World Socialist Web Site www.wsws.org |
WSWS :Tamil: செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : ஆப்கானிஸ்தான்US military reprisal in Afghanistan kills 17 civiliansஆப்கானிஸ்தானில் அமெரிக்க இராணுவத்தின் பதிலடி 17 சிவிலியன்களைக் கொன்றது By Peter Symonds பழிவாங்கும் ஒரு இரத்தக்களரி நடவடிக்கையாக, சென்ற ஞாயிறன்று அமெரிக்க இராணுவத்தால் வடகிழக்கு ஆப்கான் மாகாணமான குனாறில் உள்ள தொலைதூர செக்கால் கிராமத்தில் நடத்திய ஒரு விமானப்படை தாக்குதலால் 17 சிவிலியன்கள் கொல்லப்பட்டனர். அதற்கு நான்கு நாட்களுக்கு முன்னர், ஒரு அமெரிக்க Chinook ஹெலிகாப்டர் சுட்டு வீழ்த்தப்பட்ட இடத்திலிருந்து ஐந்து கிலோ மீட்டருக்கு அப்பால் இந்தத் தாக்குதல் நடைபெற்றது, அப்போது 16 அமெரிக்க சிறப்புப் படை வீரர்கள் மடிந்தனர்----2001-ல் அந்த நாட்டின் மீது அமெரிக்கா தலைமையில் படையெடுப்பு நடத்தப்பட்ட பின்னர், இது மிகப்பெருமளவில் அமெரிக்க போர்வீரர்களை ஒரே தாக்குதலில் இழந்த சம்பவமாகும். அமெரிக்க கடற்படை SEAL பிரிவை சார்ந்த ஒரு நான்கு உறுப்பினர் வேவுபார்க்கும் குழு, அமெரிக்க-எதிர்ப்பு போர்வீரர்களால் கடுமையான தாக்குதலுக்கு இலக்கானது, அவர்களை மீட்பதற்காக அமெரிக்க துருப்புக்கள் அனுப்பப்பட்டது. அவர்களில் காயமடைந்த ஒருவர் சனிக்கிழமையன்று கண்டுபிடிக்கப்பட்டார் மற்றும் வேறு இருவரது உடல்கள் திங்களன்று கண்டுபிடிக்கப்பட்டன. மிச்சமுள்ள அந்த குழு உறுப்பினர்களையும் கண்டுபிடிப்பதற்காக அமெரிக்க மற்றும் ஆப்கான் அரசாங்கத் துருப்புக்கள் இன்னும் பாரியளவு நடவடிக்கையில் அப்பகுதியில் ஈடுபட்டுள்ளன. ஞாயிறன்று நடைபெற்ற விமானப்படை தாக்குதல் தொடர்பாக சில விவரங்கள்தான் கிடைத்திருக்கின்றன. ஆரம்ப விமானத்தாக்குதல் செக்காலுள்ள ஒரு வீட்டு சுற்றுச் சுவரை அழித்துவிட்டதாக குனார் மாகாண கவர்னர் அப்துல்லா வாப்பா கூறினார். அந்த சேதத்தை பார்ப்பதற்கு கிராம மக்கள் திரண்டு வந்திருந்தபோது, அதே இடத்தின் மீது அந்த அமெரிக்க போர் விமானம் இரண்டாவது குண்டை வீசியது. வாபா தந்துள்ள தகவலின்படி, பெண்கள் குழந்தைகள் உட்பட குறைந்தபட்சம் 17 சிவிலியன்கள் கொல்லப்பட்டனர். அந்தச் சுற்றுச் சுவரை இயக்கக் கட்டுப்பாட்டு குண்டுகள் மூலம் ஒரு B-52 குண்டு வீச்சு விமானம் தாக்கியதாக அமெரிக்க இராணுவம் ஒப்புக்கொண்டிருக்கிறது. பென்டகன் பேச்சாளியான லோரன்ஸ்-டி-ரீட்டா சிவிலியன்கள் மடிந்துவிட்டார்கள் என்பதை உறுதிப்படுத்தினார், அந்த சம்பவத்தை அவர் சர்வசாதாரணமாக தள்ளுபடி செய்தார். "அது தெளிவாக ஒரு எதிர்பாராத சம்பவமாகும். அது, பயங்கரவாத-எதிர் நடவடிக்கை சூழ்நிலையில் நடைபெற்றது.... இந்த சம்பவங்கள் நடைபெறுகின்றன. மற்றும் அவை நடைபெறும்போது நாங்கள் தெளிவாக வருந்துகிறோம்," என்று அவர் அறிவித்தார். "பயங்கரவாத தாக்குதல்களுக்கு ஒரு செயல்பாட்டுத் தளம் என்று தெரிந்து'' ஒரு சுற்றுச்சுவர் குறிவைக்கப்பட்டதாக ஒரு அமெரிக்க இராணுவ அறிக்கை குறிப்பிட்டது மற்றும் "அது ஒரு இடை-மட்ட பயங்கரவாத தலைவரது தளமாகும், ஆனால் அதற்கு எந்தச் சான்றையும் தரவில்லை. அதன் விளைபயன் என்னவென்றால், இறந்தவர்கள் "பயங்கரவாதிகளின்" குடும்ப உறுப்பினர்கள் அவர்களுக்கு சரியான தண்டனை கிடைத்தது: "எதிரி படைகள் தங்களது குடும்பங்களை தாங்கள் பயங்கரவாத நடவடிக்கைகளை நடத்துகின்ற பகுதிகளுக்கு கொண்டு வருவார்களானால், அந்த அப்பாவி சிவிலியன்களை ஆபத்தில் அவர்கள் தள்ளுகிறார்கள் என்பதாகும்." ஈராக்கிலும் அதேபோல் ஆப்கனிஸ்தானிலும் சிவிலியன் மரணங்களை வழக்கமாக உறுதிபடுத்தாத நிலையில், அத்தகைய ஆதாரமற்ற அறிக்கைகளை வெளியிடுவது அமெரிக்க இராணுவத்தின் வழக்கம். செக்காலைப்போல், அவை நேரில் கண்டவர்களது சாட்சியத்திற்கு முரணாக அமைந்திருப்பது வழக்கம். இப்போது நடைபெற்றுள்ள அட்டூழியம் சட்டென்று நமது கவனத்திற்கு வருவதற்கு காரணம் அது நடத்தப்பட்ட நேரம்: Chinook ஹெலிகாப்டர் சுட்டு வீழ்த்தப்பட்டு சில தினங்களுக்குள் நடந்திருக்கிறது, உள்ளூர் மக்களையும் அமெரிக்க எதிர்ப்பு கிளர்ச்சிக்காரர்களையும் பழிவாங்கும் ஒரு நோக்கில் அமெரிக்க இராணுவம் திருப்பித் தாக்கியது. காபூலில் உள்ள வாஷிங்டனின் பொம்மையாட்சி ஜனாதிபதி ஹமீத் கர்சாய் தலைமையில் நடைபெறுவது ஒரு அபூர்வமான சம்பவமாக கண்டன அறிக்கையை வெளியிடுகின்ற அளவிற்கு அப்பட்டமாக அந்தத் தாக்குதல் நடைபெற்றிருக்கிறது. குனார் மாகாணத்தில் நடைபெற்ற சாவுகள் குறித்து ஜனாதிபதி "மிகவும் கவலையடைந்துள்ளார் மற்றும் கலவரம் அடைந்துள்ளார்" மற்றும் எந்தச் சூழ்நிலையிலும் அத்தகைய ஒரு சாவு, நியாயப்படுத்த முடியாதது என்று செவ்வாய்க்கிழமையன்று, கர்சாயின் பேச்சாளர் ஜாவித் லூ டின் அறிவித்தார். "பயங்கரவாதிகள் மக்களை கொல்கிறார்கள், மசூதிகளை மற்றும் பள்ளிக்கூடங்களை அழிக்கிறார்கள் என்பதை நாம் அறிவோம், ஆனால் மக்களை கொல்வது அல்லது அவர்களுக்கு தீங்கு செய்யாதிருப்பதில் நாம் கவனமாக இருக்க வேண்டும். அப்படி நடந்தது ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல" என்று அவர் கூறினார். இதில் கர்சாய் நேரடியாக உடந்தையாக செயல்பட்டிருக்கிறார் என்பதில் சந்தேகமில்லை. அவரது நிர்வாகம் இராணுவ ரீதியாகவும், நிதி ரீதியாகவும் வாஷிங்டனை சார்ந்திருக்கிறது, அது அமெரிக்க இராணுவத்திற்கு நாடு முழுவதிலும் நடவடிக்கை எடுப்பதற்கு எந்தவிதமான கட்டுப்பாடும் இல்லாத அதிகாரத்தை வழங்கியிருக்கிறது. இதன் பெரும்பாலான விளைவு சிவிலியன்கள் சிறையில் அடைக்கப்படுவது, சித்திரவதை, சாவுகள் மூடி மறைக்கப்படுகின்றன. செச்சயிலில் நடந்ததுபோல் சம்பவங்கள் அம்பலத்திற்கு வரும்போது, கர்சாய் நிர்வாகம் உள்ளூர் மக்களது ஆத்திரத்தை நீர்த்துப் போகச் செய்வதற்காக நடவடிக்கை எடுப்பதற்கு முயலுகிறது. ஆப்கான் சுதந்திர மனித உரிமைகள் கமிஷனின் ஒரு உறுப்பினரான அஹமது நாதர் நேதேரி, அரசாங்கத்தின் உண்மையான கவலையை வெளிப்படுத்தினார். "அமெரிக்கர்கள் செய்துள்ள எல்லா நல்ல பணிகளையும்" பாராட்டிய பின்னர் நாதேரி, செச்சல் போன்ற கொலைகள், "அமெரிக்காவின் பெயருக்கு சேதத்தை" ஏற்படுத்திவிடும் என்று எச்சரித்துள்ளார். மற்றும் அந்த அறிக்கையின் விளைபயன் என்னவென்றால், செப்டம்பரில் நாடாளுமன்ற தேர்தல்களை எதிர்கொள்கின்ற கர்சாய் நிர்வாகத்திற்கும் பாதிப்பு ஏற்படும். காபூலில் இருந்து கடைசியாக வெளிவந்துள்ள அதிகாரபூர்வமான ஆத்திரம், உலுத்துப்போன பழைய பாணியை பின்பற்றுவதாக உள்ளது. எடுத்துக்காட்டாக, மேயில் அமெரிக்க இராணுவ விசாரணை அதிகாரிகள் ஆப்கான் கைதிகள் மீது நடத்திய திட்டமிட்ட சித்தரவதை பற்றிய விவரங்களை ஒரு ஊடக செய்தியறிக்கை விவரமாக தந்தது. அப்போது, அமெரிக்க சுற்றுப்பயணத்தை மேற்கொள்வதற்கு புறப்படவிருந்த கர்சாய், அந்த செய்தி அம்பலப்படுத்தியவற்றால் தான், "முழுமையாக அதிர்ச்சியுற்றதாக" அறிவித்தார். "ஆப்கனிஸ்தானுக்குள் எந்த நடவடிக்கையும் ஆப்கான் அரசாங்கத்தை கலந்தாலோசிக்காமல் எடுக்கப்படக் கூடாது" என்று தாம் கோரப்போவதாகவும் அவர் அறிவித்தார். அப்போது புஷ் மறுத்தார், கர்சாய் ஒன்றும் சொல்லவில்லை. செச்சலில் நடைபெற்ற கொலைகளை முழுமாயாக விசாரிக்கப்போவதாக அவர் கடைசியாக தந்துள்ள உறுதிமொழிகளும் அதே வழியில்தான் செல்லும் என்பதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை. 2001 முதல், அமெரிக்க இராணுவ நடவடிக்கைகள் ஆப்கன் மக்களிடையே எதிர்ப்பு உணர்வையும், வெறுப்பையும், விரோதபோக்கையும் உண்டுபண்ணியுள்ளது, குறிப்பாக நாட்டின் கிழக்கு மற்றும் தெற்கு பகுதியிலுள்ள பட்டாணிய இனத்தவர் வாழ்கின்ற பகுதிகளில் ஆகும். சென்றவாரம் ஒரு துணை சட்ட பேராசிரியர் செயது அசத்துல்லா ஹாசிமி நியூயோர்க் டைம்சிற்கு தந்துள்ள கருத்தில்: "காபூலுக்கு வெளியில், மக்களில் மூன்றில் இரண்டு பங்கைச் சேர்ந்தவர்கள் அமெரிக்கர்கள், ஆப்கானிஸ்தான் மீது படையெடுத்து அதை பிடித்துக்கொள்வதற்காக வந்தார்கள், என்று கருதுகின்றனர், எனவே தான் நாளுக்கு நாள் பதட்டங்கள் வளர்ந்து கொண்டிருக்கிறது. நிலைமை மோசமடைந்து வருகிறது" என்று குறிப்பிட்டார். ஆப்கான் சுதந்திர மனித உரிமைகள் கமிஷனின் தலைவரான ஜன்தாத் ஸ்பிங்கர் தெளிவாக அமெரிக்க ஆக்கிரமிப்பை ஆதரித்து நின்றாலும், வளர்ந்து வரும் எதிர்ப்பு குறித்து கவலை தெரிவித்தார். அவர் அந்த செய்தி பத்திரிகையிடம் கூறினார்: "மூன்று ஆண்டுகள் ஆகிவிட்டன, இன்னமும் மக்கள் தாங்கள் எதிர்பார்த்த காரியங்கள் நடக்கும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர், ஆனால் அவர்கள், ஏன் அமெரிக்கர்கள் வந்தார்கள்? ஏன் அமெரிக்கர்கள் உள்ளூர் மக்களை மோசமாக நடத்துகிறார்கள் என்று சந்தேகிக்கத் தொடங்கிவிட்டனர்." அமெரிக்கா மற்றும் கூட்டணி படைகள் மீது நடத்தப்பட்டுவரும் தாக்குதல்கள் அதிகரித்து வருவது அமெரிக்க-எதிர்ப்பு உணர்வை உயர்த்துவதை வெளிப்படுத்துகிறது. ஏப்ரலில், ஆப்கானிஸ்தானில் முன்னாள் அமெரிக்க இராணுவ தளபதியாக பணியாற்றிவந்த லெப்டினட் ஜெனரல் டேவிட் பார்னோ ஆயுதந்தாங்கிய எதிர்ப்பு ''தாலிபானில் மிச்சமிருக்கும் ஒரு சிறிய தீவிரவாதக் குழுவின் செயல்'' என்று குறிப்பிட்டார். என்றாலும், அதற்கு பின்னர் திடீரென்று சண்டை பெரியளவில் தீவிரமடைந்துவிட்டது. கடந்த மூன்று மாதங்களில் அமெரிக்க இராணுவத்தில் 45-க்கு மேற்பட்ட இராணுவ வீரர்கள் பலியாகி இருக்கின்றனர் மற்றும் 450-க்கு மேற்பட்ட ''எதிரி'' போர்வீரர்களை கொன்றுவிட்டதாக அமெரிக்க இராணுவம் கூறியது. செச்சல் கிராமத்தில் நடைபெற்ற விமானப்படை தாக்குதல் எடுத்துக்காட்டியிருப்பது என்னவென்றால், ஈராக்கில் அது கடைப்பிடித்த அதே வழியில் ஆப்கானிஸ்தானிலும் இராணுவ சவாலுக்கு பென்டகன் பதிலடி கொடுக்கிறது: ஒடுக்குமுறை, கைதுகள் செய்வது, மற்றும் ஆப்கான் மக்களை அடிபணியச் செய்வதற்கு பயமுறுத்தும் நோக்கில் பதிலடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. |