ஆபிரிக்கா
Sudan: death of Garang sets back US plans
சூடான்: கராங் மரணத்தால் அமெரிக்கத் திட்டங்கள் பின்னடைவு
By Chris Talbot
5 August 2005
Back to screen version
கடந்த 21 ஆண்டுகளாக சூடான் மக்கள் விடுதலை இயக்க
(SPLM) தலைவராக
பணியாற்றி வந்த ஜான் கராங் மரணம், அந்த நாட்டின் மிகப்பெரிய எண்ணெய் உற்பத்தி செய்யும் சாத்தியக் கூறுகளை
பாதுகாப்பாக தன்வசம் வைத்துக்கொள்ள வேண்டுமென்ற அமெரிக்கா தலைமையிலான முயற்சிகளை நிலைகுலையச் செய்துவிட்டது.
கராங் மூன்று வாரங்களுக்கு முன்னர்தான் ஜூலை 9-ல் துணை ஜனாதிபதியாக பதவியேற்றார்.
ஆபிரிக்காவின் மிக நீண்டகால உள்நாட்டுப்போருக்கு முற்றுப்புள்ளி வைக்கின்ற வகையில் தனது பழைய எதிரி ஜனாதிபதி உமர்
ஹசன் அல் பஷீரின் அரசாங்கத்தில் அவர் சேர்ந்தார்.
சூடானுக்கும், உகண்டாவிற்கும் இடையிலுள்ள எல்லை பிராந்தியத்தில் மலைப்பாங்கான பகுதியில்
அவரது ஹெலிகாப்டர் விழுந்து நொருங்கியதைத் தொடர்ந்து சென்ற வாரக் கடைசியில் கராங் கொல்லப்பட்டார். அவரது
மரணம் உடனடியாக சூடானின் தலைநகரான கார்டூமில் கலவரத்தை தூண்டிவிட்டது. தெற்கு சூடானை சேர்ந்தவர்கள்,
அவரது மரணத்திற்கு அரசாங்கத்தின் மீது பழிபோட்டதால் கலவரம் வெடித்தது மற்றும் வடக்குப்பகுதியை சேர்ந்தவர்களோடு
மோதினர்.
போலீசார் துப்பாக்கியால் பிரயேகம் செய்ததால் குறைந்தபட்சம் 84 பேர் கொல்லப்பட்டனர்
மற்றும் 100 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர். இராணுவ ஹெலிகாப்டர்கள் தலைநகர் மீது சுற்றிக்கொண்டிருப்பதாக
கூறப்படுகிறது மற்றும் கவச வாகனங்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் மூலோபாய புள்ளிகளில்
நிலைகொண்டிருக்கின்றன.
அந்த மரணம் "ஒரு பெருந்துயரம்" மற்றும் ''நெஞ்சை பிளப்பதென்றும்" நியூயோர்க்
டைம்ஸ் அறிவித்தது.
பிராந்திய மற்றும் உலகத்தலைவர்கள் அமைதி ஏற்படவேண்டுமென கேட்டுக்கொண்டிருக்கின்றனர்,
மற்றும் சமாதான பேரம் தொடர்ந்து செயல்படுத்தப்பட வேண்டுமென வற்புறுத்தியுள்ளனர். ஆனால் இவர்களது நம்பிக்கை
பரவலாக நிலவவில்லை என்பதை சந்தை நடவடிக்கைகள் காட்டுகின்றன. அண்மையில் கராங்குடன் எண்ணெய் சலுகைகள்
தொடர்பாக உடன்பாட்டு பேச்சுவார்த்தைகள் நடத்திய வைட் நைல் நிறுவனத்தின் பங்குகள் விலை கராங் மரணம் பற்றிய
செய்தி வெளியானவுடன் 13 சதவீதம் வீழ்ச்சியடைந்தது. வடக்கு-தெற்கிற்கு இடையிலான சமாதான பேரத்தின் "வேகத்தை
நிலைநாட்டுவதற்காகவும்" டர்புரில் ஒரு உடன்படிக்கையை எட்ட வேண்டுமென்று அரசாங்கத்தை வலியுறுத்துவதற்காகவும்
அமெரிக்க வெளியுறவு அமைச்சர் கொண்டலிசா ரைஸ் இரண்டு தலைமை தூதர்களை அனுப்பியிருக்கிறார்.
உகண்டாவின் ஜனாதிபதி Yoweri
Museveni-யை சந்தித்து பேசியபின்னர், தெற்கு சூடானிலுள்ள
SPLM-ன்
புதிய தளத்திற்கு ஒரு உகண்டா இராணுவ ஹெலிகாப்டரில் கராங் பயணம் செய்தபோது அது நொருங்கியது. அதற்கான
காரணம் என்ன என்பது தெரியவில்லை. மோசமான தட்பநிலையின் விளைவாக விபத்து ஏற்பட்டிருக்க கூடும்.
ஹெலிகாப்டரில் சென்று கொண்டிருக்கும்பொழுது எரிபொருள் தீர்ந்துவிட்டதாகவும் கூறப்படுகின்றன.
ஒரு திட்டமிட்ட நாசவேலையாகவும் அந்த ஹெலிகாப்டர் நொருங்கியிருக்க கூடும்
என்பதற்கான சாத்தியக்கூறும் உண்டு. கராங்கிற்கு கார்டூம் அரசாங்கத்திலும், சூடானின் தென்பகுதியிலும் பல
எதிரிகள் உண்டு. அங்கே அவர் பல SPLM
எதிரிகளை சிறைவைத்தார் மற்றும் கொன்றார். ஆனால் காரணம் எதுவாக இருந்தாலும், அமெரிக்க ஆதரவோடு
உருவாக்கப்பட்டுள்ள தென்பகுதி சமாதான பேரம் ஏற்கனவே ஆட்டம்கண்டுள்ள நிலையில் இருப்பது, கராங் மரணத்தால்
ஸ்திரமற்றதாகிவிடும். மேற்கு டர்புர் பிராந்தியத்தில் கராங் முன்னின்று ஒரு பேரத்தை உருவாக்குவார் என்ற
நம்பிக்கைகளுக்கும் அது முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது. சூடானின் கிழக்கு பகுதிகளிலும் மோதல் கொதித்தெழும்.
ரோயல் ஆபிரிக்கன் சமுதாயத்தின் டைரக்டர், ரிச்சர்ட் டவுடன் நிலவரத்தை இரத்தினச்சுருக்கமாக
குறிப்பிட்டார். "இதில் ஆபத்து என்னவென்றால், கராங்கின் மரணம் சூடான் மக்கள் விடுதலை இயக்கத்தை பிளவு படுத்திவிடும்"
என்று டவுடன் கார்டியனிடம் தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து கூறினார்: "கராங் பழையகாலத்து சர்வாதிகாரி. எந்த வகையிலும்
அவரது தலைமை பொதுக்கருத்து அடிப்படையில் உருவாக்கப்பட்டதல்ல. அவர் வாரிசுகளை விரும்பவில்லை. அவர்களில்
ஒருவரோடு அவர் மோதியிருக்க கூடும் மற்றும் யார் அவரது இடத்திற்கு வருவார்கள் என்பது தெளிவாக இல்லை.
கராங்கை வெறுத்த ஏராளமான மக்கள் இப்போது, இங்கே எங்களுக்கு ஒரு வாய்ப்பு' என்று சொல்லக்கூடும்.
வடபகுதி பெரும்பாலும் பின்னால் இருந்துகொண்டு உள்ளூர ஏளனமாய்
சிரித்துக்கொண்டும் இருக்கும்"
கராங் இறந்தபொழுது அவருக்கு 60 வயது, சூடானிலுள்ள மிகப்பெரிய இனக்குழுவான
டிங்கா இனத்தை சேர்ந்தவர். அவர் ஐயோவாவிலுள்ள கிரீநெல் கல்லூரியில் படித்தவர் மற்றும் ஐயோவா அரசு
பல்கலைக்கழகத்தில் தெற்கு சூடானில் விவசாய வளர்ச்சி பற்றிய ஆராய்ச்சி செய்து பொருளாதாரத்தில்
PhD பட்டமும்
பெற்றார். சூடானில் நடைபெற்ற முதலாவது உள்நாட்டுப்போரில் கார்டூமிலிருந்து தென்பகுதி பிரிந்து செல்லவேண்டும்
என்று முயன்ற அன்யா நியா இயக்கத்தின் ஒரு பகுதியாக அவர் செயல்பட்டார்.
1972-ல் ஒரு சமாதான பேரம் கையெழுத்தான பின்னர், சூடான் இராணுவத்தில் சேர்ந்து
கொண்ட முன்னாள் கிளர்ச்சிக்காரர்களில் அவரும் ஒருவர். அவர் இராணுவத்தில் லெப்டினட் கர்னலாக பதவி உயர்வு
பெற்றார் மற்றும் ஜோர்ஜியாவிலுள்ள பென்னிங் கோட்டைப்பகுதியில் தளபதி பயிற்சி பெறுவதற்காக அமெரிக்கா
திரும்பினார். 1983-ல், ஜனாதிபதி நிமியெர்ரி, ஷரீயத் சட்டத்தை திணித்த பின்னர், அவரது சொந்த மாவட்டத்தில்
அதிகாரிகளின் கிளர்ச்சியை நசுக்குவதற்கு அவர் அனுப்பப்பட்டார். அதற்கு மாறாக, அவர் கிளர்ச்சிக்காரர்களுடன்
சேர்ந்து கொண்டார், அதன்மூலம் சூடானின் இரண்டாம் உள்நாட்டுப்போர் ஆரம்பித்தது, இறுதியாக அவர்
SPLM-ன் தலைவராக
ஆனார்.
1956-ல் சூடான் சுதந்திரம் பெற்ற பின்னர் அந்த நாட்டின் வரலாற்றை
பண்பிட்டுக்காட்டும் திரும்பத்திரும்ப நடைபெறும் உள்நாட்டு போர்களின் வேர்கள் அந்த நாட்டைவிட்டு வெளியேறிய
பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சி விட்டுச்சென்ற தடமான பழங்குடி, மத மற்றும் கலாச்சார பிளவுகளின் மரபில்
அடங்கியிருக்கிறது.
பிரிட்டன் எப்போதுமே வடக்கையும், தெற்கையும் தனித்தனியே ஆட்சி செய்தது, மற்றும்
அரபு மக்களுக்கும், ஆபிரிக்க கிறிஸ்தவ முஸ்லீம் மக்களுக்கும், அதேபோல் பல பழங்குடி குழுக்களுக்கும் இடையில்
போட்டிகளை வளர்ப்பதற்கு முயன்றது. இந்த நீண்டகால பகைமைகள் அமெரிக்காவிற்கும், சோவியத் யூனியனுக்கும்
இடையிலான குளிர்யுத்தப் போட்டிகள் மற்றும் அமெரிக்கா ஆதரித்து புரந்த இஸ்லாமிய அடிப்படைவாதம் இவற்றால்
முன்னிலும் அதிகமாயின. மிக அண்மைக் காலத்தில், சூடானின் எண்ணெய் வளம் வெளிநாட்டு போட்டி வல்லரசுகளுக்கிடையே
கவர்ச்சிக்குரியதாக ஆகியது.
சூடானின் ஜனாதிபதி கப்பார் அல் நிமியரி சூடான் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆதரவோடு
1969-ல் பதவிக்கு வந்தார், மற்றும் ஆரம்பத்தில் அவர் கம்யூனிஸ்ட் உறுப்பினர்களை சிறையிலடைத்தபொழுதிலும்,
கொலை செய்தபொழுதிலும்கூட, சோவியத் யூனியனால் ஆதரிக்கப்பட்டார். 1971 முதல் நிமியரி மிகப்பெருமளவில்
மேற்கு நாடுகளுக்கு-சார்பான கொள்கையை கடைபிடித்தார்.
1983-ல், சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கன நடவடிக்கைகள் திணிக்கப்பட்டதற்கு
எதிராக, பொதுமக்களிடையே கண்டனங்கள் எழுந்ததைத் தொடர்ந்து அவர் இஸ்லாமிய ஹூரியத் சட்டத்தை
அறிமுகப்படுத்தினார். இது கிறிஸ்தவர்கள் அல்லது பாரம்பரிய ஆபிரிக்க மதங்களை சேர்ந்தவர்கள் பெரும்பான்மை
மக்களாக உள்ள தென்பகுதியில் ஒரு எழுச்சியை தூண்டிவிட்டது.
தென்பகுதி கிளர்ச்சிக்காரர்கள் சோவியத் ஆதரவு பெற்ற மெஞ்சிட்சு ஹெய்லி மரியமின்
எத்தியோப்பிய டெர்க் ஆட்சியால் ஆதரிக்கப்பட்டனர், அது பேரரசர்
Haile Selassie-யின் மேற்கத்திய - சார்பு ஆட்சியை 1974-ல்
கவிழ்த்தது. அதைத்தொடர்ந்து நடைபெற்ற உள்நாட்டுப் போரில் இரண்டு மில்லியன் மக்கள் மடிந்ததாக கூறப்படுகிறது.
1985-ல் நிமியரி தூக்கிவீசப்பட்டார்.
இறுதியாக, 1989-ல், கார்டூமில் உமர் ஹசன் அல்பஷீரின் தேசிய இஸ்லாமிய முன்னணி
அரசாங்கம் உருவாயிற்று. ஆப்கானிஸ்தானில் இஸ்லாமிய அடிப்படைவாதத்தை அமெரிக்கா, ஆதரித்து வந்தது, சூடானில்
இந்த பிற்போக்கு கருத்தியலை நிலைநாட்டிவருவதற்கு அதிகளவில் வேலை செய்தது, ஆனால் குளிர்யுத்தம் முடிந்ததும்
அமெரிக்க கொள்கை மாறியது.
சோவியத் ஒன்றியம் சிதைந்ததையும், 1991-ல் டெர்க் ஆட்சி வீழ்ச்சியடைந்ததையும்
தொடர்ந்து, அமெரிக்கா தனது ஆதரவை தென்பகுதி கிளர்ச்சிக்காரர்களுக்கு தந்தது. கராங் எப்போதுமே
செய்முறைவாதி என்று காட்டிக்கொண்டார், எந்த கொள்கை உறுதியும் இல்லாதவர், அவர் தன்னுடைய விசுவாசத்தை
அதன் பக்கம் மாற்றிக்கொண்டார்.
பயங்கரவாதத்தை ஆதரித்த அரசு சூடான் என்று அமெரிக்கா அறிவித்தது மற்றும் உகண்டா
வழியாக கராங்கின் SPLM-ற்கு
இரகசியமாக இராணுவ உதவிகளை திருப்பிவிட்டது மற்றும் பகிரங்கமாக தென்பகுதியில்
SPLM கட்டுப்பாட்டிலுள்ள
பகுதிகளுக்கு 2.13 பில்லியன் டாலர்களை உதவித்தொகையாக வழங்கியது. 1998-ல், அமெரிக்கா கார்ட்டூமில் ஒரு
இராசாயனவியல் (வேதியல்) ஆயுதங்கள் தயாரிப்பு தொழிற்சாலை என்று அது கூறியதை குண்டு வீசி தகர்த்தது, ஆனால்
உண்மையிலேயே அது ஒரு மருந்து தயாரிப்பு தொழிற்சாலை.
SPLM-ன் மனித உரிமைகள் துஷ்பிரயோகத்தை தள்ளுபடி செய்துவிட்டு
அமெரிக்க கீழ்சபை சூடான் அரசாங்கம் "தெற்கு சூடானில் இன அழிப்பு படுகொலை போரில் ஈடுபட்டிருப்பதாகவும்
தொடர்ந்து மனித உரிமைகளை மீறிவருவதாகவும்" கண்டனம் செய்தது.
மிக அண்மைக் காலத்தில், சூடான் தொடர்பான வாஷிங்டன் கொள்கை மீண்டும்
மாற்றப்பட்டது. புஷ் நிர்வாகம், ஈராக்மீது போர் தொடுப்பதற்கு தயாரிப்பு செய்து கொண்டிருந்த நேரத்தில்,
சூடான் அரசாங்கம் தொடர்பாக தனது அணுகுமுறையை மாற்றிக்கொண்டது, அது வாஷிங்டனின் ''பயங்கரவாதத்தின்
மீதான போரில்'' ஒத்துழைக்க சம்மதித்தது, ஒசமா பின் லாடனின் நண்பர்கள் என்று சொல்லப்பட்ட 30 பேரை
ஒப்படைத்தது மற்றும் கார்ட்டூமில் அமெரிக்க புலனாய்வு முகவாண்மைகளை வரவேற்றது. இதற்கு பதிலாக அமெரிக்கா,
சூடான், சர்வதேச நிதியுதவிகளை பெறுவதில் விதித்திருந்த கட்டுப்பாடுகளை நீக்கியது, சூடானில் வெளிநாட்டு முதலீடுகளை
எளிதாக செய்வதற்கு வகை செய்தது.
அமெரிக்க எண்ணெய் நிறுவனங்களும் வாஷிங்டன் மீது அழுத்தங்களை கொண்டு வந்தன.
1998-ல், 1,600 மைல் எண்ணெய்க் குழாய் இணைப்பு, தெற்கு சூடானிலுள்ள ஐக்கிய அரசிற்கும் (Unity
State) செங்கடல் துறைமுகமான பெஷாருக்குமிடையில்
திறக்கப்பட்டது. அந்தக் குழாய் இணைப்பை தகர்ப்பதற்கு
SPLM மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியடைந்தன.
இந்த குழாய் இணைப்பு ஒரு நாளைக்கு 250,000 பீப்பாய்கள் எண்ணெய்யை கொண்டு
செல்லும் திறன்படைத்தவை. சூடானில் 2 பில்லியனுக்கு மேற்பட்ட பீப்பாய்கள் எண்ணெய் இருப்பு இருப்பதாக
கருதப்படுகிறது.
சூடானிலிருந்து நடைமுறையில் அமெரிக்க நிறுவனங்கள் விலக்கப்பட்டிருந்தன, அங்கு
ஐரோப்பிய ஒன்றிய மற்றும் ஆசிய போட்டிநாடுகள் குறிப்பாக சீனாவிற்கு அது திறந்துவிடப்பட்டது, அது சூடானின்
எண்ணெய் உற்பத்தியில் பெருமளவிற்கு முதலீடு செய்திருக்கிறது.
கராங் உயிர்தப்பி இருந்தால் கூட, ராஜதந்திர மட்டத்தில் தொடர்ந்து மோதல் நடந்து
கொண்டுதான் இருக்கும், அது இராணுவ மோதல்களாக வெடிக்கும் என்று எப்போதுமே அச்சுறுத்திக்கொண்டிருக்கிறது.
கராங் போய்விட்டார், எனவே இராணுவ மோதல்களுக்கான வாய்ப்புகள் கணிசமான அளவிற்கு அதிகரித்துள்ளன, அவர்
மரணத்தால், வடக்கு-தெற்கு மோதலைவிட தென்பகுதியில் தற்காலிகமாக உள்-கன்னைவாத (பிரிவு) மோதல்கள்
முக்கியத்துவம் பெறும்.
எண்ணெய் கிணறுகளில் தனது பிடிப்பை நீடித்துக்கொள்வதற்கு இத்தகைய மோதல்களை
கார்டூம் சந்தேகத்திற்கு இடமின்றி பயன்படுத்திக்கொள்ளும். எண்ணெய் வளம்மிக்க பகுதிகளிலிருந்து சிவிலியன் மக்களை வெளியேற்றும்
முயற்சியில் தாக்குதல்களை நடத்த அது நீண்டகாலமாக தெற்கு சூடான் பாதுகாப்புப் படையை நம்பியிருந்தது.
கராங் மரணத்திற்கு முன்னர், பிரஸ்ஸல்சை தளமாகக்கொண்டுள்ள சர்வதேச நெருக்கடிக்குழு
(ICG) ஏற்கனவே அமெரிக்கா தயவில் உடன்பாடு காணப்பட்டுள்ள வடக்கு
- தெற்கு சமாதான பேரத்தின் ஆபத்தான தன்மை குறித்து கவனத்தை ஈர்த்துள்ளது. ஜூலை மாதம்
ICG வெளியிட்டுள்ள அறிக்கையில்
கார்ட்டூம் அரசாங்கம் சமாதான பேரத்தில் செயல்படுத்த தவறிய அம்சங்களை சுட்டிக்காட்டியுள்ளது மற்றும்
SPLM அரசாங்கத்திற்கு
மாறுவதற்கு இயலாத நிலை குறித்தும் தெரிவித்திருக்கிறது.
கராங் அவர் மரணம் அடைவதற்கு சிறிது முன்னர், கையெழுத்திட்ட எண்ணெய் ஒப்பந்தங்கள்
சமாதான பேரத்தை மீறுவதாக உள்ளது, எனவே அந்த ஒப்பந்தங்கள் இரத்து செய்யப்பட வேண்டும் என அந்த அறிக்கை
கூறியுள்ளது. அமெரிக்காவும், பிரிட்டனும் உடனடியாக தலையிட்டு எண்ணெய் கிணறுகளில் கார்டூமிற்கும்
SPLM-ற்கும் இடையிலான
எல்லைகளை உடனடியாக முடிவு செய்யவேண்டும் என்று அது கேட்டுக்கொள்கிறது. இந்தக் கோரிக்கையின் அடிப்படையாக
அமைந்திருப்பது சூடானின் எண்ணெய் வளத்தில் பங்கெடுத்துக்கொள்வது தொடர்பாக ஐரோப்பா, சீனா மற்றும் அமெரிக்காவிற்கு
இடையில் நிலவுகின்ற போட்டி மற்றும் உலகின் மிகப்பெரிய கப்பல் வழித்தடங்களில் ஒன்றான செங்கடல் கடற்கரையோரத்தில்
ஆபிரிக்காவிற்கும், மத்திய கிழக்கிற்கும் இடையில் மூலோபாய முக்கியத்துவம் நிறைந்துள்ள ஒரு நாட்டை கட்டுப்படுத்துவதும்
அடங்கியிருக்கிறது.
மற்றொரு சிறப்பான காரணி சூடானின் ஆபத்தான நிலை பாரியளவு சமூக நெருக்கடி ஆபிரிக்கா
முழுவதிலும் தோன்றியுள்ளதால் எழுந்ததாகும், அது மேலை நாடுகளின் ஏகாதிபத்தியம் மேற்கொண்ட கொள்கைகளால் நிரந்தர
வறுமையில் தள்ளப்பட்டிருக்கிறது.
டர்புரில், 2 மில்லியன் மக்கள் தங்களது வீடுகளிலிருந்து தப்பியோடிவிட்டதாக மதிப்பிடப்பட்டிருக்கிறது.
அறியப்படாத எண்ணிக்கையினர், ஐக்கிய நாடுகள் மதிப்பிட்டுள்ளபடி, பட்டினி, நிச்சயமாக 70,000-ற்கு மேற்பட்டவர்கள்
நோய் மற்றும் வன்முறையில் இறந்துள்ளனர். நாட்டின் தென் பகுதியில் பல ஆண்டுகள் உள்நாட்டு போருக்குபின், உள்
கட்டமைப்பு எதுவுமில்லை, பத்தாயிரக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்திருக்கின்றனர். கார்ட்டூமில், தெற்கிலிருந்து அகதிகளாக
வந்த மக்கள் வறுமையில் வாடிக்கொண்டிருக்கும் வடபகுதி மக்களோடு அண்மையில் கலவரங்கள் நடைபெற்ற வசதிக்குறைவான
நகரங்களில் சேர்ந்து வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.
அந்த கண்டத்தின் பிற பகுதிகளைப்போல், பல்வேறு வகைப்பட்ட இன, மத மற்றும் பழங்குடி
குழுவினர் ஒருவருக்கு எதிராக ஒருவர் கொடூரமான போர்களிலும் ஈடுபட்டுவருவதுடன் நாட்டின் செல்வந்தத்தட்டினர் தங்களது
நலன்களை முன்னெடுத்து செல்வதற்கான ஏகாதிபத்தியவாதிகள் ஆதரவோடு தூண்டிவிடுகின்ற வகுப்புவாத வன்முறையிலும் ஈடுபட்டிருக்கின்றனர். |