World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : வரலாறு

Sixty years since the Hiroshima and Nagasaki bombings

Part three: American militarism and the nuclear threat today

ஹிரோஷிமா, நாகசாகி மீது குண்டுவீச்சுக்கள் நடந்து 60 ஆண்டுகள்

பகுதி 3: அமெரிக்க இராணுவ வாதமும் இன்றைய அணுவாயுத அச்சுறுத்தலும்

By Joseph Kay
9 August 2005

Back to screen version

ஜப்பானிய நகரங்களான ஹிரோஷிமா மற்றும் நாகசாகியில் அணுகுண்டுகள் வீசப்பட்டு 60 ஆண்டுகள் முடிந்தது பற்றிய கட்டுரையின் மூன்றாவதும் இறுதிப் பகுதியையும் கீழே காணலாம். இரண்டு நகர மக்கள்மீதும் இதன் பேரழிவு விளைவுகள் எப்படி இருந்தன என்பதை விளக்கும் முதற்பகுதி ஆகஸ்ட் 10 (தமிழில்) வெளிவந்தது. குண்டைப் போடுவதற்கான முடிவின் பின்னே இருந்த உள்நோக்கங்களை பகுத்தாய்ந்த இரண்டாம் பகுதி ஆகஸ்ட் 14 (தமிழில்) வெளியிடப்பட்டது.

அணுவாயுதங்களை ஜப்பானுக்கு எதிராக பயன்படுத்துவது என்ற ஜனாதிபதி ஹாரி ட்ரூமன் நிர்வாகத்தினால் எடுக்கப்பட்ட முடிவு அரசியல் மற்றும் மூலோபாய கருதிப்பார்த்தல்களினால் செயற்தூண்டல் அளிக்கப்பட்டதாகும். எல்லாவற்றிற்கும் மேலாக, அணுகுண்டு பயன்படுத்தப்பட்டது என்பது, போருக்குப் பிந்தைய காலத்தில் அமெரிக்காவின் மேலாதிக்க நிலை எவ்வித சவாலுக்கும் உட்படாமல் நிறுவப்படவேண்டும் என்ற அர்த்தத்தினாலாகும்.

இந்த செயற்தூண்டல்கள் போரில் அமெரிக்கத் தலையீட்டிற்கு பின்னாலான அடிப்படை உந்து சக்தியாகவும் கூட இருந்தன. இரண்டாம் உலகப் போர் நீண்ட காலமாகவே அமெரிக்க மக்களுக்கு ஒரு "நல்ல போர்" என்றும், பாசிசம், கொடுங்கோன்மை இவற்றிற்கு எதிரான ஜனநாயகத்திற்கான போர் என்றும், சித்தரித்துக் காட்டப்பட்டுள்ளது. ஹிட்லரின் பாசிசம் மற்றும் ஜப்பானியரின் இராணுவ வாதத்திற்கும் எதிரான போர் இது என்று மில்லியன் கணக்கான அமெரிக்க மக்கள் ஐயத்திற்கு இடமின்றி உண்மையில் நினைத்தாலும், போரை வழிநடத்தியவர்களுடைய இலக்குகள் முற்றிலும் வேறுவிதமாக இருந்தன. தன்னுடைய பூகோள நலன்களை உத்திரவாதம் செய்ய அமெரிக்க ஆளும் செல்வந்த தட்டு இரண்டாம் உலகப் போரில் நுழைந்தது. அமெரிக்காவில் இருந்த முதலாளித்துவ ஜனநாயக ஆட்சியின் அரசியல் தன்மை அதன் பாசிச எதிரிகளுடைய ஆட்சியின் தன்மையில் இருந்து பரந்து வேறுபட்டிருந்தாலும்கூட, அமெரிக்காவின் போர் இலக்குகள் ஏகாதிபத்தியத் தன்மையில் சிறிதும் குறைந்திருக்கவில்லை. இறுதிப் பகுப்பாய்வில், தன்னுடைய குறிக்கோள்களை அடைவதற்காக அணுகுண்டை பயன்படுத்தல் உட்பட அமெரிக்கா கையாண்ட இரக்கமற்ற வழிவகைகள் இந்த அடிப்படை உண்மையில் இருந்துதான் பாய்ந்தன.

சோவியத் ஒன்றியத்துடனான வளர்ந்துவரும் தன்னுடைய மோதலில், சக்திகளின் சமநிலையில் அணுகுண்டை பயன்படுத்தல் பெரும் மாற்றத்தை கொண்டுவரும் என்று அமெரிக்க அரசாங்கம் நம்பியது. ஆனால் அணுகுண்டுத் தயாரிப்பில் அமெரிக்க ஏகபோகம் மிகக் குறுகிய காலம்தான் நீடித்தது. ஹிரோஷிமாவில் ஆகஸ்ட் 6, 1945 அன்று அணுகுண்டு வீசப்பட்டதற்கு சோவியத் ஒன்றியத்தின் விடையிறுப்பு தன்னுடைய சொந்த அணுகுண்டுத் திட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட வளங்களை விரைந்து அதிகப்படுத்தியது. 1949ம் ஆண்டு சோவியத் ஒன்றியம் தன்னுடைய முதல் அணுகுண்டுச் சோதனையை நடத்தியது.

அமெரிக்க ஆளும் செல்வந்த தட்டின் பகுதிகளும், இராணுவ ஸ்தாபனங்களும் நடைமுறையில் உள்ள இராணுவச் சூழலில் அணுகுண்டைப் பயன்படுத்தலாம் என்று நினைத்திருந்தனர். 1950ம் ஆண்டு, கொரியப் போரின்போது சீனாவிற்கு எதிராக அணுவாயுதங்களை பயன்படுத்துவோம் என்று ட்ரூமன் அச்சுறுத்தினார் மற்றும் கொரிய எல்லையை ஒட்டிய மஞ்சூரியாவில் ஏராளமான அணுகுண்டுகளை இராணுவம் போடுவதற்கு அரசாங்கம் உத்தரவிடவேண்டும் என்று தளபதி டக்ளஸ் மக்கார்தர் வலியுறுத்தினார். இந்த முன்மொழிவுகள், அணுகுண்டை வீசுவது சோவியத் ஒன்றியத்துடன் ஒரு அணுவாயுத மோதலை தூண்டிவிடும் என்று அஞ்சி இறுதியில் நிராகரிக்கப்பட்டது.

ஹைட்ரஜன் குண்டுகள் என்று இன்னமும் சக்திவாய்ந்த குண்டுகள் தயாரிக்கப்பட்டு, 1952 கடைசிப் பகுதியிலேயே சோதனைக்கும் உட்படுத்தப்பட்டுவிட்டதால், அமெரிக்கா தன்னுடைய அணுவாயுதத்தில் சாதகம் பெற்றிருப்பது புதுப்பிக்கப்பட்டுவிடும் என்று நம்பியது. 1953-ம் ஆண்டு குடியரசுக் கட்சியின் ஐசனோவர் நிர்வாகம் கிழக்கு ஐரோப்பாவின் மீதான சோவியத் கட்டுப்பாட்டை ''திரும்பச் சுருட்டிக்கொண்டு போகவைத்தல்'' உட்பட, சோவியத் ஒன்றியத்திற்கு எதிராக மிகவும் வலிந்துதாக்கும் கொள்கையை மேற்கொள்ளப்போவதாக உறுதிமொழி கொடுத்து ஆட்சிக்கு வந்தது. ஜனவரி 1954ல், வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்த ஜோன் போஸ்டர் டல்லஸ் நிகழ்த்திய உரை ஒன்றில், அமெரிக்கா "பதிலடி கொடுப்பதற்கு, உடனடியாகக் கொடுப்பதற்கு, தான் விரும்பிய இடங்களில், தான் விரும்பும் வகையில் கொடுப்பதற்கு பிரதானமாக பெரும் ஆற்றலை" சார்ந்து இருப்பதன் மூலம் "ஆக்கிரமிப்பைத் தடுக்கும்" என்று அறிவித்தார். இப்படி "பாரியளவு பதிலடி" என்ற உறுதிமொழி பொதுவாக கொரியப் போர் போன்ற உள்ளூர்போர் அல்லது பின்னர் வியட்நாமில் அபிவிருத்தி அடைந்த போர்களுக்கு பதில்கொடுப்பதில் அணுவாயுதங்கள் பயன்படுத்தப்படும் ஒரு அச்சுறுத்தலாக பொதுவாக விளக்கம் கொள்ளப்பட்டது.

ஆனால் இந்த அணுவாயுதத்தின் சாதகத்தன்மை மறுபடியும் ஆகஸ்ட் 1953-ல் தகர்ந்தது, ஏனெனில் அந்த ஆண்டு சோவியத் ஒன்றியம் தன்னுடைய முதல் ஹைட்ரஜன் குண்டைச் சோதித்தறிந்தது. இரண்டு நாடுகளும் விரைவில் பெரும் திறனை அடைந்து, ஒரு அணுவாயுத யுத்தம் ஏற்பட்டால் "பரஸ்பரம் அழிந்துவிடும் உத்தரவாத" சூழ்நிலை ஏற்பட்டது.

இக்கால கட்டம் முழுவதிலும், அதற்குப் பிந்தைய தசாப்தங்களிலும், அரசியல் ஸ்தாபனத்திற்குள் சோவியத் ஒன்றியம், அணுகுண்டு ஆகியவை தொடர்பான கொள்கையில் பெரும் பூசல்கள் தொடர்ந்திருந்தன. அணுவாயுதப் போர் என்ற அச்சுறுத்தல் இருந்தாலும், அமெரிக்க ஆளும் வர்க்கத்திற்குள் ஒரு கணிசமான பிரிவு அமெரிக்க இராணுவ சக்திக்கு எவ்வித தடைசெய்தலையும் சகித்துக்கொள்ளமாட்டோம் எனக் கூறியது.

ஹிரோஷிமா/நாகசாகிக்கு பிந்தைய எந்த அமெரிக்க நிர்வாகமும், ஜனநாயகக் கட்சி ஆயினும், குடியரசுக் கட்சியாயினும், அணுவாயுதப்போரில் தேவையானால் இறங்கும் நிலை ஒருபோதும் நிறுத்தப்படாதிருந்தது. ட்ரூமனின் போர் மந்திரி ஹென்றி ஸ்டிம்ஸன் "தலையாய துருப்பு" என்று அழைத்திருந்தது எப்பொழுதும் தேவையானால் பயன்படுத்துவதற்கு பின்னணியில் தயாராக இருந்தது. 1962ம் ஆண்டு கென்னடி நிர்வாகம் கியூப ஏவுகணை நெருக்கடியின் போது அணுவாயுதப் போரை சோவியத் ஒன்றியத்துடன் கிட்டத்தட்ட முன்னெடுத்துவிட்டது எனலாம்.

1970-களில் பொருளாதாரச் சூழ்நிலை மோசமடைந்த நிலையில், சோவியத் ஒன்றியத்திற்கு எதிராக கூடுதலான ஆக்கிரமிப்புக் கொள்கை வேண்டும் என்று வாதிட்டவர்கள் முக்கியத்துவம் பெறலாயினர். இது ஜனநாயகக்கட்சி நிர்வாகம் ஜிம்மி கார்ட்டர் தலைமையில் இருந்தபோதே தொடங்கிவிட்டது; அக்கொள்கை றேகன் நிர்வாகம் 1980-களில் செயல்பட்டபோது கூடுதலான ஊக்கத்தைப் பெற்றது. றேகன் ஒரு புதுப்பிக்கப்பட்ட ஆயுத அபிவிருத்தியை மேற்பார்வை செய்தார் மற்றும் தற்காப்பு ஏவுகணைக் காப்பு ("நட்சத்திரப் போர்" என்றழைக்கப்பட்ட திட்டம்) திட்டத்தை அபிவிருத்தி செய்வதன் மூலம், அணுவாயுதத் தாக்குதல் திறனிலும் அமெரிக்கா மேன்மை அடைவதற்கு முயன்றார், (Anti-Ballistic Missline -ABM) என்ற 1972ன் கண்டம்விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணை எதிர்ப்பு உடன்படிக்கை ஒன்று தடுப்பதற்காக வடிவமைக்கப்பட்டு இருந்தது. ஒரு வெற்றிகரமான பாதுகாப்பு கவசம் என்பது அமெரிக்காவை முதலில் அணுவாயுதத்தை தாக்குதலில் ஈடுபடுத்த வைக்கும், ஏனெனில் எவ்வித பதிலடி நடவடிக்கையையும் அது தடுத்து வீழ்த்திவிட இயலும்.

சோவியத் ஒன்றியம் 1991ல் தன்னைத் தானே அழித்து கொண்ட பின்னர், அமெரிக்க ஆளும் வர்க்கம் முன்கூட்டியே போர், இராணுவ சக்தி முழுவதும் அமெரிக்க நலன்களின் ஒருதலைபட்ச வலியுறுத்தல் என்ற அடிப்படையை கொண்ட ஒரு புதிய பொதுகருத்தை அடைந்துள்ளது

குறைவான ஒப்பந்தங்கள், கூடுதலான குண்டுகள்

சோவியத் ஒன்றியத்திற்கு பிந்தைய காலத்திய அமெரிக்க இராணுவவாத வெடிப்பு, ஜோர்ஜ் டபுள்யூ. புஷ்ஷின் ஜனாதிபதி காலத்தில் குறிப்பிடத்தக்க வகையில் பெரும் தீய வடிவை எடுத்துள்ளது. பதவிக்கு வந்த காலத்தில் இருந்தே புஷ் நிர்வாகம் அமெரிக்க இராணுவத் திறனை பெருக்கிக் கொள்ளும் வகையில் இரட்டை கூர்முனை மூலோபாயத்தை வளர்த்துள்ளது. இதன்படி ஒருபுறத்தில் அது எவ்வித சர்வதேச உடன்பாடு, ஒப்பந்தம் என்று அமெரிக்கா இராணுவரீதியாக செய்யக்கூடியவற்றிற்கு வரம்பு விதிப்பது எதையும் நிராகரிக்கிறது அல்லது கீழறுத்துள்ளது. மறுபுறத்தில், அணுவாயுதத் தொழில்நுட்பம், வருங்காலப் போர்களில் இந்த நுட்பத்தை பயன்படுத்தும் வகை உட்பட, அதன் இராணுவத் தொழில்நுட்பத்தை வளர்த்துக் கொள்ளுவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளது.

1999-ம் ஆண்டு குடியரசுக் கட்சியினர் ஆதிக்கத்தில் இருந்த அமெரிக்க செனட் மன்றம் அணுசோதனை பரவல் தடை ஒப்பந்தத்தை (CTBT) புறக்கணித்தது, இது முன்னர் கிளின்டன் நிர்வாகத்தால் கையெழுத்திடப்பட்டிருந்தது. 2001ம் ஆண்டு புஷ் மீண்டும் செனட்டின் இசைவைத் தான் நாடப்போவதில்லை என்றும் ஒப்பந்தத்தை "புதைத்துவிடுவதற்கு" வழி பார்த்துக் கொண்டிருப்பதாகவும் அறிவித்தார். ஒப்பந்தப்படி புதிய அணுவாயுத சோதனைகள் நடத்தப்படுவது தடுக்கப்படும், ஆனால் இன்னும் புதிய, சோதிக்கப்பட வேண்டிய அணுவாயுதங்களை தயாரித்துக் கொண்டிருப்பதால் புஷ் நிர்வாகம் இதை எதிர்க்கிறது.

டிசம்பர் 2001ல், இப்பொழுது தேசிய ஏவுகணை பாதுகாப்பு (National Missile Defence) என்று அழைக்கப்படும், நட்சத்திரப் போர் செயல்திட்டத்தை புதுப்பிப்பதற்கு அதனை அனுமதிக்கும் பொருட்டு, அமெரிக்கா ஒருதலைப் பட்சமாக ABM ஒப்பந்தத்தில் இருந்து விலகிக் கொள்வதாக புஷ் அறிவித்தார். இந்த NMD முறையின் வளர்ச்சி இப்பொழுதும் நிர்வாகத்தின் முன்னுரிமையாக இருக்கிறது மற்றும் விண்வெளியில் இராணுவத்தின் மேலாதிக்கத்தை அடைவதற்கான அதன் உந்துதலின் பகுதியாக அது இருக்கிறது. றேகன் நிர்வாகத் திட்டம் போன்றே, ஏவுகணை பாதுகாப்பு முறை, சீனா அல்லது ரஷ்யா போன்ற நாடுகளுக்கு எதிராக அணுவாயுத தாக்குதல்களுக்கான வழியைத்திறந்து விடுகிறது.

இந்த ஆண்டு தொடக்கத்தில் சர்வதேச அளவிலான அணுவாயுதப் பரவுதல் தடுப்பு ஒப்பந்தம் பற்றிய பரிசீலனை ஒன்றில், புஷ் நிர்வாகம் உடன்பாட்டின் அடித்தளத்தையே கீழறுக்கும் நிலைப்பாடு ஒன்றை அறிவித்தது. அணுவாயுதங்களை முயன்றுபெற மாட்டோம் என்ற உறுதிமொழிக்கு பிரதியுபகாரமாக, இவ்வொப்பந்தமானது அணுவாயுதங்கள் இல்லாத நாடுகளுக்கு இராணுவப்பயன்பாடு அல்லாத அணுசக்தி தொழில்நுட்பத்தை அபிவிருத்தி செய்வதற்கான உரிமையை உத்தரவாதம் செய்கிறது. மேலும் அணுசக்தி வல்லரசுகள் சிறிது, சிறிதாக தங்கள் அணுவாயுத குவிப்புக்களை குறைத்துக் கொள்ளுவதாக உறுதிமொழியும் கொடுக்க வேண்டும் என்றுள்ளது. ஆனால் புதிய புஷ் நிர்வாகத்தின் நிலைப்பாடு "போக்கிரி அரசுகள்" என்று அமெரிக்கா வரையறுக்கும் ஈரான் போன்றவை அணு எரிசக்தி திட்டங்களை வளர்க்கும் உரிமை மறுக்கப்படும் என்பதாகும். அதே தேரத்தில் தன்னுடைய அணுவாயுதக் குவிப்புக்களை தகர்த்து விடுவதற்கு பதிலாக அமெரிக்கா இருக்கும் ஆயுதங்களை நவீனப்படுத்தவும் தாக்குதலுக்காக புதிய ஆயுதங்களை தயாரிக்கவும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. உண்மையில், உடன்பாடு ஏதும் காணாமல் முடிவுற்ற மாநாட்டிற்கு முன் நடந்த பேச்சுக்களின் போது புஷ் நிர்வாகம் ஒரு அணுவாயுதம் இல்லாத சக்திக்கு எதிராக தமக்கு அணுவாயுதம் பயன்படுத்தும் உரிமை இருப்பதாக வெளிப்படையாக கூறிவிட்டது.

கடந்த தசாப்தத்தில், அமெரிக்க அரசாங்கம் அணுவாயுதங்கள் பிரதானமாக மற்றவர்களுக்கு எச்சரிக்கைதரக்கூடிய ஒன்றாக நோக்கங்கொண்டிருக்க வேண்டும் என்ற குளிர்யுத்த கருத்துருவை நிராகரித்து, தாக்கும் அணுவாயுத பயன்படுத்தல் கொள்கை ஒன்றை வளர்த்துள்ளது. அணுவாயுத நிலைப் பரிசீலனை 1997ல் கிளின்டன் நிர்வாகத்தின் போது நடைபெற்றது; அப்பொழுது அது வட கொரியா, சீனா மற்றும் ஈரான் போன்ற நாடுகளை இலக்கு வைப்பதற்கான முதல் நடவடிக்கைகளில் இறங்கியதாகக் கூறப்படுகிறது.

இந்தக் கொள்கை இன்னும் தெளிவாக மற்றொரு பரிசீலனையில் விளக்கப்பட்டது; 2002ல் செய்தி ஊடகத்திற்கு கசிய விடப்பட்ட இந்த அறிக்கையில் பென்டகன், "அமெரிக்கத் திட்டமிடல் மற்றும் இப்பொழுது அதற்குத் தேவைப்படும் சக்திகளுடன் அடிப்படையில் பழைய செயல்முறை (அணுவாயுதக் கட்டுப்பாடு) நெகிழ்ச்சியுடன் பொருந்தாது" என்று அறிவித்துள்ளது. பல நாடுகளையும் அவற்றின் அணுவாயுத தாக்கும் திறன் பெற்றுள்ளதற்காக வெளிப்படையாக அச்சுறுத்தியுள்ளது. மேலும் எதிர்காலத்தில் அணுவாயுதங்கள் பயன்படுத்தப்படுவதற்கான பொது வழிகாட்டு நெறிகளையும் கொடுத்துள்ளது; இந்த ஆயுதங்கள் "அணுவாயுதமில்லாத, தாக்குதலை எதிர்த்து நிற்கும் ஆற்றலை உடைய இலக்குகளுக்கு எதிராகப் பயன்படுத்தப்படலாம்" அல்லது "ஆச்சரியப்படத்தக்க முறையில் இராணுவ வளர்ச்சி ஏதேனும் தோன்றியிருந்தாலும் பயன்படுத்தப்படலாம்" என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது;

கடந்த கோடை காலத்தில், பாதுகாப்பு செயலாளர் டொனால்ட் ரம்ஸ்பெல்ட் ஒரு "இடைக்கால பூகோளம் தழுவிய தாக்கும் கட்டளை" ஒன்றை பிறப்பித்தார்: இதில் ஈரான் அல்லது வடகொரியா போன்ற நாடுகளுக்கு எதிராக முதலிலேயே அணுவாயுதத் தாக்குதலை தொடுக்கும் அதிகாரம் அடங்கி இருப்பதாகக் கூறப்படுகிறது. மேலும் ஈராக், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் நடைபெறும் போர்களுக்கான திட்ட வழிகாட்டல்களில், அணுவாயுதத் தாக்குதல்களின் பலவகை விருப்பத்தேர்வுகளும் அடங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

போர் நடவடிக்கைகளின்போது பயன்படுத்துவதற்காக சிறப்பாக வடிவமைக்கப்பட்ட, "பதுங்குகுழியை தகர்க்கும்" புதிய வகை அணுவாயுதத் தொழில்நுட்பத்தை வளர்ப்பது தொடர்பாக புஷ் நிர்வாகம் நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இருக்கும் ஆயுதக் குவிப்புக்கள் நவீனப்படுத்தப்பட்டுள்ளன என்பதுடன் நியூ யோர்க் டைம்ஸ் கட்டுரை 2005 பெப்ரவரி 7 பதிப்பின்படி, "அமெரிக்க விஞ்ஞானிகள் அணுவாயுதங்களின் புதிய தலைமுறைக் கருவிகள் வடிவமைப்பை தொடங்கி விட்டதாகவும்" இவை பழைய ஆயுதக் குவிப்புக்களைவிட, "இன்னும் கூடுதலான நம்பகத்தன்மையை கொண்டிருப்பதுடன், நீடித்தும் இருக்கும்" என்றும் கூறப்படுகிறது.

அணுவாயுத வளர்ச்சியில் ஈடுபடுவதாக, மற்றும் "பேரழிவு தரும் ஆயுதங்களை" தயாரிப்பதாகக் கூறப்படும் நாடுகளுக்கு எதிராக, அமெரிக்கா அடிக்கடி அச்சுறுத்தல்களை வெளியிடுகிறது. மிகச்சமீபத்திய இலக்கு ஈரானாக உள்ளது; இது தன்னுடைய அணுசக்தி திட்டத்தை கைவிடாவிட்டால் இராணுவத் தாக்குதலை சந்திக்க நேரிடும் என்று அமெரிக்கா அச்சுறுத்தியுள்ளது. இந்த அச்சுறுத்தல்கள் அனைத்தும் வருங்கால அமெரிக்கப் படையெடுப்புக்களை நியாயப்படுத்தும் வகையில் உள்ளன; அவற்றில் அமெரிக்காவால் அணுவாயுதங்கள் பயன்படுத்துவது தவிர்க்கப்படும் எனக் கூறுவதற்கில்லை.

முன்கூட்டியே தாக்கித் தனதாக்கிக்கொள்ளும் போர் என்ற கொள்கையின் மூலம், அச்சுறுத்தல் திறன் கொண்டுள்ளது அல்லது வருங்காலத்தில் அத்திறனைக் கொள்ளக்கூடும் எனத் தான் கருதும் எந்த நாட்டின் மீதும் தாக்குதலை நடத்தும் உரிமையை கொண்டுள்ளதாக அமெரிக்கா கூறுகிறது. உலகில் அமெரிக்காவின் நலன்கள் இல்லாத பகுதி என்று எதுவும் இல்லை. ஆப்கானிஸ்தானில் போர் மற்றும் உக்ரைன் போன்ற நாடுகளில் அரசியல் தலையீடு போன்றவை மூலம் மத்திய ஆசியாவிலும் முன்னாள் சோவியத் ஒன்றிய பகுதியிலும் தன்னுடைய செல்வாக்கை பெருகிய முறையில் விரிவாக்கம் செய்து கொள்ளுவதற்கு அது முயன்றுள்ளது. ஈராக்கில் போர் மற்றும் ஈரானில் போருக்கான அச்சுறுத்தல் மூலமும் மத்திய கிழக்கில் மேலாதிக்கம் செய்ய முயல்கிறது. ஆபிரிக்காவிலும் தன்னுடைய நடவடிக்கைகளை பெருக்கிக் கொண்டுள்ளது; கிழக்கு ஆசியாவில் தன்னுடைய செல்வாக்கை உத்திரவாதம் செய்துகொள்வதற்கான அதன் முயற்சிகளின் பகுதியாக வட கொரியா, சீனா இவற்றிற்கு எதிராக பல முறையும் அச்சுறுத்தல்களை விடுத்துள்ளது.

இந்த நிலைமைகளில், கணக்கிலடங்கா மாறுதல்கள் ஏற்படக்கூடிய நிலையில், ஒரு போர் தோன்றினால் அணுவாயுதங்களை பயன்படுத்துவதற்கு வழிவகுக்கும். ஈரான் போன்ற நாடுகளின் மீதான படையெடுப்பு மட்டுமல்லாமல், ஒரு சிறிய நாட்டிற்கு எதிரான அமெரிக்கப் போர் வெகு விரைவில், அணுவாயுதங்களை கொண்டிருக்கும் நாடுகளான சீனா, ரஷ்யா அல்லது ஐரோப்பிய வல்லரசுகளுடன் கூட ஒரு பரந்த பூசலுக்கு வழிவகுக்கக் கூடும்.

ஹிரோஷிமாவிற்கும் நாகசாகிக்கும் விளைந்த பேரழிவு ஒருநாளும் மறக்கப்படமாட்டாது. ஏகாதிபத்தியத்தின் மிருகத்தன்மைக்கு எந்நாளும் சான்றாக அந்நகரங்களின் அழிவு நிலைத்து நிற்கும். அமெரிக்க இராணுவவாத வெடிப்பின் புத்துயிர்ப்பின் பின்னணியில், ஆகஸ்ட் 1945 நிகழ்வுகள் நமக்கு மனிதகுலத்தை எதிர்கொள்ளும் மாற்றீடுகளான உலகப் புரட்சி அல்லது உலகப் போர், சோசலிசம் அல்லது காட்டுமிராண்டித்தனம் என்பதைத்தான் நினைவுபடுத்துகின்றது.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved