World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா

Russia and China call for closure of US bases in Central Asia

மத்திய ஆசியாவில் அமெரிக்க தளங்களை மூடிவிட ரஷ்யாவும் சீனாவும் கோருகின்றன

By John Chan
30 July 2005

Use this version to print | Send this link by email | Email the author

சீனா, ரஷ்யா மற்றும் நான்கு மத்திய ஆசிய குடியரசுகள் கொண்ட குழுவான ஷங்காய் கூட்டுறவு அமைப்பு (SCO), ஜூலை 5-ல் கஜகஸ்தானில் நடைபெற்ற அதன் உச்சிமாநாட்டில், மத்திய ஆசியாவிலுள்ள அதன் இராணுவத் தளங்களை அப்புறப்படுத்துவதற்கான ஒரு காலக்கெடுவை அமெரிக்கா நிர்ணயிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளும், இதற்கு முன்னர் கண்டிராத ஒரு அறிக்கையை வெளியிட்டது..

''பயங்கரவாதத்தின் மீதான போர்'' போராடப்பட்டுக் கொண்டிருக்கிறது என்ற புஷ் நிர்வாகத்தின் பொதுவான வாய்வீச்சை ஆதரிக்கின்ற அதே நேரத்தில் SCO பிரகடனம் குறிப்பிட்டிருப்பதாவது; "ஆப்கனிஸ்தானில் பயங்கரவாதத்திற்கு எதிரான இராணுவ நடவடிக்கையின் தீவிரக்கட்டம் முடிந்துவிட்டதை கருத்தில்கொண்டு, உறுப்பு நாடுகள்... இந்த பிராந்தியத்தில் இராணுவத் தளத்தை ''பயங்கரவாதத்திற்கு எதிரான கூட்டணியில் கலந்து கொண்ட சம்மந்தப்பட்ட நாடுகள் தற்காலிகமாக பயன்படுத்திக்கொள்வதற்கான காலக்கெடுவை நிர்ணயித்து அதை பரிசீலிப்பது அவசியமென்று கருதுகிறது".

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புட்டினின் ஓர் உதவியாளரான Sergei Prikhodko ஊடகங்களுக்கு பேட்டியளித்தபோது, அமெரிக்கா உடனடியாக வெளியேற வேண்டுமென்ற கோரிக்கையல்ல அது, ஆனால் "SCO உறுப்பு நாடுகளுக்கு எப்போது அமெரிக்க துருப்புக்கள் தங்களது தாய் நாட்டிற்கு திரும்புகின்றன என்பதை அறிந்து கொள்வது முக்கியமாகும்" என்று கூறினார். SCO, அமெரிக்கா தலைமையிலான கூட்டணிப் படைகள் போரினால் அழிந்த நாடான ஆப்கானிஸ்தானில் ஜனநாயகத்தையும் அமைதியையும் கொண்டுவந்து விட்டன என்ற வாஷிங்டன் சொந்த பிரசாரத்தையே பயன்படுத்தி அருகாமையிலுள்ள கிரிகிஸ்தான் மற்றும் உஸ்பெஸ்கிஸ்தானிலுள்ள அதன் இராணுவத் தளங்கள் இனி தேவையில்லை என்று வாதிட்டிருக்கிறது.

மூன்று நாட்களுக்கு பின்னர், ரஷ்ய நாடாளுமன்றத்தின் கீழ்சபை ரஷ்யாவிற்கும் கிர்கிஸ்தானுக்கும் இடையில் ஒரு 15 ஆண்டுகளாக நிலவும் இருதரப்பு ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளித்தது, பைஷேக்கிற்கு கிழக்கிலுள்ள கான்ட் விமானத்தளத்தில் ரஷ்ய துருப்புக்களின் எண்ணிக்கையை இரட்டிப்பாக்க வகை செய்கிறது. இந்த ஆண்டு ஆரம்பத்தில், கான்டிற்கு மேலும் ரஷ்யாவின் போர் விமானங்களை அனுப்ப திட்டமிட்டிருப்பதாக ரஷ்யா அறிவித்தது.

2001 நவம்பரில் ஆப்கானிஸ்தான் மீது அமெரிக்கா ஆக்கிரமித்ததை ஆதரிப்பதற்காக, உஸ்பெஸ்கிஸ்தானிலும் கிர்கிஸ்தானிலும் வாஷிங்டன் தனது விமானப்படை தளங்களை அமைத்தது. மூன்றரை ஆண்டுகளுக்கு பின்னரும் அந்த தளங்கள் இன்னமும் செயல்பட்டு வருகின்றது மற்றும் அங்கு கொத்தளங்களில் நூற்றுக்கணக்கான அமெரிக்க துருப்புக்கள் தங்கியிருக்கின்றன. கிர்கிஸ்தானில், அமெரிக்க மற்றும் ரஷ்ய போர் விமானங்கள் இரண்டு நிமிடங்களில் பறந்து ஒன்றையொன்று சந்திக்கின்ற அளவிற்கு அங்கு நிறுத்தப்பட்டிருக்கின்றன.

மத்திய ஆசியாவில் அமெரிக்க இராணுவம் நிலை கொண்டிருப்பதற்கு சவால் விடுகின்ற வகையில் ரஷ்யாவும் சீனாவும் தற்காலிக நடவடிக்கைகளை எடுத்துள்ளன என்பதை SCO பிரகடனம் எடுத்துக்காட்டுகிறது.

இதற்கு முன்னர் "ஷங்காய் 5" என்றழைக்கப்பட்ட SCO, 1996-ல் சீனா, ரஷ்யா முன்னாள் சோவியத் மத்திய ஆசிய குடியரசுகளான கசகஸ்தான், கிர்கிஸ்தான் மற்றும் தஜிக்கிஸ்தான் ஆகியவற்றால் ஸ்தாபிக்கப்பட்டது. 2001 ஜூனில் உஸ்பெகிஸ்தான் சேர்ந்து கொண்டது, பெய்ஜிங்கில் தலைமை அலுவலகங்களை கொண்ட ஒரு நிரந்தர செயலகத்துடன் அந்த அமைப்பு அப்போது மறுசீரமைப்பு செய்யப்பட்டது. மத்திய ஆசியாவின் வளமான எண்ணெய் மற்றும் எரிவாயு இருப்புக்களை சுரண்டிக்கொள்ளுகின்ற பாகமாக, பொருளாதார ஒத்துழைப்பை வளர்ச்சியுறச்செய்யும் நோக்கத்தோடு, சீனாவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையே ஒரு "மூலோபாய பங்குதாரர்" ஏற்பாட்டை உருவாக்கும் அடிப்படையில் இந்த முன்னோக்கு அமைந்திருக்கிறது.

SCO வின் உறுப்பு நாடுகள் அனைத்தும் ஆரம்பத்தில் ஆப்கானிஸ்தான் மீது அமெரிக்கா படையெடுத்ததை ஏற்றுக்கொண்டது, வாஷிங்டனுடன் எந்தவிதமான மோதலையும் தவிர்ப்பதற்காகவும், தங்களது சொந்த செயற்திட்டங்களுக்காக ''பயங்கரவாதத்தின் மீதான போரை'' சுரண்டிக்கொள்வதற்காகவும் இரண்டு வகைகளிலும் ஏற்றுக்கொண்டது. மாஸ்கோ செச்சென்யாவில் முஸ்லீம் பிரிவினைவாதத்திற்கு எதிராக தனது ஒடுக்குமுறை போரை நியாயப்படுத்துவதற்காக பயன்படுத்திக்கொண்டது, அதே நேரத்தில் பெய்ஜிங் மத்திய ஆசியாவிலுள்ள முஸ்லீம் மக்களைக் கொண்ட சின்ஜியாங் மாகாணத்தில் பிரிவினைவாதிகளை ஒடுக்குவதை நியாயப்படுத்தியது. வறுமையில் வாடிக்கொண்டிருந்த மத்திய ஆசிய குடியரசுகள் ''பயங்கரவாதத்தை'' பிடித்துக்கொண்டு சமூக கிளர்ச்சியை மற்றும் அரசியல் எதிரிகளை ஒடுக்குவதை நியாயப்படுத்தின.

என்றாலும், கடந்த பல ஆண்டுகளுக்கு மேலாக, வாஷிங்டன் மத்திய ஆசியாவில் இடம்பெற்றிருப்பது வளர்ந்து வரும் பதட்டங்களை தூண்டிவிட்டுள்ளது. ஆப்கானிஸ்தான் மீது ஆக்கிரமித்தமையை, பயங்கரவாதத்தை ஒழித்துக்கட்டுவது என்ற போரில் ஒளிந்து கொண்டிருந்தாலும், உண்மையான நோக்கம் அமெரிக்கா நீண்டகாலமாக தன்னிடம் வைத்திருந்த மூலோபாய அபிலாஷைகளை நிறைவேற்றுவதற்கு முதல் தடவையாக முன்னாள் சோவியத் ஒன்றியத்தில் மத்திய ஆசிய எல்லைகளில் படைகளை அனுப்புவதற்கு வாய்ப்பு கிடைத்தது மற்றும் வளம் செறிந்த அந்த பிராந்தியத்தில் தனது மேலாதிக்க முயற்சியையும் வலியுறுத்த முடிகிறது. ரஷ்யா, சீனா மற்றும் ஈரான் உட்பட இந்த பிராந்திய நாடுகளுக்கு எதிராக தனது அச்சுறுத்தலை பயன்படுத்துவதற்கு முடிகின்ற அளவிற்கு, அது இப்போது அந்த இராணுவத் தளங்களை கட்டுப்படுத்த முடிகிறது.

2001 முதல் மத்திய ஆசியாவில் குறிப்பாக, ரஷ்யாவின் செல்வாக்கிற்கு சவால் விடுவதாக அமைந்திருந்தன. முன்னாள் சோவியத் குடியரசுகளான ஜோர்ஜியா மற்றும் உக்ரேனில் "வண்ணப் புரட்சிகள்" என்றழைக்கப்பட்டவற்றை புஷ் நிர்வாகம் ஆதரித்தது. இரண்டு நாடுகளிலுமே, அமெரிக்க-சார்பு அரசியல் சக்திகள் மாஸ்கோவுடன் சேர்ந்திருந்த அரசாங்கங்களை கவிழ்த்தன. இந்த ஆண்டு மார்ச்சில், கிர்கிஸ்தானில் மற்றொரு புதிய ஆட்சியை கொண்டு வருவதில் முடிந்த மற்றொரு ''புரட்சி'' நடந்தது, அது ரஷ்யாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையில் சமச்சீர் நிலையில் நடந்து கொள்ள முயன்று வருகிறது. மேயில், வாஷிங்டனும் மாஸ்கோவும் மறைமுகமாக உஸ்பெக் அரசாங்கத்தை ஆதரித்தன ----அன்டிஜியான் நகரத்தில் நடைபெற்ற எழுச்சியை மிகக்கொடூரமாக ஒடுக்கியதில்----- அந்த அரசாங்கம் மிக நெருக்கமாக அமெரிக்காவோடு ஒத்துழைத்தது.

புவிசார்-அரசியல் போராட்டம் வளர்ச்சியுறும்போது, SCO அதிகரித்தளவில் தனது மத்திய ஆசிய குடியரசுகளின் மீதான செல்வாக்கை தூக்கி நிறுத்தும் ஒரு வழியாக கருதுகிறது மற்றும் சீனாவுடன் நெருக்கமான உறவுகளை வளர்த்துக்கொள்வது, அமெரிக்காவிற்கு எதிர்-எடையாக அமையுமென்றும் கருதுகிறது.

CIS (சுதந்திர அரசுகளின் காமன்வெல்த்) அமைப்பின், மத்திய ஆசிய பிரிவு இயக்குநர் Andrei Grozin ரஷ்ய செய்தி பத்திரிகையான Nezavisimaya Gazeta-விற்கு ஜூலை 4-ல் பேட்டியளித்தபோது, SCO "சோவியத் யூனியனுக்கு பிந்திய ஆசிய அரசுகளில் உருவாகியுள்ள அரசியல் முறைகளை பாதுகாக்கவும் ஸ்திரத்தன்மையை ஆதரிக்கவும் உதவும் வகையில் தொழிற்படக்கூடிய, வேலைசெய்யக்கூடிய கட்டமைமப்பை" உருவாக்கும் என்று கூறினார்.

ரஷ்யாவின் அரசியல் மற்றும் இராணுவ ஆய்வு அமைப்பில் ஒரு ஆய்வாளராக பணியாற்றி வருகின்ற Sergei Markedonov மாஸ்கோவை தளமாகக்கொண்டு வெளிவரும் RIA Novosti செய்தி பத்திரிகைக்கு ஜூலை 13-ல் அளித்த பேட்டியில், மத்திய ஆசியாவில் மிக அண்மையில் நடைபெற்றுள்ள அரசியல் கொந்தளிப்பு எடுத்துக்காட்டுவது என்னவென்றால், சீனாவின் ஒத்துழைப்போடு ரஷ்யா "ஒரு பிராந்திய போலீஸ்காரர்'' ஆக செயல்பட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது என்று கூறியிருக்கிறார்.

சீனாவிற்கு மத்திய ஆசியாவில் திட்டவட்டமான மூலோபாய நலன்களும் உண்டு. மத்திய கிழக்கிலிருந்து எண்ணெய் அளிப்புக்களை பெறுவதற்கு ஒரு மாற்று வளமாக க்சின்ஜியாங் மாகாணம் வரை மத்திய ஆசியாவில் குழாய் இணைப்பு வலைப்பின்னல் ஒன்றை உருவாக்கி கொள்வதற்கு பெய்ஜிங் நிதியளித்திருக்கிறது. இந்த பிராந்தியத்தில் அமெரிக்கா மேலாதிக்கம் செலுத்துவது, அல்லது அமெரிக்க ஊக்குவிப்பால் ஏற்படுகின்ற அரசியல் ஸ்திரமற்றதன்மை, சீனாவின் திட்டங்களை சீர்குலைக்க முடியும் அதேபோல் க்சின்ஜியாங்கில் இனக் கலவரங்களை தீவிரமாக தூண்டிவிடும்.

மத்திய ஆசியாவில், அமெரிக்க இராணுத் தளங்களை மூடிவிட வேண்டும் என்ற அழைப்பு ஜூன் 30 முதல் ஜூலை 3 வரை ரஷ்ய விஜயம் மேற்கொண்ட சீன ஜனாதிபதி ஹீ ஜின்டாவோ மற்றும் புட்டின் இடையே நடைபெற்ற சந்திப்புக்களில் முடிவு செய்யப்பட்டிருக்கலாம், அது SCO உச்சி மாநாட்டிற்கு சற்று முன்னர் நடைபெற்றது.

ஜூலை 2-ல் சீனாவும், ரஷ்யாவும் வெளியிட்ட ஒரு இருதரப்பு அறிக்கை "21ம் நூற்றாண்டில் உலக ஒழுங்கில்" சர்வதேச உறவுகளில் "ஒருதலைப்பட்ச தன்மையின்'' ஆபத்து குறித்து எச்சரித்திருந்தது, ஐ.நாவிற்கு ஒரு பெரும் பங்களிப்பையும் மற்றும் கொரிய தீபகற்பத்தில் ஸ்திரத்தன்மையையும் கேட்டுக்கொண்டது. ஹீ, புட்டினுடன் பேசிய பின்னர் நிருபர்களிடம் பேசியபோது, "எங்களது உயிர்நாடியான கவலைகளை தரும் செச்சென்யா மற்றும் தைவான் போன்ற முக்கிய பிரச்சனைகளில் நாங்கள் எங்களது பரஸ்பர ஆதரவை வலியுறுத்தினோம்" என்று கூறினார்.

SCO உச்சிமாநாட்டில், மத்திய ஆசிய ஆட்சிகள் மாஸ்கோ மற்றும் பெய்ஜிங்கின் "ஒருதலைப்பட்ச தன்மைக்கு" எதிரான வாய்வீச்சிற்கு அணிதிரண்டு வந்தனர்----அது அமெரிக்க பூகோள மேலாதிக்கத்திற்கு ஒரு சங்கேத சொல்லாகும். கஜகஸ்தான் ஜனாதிபதி நூர்சுல்தான் (Nursultan Nazarbayev) "இறையாண்மை கொண்ட அரசுகளின் உள் விவகாரங்களில் தலையிடுவதற்கு எந்த இடமும் இருக்கக் கூடாது" என்று அறிவித்தார்.

உஸ்பெக் ஜனாதிபதி இஸ்லாம் கரிமோவ் மேற்கு நாடுகளின்-சார்பு சக்திகள் இந்த பிராந்தியத்தில் "ஸ்திரத்தன்மையை கடத்திக்கொண்டு சென்று விடுகின்றன, மற்றும் தங்களது அபிவிருத்தி முன்மாதிரிகளை திணிக்கின்றன" என்று கூறினார். SCO நிலைப்பாட்டில் தனது உறுதிப்பாட்டை காட்டுவதற்காக, உஸ்பெக் அரசாங்கம் ஜூலை 7-ல் ஒரு அறிக்கை வெளியிட்டது, அதில் Karshi-Khanabad- அமெரிக்க விமானத் தளத்திலிருந்து புறப்படுகின்ற விமானங்கள் வடக்கு ஆப்கானிஸ்தானில் நடக்கின்ற நடவடிக்கைகளோடு நிறுத்திக்கொள்ள வேண்டுமென்று வற்புறுத்தியது. "உஸ்பெக்கிஸ்தானில் ஒரு அமெரிக்க இராணுவத்தின் தற்போதைய இருப்பில் வேறு எந்த திட்டங்களையும் உஸ்பெக் தரப்பு கருதிப்பார்க்கவில்லை" என்று அந்த அறிக்கை அறிவித்தது.

கிர்கிஸ்தானில், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜனாதிபதி Kurman Bakiyev ஜூலை 11-ல் நிருபர்களுக்கு பேட்டியளித்தபோது தமது நாட்டில் அமெரிக்கப் படைகள் இருப்பது, மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும் என்று கூறினார். "ஆப்கானிஸ்தானில் நிலைமை மாறிவிட்டதால் இந்தப் பிரச்சனை SCO உச்சிமாநாட்டில் எழுப்பப்பட்டது. ஆப்கானிஸ்தானில் நிலவரம் விரைவில் ஸ்திரத்தன்மை அடையும். அந்த நாட்டில் ஜனாதிபதி தேர்தல்கள் நடந்துவிட்டன மற்றும் ஒரு நாடாளுமன்றத்தை தேர்ந்தெடுப்பதற்கு தயாராகி வருகிறது, எனவே கிர்கிஸ்தானில் கூட்டணி தளம் இருப்பது பற்றி பிரச்சனை எழுகிறது" என்று குறிப்பிட்டார்.

புவிசார் அரசியல் மோதல்கள் தீவிரமடையும்

இந்த அறிக்கைகளை உடனடியாக அமெரிக்கா புறக்கணித்துவிட்டது. ஜூலை 10-ல் சீனாவிற்கு ஒரு விஜயம் மேற்கொண்ட, அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் கொண்டலிசா ரைஸ் ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கா விலகிக்கொள்ளாது என்று நிலைநாட்டினார். "நாங்கள் புரிந்து கொண்டது என்னவென்றால், ஆப்கனிஸ்தான் மக்கள் அமெரிக்க ஆயுதப்படைகளின் உதவியை நாடுகின்றனர், மற்றும் விரும்புகின்றனர்" என்று பெய்ஜிங்கில் நடைபெற்ற ஒரு நிருபர்கள் மாநாட்டில் அவர் அறிவித்தார். மத்திய ஆசியாவில் வரலாற்றிலேயே முதல் தடவையாக தனது காலடியை ஸ்தாபித்துள்ள அமெரிக்க ஏகாதிபத்தியம் வெளியேற எண்ணவில்லை.

ஜூலை 14-ல், அமெரிக்க முப்படைகளின் தலைவர் ரிச்சார்ட் மியேர்ஸ் பகிரங்கமாக சீனாவையும் ரஷ்யாவையும் குற்றம் சாட்டினார், அவை மத்திய ஆசிய அரசுகளில் அமெரிக்காவின் தளங்களை மூடிவிட கோருமாறு "மிரட்ட முயல்கின்றன" என்றார். என்றாலும் யார் யாரை மிரட்டுகிறார்கள் என்பது இந்த வாரம் எடுத்துக்காட்டப்பட்டிருக்கிறது, அப்போது அமெரிக்க பாதுகாப்புத்துறை அமைச்சர் டொனால்ட் ரம்ஸ்பீல்ட் கிர்கிஸ்தானுக்கு பறந்து வந்தார் மற்றும் மிகவேகமாக அந்த நாட்டில் விமானத்தளம் நீடிப்பதற்கான உடன்படிக்கையை கறந்தெடுத்தார்.

ஜூலை 26-ல் கிர்கிஸ் பாதுகாப்பு அமைச்சர் பத்திரிகையாளரிடம் பேசும்போது "இப்போது நான் திரு. அமைச்சரோடு உடன்படுகிறேன்" மற்றும், "ஆப்கானிஸ்தான் நிலவரத்தை சரிசெய்வதற்கு அவசியம் தேவையென்று கருதப்படுகிற காலம் வரை'' அமெரிக்கத்தளம் நீடிக்கும் என்றார். தஜிகிஸ்தான் அரசாங்கமும் அமெரிக்க அழுத்தங்களுக்கு இரையாகிவிட்டது, அமெரிக்க இராணுவம் தஜிக் விமான எல்லையையும் நில எல்லையையும் பயன்படுத்திக்கொள்ள உறுதியளித்தது.

உஸ்பெக்கிஸ்தான் அரசாங்கம், அமெரிக்காவின் இராணுவத்தளம் நீடிக்கலாம் என்று ஒரு உறுதிமொழியை தரவில்லை, மற்றும் அத்தகைய உறுதிமொழியை இந்தவாரம் தரவில்லை, எனவே அந்திஜியானில் மே 13-ல் நடைபெற்ற ஒடுக்குமுறை குறித்து ஒரு சர்வதேச விசாரணை நடக்கும் என்ற புஷ் நிர்வாகத்தின் அச்சுறுத்தலை சந்திக்கிறது. ஜூலை 12-ல், அரசுத்துறை பேச்சாளரான டோம் கேசே "நிச்சயமாக, உஸ்பெக்கிஸ்தான் அரசாங்கம் தனது குடிமக்களுக்கும் மற்றும் சர்வதேச சமுதாயத்திற்கும் ஒரு நம்பகத்தன்மையுள்ள ஒரு சுதந்திரமான விசாரணை நடத்துவதற்கு கடமைப்பட்டிருக்கிறது" என்று அறிவித்தார்.

மத்திய ஆசியாவில் தங்களது செல்வாக்கையும் வளங்களையும் நிலைநாட்டிக்கொள்வதில் பிராந்திய அரசுகள் தங்களது நலன்களை வலியுறுத்துவதற்கும் அமெரிக்கா தனது மேலாதிக்கத்தை நிலைநாட்டுவதற்கு மேற்கொண்டுள்ள முயற்சிகளுக்கும் இடையே நடைபெறும் புவிசார்-அரசியல் மோதல் தீவிரமடையவே செய்யும்.

SCO உச்சிமாநாட்டின் ஒரு குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால், அது ஈரான் இந்தியா மற்றும் பாக்கிஸ்தானுக்கு பார்வையாளர் அந்தஸ்தை தந்தது. 2001 ஆரம்பத்தில் ஈராக்கோடும் வடகொரியாவோடும் இணைந்து ஈரானும் ஒரு "தீய அச்சில்" ஒரு பகுதியாக சேர்ந்திருப்பதாக கூறியது முதல் புஷ் நிர்வாகம் இடைவிடாது ஈரானை அச்சுறுத்தி வருகிறது. தெஹ்ரான் ஆட்சியை தூக்கி எறிவதில் அமெரிக்கா மேற்கொள்ளுகின்ற எந்த நகர்வையும் தடுத்து நிறுத்துவதில் அனைத்து SCO நாடுகளும் பரஸ்பர அக்கறைகளை கொண்டிருக்கின்றன. தங்களது எல்லைகளில் உள்ள அமெரிக்க தளங்கள் ஈரானுக்கு எதிரான ஆக்கிரமிப்பில் பயன்படுத்தப்படுமானால் அதன் விளைபயன்கள் உள்நாட்டு ஸ்திரத்தன்மையில் ஏற்படுகின்ற தாக்கங்கள் குறித்து மத்திய ஆசிய குடியரசுகள் ஆழமாக கவலையடைந்துள்ளன. ரஷ்யாவையும் சீனாவையும் பொறுத்தவரை, உலகின் மிகப்பெரிய மற்றொரு எண்ணெய் உற்பத்தி அமெரிக்காவின் ஒரு வாடிக்கையாளர் அரசாக மாற்றப்படுவதை விரும்பவில்லை.

சீனா, அதிகரித்துவரும் எரிசக்தி நலன்களை ஈரானில் கொண்டிருக்கிறது. சென்ற அக்டோபரில், சீனா தெஹ்ரானுடன் 70 பில்லியன் டாலர்கள் மதிப்புடைய ஒரு நீண்டகால ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது, அதில் ஈரானின் கடற்கரையில் தோண்டப்படும் மிகப்பெரிய எண்ணெய் கிணற்றில் 51 சதவீத பங்கைப் பெறுகிறது. அந்த SCO உச்சிமாநாட்டில் ஈரானின் துணை ஜனாதிபதி முஹமது ராசா ஆரிப், தமது நாடு SCO அரசுகள் பாரசீக வளைகுடாவின் வளங்களை பெறுவதற்கான "பாலமாக" அமையும் என்று அறிவித்தார்.

SCO வில் கலந்து கொள்வதற்கு இந்தியாவிற்கும் பாக்கிஸ்தானுக்கும் ரஷ்யா மற்றும் சீனாவிடுத்த அழைப்பு, அதேபோன்று எண்ணெய் மற்றும் எரிவாயுவைப் பெறுவதில் உள்ள நீண்டகால பிரச்சனைகளை சம்மந்தப்படுத்தியிருக்கிறது. தற்போது அமெரிக்காவின் எதிர்ப்பினால் நிறுத்தப்பட்டிருந்தாலும், புது டில்லி மற்றும் இஸ்லாமாபாத் இரண்டுமே ஈரானிலிருந்து பாக்கிஸ்தான் வழியாக இந்தியாவிற்கு ஒரு எரிவாயுக் குழாயை அமைப்பதில் அக்கறை கொண்டிருக்கின்றன. இந்த ஆண்டு தொடக்கத்தில் நெருக்கமான அரசியல் மற்றும் பொருளாதார உறவுகளுக்கான அடிப்படையை உருவாக்குவதற்காக சீனாவும், இந்தியாவும் ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டன.

வரும் ஆண்டுகளில் SCO வை குறிப்பாக ரஷ்யாவுடன் நெருக்கமான உறவுகளுக்கான கட்டமைப்பாக மற்றும் எரிசக்தி வளங்களை பெறுவதற்காக அபிவிருத்திசெய்ய கூடுதல் முயற்சிகளை சீனா மேற்கொள்ளும் என்று எல்லா சமிக்கைகளும் சுட்டிக்காட்டுகின்றன. ஹூ அண்மையில் மேற்கொண்ட ரஷ்ய விஜயம் "எண்ணெய்க்கான ஒரு பயணம்" என்று கூட சீன ஊடகங்கள் கூறியுள்ளன.

அவர்களது "மூலோபாய பங்குதாரர்" ஏற்பாடு உருவாக்கப்பட்ட பின்னர், ரஷ்யாவிற்கும், சீனாவிற்கும் இடையிலான இருதரப்பு வர்த்தகம் திடீரென்று உயரத் தொடங்கியது ---- மற்றும் 2004-ல் 21.2 பில்லியன் டாலர்கள் அளவிற்கு இருந்தது, இந்த ஆண்டு 20 சதவீதம் வளரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2010 வாக்கில் வர்த்தகம் 60 முதல் 80 பில்லியன் டாலர் அளவிற்கு உயரும். இந்த ஆண்டு ரஷ்யாவிலிருந்து தனது எண்ணெய் இறக்குமதிகளை 50 சதவீதம் அதிகரித்து, 70 மில்லியன் பீப்பாய்களுக்கு கொண்டுவர சீனா திட்டமிட்டிருக்கிறது. ரஷ்யாவின் எரிசக்தி நிறுவனங்களில் சீன எண்ணெய் நிறுவனங்கள் பெருமளவில் முதலீடுகள் செய்வது குறித்து விசாரணைகளை மேற்கொண்டிருக்கின்றன. ஏற்கனவே, பிரதானமாக அரசாங்கத்திற்கு சொந்தமான சீனாவிற்கு எண்ணெய் ஏற்றுமதி செய்யும் ரோஸ்நெப்ட் நிறுவனத்திற்கு சீனா 6 பில்லியன் டாலர்களுக்கு மேல் கடன்களை வழங்கியுள்ளது.

சைபீரியா மீது சீனாவின் அக்கறை முக்கியமாக குவிமையப்படுத்தப்பட்டிருக்கிறது. முன்னாள் சோவியத் யூனியனில் இருப்பதாக நிரூபிக்கப்பட்ட எண்ணெய் இருப்புக்களில் ஏறத்தாழ பாதி இந்த பிராந்தியத்தில் கிடைக்கிறது, அதேபோல் ரஷ்யாவில் கிடைக்கும் நிலக்கரி இருப்புக்களில் 70 சதவீதம் இங்கு உள்ளது. இது, ரஷ்யாவின் மிகப்பெரிய எண்ணெய் உற்பத்தி பகுதி, இரண்டாவது பெரிய நிலக்கரி தயாரிப்புப் பகுதி, மற்றும் உலோகத் தொழில்களில் ஒரு பிரதான மையம். சைபீரியாவிலுள்ள சுமார் 200 மிகப்பெரிய தொழிற்சாலைகளில் 140 தொழிற்சாலைகள் ஆயுதங்களை தயாரிப்பவர்கள், அவர்களில் முக்கியமான வாடிக்கையாளர் சீனா. இயற்பியல் (பெளதீகயில்), விமான மற்றும் விண் ஆய்வியல் மற்றும் அணுமின்சாரம் போன்ற துறைகளில் USSR-ன் முன்னாள் ஆராய்ச்சி நிலையங்கள் பல இந்தப் பகுதியில் செயல்பட்டு வருகின்றன.

இந்த ஆண்டு முதல் ஐந்து மாதங்களில் சைபீரியாவின் கிழக்கு பகுதியிலிருந்து சீனாவிற்கு 3.6 மில்லியன் தொன்கள் கச்சா எண்ணெய் அனுப்பப்பட்டிருப்பதாக ரஷ்யாவின் ரயில்வே அதிகாரிகள் உறுதிப்படுத்தினர், சென்ற ஆண்டைவிட இது 37 சதவீதம் அதிகரிப்பாகும். சீனாவின் வட கிழக்கு மாகாணங்களுக்கு சைபீரியாவிலிருந்து ஒரு குழாய் இணைப்பை கட்டி பெய்ஜிங்கின் எண்ணெய் ஏற்றுமதிகளுக்கு உதவுமாறு ரஷ்யாவை சீனா வலியுறுத்தி வருகிறது.

பொருளாதார இணைப்புகளோடு, சீனாவும் ரஷ்யாவும் தங்களது இராணுவ உறவுகளையும் வலுப்படுத்தி வருகின்றன. முதல் தடவையாக இரண்டு நாடுகளும் கலந்து கொள்ளும் கூட்டு இராணுவ பயிற்சிக்கு 80,000 துருப்புக்களோடு நடத்துவதற்கு இரண்டு நாடுகளும் முன்னேற்பாடுகளை செய்து வருகின்றன. ரஷ்யா போர்க்கப்பல்களையும், தரைப்படைகளையும் நீண்ட தொலைவு சென்று குண்டு வீசும் விமானங்களையும் அனுப்பக் கருதியிருக்கிறது. இரண்டு தரப்புமே இந்த பயிற்சி எந்த நாட்டையும் நோக்கமாக கொண்டு நடத்தப்படவில்லை என்று கூறிவந்தாலும், 2001 முதல் அமெரிக்காவின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் வெடித்துச் சிதறியிருப்பதற்கும், உலக அரசியலில் பெருகிவரும் நிச்சயமற்ற தன்மைகளுக்கு பதிலளிக்கும் வகையிலும் இந்த பயிற்சிகள் நடத்தப்படுகின்றன என்பதில் சந்தேகத்திற்கு இடமில்லை.

Top of page