World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ஜேர்மனி

Germany: major churches, conservative opposition line up with US Christian right on Schiavo case

ஜேர்மனி: ஷியாவோ வழக்கில் முக்கியமான திருச்சபைகள், பழைமைவாத கட்சிகள் அமெரிக்க கிறிஸ்துவ வலசாரிகளுடன் அணிவகுத்து நிற்றல்

By Justus Leicht
7 April 2005

Back to screen version

15 ஆண்டுகள் தொடர்ச்சியாக உணர்வற்ற நிலையில் இருந்த டெர்ரி ஷியாவோ வழக்கில் புஷ் நிர்வாகத்தினதும் வலதுசாரி கிறிஸ்துவ அடிப்படைவாதிகளினதும் பிரச்சாரத்திற்கு, ஜேர்மனியின் பழைமைவாத வட்டங்கள், குறிப்பாக கத்தோலிக்க, மற்றும் நற்செய்தி திருச்சபைகளும், பழைமைவாத எதிர்க்கட்சிகளான கிறிஸ்தவ ஜனநாயக யூனியன், கிறிஸ்தவ சமூக யூனியன் (CDU/CSU) ஆகியவையும் ஆதரவைக் கொடுத்துள்ளன.

ஜேர்மன் கத்தோலிக்கர்களின் மத்திய குழு, ஷியாவோவுடைய உணவு செலுத்தும் குழாயை மீண்டும் பொருத்துவதை நோக்கமாகக் கொண்ட அவசர காலச்சட்டத்தில் புஷ் கையெழுத்திட்டதை வரவேற்றது; அதுவும் ஷியோவோவின் மருத்துவ வசதி இருந்த புளோரிடா நீதிமன்றங்களே ஷியாவோவின் விருப்பங்களுக்கு ஏற்ப தீர்ப்பு உத்தரவு பிறப்பித்து இருந்தபோதிலும், அதை எதிர்க்கும் வகையில் இக்கையெழுத்திடல் இருந்தது.

இதன் பின்னர் ஷியாவோவின் இறப்பிற்கு பின், ஜேர்மன் கத்தோலிக்க பிஷப்புக்களின் மாநாட்டில், கார்டினல் கார்ல் லேமான், ஒரு பத்திரிகை அறிக்கையில் "பெரும் வருத்தத்துடனும், ஏமாற்றத்துடனும் டெர்ரி ஷியாவோவின் மரணத்தை பற்றி கேள்விப்பட்டுள்ளோம். டெர்ரி ஷியாவோவின் துன்பமும் அவருடைய பெற்றோர்கள் பகிரங்கமாக அவருடைய வாழ்விற்கு நடாத்திய போராட்டமும் உலகம் முழுவதும் உள்ள மக்களை ஆழ்ந்து வருத்தத்தில் தள்ளியுள்ளது. டெர்ரி ஷியாவோ போன்ற நபர் பட்டினி கிடந்து இறக்க அனுமதிக்கப்பட்டது அறவழியில் ஏற்க இயலாததாகும் என்பதை வெளிப்படையாகவே குறிப்பிடுகின்றோம்." எனக் கூறினார்.

ஜேர்மன் நற்செய்தி திருச்சபைக்குழுவின் தலைவரான பிஷப் வொல்ப்காங் ஹுபர், தன்னுடைய கருத்தை கவனமானமுறையில் வெளிப்படுத்தினார். "மிகப் பெரிய அறநெறியிலான சங்கடம்" இருந்தது என்றும், அவருடைய கருத்தில் "ஷியாவோ போன்ற விழித்திருந்து உணர்வற்ற நோயாளிகள், உயிர் இருக்கும் வரை உயிருள்ள மனிதர்களைப் போல் நடத்தப்பட வேண்டும்" என்று அவர் கூறினார். தன்னுடைய விருப்பத்திற்கு எதிராக ஷியாவோ பட்டினி கிடந்து மடிய அனுமதிக்கப்பட்டுவிட்டார் என்றும் அவர் தெரிவித்தார்.

அங்கவீனர்களின் விடயங்களுக்கு பொறுப்பான ஜேர்மன் பாராளுமன்றத்தில் CDU/CSU பிரிவிற்கு பிரதிநிதியான ஹூபேர்ட் ஹுப்பே இந்த வழக்கின் அடிப்படை உண்மைகள் அனைத்தையும் புறக்கணித்துவிட்டு, அமெரிக்க சமய வெறியாளர்களின் கிளர்ச்சிப்போக்கை எதிரொலித்து, ஓர் அறிக்கை கொடுத்துள்ளார். அவர் நீரின்றிப் போவதால் உடல் வற்றும் விளைவினால் "வலியினால் துடிக்கும்" மரணத்தைப் பற்றிக் குறிப்பிட்டு, ஷியாவோ "கடுமையான ஊனம் பெற்றிருந்தார்" என்றும் உருவகப்படுத்திக் கூறினார்.

இது ஒரு "தடையற்ற தீர்ப்பு" என்றும் "ஷியாவோ வாழத் தகுதியற்றவர்" என்ற கருத்தை கொடுப்பதும், "இயலாதவர்களுக்கு இறப்பதற்கு உதவுவதற்கான (euthanasia) முதல் படியை குறிக்கிறது" என்றும் அவர் குறிப்பிட்டார். நாஜி ஆட்சியில் இறப்புதற்கு உதவுவதற்கான கொள்கையை பற்றி இது ஒருகால் ஞாபகப்படுத்துகின்றது. அப்பொழுது அம்முறையின்படி கிட்டத்தட்ட 170,000 உளவியல் ஊனமுற்ற நபர்கள் கொல்லப்பட்டிருந்தனர்.

கத்தோலிக்க திருச்சபையில் ஊக்கத்துடன் செயல்படும் ஹுப்பே, கூட்டரசு பாராளுமன்ற "தற்கால மருந்துகளின் சட்ட நிலையும் அறநெறியும்" என்று குழுவின் துணைத் தலைவர் என்பதோடு "வாழ்க்கைக்கான கிறிஸ்துவ ஜனநாயகவாதிகள்", "அனைவருக்கும் வாழ்வுரிமைக்கான அமைப்பு" போன்ற கருக்கலைப்பு எதிர்ப்பு அமைப்புக்களுக்கும் துணைத் தலைவர் ஆவார். பிந்தைய அமைப்பு புஷ்ஷின் மறுதேர்தலை "இன்னும் பிறக்காத குழந்தைகளில் பாதுகாப்பிற்கு முன்னரே ஆதரவாக இருக்கும் முடிவு" என்று பாராட்டியுள்ளர். முன்பொருநேரத்தில் இந்த அமைப்பின் கோலோன் நகர பிஷப் Joachim Meisner, கருக்கலைப்பு பழக்கத்தை நாஜிகளின் பாரியகொலைகளுடன் (Holocaust) ஒப்பிட்டுப் பேசியதையும் பாராட்டியிருந்தார்.

பல சட்டபூர்வ வழக்கு நடவடிக்கைகளிலும், டெர்ரி ஷியாவோ தன்னுடைய கணவர் மைக்கேலிடம் மற்ற சாட்சிகள் முன்பு தான் ஒருவேளை நீண்ட உணர்வற்ற நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டால், செயற்கை முறையில் உயிர்காக்கும் கருவிகளின் உதவியானால் உயிர் வாழ விரும்பவில்லை என்று கூறியுள்ளது நிரூபணம் ஆகியுள்ளது.

ஹுப்பேயும் மற்றவர்களும் கொடுத்துள்ள அறிக்கைகளுக்கு எதிராக, மிகத் தெளிவாக இருந்த டெர்ரியின் விருப்பங்கள் அவருடைய பெற்றோர்களால் தங்களுடைய சமய நம்பிக்கைகளின் அடிப்படையில் அறைகூவலுக்கு உட்பட்டது. உண்மையில் அவருடைய பெற்றோர்கள் நீதிமன்றத்தில் உயிராதரவு தரும் நடவடிக்கைகளை நிறுத்தும் முயற்சிகளை, தங்கள் மகளின் வெளிப்படுத்தப்பட்டுள்ள கருத்தையும் மீறி எதிர்ப்போர் என்றுதான் கூறியுள்ளனர்.

பல விஞ்ஞானபூர்வ மதிப்பீடுகள் டெர்ரி ஷியாவோவின் மூளை மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதால், உணர்வு, சுரணை ஆகியவற்றை அறியும் தன்மையை இழந்து விட்டது என்று நிரூபித்துள்ளன. அவர் "மூளையளவில் ஊனமுற்றவர்" மட்டும் அல்ல. மாறாக அவருடைய மூளையின் செயற்பாட்டு வட்டம், பிராணவாயு கொடுக்கப்பட முடியாத நிலையில் அழிக்கப்பட்டுவிட்டது. இதன் விளைவாக தன்னைப் பற்றிய உணர்வு அவருக்கு வரப்போவது கிடையாது, அவருடைய சூழ்நிலை பற்றியும் அவருக்கு ஏதும் தெரியாது, மேலும் வலி, பசி, தாகம் போன்ற உணர்வுகளும் அவருக்குக் கிடையாது.

முதலில் பார்த்தால் முக்கிய திருச்சபைகள் வெளியிட்டுள்ள அறிக்கைகள் ஆச்சரியத்தை அளிப்பது போல் தோன்றும். ஜேர்மனியில் உள்ள நற்செய்தி மற்றும் கத்தோலிக்க திருச்சபைகள் வெளியிட்டுள்ள ஏடு ஒன்றின் சமீபத்திய பதிப்பில் இம்மாதிரியான நோய்களில் உணவு செலுத்த குழாய்கள் அகற்றப்படுவது "அறநெறியின் படி ஏற்கத்தக்கதுதான்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

திருச்சபை தலைவர்களால் ஷியாவோ வழக்கில் ஏற்கப்பட்டுள் நிலைப்பாடு அரசியலில் உந்துதல் பெற்றது எனத்தான் கருதப்படவேண்டும். முக்கியமான திருச்சபை தலைவர்கள் அனைவருமே ஜேர்மனிய சமூகநல அமைப்பில் நீண்டகால தாக்கத்தை உருவாக்கும் (ஹார்ட்ஸ் IV) நடவடிக்கைகளான அரசாங்கச்செலவினக் குறைப்புக்களை, அவை ''தேவையானவை'' என ஆதரவு கொடுத்துள்ளனர் என்பது ஒன்றும் ஒரு தற்செயல் நிகழ்வு அல்ல.

முன்பெல்லாம், கிறிஸ்துவ ஒற்றுமையுணர்வு என்ற பெயரில், திருச்சபைகள் அனைத்தும் முதலாளித்துவ முறைக்கு முழு ஆதரவு கொடுத்திருந்தன; ஆனால் அம்முறையின் சில தீய செயற்பாடுகளை கண்டித்துக் கூடுதலான சமூக நியாயம் வேண்டும் என்று அழைப்பும் விடுத்திருந்தன. தற்பொழுது, இருக்கும் முறையின் வடிவமைப்பிற்குள் சமூக சமரசத்திற்கு இடம் இல்லாமற்போய்விட்டது. இதன் விளைவாக அரசாங்கத்தில் இருந்து கணிசமான வகையில் உதவித் தொகைகளை பெற்று வரும் திருச்சபை தலைவர்கள் தங்களுடைய வரலாற்றுப் பங்கின் வகையில்தான் நிகழ்வுகளை எதிர்கொள்ளுகின்றனர்: அதாவது செல்வந்தர்கள், அதிகாரம் நிறைந்தவர்கள் ஆகியோரின் நலன்களை காக்கும்வகையில் அவர்கள் பகுத்தறிவற்ற தன்மை, சமயவெறித்தனம், அடிமைத்தனம் ஆகியவற்றை ஊக்குவிக்கின்றனர்.

See Also:
Pope John Paul II: a political obituary
[6 April 2005]
ஜிலீமீ ஹிஷி னீமீபீவீணீ ணீஸீபீ tலீமீ ஜீஷீஜீமீணீஸீ ணீssணீuறீt ஷீஸீ tலீமீ sமீஜீணீக்ஷீணீtவீஷீஸீ ஷீயீ நீலீuக்ஷீநீலீ ணீஸீபீ stணீtமீ
[6 April 2005]


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved