World Socialist Web Site www.wsws.org |
WSWS :Tamil: செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்காCaught in their own lies 9/11 Commission admits excluding intelligence on lead hijacker, Atta தங்களுடைய பொய்களாலேயே பிடிபட்டனர் முன்னணி விமானக் கடத்தல்காரன் அட்டாவை புலன்விசாரணை நீக்கியது பற்றி 9/11 விசாரணைக்குழுவே ஒப்புக் கொள்ளுகிறது By Joseph Kay and Barry Grey செப்டம்பர் 11 பற்றிய விசாரணைக் குழுவின் செய்தித் தொடர்பாளர் அதன் அலுவலக உறுப்பினர்கள் சீருடையணிந்த இராணுவ அதிகாரி ஒருவரை ஜூலை 12, 2004 அன்று சந்தித்ததாகவும், அந்த அதிகாரி 2000 கோடைகாலத்திலேயே அமெரிக்காவில் செயல்பட்டுக் கொண்டிருந்த அல்கொய்தா பிரிவு ஒன்றில் மகம்மது அட்டா இருந்ததை அடையாளம் கண்டதை குழுவிற்கு கூறியதையும் ஒப்புக் கொண்டார். செப்டம்பர் 11 தாக்குதல்களில் முக்கியமான விமானக் கடத்தல்காரராக அட்டா இருந்தார் என்று கருதப்படுகிறது. இந்த வார தொடக்கத்தில் 9/11 விசாரைணக் குழு தலைவர் தோமஸ் கீன் மற்றும் இணைத் தலைவர் லீ ஹாமில்டன் இருவரும் குழு அலுவலர்களுக்கு இராணுவ உளவுத் துறை அட்டா பற்றி ஏதும் கூறவில்லை என்று கூறிய அறிவிப்புக்களுக்கு இந்த ஒப்புதல் முரணாக உள்ளது. ஆகஸ்ட் 11-ம் தேதி நியூ யோர்க் டைம்சில் வெளிவந்த கட்டுரையில், இராணுவ உளவுத்துறை குழு, அதன் கண்டுபிடிப்புக்களை பற்றிக் குறிப்பிடாவிட்டால் "[குழுவின்] அறிக்கை முழுமையற்று இருக்கும்" என்று விசாரணைக்குழு அதிகாரி அலுவலர்களிடம் எச்சரித்திருந்ததாக எழுதப்பட்டுள்ளது. ஜூலை 22, 2004 அன்று, குழு அலுவலர்கள் அட்டா பற்றிய தகவலை தெரிவித்து 10 நாட்களுக்கு பின்னர் வெளிவந்த விசாரணைக் குழுவின் அறிக்கையில், ஏபிள் டேஞ்சர் எனப் பெயரிடப்பட்டிருந்த இராணுவ உளவுத் துறைக் குழு கொடுத்த தகவலை பற்றி எந்த தகவலும் குறிப்பிடப்படவில்லை. குடியரசுக் கட்சி கீழ்ச்சபை சார்பில் உறுப்பினராக இருக்கும் கர்ட் வெல்டன் மற்றும் ஒரு முன்னாள் அடையாளம் தெரியாத இராணுவ உளவுத் துறை அதிகாரியும், 2000ம் ஆண்டு கோடையின்போது ஏபிள் டேஞ்சரின் உறுப்பினர்கள் பென்டகனின் சிறப்புச் செயல்கள் கட்டுப்பாட்டுப் பிரிவினால், அவர்கள் அட்டா மற்றும் மூன்று வருங்கால விமான கடத்தல்காரர்களை பற்றித் திரட்டிய தகவலை FBI க்கு கொடுக்கக்கூடாது என்று தடுக்கப்பட்டுவிட்டனர். அந்த நேரத்தில், அட்டாவும் மற்ற பிரிவு உறுப்பினர்களும் அமெரிக்காவில் விமானத்தில் பறப்பதற்கான பயிற்சி படிப்புக்களை பெற்றுக்கொண்டிருந்தனர். விசாரணைக் குழுவின் செய்தித் தொடர்பாளரான, அல் பெல்ஜென்பெர்க், ஜூலை 12 அன்று, வெல்டன், குழு உறுப்பினர்களுக்கு ஒரு கடிதத்தை அனுப்பி, அதைப்பற்றிய தகவலை சுட்டிக் காட்டிய பின்னர்தான் உரையாடல் நிகழ்ந்தது என்று ஒப்புக் கொண்டுள்ளார். முன்னதாக வெல்டன் விசாரணைக் குழு அலுவலர்கள் 2003 அக்டோபரில் ஏபிள் டேஞ்சருடன் தொடர்பு கொண்டிருந்த அதிகாரிகளை சந்தித்ததாகவும் கூறியுள்ளார். செவ்வாயன்று, கீனும் ஹாமில்டனும் குழு அலுவலக உறுப்பினர்களுக்கு ஏபிள் டேஞ்சரைப் பற்றி 2003 கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டதாகவும், அலுவலர்களுக்கு அட்டா உட்பட தனிப்பட்ட நபர்களின் பெயர்கள் தெரிவிக்கப்பட்டதாக நினைவில்லை என்றும் கூறினார்கள்; அந்த நபரைத்தான் இராணுவ உளவுப் பிரிவு 2000-த்தில் அடையாளம் கண்டிருந்தது. இப்பொழுது, ஒரே ஒரு நாளுக்கு பின்னர், பெல்ஜெல்பர்க் தன்னுடைய தகவலை மாற்றிக் கொள்ள கட்டாயப்படுத்தப்பட்டு, அலுவலர்களுக்கு ஜூலை 2004-ல் அட்டா பற்றி 9/11-க்கு முந்தைய உளவுத் தகவல்கள் கொடுக்கப்பட்டதாகவும், ஆனால் விசாரணைக் குழு தன்னுடைய இறுதி அறிக்கையில் இதை சேர்க்க வேண்டியதில்லை என்று முடிவுசெய்ததாகவும் கூறியுள்ளார். "ஏபிள் டேஞ்சரை பற்றிய எந்தவித தகவலும் 9/11 விசாரணைக் குழு அலுவலர்களுக்கு ஒருபோதும் கொடுக்கப்படவில்லை என்று சமீபத்தில், தவறாக உறுப்பினர்கள் கூறியுள்ளது பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது, 9/11 விசாரணைக் குழு உறுப்பினர்கள் ஒரு முறை என்றில்லாமல் இருமுறை ஏபிள் டேஞ்சர் பற்றி முந்தைய பிரிவு உறுப்பினர்களால் தகவல் கொடுக்கப்பட்ட போதிலும், எந்த நடவடிக்கையும் தொடரப்படவில்லை. மேலும், குழு உறுப்பினர்கள் பாதுகாப்பு உளவுத்துறை அதிகாரி முந்தைய கூட்டத்தில் அவர்களுக்குக் கொடுத்த தகவல்களைப்பற்றி விவாதிப்பதற்கு விரும்பி தொலைபேசியில் அழைப்புக் கொடுத்ததையும் பொருட்படுத்தவில்லை" என்று கீன், ஹாமில்டன் மற்றும் ஏனைய விசாரணைக்குழு உறுப்பினர்கள் எட்டுபேர்களுக்கு வெல்டன் எழுதிய கடிதம் வெளிப்படுத்தியது. வெல்டன் ஒரு வலதுசாரி சட்ட மன்ற உறுப்பினர் ஆவார்; ஏபிள் டேஞ்சர் போல் "தகவல்களை கொடுக்கும் சுரங்கங்களை" ஆராயும் முயற்சிகளில் ஒரு வல்லுனராக வந்துள்ள இவர் உளவுத்துறை அமைப்புக்களுக்கு அதிகார விரிவாக்கம் தேவை என்றும் வாதிடுகிறார். ஆயினும்கூட, ஏபிள் டேஞ்சர் திரட்டிய தகவல்கள் அமெரிக்க உளவு, பாதுகாப்புப் பிரிவுகள் ஏற்கனவே செப்டம்பர் 11 கடத்தல்காரர்களை பற்றி அறிந்திருந்த தகவல்களுக்கு ஆதரவு கொடுத்தாலும், அவர்களின் நடவடிக்கைகளை தடுக்க ஏதும் செய்யவில்லை. புதன்கிழமையன்று விசாரணைக்குழு அலுவலர்களுக்கு அட்டா பற்றிய தகவல் தெரிவிக்கப்பட்டது என்பதை ஒப்புக் கொள்ளும் அதேவேளை, விசாரணைக் குழுவின் செய்தித் தொடர்பாளரான பெல்ஜென்பர்க் அதன் முக்கியத்துவத்தை குறைக்க முயற்சித்தார், மற்றும் குழுவின் முடிவுகளை தயாரித்து வெளியிடும் அழுத்தத்தில் இருந்ததால் வழக்கமான, சிறிய விஷயம் எதுவும் குறிக்கப்படாமல் ஒதுக்கப்பட்டுவிட்டது என்று விசாரணைக்குழுவுடைய முடிவுகளுக்கு உருக்கொடுத்தார். உண்மை துல்லியமாக எதிரானதாகும். இராணுவ உளவுத்துறை அட்டாவையும் மூன்று மற்ற வருங்கால கடத்தல்காரர்களையும் அமெரிக்காவில் செயல்பட்டு வந்திருந்த அல்கொய்தா பிரிவின் உறுப்பினர்கள் என்று அடையாளம் கண்டிருந்த உண்மை, அந்த நால்வரும் விரும்பியபடி நாட்டிற்குள் வந்து சென்றமை, சில நேரங்களில் நாட்டை விட்டு நீங்கி மறுபடியம் வந்தமை, திட்டமிட்டு அமெரிக்க வரலாற்றிலேயே மிகப் பெரிய பயங்கரவாத தாக்குதலை செயல்படுத்துவதில் FBI, CIA அல்லது எந்த அரசாங்க அமைப்பின் குறுக்கீடும் இல்லாமல் செய்து முடித்தது, பெரும் வெடிப்புத் தன்மையுடைய வெளிப்பாடாக இருப்பதோடு, பாரதூரமான விளைவுகள் ஏற்படக்கூடிய விளைபயன்களையும் கொண்டிருக்கிறது. இச்செயல்முறை 9/11 விசாரணைக் குழு, மற்றும் நியூ யோர்க், வாஷிங்டனில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல்களை சூழ்ந்திருந்த நிகழ்வுகள் பற்றிய உத்தியோகபூர்வ கண்துடைப்புக்களின், அதாவது திறமையின்மை, சில நிர்வாகத் தடைகள்தான் முகவாண்மைகளை ''புள்ளிகளை இணைக்கும்'' பணியில் மோசமாக தவறவிட்டதன்காரணமாக "உளவுத்துறை தோல்வி" தாக்குதல்கள் நடைபெற அனுமதித்தது என்ற மையவாதத்தை மோசமாய் கீழறுக்கிறது. இதற்கு மாறாக, இச்சமீபத்திய வெளியீடு விமானக் கடத்தல்காரர்களுக்கு ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட உளவுத்துறை அல்லது பாதுகாப்புப் பிரிவுகள் மற்றும் அரசாங்க, இராணுவ அதிகாரிகள் பாதுகாப்பு கேடயமாக இருந்து, அவர்கள் அமெரிக்க மண்ணில் பயங்கரவாதத் தாக்குதலை நடத்த துணையாயிருந்தனர் என்று முன்பு வந்த தொடர்ச்சியான வெளிப்பாடுகளுக்கு ஆதரவைத்தான் கொடுக்கிறது. ஆனால் எதற்காக இப்படிச் செய்யப்பட வேண்டும்? திட்டவட்டமாக, அமெரிக்க இராணுவவாதம் மற்றும் முன்னென்றுமில்லாத வகையில் ஜனநாயக உரிமைகள் மீது தாக்குதல்களை நடத்தும் பெரும் தீவிரத்தன்மையை ஏற்பதற்கு பொது மக்கள் கருத்தை சூழ்ச்சியுடன் கையாளுவதற்கும் மாற்றுவதற்குமான சூழ்நிலையை ஏற்படுத்த வேண்டும் என்பதே ஆகும். ஏபிள் டேஞ்சர் தகவலின் மிகப்பெரும் முக்கியத்துவம், புஷ் நிர்வாகம் மற்றும் முழு அமெரிக்க அரசியல் ஸ்தாபனங்களுக்கும் அதன் உயர்ந்த ஆபத்தான அரசியல் விளைபயன்கள்தான், விசாரணைக் குழு இதைப் பற்றி எதையும் கூறவேண்டாம் என்று இருந்ததின் நோக்கமாகும். அட்டா மற்றும் ஏபிள் டேஞ்சர் பற்றிய தகவலை கூறாமல் விட்டதற்கு விசாரணைக் குழு கொடுத்துள்ள காரணம் மிக அபத்தமானது ஆகும்; அட்டாவின் பெயர் அலுவலர்களுக்கு கொடுக்கப்படவில்லை என்ற முந்தைய கூற்றின் அபத்தம்தான் இதிலும் காணப்படுகிறது. ஜூலை 2004 ல் விசாரணைக் குழுவை சந்தித்த இராணுவ அதிகாரியை பற்றிக் குறிப்பிடும்போது, பெல்ஜென்பர்க் நியூ யோர்க் டைம்சிடம் கூறினார்: "அவரை ஒன்றும் அசட்டை செய்யவில்லை; அவர் கொடுத்த தகவல் நாங்கள் சென்று கொண்டிருந்த முடிவுகளுடன் இயைந்து இருக்கவில்லை." டைம்ஸ் கூறுகிறபடி, "விசாரணைக் குழு அதிகாரிகள் அந்த அதிகாரியை பற்றி உஷாரானர்கள்; ஏனெனில் திரு. அட்டா என்ற எகிப்தியர் அமெரிக்காவில் 1999 கடைசி அல்லது 2000 ஆண்டு ஆரம்பத்திலேயே இருந்தார் என்று அவர் வாதிட்டார் என பெல்ஜென்பெர்க் கூறினார். ஜூன் 2000 வரை அவர் அமெரிக்காவிற்கு வரவில்லை என்பதை பயணச் சான்றுகள் உறுதிப்படுத்தியிருந்ததால், விசாரணை நடத்தியவர்களுக்கு இது இயலாது என்று தெரிந்து கொண்டனர்." சட்டமன்ற உறுப்பினர் வெல்டனுடைய தலைமை உதவியாளரான ரஸ்ஸல் கேசோ, பெல்ஜென்பெர்க் வரைந்துள்ள இந்தப் போலிக் கோட்டிற்கு தக்க விடையிறுத்துள்ளார். விசாரணைக் குழுவிற்கு கிடைத்த தகவல்களுடன், "தேதிகள் இயைந்திராமல் ஒன்றும் போயிருக்காது"; ஆனால் அதிகாரியுடைய கூற்றின் மையப்பகுதி, மகம்மது அட்டாதான் அல்கொய்தாவுடன் தொடர்பு கொண்டிருந்தார், ஒரு புரூக்லின் பிரிவோடும் செப்டம்பர் 11 தாக்குதல்களுக்கு ஒரு மாதம் முன்பே தொடர்பு இருந்தது என்று கூறப்பட்டதே விசாரணைக் குழுவின் கூடுதலான புலனாய்விற்கு உட்பட்டிருக்கவேண்டும்" என்று காசோ கூறியதாக டைம்ஸ் தெரிவிக்கிறது. மேலும், "மகம்மது அட்டா ஏபிள் டேஞ்சர் செயற்திட்டத்தால் அடயாளம் கண்டுபிடிக்கப் பட்டிருந்தால், FBI பாதுகாப்புப் பிரிவு இத்தகவலை ஏன் கொடுக்கவில்லை?" என்றும் காசோ கேட்டார். மேலும், 9/11 விசாரணைக் குழு ஏபிள் டேஞ்சர் தகவலின் நம்பகத்தன்மை பற்றி ஐயங்கள் கொண்டிருந்தால் அதற்காக இப்பிரச்சினை பற்றி அது கூறியதெல்லாவற்றையும் குறிப்பில் கொள்ளாமல் போகவேண்டும் என்றில்லை. குழுவின் 585-பக்க அறிக்கை, மற்றும் ஆயிரக்கணக்கான பக்கங்கள் இருக்கும் துணை அறிவிப்புக்கள், பேட்டிக் குறிப்புக்கள் ஆகியவை பல கூற்றுக்கள், கருத்துக்கள் என்று 9/11 பற்றி உள்ள அவையும் நம்பத்தகுந்தவை அல்ல அல்லது உறுதிப்படுத்த முடியவில்லை என்றுதான் விசாரணைக் குழு கூறியிருக்கிறது. அப்படியானால் இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த அட்டா, மற்றும் மூன்று பேர் பற்றிய இராணுவப் பிரிவின் இராணுவ உளவுப் பிரிவின் தகவல், அதனுடைய நம்பகத்தன்னமை பற்றி குழு ஐயப்பாடு கொண்டிருந்தாலும், ஏன் இந்த ஏராள பக்க ஆவணங்களில் குறிப்பு பெறவில்லை? வியாழனன்று வெளியிட்ட டைம்ஸ் கட்டுரையில் ஒரு பத்தி கீழ்க்கண்டதை குறிப்பிட்டுள்ளது: "திரு வெல்டனுடைய உதவியாளரால், விசாரணை அதிகாரிகளுக்கு (ஜூலை 12, 2004 அன்று இராணுவ அதிகாரியுடன்) தகவல் கொடுக்கப்பட்டதை பற்றி பெல்ஜென்பர்க் உறுதிப்படுத்தினார்; இது வாஷிங்டனில் Dietrich L. Snell என்னும் குழுவின் முன்னணி விசாரணை அதிகாரியால் நடத்தப்பட்டிருந்தது, இச்சந்திப்பின்போது பென்டகன் அலுவலர் ஒருவரும் பாதுகாப்புத் துறையின் பார்வையாளர் என்ற முறையில் உடன் இருந்தார்; இதற்கு குழுவின் எதிர்ப்பு இருந்தது; புஷ் நிர்வாகம் நிர்வாகத்தின் சார்பில் குழுவின் முக்கிய பேட்டிகள் நிர்வாகத்துறை அலுவலர்கள் பேட்டி நடக்கும்போது ஒரு பார்வையாளர் வேண்டும் என வலியுறுத்தியிருந்தது." இந்தப் பத்தி பற்றியும் பல கருத்துக்கள் கூறப்படவேண்டும். முதலில் 9/11 விசாரணைக் குழு "முழு சுதந்திரத்துடன்" இயங்கியதாகக் கூறப்பட்டது. உண்மையில் சுதந்திரமாக இயங்கும் எந்த குழுவும் அதன் முக்கிய ஆதாரங்கள், சாட்சியங்கள் பேட்டியின் போது அரசாங்க பார்வையாளர்களை அனுமதிக்காது. புஷ் நிர்வாகம் விசாரணைமீது அடிப்படையிலேயே கொண்டிருந்த விரோதப் போக்கையும், எவையெல்லாம் வெளிப்படுமோ என்ற அச்சத்தையும் இது உயர்த்திக் காட்டுகிறது. வெள்ளை மாளிகை எதை மறைக்க முயலுகிறது? இரண்டாவதாக, இராணுவ அதிகாரியை குழு ஜூலை 12, 20004-ல் பேட்டி கண்டது ஒரு "முக்கிய பேட்டி" என்பதை நிர்வாகம் கருதியதும் தெரியவருகிறது; அதனால்தான் அதைப் பார்வையிட ஒரு அதிகாரியை அது அனுப்பி வைத்தது. மூன்றாவதாக, பாதுகாப்புத் துறையில் இருந்து ஒரு பார்வையாளரும் இப்பேட்டிக்கு வந்திருந்தார்; அவர் பாதுகாப்பு செயலர் டொனால்ட் ரம்ஸ்பெல்ட் செவ்வாயன்று "இன்று காலை வரை இதைப்பற்றி நான் கேள்விப்பட்டதில்லை" என்று ஏபிள் டேஞ்சர் பற்றிக் கூறியிருப்பதை மறுத்துள்ளார். இறுதியாக, இப்பேட்டிக்கு ஸ்னெல் தலைமை வகித்தார் என்பதும் மிகவும் முக்கியமானது ஆகும். அப்துல் ஹகிம் மூர் என்ற, 1996 நிகழ்ந்த "போஜிங்கா சதித்திட்டத்தில்" பங்கு பெற்றவர்மீது விசாரணை நடத்தப்பட்டபோது, ஸ்னெல்தான் முக்கிய அரசாங்க வழக்கறிஞராக இருந்தவர் ஆவார் மூரட் என்பவர் ரம்ஜி யூசெப் என்பவருடன் சதி தீட்டியிருந்தார், யூசெப் 1993-ம் ஆண்டு உலக வர்த்தக மையத்தின்மீது நடந்த குண்டுத்தாக்குதலில் தண்டனை பெற்ற நபர் ஆவார்; காலிட் ஷேக் மகம்மத் என்ற செப்டம்பர் 11 தாக்குதல்களுடன் தொடர்பு கொண்டிருந்தவருடனும் அவர் சதித் திட்டம் தீட்டியிருந்தார்; பிந்தையவர் பசிபிக் பெருங்கடலில் 11 விமானங்கள் வெடித்தாக்குதலுக்கு உள்ளாகவேண்டும் என்ற திட்டத்தை கொண்டிருந்தார். தனக்குத் தண்டனையை குறைத்தால் அரசு தரப்புடன் ஒத்துழைப்பதாக மூரட் கூறியிருந்தார்; ஆனால் அது ஏற்கப்படவில்லை. 1995ம் ஆண்டு பிலிப்பைன் விசாரணையாளர்களிடம் மூரட் சதித்திட்டத்தில் ஒரு நோக்கத்தின்படி விமானங்கள் உலக வர்த்தக மையம் உட்பட கட்டிடங்கள்மீது, தாக்குதல்கள் நடத்தப்பட இருந்தன என்று கூறினார்; ஆனால் முக்கிய இலக்கு CIA தலைமையிடம்தான் என்று கூறியிருந்தார்.. அமெரிக்க போலீஸ் மற்றும் உளவுத் துறை அமைப்புக்கள் விமானங்களை கட்டிடங்கள் மீது மோதும் சதித்திட்டங்களில் ஒன்றுதான் போஜின்கா சதித்திட்டம் என்பதை அறிந்திருந்தனர் என்பதற்கு முக்கிய சாட்சியங்களில்/சான்றுகளில் ஒன்றாகும், ஆனால் செப்டம்பர் 11 தாக்குதல்களுக்கு பின்னர் புஷ் நிர்வாக அதிகாரிகள் அத்தகைய திட்டம் பற்றித் தெரியாது என்றே அறிக்கைகள் கொடுத்து வந்துள்ளனர். இன்றுவரை, ஏபிள் டேஞ்சரில் தொடர்புடைய பலரும் அதைப்பற்றிக் கருத்துக் கூற முன்வரவில்லை; இதில் ஸ்னெல், பென்டகன், இப்பொழுது வெளியுறவுத்துறை அமைச்சராக இருக்கும் கொண்டலீசா ரைசின் மூத்த ஆலாசகரும் முன்னாள் சிறப்புச்செயற்பாடுகள் பிரிவில் இருந்திருந்த, அக்டோபர் 2003ல் ஏபிள் டேஞ்சர் உறுப்பினர்களை சந்தித்த குழுவின் முக்கிய உறுப்பினர் பிலிப் ஜெலிகோ ஆகியோர் இந்தக்கருத்தை மறுத்தனர். அமெரிக்கச் செய்தி ஊடகம் இவ்வெளிப்பாடுகளை புதைக்கவே தொடர்ந்து முயல்கிறது. செவ்வாய்க்கிழமை செய்தியை முதல் பக்கத்தில் வெளியிட்ட பின்னர், நியூ யோர்க் டைம்ஸ் அதைத் தொடர்ந்த கட்டுரைகளை உட்பக்கங்களில் வெளியிட்டது. புதன்கிழமை வந்த கட்டுரை 13ம் பக்கத்திலும், வியாழனன்று வந்த கட்டுரை 14ம் பக்கத்திலும் வெளியிடப்பட்டன. இதர பத்திரிகைகள் இதைப்பற்றி குறிப்பிடவேயில்லை. இதுகாறும் இதைப்பற்றி வாஷிங்டன் போஸ்டில் வந்த கட்டுரை புதனன்று அசோசியேடட் பிரஸ் கொடுத்த ஐந்து பத்திகள் மட்டும்தான். ஒலி/ஒளி பரப்பு வலைபின்னல்கள் செய்தியை தொடர்ந்து புறக்கணிக்கின்றன. |