:
ஐரோப்பா
:
ஜேர்மனி
German president clears way for early
elections
முன்னதாக தேர்தல்களை நடத்துவதற்கு ஜேர்மனி ஜனாதிபதி வழியமைத்தார்
By Peter Schwarz
25 July 2005
Back to screen
version
ஜூலை 21 மாலையில், ஜேர்மன் ஜனாதிபதி ஹோஸ்ட் கோலர் பெரிதும் தம்மிடமிருந்து
எதிர்பார்க்கப்பட்ட முடிவான ஜேர்மனியின் மத்திய நாடாளுமன்றத்தை கலைப்பதாக ஒரு தேசிய தொலைக்காட்சி உரையில்
அறிவித்தார். ஜேர்மனியின் அதிபர் ஹெகார்ட் ஷ்ரோடரின் தீர்மானத்தை ஏற்றுக்கொண்டு செப்டம்பர் 18ல் மத்திய
தேர்தல்களை நடத்துவது என்று முடிவு செய்ததாக அவர் விளக்கினார்.
ஜூலை 1ல் நாடாளுமன்றத்தில் நம்பிக்கைகோரும் வாக்கெடுப்பில் ஷ்ரோடர் அரசாங்கம்
தோல்வியடைந்த பின்னர், புதிய தேர்தலை அழைப்பதற்கு கோலருக்கு 21 நாட்கள் முடிவு செய்யும் கால அவகாசம்
இருந்தது. அந்தக்காலம் முழுவதும் கடந்த பின்னர் அவர் தனது அறிக்கையை வெளியிட்டார்.
இந்த காலகட்டத்தில் நடைபெற்ற விவாதங்களும் கலந்துரையாடல்களும் அவற்றில் என்ன
இடம்பெற்றன என்ற விவரங்களும் ஒரு அரசாங்க இரகசியமாகவே காப்பாற்றப்பட்டு வருகின்றன. தொலைக்காட்சியில்
கோலர் உரையாற்றப் போகிறார் என்ற செய்தியைக்கூட அவர் உரையாற்றுவதற்கு சிலமணி நேரத்திற்கு முன்வரை கூட
இரகசியமாக வைக்கப்பட்டிருந்தது.
இந்த இரகசியமான நடவடிக்கைகளுக்கு பின்னால் பலதரப்புகளில் இருந்து பாரியளவு அழுத்தங்களின்
கீழ் ஜேர்மன் ஜனாதிபதி இருந்தார் என்ற உண்மை இருக்கிறது. அனைத்து பெரிய அரசியல் கட்சிகளும் புதிய தேர்தல்களை
பகிரங்கமாக ஆதரித்துள்ளனர் என்றாலும், மற்றவர்கள் அவர்களுக்கெல்லாம் மேலாக, அரசியலமைப்பு வழக்கறிஞர்கள்
பெரும் ஆட்சேபனைகளை எழுப்பினர். தேர்தல்களை முன்கூட்டியே நடத்துவதற்கு ஷ்ரோடர் தேர்ந்தெடுத்த முறையை அவர்கள்
ஆட்சேபித்தனர் --ஜேர்மனியில் தேர்தல்கள் கண்டிப்பாக 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெற்றாக வேண்டும்-- ஒரு
நம்பிக்கை வாக்கு கோரியதன் மூலம் தமது அரசாங்கம் தோல்வியடையும் என்று தெரிந்தே அவர் செய்தார். இது
ஜேர்மன் அரசியலமைப்பை மீறுவதாக உள்ளது, ஏனெனில் அச்சட்டம் தன்னைத்தானே கலைத்துக்கொள்ள நாடாளுமன்றத்திற்கு
அதிகாரம் வழங்கவில்லை என்று அவர்கள் கூறினர்.
ஜேர்மன் அரசியலமைப்பின் 68வது பத்தியின்படி அதிபருக்கு நாடாளுமன்றத்தில் ஒரு
பெரும்பான்மை இல்லை என்ற தெளிவான நிலை ஏற்படும்போதுதான் நாடாளுமன்றத்தை கலைப்பதற்கான அடிப்படை
நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படுகிறது, மாறாக ஒரு அரசாங்கத்தின் பெரும்பான்மையினர் வாக்களிப்பில் கலந்துகொள்ளமால்
இருக்கும்போது அல்லது உறுப்பினர்கள் அதிபருக்கு எதிராக ஒரு தந்திரோபாய வழியாக வாக்களிக்க தவறும்போது
நாடாளுமன்றத்தை கலைக்க வகை செய்யவில்லை, என்று அவர்கள் வாதாடினர்.
"அரசியலமைப்பு சட்ட நடைமுறை பிரச்சனைகளை, 'நீங்கள் உண்மையிலேயே முக்கியமாக
எடுத்துக்கொள்ளவில்லை என்றால், அதன் பொருளடக்க பிரச்சனையிலும் நீங்கள் அவ்வாறு செய்ய முடியாது", என்று
Süddeutsche Zeitung செய்தி பத்திரிகையில் ஹெரிபேர்ட்
பிரான்டில் எச்சரித்தார். "ஜேர்மனிக்கு பல்வேறுபட்ட கொள்கைகள் தேவைப்படலாம்... என்றாலும், எந்த ஒரு சரியான
கொள்கையும் அரசியலமைப்பை துஷ்பிரயோகமாக பயன்படுத்துவதற்கு விலையாகாது".
இறுதியில் கோலர் சட்டப்படி அல்லாத அரசியல் காரணங்களை அடிப்படையாக கொண்டு
ஒரு முடிவை செய்தார். ஜூலை 1ல் ஷ்ரோடர் நம்பிக்கை இல்லா தீர்மான வாக்கெடுப்பை நியாயப்படுத்துவதற்கு பயன்படுத்திய
வாதத்தையே வைத்தார்:
தனது சமூக ஜனநாயகக் கட்சி
(SPD) மற்றும்
பசுமைக்கட்சி கூட்டணிக்கு நாடாளுமன்றத்தில் ஒரு தெளிவான பெரும்பான்மை இருந்தும் தனது கொள்கைகளுக்கு இனி ஒரு "ஸ்திரமான
மற்றும் நம்பகத்தன்மையுள்ள" அடிப்படையில்லை என்று அதிபர் குறிப்பிட்டிருந்தார்.
"அதிபர் தாக்கல் செய்திருந்த விரிவான மதிப்பீட்டை நான் ஆராய்ந்தேன்,'' அதிபர்
தந்திருந்த மதிப்பீட்டைவிட சிறப்பான மதிப்பீடு எதையும் நான் காணவில்லை". என்று கோலர் கூறினார்.
மிகப்பெரும்பாலான அரசியல் பார்வையாளர்களது எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப கோலர்
தனது முடிவை செய்திருந்தாலும் ஒளிவுமறைவற்ற முறையிலும் தீவிரமாகவும் அவர் அரசியல்ரீதியாக வாதிட்டது
குறிப்பிடத்தக்கதாக அமைந்தது. அவர் சட்டபூர்வமான காரணங்களை தனது முடிவிற்கு ஆதரவாக விளக்குவதற்கு முன்னர்,
அவர் ஒரு சிறிய ஆனால் மிகவும் பரபரப்பான அரசியல் நிலவர மதிப்பீட்டை வெளியிட்டார். அது மக்களது ஆதரவை
பெறாத நடவடிக்கைகளை கொண்டு செலுத்துகிற ஒரு வலுவான அரசாங்கம் வேண்டும் என்று வாதாடியதாகத்தான்
எடுத்துக்கொள்ள வேண்டும்.
"நமது எதிர்காலமும் நமது குழந்தைகளின் எதிர்காலமும் இதில் தொக்கி நிற்கின்றன,
மில்லியன் கணக்கான மக்கள் பல ஆண்டுகளாக வேலையில்லாதிருக்கின்றனர். மத்திய மற்றும் மாநில அரசாங்கங்களின் நிதி
நிலவரம் இதற்கு முன்னர் எப்போதும் இருந்திராத அளவிற்கு ஒரு நெருக்கடியான கட்டத்திலுள்ளது. தற்போதுள்ள
கூட்டாட்சி நடைமுறை காலாவதியாகிவிட்டது. இப்போது நமக்கு போதுமான குழந்தைகள் இல்லை, நாம் தொடர்ந்து
முதியவர்களாகிக்கொண்டு வருகிறோம். மற்றும் நாம் உலகரீதியாக தீவிர போட்டியில் நம்மை ஈடுபடுத்திக் கொண்டாக
வேண்டும். இந்தக் கடுமையான சூழ்நிலையில், தனது குறிக்கோள்களை உறுதியாகவும் கடுமையாகவும் கடைபிடிக்கின்ற ஒரு
அரசாங்கம் நமது நாட்டிற்கு தேவை," என்று அவர் கூறினார்.
செயற்திட்டம் 2010 இன் கடுமையான சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிராக பெரும்பாலான
எண்ணிக்கையானவர்கள் எதிர்த்ததால் சமூக ஜனநாயகக் கட்சி வடக்கு ரைன் வெஸ்ட்பாலியாவில் படுதோல்வி கண்டதை
தொடர்ந்து ஷ்ரோடர் உடனடியாக புதிய தேர்தலை நடத்துவதற்கு அழைப்பு விடுத்ததை கருதிப்பார்க்கும்போது,
கோலரின் சர்வாதிகார முறையிலான வாதத்தன்மை தெளிவாக தெரிகிறது. கீழ் மட்டத்திலிருந்து வருகின்ற
அழுத்தங்களிலிருந்து எந்த வகையிலும் பாதிக்கப்படாத ஒரு அரசாங்கத்தை கொண்டு வருவதுதான் இந்த தேர்தலின்
நோக்கமாகும்.
அதிபரை ''அச்சுறுத்துகின்ற வகையில் எதிர்ப்புக்குரல்களும் கட்சி தாவல்களும் நடைபெற்று
வருகின்றன" என்று கோலர் கூறுகிறார்.
இந்த வார்த்தைகள் குறிப்பிடத்தக்கவை, இதற்கெல்லாம் மேலாக மிக சுலபமாக கோலர்
ஜனநாயகக் கொள்கைகளை மீறி நடந்திருக்கிறார். அரசியலமைப்பின்படி, நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களது சொந்த
மனசாட்சிக்கு மட்டுமே கட்டுப்பட்டவர்கள். அப்படியிருந்தும் கோலர்
"எதிர்ப்பு குரல்களின்" எதிர்கால தாக்கத்தின் அடிப்படையில் அதையே
காரணமாக வைத்து, நாடாளுமன்றத்தை கலைத்ததை நியாயப்படுத்துகிறார்.
மே 22ல் புதிய தேர்தல்களுக்கு அழைப்பு விடுக்க வேண்டும் என்ற ஷ்ரோடரின் முடிவிற்கு
ஆரம்பத்திலிருந்தே ஆளும்தட்டிற்குள்ளிருந்து மகத்தான ஆதரவு கிடைத்தது. உண்மையிலேயே அதிபர் ஒரு இறுதி அரசியல்
எச்சரிக்கையை வாக்காளர்களுக்கு தந்தார்: செயல் திட்டம் 2010, ஹார்ட்ஸ்
IV, மற்றும் சமூக ஜனநாயகக் கட்சி -பசுமைக்கட்சி அரசாங்கம்
கோரிய மற்ற ஒவ்வொரு சமூக வெட்டையும் ஏற்றுக்கொள்ள வேண்டும் அல்லது பழமைவாத யூனியன் கட்சிகளான
(கிறிஸ்தவ ஜனநாயக யூனியன் மற்றும் கிறிஸ்தவ சமூக யூனியன்) மற்றும் தாராளவாத ஜனநாயகக் கட்சி (FDP)
ஆகியவை அரசியல் அதிகாரத்திற்கு வந்து அதே கொள்கைகளை இன்னும் கூர்மையான வடிவத்தில் செயல்படுத்தும்.
செப்டம்பரில் கிறிஸ்தவ ஜனநாயக யூனியன், கிறிஸ்தவ சமூக யூனியன் மற்றும் தாராளவாத ஜனநாயகக் கட்சியினர் தங்கள்
கைக்கு அரசாங்க அதிகாரம் வரும் என்று நிச்சயமாக முடிவுக்கு வந்தனர்.
என்றாலும், இதற்கிடையில் இரண்டு நிகழ்ச்சிகள் நடைபெற்றன, அவை, ஓராண்டு
முன்கூட்டியே தேர்தல்களை நடத்துவதன் புத்திசாலித்தனத்தை சந்தேகிப்பதாக அமைந்துவிட்டன. கோலர் ஒரு முடிவை
எடுப்பதற்கு நீண்டகாலம் பிடித்ததற்கு இதுதான் குறிப்பிட்ட காரணமாக இருந்திருக்கின்றது.
முதலாவதாக, எதிர்க்கட்சிகளாக இருக்கின்ற யூனியன் கட்சிகள் அரசாங்க அதிகாரத்தை
தங்கள் கையில் எடுத்துக்கொள்வதற்கு முறையான ஆயத்த நிலையில் இல்லை. சமூக ஜனநாயகக் கட்சிக்குள் எப்படி
பதட்டங்கள் நீடிக்கின்றனவோ, அதேபோன்று யூனியன் கட்சிகளுக்கு இடையிலும் குறிப்பிடத்தக்க கருத்து வேறுபாடுகள்
வரி சீர்திருத்தம், சமூகக் கொள்கைகள் மற்றும் இதர முக்கிய பிரச்சனைகளில் நிலவுகின்றன. கிறிஸ்தவ ஜனநாயக யூனியன்
மற்றும் கிறிஸ்தவ சமூக யூனியன் அதிகாரத்திற்கு வருமானால் இந்த கருத்து வேறுபாடுகள் பகிரங்கமாக வெளியில்
வரக்கூடும். இதற்கெல்லாம் மேலாக, மதிப்பு கூடுதல் வரியை (Value-Added
Tax) இரண்டு சதவீதம் உயர்த்த வேண்டுமென்ற அவர்களது
முன்மொழிவு உள்விவாதத்திற்கு இடமளித்துள்ள ஒரு விவகாரமாகும். வர்த்தக வட்டாரங்கள் இதற்கு வலிமையூட்டும்
வகையிலும்், எதிராகவும் கருத்து தெரிவித்துள்ளன. அதன் விளைவாக கருத்துக்கணிப்புக்களில் கிறிஸ்தவ ஜனநாயக யூனியன்
மற்றும் கிறிஸ்தவ சமூக யூனியனிற்கான ஆதரவு கணிசமாக வீழ்ச்சியடைந்து விட்டது.
இரண்டாவதாக புதிய ''இடது கட்சி'' மிக வேகமாக வளர்ந்தது ஆளும்தட்டின்
கணிப்பீட்டை குழப்பமடையச் செய்தது. சமூக ஜனநாயகக் கட்சிக்கு இடதுசாரியாக ஒரு கட்சி வளர்வதை தடுப்பதுதான்
தேர்தல்களை முன்கூட்டியே நடத்துவதற்கான நோக்கமாகும். என்றாலும், இதுதான் துல்லியமாக நடந்தது.
இடது கட்சி மக்கள் கருத்துக்கணிப்புக்களில் படிப்படியாக வளர்ந்து கொண்டே வருகிறது.
தற்போது தேசியரீதியாக அது பன்னிரண்டு சதவீமாக உள்ளது. இது தாராளவாத ஜனநாயகக் கட்சி மற்றும் பசுமை
கட்சியினரை விட மிக அதிகமாகும். முன்னாள் கிழக்கு ஜேர்மன் மாகாணங்களின் கிறிஸ்தவ ஜனநாயக யூனியன் மற்றும் சமூக
ஜனநாயகக் கட்சியை விட செல்வாக்கு அதிகமாக இடது கட்சிக்கு உள்ளது.
ஆளும் செல்வந்தத் தட்டினருக்கு இடது கட்சி மட்டுமே பிரச்சனையல்ல, அது ஜனநாயக
சோசலிச கட்சி (PDS)
மற்றும் தேர்தல் மாற்றீடு கட்சிகளின் இணைப்பாகும், அந்தக் கட்சி, சமூக ஜனநாயக கட்சி தலைமையிலான அரசாங்கத்தை
ஆதரிப்பதிலும், சமூக விரோதக் கொள்கைகளை அமுல்படுத்துவதில் உதவுவதிலும் மிகுந்த ஆர்வமாக உள்ளது----பல கிழக்கு
ஜேர்மன் நகரசபைகளிலும், பேர்லின் மற்றும் மெக்லன்பேர்க் வார்போமெர்ன் மாநில அரசாங்கங்களும் ஜனநாயக சோசலிச
கட்சி தலைமையில் தினசரி இதேபோன்று நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதிகாரபூர்வமான அரசியலுக்கு பொதுமக்களிடையே
பரவலான எதிர்ப்பு நிலவுவதன் பிரச்சனையே இடது கட்சிக்கு கருத்துக் கணிப்புக்களில் பெருகி வருகின்ற ஆதரவாகும்.
இந்தப்போக்கு நீடிக்குமானால் மற்றும் இடது கட்சி நாடாளுமன்றத்தில் இரட்டைதானத்துடன்
தேர்தல் முடிவில் வெற்றி பெறுமானால், அதனால்
CDU-CSU-FDP கூட்டணியோ அல்லது சமூக ஜனநாயகக் கட்சி-பசுமைக்கட்சி
கூட்டணியோ ஒரு பெரும்பான்மையைப் பெற முடியாது. எனவே ஊடகங்களில் யூனியன் கட்சிகளுக்கும், சமூக ஜனநாயகக்
கட்சிக்கும் இடையில் ஒரு பாரிய கூட்டணி உருவாவது பற்றி சாதக மற்றும் பாதகங்கள் கலந்துரையாடப்பட்டு வருகின்றன.
சில விமர்சகர்கள் அத்தகைய ஒரு கூட்டணி அமைவதற்குரிய சாத்தியக்கூறை பாராட்டுகின்றனர், அது ஒரு பரந்த நாடாளுமன்ற
பெரும்பான்மையை அடிப்படையாகக் கொண்டு அமைவதால், சமூக வெட்டுக்களை தீவிரமாக செயல்படுத்தக்கூடிய நிலையில்
அந்தக் கூட்டணி அரசாங்கம் இருக்கும் என்று வாதிடுகின்றனர். மற்றவர்கள் அது அரசியல் செயலிழப்பிற்கு வழி செய்துவிடும்
என்று கூறுகின்றனர்.
Die Zeit செய்தி பத்திரிகை
எச்சரித்திருப்பது என்னவென்றால், "ஒரு பாரிய கூட்டணி ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுவிட்ட சீர்திருத்தங்களை முன்னெடுத்துச்
செல்ல முடியாது. தேர்தலால் நிர்பந்திக்கப்பட்டு, விருப்பம் இல்லாமல் சேருகின்ற இந்தக் கூட்டணி தனது சொந்த
உட்கட்சி முரண்பாடுகளை சமாளித்து, சமரசப்படுத்தி செல்வதிலுமே குறிப்பாக கவனத்தை செலுத்தும். இது சிவப்பு-பச்சை
கூட்டணி மத்திய அரசாங்கம் எப்போதுமே யூனியன் கட்சிகளின் கட்டுப்பாட்டிலுள்ள மாகாணங்களில் சமரசம் செய்துகொள்ளும்
ஆத்திரமூட்டும் அனுபவம் நீடிப்பதாகவே அமைந்துவிடும் (கூட்டாட்சி மேலவையில் பெரும்பான்மையை கொண்டிருக்கும் யூனியன்
கட்சிகளுடன்) முடிவுகள் எல்லாமே ஒன்றுதான்:
நிரந்தர சமரசப்பேச்சு, வார்த்தைகள் சிக்கலான சமரசங்கள், தெளிவற்ற பொறுப்புக்கள் மற்றும் மிகத்தீவிரமாக
அல்லது மந்தமாக செல்கின்ற சீர்திருத்தங்கள்.
தேர்தல்களையே ஒட்டுமொத்தமாக நிறுத்திவிடலாம் என்று இதர விமர்சகர்கள் பரிந்துரை
செய்துள்ளனர். இப்போதுள்ள நிலவரப்படி, ஜேர்மனியின் அரசியலமைப்பு நீதிமன்றம்தான் கோலரின் முடிவை மாற்றுகின்ற
ஒரு நிலையில் உள்ளது. இந்த வாரம், இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களான, பசுமைக்கட்சியைச் சேர்ந்த
Werner Schulz,
சமூக ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த, Jelena
Hoffmann இருவரும் கோலரின் முடிவை எதிர்த்து மேல்முறையீடு செய்யவிருக்கின்றனர்.
நீதிமன்றம் தனது தீர்ப்பை ஆகஸ்ட் இறுதியில் அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சோசலிச சமத்துவக் கட்சி (Partei
für Soziale Gleichheit) உழைக்கும் மக்களுக்கு சர்வதேச
சோசலிச வேலைத்திட்டத்தை அறிமுகப்படுத்துவதற்காக, இந்தத் தேர்தலில் பங்கெடுத்துக் கொள்கிறது. யூனியன்
கட்சிகள், தாராளவாத ஜனநாயகக்கட்சி,
சமூக ஜனநாயகக் கட்சி மற்றும் பசுமைக் கட்சியினருக்கு எதிராக மட்டுமல்ல,
சமூக வெட்டுகளுக்கு எதிராக ஒரு சுயாதீனமான இயக்கம் முதலாளித்துவ முறைக்கும் ஒட்டுமொத்த அரசியல்
ஸ்தாபனங்களுக்கும் எதிராக அபிவிருத்தியடையாமல் தடுக்க முயற்சிக்கும் இடது கட்சிக்கு எதிராகவும் இந்தத் தேர்தலில்
தலையிடுகிறது. |