World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :  மத்திய கிழக்கு : ஈராக்

US deaths in Iraq underscore need to revive the antiwar movement

ஈராக்கில் அமெரிக்க உயிரிழப்புக்கள் போர் எதிர்ப்பு இயக்கத்தை புதுப்பிப்பதற்கான தேவையை கோடிட்டுக் காட்டுகின்றன

By the WSWS editorial board
5 August 2005

Back to screen version

இந்த வாரத்தில் ஈராக்கில் 25 அமெரிக்க படையினர் கொல்லப்பட்டுள்ளமை, அனைத்து அமெரிக்க மற்றும் வெளிநாட்டு ஆக்கிரமிப்பு படைகள் உடனடியாக, நிபந்தனையின்றி அங்கிருந்து வெளியேறவேண்டும் என்ற மாபெரும் போர் எதிர்ப்பு இயக்கத்திற்கான முயற்சிகளை புதுப்பிப்பதற்கு உந்துதல் கொடுக்கிறது. அர்த்தமற்ற இறப்புக்களும் மற்றும் நூற்றுக்கணக்கான இளவயது அமெரிக்க இராணுவத்தினர்களும், பல்லாயிரக்கணக்கான ஈராக்கியர்களும் காயப்படுதலும் ஒரு முடிவிற்குக் கொண்டுவரப்பட வேண்டும்.

செவ்வாய்க்கிழமையன்று ஆறு கடற்படை வீரர்கள் மேற்கு ஈராக்கில் ஹதிதா நகரத்திற்கு வெளியே ஒரு தாக்குதலில் கொல்லப்பட்னர். புதன் கிழமையன்று 14 கடற்படை சிறப்புவீரர்களும் ஒரு ஈராக்கிய மொழிபெயர்ப்பாளரும், அவர்கள் சென்று கொண்டிருந்த கவச வண்டி நகரத்தின் புறத்தே ஏற்பட்ட ஒரு பெரும் வெடிகுண்டுத் தாக்குதலால் அழிக்கப்பட்டபொழுது கொல்லப்பட்டனர். இந்த வெடிப்பு 31 தொன் எடையுள்ள இராணுவ வண்டியை குப்புறக் கவிழ்த்து, நெருப்புப் பிழம்பாக்கியது. வண்டியில் இருந்தவர்களில் ஒருவர்தான் தப்பித்தார். அதே இரண்டு நாட்களில் சாலையோரத்தில் தற்கொலை கொண்டுவெடிப்பு தாக்குதலில் அருகில் இருந்த ஹிட், ராவா, ஈராக்கிய தலைநகரம் பாக்தாத் ஆகிய இடங்களில் ஐந்து துருப்புக்கள் மடிந்தனர்.

அமெரிக்க மக்கள் உண்மைகளை எதிர்கொள்ளும் நேரம் இது. 2003ல் ஈராக்கியப் படையெடுப்பு மேற்கொள்ளப்பட்டதில் இருந்தே வெள்ளை மாளிகையும், செய்தி ஊடகமும் மக்களுடைய கண்களில் மண்ணைத் தூவித்தான் வந்துள்ளனர். அமெரிக்க அதிகாரிகள் போரின் உண்மை நோக்கங்களை பற்றி பொய் கூறி வந்துள்ளனர் மற்றும் அவர்கள் ஆக்கிரமிப்புக்கு தொடர்ந்து எதிர்ப்பின் அளவை திரித்துக் கூறியும், அதற்கு உள்ள மக்களுடைய ஆழ்ந்த ஆதரவு பற்றியும் தவறாகக் கூறிவந்துள்ளனர். உண்மை என்னவென்றால் மில்லியன் கணக்கான ஈராக்கியர்கள் தங்கள் நாடு வெற்றி கொள்ளப்படுவதை சட்டரீதியாக எதிர்க்கின்றனர். புஷ் நிர்வாகத்தின் பிரச்சாரகர்கள் எழுச்சியாளர்களை "பயங்கரவாதிகள்", "ஈராக்கிய-விரோதப் படைகள்" என்று அவதூறு கூறி வருகின்றனர். அந்நாட்டு மக்களை பொறுத்தவரை அவர்கள் சுதந்திரப்போராளிகள் ஆவர்.

ஹதிதாவிற்கு அருகே நடந்த இரு தாக்குதல்கள் சட்டவிரோத ஈராக்கிய ஆக்கிரமிப்பு நீடித்தால், எதிர்ப்பின் உறுதி, உளவுத்துறைத்திறன்கள், போர் அனுபவம் ஆகியவை அதிகரித்துத்தான் போகும் என்பதை நிரூபணம் செய்கின்றன. பாக்தாத்திற்கு மேற்கே இருக்கும் போராளிகள் பலரும் கடந்த ஆண்டு பல்லூஜா நகர பாதுகாப்பில் பங்கு பற்றிருப்பவர்கள் ஆவர். அவர்கள் ஆயிரக்கணக்கான சாதாரண மக்கள் அங்கு கொலைசெய்யப்பட்டதை கண்ணுற்றதோடு ஒரு முழு நகரமே அமெரிக்க இராணுவத்தால் தகர்க்கப்பட்டதையும் பார்த்துள்ளனர். கொடூரமான இழப்புக்களுக்கு பின்னரும் அவர்கள் ஈராக்கை அமெரிக்க ஆதிக்கத்தில் இருந்து விடுவிப்பதற்கான போராட்டத்தை நிறுத்தவில்லை.

எழுச்சியாளர்களை கொலைசெய்வதற்கு நகரத்திற்குள் நடந்து போரிட அனுப்பப்பட்ட ஆறு கடற்படை சிறப்புப் பிரிவினர், ஈராக்கிய எழுச்சியாளர்களால் வேட்டையாடப்பட்டனர், அவர்களை ஒருவேளை படம் எடுத்து அதற்குப் பின்னர் வழிமறித்தல் நடந்திருக்கக் கூடும். சிறிது நேரத்திற்குப் பின்னர் எழுச்சியாளர்கள் அமெரிக்க ஆயுதங்களையும் மற்ற கருவிகளையும் வெற்றி அணிவகுப்பாய் நகரத்தில் காட்டினர் என்று உள்ளூர் மக்கள் அசோசியேட்டட் பிரஸ்ஸிடம் கூறியுள்ளனர்.

கையிலுள்ள வெடிமருந்துக் கருவிகளை (IED) சிறந்தமுறையில் பயன்படுத்தி அமெரிக்கப் படைவீரர்களின்மீது மரணத்தாக்குதலை நடத்துவதில் கிளர்ச்சியாளர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்பதை ஒரு கவச வண்டியின் மீதான தாக்குதல் நிரூபித்துள்ளது. கூட்டு IED Defeat Task Force இன் செய்தித் தொடர்பாளர் ரிச்சார்ட் பிரிட்ஜஸ் Knight Ridder இடம் கடந்த மாதம் "கிளர்ச்சியாளர்கள் தற்பொழுது பெரிய, சக்திவாய்ந்த கையிலுள்ள வெடிமருந்துக் கருவிகளை சிறப்பாகப் பயன்படுத்துகின்றனர் என்றும், நம்முடைய வாகனங்களில் பக்கங்களில் இருப்பதைப் போல் அதிக கவசப்பாதுகாப்பு அற்ற கீழ்ப்பகுதிகளில் சில நேரம் கவசத்தை ஊடுருவக்கூடிய திறன் பெற்றுள்ள இடங்களில் தாக்குகின்றனர். சில எடுத்துக்காட்டுகளில், இல்லங்களில் தயாரிக்கப்பட்ட கணைகளைச் செலுத்தவும் பயின்றுள்ளனர், அவை மிக சக்தி மிக்கதாகவும் கவச வண்டியை ஊடுருவக் கூடியதாகவும் இருக்கின்றன" என்று கூறியிருக்கிறார். அமெரிக்கப் படையின் முக்கிய Abram போர் டாங்குகளையும் அழிக்கவில்ல சூழ்ச்சியுடன் கூடிய குண்டுகளை கொரில்லாக்கள் வீசுகின்றனர்.

மார்ச் 2003 படையெடுப்பு தொடங்கியதில் இருந்து, புஷ் நிர்வாகம் இதன் விளைவுகளை அமெரிக்க மக்களிடம் இருந்து மறைக்கத்தான் முற்பட்டுள்ளது. திரும்பி வரும் சவப்பெட்டிகளின் படங்கள் பிரசுரிக்கப்படுதல் தடைசெய்யப்பட்டுள்ளது; போரின் உண்மையான இழப்பு பற்றி பொது மக்கள் உரிய கருத்தைப் பெறுவதை தடுக்கும்பொருட்டு ஈராக்கிய இறப்புக்கள் கணக்கிடப்படக்கூட இல்லை.

ஆயினும், யதார்த்தமானது அமெரிக்கா முழுவதும் படர்ந்துள்ள சமூகங்களில் வளர்ந்து வரும் இறப்பு எண்ணிக்கையின் பேரழிவுத் தாக்கத்தில் பதிந்து கொண்டுதான் வருகிறது. ஈராக்கில் மடிந்த அமெரிக்க வீரர்களின் எண்ணிக்கை இப்பொழுது 1,825 ஐ அடைந்துவிட்டது; ஜூலை 24ல் இருந்து ஆகஸ்ட் 3 என்று 10 நாட்களுக்குள் மட்டும் இறந்தவர் எண்ணிக்கை 50 ஆயிற்று. குறைந்தது 13,700 துருப்புக்கள் நடவடிக்கையில் காயமுற்றனர்; இன்னும் ஆயிரக்கணக்கானவர்கள் படையெடுப்பின்போது நோய்வாய்ப்பட்டுள்ளனர். ஆக்கிரமிப்பு படையினரை பொறுத்தவரையில் மாதிரி மாதம் எனக் கூறக்கூடிய ஜூலை மாதத்தில் 54 அமெரிக்க துருப்புக்கள், 3 பிரிட்டிஷ் துருப்புக்கள், நான்கு மேற்கத்திய ஒப்பந்தக்காரர்கள் மற்றும் குறைந்தது 304 ஈராக்கிய அரசாங்க, இராணுவத்தினர் மற்றும் போலீசார் கொல்லப்பட்டுள்ளனர். 500 க்கும் மேற்பட்ட அமெரிக்க துருப்புக்கள் காயமுற்றனர்.

யார் இப்படி கொலைசெய்யப்படும் மற்றும் காயமுறும், ஊனமுறும் இராணுவத்தினர்? அவர்கள் பெரும்பாலும் பொருளாதார சூழ்நிலையின் காரணமாக கட்டாயமாக இராணுவத்தில் சேர்பவர்கள் ஆவர். அமெரிக்கா முழுவதும் இருக்கும் இலட்சக்கணக்கான தொழிலாள வர்க்கத்தின் குடும்பங்கள் எதிர்கொள்ளும் வறுமை மற்றும் வாய்ப்பின்மையின் காரணமாகவே இராணுவத்தில் இருக்கும் இளவயது ஆண், பெண்கள் ஆவர். இவர்கள் ஒரு தீய கனாவான மரணம் அழிவு இவற்றில் தள்ளப்பட்டுள்ளனர்; இதற்கு எந்த விதமான அரசியல் ரீதியான அல்லது ஒழுக்கநெறி ரீதியான நியாயங்களும் கிடையாது.

இந்த வாரம் ஹதிதா அருகே உயிரிழந்தமை ஓகையோ மாநிலத்தில் டஜன்காணக்கான தொழிலாள வர்க்க குடும்பங்களுக்கு குறிப்பிட்ட அழிவை தந்துள்ளது. கொல்லப்பட்ட 20 சிறப்புப்படை வீரர்களும் கிளீவ்லாந்தின் புரூக் பார்க்கைத் தளமாகக் கொண்ட தயார்நிலைப் படையான 25 வது மரைன்கள், மூன்றாவது பட்டாலியன் இவற்றின் பகுதியைச் சேர்ந்தவர்களாவர். இத்தகைய தாக்குல்களில் கஷ்டப்பட்ட இச்சமூகம் இதில் இருந்து மீளவே முடியாது. 25 மரைன், மூன்றாம் பட்டாலியன் ஏற்கனவே கடந்த மூன்று மாதங்களில் குறிப்பிடத்தக்க இழப்புக்களை கண்டுள்ளது. 900 மரைன்களில், 45 பேர் கொல்லப்பட்டனர், இருபதுக்கும் மேற்பட்டோர் காயமுற்றுள்ளனர்.

புரூக் பார்க்கில் உள்ள 69 வயது மூதாட்டியான Eleanor Matelski அசோசியேட்டட் பிரஸ்ஸிடம் நெகிழ்ச்சியுடன் கூறினார்; "இன்னும் நம்முடைய வீரர்கள் அங்கு மடியுமுன்னர் அவர்களை அங்கிருந்து வெளியேற்றுமாறு புஷ்ஷிடம் கூறுங்கள். இது நகைப்பிற்கிடமாகிக் கொண்டிருக்கிறது."

இறப்புக்களும் காயங்களும் தவிர, ஆயிரக்கணக்கான அமெரிக்க வீரர்கள் உளரீதியாகவும் பெரும் இடர்ப்பாடுகளுக்கு ஆளாகியுமுள்ளனர். ஈராக்கிய குடிமக்களுக்கு எதிரான என்றுமிரா கொலைகார நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கட்டளையிடப்படுவதால் அவர்களில் பலரும் செயலற்றும் அல்லது மனித வாழ்வு பற்றிய அக்கறையின்மையையும் கொள்ளத்தலைப்பட்டுள்ளனர். இத்தகைய மிருகத்தனமான அடக்குமுறை செயற்பாடுகளுக்கு வரவிருக்கும் ஆண்டுகளில் அமெரிக்க சமுதாயம் பெரும் விலையைக் கொடுக்க நேரிடும்.

இத்தகைய ஈராக்கியப் போரின் கொடுமையான விலைக்கு புஷ்ஷின் விடையிறுப்பு இன்னும் கூடுதலான பொய்களைக் கூறுதல் என்றுள்ளது. புதனன்று அவர் குறிப்பிட்டார்: "இளைய வீரர்கள் ஒரு மாபெரும், தன்னலமற்ற காரணத்திற்காக உயிர்நீத்துள்ளனர்." "பணி பூரணப்படுவதற்கு முன்பு" அமெரிக்கப் படைகள் ஈராக்கை விட்டு நீங்காது என்றும் அவர் கூறியுள்ளார்.

ஆனால் இந்தப் பணி என்ன? மார்ச் 2003ல் "பேரழிவு ஆயுதங்கள்" கொண்ட சதாம் ஹுசைன் ஆட்சியை அகற்றல்", அந்நாடு சர்வதேச பயங்கரவாதத்திற்கு ஆதரவு கொடுத்தலை நிறுத்துதல் மற்றும் ஈராக்கிய மக்களை கொடுமையில் இருந்து "விடுவித்தல்" ஆகியவைதான் பணி என்று அமெரிக்கர்களுக்கு கூறப்பட்டது. இக்கூற்றுக்கள் அனைத்துமே பொய் என்று நிரூபிக்கப்பட்டுவிட்டன. பேரழிவு ஆயுதங்கள் அங்கு காணப்படவில்லை, ஈராக்கிற்கு அல் கொய்தாவுடன் எந்தத் தொடர்பும் இல்லை. "சுதந்திரத்தை பொறுத்தவரையில்" இதுகாறும் 100,000 ஈராக்கியர்கள் அமெரிக்கத் தலைமையிலான படையெடுப்பாலும், ஆக்கிரமிப்பாலும் தங்கள் உயிர்களை இழந்துள்ளனர் மற்றும் நாடும் அழிவிற்கு ஆளாகியுள்ளது. மில்லியன் கணக்கான சாதாரண மக்களுக்கு போர் இடைவிடாத பற்றாக் குறை, நோய்கள், ஊட்டமின்மை, வறுமை, குற்றங்கள் பெருகுதல், எப்பொழுதும் காயம் அல்லது மரணத்தை எதிர்நோக்கும் அபாயம் ஆகியவற்றைத்தான் கொண்டுவந்துள்ளது.

ஆரம்பத்தில் கூறப்பட்டுவந்த பிரச்சாரம் இழிவடைந்ததை அடுத்து, வாஷிங்டன் ஈராக்கிய மக்களுக்கு ஜனநாயகத்தை கொண்டுவருவதாகக் கூறி போரை நியாயப்படுத்தியது. இதுவும் முன்னதைப் போன்றே பொய்தான். நாட்டின் எண்ணெய் வளத்தை அமெரிக்க பெருநிறுவனங்களுக்கு விற்றுவிடும் திட்டங்கள் உள்பட பின்னனியில் நாட்டின் பொருளாதாரத்தின் மீது கட்டுப்பாட்டையும், ஈராக்கிய அரசாங்கத்தின் ஆயுதப்படைகள் மீது நேரடிக் கட்டுப்பாட்டையும் அமெரிக்கா தீவிரமாய் செயற்படுத்திவருகிறது. ஆக்கிரமிப்பாளர்களால் நிறுவப்பட்டுள்ள ஷியைட் அடிப்படைவாதிகள் தலைமையிலான அரசாங்கம் தன்னுடைய அரசியல் விரோதிகளுக்கு எதிராக மரணக் குழுக்களை பயன்படுத்திவருகிறது என்றும் சிறுபான்மையினர், மகளிர் ஆகியோரின் மக்கள் உரிமைகளை நசுக்கிவருகிறது என்றும் குற்றம் சாட்டப்பட்டு வருகிறது.

அமெரிக்க வீரர்கள் ஒன்றும் பெருமிதமான காரணத்திற்காக இறந்து கொண்டிருக்கவில்லை. ஈராக்கில் ஒடுக்குகின்ற காலவரையற்ற ஒரு காலனித்துவ போரை ஏற்படுத்தியுள்ள குற்றம் சார்ந்த ஏகாதிபத்திய பணியில் பீரங்கித்தீனியாக அவர்கள் உள்ளனர். போர் நீடித்தால், இன்னும் கூடுதலான வகையில் புஷ் நிர்வாகமும் பென்டகனும் ஆக்கிரமிப்புப்படையின் அணிகளை நிரப்ப பகுதி நேரத் தேசிய காவலர் படையினர், இருப்புப் படையினர் ஆகியோரை போதிய பயற்சியும், தக்க கருவிகளும் இன்றி அனுப்பி வைத்து அவர்களை அழிவுக்கு உட்படுத்துவர். ஈராக்கிய மக்களுடைய உயிருக்கு அமெரிக்க ஆளும் செல்வந்தத்தட்டு காட்டும் இகழ்ச்சி அவர்கள் அமெரிக்க தொழிலாள வர்க்க இளைஞர்களுடைய உயிர்களுக்கு காட்டும் இகழ்ச்சியை ஒத்ததாகத்தான் உள்ளது.

மேலும் இன்னும் அதிகமான போர்களுக்கான தயாரிப்புக்களும் நடைபெற்று வருகின்றன. இதுதான் வெள்ளை மாளிகை சிரியா, ஈரானுக்கு எதிராக செய்யப்படும் இடைவிடா அச்சுறுத்தல்களின் பொருள் ஆகும். ஈராக்கிய படையெடுப்பின் உண்மை நோக்கம் அமெரிக்க ஆளும் செல்வந்தத்தட்டு மத்திய கிழக்கு முழுவதிலும் எண்ணெய் இருப்புக்களின் மீதும் தன்னுடைய ஆதிக்கத்தை செலுத்த வேண்டும் என்பதாகும். ஜனநாயகக் கட்சியினரும் இந்த முன்னோக்கிற்கு முழு ஆதரவைக் கொடுக்கின்றனர். இந்த வார இறப்புக்களுக்கு பதிலாக ஜனநாயகக் கட்சியினர் ஈராக்கிய ஆக்கிரமிப்பிற்கு இன்னும் ஆதரவு தருவதை மீண்டும் வலியுறுத்தியுள்ளனர்.

உலக சோசலிச வலைத் தளமும், சோசலிச சமத்துவக் கட்சியும் அமெரிக்காவிலும், சர்வதேச அளவிலும் வெகுஜன போர் எதிர்ப்புக்களை புதுப்பிக்க அழைப்பு விடுகின்றன. புஷ்ஷின் வெள்ளை மாளிகையின் பொறுப்பற்ற இராணுவ செயற்பட்டியலுக்காக இன்னும் ஓர் உயிரைக் கூட இழத்தல் கூடாது. இராணுவவாத பொருளாதாரம் போரின் மீது வீணில் செலவு செய்யப்படும் பரந்த வளங்கள் அமெரிக்காவில் உள்ள மில்லியன் கணக்கான உழைக்கும் மக்களை வேதனைப்படுத்தும் சமூக நெருக்கடிகளை தீர்ப்பதற்கு செலவழிக்கும் வகையில் திருப்பிவிடப் படவேண்டும். இன்றியமையாமல் உடனடித் தேவையாக இருக்கும் உள் கட்டுமானம், சமூகப் பணிகள், பொது சுகதாரம், பயிற்சி ஆகிய துறைகளுக்கு பில்லியன் கணக்கில் டாலர்கள் செலவிடப்படவேண்டும். இராணுவத்திற்கு ஆட்சேர்க்கும் முக்கிய பகுதிகள் அனைத்தும், பல தசாப்தகால ஆலை மூடல்கள் மற்றும் வேலை இழப்புக்களால் மிகவும் இழப்புக்களுக்கும் நலிவிற்கும் ஆளாகியிருக்கும் இடங்களின் மத்தியில் உள்ளன.

போர் எதிர்ப்பு இயக்கம் அனைத்து அமெரிக்க மற்றும் வெளிநாட்டுப் படைகள் ஈராக்கில் இருந்தும் மத்திய கிழக்கில் இருந்தும் உடனடியாக, நிபந்தனையின்றி திரும்பப்பெற வேண்டும்; ஈராக்கிய மக்களுக்கு இழப்பு ஈட்டுத் தொகை வழங்கப்பட வேண்டும்; திட்டமிட்டு, படையெடுப்பிற்கு ஏற்பாடு செய்ததற்கு பொறுப்பானரவர்கள் மீது போர்க் குற்றம் சுமத்தப்பட்டு விசாரணை நடாத்தப்பட வேண்டும் என்று கட்டாயம் கோர வேண்டும்.

இதே போன்ற முக்கியத்துவத்துடன், அமெரிக்க ஏகாதிபத்தியத்தை எதிர்ப்பவர்கள் அனைவரும் போரைப் பற்றிய உண்மை நோக்கங்களை மக்களின் பெரும்பாலான, பரந்த பிரிவுகளுக்கு நன்கு தெளிவூட்ட மற்றும் கல்வியூட்ட சாத்தியமான அனைத்து முறைகளையும் பயன்படுத்தவேண்டும். உதாரணமாக, ஒரு சமீபத்திய கருத்துக் கணிப்பின்படி, மூன்றில் ஒரு அமெரிக்கர் இன்னும் சதாம் ஹுசைன் செப்டம்பர் 11, 2001 தாக்குதலில் தொடர்பு கொண்டிருந்தார் என்று நினைப்பதாக தெரிகிறது. குறிப்பிட்ட அளவுக்கு புஷ் நிர்வாகம் ஆதரவைப் பயன்படுத்திக்கொள்ள முடிகிறது, அது அரசாங்கம் மற்றும் செய்தி ஊடகத்தின் இடைவிடா பிரச்சாரம் விளைவிக்கும் பொய், பெரும்குழப்பம் மற்றும் பெரும் திசைவிலகலிலிருந்து உருவெடுக்கிறது.

அத்தகைய போராட்டம் ஓர் இரு-கட்சிமுறைக்குள்ளேயோ அல்லது உத்தியோகரீதியிலான அரசியற் கட்டமைப்பினுள்ளோ வளர்த்தெடுக்கப்பட இயலாது. அதற்கு, எல்லாவற்றுக்கும் மேலாக, அமெரிக்காவிலும், சர்வதேச அளவிலும் ஒரு பரந்த சோசலிச இயக்கத்தை கட்டி எழுப்புவதன் மூலம் தொழிலாள வர்க்கத்தின் அரசியல் சுயாதீனத்தை நிறுவுதல் தேவைப்படுகிறது.

See Also:

http://www.wsws.org/tamil/articles/2003/april/090403_dn.shtml


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved