World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா

The case of Terri Schiavo and the crisis of politics and culture in the United States

டெர்ரி ஷியாவோவின் வழக்கும் அமெரிக்காவின் அரசியல், கலாச்சார நெருக்கடியும்

By David North
4 April 2005

Back to screen version

ஏப்ரல் மூன்றாம் தேதி, ஞாயிற்றுக் கிழமையன்று ஒரு பொதுக் கூட்டத்தில் உலக சோசலிச வலைத் தளத்தின் ஆசிரியர் குழுவின் தலைவரும், அமெரிக்க சோசலிச சமத்துவக் கட்சியின் தேசிய செயலாளருமான டேவிட் நோர்த் ஆற்றிய உரையின் அறிக்கை கீழே அளிக்கப்பட்டுள்ளது.

எப்பொழுதாவது நாடுகளின் வரலாற்றில் விந்தையான, எதிர்பாராத நிகழ்வு ஏற்படுகிறது; இது மில்லியன் கணக்கான மக்களின் கவனத்தை ஈர்த்து, இதனுடைய விளைவுகள் எதிர்பார்க்க முடியதவையாகவும், ஆழ்ந்த வரலாற்று, அறநெறிப் பிரச்சினைகளை வெளிப்படுத்தி, நிகழ்வு நடந்துகொண்டிருக்கும் சமூகத்தில் உள்ள அடிப்படையான, ஆனால் இழிவான உண்மைகளை வெளிப்படுத்தும். அத்தகைய ஒரு நிகழ்வுதான் டெர்ரி ஷியாவோவின் வழக்கு ஆகும். இந்த துரதிருஷ்டவசமான பெண்மணி, மற்றும் அவருடைய சுற்றிவழைக்கப்பட்டுள்ள (துன்புறுத்தப்பட்டுள்ள) கணவரின் விதியை சூழ்ந்துள்ள விவாதங்கள் ஒரு ஒளிப்பட்டையை பிரிக்கும் கண்ணாடி போல் அதன் வழியே அமெரிக்காவின் தீய சமூக முரண்பாடுகள் சிதறி வெளிவந்துள்ளன.

ஒரு குடும்பத்தின் தனிப்பட்ட சோகமான நிகழ்வு என்பதை தவிர வேறு எதாகவும் டெர்ரி ஷியாவின் இறப்பு இருந்திருக்கக் கூடாது. திருமதி ஷியாவோ 15 ஆண்டுகளுக்கு முன்பு துன்பத்தில் ஆழ்ந்த, மூளைச் சிதைவு மிக ஆழ்ந்ததாக இருந்ததுடன், அவருடைய வாழ்வை நடத்துவதற்குத் தேவையான இன்றியமையாத உணர்வுகளின் கூறுபாடுகள் அனைத்தும் வெறும் உயிரியல் வழிவகைகளை நடத்திச் செல்லும் ஒரு தொகுப்பாகப் பெரிதும் குறைக்கப்பட்டுவிட்டன. அவருடைய கணவரை எதிர் கொண்ட தேர்வு கணக்கிலடங்கா தம்பதிகளாலும் எதிர்கொள்ளப்படுவதுடன், சூழ்நிலையின் துல்லியமான தன்மையை பொறுத்து அமெரிக்காவில் பெற்றோர்களாலும் குழந்தைகளாலும் நாள்தோறும் எதிர்கொள்ளப்படுகிறது.

சில சமயம் நம் அனைவருடைய வாழ்விலும், ஒரு கட்டத்தில் நம்மில் ஒவ்வொருவரும் மருத்துவர்களுடைய ஆலோசனையின் பேரில் பிரியமானவர்களுடைய மருத்துவ வசதிகளை நிறுத்தவேண்டுமா அல்லது குறைக்க வேண்டிய நேரம் வந்துவிட்டதா என்ற முடிவெடுக்கும் கட்டாயம் ஏற்படக்கூடும். அந்தச் சூழ்நிலையில், அரசாங்கம், அடிப்படைவாதிகள், புதிய பாசிச முறையிலான ஏதும் தெரியாத நபர்கள், நீதிமன்றங்கள், செய்தி ஊடகங்களின் முட்டாள்கள் போன்றவற்றின் தலையீடு இல்லாத வகையில், நம்முடைய அறிவார்ந்த மதிப்பீட்டின் அடிப்படையிலும், நம்முடைய உண்மையான மருத்துவ விருப்பங்களின் அடிப்படையிலும், நோயாளியின் சொந்த விருப்பங்களை பற்றிய உணர்வு ஆகியவற்றின் அடிப்படையிலும் முடிவெடுக்கும் உரிமையை கொண்டிருப்போம் என்று நம்புவோமாக.

இந்தக் குறிப்பிட்ட வழக்கில், இது ஒரு பெரும் பரபரப்பை ஏற்படுத்திய தேசிய காரண காரிய விவாதத்திற்கு உட்பட்டுவிடும் என்று எவரும் எதிர்பார்த்திருக்க முடியாது. ஆயினும்கூட, அவ்வாறு அது நிகழ்ந்து விட்டதால், அத்தகைய வழக்கு இவ்வளவு அதிகப் பரிமாணத்தை பெற்றுவிட்டது என்பது முழு வியப்பை அளித்துவிடவில்லை. இந்த வழக்கு இத்தன்மை பெறுதற்கு காரணமான வினோதமான தேசிய சூழ்நிலைக்கு, பல தசாப்தமான அரசியல், சமூக சீரழிவே காரணம் எனலாம், இத்துடன் புத்திஜீவித சீரழிவையும் சேர்த்துக் கொள்ளவும் விரும்புகிறேன் .

அமெரிக்காவில் அடிப்படைவாத குழுக்களின் மக்களை திருப்தி செய்வதற்காக செயல்படுவதோ, ஏமாற்றுத்தனமான நிகழ்வுகளோ ஒன்றும் புதிதல்ல என்பது உண்மையே. ஆனால் இதற்கு முன்னால் தேசிய அரசாங்கம் மற்றும் ஆளும் அரசியல் கட்சி இரண்டும், அமெரிக்க வடிவிலான கிறிஸ்துவ அடிப்படையை தங்களுடைய சிந்தைப் போக்காக ஏற்றுக்கொண்டதையோ அல்லது மிகப்பரந்த பிற்போக்கு அடிப்படைவாத அமைப்புக்களின் பரந்த வலைப்பின்னலில் இருந்து ஒரு பரந்த அரசியல் ஆதரவுத்தளத்தை திரட்டிக் கொண்ட நிலைப்பாட்டை நாம் கண்டதில்லை.

அமெரிக்க வரலாற்றின் முந்தைய நலம் நிறைந்திருந்த காலங்களில், அடிப்படைவாத அறியாமையும், மக்களை ஈர்க்கும் வகையில் தன்னல அரசியல் நடத்தியதும் தேசிய அளவில் ஏளனத்திற்கு உட்பட்டிருந்தன; H.L. Menckhen கட்டுரைகளும், Sinclair Lewis நாவல்களும் அவ்வகையில்தான் கருதப்பட்டன. அமெரிக்க இளைஞர்களின் பல தலைமுறைகள் Inherit the Wind நாடகத்தையும் திரைப்படத்திற்கும் அறிமுகப்படுத்தப்பட்ட காரணமே பைபிலியத் தாக்கம் நிறைந்திருந்த கொள்கைகளின் அபத்தங்களைக் காட்டுதற்குத்தான். Inherit the Wind இன் பொருளுரையான, 1925ம் ஆண்டு நிகழ்ந்த Scopes விசாரணைகள், விஞ்ஞானம், பகுத்தறிவு, முற்போக்கு என்ற சக்திகளுக்கு எதிராக அமெரிக்காவில் இருந்த சமயவெறியின் சோகமான இறுதிநிலை, மற்றும் அறியாமையின் அடையாளங்களாக கருதப்பட்டன.

கடந்த 80 ஆண்டுகளில் எந்த அளவிற்கு அமெரிக்கா சரிந்துள்ளது! கூர்ப்பின் (பரிணாம) விஞ்ஞானத்தை பற்றி கற்பிப்பது குற்றமானது என்னும் உண்மையான, தவிர்க்கமுடியாத சாத்தியம் ஏதேனும் ஒரு மாநிலத்தில் இந்நாட்டில் வராது என்று இன்று எவரேனும் ஒரு உறுதியுடன் கூற முடியுமா? குற்றச்சாட்டு இருந்தாலும் இல்லாவிட்டாலும், கூர்ப்பு (பரிணாமம்) ஏற்கனவே பல கணிசமான உயர்நிலைப்பள்ளிக் கல்விப்பாட திட்டத்தில் இருந்து அகற்றப்பட்டுவிட்டது; அல்லது ஒரு வெறும் ஊகக் கோட்பாடாகத்தான், பூமி, மனிதன் பற்றி விவிலிய அடிப்படையிலான கருத்துக்களுடன் படைப்பாற்றலுடன் கூடிய பரம்பொருள் அல்லது "புத்திசாலித்தனமான வடிவமைப்பு" பற்றிய கற்பனையுரைகளுடன் சொல்லிக் கொடுக்கப்படுகிறது.

புஷ் நிர்வாகத்தால் விஞ்ஞான எதிர்ப்பு வகையில் விசாரணை நடத்தியதற்கு ஷியாவோ வழக்கில் அது தலையிட்டது மிகவும் வெளிப்படையாகத் தெரிந்த உதாரணம் ஆகும். விஞ்ஞானரீதியான ஆய்வை சிதைத்துக் கூறலும், இழிவுபடுத்தலும், மிகக் கூடுதலான பரந்த, வெறித்தனமான வெளிப்பாடுகளாக அமெரிக்காவின் பொதுவாழ்வில் வந்துள்ளன. உதாரணமாக, 2003ம் ஆண்டில் அமெரிக்க உள்துறை அமைச்சகம், Grand Canyon தேசியப் பூங்காவில் உள்ள அதிகாரபூர்வமான அரசாங்க கடை ஒன்றில், Grand Canyon: a Different View (பாரிய பள்ளத்தாக்கு;ஒரு வித்தியாசமான நோக்கு) என்ற புதிய புத்தகம் ஒன்றை விற்பனைக்கு வைத்தது. இந்தப் புத்தகம் அறிவியல் முறையில் நிறுவப்பட்டுள்ள கருத்திற்கு எதிராக, நூறாண்டுகளுக்கும் மேலான புவியியல்ரீதியான ஆராய்ச்சிக்கு எதிராக, செங்குத்தான பள்ளத்தாக்கு (கான்யன்) மில்லியன் கணக்கான ஆண்டுகளுக்கும் மேலான காலத்தில் வளர்ச்சியுற்றது என்பதற்கு எதிராக வாதிடுகிறது. மாறாக இப் புத்தகத்தில் கிராண்ட் கான்யன் சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன், ஓர் ஒற்றைப் பேரழிவின் விளைவாக, விவிலிய பெரும் வெள்ளத்தினால் தோன்றியது என்று கூறப்பட்டிருக்கிறது. புவியியல் சங்கங்கள் சீற்றமான எதிர்ப்புக்களை தெரிவித்தபோதிலும்கூட, இந்த சமயக் கருத்து நிறைந்த புத்தகம் இன்னும் இந்த அரசாங்கச் செலவில் நடாத்தப்படும் தேசிய பூங்காவில் உள்ளது ('The Attack on Science", by Majorie Heins, December 21, 2004, Common Dreams New Center, www.commondreams.org).

அக்கறையுள்ள விஞ்ஞானிகள் சங்கம் இந்நிலையின் தீவிரம் பற்றி தான் மார்ச் 2004ல் "கொள்கை இயற்றுவதில் அறிவியல் நேர்மை: புஷ் நிர்வாகம் அறிவியலை தவறாகப் பயன்படுத்துவது பற்றிய ஒரு விசாரணை" என்ற தலைப்பில் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் கவனத்தை கோரியுள்ளது. இந்த விசாரணையின் முக்கிய கண்டுபிடிப்புக்களாவன:

"1. புஷ் நிர்வாகத்தின் அரசியல் முறை நியமனம் பெற்றவர்கள் ஏராளமான கூட்டரசு அமைப்புக்களின் மூலம், அறிவியல் கண்டுபிடிப்புக்களை பற்றி சிதைவுகள், திரித்துக் கூறல் ஆகியவற்றில் முறையாக நேர்த்தியான வடிவமைப்பில் ஈடுபட்டு வருகின்றனர். மனித உடல்நலம், பொதுப் பாதுகாப்பு, சமூக நலன்கள் இவற்றில் இத்தகைய நடவடிக்கைகள் தாக்கங்களை ஏற்படுத்தும்.

"2. அரசாங்கத்திற்கு வழங்கப்படும் விஞ்ஞான ஆலோசனை முறையில், மிகப் பரந்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு, அவை நிர்வாகத்தின் அரசியல் செயற்பட்டியலுக்கு எதிரான வகையில் இருக்கும் ஆலோசனை என தோன்றாவகையில் திரித்துக் கூறப்படுகின்றன என்பதற்கு வலுவான ஆதாரங்கள் உள்ளன.

"3. நிர்வாகம், அடிக்கடி அரசாங்க விஞ்ஞானிகள் "பிரச்சனைக்குரிய" தலைப்புக்களை பொறுத்தவரையில் எவற்றைக் கூறலாம் அல்லது எழுதலாம் எனத் தடைகள் விதிக்கப்பட்டுள்ளதற்கு சான்றுகள் உள்ளன.

"4. புஷ் நிர்வாகத்தினால் செயல்படுத்தப்படும் இத்தகைய திரித்தல், அடக்கிவைத்தல், தவறான முறையில் விஞ்ஞானத்தை பயன்படுத்தப்படுவது என்பவை இதுகாறும் இல்லாத அளவிற்கு பரந்த, விரிவான வகையில் உள்ளன என்பதற்கு குறிப்பிடத்தக்கை வகையில் சான்றுகள் இருக்கின்றன."

இந்த அறிக்கையில் அமெரிக்காவால் பல நோபல் பரிசுகள் வாங்கியவர்கள் உட்பட, 60 முக்கிய விஞ்ஞானிகள் கையெழுத்திட்டுள்ளனர்.

விஞ்ஞானரீதியான சிந்தனை தாக்குதலுக்கு உட்பட்டுள்ள ஒரு நாட்டில்தான், மதியீனமான, வெட்கம் கெட்ட, இழிநிலைக் காட்சியான டெர்ரி ஷியாவோ விவகாரம் இந்த அளவிற்கு பாரிய அரசியல் பரிமாணங்களை அடையும். வெள்ளை மாளிகை, காங்கிரஸ், புளோரிடா மாநிலத்தின் சட்ட மற்றம் மற்றும் ஆளுனர் ஆகியோர் அனைவரும் அடிப்படைவாத வலதுகளுடன் இணைந்து, 15 ஆண்டுகளுக்கு முன் உணர்வு வாழ்க்கையில் மடிந்து விட்ட ஒரு பெண்மணியை "காப்பாற்றுவதற்கு" அரசியல் அமைப்பை காலில் போட்டு மிதிப்பர்.

மக்கள் செய்தி ஊடகம் "டெர்ரியைக் காப்பாற்றுக" பிரச்சாரத்தில் பொய்களையும், பிழையான தகவல்களையும் பெருக்கிக் கூறுவது மட்டும் இல்லாமல், மைக்கேல் ஷியாவோவிற்கு எதிராகவும், திருமதி ஷியாவோ தெரிவித்துள்ள கருத்துக்களின் அடிப்படையில், உணர்வற்ற வெறும் உடலின் தொடர்ச்சியை நீட்டிக்காமல் முடிக்கும் நடவடிக்கைகளை அவர் தன் மனைவி மீது மேற்கொள்ள, அரசியலமைப்பின் அடிப்படையில் அனுமதி கொடுத்துள்ள நீதிபதிகள் மீதும் வன்முறையை தூண்டும் வகையில் எழுதுவதற்கும் பேசுவதற்கும் அனுமதித்துள்ளது.

அமெரிக்காவில் இத்தகைய அரசியல் மற்றும் அறிவார்ந்த வாழ்க்கையின் சீரழிவு வலதுசாரிகளின் கிளர்ச்சியின் மூலம் வெளிப்பாடு மட்டுமல்லாது, ஜனநாயகக் கட்சி மற்றும் மரபுவழியின் ஜனநாயக உரிமைகளை காப்பவர்கள், சமூக முன்னேற்றத்திற்கு ஆதரவு தருபவர்கள் என்று காட்டிக் கொள்ளும் சக்திகளும் முற்றிலும் சரணடைந்து நிற்கும் தன்மையிலும் வெளிப்பாடுமாகும். ஜனநாயகக் கட்சியின் கூட்டுச் சதி இல்லாவிட்டால், குடிரசுக் கட்சியினர் காங்கிரசில் இவ்வளவு விரைவாக தங்களுடைய அரசியலமைப்பு விரோத, அடிப்படை ஜனநாயக உரிமைகளை சட்டமன்ற ஆணையின் மூலம் அகற்றுவதை நெறிப்படுத்த முற்பட்டுள்ள, "டெர்ரி சட்டத்தை", இயற்றியிருக்க முடியாது.

ஷிண்ட்லர் குடும்பத்தின் சமீபத்திய முனவை நிராகரித்த தீர்ப்பில், 11வது சுற்று முறையீட்டு நீதிமன்றத்தின் நீதிபதியான பிர்ச் ஓர் இணைந்த அறிக்கை வெளியிட்டு "நம்முடைய அரசாங்கத்தின் சட்டமியற்றும், நிர்வாகத்துறை பிரிவுகள், ஒரு சுதந்திரமான மக்களை ஆள்வதற்காக ஏற்கப்பட்டுள்ள வடிவமைப்பான நம்முடைய அரசியலமைப்பின் கருத்துக்களுக்கு எதிரான வகையில் நன்கு தெரியும்படி நடந்து கொண்டுள்ளன". மேலும் நீதிமன்ற ஆவணத்தின் குறிப்பிலேயே கவனத்திற்காக சாய்வெழுத்தில் ஒரு சொற்றொடர் எச்சரிக்கையாகவும் கொடுக்கப்பட்டுள்ளது: "இன்று நீதித்துறையின் சுதந்திரம் பறிபோவதற்கு அனுமதிக்கப்பட்டுவிட்டால், அரசியலமைப்பு மீறல்கள் நாளை நடைபெறுவதற்கு ஒரு முன்னோடி ஏற்பட்டுவிடும்."

இந்த வியத்தகு எச்சரிக்கைகளின் தீவிரம் ஜனநாயகக் கட்சியின் தலைவர்களின் தலைவர்களின் நடவடிக்கை ஒரு புறம் இருக்க, அறிக்கைகளில்கூட எதிரொலியை காணவில்லை. உண்மையில், திருமதி ஷியாவோவின் மரணத்திற்குப் பின்னர், பிரதிநிதிகள் சபையை நடத்தும் அற்ப குண்டரான டாம் டிலே விடுத்த அழைப்பான வன்முறைப் பதிலடி கொடுக்க வேண்டும் எனபதற்கு கூடத் தக்க முறையில், ஜனநாயகக் கட்சி விடை கூறவில்லை. ஜனநாயகக் கட்சித்தலைவர்கள் கொல்லப்பட வேண்டும் என்று டிலே வெளிப்படையாகவே பேசும்போது, எதிர்க் கட்சி என்று கூறிக்கொள்ளும் இக்கட்சியின் தலைவர்கள் பயத்துடனும் வெட்கத்துடனும் எச்சரித்ததுடன் நின்றுவிட்டனர்.

இந்த உண்மையில் இருந்து எடுத்துக் கொள்ளவேண்டிய முடிவுரை என்ன என்றால், ஜனநாயகக் கட்சி அரசியலமைப்பு உரிமைகள பாதுகாக்க எந்த நடவடிக்கையையும் எடுப்பதற்கு விரும்பவில்லை என்பதுதான். கடந்த 20 ஆண்டுகளாக ஜனநாயகக் கட்சியின் அரசியல் வளர்ச்சியை ஓரளவு கவனத்துடன் பார்த்து வருபவர்களுக்கு இந்த அரசியல் உண்மை எந்த ஆச்சரியத்தையும் அளிக்கவில்லை; புஷ் நிர்வாகத்தின் அனைத்து முக்கியமான கொள்கைகள் பற்றிய பிரச்சினைகளுக்கும் இவர்களிடம் இருந்து இழிவான வகையில் அடிபணிந்து நிற்பதுதான் பதிலாக இருக்கிறது; ஈராக்கின்மீது சட்டவிரோதமான தாக்குதல் தொடக்கப்பட்டதில் இருந்து, தேசபக்த சட்டம் என்ற பெயரில் பாரிய மீறல்களை ஜனநாயக உரிமைகள்மீது கொண்டது, மற்றும் 1930ல் இருந்து 1960கள் வரை இயற்றப்பட்ட சட்டங்கள் மூலம் பெறப்பட்டிருந்த சமூக நலன்கள் திட்டங்களில் எஞ்சியிருப்பவற்றையும் காக்காமல் இருப்பது ஆகியவை இதில் இடம் பெறுகின்றன.

அமெரிக்க தாராளவாதத்துடன் தொடர்புடைய மற்ற அரசியல் பிரிவுகளின் ஷியாவோ வழக்கு தொடர்பான பிரதிபலிப்பில் இப்படி ஜனநாயகக் கட்சி அடிபணிந்து நிற்பது ஓர் ஆழ்ந்த சமூகப் போக்கை பிரதிபலிப்பதை எடுத்துக்காட்டுகிறது. கடந்த வாரத்தில் திருமதி ஷியாவோவிற்கு உணவு செலுத்தும் குழாய்கள் பழையபடி பொருத்தப்படவேண்டும் என்பதற்கான பிரச்சாரம் ஜெசி ஜாக்சன், ரால்ப் நாடெர் மற்றும் Village Voice க்கு எழுதும், குடிஉரிமைகளை பாதுகாப்பவர் எனப் புகழ் பெற்ற கட்டுரையாளர் நாட் ஹென்டாப் ஆகியோரின் ஆதரவையும் பெற்றுள்ளது. மக்களுடைய கருத்தைச் சிதைத்து தீவிர வலசாரிகளின் நடவடிக்கைகளை நெறிப்படுத்தும் வகையிலான, இந்த மனிதர்களின் அறிக்கைகள், அவர்களுடைய அரசியல் சந்தர்ப்பவாதத்தை நன்கு காட்டுவதில் சிறந்து உள்ளன; மேலும் இது அரசியலில் ஏற்றம் பெற்றுக் கொண்டிருக்கும் வலசாரிகளுடன் ஒரு சமரசப் போக்கை காண்பதற்கான முயற்சியும் ஆகும். அவர்களுடைய புத்திஜீவித பண்பற்றதன்மை, பொய்யானநிலை ஆகியவற்றை குறிப்பாக இதில் காணலாம்.

ஜாக்சனுடைய தலையீட்டைக் கூட, தவிர்க்க முடியாத போலித்தனத்தையும், அரசியல் கோமாளித்தனத்தையும் கொண்ட ஒரு மனிதனின் செயல் என்று உதறித் தள்ளிவிடலாம். ஆனால் நாடெரின் அறிக்கையை அவ்வளவு எளிதான அசட்டை செய்ய முடியாது. பெருநிறுவன கட்டுப்பாட்டிற்குள் உள்ள இரு-கட்சி முறைக்கு தான் ஒரு இடது மாற்று என்று கூறிக்கொண்டு ஜனாதிபதித் தேர்தல்கள் பலவற்றில் வேட்பாளராக இருந்தவரான நாடெர், வலதுசாரி National Review வில் அடிக்கடி கட்டுரைகளை எழுதும் வெஸ்லி ஜே. ஸ்மித்துடன் இணைந்து ஒரு கூட்டு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்படுவதாவது: "டெர்ரி ஷியாவோவின் பால் ஓர் ஆழ்ந்த அநீதி இழைக்கப்பட்டுள்ளது. இதையும்விட மோசமானது என்னவென்றால் இந்த மெதுவாக வரும் தாகத்தால் உலர்ந்து இறத்தல் சட்ட பூர்வமாக செயல்படுத்தப்படுகிறது; பல சந்தேகங்கள் இந்த வழக்கில் உள்ளன; அவற்றில் எதையும் திருப்திப்படுத்தமுடியாமல், தொடர்ந்து வாழ்வதற்கு பதிலாக அவருக்கு மரணம் அளிக்கப்பட்டுள்ளது."

சந்தேகங்கள்? பல சந்தேகங்கள்? எவருடைய சந்தேகங்கள்? விஞ்ஞானிகள், நரம்பியல் வல்லுனர்கள் இடையேயா? உணர்வின் உயிரியல் இரசாயன அடிப்படைகளை நன்கு அறிந்தவர்களிடம் சந்தேகங்களா? உண்மையில் மிகவும் நம்பிக்கையற்ற நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்ட திருமதி ஷியாவோவின் மருத்துவ நிலை, தன்னுணர்வு அற்ற நிலை, வெளியுலகம் பற்றிச் சிறிதும் அறிந்து கொள்ள முடியாத தன்மை, உணர்வுக் குறிப்புக்களை வகைப்படுத்திக் கொள்ள திறனற்று இருக்கும் நிலை ஆகியவற்றைப் பற்றியெல்லாம் புகழ்வாய்ந்த நரம்பியல் வல்லுனர்களுக்கு எந்தச் சந்தேகமும் இல்லை.

திருமதி ஷியாவோவின் உணர்வற்ற உடல்நிலையை பற்றிய ஆய்வில் ஏதேனும் சந்தேகம் இருக்கும் என்றால், அது அவருடைய நிலைமையின் இயல்பிலேயே, கருத்தாய்வின் அடிப்படையில், மிகமிகக் குறைந்த அளவில் உணர்வின் மூலம் அறியப்படுவது சிறிது இருக்கக்கூடும் என்ற நிலை முற்றிலும் தவிர்க்கப்படமுடியாததுதான் என்பதுதான். திருமதி ஷியாவோவின் மூளையின் உடற்கூற்று நிலைப்பாட்டில் இவ்வாறு இருப்பது மிக அரிது என்றாலும், முற்றிலும் மெளனத்துடன் வெளியிடப்பட முடியாத நிலையிலும் இந்த கஷ்டத்தையும் 15 ஆண்டுகளுக்கு மேலாக கற்பனை செய்தும் பார்க்க முடியாமல் பொறுத்துக் கொண்டிருக்கறார் என்பதை நினைத்துப் பார்க்கவும் கொடூரமாக உள்ளது.

Village Voice கட்டுரையில் ஹென்டாப் எழுதியது பற்றி கருத்துக் கூற என்னை அனுமதியுங்கள்; இக்கட்டுரையில் மைக்கேல் ஷியாவோவிற்கு எதிராக அவதூறுக் கருத்துக்கள் உள்ளன; "தன்னுடைய மனைவி இறந்துவிட வேண்டும் என்ற இடையறா விருப்பத்தை" அவர் கொண்டுள்ளார் என்று இவர் எழுதியிருக்கிறார். வலதுசாரி செய்தி ஊடகத்தால் கூறப்படும் அவதூறுகளை ஹென்டாப் திருப்பிக் கூறும் வகையில், "தன்னுடைய மனைவின் பாதுகாப்பாளர் என்ற முறையில் கொண்டுள்ள சட்டப் பொறுப்புக்களை அவர் மீறி, அவற்றில் சில மனைவி முன்னேற்றம் அடைவதற்குத் தடையாவும் நேரடியாக உள்ளன" என்று எழுதியுள்ளார். மற்றொரு பெண்மணியுடன் ஷியாவோ பாவ வாழ்க்கை நடத்திக் கொண்டிருக்கிறார் என்றும் அதனால்தான் மைக்கேல் ஷியாவோ தன்னுடைய மனைவி உயிருடன் வைக்கப்பட்டு, உடல் தேறுதலுக்கு உட்படுத்தப்படாமல் செய்து வருகிறார் என்றும் எழுதியுள்ளார். ஒரு பழிவாங்கும் நோக்கத்துடன் ஒரு கட்டுரையாளர் ஷியாவோவைச் சித்தரித்திக் காட்டியுள்ளது நன்கு நிரூபணமாகியுள்ள உண்மைகளுக்கு எதிரிடையாக இருக்கின்றது; பொதுச் செய்தி ஊடகத்தில் இப்பொழுதெல்லாம் நேர்மையான கட்டுரைகள் வருவது அரிதாகப் போய்விட்டது; ஆனால் சமீபத்திய News week இதழில் அந்த உண்மைகள் சுருக்கமாகக் கூறப்பட்டுள்ளன.

"அவருடைய நிலைமையில் ஆரம்ப ஆண்டுகளில் மைக்கேலும், ஷிண்டலர்களும் இணக்கமாகவே பழகிக் கொண்டிருந்தனர். ஒரு நேரத்தில் கல்ப் கோஸ்ட் பகுதியில் ஒரே வீட்டில்கூட வசித்து வந்திருந்தனர். டெர்ரிக்கு அனைத்து வகையான மருத்துவ உதவிகளும் உடற்கூறு, வேலைத் தொடர்பு, பொழுபோக்குப் பயிற்சிகள் என்று கொடுக்கப்பட்டன. இவை அனைத்தும் பலன் அளிக்காமற்போகவே, மைக்கேல் தன்னுடைய மனைவியை கலிபோர்னியாவிற்கு விமானத்தில் அழைத்துச் சென்றார்; அங்கு ஒரு டாக்டர், டெர்ரியின் மூளையில் மின்னணுக் காப்புக் கருவியை, ஒரு பரிசோதனை முறையாகப் பொருத்திப் பார்த்தார். அந்த முயற்சியும் தோல்வியில் முடிவடைந்தது. புளோரிடாவிற்கு மீண்டும் வந்தபின், மைக்கேல் தன்னுடைய குடும்ப உறுப்பினர்களின் உதவியை நாடி அவர்களுடைய குரல்களை ஒலிநாடாவில் பதிவு செய்து டெர்ரிக்கு அவற்றை ஒரு வாக்மெனில் போட்டுக் கேட்கச் செய்தார். டெர்ரியின் தோற்றத்தைப் பற்றியும், அவர் பெரும் கவனம் செலுத்தி வந்தார்: பிக்காசோ நறுமணப் பொருட்களை அவருடைய உடலில் தூவியதுடன், The Limited நிறுவனத்தில் இருந்து நவீனமான உள்ளாடைகள், அதன் ஜோடி மேலங்கிகள் ஆகியவற்றையும் அணிவித்தார். புளோரிடா மருத்துவ மனை ஒன்றில், இவர் கண்டிப்புக் காட்டியதால், அதிகாரிகள் அவருக்கு எதிராக ஒரு தடுப்பு உத்தரவு வேண்டும் என்று கோரினர். ஆனால் அப்பொழுது அங்கு வேலை பார்த்து வந்த Gloria Centonze (பின்னர் தற்செயலாக இவர் பின்னர் மைக்கேலின் தோழியின் குடும்பத்தில் திருமணம் செய்து கொண்டார்), செவிலியர்களுக்கு இடையே அடிக்கடி பறிமாறப்பட்டு வந்த கருத்தை நினைவு கூர்ந்தார்: "அவர் ஒரு முறைதவறிப் பிறந்த மகனாக இருக்கலாம்; ஆனால் எனக்கு நோய் ஏற்பட்டால், இவர் எனக்குக் கணவராக இருக்க வேண்டும் என்று விரும்புவேன்." டெர்ரிக்கு நல்ல கவனம் கொடுப்பதற்காக, மைக்கேல் ஒரு மருத்துவ தாதி பள்ளியில்கூட சேர்ந்திருந்தார்.

அனைத்து விஞ்ஞான, மருத்துவச் சான்றுகளையும் திருமதி ஷிவோவை பொறுத்த வரையில் அசட்டை செய்து, முற்றிலும் பொய்யான கூற்றான, "முழுமையான நரம்பியில் பரிசோதனைக்கு அவர் உட்படுத்தப்படவே இல்லை" என்று ஹென்டாப் எழுதியுள்ளார். உண்மையில், தகுதியுடைய நரம்பியல் வல்லுனர்கள் அவரை நன்கு சோதித்து அவர்களுடைய முடிவுகள் நீதிமன்றத் திறனாய்விற்கும் உட்பட்டிருந்தன. 1996 மற்றும் 2002 ஆண்டுகளில், இரண்டு CAT ஸ்கேன்கள் அவருடைய மூளையில் செய்யப்பட்டன. கடந்த வாரம் MSNBC செய்திநிறுவனத்திற்கு வழங்கிய பேட்டி ஒன்றில் மின்னிசோட்டா பல்கலைக்கழகத்தின் நரம்பியல் வல்லுனரான ரோனால்ட் கிரான்போர்ட் இரண்டாவது CAT சோதனையின் முடிவுகளை நன்கு ஆராய்ந்து, "எவ்வித மூளைவட்டச் செயல்பாடுகளும் இல்லை என்பது தெளிவு.... எந்த நரம்பியல் வல்லுனரும் அல்லது ரேடியாலிஜிஸ்ட்டும் இந்த CAT ஸ்கேன்களைப் பார்த்த உடன், இப்போதுள்ள கடுமையான பாதிப்பைவிடக் கூடுதலாக அவர் கொள்ள முடியாது என்று கூறிவிடுவர்." என்று கூறியுள்ளார்.

இப்படி ஹென்டாப்பின் கட்டுரையில் அள்ளிவீசப்பட்டுள்ள பல அவதூறுகளை, திருமதி ஷியாவோவிற்கு, புளோரிடா மாநிலச் சட்டம் ஒழுங்கு பற்றிக் கண்காணிக்கும் புளோரிடாவின் 6வது சுற்று நீதிமன்றத் தலைமை நீதிபதியால் நியமிக்கப்பட்டிருந்த காப்பாளரான ஜே வுல்ப்சன் புளோரிடா ஆளுனர் ஜெப் புஷ்ஷிற்கு டிசம்பர் 1, 2003 அன்று அளித்த ஒரு அறிக்கையில் இதனை முற்றிலும் மறுக்கும் வகையிலான கருத்துக்களை கொடுத்துள்ளார்.

இந்த அறிக்கை திருமதி ஷியாவோவின் நரம்பு பாதிக்கப்பட்ட தன்மை, உணர்வறியும் செயற்பாடுகளை மேற்கொள்ளப்பட்ட ஆக்கிரோஷமான, ஆனால் பலனளிக்காமற்போன முயற்சிகள், வலதுசாரி அவதூறுக்காரர்களின் கூற்றுக்கு முற்றிலும் எதிரிடையாக மைக்கேல் தன் மனைவியின் சார்பாக தொடுத்த பிழையான மருத்துவமுறை பற்றிய வழக்கில் முற்றிலும் அவருக்கு ஆதரவாக கொடுக்கப்பட்ட இழப்பீட்டுத்தொகை ஆகியவை உள்ளன. அறிக்கை கூறுவதாவது: "நீதிமன்றம் தெரசாவின் பணத் தேவைகளை ஒட்டி ஒரு அறக்கட்டளையை அமைத்து South Trust Bank ஐ அதற்குக் காப்பாளராகவும் மற்றொரு தரும கர்த்தாவையும் நியமித்திருந்தது. இந்த நிதியம் மிகவும் நேர்த்தியான முறையில் நிர்வகிக்கப்பட்டு, கணக்குகள் எழுதப்பட்டுள்ளன; அதன் மீது மைக்கேல் ஷியாவோவிற்கு எந்தக் கட்டுப்பாடும் கிடையாது. தெரசாவின் பணவிவகாரத்தில் பிழை இருப்பதாக எந்த அறக்கட்டளை நிர்வாக ஆவணத்திலும் சான்றுகள் இல்லை; இவ்விஷயத்தில் ஆவணங்கள் அனைத்தும் மிகச் சிறப்பாக பரிபாலிக்கப்பட்டுள்ளன."

1994ம் ஆண்டு, நான்கு ஆண்டுகள் பாடுபட்ட பின்னரும் அறிதல் உணர்வை மீட்கச் சிறிதும் வாய்ப்பில்லை என்று அனைத்து முயற்சிகளும் தோல்வி அடைந்த பின்னர், மைக்கேல் ஷியாவோ, மருத்துவர்களுக்கு இனி இதயத் தாக்குதல் வந்தால், தன் மனைவிக்காக செயற்கையாக உயிரைக் காப்பாற்றும் முறையில் ஈடுபடவேண்டாம் என்று தெரிவித்தது பற்றி, வுல்ப்சன் அறிக்கை கூறுவதாவது:

"தெரிசாவின் மருத்துவருடன் நீகழ்ந்த விவாதங்கள், ஆலோசனைக்குப் பின்னர் எடுத்த மைக்கேலின் முடிவு, ஆராய்ந்தபின் அவர் கொண்ட கருத்தான இனி தெரிசா குணப்படுவதற்கு வாய்ப்பில்லை என்பதின் அடிப்படையில் அமைந்திருந்தது. இந்த உண்மையைச் செயல்படுத்தவேண்டும் என்ற முடிவிற்கு அவர் வருவதற்கு மூன்று ஆண்டுகள் எடுத்துக் கொண்ட பின்னர்தான், உணர்வற்ற நிலையில் இருப்பதற்கு பதிலாக, ஓர் இயற்கையான இறப்பை அடைய தெரிசாவை அனுமதிக்கலாம் என்பதை அவர் ஏற்கத் தொடங்கினார்."

தெரிசா ஷியாவோ தொடர்ந்த உணர்வற்ற நிலையில் உள்ளார் என்ற மருத்துவக் கருத்தாய்வு திறமையான நரம்பியில் வல்லுனர்களால் மேற்கொள்ளப்பட்டு பலமுறையும் உறுதி செய்யப்பட்டது. உணர்வற்ற நிலையில் உள்ள ஒரு நபர் ஊனமுற்ற நபர் என்று ஆகாது; ஆனால் தன்னைப்பற்றிய உணர்வு முற்றிலும் இழந்துவிட்ட ஓர் ஜீவனாகவும் வெளி உலகத்துடன் முழு உணர்வுடன் செயற்பாடு கொள்ளும் திறனை இழந்துவிட்ட ஜீவனகாவும்தான் இருப்பர். மூடத்தனமும் அறிவற்றதன்மையிலும் ஆழ்ந்த திருமதி ஷியாவோவின் நிலைபற்றி தவறாக எடுத்துரைத்தல் "டெர்ரியைக் காப்பாற்றுக" பிரச்சாரத்தின் மிக இழிவான கூறுபாடாக உள்ளது. New England Ournal of Medicine உணர்வற்ற நிலை பற்றி விவரிப்பதாவது:

"தன்னைப் பற்றியும் சூழ்நிலையைப் பற்றியும் முழுமையாக எந்த உணர்வும் இல்லாத ஒரு மருத்துவ நிலையாகும். இதில் தூக்கம்-விழிப்பு வட்டங்கள் இருக்கும்; ஓரளவு அல்லது பகுதியாக மூளைவட்டத்தின் இயல்புப் பணிகள் நடைபெறக் கூடும். இது ஒரு மாறிவிடும் போக்கைக் கொண்டு கடுமையான அல்லது நீண்ட மூளைத் தாக்குதலில் இருந்து மீளலாம் அல்லது நிரந்தரமாகப் போய்விடலாம்; அதன் விளைவாக மூளைக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புக்களில் இருந்து நிவாரணம் அடைவது மிகக் கடினமாகிவிடும். இந்த உணர்வற்ற நிலை மீளமுடியாத அல்லது நரம்புக்கலங்கள் சிதைவடைதல் தொடர்ச்சியாக அதிகரித்தல் மற்றும் மண்டலத்தின் தவறான வளர்ச்சிக் கூறுகள் ஆகியவற்றின் அதிகரிப்பாலும் ஏற்படுக் கூடும்.

"உணர்வற்றநிலை என்பது கீழ்க்கண்ட நிலைமைகளின் மூலம் கண்டறியப்படலாம்: (1) தன்னைப்பற்றி உணர்ந்திருத்தல் அல்லது சுற்றுப்புறத்தை அறிந்திருத்தல் இல்லாமல் இருப்பது, மற்றவர்களுடன் எந்தத் தொடர்பையும் கொள்ள முடியாத நிலைமை; (2) கண்டல், கேட்டல், உணர்தல், நுகர்தல் போன்ற உந்துதல்களுக்கு எவ்வித விருப்ப விடையிறுப்பம் அற்ற தொடர்ந்த, மீண்டும் ஏற்படக்கூடிய, பொருளுடன் கூடிய விடையிறுத்தல் அற்ற நிலை; (3) மொழி அறிவை புரிந்து கொள்ளுதல், வெளிப்படுத்துதல் இவற்றிற்கான சான்றுகள் ஏதும் இன்மை; (4) தூக்கம்-விழிப்புச் சுற்றுக்கள் வெளிப்படும் முறையில் விட்டுவிட்டு விழித்திருக்கும் தன்மை; (5) மருத்துவ, செவிலியர் ஆதரவுடன் உயிர்தரிப்பதற்கு தேவையான மூளைவட்டச் செயல்பாடுகள் மட்டும் இருத்தல்: (6) கட்டுப்பாடு இன்றி மலம், மலஜலம் கழித்தல்: மற்றும் (7) சில மாற்றங்களுடன் பாதுகாப்படும் எலும்பு-நரம்பு தானியங்கிச் செயற்பாடுகள் இருத்தல். ...

" ...உணர்வற்றநிலையில் இருப்பவர்கள் பொதுவாக முற்றிலும் நகரும் தன்மை இல்லாதவர்கள் அல்லர். உடலையோ, உறுப்புக்களையோ பொருள் தன்மையற்ற வகையில் நகர்த்தக் கூடும். சில நேரம் அவர்கள் சிரிக்கக் கூடும்; சிலர் கண்ணீரும் விடுவர்; சில சமயம் முனகுவர்; எப்பொழுதாவது புலம்புவர் அல்லது உரக்கக் கத்துவர். ..அத்தகைய செயற்பாடுகள், முரணாக, இலக்கற்றதாக உள்ளுணர்வின் வெளிப்பாடான வடிவமைப்பில், வெளி உந்துதல்களுக்கு விடையிறுக்கும் வகையில் தோன்றக்கூடும். இந்த தானியங்கி செயற்பாடுகள் சில நேரம் தவறான முறையில் இலக்குடன் கூடிய நடவடிக்கைகள் என்ற தோற்றத்தைக் கொடுக்கலாம்; ஆனால் இந்த விடையிறுப்புக்கள் எந்தவிதமான உளவியல் உணர்வோ, அறிந்து செயல்படும் திறன் அற்றவர்களிடமோ கூட வெளிப்படும் என்பதைக் கவனமான ஆய்வுகள் வெளிப்படுத்தியுள்ளன."

டெரி ஷியாவோவின் நிலை எத்தன்மையாக இருந்திருக்கும் என்பதைக் கற்பனை செய்துகூட பார்க்க முடியாது; அவர் இருக்கும் நிலை எந்த கற்பனைக்கும் இடம் கொடுக்கவும் இல்லை. தன்னுடைய நிலைமையைப் பற்றி அவர் நினைத்துப் பார்க்கவும் முடியாது; ஏனெனில் மூளையின் சிந்திக்கும், உணரும் பகுதி மூளை வட்டத்தைப் பொறுத்துள்ளது; அது நீண்ட காலம் பிராணவாயு இல்லாததால் அழிந்துள்ளது; ஆகையால் அவரால் எதையும் சிந்திக்க இயலாது. அவருடைய மூளையின் CAT ஸ்கேன்கள் அனைத்துமே, மருத்துவ ஆய்வுகளின் ஆய்வுகளை உறுதிப்படுத்தித்தான் உள்ளன. மிகக் காலம் கடந்த பின்னரே ஷிண்டலர்கள் தங்களுடைய முடிவிலா வழக்குகளின் கடைசிப் பகுதியில்தான் திருமதி ஷியாவோ உணர்வற்ற நிலையில் உள்ளார் என்பதை மறுக்கத் தொடங்கிய முயற்சிகள், மூளையில் இருக்கும் உயிரிஇரசாயன (Biochemical) செயற்பாடுகளில் முற்றிலும் தங்கி அதன் அடிப்படையில் இருந்துதான் உணர்வு தோன்றுகிறது என்ற விஞ்ஞான உண்மையை மறுப்பவர்களுக்குத்தான் ஏற்க இயலும்.

ஷியாவோ விவகாரத்தில் பெரும்புதிர்களில் ஒன்று, 15 ஆண்டுகளுக்கு பின்னரும் அவருடைய பெற்றோர்கள் வெறும் உடலளவில் தங்கள் மகள் தொடர்ந்து இருக்க வேண்டும் என்ற உறுதியுடன் உள்ளனர் என்பதாகும். பெற்றோர்களின் அன்பு என்பதில் இதற்கு விடையில்லை; ஏனெனில் அத்தகைய அன்பின் பெரும்பாலான, உள்ளுணர்வுக் கூறுபாடு குழந்தை துன்பத்திற்கு ஆளாகக் கூடாது என்பதேயாகும். தங்கள் பெண் மிகக் குறைந்த உணர்வை அவருடைய நிலைமையில் கொண்டுள்ளார் என்று ஷிண்ட்லர்கள் வலியுறுத்துவது உண்மையானால், அவரை உயிருடன் தொடர வைப்பது என்பது, இவர்களுடைய பங்கில் கூறத்தக்கமுடியாத அளவு கொடுமையானது என்ற கருத்தைத்தான் கொடுக்கும். உண்மையில் ஆளுனர் ஜெப் புஷ்ஷிற்குக் கொடுத்துள்ள அறிக்கையில், சட்டபூர்வ காப்பாளர் ஷிண்ட்லர் குடும்பம் விசாரணைக்கும் முன் நீடித்திருந்த இடைக்காலத்திலும், ஜனவரி-பெப்ருவரி 2000 வழக்குக் காலத்திலும் குடும்ப உறுப்பினர்கள் வெளியிட்ட அறிக்கைகள் பற்றி தன்னுடைய அதிர்ச்சியைக் கட்டுப்படுத்த முடியவில்லை; இந்த வழக்கில் நீதிபதி கிரீர் டெரி ஷியாவோவின் உடலில் இருந்து உணவு செலுத்தும் குழாய்கள் அகற்றப்படலாம் என்று அனுமதித்தார். இதைப்பற்றி வுல்ப்சன் தெரிவிப்பதாவது:

"வழக்கு விசாரணைக் காலம் முழுவதும் ஷிண்டலர் குடும்ப உறுப்பினர்களின் சாட்சியம், விசாரணையின் போதான வாக்கு மூலம் ஆகியவை எப்படியும் தெரிசாவை உயிருடன் வைத்துக் கொள்ள வேண்டும் என்ற அவர்களுடைய துன்பம் தரும் நம்பிக்கையைத்தான் வெளிப்படுத்தின. தெரிசாவிற்கு நீரிழிவு நோய் வந்தாலோ, அல்லது ஆறாத புண்கள் வந்தாலோ அவர்கள் ஒவ்வொரு உறுப்பையும் அறுவை சிகிச்சை மூலம் அகற்றுவர் என்றும், இதயக் கோளாறு ஏற்பட்டால் அதற்கும் சிகிச்சை செய்வார்கள் என்றும் கொடூரமான உதாரணங்களை அவர்கள் வாதத்திற்காக கொடுத்தனர். ...பல மாறுபட்ட நிலைகள் ஏற்பட்டால் என்ன செய்வது என்பதைப் பற்றிய சாட்சியங்களில், ஷிண்டலர் குடும்பம் தெரிசாவேகூட செயற்கை முறையில் உணவு செலுத்தும் குழாய்கள் அகற்றப்பட வேண்டும் என்று விருப்பம் தெரிவித்திருந்தாலும், தாங்கள் அவ்வாறு செய்திருக்க மாட்டோம் என்று கூறியுள்ளனர். இந்த வேதனை தரும் சங்கடமான வழக்கு விசாரணை முழுவதும், குடும்பம் தெரீசா தொடர்ச்சியான உணர்வற்ற நிலையில்தான் இருந்தார் என்பதையும் ஒப்புக் கொண்டிருந்தனர்."

இப்படிப்பட்ட சாட்சியம், தங்களுடைய மகளின் நலனுக்கு உகந்த அறிவுபூர்வமான சிந்தனைகளை விட, சமயக் கோட்பாட்டின் தேவைகள்தான் ஷிண்ட்லர்களுடைய நடவடிக்கைகளுக்கு உந்துதல் கொடுத்தன என்ற முடிவிற்குத்தான் வரவைக்கிறது. எத்தகைய அறிவியல் விளக்கமும் ஷிண்ட்லர்களையும், அவர்களுடைய அடிப்படைவாதிகளையும் டெரி ஷியாவோ உளவியல் வகையில் உணர்வோ, சிந்தனையோ அற்றவர் என்பதை ஏற்க வைக்கவில்லை. அவர்களுடைய நிலைப்பாட்டின்படி முழு உணர்வு என்பது உயிரிஇரசாயன இயக்கத்தினால் மூளையில் உள்ள 100 பில்லியன் நியூரான்களினால் என்பது ஏற்கப்படாமல் சடத்தன்மை இல்லாத "ஆன்மாவினால்" இயக்கப் பெறுகிறது என்றுள்ளது.

2000ம் ஆண்டின் வழக்கு விசாரணையின்போது தங்கள் மகளுடைய உயிர்தரிப்பு ஆதரவுக் கருவிகள் அகற்றுவதற்கு அனுமதியோம் என்ற அவர்கள் நிலை, திருமதி ஷியோவோவே அவர்களிடம் தன்னுடைய விருப்பமான அத்தகைய நிலையில் வாழவேண்டாம் என்று கூறியிருந்தாலும் என்பது, திருமதி ஷியாவோ விதியை பற்றிய போராட்டத்தின் அடிப்படையில் இருக்கும் சட்டபூர்வ பிரச்சினைகளுக்கு இட்டுச் செல்லுகிறது. உண்மையை தலைகீழாக கூறும் தங்களுடைய முயற்சிகளில் வலதுசாரி அடிப்படைவாதிகளும், புஷ் நிர்வாகத்தில் இருக்கும் அவர்களுடைய அரசியல் புரவலர்களும் "டெர்ரியைக் காப்பாற்றுக" இயக்கத்தை "வாழும் உரிமை" பற்றிய பாதுகாப்பாக சித்தரிக்க முற்பட்டுள்ளனர். ஷியாவோ வழக்கில் எழுந்துள்ள சட்ட பூர்வமான, உண்மையான அடிப்படை ஜனநாயகப் பிரச்சினை, அனைத்து மனிதர்களும் தங்களுடைய உடல்களின் மீது கட்டுப்பாட்டு உரிமை கொண்டுள்ளனரா, அரசாங்கத்தடையின்றி அவர்கள் தீர்மானிக்க முடியுமா என்பதுதான்; இந்த வழக்கில் தெரீசா ஷியாவோ தன் உயிரை நீட்டிப்பதை தடுக்கும் பொருட்டு, செயற்கை முறைகளை அகற்றுவதற்கான அவருடைய உரிமை தடுக்கப்படாமல் நிலைநிறுத்தப்படவேண்டும் என்பதாகும்.

"வாழ்வதற்கான உரிமை" என்ற இந்த சொற்றொடர் புஷ் நிர்வாகத்தாலும், வலதுசாரி அரசியல்-சமய வெறித்தன்மை அமைப்புக்களால் அமெரிக்க சட்டத்தில் உள்ள பொருளுக்கு முற்றிலும் எதிரிடையான கருத்துப் படிவத்தில் கையாளப்பட்டுள்ளது. 1890ம் ஆண்டு Louis D. Brandeis மற்றும் Samuel D. Warren Harvard Law Review என்பதில் வெளியிடப்பட்ட முக்கியமான கட்டுரை ஒன்றில், சட்டபூர்வமாக "வாழும் உரிமை" என்பதின் வளர்ச்சியுற்ற பொருள் எவ்வாறு பொதுச்சட்டத்தில் (சுதந்திரப் பிரகடனத்திலும் பறைசாற்றப்பட்டுள்ளது) ஏற்கப்பட்டுள்ளது எனக் கூறுகிறது. மிகவும் புகழப்பட்டு பாராட்டப்ப்டுள்ள பகுதியில் Bsrandeis, Warren இருவரும், "இப்பொழுது வாழும் உரிமை என்பது மகிழ்ந்து வாழும் உரிமை என்ற பொருளை கொண்டுள்ளது; எவரும் தொந்திரவு செய்யக் கூடாது..." இந்தக் கட்டுரை புத்திஜீவிதமான முறையில் ஒரு மைல்கல்லாக தனிப்பட்ட உரிமை (அந்தரங்கம்) பற்றிய அரசியலமைப்பு ஏற்கும் தன்மையைக் குறிக்கிறது.

பிரான்டீஸ் மற்றும் வாரனுடைய வாதங்களின் ஜனநாயக உட்குறிப்புக்கள் 75 ஆண்டுகளுக்கு பின்னர், Griswold v. Connecticut வழக்கு 1965 சிறப்பு தீர்ப்பு ஒன்றில் தலைமை நீதிமன்றத்தின் மூலம் வெளிப்பட்டது; அதில் ஒரு மனிதனுடைய தனிப்பட்ட (அந்தரங்கமான) விஷயங்களில் அவருக்கு சுதந்திரம் உண்டு என்றும் அதில் அரசாங்கம் தலையிடக்கூடாது என்பதை நிலைநிறுத்தியது. இந்தத் தீர்ப்புக் கொடுப்பதற்கான குறிப்பான பிரச்சினை கனெக்டிக்கட் மாநிலம் எஸ்டேல் கிரிஸ்வோல்ட் என்னும் Planned Parenthood League இயக்குனரை, 19ம் நூற்றாண்டு மாநிலச் சட்டம் ஒன்றான கருத்தடைகள் பற்றி திருமணமான தம்பதிகளுக்கு தகவல், விளக்கம் அல்லது மருத்துவ ஆலோணனை கொடுப்பது குற்றம் என்றிருந்த நிலையில், அவருக்கெதிராக வழக்குத் தொடரப்பட்டது. திருமதி கிரிஸ்வோல்டை குற்ற விசாரணைக்கு உட்படுத்திய மாநிலச் சட்டம் அரசியலமைப்பு நெறிகளுக்கு எதிரானது என்று கூறிய தலைமை நீதிமன்றம் தனிநபர்கள் "தனிப்பட்ட (அந்தரங்க) பகுதியை" அனுபவிக்கும் உரிமை பெற்றுள்ளனர் என்றும் அதில் அரசாங்கம் அரசியலமைப்பின் நெறிகளின்படி தலையிடமுடியாது என்றும் வெளிப்படையாக அறிவித்தது. இந்த வழக்கில் நீதிமன்றம் கருத்தடை சாதனங்களை பயன்படுத்துவது என்பது அந்த தனிப்பட்ட (அந்தரங்க) பகுதியை சார்ந்தது எனத் தீர்ப்புக் கூறியது.

கிரிஸ்வோலட் முடிவுதான் Roe v.Wade 1974 ஆண்டு தீர்ப்பிற்கு அடிப்படையாக இருந்தது; அத்தீர்ப்பின்படி சட்டபூர்வமாக கருக்கலைப்பு செய்து கொள்ளலாம் என்று முடிவு கூறப்பட்டது. 1975ம் ஆண்டு இந்தப் பிரச்சினை வேறுவிதமாக எடுத்துக் கொள்ளப்பட்டது; கரேன் ஆன் க்வின்லன் என்னும் இளவயதுப் பெண்மணி போதைப் பொருள், குடி இவற்றின் இணைந்த நுகர்வினால், மீளமுடியாத பெரும் மூளைத்தாக்குதலினால் பாதிக்கப்பட்டிருந்தார். இவருடைய உணர்வற்ற நிலை குணப்படுத்த முடியாது என்ற நிலையில் அவருடைய பெற்றோர்கள் செயற்கை முறையில் சுவாசம் கொடுத்தலை நிறுத்த அனுமதி கோரினர்.

ஆரம்பத்தில் நியூ ஜேர்சியின் சுற்று நீதிமன்றம் இந்தக் கோரிக்கையை ஏற்க மறுத்தது; பின்னர் அந்த மாநிலத்தின் தலைமை நீதிமன்றத்திற்கு மேல் முறையீடு அனுப்பப்பட்டது. Griswold ஐ மேற்கோளிட்டு, மாநில தலைமை நீதிமன்றம் அந்தரங்க உரிமை என்பது "பரந்த அளவில் இருந்து, ஒரு நோயாளி சில சூழ்நிலையில் மருத்துவ வசதிகள் மறுக்கலாம்: எவ்வாறு பரந்த அளவில் ஒரு பெண்மணி சில சூழ்நிலையில் தான் கருவுற்றிருக்கும் நிலையை கலைக்க முடிவு கொள்ளுகிறாரோ அதே போல்தான் இதுவும்" என்று தீர்ப்பளித்தது.

கீழ் நீதிமன்ற உத்தரவை மாற்றியதில், நியூ ஜேர்சி தலைமை நீதிமன்றம், "அரசாங்கத்தின் கட்டாய தலையீடு என்ற வெளிக்குறுக்கீடு கரேன் பொறுத்துக் கொள்ள முடியாததை பொறுக்குமாறு செய்ய கூடாது; ஒரு சில மாதங்கள் எந்த உண்மையான மாறுபட்ட நிலைக்கும் உணர்வோ, அறிதலோ இன்றி உணர்வற்றநிலை போன்ற வாழ்விற்கு உட்படுத்தப்பட வேண்டியதில்லை என்று கூறுவதில் எங்களுக்கு தயக்கம் இல்லை" எனக் கூறியது. எந்தக் குறிப்புக்களையும் கரேன் விட்டுச் செல்லவில்லை என்றாலும், கருத்துக் கூறும் நிலையில் இருந்தால் அந்தப் பெண்மணி தன்னுடைய வாழ்வை நீட்டித்துக் கொள்ள விரும்பி இருக்க மாட்டார் என்பதில் தனக்கு ஐயமில்லை என்று நீதிமன்றம் கூறியது. இந்த அடிப்படையில் அவருடைய பெற்றோர்கள் தங்கள் பெண்ணின் அரசியலமைப்பு உரிமையான தனிப்பட்ட (அந்தரங்க) விஷயத்தைப் பயன்படுத்தி, விரும்பியதை செய்யலாம் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதன் பின்னர் உயிர்காக்கும் கருவிகள் அகற்றப்பட்டன. ஆனால் க்வின்லன் அந்தக் உணர்வற்ற நிலையில் ஏழாண்டுகளுக்கு பின்னர்தான் இறந்து போனார்.

ஒரு தனி மனிதர் தனக்கு உயிர் ஆதரவுக் கருவிகள் தேவையில்லை எனக் கூறும் உரிமை பற்றிய அடுத்த முக்கியமான வழக்கு நான்சி க்ரூசனுடையது ஆகும். 1983ம் ஆண்டு இந்த 25 வயது பெண்மணி ஒரு மோட்டார் விபத்தில் மிசோரி சாலையில் அகப்பட்டுக்கொண்டு அதன் விளைவாக உணர்வற்ற நிலையில் இருந்தார். அப்பொழுதும் அவருடைய பெற்றோர்கள்தான், அன்பு செலுத்தும் பெற்றோர்கள் நடந்து கொள்ளுவதுபோலவே, தங்களுடைய மகளின் உயிரை வெறுமே காக்கும் கருவிகளை அகற்றிவிட வேண்டும் என்று கோரினர்.

தங்கள் மகள் தெரிவித்த கருத்துக்களின் அடிப்படையில் இக்கோரிக்கையை முன்வைப்பதாகவும் அவர்கள் கூறினர். செயற்கை முறையில் நான்சி குரூசனுக்கு மருத்துவம் நடந்தி, உயிர்தரிக்க வைத்திருந்த மருத்துவமனை பெற்றோரின் கோரிக்கையை மதிக்க விரும்பவில்லை; எனவே நீதிமன்றத்திற்கு வழக்கு எடுத்துச் செல்லப்பட்டது. விசாரணை முடிந்தவுடன் நீதிமன்றம் மருத்துவமனைக்கு உயிர் ஆதரவு தரும் கருவிகளை அகற்றுமாறு உத்திரவிட்டது; இந்த வழக்கிலும் டெர்ரி ஷியாவோ வழக்கு போலவே கருவிகள் செயற்கையாக உணவு அளிப்பதற்கும், உடல் நீர்த்தன்மை தக்க வைப்பதற்கும் என்று இருந்தது. அதை எதிர்த்து மாநில அரசாங்கம் நான்சி குரூசனுடைய கருத்துக்கள் போதுமான வெளிப்படை தன்மையை கொண்டிருக்கவில்லை என்று வாதிட்டு மேல் முறையீடு செய்தது. மிசோரி தலைமை நீதிமன்றம் மாநில அசரசாங்கத்தின் கருத்தை ஏற்று கீழ் நீதிமன்ற முடிவான உயிரை முடித்தலை மாற்றிவிட்டது. பின்னர் அமெரிக்க தலைமை நீதிமன்றத்திற்கு மேல்முறையீடு வந்தது.

ஒரு பெரும்பான்மை முடிவின்படி மிசோரி தலைமை நீதிமன்றத்தின் தீர்ப்பு உறுதிப்படுத்தப்பட்டது; உயிர்காக்கும் கருவிகளை அகற்ற, "தெளிவான, நம்பத்தகுந்த" நோயாளியின் விருப்பம் நியாயமானதுதான் என்றும் தனிப்பட்ட (அந்தரங்க) உரிமைகள் மீறல் இதில் இல்லை என்ற வாதத்தையும் தலைமை நீதிமன்றம் ஏற்றுக் கொண்டது. இந்த வழக்கு நடைமுறை அடிப்படையில் தீர்வு காணப்பட்டது. தலைமை நீதிமன்றம் வெளிப்படையாக "அமெரிக்க அரசியலமைப்பு ஒரு அறிவுத் திறனுடன் செயல்படும் மனிதருக்கு, உயிர்காக்கும் கருவிகளை மறுக்கும் உரிமைகளை அரசியலமைப்பில் பாதுகாப்புக் கொடுக்கும் என்று கருதுகிறோம்." எனக் கூறிற்று.

இப்பெரும்பான்மை தீர்ப்பில் இருந்து விலகிய, ஆனால் முக்கியமான, கருணை நிறைந்த கருத்தை கூறிய தலைமை நீதிமன்ற நீதிபதி வில்லியம் பிரென்னன், நான்சி க்ரூசன் தேவையில்லாத (விருப்பமில்லாத) மருத்துவக் கவனத்தில் இருந்து விடுவிக்கப்படவேண்டும் எனக் கோரும் உரிமைக்கு மிசெளரி மாநிலத்தில் உள்ள வழிவகைகள் "ஏற்கமுடியாத சுமைகளாக" உள்ளன என்று தெளிவுடன் வாதிட்டார். மற்றொரு பெரும்பான்மையில் இருந்து விலகிய கருத்தில் நீதிபதி ஜான் பால் ஸ்டீவின்ஸ் மிசோரி மாநிலம் வலியுறுத்திக் காக்க உள்ள வாழ்வின் தரம் என்ற முக்கியமான பிரச்சினையை எழுப்பினார். மிகப் பெரும் முறையில் உள்ள சாட்சியங்கள் நான்சி க்ரூசன் "சுற்றி என்ன நடக்கிறது என்றே தெரியாத நிலையில்தான் இருப்பதை" உணர்த்துகிறது என்றும் இதிலிருந்து மீட்பு என்பது இயலாது என்பதும் தெரியவருகிறது என்றார். திருமதி க்ரூசனை உயிரோடு வைக்க வேண்டும் என்பதின் மூலம் மிசோரி மாநிலம் "இறக்கும் நபர்களிடம் வாழ்வின் பொருள்ள பற்றி விவாதத்திற்குரிய, ஆட்சேபணைக்குரிய பார்வையை சுமத்துகிறது" என்றும் அவர் கூறினார். மேலும் ஸ்டீவன்ஸ், மிசோரி மாநிலத் தலைமை நீதிமன்ற நீதிபதி சார்ல்ஸ் பிளாக்மர் அங்கு பெரும்பான்மைக்கு எதிராக விலகல் தீர்ப்பில் கூறிய கருத்துக்களையும் உவந்து மேற்கோளிட்டார்.

"உயிரைக்காத்திடல் என்பது வாழ்வின் தரத்தை கருத்திற்கொள்ளாமல் முழுமையாக ஏற்கப்படவேண்டும் என்பது பொருந்ததாது. விசாரணை நீதிபதி நான்சியின் நிலைமியல் முன்னேற்றத்திற்கு எந்த வாய்ப்பும் இல்லை என்று கூறியிருக்கும் வழக்கின் பின்னணித்தன்மையில் இந்த அறிக்கையைக் கொடுக்கிறேன். முக்கியக் கருத்தும் இந்த முடிவை ஏற்றுக் கொள்கிறது. அசாதாரணமான மருத்துவ வசதி கொடுக்கப்படும்போது இது பற்றிய முடிவுகள் எடுக்கப்படும் முன் எத்தகைய வாழக்கை தரம் இருக்கும் என்பதையும் பரிசீலப்பது உகந்ததாகும். இத்தகைய விஷயங்களில் நீதிமன்றத்திற்கு வராமல் முடிவெடுத்தவர்கள் உறுதியாக வாழ்க்கை தரத்தை கணக்கில் எடுத்துக் கொள்ளுகின்றனர்; நோயாளிக்கு உவப்பு இல்லாத தன்மையின் விளைவுகளை சமன் செய்யும் வகையில் அவை எடுக்கப்படுகின்றன. நான்சி வலி பற்றிய உந்துதலுக்கு விளைவு கொடுக்கக் கூடும் என்பதற்கு சான்று உள்ளது. தன்னுடைய சுற்றுப்புறம் பற்றி அவருக்கு ஏதேனும் தெரிந்தால், அவருக்கு வாழ்வு நரகம் போல்தான் இருக்கும். தன்னுடைய நிலைமயை மாற்றுவது பற்றி ஏதும் பேசவோ செய்யவோ இயலாமல் அவர் உள்ளார்."

அமெரிக்க தலைமை நீதிமன்றத்தின் தீர்ப்பை அடுத்து, மிசோரியில் கூடுதலான விசாரணைகள் நடத்தப்பெற்று பெண்ணின் விருப்பம் பற்றி பெற்றோர்கள் கூறியது பற்றி நிலைநிறுத்த கூடுதலான சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர். மிசோரி மாநிலம் பின்னர் நான்சி க்ரூசன் வாழவிரும்பவில்லை என்பதற்கான "தெளிவான, நம்பிக்கையான சாட்சியங்கள்" இருப்பதாக ஒப்புக் கொண்டது. உணவு செலுத்தும் குழாய்கள், உடலில் நீர் இருப்பதற்கான குழாய்கள் அகற்றப்பட்ட பின்னர், இரண்டு வாரங்களில் க்ரூசன் இறந்துவிட்டார்.

ஷியாவோ வழக்கை ஆய்ந்தால், மருத்துவ அறிவியல், அரசியலமைப்பு சட்டம் மற்றும் அறநெறி அனைத்தும் டெர்ரி ஷியாவோ, அவருடைய உயிரைக்காக்க தேவையற்ற முயற்சிகளில் இருந்து விடுவிக்கப்படலாம் என்பதற்கு ஆதரவாக உள்ளன. வழக்கின் உண்மைகளிலேயே அசாதரணமாக, அமெரிக்க அரசாங்கம் மற்றும் பிளோரிடா மாநில அரசாங்கம் டெர்ரி ஷியாவோவை உயிர்ப்பாதுகாப்பு கருவிகளில் வைத்திருக்கும் கட்டாயம் ஏதும் இல்லை. இந்தப் பிரச்சினைக்கான காரணம் சட்டத்திலோ, அறநெறியிலோ இல்லாமல் அரசியலில்தான் உள்ளது.

அமெரிக்க வரலாற்றிலேயே முதல் தடவையாக அதன் அரசாங்கம் சமய அடிப்படையில் சமூக வாக்களார்களை திரட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. மதசார்பற்ற தன்மை புறக்கணப்பு, இப்பொழுதுள்ள ஜனாதிபதி புஷ்ஷை ஒரு சமய புத்துயிர்ப்பு இயக்கத்திற்கு ஆக்கம் தரும் வகையில் கொள்ளப்படும் முயற்சிகள் அமெரிக்க வரலாற்றில் முன்னோடி இல்லாத தன்மையில் அமைந்துள்ளன. அமெரிக்க குடியரசின் அரசியல் அமைப்பின் அடிப்படைகளுக்கு முற்றிலும் விரோதமான முறையில், புஷ் நிர்வாகம் திருச்சபையையும் அரசாங்கத்தையும் ஒன்றாக இணைக்கும் முயற்சியை பிரதிபலிக்கிறது; இத்தகைய வளர்ச்சி அமெரிக்க வரலாற்றில் பேரழிவு தரும் விளைவுகளை கொடுக்கும். புஷ்ஷும், குடியரசுக் கட்சியும் இடைவிடாமல் அரசியல் மற்றும் சட்டபூர்வ முடிவுகளுக்கு, பைபிள் (விவிலியம்) தான் தக்க ஆதாரமுடைய வழிகாட்டி என்று கூறுவது தர்க்க ரீதியாக மதசார்பற்ற அரசியலமைப்பை நிராகரித்து, அதன் நலன்களையும் குறைத்து விடும். அரசியலில் கூட்டம் திரட்டுவதற்கு சமயத்தை கருவியாக பயன்படுத்துவது தவிர்க்கமுடியாமல் முதலாளித்துவ ஜனநாயக முறையின் அடிப்படை அமைப்புக்கள் முறிவதற்கும் வழியாகிவிடும்; பலவிதமான சமூக மோதல்களை தூண்டுவதற்கும் வழிவகுக்கும்.

ஆனால் அதிகாரபூர்வ ஆதரவாளர்களின் போலித்தனமும், பாசாங்குத்தனமும் இருந்தபோதிலும், கார்ல் ரோவ் மற்றும் அவருடைய அடியாட்களின் திட்டத்தின் விளைவாகத்தான் அடிப்படை வாதத்தின் செல்வாக்கு அரசியலில் பெருகி வருகின்றது எனக் கூறுவது எளிதில் விடைகாண்பது போல் இருக்கும். ஜனநாயக மனசார்பற்ற தன்மையின் முறிவு என்பது ஆழ்ந்த சமூக வழிவகைகளின் வெளிப்பாடு ஆகும்; அதன் ஆதாரம், அமெரிக்க சமுதாயத்தில் கடந்த 25 ஆண்டுகளில் மிகப் பெரிய முறையில் பெருகியுள்ள மாற்றங்களில்தான் காணப்பட முடியும்.

அமெரிக்க சமுதாயத்தின் ஒரு குறுகிய பிரிவு, அதன் ஆளும்தட்டு செல்வக் கொழிப்பை காண்பதும் அதேநேரத்தில் மத்திய சமூகப் பிரிவான, மரபார்ந்த வகையில் ஜனநாயக சார்புடைய முக்கிய அடித்தளமான குட்டி முதலாளித்துவ பிரிவு அழிவதும், சமூகத்தில் பொருளாதார துருவப்படுத்தலும் முதலாளித்துவ ஜனநாயகத்தின் ஆதரவாளர் தொகுப்பை பாரியளவு அரித்துள்ளது. மக்களுக்கு உண்மையான நலம் நிறைந்து பொருளாதார, சமூக திட்டங்களை கொடுக்க முடியாத நிலையிலும், வாய்க்கும் கைக்கும்கூட போதுமான ஊதியம் இன்றி பாதுகாப்பற்று வாழும் மக்களை பெருகிய முறையில் எதிர்கொண்டிருக்கும் நிர்வாகம் வேறு வழியின்றி ஒரு மாற்றாக, சமயத்தை மக்கள் ஆதரவைப் பெறுவதற்கு பயன்படுத்த முயல்கிறது.

முதலாளித்துவமுறை பொருளாதார முறையின் அடிப்படையில் ஓர் உண்மையான பரந்த திட்டத்தை, குடியரசுக் கட்சியை போன்றே அளிக்க இயலாத ஜனநாயகக் கட்சியும், புஷ் நிர்வாகம் சமயத்தை திரித்து பயன்படுத்துக் கொள்ளுவதை போலத்தான் தானும் செய்யும். ஒருவர் பின் ஒருவராக ஜனநாயகக் கட்சியின் முதுகெலும்பு அற்றவர்கள் தங்களுடைய சமயச்சார்புகளை வெளிப்படுத்திக் கொள்ளுகின்றனர். இவ்வாறு செய்கையில் அவர்கள் தங்களுடைய, நேர்மையற்ற, மடத்தனமான தன்மையைத்தான் வெளிப்படுத்திகின்றனர் என்பதோடு குடியரசுக்கட்சி, மற்றும் கிறிஸ்துவ வலசாரிகளின் கரங்களையும் வலுப்படுத்துகின்றனர்.

முதலாளித்துவக் கட்சிகளின் பிற்போக்கான அரசியல் இயக்கம் தெளிவாகவே புலப்படுகிறது. ஆனால் தங்களுடைய ஆழ்ந்த அரசியல் உணர்வு வெளிப்பாடு ஒரு புறம் இருக்க, எந்த அளவிற்கு மக்களுடைய பரந்த தொகுப்பிடையே இது எதிர் கருத்தை ஏற்படுத்தியுள்ளது? டெர்ரி ஷியாவோவின் வழக்கில் ஏதேனும் தெரிந்து கொள்ளுகிறோம் என்றால், அது கிறிஸ்துவ வலசாரிகள் அமெரிக்க மக்களில் பெரும்பாலனவரிடம் மிகக் குறைந்த ஆதரவைத்தான் கொண்டுள்ளது என்பதேயாகும்.

அரசாங்கம் மற்றும் செய்தி ஊடகங்களும், "டெர்ரியைக் காப்பாற்றுக" என்ற பிரச்சாரத்திற்காக மேற்கொண்ட அனைத்து முயற்சிகளும் ஒரு புறம் இருக்க, அமெரிக்க மக்கள் அதை ஏற்கத் தயாராக இல்லை. தங்களுடைய வாழ்வின் அனுபவங்கள், வயதான பெற்றோர்கள், தீராத நோயுடைய வாழ்க்கைத் துணை போன்றவை, அவர்களை சமய தன்னலக் குழுக்கள், குடியரசுக் கட்சியினர் ஆகியோரிடம் இருந்து முற்றிலும் வேறுபடுத்தியுள்ளன. கருத்துக் கணிப்பாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்கையில் மிகப் பெரிய முறையில் மக்கள் மைக்கேல் ஷியாவோவின் நிலைபற்றி பரிவுணர்வைத்தான் தெரிவித்தனர். பலரும் அவருடைய நிலைமையில் தாங்களும் அவர் எடுத்த முடிவான உயிர்காக்கும் கருவிகளை அகற்ற வேண்டும் என்ற முடிவிற்குத்தான் வந்திருப்பர் என்றும் கூறினர்.

இருந்தபோதிலும் கூட, அமெரிக்க தொழிலாள வர்க்கத்திடையே உள்ள அரசியல் ஒழுங்கமைப்பில் சமயத்தின் வளர்ச்சி கண்கூடாகப் பெருகி இருப்பதை மறுத்தல், கவனமற்ற மற்றும் குறுகியநோக்குடைய பார்வை இவற்றின் வெளிப்பாடாகிவிடும். இந்த வளர்ச்சி கவனத்துடன் ஆராயப்பட்டு, விளக்கப்பட வேண்டும். இந்த தன்மையை வெறும் சமய புத்துயிர்ப்பின் விளைவு என்றோ முதலாளித்தவ அவநம்பிக்கை அரசியல்வாதிகளின் தீயசெல்வாக்கில் தோன்றியது என்றோ, கெடுதல் நிறைந்த செய்தி ஊடகத்தின் செயற்பாடு என்றோ மட்டும் தள்ளிவிடக் கூடாது. எப்பொழுதும் போல், வாழ்க்கையின் உண்மையான நிலைகளில்தான் நம்பிக்கை கோட்பாடுகளின் ஆதாரங்கள் கண்டுபிடிக்கப்பட வேண்டும்.

மிகச் சுருக்கமாகத்தான் என்றாலும் கூட, அமெரிக்க வாழ்வில் சமயத்தின் பெருகிய செல்வாக்கிற்கான காரணத்தை விளக்குவதற்கு, கடந்த 25 ஆண்டுகளில் கிட்டத்தட்ட தொழிலாளர் இயக்கம் முழுவதும் முற்றிலும் வீழ்ச்சியடைந்துள்ளதின் தொலைவிளைவை வலியுறுத்திக்கூறுவேன். தங்களுடைய அரசியல் திவால் தன்மை, கோழைத்தனத்தை, 1980களின் முந்தைய பகுதியில், அரசாங்கத்தின் ஆதரவுடன் நிகழ்ந்த பெருநிறுவன தாக்குதலுக்கு எதிராக வெளியிட்ட தன்மையில், தொழிற்சங்கங்கள் அமெரிக்காவில் ஒரு முக்கியத்துவம் வாய்ந்த சமூக சக்தி என்ற நிலையில் இருந்து மறைந்து விட்டன.

மக்கள் இயக்கத்தின் முக்கியமான வடிவமைப்பு என்ற நிலை கிட்டத்தட்ட மறைந்து போனது மற்றும் பெருநிறுவன நிறுவனத்திற்கு மக்களின் எதிர்ப்பும் குறைந்து போனது, தாங்கள் வாழும் பொருளாதார அமைப்பில் தொழிலாளர்களுக்கு இடையே இருக்கும் உறவுகளின் தன்மையை தீவிரமாக மாற்றிவிட்டது. கடந்த காலத்தில் இந்த அமைப்பை குறைந்த அளவு என்றாலும், ஒரு வர்க்க முறை என்ற அமைப்பின் கீழ் எதிர்க்கும் திறனைக் கொண்டிருந்த இவர்கள், தனிப்பட்ட, ஒதுங்கிய நபர்களாகத்தான் எதிர்கொள்ளுகின்றனர். இந்த நிலையில் சமூக இணைப்பின் ஒரு பகுதி என்றில்லாமல் தனியே, தத்தம் நிலைப்பாட்டில் இருந்து பிரச்சினைகளை எதிர்கொள்ளுகின்றனர்.

தொழிலாளர்களுடைய வாழ்வில் இருக்கும் பெரும் சமூக வெற்றிடத்தை நிரப்புவதற்கு சமயம் உதவுகிறது. வர்க்க இயக்கத்தின் ஒரு பகுதியாக தங்களுடைய நலன்களுக்கு போராட வகையின்றி, தொழிலாளர்கள் தாங்கள் தனித்தே போராட வேண்டும் என்று நம்புகின்றனர். எனவேதான் "ஒரு மூலையில்" ஏசுவையும் இருத்திக் கொள்வோம் என்ற கருத்தின் முக்கியத்துவம் வாழ்க்கையின் காயங்களில் இருந்து பாதுகாத்துக் கொள்ளவும், ஊக்கத்தை இரகசியமாக அளிக்கவும் உதவுகிறது.

பின்னர் இது எவ்வாறு கடக்கப்படலாம்? பொது நிலைமைகள் தவிர்க்க முடியாமல் சமூக போராட்டங்களுக்கும், தவிர்க்க முடியாமல் புதுப்பிக்கப்பட்ட வர்க்க சக்திகளுக்கும் வழிவகுக்கும் என்பதுதான் நல்ல செய்தி. பிற்போக்கு சக்திகளின் தொடரும் தன்மை சமூகப் போராட்டங்கள் மற்றும் பெருகிய வர்க்க உணர்விற்குத் தடையாக உள்ளது. ஆனால் அது ஒன்றும் கடக்க முடியாத தடையல்ல. இறுதி ஆய்வில் முதலாளித்துவ சமுதாயத்தில் உள்ள புறநிலையான முரண்பாடுகள் மக்களை ஒரு போராட்டத்தில் ஈடுபடுத்தி உண்மையான புத்திஜீவிதமான, சமூக வாழ்வை விரைவில் கொண்டு வரும் வாய்ப்பை ஏற்படுத்தும்.

ஆனால் புறநிலைரீதியான சக்திகளின் தன்னியல்பான செயற்பாடுகளில் பொதுமக்களை சமயப் புதிர், பிற்போக்குத் தன்மை இவற்றின் பிடியில் இருந்து விடுவிப்பது உள்ளது என்ற மேம்போக்கான, அறியாமை நிறைந்த தன்னையே தோற்கடித்துக்கொள்ளும் நம்பிக்கையை கொள்வது முட்டாள்த்தமானதாகும். இப்பொழுது, வரலாற்றின் ஒவ்வொரு கட்டத்திலும் இருப்பதுபோலவே முன்னேற்றத்தையும் போராடித்தான் பெறவேண்டும்.

இந்தப் பூசல், அவை முக்கியமாயினும்கூட, தொழிலாளர்களை இணைக்கும் முயற்சிகளோடு மட்டும் நின்றுவிடவில்லை. தொழிலாளர்களை அரசியல் முறையில் ஒழுங்குற ஒரு வர்க்கமாக இணைத்து அவர்களுடைய போராட்டத்தின் புத்திஜீவித கலாச்சார தரத்தை உயர்த்துதல், அறிவியல் சிந்தனையை சமய மூடநம்பிக்கைகள், பின்தங்கிய நிலை இவற்றிற்கெதிராக கொள்ளுதல், அதாவது சடவாத மார்க்சிச உணர்தலை சமூகத்தின் சமூகப் பொருளாதார உறவுகளுக்கு மட்டும் என்றில்லாமல் மனித முழு உணர்வின் அமைப்பு அடிப்படைகள் இவற்றிற்கும் கொள்ளுதல் இன்றியமையாதது ஆகும். கடந்த காலத்தைப் போலவே, சோசலிச இயக்கம் கோட்பாடு, கற்பித்தல் வகையில் அது தொழிலாள வர்க்கத்திற்கு மிகப் பரந்த அளவில் பொறுப்புகளை கொண்டிருக்கிறது என்பதை கட்டாயமாக அறியவேண்டும்.

விஞ்ஞானம், சோசலிச இயக்கத்திற்கு மிகப் பரந்த வகையில் அறிவார்ந்த கருவிகளை கொடுத்துக் கொண்டிருக்கிறது என்பதில் இருந்து பெரும் ஊக்கத்தை நாம் பெறலாம். டெர்ரி ஷியாவோ பிரச்சனையின் மையத்தில் இருக்கும் விஞ்ஞான பிரச்சினையின் முக்கிய தன்மையான நரம்பியல் உடற்கூறு அறிவியலே (Neurobiology), கோட்பாட்டளவில் மகத்தான முன்னேற்றங்களை கண்டுள்ளது என்பது விந்தையான நிலையாகும். சடப் பொருள் தொகுப்பிலேயே பெரும் சிக்கல்கள் நிறைந்த, மூளையின் கூறுபாடுகள் பற்றிய அறிவில் வியத்தகு முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ன. தங்கள் பங்கிற்கு இவை மார்க்சிசத்தால் பிரச்சாரம் செய்யப்பட்ட முழு உணர்வு, அறிதல் இவற்றைப் பற்றிய சடப்பொருள் அறிதலை உறுதிபடுத்துகின்றன. நரம்பியற் கூறுபாடு, அது தொடர்புடைய பகுதிகளில் நிகழும் ஆராய்ச்சி கண்டுபிடிப்புக்கள் சமயப் புதிர் பற்றிய மறு சந்தேகங்களை முறையாக தகர்ப்பது பற்றி ஆளும்தட்டு இவ்வளவு தூரம் அச்சப்படுவதில் வியப்பு ஏதும் இல்லை.

தொழிலாளர் வர்க்கம் விஞ்ஞானத்தின் உதவியில்லாமல் முன்னேற முடியாது. ஆனால் விஞ்ஞானத்தின் வளர்ச்சியே, தொழிலாள வர்க்கத்தின் மூன்னேற்றத்தை பொறுத்துதான் உள்ளது. இன்று, அமெரிக்காவில் அரசியல் பிற்போக்குத் தன்மையின் வளர்ச்சி, விஞ்ஞான ஆராய்ச்சியாளரை முற்றுகைக்கு உட்படுத்தியுள்ளது. ஆனால் தனித்திருக்கும் விஞ்ஞானி தன்னை தனித்துள்ள தொழிலாளர் போலவே காத்துக் கொள்ள இயலாது. இறுதிப்பகுப்பாய்வில், முழுமையான விஞ்ஞான முன்னேற்றம், தனிப்பட்ட ஆராய்ச்சியாளர்களுடைய நிலை பாதுகாப்பு ஆகியவை, ஒரு தொழிலாள வர்க்கத்தின் புதிய புரட்சிகர இயக்கத்தின் மூலம்தான் அடையப்பட முடியும். மிக ஆழ்ந்த வரலாற்று உணர்வின் அடிப்படையில், சோசலிச இயக்கம் தன்னுடைய பதாகையின் கீழ் விஞ்ஞான உண்மையை அனைத்து வடிவங்களிலும் தொடரவும் மனித சமத்துவத்திற்கான போராட்டத்தையும் இணைத்துச் செல்லும்.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved