World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ்

France: Chirac TV appeal for "yes" vote fails to shift growing sentiment against European constitution

பிரான்ஸ்: ஐரோப்பிய அரசியலமைப்பிற்கு எதிராக பெருகிவரும் உணர்வை மாற்ற சிராக் தொலைக்காட்சி மூலம் "வேண்டும்" என்று வாக்களிக்கக் கோரியது தோல்வியை தழுவுகிறது

By Pierre Mabut
19 April 2005

Back to screen version

மே 29-ம் தேதியன்று ஐரோப்பிய அரசியலமைப்பு பற்றிய வாக்கெடுப்பிற்கு "வேண்டும்" என்ற தன் பிரச்சாரத்திற்கு ஏற்பட்டுள்ள தொய்வை மாற்றும் வகையில் வியாழன் இரவு பிரெஞ்சு ஜனாதிபதி சிராக் தொலைக்காட்சியில் உரையாற்றினார். ஒரு பழமைவாத கூட்டணி அரசாங்கத்திற்கு தலைமை தாங்கும் சிராக்கும், சோசலிஸ்ட் கட்சியில் உள்ள அவருடைய கூட்டாளிகளும் அரசியலமைப்பிற்கு எதிராகப் பெருகிவரும் நிலைக்குப் பெருந்திகைப்புடன் விடைகாண முற்பட்டுள்ளனர். கடந்த 14 கருத்துக்கணிப்புக்களிலும் "வேண்டாம்" பிரச்சாரத்திற்கு 7 முதல் 9 புள்ளிகள் வரை முன்னிலையை கொடுத்துள்ளன.

ஆயினும், சிராக்கின் உரை நிகழ்ச்சி நம்பகத்தன்மையை கொண்டிருக்கவில்லை எனத் தோன்றியது. சனிக்கிழமை அன்று வெளிவந்த புதிய கருத்துக்கணிப்புக்கள் சிராக்கின் உரைக்குப் பின்னர் "வேண்டாம்" கருத்திற்கு கூடுதலான ஆதரவை தெரிவித்துள்ளன. CSA, IFOP என்ற இரு முக்கிய கருத்துக்கணிப்பு நிறுவனங்கள் 56 சதவிகிதம் "வேண்டாம்" கருத்து வெளிவந்துள்ளதை கூறுகின்றன. CSAஐப் பொறுத்தவரை இது 1 சதவிகிதம் கூடுதலாகும். IFDPஐப் பொறுத்தவரை 3 சதவிகிதம் அதிகமாகும். கேள்வி கேட்கப்பட்டவர்களில் 44சதவிகிதத்தினர்தான் அரசியலமைப்பிற்கு ஆதரவாக வாக்களிப்பதாகத் தெரிவித்துள்ளனர்.

சிராக்கின் மகள் கிளோத் TFI தனியார் நிறுவனத்துடன் இணைத்து திட்டமிட்டு வந்த உரையாடல் நிகழ்ச்சி ஏற்கனவே பூசல்களை ஏற்படுத்திவிட்டது; ஏனெனில் அழைப்பு விடுக்கப்பட்டிருந்த 83 இளைஞர்களும் நெருக்கமாக கவனமாய் விசாரிக்கப்பட்டிருந்தனர். ஆயினும், நிகழ்ச்சி சிராக்கின் நெருங்கிய ஆதரவாளர்களின் கண்ணோட்டத்தில் கூட அது ஒரு பெரும் சங்கடத்தில்தான் முடிந்தது.

குழுமியிருந்த இளைஞர்களின் சமூக மற்றும் அரசியல் உணர்வுகளை புரிந்து கொள்ளவோ அல்லது அவற்றிற்குப் பதிலாக பதிலளிக்கவோ கூட ஜனாதிபதியால் முடியவில்லை எனத் தோன்றியது. "உரையாடல்" போல் இருக்க வேண்டும் என்று திட்டமிடப்பட்டிருந்தாலும், "வேண்டும்" வாக்கிற்கு ஆதரவாக சிராக் கொடுத்த விளக்கங்கள் "வேண்டாம்" பிரச்சாரம் வெற்றி பெற்றால் ஏற்படக்கூடிய தீய விளைவுகளைப்பற்றி வலியுறுத்திய ஒருதலைப்பேச்சாகத்தான் போயிற்று. சமூக, ஜனநாயக உரிமைகள் மீது ஐரோப்பிய அரசியலமைப்பின் தாக்கம் எவ்வாறு இருக்கும் என்பதை மையமாக பெரும்பாலான கேள்விகள் எழுப்பப்பட்டபோதிலும் உலகில் பிரான்சின் வலிமை பற்றிய பெரும் உபதேச உரையாகத்தான் சிராக் பேசியது அமைந்தது.

அரசியலமைப்பு நிராகரிக்கப்பட்டுவிட்டால், பிரான்ஸ் "கணிசமாக வலுவிழந்துவிடும்" என்று அவர் கூறினார். "அனைத்தையும் தடைக்கு உட்படுத்திவிட்ட கறுப்பு ஆடாக" அது ஐரோப்பாவிற்கு இருந்துவரும் என்றும் தெரிவித்தார். ஐரோப்பிய அரசியலமைப்பிற்கு எதிர்த்து வாக்களிக்கும் வகையில், "நீங்கள் எந்தப் பிரச்சனைக்கும் முடிவு காணமாட்டீர்கள்; ஆனால் பிரான்சின் குரலை பெருமளவு குறைத்துவிடவும், தன்னுடைய நலன்களை காப்பதில் பிரான்சின் திறமையையும் குறைத்துவிடுவீர்கள்" என்று சிராக் மேலும் அறிவுறுத்தினார்.

ஒப்பந்தத்தின் தாராளத்தன்மை (அதாவது, "தடையற்ற சந்தை" என்ற பொருளில்) பற்றிய வினாக்களுக்கு விடை கூறுகையில் மறைந்த போப்பின் கோஷமான "அச்சப்பட வேண்டாம்" என்பதை ஜனாதிபதி பலமுறை மேற்கோளிட்டார். "அதி தாராளவாத நீரோட்டத்தால் தக்கவைக்கப்படும் பூகோளமயமாக்கல், பிரெஞ்சு மக்களுக்கு கவலை கொடுக்கிறது" என்பதை ஒப்புக்கொண்டாலும், "அத்தகைய வளர்ச்சியை எதிர்ப்பதற்கு ஐரோப்பா வலிமையுடன் கட்டமைக்கப்பட வேண்டும். ... ஐரோப்பாவின் இதயத்தானத்தில் நாம் கொண்டுள்ள அரசியல் அதிகாரம்தான் நம்முடைய நலன்களைக் காக்க உதவுகிறது" என்று அவர் வாதிட்டார்.

ஒரு வலிமையான ஐரோப்பா வேண்டும் என்ற அவருடைய தற்காப்பு வாதம் மற்ற நாடுகளுக்கு எதிரான இயக்கத்தைக் கொண்டுள்ளது. சீனாவைப்பற்றிப் பேசுகையில் அவர் குறிப்பிட்டார்: "சீன ஜவுளிகள் திடீரென்று ஏற்கமுடியாத வகையில் ஐரோப்பியச் சந்தைக்குள் வந்துள்ளது விரைவில் ஐரோப்பிய ஒன்றியத்தால் அறிவிக்கப்பட இருக்கும் பாதுகாப்பு விதிகளுக்கு உட்பட்டு இருக்கும். வலது தீவிரப் பிரச்சாரமான "வேண்டாம்" வாக்கின் குவிமைய புள்ளியாக ஆகியிருக்கிற, ஐரோப்பிய ஒன்றியத்தில் சேர துருக்கி கொண்டுள்ள விருப்பம் பற்றிப் பேசுகையில், சிராக், "துருக்கியில் உள்ள மதிப்பீடுகள், வாழ்க்கை முறை, அரசியல் நடைமுறை ஆகியவை நம்முடைய மதிப்பீடுகளுடன் இயைந்து நிற்காததன்மை உடையவை" என்றார்.

வாக்காளர்களை மிரட்டும் தோரணையில், "வேண்டாம்" பிரச்சாரம் வெற்றி பெற்றால், அரசியலமைப்பு மறு பேச்சுவார்த்தைகளுக்கு உட்பட்டதல்ல என்று சிராக் தெளிவுபடுத்தினார். இந்த வாக்கெடுப்பு அரசாங்கத்தை பற்றிய மதிப்பீடாக மக்கள் கருதி நடந்து அவருக்கு விரோதமாக போயிற்று என்றால், அவர்களுக்கு ஏமாற்றம்தான் மிஞ்சும் என்று அவர் கூறினார். தான் ராஜினாமா செய்ய மாட்டேன் என்றும் அவர் தெரிவித்தார்.

சிராக்கின் பிறநாட்டு பழிப்பு யூரோவாதப் பிதற்றல்கள் அவரைக் கேட்டவர்களுக்கு களிப்பு எதையும் கொடுத்துவிடவில்லை. Le Monde ஏட்டின்படி, சிராக்கின் கட்சியான UMP (Union for a People's Movement) ன் பாராளுமன்றப் பிரதிநிதிகளே, வெள்ளியன்று தங்கள் தொகுதிகளுக்கு திரும்பியபின் நாட்டு தலைவருடைய உரை எவரையும் ஈர்க்கவில்லை என்பதை ஒப்புக்கொண்டனர். இவர்களில் ஒருவர், "மக்கள் கருத்தைப் பிரதிபலித்த முறையில் இளைஞர் குழு நன்றாகவே இருந்தது. அனைவரும் கேட்கும் வினாக்களைத்தான் அவர்களும் எழுப்பினர்; ஆனால் ஜனாதிபதி உருப்படியான முறையில் அவர்களுக்கு பதில் கூறவில்லை. நிலத்தில் ஊன்றிய கால்களுடன் இல்லாமல், சர்வதேச அரசியல் பற்றித்தான் அவர் விரிவுரை ஆற்றினார். தங்கள் கருத்து செவிமடுக்கப்படவில்லை என்றுதான் மக்கள் உணர்ந்துள்ளனர்" எனக் கூறியதாக அந் நாளேடு குறிப்பிட்டுள்ளது.

அழைப்பு கொடுக்கப்பட்டு இருந்த இளைஞர்களுக்கு அரசியலமைப்பின் பிரதி வழங்கப்பட்டது என்றாலும், அவர்களில் பெரும்பாலானவர்கள் அது படிக்க, புரிந்து கொள்ள முடியாததாக இருந்தது என்று ஒப்புக்கொண்டனர். ஒரு 480 பக்க ஒப்பந்தத்தை படித்து அதன் அடிப்படையில் மக்கள் எவ்வாறு முடிவை எடுக்க முடியும்? பிரான்சிலோ, அமெரிக்காவிலோ இருப்பதுபோல் 20 பக்கங்கள் கொண்ட பத்திரம் ஏன் தயாரிக்கப்பட முடியவில்லை?

ஐரோப்பிய அரசியலமைப்பிற்கு பெருகிவரும் எதிர்ப்பு ஜனநாயக சமுதாய அக்கறைகளாலும் எரியூட்டப்படுகிறது என்பது வியாழன் தொலைக்காட்சியின் மூலம் நன்கு அடிக்கோடிட்டு காட்டப்பட்டுள்ளது. ஜோன் மரி லூபென்னின் தேசியமுன்னணி, சார்ல் பாஸ்குவா இன் பிரான்சுக்கான ஜக்கியம் (Rassemblement Pour La France), சிராக்கின் ஆட்சி செலுத்தும் UMP யிலேயே சில பிரிவுகள் என்று வலதுசாரியினர் குறுகிய தேசிய வெறியில் அரசியல் அமைப்பை எதிர்க்கின்றனர் என்றால், பரந்த முறையிலுள்ள மக்கள் எதிர்ப்பு "தடையற்ற சந்தை கொள்கைகள்", அரசியலமைப்பில் இருப்பதின் பாதிப்பு சமூகத்தில் எப்படி தீமைகளை விளைவிக்குமோ என்ற பயத்திலும், ஜனநாயக உரிமைகள் மீதும் அவற்றின் பாதிப்பு எப்படி இருக்குமோ என்ற அச்சத்தாலும் மேலாதிக்கம் செய்கிறது. சிராக்கினால் நியமிக்கப்பட்ட ஜோன் பியர் ரப்பரன் பிரதம மந்திரியின் அரசாங்கத்தின் பொருளாதாரக் கொள்கைகளுக்குக் காட்டப்படும் எதிர்ப்பு, மற்றும் எல்லாவற்றையும்விட கூடுதலான முறையில் பெருகிவரும் வேலையின்மை (ஏற்கனவே இளைஞர்களில் 20 சதவிகிதம் என்று உள்ளது) பற்றிய கோபம், மற்றும் தொழிற்சாலைகள் வேறு இடங்களுக்கு மாற்றப்படலாம் என்ற பயம் ஆகியவை, கருத்தெடுப்பின்போது "வேண்டாம்" வாக்கை பதிவு செய்யலாம் என்ற உணர்விற்குப் பெருகிய முறையில் குவிப்பைக் கொடுத்துள்ளன.

இந்தச் சூழ்நிலையில் தன்னுடைய "வேண்டும்" வாக்குப்பதிவு பிரச்சாரத்திற்காக, சிராக் மிகப்பெரிய வகையில் அதிகாரபூர்வமான இடது கட்சிகளை நம்பியிருக்கிறார். பிரெஞ்சு சோசலிசக் கட்சியின் முக்கிய உறுப்பினர்களும், ஜேர்மன் சமூக ஜனநாயகவாதிளும் ஐரோப்பிய பாராளுமன்றத்தில் பசுமைகளின் தலைவராக இருக்கும் Daniel Cohn-Bendit ம் சிராக்கிற்காக தீவிர பிரச்சாரம் செய்து வருகின்றனர். 2002 ஜனாதிபதி தேர்தல் இரண்டாம் சுற்றில் சிராக்கிற்கு ஆதரவான பெரும் பிரச்சார முயற்சி இடதினால் மேற்கொள்ளப்பட்டதை இது வியத்தகு முறையில் நினைவுபடுத்துகிறது; அப்பொழுது இடதுகள் சிராக்கை எதிர்த்து நின்ற தேசிய முன்னணித் தலைவர் லூ பென் தோற்கடிக்கப்பட வேண்டும் என்ற பெயரில் அவ்வாறு செய்திருந்தனர்.

ஏப்ரல் 11-ம் தேதி F2 பொதுத்தொலைக்காட்சி அலைவரிசை நடத்திய கருத்தெடுப்பு மீதான தொலைக்காட்சி விவாதத்தில் "வேண்டும்" முகாமைச்சேர்ந்த சோசலிஸ்ட் கட்சியின் முக்கிய உறுப்பினரான Pierre Moscovic (1997ம் ஆண்டு லியோனல் ஜொஸ்பனுடைய பன்முக இடது அரசாங்கத்தில் ஐரோப்பியத்துறை அமைச்சராக இருந்தவர்) ஐ பங்குபெறச் செய்தது; அவர் இந்த அரசியலமைப்பை ஒரு சமூக ஐரோப்பாவிற்கும் "தாராண்மைவாத" ஐரோப்பாவிற்கும் இடையே ஏற்பட்டுள்ள சமரச உடன்பாடு என்று வலியுறுத்திக் கூறினார்.

"ஒரு பெரும் போட்டி நிறைந்த பொருளாதாரச் சந்தை,... தடையற்ற நியாயமான போட்டி... முழு வேலை நிலை, சமுதாய முன்னேற்றம்" ஆகியவற்றிற்கு வழிவகுக்கும் முறையில் அரசியலமைப்பு இருப்பதாக Moscovici பாராட்டிப் புகழ்ந்தார்; அது "ஏக போக உரிமைக்கு" எதிராகச் செயல்படும் தன்மையைக் கொண்டுள்ளது என்றும் அவர் கூறினார். ஆவணத்தில் சமூகக் கூறுபாடுகள் பற்றி அதிகம் கூறப்படாவிட்டாலும், இது முன்னேற்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தன்மை உடையது என்று அவர் வாதிட்டார். ஐரோப்பிய வணிக கூட்டமைப்பு "வேண்டும்" வாக்கிற்கு அழைப்பு விடுத்துள்ளதைச் சுட்டிக்காட்டி அரசியல் அமைப்பு ஒப்பந்தத்தை ஆதரிப்பவர்களுடைய நல்லெண்ணங்களுக்கு இது தக்க சான்று ஆகும் என்று கூறினார்.

இதே அரங்கில் பேசிய சமூக ஜனநாயகக் கட்சியின் உறுப்பினராக ஐரோப்பிய பாராளுமன்றத்தில் இருக்கும் Jo Leinen, தேசிய முன்னணியின் நடைமுறைத் தலைவியும் ஜோன் மேரி லூ பென்னின் மகளுமான மாரின் லூ பென் (Marine Le Pen) ஐ சமாதானப்படுத்தும் வகையில் பேசினார். அப்பெண்மணி புதிய அரசியலமைப்பு பிரான்ஸ் நாட்டை ஆபத்திற்கு உட்படுத்திவிடும் என்றும் "வேண்டாம்" வாக்கு பதிவு செய்யப்பட வேண்டும் என்றும் வாதிட்டார். அரசியல் அமைப்பில் முதல் விதியே நாட்டின் அடையாளத்தை வலியுறுத்திப் பேசுவதால் எந்த "ஆபத்தும்" ஏற்பட வாய்ப்பில்லை என்று Leinen உறுதி அளித்து பேசினார்.

"வேண்டும்" வாக்கிற்காக இவர் வாதிட்டது, சிராக்கின் வாதத்தின் போக்கையேதான் கொண்டிருந்தது. "வேண்டாம்" வாக்குப்பதிவு என்பது வலிமை குன்றிய ஐரோப்பாவிற்கு வகை செய்யும் என்றும், அமெரிக்கா, சீனா இவற்றிற்கு இணையான வலிமையைக் கொள்வதில் கால இழப்பு ஏற்பட்டுவிடும் என்றும் கூறினார். இதே மந்திரத்தைத் தான் Muscovici யும் கூறினார். "வேண்டாம்" என்ற வாக்குப்பதிவின் பொருள் வலிமை இழந்த பிரான்ஸ், "செயல்தன்மை" அற்ற ஐரோப்பா இவற்றை ஏற்படுத்தும் என்றும் அவர் கூறினார்.

புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் (LCR) உடைய செய்தித் தொடர்பாளரான ஒலிவியே பெசன்சனோ ம் இக்கூட்டத்தில் பங்கு பெற்று "வேண்டாம்" என வாக்குப்பதிவு செய்யுமாறு அழைப்பு விடுத்தார்.

2002 ஜனாதிபதி தேர்தலில் கிட்டத்தட்ட முழு இடதும், சோசலிஸ்ட் கட்சியில் இருந்து LCR வரை அனைத்தும் சிராக்கிற்குப்பின் அணிவகுத்து நின்றது போலன்றி, இம்முறை ஐரோப்பிய அரசியலமைப்பை எதிர்த்து கணிசமான இடது பிரிவினர் உள்ளனர். இதில் சோசலிஸ்ட் கட்சியில் (SP) ஒரு சிறுபிரிவு, MRC எனப்படும் ஜோன் பியர் செவனுமொனின் மக்கள் இயக்கம், (CPF)கம்யூனிஸ்ட் கட்சி, LCR ஆகியவை உள்ளன.

சிராக் தொலைக்காட்சியில் தோன்றிய நேரத்திலேயே இந்த அமைப்புகள் பாரிசில் உள்ள Zenith Hall-ல் ஒரு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தனர்; இதற்கு 5000பேர் வந்திருந்தனர். ஜோன் லுக் மெலொன்சோன்(PS), கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் ஜோர்ஜ் பஃபே, பசுமைக்கட்சியின் பிரான்சின் பாவே (Francine Bavay), விசிஸி அமைப்பின் ஜோர்ஜ் சாரே, LCR-ல் இருந்து ஒலிவியே பெசன்செனோ, மற்றும் முற்போக்கு விவசாயிகள் தலைவர் ஜேசே போவே ஆகியோர் ஒரே மேடையிலிருந்து உரையாற்றினர்.

இந்தக் கட்சிகள் மற்றும் நபர்களின் பெரும்பான்மை பிரெஞ்சுக் குட்டி முதலாளித்துவ ஒழுங்கின் அனுபவம் நிறைந்த தூண்களாவர். பிரான்சுவா மித்ரோன், லியோனல் ஜொஸ்பன் ஆகியோரின் தலைமையில் தொடர்ச்சியாக சோசலிஸ்ட் கட்சி அரசாங்கங்கள் தொழிலாள வர்க்கத்தின் மீது தாக்குதல்களை நடத்தி, சிராக்கின் தலைமையிலான பழமைவாத வலது ஆட்சிக்கு வழிவகுத்தவை ஆகும். இந்த இடது மற்றும் "தீவிர இடதுக்" குழுக்களின் முக்கிய அக்கறையே ஐரோப்பிய அரசியலமைப்பிற்கான சமூக எதிர்ப்பு எரியூட்டப்பட்டு, சுதந்திரமான தொழிலாள வர்க்க வடிவமைப்பு பெறுதலை, அதன்மூலம் பிரான்சில் முதலாளித்துவ ஆட்சிக்கு அச்சுறுத்தலை அளிப்பதைத் தடுத்துவிடுவதே ஆகும்.

சோசலிஸ்ட் கட்சியின் "இறையாண்மை" பிரிவு என அழைக்கப்டும் பிரிவில் இருந்து வந்த MCR-க்கு எல்லா அரசியல் பிரச்சனைகளையும் விட பிரான்சின் இறையாண்மை என்பது முன்னுரிமை கொண்டது என்ற கருத்து ஆகும். இதே போல்தான் பிரெஞ்சு தேசிய உணர்வைத் தூண்டுவதில் பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒரு நீண்டகால வரலாறு உள்ளது. சோசலிஸ்ட் கட்சி தலைமையிலான அரசாங்கங்களில் அது பல ஆண்டுகள் அதிகாரத்தைப் பகிர்ந்து கொண்டுள்ளது.

"வேண்டாம்" வாக்குப்பதிவு முகாமின்போது கட்டுப்பாட்டை நிலைநிறுத்திக் கொள்ளுவதற்காக, தங்களுடைய அரசியல் வேறுபாடுகளைத் தற்காலிகமாக கைவிட்டுவிட்டு இக்கட்சிகள் ஒன்றாக வந்துள்ளன. Zenith Hall கூட்டத்தில் Mélenchon தன்னுடைய கட்சியிலேயே அதிருப்தியாளர்களாக உள்ள முன்னாள் பிரதம மந்திரியும், சோசலிசக் கட்சியின் அளவுகோலிலேயே இழிவான வலதாகவும் இருக்கும் Laurent Fabius போன்றவர்கள் கூட்டத்திற்கு வராதது பற்றி வருந்தினார்.

இந்த கொள்கையற்ற மற்றும் அடிப்படையிலேயே பிற்போக்குத்தனமான கூட்டை வருங்கால இடதுசாரி கட்சிக்கு அடிப்படை என்று கூறும் பொறுப்பை பெசன்செனொ (Besantcenot) பெற்றார். மே 29-ம் தேதி "வேண்டாம்" முகாமிற்கு வெற்றி கொடுத்தால், அது சக்திகளின் உறவுகளுக்கு ஒரு புதுத்தன்மை அளித்து "இடதுக்கு 100 சதவிகிதம் இடதாக" வளரும் வாய்ப்பு உண்டு என்று அவர் குறிப்பிட்டார்.

உண்மையில் அது அப்படிப்பட்ட நிலையை ஒரு போதும் ஏற்படுத்தாது. ஐரோப்பிய அரசியல் அமைப்பு, ஐரோப்பாவில் உள்ள சக்தி வாய்ந்த பெரு வணிக நிறுவனங்கள், நிதியங்கள் ஆகியவை புதிய வடிவமைப்பைக் கொண்டு ஐரோப்பியத் தொழிலாளர்களைச் சுரண்டும் முயற்சியையும் மற்றும் முக்கிய ஐரோப்பிய சக்திகளின் ஏகாதிபத்திய நலன்களையும் சர்வதேச அளவில் முன்னிலைப்படுத்தும் முயற்சியையும் பிரதிநிதித்துவப்படுத்துகிறது என்பதால் உலக சோசலிச வலைதளம் "வேண்டாம்" என்று வாக்குப்பதிவு செய்ய அழைப்பு விடுகிறது.

இருப்பினும், எமது எதிர்ப்பு ஒரு சோசலிச சர்வதேச முன்னோக்கை அடிப்படையாகக் கொண்டது; இது வலது, இடது என்று இரு புறத்திலிருந்தும் தேசியநிலைப்பாட்டில் இருந்து அரசியல் அமைப்பை எதிர்ப்பவர்களுக்கு அடிப்படையிலேயே எதிர்ப்பானதாகும்; அந்தக் கூறுபாடுகள் இப்பொழுதுள்ள முதலாளித்துவ தேசிய அரசு கட்டமைப்பிள்குள்ளேதான் சமூக நலன்களும், ஜனநாயக உரிமைகளும் காக்கப்படும் என்ற போலிக் கற்பனைக்கு ஊக்கம் கொடுக்கின்றன. முதலாளித்துவ விதிமுறைகளின் மேல் ஐரோப்பாவை ஒன்றுபடுத்த வேண்டும் என்ற ஐரோப்பிய ஆளும் செல்வந்தத் தட்டுக்களின் செயல்திட்டத்திற்கு நம்முடைய விடை அனைத்து முதலாளித்துவ அரசாங்கங்களிலிருந்தும் கட்சிகளிலிருந்தும் சுயாதீனமாக தொழிலாளர் வர்க்கத்தை ஒற்றுமைப்படுத்தி ஒன்றுதிரட்டி ஒரு ஐக்கிய ஐரோப்பிய சோசலிச அரசுகளை ஏற்படுத்த வேண்டும் என்பதேயாகும்.

"வேண்டாம்" என்ற வாக்குப்பதிவு மட்டுமே அனைத்து ஐரோப்பிய நாடுகளிலும் தொழிலாள வர்க்கம் எதிர்கொண்டிருக்கும் முக்கியப் பணியை - அதாவது முதலாளித்துவ ஒழுங்குடன் பிணைத்து வைத்துள்ள அமைப்புக்களிலிருந்து அரசியல் ரீதியாக முறித்துக்கொள்ளுவதற்கான தேவை மற்றும் உண்மையான ஜனநாயக சமத்துவ அடிப்படையில், அதாவது சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில் ஐரோப்பாவை கீழ்மட்டத்தில் இருந்து புரட்சிகரமாக மாற்றுவதற்கான போராட்டம் இவற்றை சாதித்துவிடாது.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved