World Socialist Web Site www.wsws.org |
:
செய்திகள்
ஆய்வுகள்
:
ஆசியா
:
இந்தியா
India adopts WTO patent law with Left Front support இடதுசாரி அணி ஆதரவோடு இந்தியா WTO காப்புரிமை சட்டத்தை நிறைவேற்றியது By Kranti Kumara உலக வர்த்தக அமைப்பின் (WTO) வர்த்தகம் தொடர்பான அறிவுசார் சொத்துரிமை TRIPS சட்டத்திற்கு (Trade Related Intellectual Property Rights -TRIPS) ஏற்ப இந்திய காப்புரிமை சட்டத்தை வடிவமைப்பதில் ஐக்கிய முற்போக்கு முன்னணி (UPA) அரசாங்கம், இந்திய நாடாளுமன்றத்தின் கீழ்சபையான மக்களவையில், ஸ்ராலினிஸ்டுகள் தலைமையிலான இடதுசாரி அணியினரின் ஆதரவோடு காப்புரிமை சட்டத்திருத்தத்தை நிறைவேற்றியுள்ளது. இந்த காப்புரிமை சட்டத்திருத்தம் தற்போது உணவு மருந்துப்பொருட்கள் மற்றும் விவசாயம் சார்ந்த வர்த்தக பிரிவுகளை உள்ளடக்கியதாக அமைந்திருக்கிறது, என்றாலும், காலப்போக்கில் இதர துறைகளுக்கும் விரிவுபடுத்த முடியும். 1995-ல் இந்திய அரசாங்கம் WTO-வில் இணைந்தபின்னர், TRIPS ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. வளர்முக நாடுகள் என்றழைக்கப்படும் உறுப்பு நாடுகள் தங்களது தேசிய காப்புரிமை சட்டங்களை TRIPS-ற்கு, இணையாக, இயற்றிக்கொள்ள, 10 ஆண்டுகாலம் "இடைக்கால" அவகாசம் தரப்பட்டது. 1970-ல் இயற்றப்பட்ட இந்திய காப்புரிமை சட்டத்திற்கு முன்னய இந்து மேலாதிக்கவாத பாரதீய ஜனதாக் கட்சி (BJP) மேலாதிக்கம் செலுத்திய அரசாங்கம் 1999-ல் ஒன்றும் 2002-ல் ஒன்றுமாக இரண்டு சட்டத்திருத்தங்களை நிறைவேற்றியது, அதன்மூலம் TRIPS விதிகளை முழுமையாக செயல்படுத்துவதற்குரிய அடித்தளம் தயாரிக்கப்பட்டது. 2005 ஜனவரி முதல்தேதியில் TRIPS விதிகளுக்கு ஏற்ப சட்டபூர்வமாக நாடு செயல்படுவதை உறுதி செய்வதற்கான காங்கிரஸ் தலைமையிலான UPA அரசாங்கம் ஜனாதிபதியின் அவசர சட்டம் ஒன்றை வெளியிட்டது. நாடாளுமன்றத்தின் ஒப்புதலைப் பெற்று இந்த அவசரச் சட்டத்தை இயல்பான சட்டமாக்குவதற்கு ஆறுமாதகால அவகாசம் கிடைத்தது. மார்ச் 23-ல் பகிரங்கமான விவாதம் எதுவுமில்லாமல், இந்திய நாடாளுமன்றம், இந்தியாவில் 35 ஆண்டுகளாக செயல்பட்டுவந்த காப்புரிமை சட்டத்திற்கு மூன்றாவது திருத்தத்தை நிறைவேற்றியது. பல விமர்சகர்கள், கடைசியாக நிறைவேற்றப்பட்டுள்ள திருத்த சட்டத்தை "டிரிப்ஸ் பிளஸ்" என்று பெயர் சூட்டியுள்ளனர். ஏனென்றால் இந்தத் திருத்தம் உண்மையிலேயே, WTO தேவைகளுக்கும் மேல் செல்வதாக உள்ளது. எடுத்துக்காட்டாக, ஏற்கெனவே உரிமங்கள் பதிவு செய்யப்பட்டுள்ள ஒரு மருந்து இதர நோய்களுக்கும் உடல் நிலைகளுக்கும் பயன்படுத்தப்பட்டு வருவதாக கண்டுபிடிக்கப்பட்டால், ஏற்கெனவே உள்ள உரிமத்திற்குமேல் கூடுதலாக உரிமம் பெற வகை செய்கிறது. அதன்மூலம், அந்த மருந்து தயாரிப்பு நிறுவனம், மருந்தை தயாரித்து சந்தைப்படுத்துவதற்கான பதிவு உரிமக்கட்டுப்பாடு நீடிக்கப்படுகிறது. அதேபோன்று புதிய சட்டம் TRIPS-ற்கு அப்பால் சென்று மத்திய அரசாங்கத்திற்கு தடைக்கற்களை உருவாக்குகிறது. எப்படியென்றால் பொதுச் சுகாதாரத்திற்கு அவசரத்தேவைகள் ஏற்படும்போது உரிமங்கள் பதிவு செய்யப்பட்ட மருந்துகளை உற்பத்தியாளர்கள் உற்பத்திசெய்ய மத்திய அரசாங்கம் அங்கீகாரம் அளிக்க முடியும். 1995-TM WTO உடன்படிக்கையில் இந்தியா கையெழுத்திட்டதற்கும், 2005 ஜனவரி முதல் தேதிக்குமிடையில் காப்புரிமைக்கோரி மனுச் செய்துள்ள இந்தியக் கம்பெனிகள் பல்வேறு குரோமோசோம்கள் கலந்த மருந்துகளை தயாரிப்பார்களானால், அந்த மருந்துகளுக்கு ஏற்கெனவே காப்புரிமம் பெற்றிருப்பவர்களுக்கு ஒரு "நியாயமான" ராயல்டி தருபவர்கள் மட்டுமே தொடர்ந்து தயாரிக்க முடியும். இது மிகவும் வேடிக்கையாக இருக்கிறது. ஏனென்றால், அத்தகைய மருந்துகளின் விலைகள், அரசாங்கம் உறுதியளித்திருப்பதற்கு மாறாக, மிகக் கடுமையாக உயர்ந்துவிடும். இந்த சட்ட முன்வரைவை நிறைவேற்றியிருப்பதன்மூலம், இந்திய அரசாங்கம் 1970-ல் நிறைவேற்றப்பட்ட காப்புரிமைச் சட்டத்தின் ஒரு உயிர்நாடியான தத்துவத்தை குப்பைக் கூடையில் விட்டெறிந்துவிட்டது, ஏனென்றால், மூலச் சட்டத்தில் தயாரிப்பு முறைகளுக்குத்தான், உரிமங்கள் வழங்கப்பட்டனவே தவிர தயாரிக்கப்பட்ட பொருட்களுக்கு அல்ல. பழைய சட்டப்படி இதர நாடுகளில் தயாரிக்கப்படும் மருந்துகளை ஆய்வுக் கூடங்களில் ஆய்வு செய்து ராயல்டி எதுவும் செலுத்ததாமல், இந்திய நிறுவனங்கள் இதரவகை மருந்துகளை தயாரிக்க முடியும். இந்த விதியின் மூலம் இந்திய மருந்து தயாரிப்புத் தொழில் செழித்து வளர்வதற்கு பயன்பட்டது, 1990-களில் இந்திய மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் மருந்துகள் தயாரிக்கும் அளவில் உலகிலேயே நான்காவது இடத்தைப் பிடிக்க முடிந்தது. இந்தியாவின் புதிய "டிரிப்ஸ் பிளஸ்" நடைமுறையில் மருந்துகள் தயாரிப்பதற்கு வழங்கப்படுகிற உரிமங்கள் இருபது ஆண்டுகளுக்கு நடைமுறையில் இருக்கும். இந்தக் காலகட்டத்தில் காப்புரிமை பெற்றவர், அந்தக் குறிப்பிட்ட மருந்தை தயாரித்து விற்பதற்கு தானே விற்பனை செய்ய முடியும். இந்த விதியைப் பயன்படுத்தி பன்னாட்டு மருந்து தயாரிப்பு தொழில்கள் அவை உண்மையிலேயே ஒரு அரசாங்க மற்றும் WTO செயல்படுத்தும் ஏகபோக உரிமைகள் - இதன்மூலம் அதிக லாபத்திற்கு பன்னாட்டு நிறுவனங்கள் மருந்துகளை விற்க வகைசெய்யப்பட்டுள்ளது. HIV/AIDS நோயால் பாதிக்கப்பட்டுள்ள மில்லியன் கணக்கான ஆபிரிக்க மற்றும் மூன்றாம் உலக இதர பகுதிகளை சார்ந்த நோயாளிகளுக்கு முறையான சிகிச்சை மறுக்கப்பட்டு அவர்கள் சிகிச்சையின்றியே மிகவிரைவாக இறக்கும் நிலைதான் உருவாகியுள்ளது. இந்திய மருந்து தயாரிப்பு தொழில் பொதுவான மருந்துகளையும், சிறப்பாக HIV/AIDS நோய்க்குறி உள்ளவர்களுக்கு பயன்தருகின்ற ARV (நச்சு நுண்ம சீர்கேடு எதிர்ப்பு) ரக மருந்துகளையும் குறைந்த விலையில் உலகச் சந்தையில் சப்ளை செய்வதற்கு அடிப்படைக்காரணமாக இருந்தது. அந்த நேரத்தில் மேற்கு நாட்டு மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் எய்ட்ஸ் நோயாளிகள் ஒரு மாதத்திற்கு 1000 டாலருக்கு மேல் செலவிடக்கூடிய ARV ரக மருந்துகளை விற்றுவந்தன. அதே நேரத்தில் இந்திய மருந்துத் தொழில் அதே ரக மருந்துகளை மாதத்திற்கு வெறும் 12 டாலர்கள் மட்டுமே சந்தைப்படுத்தக்கூடிய வகையில் அபிவிருந்தி செய்துவந்தன. "டிரிப்ஸ் பிளஸ்" ஏற்பாட்டை இந்தியா ஏற்றுக்கொண்டிருப்பதன் மூலம் பன்னாட்டு மருந்து தயாரிப்பு நிறுவனங்களின் ஏகபோக உரிமைகள் மீண்டும் வலியுறுத்தப்பட்டிருக்கின்றன, இதுபோன்ற உயிர்காக்கும் மருந்து வகைகள் தயாரிக்கப்படுவது சிக்கல் நிறைந்ததாகி விட்டது, குறைந்தபட்சம் அத்தகைய மருந்துகளின் விலை உயரும்நிலைதான் தோன்றியுள்ளது. பன்னாட்டு நிறுவனங்களின் நலன்களை தீவிரமாக ஆதரித்து வருகின்ற நியூயோர்க் டைம்ஸ் கூட ஜனவரி 18-ல் எழுதிய தலையங்கத்தில் "இந்தியாவின் காப்புரிமை சட்டம் இந்தியாவிலும் உலகம் முழுவதிலும் உள்ள நூற்றுக்கணக்கான, மில்லியன் மக்களது," பொது சுகாதாரத்தில் மிகக்கடுமையான பாதக தாக்குதலை ஏற்படுத்தும் இந்த விதிகளுக்கும் சுதந்திர வர்த்தகத்திற்கும் சம்மந்தம் எதுவுமில்லை, ஆனால் இந்த விதி அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஒன்றிய மருந்து தயாரிப்பு நிறுவனங்களின் அரசாங்க ஆதரவு திரட்டுகின்ற வல்லமையை காட்டுவதாக அமைந்திருக்கிறது" என்று ஒப்புக்கொண்டுள்ளது. இந்தியாவின் புதிய காப்புரிமைச் சட்ட நிர்வாகத்தினால் குறைந்த விலையில் உயிர்காக்கும் மருந்துகள் கிடைப்பதில் ஏற்படக்கூடிய தாக்கம் குறித்து அதிகமாக கவனம் செலுத்தப்பட்டிருக்கிறது. என்றாலும், இந்திய மக்களில் மூன்றில் இரண்டு பகுதியினருக்கு வாழ்விற்கான அடிப்படையை தந்து கொண்டிருக்கின்ற இந்திய விவசாயத்திலும் மகத்தான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும். பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக வறட்சியையும் உப்புச் சத்தையும் கடுங்குளிரையும், தாக்குப்பிடித்து, விவசாயத்தை பெருக்கிக்கொண்டிருக்கிற பொதுவான தானிய வித்துக்கள் அல்லது சிறிது மாறுபட்ட வகைகளைச் சார்ந்த பொது வித்துக்கள் மீது பன்னாட்டு விவசாய பெருநிறுவனங்கள் உரிமம் கோருகின்ற அளவிற்கு மசோதாவின் வாசகங்கள் தெளிவில்லாமல் அமைக்கப்பட்டிருக்கின்றன, அதனால் இதுபோன்ற கோரிக்கைகளுக்கு வழி ஏற்பட்டுவிடும், என்று அந்த சட்டத்தை விமர்சித்தவர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர். இந்தியாவில் விவசாயிகள் முந்திய அறுவடையில் சேமித்த வித்துக்கள்தான் தற்போது 80சதவீதம் பயிரிடுவதற்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. விவசாயிகளும் தற்போது விவசாயத்தில் பண்டமாற்று அடிப்படையில் பிற விவசாயிகளுடன் வித்துக்களை செலவில்லாமல் மற்றும் சங்கடமில்லாமல் பெற்று வருகிறார்கள். இந்தியாவின் நவீன தாராளவாத ஏற்றுமதி அடிப்படையிலான வளர்ச்சி மூலோபாயம் இந்தியா சுதந்திரம் பெற்ற பின்னர் மருந்துகள் விலை மிக உயர்ந்திருப்பதற்கான காரணங்களை 1959ம் ஆண்டு ஆராய்ந்த ஒரு குழு தந்த அறிக்கையின் அடிப்படையில் உருவாக்கப்பட்டதுதான் 1970ம் ஆண்டு இந்திய காப்புரிமைச் சட்டம். அப்போது நடைமுறையில் இருந்த காப்புரிமைச்சட்ட நிர்வாகத்தை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டு வெளிநாடுகளை அடிப்படையாக கொண்டு செயல்பட்ட மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் ஏகபோகமாக மருந்து தயாரிப்பு மற்றும் விற்பனையை தங்களது ஆதிக்கத்தில் வைத்துக்கொண்டிருந்ததால் மருந்துகள் விலை உயர்ந்திருந்ததாக அந்தக் குழு முடிவுசெய்தது. இந்திய முதலாளித்துவ வர்க்கம் நாட்டின் சுதந்திரத்திற்கு பிந்திய தேசிய பொருளாதார மூலோபாயத்தை கைவிட்டதுடன் 35 ஆண்டுகளாக இந்தியாவில் செயல்பட்டுவந்த காப்புரிமை சட்ட நிர்வாகத்தை தகர்த்தது, இந்தியா பொருள்கள் உற்பத்திக்கும் BPO அலுவலகங்களுக்கும் கால்சென்டர்களுக்கும் உலக முதலாளித்துவ சந்தைக்கு மருந்து பொருள்களையும் கம்ப்யூட்டர் மென்பொருட்களையும் தயாரிக்கின்ற குறைந்த ஊதிய தொழிலாளர் கேந்திரமாக மாற்றவேண்டும் என்ற உந்துதலில் கைவிட்டதையொட்டி இப்போது காப்புரிமை சட்டத்தையும் கைவிட்டிருக்கிறார்கள். வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்காகவும் சர்வதேச அடிப்படையில் போட்டியிடும் வல்லமையுள்ள இந்திய நிறுவனங்களை வளர்ப்பதற்காகவும் பொதுசெலவினங்கள் வெட்டப்பட்டிருக்கின்றன, பொதுத்துறை தொழில்கள் தனியார்மயமாக்கப்பட்டிருக்கின்றன. அல்லது மூடப்பட்டிருக்கின்றன. சுதந்திர வர்த்தக மண்டலங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. அவற்றில் பாரம்பரியமாக நிலவுகின்ற தொழிலாளர் உரிமைகள் மற்றும் தொழிலாளர்கள் நடத்தப்படும் தரங்கள் செல்லுபடியாகாது, பெருவர்த்தக நிறுவனங்கள் விரும்பும் பெரிய திட்டங்களுக்காக விவசாயத்திலிருந்து பொது முதலீடு திருப்பி விடப்பட்டிருக்கிறது. தற்போது WTO காப்புரிமைச் சட்ட நிர்வாகம் கொண்டு வரப்பட்டிருப்பதால், மருந்துகளுக்கான செலவினம் அதிகரிக்கும் நிலை தோன்றியுள்ளது. உலகிலேயே மிகப்பெருமளவிற்கு தனியார்மயமாக்கப்பட்டிருப்பது நாட்டின் பொது சுகாதார சேவைப்பிரிவு ஆகும், அப்படியிருந்தும் இந்தியாவின் உழைக்கும் மக்கள் ஒப்புநோக்கும்போது மிக மலிவான மருந்து பொருள்களை பெற்று வந்தனர், அதுவே வாதத்திற்கு உரியது. பொது சுகாதார சேவைக்காக இந்திய அரசாங்கத்தின் பல்வேறு நிலைகளில் ஆண்டு GDP-ல் ஒரு சதவீதத்தைதான் செலவிட்டு வருகிறார்கள். பன்னாட்டு நிறுவனங்களுக்கு வளர்முக நாடுகளின் சந்தைகளை திறந்து விடுவதற்கான தங்களது மூலோபாயத்தின் ஒர் அங்கமாக, அமெரிக்காவும் இதர முன்னேறிய முதலாளித்துவ நாடுகளும் (அதற்கு முன்னர் வர்த்தகம் சாராத பிரச்சனைகள் என்று கருதப்பட்ட) அறிவுசார்ந்த சொத்துரிமைகள் மற்றும் காப்பு உரிமங்கள் வழங்குகின்ற பிரச்சனையை வர்த்தகம் மற்றும் சுங்கவரி தொடர்பான பொது உடன்பாடு (GATT) தொடர்பான 1986 உருகுவே சுற்று பேச்சுவார்த்தைகளில் அறிமுகப்படுத்தின. ஆரம்பத்தில் இந்தியாவின் ஆளும் செல்வந்தத்தட்டினர் பிரேசில் மற்றும் தென்னாபிரிக்கா போன்ற இதர வளர்முக நாடுகளின் செல்வந்தத்தட்டினருடன் சேர்ந்து உலக வர்த்தக பேச்சு வார்த்தைகளின் ஓர் அங்கமாக TRIPS சேர்க்கப்படுவதை எதிர்த்து வந்தன. ஆனால் 1989-ல் அந்த நாடுகள் முதலாளித்துவ நாடுகளுக்கு விட்டுக்கொடுக்கும் நிலை ஏற்பட்டது. உலகம் முழுவதிலும் ஒரேமாதிரியான அறிவுசார்ந்த சொத்துரிமைகளை மற்றும் உரிமங்கள் வழங்க ஒரு சட்ட அமைப்பை உருவாக்குகிறோம், என்ற சாக்குப்போக்கில் முன்னேறிய முதலாளித்துவ நாடுகள் வைத்த கோரிக்கைகளை வளர்முக நாடுகள் ஏற்றுக்கொண்டன. அதன் மூலம் மேற்குநாடுகளின் அரசாங்கம் மூலம் தாங்கள் பெற்ற பண்டங்கள் தயாரிப்பு உரிமங்கள் மூலம் பன்னாட்டு நிறுவனங்கள் லாபம் பெற முடிந்தது. விமர்சனங்களை மட்டுப்படுத்துவதற்காக வளர்முக நாடுகள் TRIPS தொடர்பான வாசகங்களில் சில "நீக்குப்போக்கான" வாசகங்கள் இடம் பெற்றன, அவற்றில் "பொதுசுகாதார பாதுகாப்பு" தேவைப்படும்பொழுது உரிமம் பெற்ற பொதுவகை மருந்துகளுக்கு (கட்டாய உரிமம்) உரிமம் வழங்கும் முறையும் உரிமம் கோரி மனுச்செய்யும்போது அவற்றை ஆட்சேபிப்பதற்கும் வழிவகைகள் செய்யப்பட்டன. ஆயினும், நடைமுறையில் சுகாதார அவசர நிலையின்போது ஏற்கெனவே உரிமம் பெற்ற மருந்துகளுக்கு லைசன்ஸ் வழங்கும் முறை பயனற்றதாக ஆகிவிட்டது. ஏனென்றால் அப்படி கட்டளையிடும் நாடு செலவு பிடிக்கும் வழக்குகளை சந்திக்க வேண்டிய அச்சுறுத்தல்கள் ஏற்படுவதுடன் வர்த்தகத் தடைகளையும், எடுத்துக்காட்டாக, 1999-2000தில் HIV நோய்குறி உள்ளவர்கள் என்று மதிப்பிடப்பட்ட ஒரு மில்லியன்பேருக்கு தேவைப்படும் AZT மற்றும் DDI என்ற AIDS மருந்துகளுக்கு கட்டாய லைசன்ஸ் வழங்க முயன்றபோது அமெரிக்க அரசாங்கம் தலையிட்டது மற்றும் அந்த லைசன்ஸ் வழங்கும் நடவடிக்கையை எடுத்தால் வர்த்தகத் தடை விதிக்கப்படும் என்றும் தாய்லாந்து அரசாங்கத்திற்கு எச்சரிக்கை விடுத்தது. WTO நெறிமுறைகளை ஏற்று செயல்படுத்துவது மிக எளிதாக தேசிய சட்டங்களை ஒருங்கிணைக்கும் விவகாரம் மட்டுமல்ல, தேசிய அரசாங்கங்கள் கணிசமான அளவிற்கு நிர்வாக செலவினங்களை ஏற்பதும் சம்மந்தப்பட்டிருக்கிறது. அந்தச் செலவினங்களை இறுதியாக வெகுஜனங்கள்தான், ஏற்றுக்கொள்ள வேண்டும். உலக வங்கி பொருளாதார ஆய்வாளரான மைக்கேல் பிங்கர் தந்துள்ள தகவலின்படி WTO ஒப்பந்தத்தின் மூன்று பிரிவுகளை மட்டுமே கண்காணிப்பதற்கு ஆண்டிற்கு 150 மில்லியன் டாலர்களுக்கு மேல் செலவாகும், இது இந்தியா போன்ற பெரிய நாடுகளுக்கு ஒரு கணிசமான தொகையாகும்.இடதுசாரி முன்னணியின் பங்கு காப்புரிமை சட்டத்திருத்தத்தை நிறைவேற்றுவதற்கு தேவையான வாக்குகளை இந்திய ஸ்ராலினிச கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) அல்லது சிபிஐ (எம்) தலைமையிலான இடதுசாரி அணி வழங்கியது. அப்படிச் செய்யும்போதே அவர்களுக்கு அந்தச் சட்டத்தின் கடுமையான தன்மை உயிர்காக்கும் அரிய புது மருந்துகள் கிடைப்பதில் ஏற்படுகின்ற சிக்கல்களை அறிந்தே வாக்களித்திருக்கிறார்கள். சட்ட முன்வரைவின் வாசகங்களில் குறிப்பாக உரிமம் வழங்குவதற்கு முன்னர் ஆட்சேபனைகள் தெரிவிப்பது சம்மந்தமாகவும் கட்டாய உரிமங்கள் தொடர்பாகவும் அரசாங்கத்திடமிருந்து சலுகைகளை வென்றெடுத்திருப்பதாக குறிப்பிட்டு, இடதுசாரி முன்னணி, WTO தூண்டுதலில் வந்திருக்கும் இந்த சட்டத்தை ஆதரித்ததை நியாயப்படுத்தியது. CPI(M) தனது வலைத் தளத்தில் குறிப்பிட்டிருப்பதாவது, "இடதுசாரி கட்சிகள் தொடர்ந்து TRIPS பன்னாட்டு நிறுவனங்களுக்கு சாதகமாக அமைந்திருப்பதாக தொடர்ந்து கூறிக்கொண்டு வருகிறது. எனவே அது நியாயமற்ற உடன்படிக்கை என்றும் கூறுகிறது". ஆனால் ஏற்கனவே முந்திய அரசாங்கம், நாடாளுமன்ற ஒப்புதல் இல்லாமல் WTO ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுவிட்டதால், இடதுசாரிகள் ஒரு மோசமான நிலையில் வேறு வழியில்லாது சில சொற்ப திருத்தங்களை பெற்றனர் என்றும் அந்த வலைத் தளத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.ஒரே மூச்சில் CPI(M) இந்த திருத்தங்களை ஒரு பெரிய முன்னேற்றம் என்று கூறுகிறது. அதே மூச்சில் அந்த திருத்தங்கள் மிக பலவீனமானவை, புதிய சட்டம் செயல்படும்போது அவற்றை "பயனற்றதாக" ஆக்கிவிடமுடியும் என்றும் ஒப்புக்கொள்கிறது. CPI(M) மசோதாவிற்கு ஆதரவாக வாக்களித்திருந்தாலும் அறிவுசார்ந்த சொத்துரிமை தொடர்பாக இந்த அரசாங்கத்தின் அணுகுமுறையோடு இடதுசாரி கட்சிகள் கருத்து வேறுபாடுகள் கொண்டிருப்பதாகவும் இந்திய மக்களுக்கு ஆதரவாக அரசாங்கம் தனது நிலையை சமச்சீராக்கும் வகையில் நிர்பந்தம் கொடுக்க வெகுஜனங்களை திரட்டும் இயக்கத்தை நடத்தப்போவதாகவும் கூறியுள்ளதன் மூலம் அதன் அரசியல் மோசடி மேலும் வலியுறுத்தி காட்டப்படுகிறது. உண்மையிலேயே CPI(M)-ம் அதன் இடதுசாரி கூட்டணி கட்சிகளும் வெகுஜனங்களை திரட்டுவதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்து மேலாதிக்கவாத BJP-க்கு எதிராக காங்கிரசை ஆதரிக்க வேண்டும் என்ற அதன் கொள்கைக்கு ஏற்ப இந்திய முதலாளித்துவ வர்க்கத்தின் பாரம்பரிய ஆளுங்கட்சியான காங்கிரசை இடதுசாரிகள் "குறைந்த தீங்கு" என்று கருதுகின்றனர். தொழிலாள வர்க்கத்தையும் ஒடுக்கப்பட்ட வெகு ஜனங்களையும் வலுவற்ற எதிர்ப்புக்கள் என்ற கட்டுக்கோப்பிற்குள்ளேயே வைத்திருக்கின்றன.BJP -க்கு, காங்கிரஸ், மதச்சார்பற்றதொரு தற்காப்பு அரண் என்ற இடதுசாரி முன்னணியின் கூற்று அடிப்படையிலேயே தவறானது. 1947-ல் காங்கிரஸ் இந்தத் துணைக்கண்டத்தை வகுப்புவாத அடிப்படையில் பிரித்தது, பலதசாப்தங்களாக இந்து வலதுசாரிக்கு உடந்தையாக செயல்பட்டது, மிக முக்கியமாக, சந்தர்ப்பவாத கட்சியான CPI(M)-ம் அதனுடைய சகோதரக்கட்சியான இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் பலதசாப்தங்களாக தொழிலாள வர்க்கத்தை ஏதாவதொரு முதலாளித்துவ கட்சிக்கு அடிபணிந்து நடக்கச் செய்தது, அதன்விளைவாக உருவாக்கப்பட்ட சூழ்நிலைகளின் காரணமாக BJP-ம் இதர வகுப்புவாத ஜாதியக்கட்சிகளும் தலையெடுக்க முடிந்தன.இதில் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால், BJP-ம் அதன் வலதுசாரி கூட்டணிக் கட்சிகளும் காப்புரிமம் பதிவுச் சட்டத்தின் எதிரிகளாக தங்களை காட்டிக்கொண்டன. மக்களவையில் அந்தச் சட்ட முன்வரைவு முன்மொழியப்பட்டபோது, வெளிநடப்புச் செய்தன. BJP தலைவர்கள் இடதுசாரி அணி சட்ட முன்வரைவிற்கு ஆதரவு காட்டியதை கேலி செய்தன. "இடதுசாரிகள் நாடாளுமன்றத்திற்கு வெளியில்தான் செங்கொடியேந்துகின்றனர், மற்றும் நாடாளுமன்றத்திற்குள் பச்சைக்கொடி காட்டுகின்றனர்" என்று BJP குறிப்பிட்டது. ஆனால் BJP-ன் எதிர்ப்பு முற்றிலும் இரட்டை வேடம் கொண்டது மற்றும் வெற்று வாய்வீச்சாகும். சட்ட முன்வரைவின் வாசகம் BJP தலைமையிலான முந்திய கூட்டணி அரசாங்கத்தால் தயாரிக்கப்பட்ட நகலாகும். மேலும் BJP-ம் அதன் தேசிய ஜனநாயக முன்னணி கூட்டணியும் பெருவர்த்தக நிறுவனங்களின் புதிய தாராளவாத சீர்திருத்த செயல்திட்டங்களை முழுமையாக ஆதரிப்பவை. அப்படியிருந்தாலும் UPA ஆட்சியின் நவீன தாராளவாதத்திற்கு இடதுசாரி அணியானது தொழிலாள வர்க்கத்தை கீழ்படிந்து நடக்கச்செய்வதானது, அரசாங்கத்திற்கெதிராக மக்களிடையே உருவாகும் தவிர்க்கமுடியாத எதிர்ப்புணர்வை பயன்படுத்திக்கொள்வதற்கும் BJP-க்கும் இதர வலதுசாரி சக்திகளுக்கும் வழியமைத்து கொடுப்பதாக அமைந்திருக்கிறது. |