 2003ல் பேசியது பற்றி மறுக்கவில்லை என்றாலும், குழு அலுவலர்களுக்கு மகம்மது அட்டா என்ற பெயர் வழங்கப்பட்டது பற்றி நினைவில்லை என்றனர். நியூ யோர்க் டைம்ஸின் புதன் கிழமை பதிப்பின்படி, குழுவின் தலைவரும் முன்னாள் நியூ ஜேர்சி குடியரசுக் கட்சி கவர்னருமான தோமஸ் கீன், 9/11 குழு அலுவலக உறுப்பினர்கள், அட்டாவினுடைய பெயர் அவர்களிடம் அப்பொழுதோ பின்னர் பென்டகனில் இருந்து ஆவணங்கள் கொடுக்கப்பட்டபோதோ கொடுக்கப்படவில்லை என்பதில் "உறுதியாக" இருந்தனர் என்று கூறினார்.

குழுவின் இணைத் தலைவரும் முன்னாள் இண்டியானா ஜனநாயகக் கட்சி தேசிய சட்ட மன்ற உறுப்பினருமான லீ ஹாமில்டனும் அதேபோன்ற அறிக்கையைத்தான் கொடுத்துள்ளார். அசோசியேடட் பிரஸ் கூறுகிறது: "9/11 குழு அலுவலர்கள் Able Danger பற்றி ஆப்கானிஸ்தானில் இராணுவத்தினருடனான பேச்சுக்கள் ஒன்றில் அக்டோபர் 23 அன்று கேள்வியுற்றனர்; ஆனால் அலுவலர்கள் Able Danger க்கும் வெல்டன் குறிப்பிட்டுள்ள நான்கு பயங்கரவாதிகளில் எவருக்கும் இருந்த தொடர்பு பற்றி ஏதும் அறிந்ததாக நினைவு கூரவில்லை என்று ஹாமில்டன் கூறினார்."

ஹாமில்டனை மேலும் மேற்கொளிட்ட அசோசியேடட் பிரஸ் தெரிவிக்கிறது: "9/11 குழு அமெரிக்க அரசாங்கம் 9/11க்கு முன்னர் மகம்மது அட்டா அல்லது அவருடைய குழுவைப் பற்றி கண்காணித்ததாக எந்தத் தகவலையும் அறியவில்லை. நமக்கு அது பற்றித் தெரிந்திருக்குமேயாயின், அது அவர்களுடைய விசாரணையின் முக்கிய குவிப்பாக இருந்திருக்கும் என்பது வெளிப்படை."

இந்த அறிவுப்புக்களை அப்படியே உண்மை என்று வைத்துக் கொண்டாலும், Able Danger ருடைய பணி பற்றி குழு சிறிதும் குறிப்பிடத் தவறியது பற்றி அவை விளக்கவில்லை. செப்டம்பர் 11 தாக்குதல்கள் பற்றிய நீளமான அறிக்கையில், ஆவணங்களும் குறிப்புக்களும் ஏராளமாக தொகுக்கப்பட்டுள்ள இந்த அறிக்கையில் ஒரு இடத்தில் கூட குழுவானது பென்டகன் பிரிவு ஒன்று அல் கொய்தா உறுப்பினர்கள் அமெரிக்க மண்ணில் செயல்பட்டுக்கொண்டிருப்பது பற்றிய தகவலை திரட்டியிருப்பதை குறிக்கவில்லை. இதை எவ்விதம் விளக்குவது?

உண்மையில், Able Danger யாரைக் குறிவைத்திருந்தது என்பது பற்றிய தகவல் குழுவிற்கு கொடுக்கப்படவில்லை என்பது நினைத்துப் பார்க்க முடியாதது ஆகும். 9/11 குழுவிடம் அக்டோபர் 2003ல் Able Danger பற்றி கூறியவர்கள் வேறு எதை அதனுடன் தொடர்புபடுத்திக் கூறியிருக்க முடியும்?

செப்டம்பர் 11 தாக்குதல்களை பற்றி ஆராய்வதற்காக குழு பணிக்கப்பட்டது, வேண்டுமேன்றே இராணுவ உளவுத்துறை அலுவலர்களால் கொடுக்கப்பட்ட தகவல் மூடிமறைக்கப்படவேண்டும் என்ற முழு நனவுடனான முடிவு எடுக்கப்பட்டிருந்தால் ஒழிய இக்குழு ஐயத்திற்கிடமின்றி தனக்கு அவர்களால் தரப்பட்ட அறிக்கைகளை முழுவதும் தொடர்ந்திருக்கும். ஆயினும்கூட கீனும், ஹாமில்டனும் உளவுத் துறைக் குழு என்ன கண்டுபிடித்தது என்பதை குழுவில் இருப்பவர் எவரும் விசாரிக்கத் தேவையில்லை என்று நினைத்ததாகக் கூறுவதை நாம் நம்பவேண்டும் என்கின்றனர்.

குழு உறுப்பினர்களின் அறிக்கைகள் செய்தி ஊடகத்திடம் பேசிக் கொண்டிருந்த இராணுவ உளவுத்துறை அதிகாரியால் நேரடியாக மறுக்கப்பட்டது. ராய்ட்டர் தகவலின்படி, "முன்னாள் இராணுவ உளவுத்துறை அதிகாரி தான் நேரடியாகவே செப்டம்பர் 11 விசாரணைக்குழு அலுவலர்களிடம் ஆப்கானிஸ்தானத்தில் இருக்கும் அட்டா பற்றிக் கூறியதாகவும் தான் அமெரிக்காவிற்கு திரும்பி வந்த பின்னர் ஆவணங்களை அனுப்புவதாகக் கூறியபோதிலும், குழு அவரை மட்டம் தட்டியது என்று குறிப்பிட்டார்."

உளவுத்துறை அதிகாரி, குழு அலுவலர் இயக்குனர் Philip Zzelikow போன்ற ஒருவரிடம் தான் நேரடியாக அட்டா பற்றிக் கூறியதாவும் குறிப்பிட்டுத் தெரிவித்துள்ளார். 9/11 விசாரணைக்குழுவின் இயக்குனராக தேர்ந்தெடுக்கப்படுவதற்கு முன் ஜீலிகோ அப்பொழுது தேசிய பாதுகாப்பு ஆலோசகராக இருந்த கொண்டலீசா ரைசின் நெருங்கிய அதிகாரியாக இருந்தார். இதன் பின்னர் ரைஸ் வெளியுறவுத்துறை அமைச்சர் பதவிக்கு வந்த பின்னர் அவருக்கு மூத்த ஆலோசகராக பதவி உயர்வும் பெற்றார்.

இந்த வெளியீடுகளைப் பற்றி ஜீலிகோ இதுவரை கருத்துத் தெரிவிக்க மறுத்துள்ளார்.

டீன் மற்றும் ஹாமில்டன் கொடுத்துள்ள அறிக்கைகள் ஜீலிகோவிற்குக் கொடுத்துள்ள முன்கூட்டி தவிர்க்கும் பிறிதோர் இடத்திலிருந்ததாக காட்டுவதுபோல் தோன்றுகின்றன; அது அவருக்குக் கொடுக்கப்பட்டிருந்த தகவல்கள் குழுவின் விசாரணைக்கு பொருத்தமானவை அல்ல என்று கருதுகிறது.

Able Danger பிரிவின் நடவடிக்கைகள் பற்றியும், பின்னால் குண்டுத் தாக்குதல் நடத்திய விமானங்கள் கடத்தலில் ஈடுபட்டிருந்த மூன்று நபர்கள் மற்றும் அட்டாவின் தலைமையில் இயங்கிய அல்கொய்தா பிரிவுகளில் அதுவும் ஒன்று என்பதை பற்றி 9/11 குழு விளக்கத் தவறியதற்கு அப்பாவித் தனமான காரணம் ஏதும் இருக்க முடியாது. இந்தத் தகவல் பின் ஏன் மறைக்கப்படுகிறது?

ஏனெனில் இது மிகவும் அட்டூழியமான முறையில் உளவு அல்லது பாதுகாப்புத் துறைகளில் இருக்கும் குழுக்கள் ஏதேனும் ஒன்றில் சதித்திட்டம் இருப்பதைச் சுட்டிக் காட்டுகிறது; புஷ்ஷின் வெள்ளை மாளிகை வருங்கால விமானக் கடத்தல்காரர்களை காப்பதற்கும் அமெரிக்க மண்ணில் சில வடிவிலான பயங்கரவாத தாக்குதல் நடத்த அனுமதிக்கப் பேசாமல் இருந்தது பற்றியும் குறிப்பிடவேண்டிய தேவையே இல்லை. 9/11 விசாரணைக் குழு மற்றும் அதிகாரபூர்வச்செய்தி ஊடகம், ஜனநாயக, குடியரசுக் கட்சிகள் என்று அனைத்துமே அதிகாரத்துவ திறமையின்மை அல்லது நிறுவன அமைப்புத் தடுப்புக்களை விடவும் மிகக் கெடுநோக்குடைய ஒன்று எவ்வாறு மகத்தான அளவில் உளவுத் துறைத் தகவலில் தோல்வியுற்றதற்கு பொறுப்பு என்பதை தவிர்க்கும் முயற்சியில்தான் பெரும் குவிப்பைக் காட்டியிருக்கின்றன.

அதிகாரபூர்வமான பூசி மெழுகல்கள், அரைகுறை உண்மைகள், பொய்கள் இருப்பினும், சான்றுகளோ ஏதேனும் ஒருவிதத்தில் அரசாங்கத் தொடர்பு இருந்ததை சுட்டிக்காட்டுவது பெருகிக் கொண்டிருக்கிறது.

ஒரு விஷயம் உறுதியாக இருக்கிறது: 9/11 பெருந் துன்பம் இல்லாவிடில் அரசாங்கம் எண்ணெய் வளம் மிகுந்த மத்திய ஆசியா, பாரசீக வளைகுடா ஆகியவற்றில் வெளிப்படையான இராணுவவெறியை கொண்டு, தவிர்க்க முடியாத போர் என்ற கோட்பாட்டின் பேரில் படையெடுப்புக்களை சகித்துக்கொள்வதற்கான பொதுமக்கள் கருத்திற்கு திசை திருப்பியிருப்பது சாத்தியப்பட்டிருக்க முடியாது. அதேபோல், தேசிய பாதுகாப்பு, "பயங்கரவாதத்தின்மீதான போர்" என்ற பெயரில் ஜனநாயக உரிமைகள் மீது பெரும் தாக்குதல்களையும் நடத்தி இருக்க முடியாது

புஷ் நிர்வாகத்தையும் அமெரிக்க ஆளும் செல்வந்தத்தட்டையும் பொறுத்தவரையில், 9/11 தாக்குதல், ஏகாதிபத்திய கொள்கையை லெளிநாடுகளிலும், சமூக பிற்போக்குத்தனத்தை உள்நாட்டிலும் எளிதில் தொடர்வதற்கு வகைசெய்வதில் தவிர்க்கவியலாத அரசியல் தொழிற்பாடாக உதவியது, இன்னும் தொடர்ந்து உதவுகின்றது.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved