:
ஆசியா
:
இலங்கை
Sri Lanka's parliamentary crisis: vital
political issues for the working class
இலங்கை பாராளுமன்ற நெருக்கடி: தொழிலாள வர்க்கத்திற்கு இன்றியமையாத அரசியல்
பிரச்சினைகள்
Statement of the Socialist Equality Party (Sri Lanka)
1 August 2005
Use this version
to print |
Send this link by email |
Email the author
ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க, டிசம்பர் 26 சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு
உதவி வழங்குவதன் பேரில் ஜூன் 24 அன்று தமிழீழ விடுதலைப் புலிகளுடன் ஒரு பொதுக் கட்டமைப்பு உடன்படிக்கையை
கைச்சாத்திட அதிகாரமளித்ததை அடுத்து, இங்கையில் பாராளுமன்ற ஆட்சியின் நீண்டகால நெருக்கடி நாடகபாணியில்
ஆழமடைந்து வருகின்றது.
இதன் பிரதிபலிப்பாக, ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் இருந்து மக்கள்
விடுதலை முன்னணி (ஜே.வி.பி) விலகியதால், அரசாங்கம் 225 ஆசனங்களைக் கொண்ட பாராளுமன்றத்தில் வெறும்
79 பாராளுமன்ற உறுப்பினர்களுடன் சிறுபான்மையாக்கப்பட்டுள்ளது. ஜே.வி.பி ஏனைய சிங்கள பேரினவாத அமைப்புகளுடன்
சேர்ந்து, சுனாமிக்குப் பிந்திய நடவடிக்கை முகாமைத்துவ கட்டமைப்புக்கு (பொதுக் கட்டமைப்பு) எதிராக பல
வாரங்களாக பிரச்சாரம் செய்து வந்தது. இந்தப் பொதுக் கட்டமைப்பானது விடுதலைப் புலிகளுக்கு வழங்கப்படும்
ஏற்றுக்கொள்ள முடியாத சலுகை எனவும் நாட்டை காட்டிக்கொடுக்கும் செயல் எனவும் அது கண்டனம் செய்கின்றது.
கடந்த காலத்தில் என்றால், எதிர்க்கட்சி அரசாங்கத்தை கவிழ்ப்பதற்காக பாராளுமன்றத்தில்
ஒரு நம்பிக்கையில்லா பிரேரணையை சமர்ப்பித்திருந்திருக்கும். ஆயினும், அத்தகைய நகர்வுகள் எதுவும்
இடம்பெறாததோடு எந்தவொரு பிரதான கட்சியும் புதிய பாராளுமன்ற தேர்தல்களுக்கு அழைப்புவிடுக்கவில்லை.
இலங்கை ஆளும் வர்க்கம் எதிர்கொண்டுள்ள எளிதில் கையாள முடியாத அரசியல் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு புதிய
தேர்தல்கள் எதுவும் செய்யப் போவதில்லை என்பதையிட்டு அவர்கள் அனைவரும் தீவிர விழிப்புடன் உள்ளனர்.
இந்த நெருக்கடியின் இதயம் ஒரு அடிப்படையான இக்கட்டானநிலையாகும்.
பொருளாதாரத்தை மறுசீரமைக்கும் மற்றும் தீவை ஒரு மலிவு உழைப்பு மேடையாக மாற்றும் திட்டங்களின் ஒரு பாகமாக,
வர்த்தகத்தில் மேலாதிக்கம் செலுத்தும் பிரிவுகள், பிரதான வல்லரசுகளின் ஆதரவுடன் நாட்டின் அழிவுகரமான உள்நாட்டு
யுத்தத்திற்கு ஒரு முடிவுகட்டுமாறு நெருக்கி வருகின்றன. எவ்வாறெனினும், இந்த மூலோபாயமானது முதலாவதாக
இந்த யுத்தத்திற்கு பொறுப்பான முழு இனவாத அரசியலால் இடைவிடாமல் குறுக்கீடு செய்யப்பட்டுவருகின்றது.
சுனாமி பேரழிவானது அடியிலுள்ள சமூக மற்றும் அரசியல் பதட்டங்களை உக்கிரப்படுத்தியுள்ளது.
கடற்கரைப் பிரதேசங்களை பிரமாண்டமான அலைகள் தாக்கி ஆறுமாதங்களின் பின்னரும், தமது வீடுகள், நிலைமைகள்,
வருமானம் மற்றும் அன்புக்குரியவர்களையும் இழந்துவிட்ட பத்தாயிரக்கணக்கான மக்கள், வசதிகளற்ற தற்காலிக தங்குமிடங்களில்
சிறிய உதவிகளுடன் அல்லது உதவிகளே இல்லாமல் உயிர்வாழத் தள்ளப்பட்டுள்ளனர். சாதாரண உழைக்கும் மக்களில்
பெரும்பாலானவர்கள் அரசியல் ஸ்தாபனத்திலிருந்து அந்நியமாதல் மட்டுமே உக்கிரமடைந்துள்ள அதேவேளை, அதிருப்தியும்
நம்பிக்கையின்மையும் காத்திரமான எதிர்ப்புக்களை கொதிக்கச் செய்துள்ளன.
சர்வதேச நன்கொடையாளர்கள் வாக்குறுதியளிக்கப்பட்ட 3 பில்லியன் டொலர்களை
வழங்குவார்கள் என்ற எதிர்பார்ப்பிலேயே குமாரதுங்க பொதுக் கட்டமைப்பு உடன்படிக்கையை கைச்சாத்திட்டார்.
சுனாமிக்குப் பின்னரான மீள்கட்டுமான பணிகளுக்கு முற்றிலும் போதாத இந்த உதவித் தொகை, அரசாங்கத்தை அதன்
பொருளாதார நெருக்கடியிலிருந்து மீட்கும் என அவர் கணக்கிடுகின்றார். அமெரிக்காவும் மற்றும் ஏனைய பிரதான
வல்லரசுகளும், கிடப்பில் உள்ள சமாதானப் பேச்சுக்களை மீண்டும் தொடங்குவதை நோக்கிய ஒரு நகர்வாக கருதி
இந்த பொதுக் கட்டமைப்பை அமுல்படுத்த நெருக்குகின்றன. வருடக்கணக்காக உள்நாட்டு யுத்தத்தைப் பற்றி
அக்கறை செலுத்தாத வாஷிங்டன், இப்போது இந்த மோதலை இந்தியத் துணைக் கண்டத்தில் அதன் வளர்ச்சிகண்டுவரும்
பொருளாதார மற்றும் மூலோபாய நலன்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக கருதுகின்றது.
அதே சமயம், இரண்டு தசாப்தகால யுத்தமானது நாட்டின் தமிழ்
சிறுபான்மையினருக்கு வழங்கப்படும் எந்தவொரு சலுகையையும் விட்டுக்கொடாமல் எதிர்க்கும் இராணுவ மட்டத்தினர்,
அரச அதிகாரத்துவம், பெளத்த பீடம் மற்றும் வியாபாரிகள் மத்தியில் சக்திவாய்ந்த நிலையான நலன்களை
உருவாக்கிவிட்டுள்ளது. அவர்கள் நிவாரணங்களை விநியோகிப்பதில் விடுதலைப் புலிகளுக்கு ஒரு சிறிய அதிகாரம்
வழங்குவதை கூட சிங்கள பெளத்த மேலாதிக்கத்திற்கு அச்சுறுத்தலாக கருதுகின்றனர். ஜே.வி.பி யும் பரந்த
வெகுஜன அதிருப்தியை ஒரே ஒரு வழிப்பாதையான பிரிவினையை உண்டாக்கும் இனவாதத்தின் பக்கம் திருப்பி
விடுவதற்கு முயற்சிக்கின்றது.
பாரளுமன்ற முடக்கநிலைக்கு பின்னாலுள்ள அரசியல் புறவளர்ச்சிகள் இவைகளேயாகும்.
2000,2001 மற்றும் 2004 என்ற வரிசையில் கடந்த ஐந்து ஆண்டுகளுக்குள் மூன்று பொதுத் தேர்தல்கள்
இடம்பெற்ற போதிலும் அவை புதிய நெருக்கடிகளுக்கான அடிப்படைகளை சாதாரணமாக உருவாக்கிவிட்டனவேயன்றி
ஒவ்வொன்றும் எதையும் தீர்க்கவில்லை. பிரதான அரசியல் கட்சிகள் ஒரு கூட்டு மூலோபாயத்துடன் உடன்பட
முடியாமல் இருப்பதோடு சாதாரண உழைக்கும் மக்களின் தேவைகள் மற்றும் அபிலாஷைகளின் அடிப்படையில்
அவர்களுக்கு அழைப்பு விடுக்க இலாயக்கற்றுள்ளன. இதன் விளைவாக அவை பாராளுமன்றத்திற்கு வெளியிலான
வழிவகைகளை நாடுவதன் மூலம் தற்போதைய முட்டுக்கட்டைக்கு முடிவுகட்ட பார்க்கின்றன.
சர்வாதிகார ஆட்சிக்கான தாயாரிப்புகள்
குமாரதுங்க ஜனாதிபதி என்ற வகையில் அவரது விசாலமான நிறைவேற்று
அதிகாரத்தில் மேலும் மேலும் தங்கியிருக்கின்றார். விடுதலைப் புலிகளுடன் பொதுக் கட்டமைப்பு உடன்படிக்கையை
கைச்சாத்திடுவதற்கான தீர்மானம், பாராளுமன்றத்தில் விவாதமோ அல்லது வாக்கெடுப்போ அல்லது அமைச்சரவை
கூட்டம் கூட இல்லாமலேயே எடுக்கப்பட்டது. கைச்சாத்திடப்பட்ட பின்பே ஆவணம் கூட பகிரங்கப்படுத்தப்பட்டது.
இந்த இரகசிய நடவடிக்கைக்கான உடனடி காரணமானது குமாரதுங்கவிற்கு பாராளுமன்றப் பெரும்பான்மை
இல்லாததோடு அவரது சொந்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள்ளேயே (ஸ்ரீ.ல.சு.க) ஆதரவு கிடைப்பது
நிச்சயமில்லாமலிருந்தது என்ற உண்மையிலேயே தங்கியிருந்தது. மிகவும் அடிப்படையான விதத்தில், இந்த ஜனநாயக
விரோத வழிமுறையானது சுனாமி பேரழிவு சம்பந்தமான ஒரு வெகுஜன விவாதத்தை நசுக்குவதையே இலக்காகக்
கொண்டிருந்தது. அத்தகைய விவாதம் சமூக அரசியல் கேள்விகளை தவிர்க்க முடியாமல் எழுப்புவதோடு அந்தக்
கேள்விகளுக்கு இலங்கை ஆளும் வர்க்கத்திடம் பதிலும் கிடையாது.
குமாரதுங்க எந்தவொரு பாராளுமன்ற நம்பிக்கையில்லா வாக்கெடுப்பையும்
தவிர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளார் என்பதை ஏற்கனவே தெளிவுபடுத்திவிட்டார். ஜே.வி.பி அரசாங்கத்தை
விட்டு வெளியேறிய அடுத்தநாள் தேசியத் தொலைக்காட்சியில் பேசிய அவர், அரசாங்கத்திற்கும் அதன் சுனாமி மீள்
கட்டமைப்பு திட்டங்களுக்கும் ஆதரவளிக்குமாறு அனைத்து கட்சிகளுக்கும் அழைப்புவிடுத்தார். அவர் தற்போதுள்ளதை
போன்ற நிலைமைகளில் "சர்வாதிகாரமும் மற்றும் இராணுவ சர்வாதிகாரமும்" அடிக்கடி எழும் என குறிப்பாக
எச்சரித்தார். அதற்குப் பின்னர் வழங்கிய ஒரு பேட்டியில், "எல்லா அமைச்சுக்களையும் தனது அதிகார வரம்பின்
கீழ் கொண்டுவருவதற்கு தனக்கு நிறைவேற்று ஜனாதிபதி அதிகாரம்" இருப்பதாக பிரகடனம் செய்தார். வேறு
வார்த்தைகளில் சொன்னால், தனி மனித சர்வாதிகாரத்திற்கு சமமான ஒன்றை ஸ்தாபிப்பதாகும்.
குமாரதுங்க 2003 நவம்பரில் அத்தகைய ஒரு அரசியலமைப்பு சதிக்கான
எடுத்துக்காட்டை ஸ்தாபித்துள்ளார். ஸ்ரீ.ல.சு.க எதிர்க் கட்சியாக இருந்தபோது, ஐக்கிய தேசிய முன்னணி
(ஐ.தே.மு) அரசாங்கமானது விடுதலைப் புலிகளுடன் சமாதானப் பேச்சுக்களை மீண்டும் தொடங்க எடுக்கும்
முயற்சிகளில் "தேசிய பாதுகாப்பை கீழறுப்பதாக" கண்டனம் செய்வதில் ஜனாதிபதி ஜே.வி.பி மற்றும் இராணுவ
உயர்மட்டத்தினரோடு சேர்ந்துகொண்டார். இந்தப் பிரச்சாரத்தின் உச்சகட்டமாக, அவர் பாதுகாப்பு, உள்துறை
மற்றும் தகவல்துறை ஆகிய மூன்று முக்கிய அமைச்சுக்களின் கட்டுப்பாட்டை அபகரித்துக்கொண்டதுடன் அவசரகால
ஆட்சியை அமுல்படுத்தவும் முன்சென்றார். இந்த சம்பவத்தின் போது வாஷிங்டன் மற்றும் புது டில்லியின்
நெருக்குவாரத்தின் கீழ் அவர் முழுக் கட்டுப்பாட்டையும் கைப்பற்றிக்கொள்வதிலிருந்து பின்வாங்கத் தள்ளப்பட்டார்.
ஆனால் 2004 பெப்பிரவரியில் ஐ.தே.மு பாராளுமன்ற பெரும்பான்மையை கொண்டிருந்தபோதும் திடீரென்று
அரசாங்கத்தைப் பதவி விலக்கியதோடு புதிய தேர்தல்களுக்கும் அழைப்பு விடுத்தார்.
தற்போதைய அரசியல் முட்டுக்கட்டையில் ஆழாமாக விரக்தியடைந்துள்ள ஆளும்
கும்பலின் தட்டுக்கள், தெளிவாகவே ஜனாதிபதி சர்வாதிகாரத்திற்கு இசைவாக உள்ளன. "உண்மையான
தேசாபிமானி" என்ற பெயரில் ஜூன் 16 டெயிலி மிரர் பத்திரிகையில் ஜனாதிபதிக்கு எழுதப்பட்டிருந்த
ஒரு பகிரங்கக் கடிதத்தில், பொதுக் கட்டமைப்பு உடன்படிக்கையுடன் மிகவும் சக்திவாய்ந்த முறையில் முன்செல்ல
தவறியமைக்காக ஜனாதிபதி விமர்சிக்கப்பட்டிருந்தார். "ஜனாதிபதி குமாரதுங்க, அரசியல் சுனாமியிலிருந்து
நாட்டைக் காப்பாற்றிய ஒரு உண்மையான தலைவியாக, இரண்டாவது விகார மகா தேவியைப் போல் வரலாற்றில்
இடம்பெற விரும்பினால், அவர் அச்சமின்றியும் மற்றும் நேர்மையுடனும் எல்லாவற்றுக்கும் மேலாக உறுதியாகவும்
செயற்பட வேண்டும். அவசரகால நிலைமையை பிரகடனம் செய்வது அவசியமானால் அவ்வாறு செய்யவும்,
உங்களுக்கு ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்த வேண்டுமானால் அவ்வாறு செய்யவும், சட்டத்திற்கு புறம்பாக
நடப்பவர்களை கைதுசெய்ய வேண்டுமானால் அவ்வாறு செய்யவும். ஊடகங்களின் ஒத்துழைப்பிற்கு அழைப்பு விடுப்பதன்
மூலம் ஒரு இருட்டடிப்பை உறுதிப்படுத்திக் கொள்ளவும்... நீங்கள் ஒரு முழு சக்திவாய்ந்த ஜனாதிபதி, உறுதியுடன்
செயற்படுங்கள்," என அது குறிப்பிட்டுள்ளது.
எதிர்க் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவும் அவரது வலதுசாரி ஐக்கிய தேசியக்
கட்சியும் (ஐ.தே.க) இதே முன்நோக்கையே பகிர்ந்துகொண்டுள்ளனர். வர்த்தகர் தலைவர்கள் மற்றும் அமெரிக்க
தூதரகத்தின் அழுத்தங்களின் கீழ், விக்கிரமசிங்க பொதுக் கட்டமைப்பு உடன்படிக்கைக்கும் விடுதலைப் புலிகளுடனான
சமாதானப் பேச்சுக்களை புதுப்பிப்பதற்கும் ஆதரவளித்தார் --அவர் இதற்கு முன்னரும் இதே கொள்கையையே
அமுல்படுத்தக் கோரினார். ஆனாலும், பாராளுமன்ற விதிமுறைகளை வெளிப்படையாக மீறும் குமாரதுங்கவின்
நடவடிக்கையால் 2004ல் ஆட்சியிலிருந்து விலக்கப்பட்டதிலிருந்து, ஐ.தே.க தலைவர் தனது கட்சி ஜனாதிபதி
பதவியை கைப்பற்ற வேண்டும் என முடிவுசெய்தார்.
ஐ.தே.க தற்போது, நவம்பரில் நடைபெற வேண்டிய ஜனாதிபதித் தேர்தல் உரிய
காலத்தில் நடத்தப்பட வேண்டும் எனக்கோரி "மக்கள் சக்தி இயக்கம்" ஒன்றை முன்னெடுத்துக் கொண்டிருக்கின்றது.
குமாரதுங்க, 1999 ஜனாதிபதி தேர்தல் முடிந்து ஒரு வருடத்தின் பின்னர் இடம்பெற்ற ஒரு இரண்டாவது இரகசிய
பதவிப்பிரமாண வைபவத்தின் போதே தான் உத்தியோகபூர்வமாக பதவியேற்றதாக ஒரு போலிக்காரணத்தை கூறி,
இன்னும் ஒரு வருடத்திற்கு தேர்தல் நடத்தப்படமாட்டாது என வலியுறுத்துகிறார். விக்கிரமசிங்கவின் பிரச்சாரம்
ஜனநாயக உரிமைகளை பாதுகாப்பதில் எதுவும் செய்யப்போவதில்லை. ஆட்சியிலிருந்த போது ஜனாதிபதி
அதிகாரங்களை துஷ்பிரயோகம் செய்ததில் பேர்போன ஐக்கிய தேசிய கட்சியே முற்றிலுமாக முதலாளித்துவ
நிகழ்ச்சித் திட்டங்களை அமுல்படுத்துவதற்கு மிகவும் பயனுள்ள வாகனமாக தன்னையே அர்ப்பணித்துக்கொள்கின்றது.
ஜே.வி.பி தன் பங்கிற்கு விடுதலைப் புலிகளுடனான கொடுக்கல் வாங்கல்களை
விட்டுக்கொடாமல் எதிர்க்கும் ஆளும் கும்பலின் ஒரு பகுதியின் ஆதரவுக்கு பகிரங்கமாக அழைப்பு விடுக்கின்றது.
ஊடகங்கள் வழமையாகவே ஜே.வி.பி யை "மார்க்சியவாதிகள்" என குறிப்பிடும் அதேவேளை, அது
ஆரம்பத்திலிருந்தே விவசாய கெரில்லாவாதம் மற்றும் சிங்கள இனவாதம் ஆகிய வங்குரோத்தான முன்நோக்குகளின்
அடிப்படையில் விரக்தியடைந்த கிராமப்புற இளைஞர்களுக்கு அழைப்பு விடுக்கும் குட்டிமுதலாளித்துவ தேசியவாத
அமைப்பாகும். தனது அனைத்து "சோசலிச" மற்றும் "ஜனநாயக விரோத" வாய்வீச்சுக்களையும் கைவிட்டுள்ள
ஜே.வி.பி, இப்போது தேசப்பற்றின் மிகவும் தீவிரமான வடிவத்தை அணைத்துக்கொண்டுள்ளது.
2004 தேர்தல் ஜே.வி.பி க்கு ஒரு உயர்ந்த பெறுபேறை தந்தது. குமாரதுங்கவின்
ஸ்ரீ.ல.சு.க மற்றும் ஐ.தே.க ஆகிய இரு பிரதான கட்சிகளில் அதிருப்தியடைந்திருந்த வாக்காளர்களில்
குறிப்பிடத்தக்க தட்டினர், குறிப்பாக கிராமப்புறப் பகுதிகளில், ஜே.வி.பி தமது சமூக நிலைமைகளை முன்னேற்றும்
என்ற நம்பிக்கையில் அதற்கு ஆதரவளித்தனர். முதற்தடவையாக ஒரு கூட்டணி அரசாங்கத்தில் அங்கம் வகித்த
ஜே.வி.பி அமைச்சர்கள் வேகமாக தமது தேர்தல் வாக்குறுதிகளை தகர்த்தோடு கட்சி வேகமாக அடித்தளத்தை
இழந்துள்ளது. ஜே.வி.பி கடந்த மாதம் அரசாங்கத்தை விட்டு வெளியேறியவுடன் அழைப்புவிடுத்த ஒரு பிரதான
எதிர்ப்புப் பிரச்சாரம் பரிதாபமாக தோல்வியடைந்தது. உழைக்கும் மக்களில் பலர் தமிழர்கள், சிங்களவர்கள்
மற்றும் முஸ்லிம்களுமாக அனைவரும் சுனாமியால் பாதிக்கப்பட்டவர்கள் என்ற தெளிவான அடிப்படைகளில், பொதுக்
கட்டமைப்புக்கு எதிரான ஜே.வி.பி யின் இனவாத ஆர்ப்பாட்டங்களை நிராகரித்தனர்.
எவ்வாறெனினும், ஜே.வி.பி யின் அழைப்பானது முக்கியமாக வெகுஜனங்களையன்றி
ஆளும் வர்க்கத்தையே இலக்காகக் கொண்டுள்ளது. அது ஸ்ரீ.ல.சு.க மற்றும் ஐ.தே.க உட்பட எல்லா கட்சிகளிலும்
அதிருப்தியடைந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒரு தேசாபிமான கூட்டணியை அமைக்க ஒன்றிணைய வேண்டும் என
அழைப்புவிடுத்துள்ளது. இதுவரை அது பெளத்த பிக்குகள் தலைமையிலான சிங்கள மேலாதிக்கவாத கட்சியான ஜாதிக
ஹெல உறுமய மற்றும் ஏனைய பேரினவாத அமைப்புகளின் ஆதரவை சம்பாதித்துக்கொண்டுள்ளதோடு உயர் நீதி
மன்றத்தில் பொதுக் கட்டமைப்பு ஒப்பந்தத்திற்கு ஒரு சட்டரீதியான சவாலையும் முன்னெடுத்துள்ளது. அதே சமயம்,
நேரடியாக அதிகாரத்தைக் கைப்பற்றுவதைப் பற்றியும் கூட ஜே.வி.பி கவனம் செலுத்திக்கொண்டிருக்கின்றது.
ஜூன் 29 அன்று கட்சி மாநாடொன்றில், ஜே.வி.பி யின் தலைவர் சோமவன்ச
அமரசிங்க, "அதிகாரிகளால் விடுக்கப்படும் தேசிய நலன்களுக்கு எதிரான கட்டளைகளை புறக்கணிக்குமாறு"
பாதுகாப்புப் படைகளுக்கு பகிரங்கமாக அழைப்புவிடுத்ததோடு "தேசப்பற்று நிலைப்பாட்டை எடுக்கும் எவருக்கும்
தனது சொந்த அரசாங்கத்தின் கீழ் நட்ட ஈடு அளிக்கப்படும்" எனவும் வாக்குறுதியளித்தார். விடுதலைப்
புலிகளுடனான எந்தவொரு கொடுக்கல் வாங்கல்களுக்கும், நிவாரண உதவிகளை விநியோகிக்கும் ஒரு தற்காலிக
ஒழுங்குக்கும் கூட, இராணுவ உயர்மட்டத்தினர் மற்றும் உண்மையில் முழு அரச இயந்திரத்திற்கிடையில் ஆழமான
எதிர்ப்பு இருந்துகொண்டிருப்பதையிட்டு ஜே.வி.பி மிகவும் முன்னுணர்வுடன் உள்ளது.
ஜூலை 15 அன்று, குமாரதுங்கவால் நியமிக்கப்பட்ட பிரதம
நீதியரசரான சரத் நந்த சில்வா, பொதுக் கட்டமைப்புக்கு எதிராக ஜே.வி.பி முன்வைத்த மனுவுக்கு,
உடன்படிக்கையில் உள்ள பிரதான பகுதிகளை அமுல்படுத்துவதற்கு ஒரு இடைக்காலத் தடையை விதித்து உயர்
நீதிமன்றத்தின் சார்பில் ஜனாதிபதிக்கு எதிராக விளைபயனுள்ள வகையில் தீர்ப்பு வழங்கியபோது அரசுக்குள் உள்ள
இந்த பிளவுகள் தெளிவாக அம்பலத்திற்கு வந்தன.
தற்போதைய அரசியல் நெருக்கடிக்கு மத்தியில், நிறைவேற்று அதிகார ஜனாதிபதி
முறையை ஒழிக்கவேண்டும் என்ற நீண்டகால கோரிக்கையை எல்லா பிரதான அரசியல் கட்சிகளும் கைவிட்டுள்ளமை
மிகவும் குறிப்பிடத்தக்கதாகும். 1978ல் அரசியல் யாப்புத் திருத்தம் செய்யப்பட்டதில் இருந்தே, குறைந்த பட்சம்
எதிர்க்கட்சியில் இருந்த ஒவ்வொரு கட்சியும் ஜனாதிபதி அதிகாரத்தின் ஜனநாயக விரோத பண்பை கண்டனம்
செய்வது நிலையான வழக்கமாக இருந்துவந்துள்ளது. இப்பொழுது ஒவ்வொரு கட்சியும் அதை எப்படி
சுரண்டிக்கொள்வது என்பதையிட்டு அக்கறைகொண்டுள்ளன.
ஒரு வரலாற்று இக்கட்டுநிலை
இலங்கையில் தற்போதைய அரசியல் முட்டுக் கட்டையானது, குறிப்பாக கடந்த
இரண்டரை தசாப்த காலங்களாக ஒவ்வொரு நாட்டிலும் இடம்பெற்றுவருகின்ற பூகோள பொருளாதார மற்றும்
அரசியல் முன்னெடுப்பின் கூர்மையான வெளிப்பாடாகும். போட்டி பன்னாட்டுக் கூட்டுத்தாபனங்கள் எப்பொழுதும்
மலிவான மூலப்பொருட்களுக்காகவும் மற்றும் உழைப்பின் தோற்றுவாய்களுக்காகவும் உலகைச் சுற்றி வருகின்ற அளவில்
இக்கூட்டுத்தாபனங்களுக்கு இடையிலான வளர்ச்சிகண்டுவரும் கசப்பான போட்டியும் அந்த காலகட்டம் பூராவும்
உற்பத்தியின் பூகோளமயமாக்கத்தை பின்தொடர்ந்து வந்துள்ளன. இது தொழிலாள வர்க்கத்தின் சமூக நிலைமையின்
மீது இரக்கமற்ற மூர்க்கமான தாக்குதலுக்கு வழிவகுப்பதோடு பணக்காரர்களுக்கும் வறியவர்களுக்கும் இடையிலான
பிளவை விரிவடையச் செய்துள்ளது. இது மறுபக்கத்தில் உத்தியோகபூர்வ அரசியல் ஸ்தாபனத்தின் மீது வெகுஜனங்களின்
ஆழமான பகைமையையும் அலட்சியத்தையும் தோற்றுவித்துள்ளது. ஆளும் வட்டாரத்தின் பிரதிபலிப்பு, அடிப்படை
ஜனாநாயக உரிமைகள் மீதான முன்னெப்போதுமில்லாத தாக்குதலாகும். இது புஷ் நிர்வாகத்தின்
"பயங்கரவாதத்திற்கு எதிரான பூகோள யுத்தத்தின்" மூலம் உச்சகட்டத்தை அடைந்துள்ளது.
ஐ.தே.க தலைமையிலான கூட்டணி 2001ல் அதிகாரத்திற்கு வந்தபோது, இரண்டு
தசாப்த கால உள்நாட்டு யுத்தத்தால் அழிவுக்குள்ளாக்கப்பட்டுள்ள தீவின் பொருளாதாரத்தை புத்துயிர்பெறச்
செய்வதன் பேரில் "இலங்கையை சீர்திருத்துவோம்" என்ற தலைப்பிலான ஒரு முக்கியமான திட்டத்தை
தயாரித்திருந்தது. இதன் இலக்கு இலங்கையை தெற்காசிய வடிவான ஹொங் கொங் போல், அதாவது
செழித்துக்கொண்டிருக்கும் இந்தியப் பொருளாதாரத்திற்கான ஒரு முதலீட்டு நுழைவாயிலாக மாற்றுவதேயாகும்.
இந்த மூலோபாயத்திற்கான மையம், சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் ஆளும்
கும்பல்களால் தொழிலாள வர்க்கம் பரஸ்பரமாக சுரண்டப்படுவதை சாத்தியமாக்குவதற்காக, விடுதலைப்
புலிகளுடன் ஒரு சமாதான கொடுக்கல் வாங்கலை உருவாக்கிக்கொள்வதேயாகும். அதன் அடிப்படையில்,
அரசாங்கம் ஒரு நீண்டகால பொருளாதார மறுசீரமைப்புத் திட்டத்தை முன்வைத்துள்ளது: இதில் சமூக செலவுகள்
வெட்டு மற்றும் தீவின் சிதைவடைந்து போயுள்ள உட்கட்டமைப்பை மீளக் கட்டியெழுப்ப நிதி வழங்கவும்
முதலீட்டாளர்களுக்கு நிதி ஊக்குவிப்பை வழங்கவும் அரச நிறுவனங்களை தனியார்மயமாக்குவதும் அடங்கும்.
நான்கு வருடங்களின் பின்னர் இந்த திட்டங்கள் கந்தலாகிப் போயின. 2002ல்
கைச்சாத்திடப்பட்ட யுத்த நிறுத்த உடன்படிக்கை இன்னமும் அமுலில் இருந்த போதிலும், அது ஒரு நூலில்
தொங்கிக்கொண்டிருக்கிறது. விடுதலைப் புலிகளுக்கும் மற்றும் அதில் இருந்து பிரிந்து சென்ற, இலங்கை இராணுவத்தின்
மறைமுக ஆதரவுடன் இயங்கும் கும்பலுக்கும் இடையில் கிழக்கில் படுகொலைகளும் சிறு சிறு மோதல்களும்
இடைவிடாமல் நடைபெறுகின்றன. 2003 ஏப்பிரல் இடைநிறுத்தப்பட்ட சமாதானப் பேச்சுக்கள் இன்னமும் மீள
ஆரம்பிக்கப்படவில்லை. இதன் விளைவாக, முதலீடுகளும் மற்றும் சர்வதேச உதவிகளும் கிடப்பில் உள்ளன.
பெயரளவிலான சமாதான முயற்சிகளை புதுப்பிப்பதற்கான குமாரதுங்கவின் முயற்சிகளுக்கு அவரது கூட்டணி
பங்காளியான ஜே.வி.பி யினரின் எதிர்ப்பால் தடங்கல் ஏற்பட்டுள்ளது. குறிப்பிடத்தக்க உட்கட்டமைப்பு திட்டங்கள்
எதுவும் ஆரம்பிக்கப்படவில்லை, அத்துடன் தனியார்மயமாக்கம் மற்றும் மறுசீரமைப்புடன் முன்செல்வதற்கான சுதந்திர
முன்னணியின் முயற்சிகளை உழைக்கும் மக்கள் கடுமையாக எதிர்க்கின்றனர்.
இந்த வருடம் "ஆசியாவின் நோயாளி மனிதன்" என பொதுவில் விவரிக்கப்படும்
இலங்கைப் பொருளாதாரமானது மதிப்பீட்டின்படி 1.3 பில்லியன் டொலர் சேதத்தையும் மீன்பிடி மற்றும் உல்லாச
பயணத்துறையிலும் கணிசமானளவு வீழ்ச்சியையும் ஏற்படுத்திய பெளதிக சுனாமிக்கு மேலதிகமாக இரு பொருளாதார
பேரலைகளால் தாக்கப்பட்டுள்ளது. முதலாவதாக, அதிகரித்துவரும் பூகோள எண்ணெய் விலை அரசாங்கத்தின்
பொருளாதார நெருக்கடிகளை குவித்துள்ளது. கடந்த ஏழு மாதங்களாக, வாழ்க்கைச் செலவு படிப்படியாக
உயர்ந்துள்ளது. பணவீக்க வீதமானது ஆண்டுதோறும் 12 வீதத்திற்கும் மேலாக அதிகரிப்பதுடன் மே மற்றும் ஜூன்
மாதங்களில் அரசாங்கம் எண்ணெய் மானியங்களை வெட்டித்தள்ளியதோடு டீசல் மற்றும் பெற்றோல் விலைகளை 20
வீதத்தால் ரொக்கட் வேகத்தில் அதிகரிக்கச் செய்துள்ளது. இரண்டாவதாக, பல்நார்ப்பொருள் (Multi-Fibre)
ஒப்பந்தம் என்றழைக்கப்படும் சர்வதேச ஏற்றுமதி பங்கு
அமைப்பு, இலங்கையின் துணி ஏற்றுமதியை கீழறுக்க அச்சுறுத்துகின்றது. இலங்கையின் துணி ஏற்றுமதி இப்போது சீனா
போன்ற நாடுகளில் பிரமாண்டமான உற்பத்தியாளர்களிடமிருந்து சமரசமற்ற போட்டியை எதிர்கொள்கின்றது.
தமது பொருளாதார துன்பங்களில் இருந்து மீள்வதற்கு உள்நாட்டு யுத்தத்தை
முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்பது இலங்கை ஆளும் வர்க்கத்திற்கு தெரியும். அது எதிர்கொண்டுள்ள பிரச்சினை
என்னவென்றால், 1948 சுதந்திரத்திரத்தில் இருந்தே தனது மேலாதிக்கத்திற்கான அடித்தளத்தை அமைத்துக்கொண்ட
இனவாத கருத்துப் போக்கை அது இறுக்கமாக அனைத்துக்கொண்டுள்ளதேயாகும். ஒவ்வொரு அரசியல் நெருக்கடியின்
ஊடாகவும், ஐ.தே.க வும் ஸ்ரீ.ல.சு.க வும் வெகுஜனங்களை பிளவுபடுத்தவும் முதலாளித்துவ ஆட்சியை தூக்கி
நிறுத்தவும் தமிழர் விரோத பேரினவாதத்தை பயன்படுத்தி வந்துள்ளன. அதுவே 1983ல் கொடூரமான தமிழர்
விரோத படுகொலைகளுக்கு மத்தியில் உள்நாட்டு யுத்தத்தின் வெடிப்பிற்கு வழிவகுத்த சிங்களப் பேரினவாதத்தின்
வளர்ச்சிக்கு வழியமைத்தது.
குமாரதுங்க, டிசம்பர் சுனாமியின் எழுச்சியோடு: "இவ்வளவு பெரிய இயற்கை
அழிவுக்கு மத்தியில் சிங்களம், தமிழ் அல்லது முஸ்லிம்கள் என்று பிரிவினையாக செயற்படுவது சாத்தியமற்றது.
நாங்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும்," என பக்தியுடன் பிரகடனம் செய்தார். இந்த பேரழிவு அரசியல்
ஐக்கியத்தையும் சமாதானத்தையும் கொண்டுவரும் என்பதால் அது "ஒரு நம்பிக்கை தரும் அம்சத்தைக்"
கொண்டுள்ளது என எழுதிய பலவித ஆசிரியர் தலையங்க எழுத்தாளர்களின் சிடுமூஞ்சித்தனமான கருத்துக்களிலும் அவரது
நிலைப்பாடு எதிரொலித்தது. 40,000 உயிர்களைப் பலிகொண்டதோடு அரை மில்லியன் மக்களை வீடற்றவராக்கிய
பேரழிவு நடந்து ஏழு மாதங்களின் பின்னரும் மீள் கட்டுமான வேலைகள் ஆரம்பிக்கப்பட்டிருக்காததோடு ஆளும்
வட்டாரங்களுக்கிடையில் இனவாதப் பகைமை தொடர்ந்தும் வளர்ச்சி கண்டுவருகிறது.
பொதுக் கட்டமைப்பு உடன்படிக்கையே கூட உயர்ந்த மட்டத்தில் அம்பலத்திற்கு
வந்துள்ளது. இந்த நிவாரண சபை கொழும்புக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான ஒரு அதிகாரப் பகிர்வு
ஏற்பாடாகும். இது ஆலோசனையின் சாயலே இன்றி ஜனநாயக விரோதமான முறையில் வரையப்பட்டுள்ளது. அதன்
பிரதான இலக்கு, பரந்த சமாதான தீர்வுக்கான அடிப்படையை ஸ்தாபிப்பதேயன்றி, வெகுஜனங்களின் அவலங்களுக்கு
தீர்வு காண்பதல்ல. விடுதலைப் புலிகள் சதாராண தமிழ் தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் நலன்களை
பிரதிநிதித்துவம் செய்யவில்லை. மாறாக, பொதுக் கட்டமைப்பையும் எதிர்கால சமாதான தீர்வையும்
கொழும்புக்கு ஒரு இளைய பங்காளியாக தனது நிலையை பலப்படுத்திக்கொள்வதற்கான ஒரு வழிவகையாக கருதும்
தமிழ் முதலாளித்துவத்தின் ஒரு குறுகிய தட்டாகும்.
இந்த ஒப்பந்தம் சம்பந்தமான ஜே.வி.பி யின் எதிர்ப்பும், தமிழ் மற்றும் முஸ்லிம்
எதிரிகள் மீதான தமது மேலாதிக்கத்தை பேணிக்கொள்வதற்கான ஆளும் கும்பலின் உறுதிப்பாட்டின் தூண்டுதலே அன்றி
வெகுஜனங்கள் பற்றிய அக்கறையல்ல. ஜே.வி.பி யின் பிரச்சார செயலாளர் விமல் வீரவன்ச, ஜூலை 17
சண்டே டைம்ஸ் பத்திரிகைக்கு வெளியிட்ட கருத்துக்கள் கட்சியின் வர்க்கத் தகவமைவை
கோடிட்டுக்காட்டுகிறது. பொதுக் கட்டமைப்புக்கு எதிரான தனது கட்சியின் பிரச்சாரமானது சுனாமியால்
பாதிக்கப்பட்டவர்கள் பற்றி எந்தவொரு அக்கறையும் செலுத்தவில்லை என பிரகடனம் செய்தார். "எமது
முன்னோர்களால் பாதுகாக்கப்பட்டுவந்த நாட்டின் இறைமையும் ஒருமைப்பாடும் மிகவும் முக்கியமானவையாகும்.
வாழ்க்கைச் செலவு பற்றிய பிரச்சினையை கையாள்வது சிரமமானதல்ல," என அவர் தெரிவித்தார்.
ஜே.வி.பி யின் நிலைப்பாடு விடுதலைப் புலிகளை மீண்டும் யுத்தத்திற்கு தள்ளிச்
செல்லுமானால் என கேட்ட போது, "விடுதலைப் புலிகள் யுத்தத்தை நிறுத்தவில்லை" என பதிலளித்த வீரவன்ச,
கிழக்கில் வன்முறைகளுக்காக விடுதலைப் புலிகளை குற்றஞ்சாட்டினார். அவரது கருத்துக்கள், உள்நாட்டு யுத்தத்தை
மீண்டும் தூண்டுவதற்கான ஜே.வி.பி யின் நிலைப்பாட்டின் தர்க்கத்தை மேலும் அம்பலப்படுத்துகிறது. ஜூலை 17
அன்று, விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப. தமிழ்செல்வன் யுத்த ஆபத்தைப் பற்றி
எச்சரித்தார். தற்போது உயர் நீதிமன்ற தீர்ப்பால் இடைநிறுத்தப்பட்டுள்ள பொது நிவாண சபை சம்பந்தமாக
தீர்மானிக்கும் நீண்டகால செயல்முறையால் ஏற்பட்ட அதிருப்தியுடன், "இலங்கை இராணுவத்தின் புலனாய்வுதுறையால்
(கிழக்கில்) மேற்கொள்ளப்பட்டுவரும் உக்கிரமடைந்த நிழல் யுத்தத்தில் விடுதலைப் புலி உறுப்பினர்கள்
கொல்லப்படுவதானது, யுத்த நிறுத்த உடன்படிக்கையின் முறிவுக்கு வழிவகுக்கும்" என தெரிவித்த அவர், அடித்தள
நிலைமைகளை "கடுமையானவை" என விவரித்தார்.
தொழிலாளர் வர்க்கத்தின் அரசியல் சுயாதீனம்
டிசம்பர் 26 சுனாமிக்கு இலங்கையில் தொழிலாளர்களும் இளைஞர்களும் தீவின் ஆளும்
கும்பல்களை விட வேறுபட்ட விதத்தில் பிரதிபலித்தார்கள். பேரழிவைக் கேள்விப்பட்டவுடன், பலர்
பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு செல்வதற்காக
தன்னிச்சையாக ஏற்பாடுகளை மேற்கொண்டார்கள். அல்லது தொண்டர் நிவாரணக் குழுக்களுக்கு பணமும்
பொருட்களும் கொடுத்து உதவினார்கள். வைத்தியர்கள் மற்றும் தாதிகள் உட்பட தொழில் வல்லுநர்கள்,
சுகவீனமடைந்தவர்களுக்கும் காயமடைந்தவர்களுக்கும் உதவுவதற்காக நெருக்கடியான நிலைமைகளின் கீழ்
சுயாதீனமாக பல மணித்தியாலங்கள் வேலை செய்தார்கள். பாதிக்கப்பட்டவர்கள் தமிழர்களா, சிங்களவர்களா
அல்லது முஸ்லிம்களா என்பதையிட்டு மிகவும் குறைந்தளவிலேயே அக்கறை செலுத்தப்பட்டது. அனைவரும் ஒரே
தோணியிலேயே இருப்பது தெளிவாகியிருந்தது.
எவ்வாறெனினும், இனவாதத்தை நிராகரித்தல் மற்றும் அரசாங்கத்தின் மீதான
நம்பிக்கையின்மை ஆகிய ஆரோக்கியமான உணர்வுகள், தொழிலாள வர்க்கத்திற்கான ஒரு அரசியல் பதிலீட்டுக்கு
சமனானவை அல்ல. எல்லா பிரதான கட்சிகளும் உழைக்கும் மக்களின் தேவைகள் மற்றும் அபிலாஷைகளை அடைவதில்
முழுமையாக இலாயக்கற்றவை என்பதை ஒப்புவித்துள்ளதுடன் இப்போது சர்வாதிகார வழிமுறையிலான ஆளுமையை
நாடுவதைப் பற்றி பகிரங்கமாக அக்கறை செலுத்துகின்றன.
இத்தகைய நிலைமைகளின் கீழ், தொழிலாள வர்க்கம் முதலாளித்துவத்தின் ஒவ்வொரு
பிரிவிலிருந்தும் முழுமையாக தனது அரசியல் சுயாதீனத்தை ஸ்தாபித்துக்கொள்ளும் அதேவேளை, அதன் சொந்த
தேவைகளுக்கும் அபிலாஷைகளுக்காகவும் போராடும் ஒரு அரசியல் இயக்கத்தை கட்டியெழுப்ப வேண்டும். அத்தகைய
ஒரு இயக்கமானது வளர்ச்சிகண்டுவரும் ஆபத்தான அவலநிலையிலிருந்து மீள்வதற்கு முயன்றுகொண்டிருக்கும் நகர்ப்புற
மற்றும் கிராமப்புற ஏழைகளை ஈர்க்கும் சக்திவாய்ந்த துருவமாக அமையும். அதன் இலக்கானது சமுதாயத்தை
சோசலிச வழியில் முழுமையாக மறு ஒழுங்கு செய்வதற்கு எந்தவிதத்திலும் குறைவானதல்ல: ஒரு சில செல்வந்தர்கள்
இலாபமடைவதற்கு முற்றிலும் மாறாக, பெரும்பான்மையானவர்களின் சமூகத் தேவைகளுக்கு முன்னுரிமை வழங்கப்பட
வேண்டும்.
இவை இருந்துகொண்டுள்ள அரசியல் ஸ்தாபனத்திற்கு அழுத்தம் கொடுப்பதன் மூலமோ
அல்லது பாராளுமன்ற நடைமுறைகளின் ஊடாகவோ இந்த குறிக்கோள்களை அடைய முடியாது. லங்கா சமசமாஜக்
கட்சி (ல.ச.ச.க) 1964ல் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க அம்மையாரின் முதாலளித்துவ அரசாங்கத்தில்
சேர்ந்துகொண்டதன் மூலம் செய்த காட்டிக்கொடுப்பின் அரசியல் விளைவுகளை தொழிலாள வர்க்கம் இன்னமும்
அனுபவித்துக்கொண்டிருக்கின்றது. ல.ச.ச.க சோசலிச அனைத்துலக வாதத்தை துறந்து இனவாதத்தை
அணைத்துக்கொண்டமையானது ஜே.வி.பி மற்றும் விடுதலைப் புலிகளின் செல்வாக்கின் எழுச்சிக்கு நேரடியாக
வழிவகுத்தோடு முடிவாக உள்நாட்டு யுத்தத்திற்கே இட்டுச் சென்றது. இன்று ல.ச.ச.க மற்றும் ஸ்ராலினிச
கம்யூனிஸ்ட் கட்சியும் சிதறுண்டுபோயுள்ளன. இன்று இந்த இரு கட்சிகளும், அரசாங்கத்தின் பொருளாதார மற்றும்
அரசியல் வேலைத்திட்டத்தை அமுல்படுத்துவதற்காக நிறைவேற்று அதிகாரங்களை பயன்படுத்துமாறு குமாரதுங்கவுக்கு
ஊக்கமூட்ட துணைபோவதை தவிர வேறு எதற்கும் தகுதியற்றவை.
நவசமசமாஜக் கட்சி (ந.ச.ச.க), சுதந்திர முன்னணியில் இருந்து
உத்தியோகபூர்வமாக வெளயில் இருக்கின்ற போதிலும், குமாரதுங்கவுக்கும் பொதுக்கட்டமைப்பு உடன்படிக்கைக்கும்
இதயசுத்தியுடன் ஆதரவளித்தது. இந்த வெட்கங்கெட்ட சந்தர்ப்பவாத கருவி, தனது வரலாற்றில் இரு பிரதான
முதலாளித்துவ கட்சிகளுக்கும் ஒரு பரிந்துரையாளராக சேவையாற்றியுள்ளது. ந.ச.ச.க 1990களின் பிற்பகுதியில்,
ஜே.வி.பி அதனது பேரினவாத நிலைப்பாடுகளை மாற்றிக்கொண்டுள்ளது என்று காரணம் காட்டி அதனுடன் ஒரு
கூட்டணியை உருவாக்கிக்கொண்டது. இந்த எல்லா வழிமுறைகளுக்குமான ஒரே ஒரு நிலைப்பாடு, ந.ச.ச.க
பெயரளவிலான சமாதான முன்னெடுப்புகளுக்கு ஆதரவளிப்பதாகும். இதன் விளைவாக, அது புதிய அதிகாரப் பகிர்வு
தீர்வின் தேவையை வலியுறுத்தும் பல வியாபார மற்றும் பலவித அரச சார்பற்ற அமைப்புக்களுடன் நெருக்கமான
உறவைக் கொண்டுள்ளது.
அதிகாரத்தில் உள்ளவர்களின் பக்கம் தனது தகவமைவை திருப்பிக்கொண்டுள்ள
ந.ச.ச.க, உதவிக்காக அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் ஏனைய பிரதான சக்திகளுக்கு நேரடியாக அழைப்பு
விடுப்பதன் மூலம் தற்போதைய முட்டுக்கட்டைக்கு பதிலளிக்கின்றது. ஜூன் 26 லக்பிம செய்தியிதழுக்கு
எழுதியபோது, ந.ச.ச.க தலைவர் விக்கிரமபாகு கருணாரத்ன இந்த அசாதாரணமான பிரகடனத்தை செய்தார்:
"இன்று உலக முதலாளித்துவம் தராளவாத ஜனநாயக இயக்கங்களை அபிவிருத்தி செய்ய பணம் செலவிடுகிறது. கடந்த
காலங்களில், பிரச்சாரத்திற்காகவும் மற்றும் இரகசிய ஒடுக்குமுறை நடவடிக்கைகளுக்காகவும் அவர்கள் செலவு செய்த
பணம், இப்போது இலங்கையை போன்ற நாடுகளில் தாராளவாத இயக்கங்களை அபிவிருத்தி செய்ய செலவிடப்படுகிறது
என்று கூறுவது சரியானதாகும்."
இந்த கருத்துக்கள், ஈராக்கிலும் ஆப்கானிஸ்தானிலும் அமெரிக்காவும் அதன் பங்காளிகளும்
இழைக்கும் குற்றங்களை மூடிமறைப்பது மட்டுமன்றி, இதே ஏகாதிபத்திய சக்திகள் சமாதானத்திலும் ஜனநாயகத்திலும்
மற்றும் இலங்கையில் சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களின் தலைவிதி பற்றியும் அக்கறை செலுத்துகின்றன என்ற அழிவுகரமான
மாயையை ஊக்குவிக்கின்றது. தற்போதைக்கு இலங்கையில் உள்நாட்டு யுத்தத்திற்கு பேச்சுவார்த்தை மூலமான தீர்வே
வாஷிங்டனின் விருப்பமான தேர்வாக இருந்தபோதிலும், இந்தப் பிராந்தியத்தில் அதன் மூலோபாய மற்றும்
பொருளாதார இலட்சியங்களுக்கு குறுக்கே நிற்கும் எந்தவொரு தடையையும் நீக்குவதற்காக இராணுவம் உட்பட ஏனைய
வழிமுறைகளை கையாள்வதை கைவிட்டுவிடும் என்று கற்பனை செய்துகொள்வது முட்டாள்தனமானதாகவே இருக்கும்.
சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களைப் பொறுத்தளவில், உலகம் பூராவும் மில்லியன் கணக்கான மக்கள் அவர்களின்
அவலத்தையிட்டு அக்கறை செலுத்திய பின்னரே டிசம்பர் 26 பேரழிவுபற்றி புஷ்ஷும் பிளேயரும் கவனம் செலுத்தினர்.
சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க), முதலாளித்துவம் புதிய முறையிலான
ஆட்சிக்கு தயார் செய்கின்ற நிலையில் தொழிலாள வர்க்கத்தால் அரசியலில் இருந்து ஒதுங்கியிருக்க முடியாது என
எச்சரிக்கின்றது. அவர்களது வர்க்க நலன்களுக்காக போராடுவதற்காக, சாதாரண வெகுஜனங்களை ஐக்கியப்படுத்தும்
ஒரு அரசியல் வேலைத்திட்டம் அவர்களுக்குத் தேவை. இது, எல்லா விதத்திலான இனவாதத்தையும் பேரினவாதத்தையும்
நிராகரிப்பதையும் மற்றும் சோசலிச அடித்தளத்தில் சமுதாயத்தை மறுசீரமைப்பதற்கான ஒரு பொதுப்
போராட்டத்தில், மத, மொழி இன பின்னணிகளுக்கு அப்பால் உழைக்கும் மக்களை ஐக்கியப்படுத்துவதையும் கோருகிறது.
இதன் காரணமாகவே தெற்காசியாவின் ஐக்கிய சோசலிச குடியரசுகளை அமைக்கும் மிகப் பரந்த குறிக்கோளின்
ஒரு பாகமாக ஸ்ரீலங்கா--ஈழம் ஐக்கிய சோசலிச குடியரசை ஸ்தாபிதம் செய்வதற்கு சோ.ச.க அழைப்பு
விடுக்கின்றது.
தமது உடனடி பொருளாதார மற்றும் சமூகப் பிரச்சினைகளுக்கு முகங்கொடுப்பதற்காக,
அரசாங்கம் சுனாமியால் பாதிக்கப்பட்ட இலட்சக் கணக்கானக்கான மக்களுக்கான நிவாரணங்களை உடனடியாக
அதிகரிக்க வேண்டுமெனவும், உயர்தர வீடமைப்பு, பாடசாலைகள், வைத்தியசாலைகள் மற்றும் சுனாமியால் அழிந்துபோன
ஏனைய வசதிகளையும் மீண்டும் கட்டியெழுப்புவதற்கு தேவையான நிதியை உடனடியாக கிடைக்கச்செய்ய வேண்டுமெனவும்
உழைக்கும் மக்கள் வலியுறுத்த வேண்டும். இந்த பணிகளை மேற்கொள்வதற்கு பொதுக் கட்டமைப்பில் நம்பிக்கை
வைக்க முடியாது. ஒவ்வொரு பிரதேசத்திலும், வேலைத் தலங்களிலும் சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கான
ஒவ்வொரு உறுதிப்படுத்தப்பட்ட சேவைகளையும் வசதிகளையும் அமுல்படுத்தவும் இணைந்து செயலாற்றவும் கூடிய நடவடிக்கை
குழுக்களை நிறுவ தொழிலாளர்கள் நடவடிக்கை எடுக்கவேண்டும். இந்த குழுக்கள் எல்லா சுனாமி உதவிகளையும் செலவிடுவதை
மேற்பார்வை செய்வதற்காக தமது சொந்த தேசிய சபையை தேர்வுசெய்துகொள்ள வேண்டும்.
இந்த ஆரம்ப நடவடிக்கைகளும் கோரிக்கைகளும் தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின்
அரசாங்கம் ஒன்றை ஸ்தாபிப்பதை இலக்காகக் கொண்ட வேலைத்திட்டத்தின் பாகங்களாகும். தொழிலாள வர்க்கம்
ஆட்சியைக் கைப்பற்ற வேண்டுமானால், அது அனைத்து அன்றாட பிரதான பிரச்சினைகளுக்கும் தனது சொந்த
வர்க்கத் தீர்வை காலந்தாழ்த்தாமல் முன்னேற்றவும் அதற்காகப் பிரச்சாரம் செய்யவும் வேண்டும். தொழிலாளர்கள்
வேலைத் தலங்களில், வடக்குக் கிழக்கில் இருந்து ஆயுதப் படைகளை உடனடியாகவும் நிபந்தனையின்றியும் வெளியேற்றவும்,
சகல பாகுபாடான மற்றும் ஜனநாயக விரோத சட்டங்களை ஒழித்துக்கட்டவும் மற்றும் அடிப்படை சமூக, ஜனநாயக
உரிமைகளை அனைவருக்கும் உத்தரவாதம் செய்யும் ஒரு புதிய அரசியலமைப்பை இயற்றுவதற்காக ஒரு சுதந்திரமாக
தேர்வுசெய்யப்பட்ட அரசியலமைப்பு சபையை நிறுவவும் கோரிக்கை முன்வைக்க வேண்டும்.
சோசலிச முன்நோக்கின் அடிப்படையில் உலகம் பூராவும் தொழிலாளர்களை ஐக்கியப்படுத்துவதற்காக
நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவால் முன்னெடுக்கப்பட்டுள்ள அனைத்துலக போராட்டத்தின் பாகமாக,
இந்த வேலைத்திட்டத்திற்காக இலங்கையில் சோசலிச சமத்துவக் கட்சி போராடுகிறது. நாம் எமது
வேலைத்திட்டத்தையும் கொள்கைகளையும் பற்றி கவனமாக அக்கறைசெலுத்துமாறும், உலக சோசலிச வலைத்
தளத்தை வாசிப்பதோடு சோ.ச.க வில் இணைந்து அதைக் கட்டியெழுப்ப விண்ணப்பிக்குமாறும் தொழிலாளர்களுக்கும்
இளைஞர்களுக்கும் அழைப்புவிடுக்கின்றோம்.
Top of page
|