World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா

The Schiavo case: Bush and Congress trample on science and the Constitution

ஷியாவோ வழக்கு: புஷ்ஷும், காங்கிரஸும் விஞ்ஞானத்தையும் அரசியலமைபையும் மிதித்துத் தள்ளுதல்

By Patrick Martin
23 March 2005

Back to screen version

டெர்ரி ஷியாவோவின் வழக்கு அமெரிக்க தலைநகருக்கு சில தினங்களுக்கும் மீண்டும் தலைமை நீதிமன்றத்திற்கு முறையீடு என்ற முறையிலோ அல்லது காங்கிரஸ் குடியரசுக் கட்சி தலைமை மற்றும் புஷ் நிர்வாகம் நேரடியாக சட்ட முறையில் கடுமையான மூளைபாதிப்பிற்கு உட்பட்டுள்ள பெண்மணிக்கு உயிர் ஆதாரக் கருவிகளை துண்டித்தலை நேரடிச் சட்டபூர்வத்தடை மூலம் நிறுத்தும் முயற்சிகளில் ஈடுபடலாம்.

முன்னோடியில்லாத வகையில் கூட்டரசில் தலையீடு இந்த வழக்கில் இருந்தும்கூட, "டெர்ரியை காப்பாற்றுக" என்ற பிரச்சாரத்தை முன்னின்று நடத்திய வலதுசாரி கிறிஸ்தவ அடிப்படைவாதிகள் விரும்பியிருந்த உடனடி விளைவை அத்தலையீடு கொடுக்கவில்லை. கூட்டரசின் மாவட்ட நீதிபதியான ஜேம்ஸ் விட்டிமோர், ஷியாவோவின் பெற்றோர்களான ரொபேர்ட் மற்றும் மேரி ஷிண்டலரின் வக்கீல் உணவுக் குழாய் மீண்டும் பொருத்தக்கோரிய அவசரகால உத்தரவை பிறப்பிக்க மறுத்துவிட்டார்.

செவ்வாய்க் கிழமை காலையிலேயே நீதிபதி ஜேம்ஸ் விட்டிமோர் கொடுத்திருந்த தீர்ப்பு, ஷியாவோவின் கணவர் மைக்கேலுக்கு ஆதரவாக இருந்தது. கடந்த 15 ஆண்டுகளாக மூளை செயற்பாடற்ற நிலையில் இருந்த தன்னுடைய மனைவியின் உயிர்காப்பு கருவிகளை அகற்றவேண்டும் என்று மைக்கேல் கோரியிருந்தார். பல முறையும் புளோரிடாவின் மாநில நீதிமன்றங்கள் மைக்கேல் ஷியாவோவிற்கு, அவருடைய மனைவியின் சட்டபூர்வ பாதுகாப்பாளர் என்ற முறையில், இந்த உரிமை உண்டு என்றும் டெர்ரி ஷியாவோவே இதற்கு உடன்பட்டிருப்பார் என்றும், அதற்கு ஆதாரமாக அப்பெண்மணி தன்னுடைய கணவர் மற்றும் இரு சாட்சியங்களுக்கு தனக்கு இதயத் தாக்குதல் வருவதற்கு முன்கூறிய கருத்து உள்ளது என்றும், அந்தத் தாக்குதலையொட்டித்தான் அவர் நிலையான உணர்வற்ற நிலைக்கு தள்ளப்பட்டு விட்டதாகவும் நீதிமன்றம் கூறியிருந்தது.

ஷிண்ட்லெர்களின் வக்கீல்கள் உடனடியாக அட்லான்டாவில் இருந்த 11ம் சுற்று நீதிமன்றத்தில், மேல் முறையீடு ஒன்றை பதிவு செய்தனர். அந்த நீதிமன்றம் எந்த தீர்ப்பை அளித்தாலும், தோற்ற கட்சி மற்றொரு முறையீட்டை அமெரிக்க தலைமை நீதிமன்றத்தில் பதிவு செய்யும் என்பது உறுதியாகும்.

திங்கள் அன்று கூட்டரசு நீதிமன்றத்தில் எடுத்துரைத்த வாதத்தில் ஷிண்ட்லெர்களின் வக்கீல்கள் மூன்று அடிப்படை வாதங்களை முன்வைத்தனர்: பைனெல்லாஸ் உட்பிரிவு சுற்று நீதின்ற நீதிபதி ஜோர்ஜ் கிரீர், டெர்ரி ஷியாவோவிற்கு "நேர்மையான, பாரபட்ச விசாரைண கொடுக்கவில்லை" என்றும், சட்டத்தின் முறையான நெறிப்படி, அப்பெண்மணிக்கு கிரீர் "ஒரு சுதந்திரமான வக்கீலை" நியமிக்காததாலும், அவருடைய கணவர் மைக்கேலை அவருடைய சட்டபூர்வ பாதுகாப்பாளர் என அனுமதி கொடுத்ததும் பிழை எனப்பட்டது; மேலும் ஷியாவோவின் உணவு செலுத்தும் குழாயை அகற்றியது, அப்பெண்மணி வளர்ந்து வந்திருந்த ரோமன் கத்தோலிக்க திருச்சபையால் தடைசெய்யப்பட்டுள்ளதால் அவரின் சமயச் சுதந்திரம் உரிமை தடுக்கப்பட்டுள்ளது என்ற வாதமும் முன்வைக்கப்பட்டது.

இந்த மூன்று வாதங்களுமே எவ்வித சட்ட அடிப்படையும் இல்லாமல் உள்ளன. அமெரிக்க வரலாற்றிலேயே மிக ஆழ்ந்த முறையில் ''இறப்பதற்கான உரிமை'' பற்றிய தன்மையை டெர்ரி ஷியாவோவின் வழக்கு கொண்டுள்ளது; கடந்த ஏழு ஆண்டுகளாக 18 நீதிமன்றங்களில் இவ்விசாரணைகள் நடத்தப்பெற்றன. ஒவ்வொரு நீதிமன்ற தீர்ப்பும் மைக்கேல் ஷியாவோவுடைய நிலைப்பாட்டை உறுதிப்படுத்தியது ஆகும். பாரபட்சமற்ற வக்கீல் என்ற வாதத்தை பொறுத்தவரையில், டெர்ரி ஷியாவோ பல சுதந்திர பாதுகாப்பாளர்களின் இந்த பலவித வழக்குகளிலும், விசாரணைகளிலும் நியமித்திருந்தார்; அவர்கள் அனைவருமே அவருடைய கணவரின் முடிவிற்குத்தான் வந்திருந்தனர்: அதாவது அப்பெண்மணி இனி மீளப்பெற முடியாத மூளைச்சேதம் ஏற்பட்டுவிட்டது என்றும் அவரே அத்தகைய வாழ்க்கையை வாழ விரும்பியிருக்க மாட்டார் என்ற முடிவுதான் அது.

மூன்றாம் வாதமான சமயச் சுதந்திரம் என்பது சட்டப்படி பிழையானதும், நகைப்பிற்குரிய சமயவாதமும் ஆகும். ரோமாபுரியில் உள்ள போப்பாண்டவரின் ஆணையை மேற்கோளிடுவது ஒரு சட்டப் புதுமையாகும்; அதுவும் குறிப்பாக சர்வதேச சட்டத்தை நிராகரித்து வெளிப்படையாக அத்தகைய சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் போன்ற நீதிக் குழுக்களின் அதிகாரத்தை, அமெரிக்க அமைப்புக்கள் வெளிநாட்டாருக்கு கட்டுப்பட்டு நடக்கத் தேவையில்லை என்று கூறும் நண்பர்களுடைய நிர்வாகத்திற்கு இது முற்றிலும் பொருந்தாததாகும்.

ஷியாவோவை பொறுத்தவரையில் அவர் ஒன்றும் கத்தோலிக்க வழிபாட்டில் குறிப்பிடத்தக்க வகையில் ஆர்வம் காட்டியவரும் அல்ல; பலரைப் போலவே அவரும் ஒரு பெயரளவு தொடர்புதான் கொண்டிருந்தார் என்பதோடு, திருச்சபைக்கும் ஒழுங்காக சென்றதில்லை. உணவு செலுத்தும் குழாயை அகற்றினால் அப்பெண்மணி பெரிய பாவத்திற்கு உட்பட்டு "அவருடைய அழியா ஆன்மாவிற்கு ஊறு விளையும்" என்ற வாதம் முற்றிலும் மிகுந்த நம்பிக்கையையும், பிற்போக்குத் தன்மையும் உடைய கத்தோலிக்கர்களின் உணர்வை தூண்டுவதற்காகவே எழுப்பப்பட்டுள்ள வாதம் ஆகும். கட்டுப்பெட்டித்தனமான ரோமன் திருச்சபை கூட உணர்வற்ற நிலையில் இருக்கும் ஒரு நபருக்கு செய்யப்படுவதற்கு அவரைப்பொறுப்பாக்குவதில்லை.

மக்களிடைய பெரும் விரோதப் போக்கை ஏற்படுத்தியுள்ள குறுக்கீடு

டெர்ரி ஷியாவோவுடைய "வாழும் உரிமைக்கு" பெரும் மக்கள் ஆதரவு இருப்பதால், அதற்காக இதைச் செய்ய முன் வந்துள்ளோம் என்பதற்கு மாறாக புஷ் நிர்வாகமும், காங்கிரஸ் குடியரசுக் கட்சி உறுப்பினர்களும், மிகப் பரந்த அளவில் பொதுமக்களாலும் மற்றும் ஆளும்தட்டின் குறிப்பிடத்தக்க பிரிவினரால் எதிர்க்கப்படும் ஒரு போக்கில்தான் நடந்து கொண்டிருக்கின்றனர் என்பதற்குப் பெருகிய ஆதாரங்கள் உள்ளன.

ABC News ற்காகவும், CNN, USA Today விற்காகவும் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்புக்கள் இரண்டுமே மிகப் பரந்த தீய அவதூறுப் பிரச்சாரத்தைக் கிறிஸ்துவ அடிப்படைக் குழுக்களும் செய்தி ஊடகத்தின் சில பிரிவுகளும் காட்டியபோதிலும் அவற்றைப் பொருட்படுத்தாது, மைக்கேல் ஷியாவோ எடுத்த நிலைப்பாட்டிற்கு ஆதரவாக உள்ளதைக் காட்டுகின்றன. ABC News இன் கருத்துக்கணிப்பு முடிவுரையாக கூறுவதாவது: "டெர்ரி ஷியாவோ வழக்கில் கூட்டாட்சியின் தலையீட்டை அமெரிக்கர்கள் பரந்த அளவிலும் வலுவாகவும் ஏற்கவில்லை; மிகப் பெரும்பாலான மக்கள் காங்கிரஸ் தன்னுடைய வரம்புகளை அரசியல் ஆதாயத்திற்காக மீறியுள்ளது என்ற கருத்தைத்தான் தெரிவித்துள்ளனர்."

ABC News கருத்தில் பங்கு பெற்றவர்கள் உணவு செலுத்தும் குழாய் அகற்றப்பட்டதற்கு 63-28 என்ற விதத்தில் ஆதரவு கொடுத்துள்ளனர்; 70 சதவிகிதத்தினர் காங்கிரஸ் தலையிட்டது தவறானது என்றும் 67 சதவிகிதத்தினர் அரசியல் காரணத்தை கருத்திற் கொண்டுதான் காங்கிரஸ் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது (அதாவது பழைமைவாத வலதுசாரிகளை திருப்திப்படுத்துவதற்கு) என்று கூறியுள்ளனர்.

குடியரசுக் கட்சியினரின், மற்றும் இந்தப் பிரச்சினையில் எந்த பொது நிலைப்பாட்டையும் தவிர்க்க விரும்பியிருந்த பல ஜனநாயகக் கட்சியினரின் கூற்றுக்களையும் எதிர்க்கும் வகையில், மைக்கேல் ஷியாவோவை ஆதரிப்பவர்கள் அவரை எதிர்ப்பவர்களைவிட இந்த விஷயத்தின் கவனத்தையும் உணர்வையும் செலுத்தி இருக்கின்றனர். "மக்களுடைய உணர்வின் தீவிரம் .... ஷியாவோவின் கணவர் பால்தான் உள்ளது" என்று ABC News கருத்துக் கணிப்பு கண்டறிந்துள்ளது.

CNN/USA Today கருத்துக் கணிப்பும் இதேபோன்ற உணர்வுகளைத்தான் கண்டறிந்துள்ளது: 56-31 பெரும்பான்மை டெர்ரி ஷியாவோவின் உணவு செலுத்தும் குழாய் அகற்றப்பட்டதற்கு ஆதரவைக் கொடுத்துள்ளது; இதில் பெரும்பாலானவர்கள் குடியரசுக் கட்சியைச் சேர்ந்தவர்களாகவும், ஒழுங்காக திருச்சபைக்குச் செல்லுபவர்களும் உள்ளனர். பெரும்பாலானவர்கள் தாங்களும் மைக்கேல் ஷியாவோ எடுத்த முடிவைத்தான், அவர்களுக்கும் ஒரு குழந்தையோ, வாழ்க்கைத்துணையோ டெர்ரியின் நிலையில் இருந்திருந்தால் எடுத்திருப்பர் எனக் கூறியுள்ளனர்.

முக்கியமான செய்தித்தாள்களின் தலையங்கங்கள் இந்நிகழ்விற்கு கொடுத்துள்ள பிரதிபலிப்பு ஒரேமாதிரியான எதிர்மாறான தன்மையைத்தான் கொண்டுள்ளது. வாஷிங்டன் போஸ்ட், நியூயோர்க் டைம்ஸ், USA Today, சான் பிரான்ஸிஸ்கோ கிரானிக்கில் மற்றும் டஜன் கணக்கிலான செய்தித்தாள்கள் காங்கிரசின் தலையீட்டை அரசியல் உந்துதல் பெற்றது, அரசியலமைப்பிற்கு விரோதமானது எனக் கண்டனத்திற்கு உட்படுத்தியுள்ளன. லாஸ் ஏஞ்சல் டைம்ஸ் காங்கிரசில் நடைபெற்ற வாக்கெடுப்பை "நள்ளிரவு ஆட்சிகவிழ்ப்பு" என்று விவரித்ததுடன், "காங்கிரஸ் ஒரு புதிய பாதையை அமைத்துக்கொண்டு அரசியலமைப்பின் கூட்டரசு முறையைத் திருத்தி ஒரு நீதிமன்றத் தீர்ப்பை மாற்ற முயலுகிறது. மேலும் இது ஒரு குடும்பச்சட்டம், அரசியலமைப்பு நெறியில் முன்பு ஒரு குற்றத்தைச் செய்தவரை தப்புவிப்பதற்கு கையாளப்பட்ட சட்டம் இருந்தமை தடை செய்யப்பட்டது; இது அதற்கு ஒப்பானதாகும்." என்று விளக்கியுள்ளது.

மிக ஆர்வத்துடன் ஈராக்கியப் போரையும் புஷ்ஷின் கொள்கைகளையும் பொதுவாக ஆதரிக்கும் வலதுசாரி பில்லியனரான ரூபெர்ட் மர்டோக்கின் நியூ யோர்க் போஸ்ட் கூட மிகக் கடுமையான முறையில் ஒரு விமர்சித்து அறிவித்தது: "காங்கிரஸ் ஒரு வார இறுதிக் கூட்டத்தைக் கூட்டி முன்னோடியாக இருக்கக் கூடிய சட்டத்தை, நீண்ட கால விளைவுகளை பற்றிக் கவலைப்படாமல், ஒரு தனி நபருக்காக இயற்றியது ஆழ்ந்த உளைச்சலை தருகிறது. இது அரசியல் சந்தர்ப்பவாதம்? அதில் சிறிதும் சந்தேகம் இல்லை."

காங்கிரஸ் குடியரசுக் கட்சியினரின் திமிர்த்தனமான அரசியல் உந்துதல் மன்றப் பெரும்பான்மை தலைவர் டாம் டீலேயினால், ஒரு கிறிஸ்துவ அடிப்படைக் குழுவான Family Research Council இன் முன் திங்கள் அன்று பேசும்போது வெளிப்பட்டது. "ஆண்டவன் நமக்குக் கொடுத்த ஒரு பொருள் டெர்ரி ஷியாவோ; இது அமெரிக்காவில் என்ன நடக்கிறது என்பதின் காட்சியை உலகிற்கு உயர்த்திக் காட்டும். இந்தப் பிரச்சினைதான் அமெரிக்காவில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது; பழைமைவாத இயக்கத்திற்கு எதிரான தாக்குதல்கள், எனக்கு எதிரான தாக்குதல்கள் மற்றும் பலருக்கு எதிரான தாக்குதல்கள் ஆகும்" என்று அவர் குறிப்பிட்டார். "ஒரு முழுக் கூட்டமும் தேசம் முழுவதும் குவிந்து நாம் நம்புவதையெல்லாம் அழிக்கும் முயற்சியில் இணைந்து செயல்படுகிறது" என்றும் அவர் கூறினார்.

சட்டவிரோதமான செயற்பாடுகள், செல்வாக்கை பயன்படுத்துதல் என்று இந்திய சூதாட்ட நலன்களின் சார்பில் தடுமாறி நிற்கும் அவருடைய அரசியல் நிலைப்பாட்டைவிட கூடுதலான தன்மையைத்தான் டிலீயின் கருத்துக்கள் வெளிப்படுத்துகின்றன. வலதுசாரி தீவிரத்தின் மிகப் பெரிய மனச் சிதைவை அவை உறுதிபடுத்துகின்றன; உத்தியோகபூர்வமாக வாஷிங்டனில் அதிகாரத்தின் அனைத்து நெம்புகோல்களையும் தன்வயத்தில் கொண்டிருந்தபோதிலும், தங்கள் குழுவுடைய தனித்துவிட்ட நிலையையும், மதிப்பிழந்தநிலையையும் அது நன்கு உணர்ந்துள்ளது.

புஷ்ஷின் சொந்த நிலைப்பாடும் இதேபோன்ற வெளிப்பாட்டைத்தான் புலப்படுத்துகிறது. பெறுநிறுவன கட்டுப்பாட்டிற்குள் இருக்கும் செய்தி ஊடகத்திற்குள்ளேயே விடுமுறையில் தன்னுடைய கிராபோர்ட் பண்ணையில் இருந்து வாஷிங்டனுக்கு பறந்து வந்து ஷியாவோ சட்ட வரைவில் கையெழுத்திட்டுள்ள பண்பாடற்ற தன்மை பற்றிய வர்ணனைகள்தான் வந்துள்ளன. இதுபோன்று விடுமுறையை நீக்கி வந்தது புஷ்ஷிற்கு இதுவே முதல்தடவையாகும். ஆகஸ்ட் 2001ல் செப்டம்பர் 11 தாக்குதல்களுக்கு ஒரு மாதம், முன்னால் CIA இடம் இருந்து அமெரிக்காவிற்குள் அல் கொய்தாவின் தாக்குதல்கள் நிகழ உள்ளன என்று ஒரு நீண்ட குறிப்பை பெற்றபோது கூட விடுமுறையை குறைக்காத இழி நிலையில்தான் அவர் இருந்தார்.

பகுத்தறிவற்ற தன்மை, அறியாமை இவற்றிற்கான அழைப்பு

டெர்ரி ஷியாவோ பற்றிய வலதுசாரிப் பிரச்சாரத்தின் மிகக் குறிப்பிடத்தக்க கூறுபாடுகளில் ஒன்று, இது விஞ்ஞானத்தை (அறிவியலை) வெளிப்படையாக புறக்கணித்து, அடிப்படை உண்மைகள், சாட்சியங்கள் ஆகியவற்றை பற்றி மிகத் தவறான வகையில் புரிந்து கொண்ட தன்மையில் வெளிப்பட்ட உணர்வுவெறியை தழுவி நின்றதாகும்.

டெர்ரி ஷியாவோ இனித் திருப்பிப்பெற முடியாத அளவிற்கு மூளைச் சேதத்தை அடைந்துவிட்டது பற்றி மருத்துவ வல்லுனர்களிடையே, கிட்டத்தட்ட எந்த கருத்து வேறுபாடும் இல்லை. தொடர்ந்து உணர்வற்ற நிலையில் இருப்பது ஒரு கோமாவைவிடக் கடுமையான நிலையாகும்; கோமாவில் மூளை தூங்கி (asleep) இயல்பாக விழித்துக்கொள்ளும் தன்மையை இழந்த போதிலும் மீளமுடியாத அளவிற்கு சேதமாகிவிடுவதில்லை.

மருத்துவ இலக்கிய செய்தி ஊடகங்களின்படி, கடந்த மூன்று தசாப்தங்களில் தொடர்ச்சியான உணர்வற்ற நிலையில் இருந்த நூறாயிரக்கணக்கான அத்தகைய துயரமான நிலையில் இருந்து ஒரே ஒரு நோயாளிதான் ஓரளவு குணம் பெற்றார் எனத் தெரிய வருகிறது. இந்த நபர் ஒரு மினியபோலிசின் போலீஸ்காரர் ஆவார்; இவர் கடமையில் இருக்கும்போது 1979ல் சுடப்பட்டார்; 20 மாதங்களுக்கு பின்னர் ஓரளவு தேறி உணர்வு வந்தபோதும், பேசவோ, நடக்கவோ இயலாமல், பெரும் கஷ்டத்துடன் விழுங்க மட்டுமே முடிந்தது. ஐந்து ஆண்டுகளுக்கு பின்னர் வேறு எந்தவித முன்னேற்றமும் இன்றி அவர் இறந்து போனார்.

தொடர்ச்சியான உணர்வற்ற நிலை என்பதை வரையறுப்பது, மனித ஆளுமையை நிர்ணயிக்கும் இடமாக இருக்கும் அதன் மூளை வட்டம் (cerebral cortex) பொதுவாக பிராணவாயு கிடைக்காததால், மிகப் பெரிய அளவில் சேதத்திற்கு உட்படுவதுதான். சிந்தனை, உணர்வு, நினைவு, ஆகியவற்றை கட்டுப்படுத்தும் சிக்கலான உயிரணு கட்டமைப்புக்கள் அழிக்கப்பட்டு சிலநேரம் சிதைந்தும் விடுகின்றன.

ஆயினும்கூட, அமெரிக்க கத்தோலிக்க பிஷப்புக்களின் செய்தித் தொடர்பாளர் ஷியாவோவை "உணர்ந்து கொள்ளுவதில் கஷ்டங்களை கொண்டுள்ள ஒரு பெண்மணி" என்று விவரித்துள்ளார்.

ஷியாவோவின் மூளையை மின்சாரம் மூலம் கண்காணித்ததில் மூளை வட்டத்தில் எந்தவித செயற்பாடும் இல்லை என்பது தெரியவந்துள்ளது. சில நேரம் இமைகள் மூடித் திறத்தலும், எப்பொழுதாவது தோன்றும் சிரிப்புக்களும், விழித்து எழுத்திருப்பது போன்ற தோற்றமும் உணர்வற்றநிலையில் இயல்பாக உண்டு; இவை தன்னிச்சையாக நிகழ்பவையே ஒழிய முழு உணர்வுடன் ஏற்படுவதில்லை.

மறுக்க முடியாத அறிவியல், மருத்துவச் சான்றுகளின் மதிப்பைக் குறைக்கும் வகையில் கிறிஸ்துவ அடிப்படை வாதிகள் ஒரு ஒளிப்படநாடா பதிவைச் சுற்றுக்குக் கொடுத்துள்ளனர்; இது கவனமாக தொகுக்கப்பட்ட முறையில், டெர்ரி ஷியாவோ விழித்துக் கொண்டிருப்பது போலவும், நடப்பதை அறிபவர் போலவும், பார்வையாளரை உணர்வது போலவும் தோன்றும். இந்தச் சுருக்கமான காட்சி பல மணிநேரப் பதிவில் இருந்து சுருக்கி தொகுக்கப்பட்டது ஆகும்; அதை முழுமையாக பார்த்தால் திருமதி ஷியாவோவிற்கு அறிதல் செயல்பாடுகள் இல்லை என்பதும் எதற்கும் விடையிறுக்கும் தன்மை இல்லை என்பதும் நன்கு தெரியவரும்.

அவருடைய நிலைமையின் ஒரு விளைவு என்னவென்றால் டெர்ரி ஷியாவோவை பொறுத்தவரையில், உணவுக் குழாய் எடுக்கப்பட்டதின் விளைவாக அவர் வலியோ, தாகம், பசி போன்ற உணர்வுகளையோ உணரமாட்டார். தன்னல அரசியல்வாதிகளான டிலே மற்றும் செனட் பெரும்பான்மை தலைவர் பில் பிரிஸ்ட் போன்றவர்களை இந்த உண்மைகூட, எப்படி டெர்ரி ஷியாவோ இப்பொழுது "தாகத்தினாலும் பசியினாலும்" வாடுகின்றார் எனக் கூறுவதை தடுத்து நிறுத்தவில்லை.

அதிலும் குறிப்பாக பிரிஸ்ட் மிக இழிவான பங்கைச் செய்துவருகிறார்; செனட்டிற்கு தேர்ந்தெடுக்கப்படுவதற்கு முன் புகழ்பெற்ற இதய அறுவை சிகிச்சை செய்யும் ஒரு மருத்துவர் என்ற தன்னுடைய நிலையைப் பயன்படுத்தி, அவர் மருத்துவரீதியில் அறிவற்ற கருத்துக்களுக்கு போலி விஞ்ஞான போர்வையை கொடுத்து வருகிறார். செனட்டில் சட்டவரைவு பற்றிய வாராந்திர இறுதி விவாதத்தில் அவர் கூறினார்: "நினைவிருக்கட்டும், டெர்ரி உயிரோடு உள்ளோர். டெர்ரி கோமா நிலையில் இல்லை". டெர்ரி ஷியாவைப் போல் உண்மையில் கோமாவில் உள்ளவர்கள் உயிருடன் உள்ளனர். ஆனால் அது முற்றிலும் உயிரியல்ரீதியாகத்தான். பிரச்சினை என்னவென்றால் மூளை வேலை செய்யாவிட்டால் மனித சிறப்பியல்புகள் ஏதேனும் எஞ்சியுள்ளதா என்பதுதான்.

பிரிஸ்ட்டின் மருத்துவ சக ஊழியர்களிடையே காணப்படும் உணர்வு, அனஹீமில் திங்களன்று மாநாடு ஒன்றில் கூடிய கலிபோர்னிய மருத்துவ சங்கத்தின் மூலம் வெளிப்படுகிறது. இக்கூட்டத்தில், கிட்டத்தட்ட ஒருமித்த குரல் வாக்கின் மூலம் ஷியாவோ வழக்கில் சட்டமன்றத் தலையீட்டை கண்டித்த தீர்மானத்திற்கு ஆதரவு கொடுக்கப்பட்டது; தங்களுடைய தேசிய அமைப்பான அமெரிக்க மருத்துவச் சங்கம் ஜூன் மாதம் கூடவிருக்கும்போது இப்பிரச்சினை அங்கு எழுப்பப்படும் என்று அவர்கள் கூறினர்.

ஜனநாயகமா சமய ஆட்சியா?

புஷ் நிர்வாகமும் காங்கிரசாரும் எடுத்துள்ள நிலைப்பாட்டின் சாரம், நீண்டகாலமாக நிலைபெற்றுள்ள அரசியலமைப்பு நெறிகளில் இருந்து முறித்துக் கொண்டு, அரசியல் ஆட்சி என்பது சட்டக் கோட்பாடுகளின் மீது, அது பழைமைவாத அல்லது வலதுசாரி தன்மை கொண்டிருந்தாலும் அதில் நிலைத்திருக்காது ஒருதலைப்பட்ட விருப்பம் அதிகாரம் இவற்றின் செருக்கில் நிலைத்துள்து என்று உறுதியாகக் கூறும் நிலையில் உள்ளனர்.

திங்கட் கிழமையன்று நீதிமன்ற விசாரணையின்போது விட்டிமோர் ஷிண்ட்லெர்களின் வக்கீல்களிடம் தான் எடுக்கவேண்டிய முடிவிற்கு இதற்கு முன் நாட்டில் சட்ட முன்னோடி ஏதாவது இருக்கிறதா என்று வினவினார். அவர்கள் எதையும் கூறமுடியவல்லை; உண்மையில் எந்த முன்னோடியும் இல்லை.

ஆங்கில-அமெரிக்க அரசியலமைப்பு மரபின் மிக அடிப்படைக் கோட்பாடுகளில் ஒன்று "சட்டங்களின் ஆட்சி, மனிதர்களுடைய ஆட்சி அல்ல" என்ற சொற்றொடரில் சுருக்கமாக உள்ளது. அதாவது அரசாங்க கொள்கை அனைவருக்கும் பரந்த முறையில் பொருந்தக்கூடிய விதிகளில் அமைந்திருக்க வேண்டுமே ஒழிய குறிப்பிட்ட நபர்களின் குறிப்பிட்ட சூழ்நிலைக்கும் மட்டும் பொருந்தும் தன்மையை கொண்டிருக்கக் கூடாது. ஆயினும் கூட காங்கிரசில் திங்களன்று இயற்றப்பட்ட சட்டம் அத்தன்மையைத்தான் கொண்டிருக்கிறது; டெர்ரி ஷியாவோவின் இரண்டு பெற்றோர்களுக்கு, வேறு எந்த அமெரிக்க குடிமக்களுக்கும் கொடுக்கப்படாத, ஒரு சட்டபூர்வ சலுகையை அது வழங்கியுள்ளது.

மிக முக்கியமான சட்ட முன்னோடிகள் இரண்டு "இறக்கும் உரிமை" வழக்குகள் அமெரிக்க நீதிமன்றங்களில் கடந்த 25 ஆண்டுகளில் நிர்ணயிக்கப் பட்டுள்ளன. 1976ம் ஆண்டு நியூஜெர்சி நீதிமன்றங்கள் மூளை சேதமுற்ற ஒரு பெண்மணி கரென் ஆன் க்வின்லானுடைய பெற்றோர்கள் அவரை சுவாசக்கருவிகளில் இருந்து அகற்றும் உரிமையைக் கொண்டவர்கள் எனக் கூறின. அவர் ஒன்பது ஆண்டுகளுக்கு பின்னர் நினைவு திரும்பாமலேயே உயிரிழந்தார். 1990ம் ஆண்டு தலைமை நீதிமன்றம் நான்சி க்ருஜன் வழக்கில், ஒரு நபர் தொடர்ச்சியான உணர்வற்ற நிலையில் இருந்தால், அரசியலமைப்பின்படி உணவு செலுத்துக் குழாயை அகற்றிவிட்டு இறக்கும் உரிமையை கொண்டுள்ளார் எனத் தீர்ப்பளித்தது. 1997ல் கூட க்ரூஜன் முன்னோடி மீண்டும் மிகப் பழமைவாதியான தலைமை நீதிபதி வலில்யம் ரெஹ்ன்க்விஸ்டினாலெ உறுதி செய்யப்பட்டது.

கிறிஸ்துவ வலதுசாரிகள், மைக்கேல் ஷியாவின் மீது ஏராளமான அவதூறுகளை அள்ளி வீசியுள்ளது; ஆனால் "வாழும் உரிமை" என்று அவர்கள் கூறும் நிலைப்பாடு டெர்ரி ஷியாவோ உயிர்த்த உயில் எனப்படும் தெளிவாக தன்னுடைய நிலையை தொடர்வதற்கு உயிர்காப்புக்கருவிகள் பயன்படுத்தக் கூடாது என எழுதி வைத்திருந்தாலோ அல்லது தான் கெளரவத்துடன் இறக்க விரும்புவதாகவும், செயலற்ற முறையில் வாழ விருப்பம் இல்லை என்று எழுதக் கூடிய உணர்வில் இருந்து அவ்வாறு எழுதியிருந்தாலோ, பொருந்தாமல் போயிருக்கும் என்பதை அறிகிலர். அடிப்படைவாதிகள் இதேபோன்ற வாதங்களைத்தான் ஓரேகான் மாநிலத்தின் "இறப்பதற்கு உரிமை" விதிகளுக்கு எதிராகவும் கூறியுள்ளர்; அவை மாநிலம் தழுவிய வாக்கெடுப்பு நடத்திய பின்னர் நடைமுறைக்கு வந்தன.

அதன் அடிமட்டத்தில், "வாழும் உரிமை" என்பது அரசாங்கம் ஒரு குறிப்பிட்ட சமய நம்பிக்கையைக் கட்டாயமாகச் செயல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையாகும்; இது மக்களின் ஒரு மிகச் சிறிய பிரிவு அனைத்து அமெரிக்க மக்கள் மீதும் சுமத்தும் நம்பிக்கையாகும். பெரும்பான்மைக் கட்சித் தலைவரு டிலே இதை USA Today கட்டுரை ஒன்றில் தெளிவாக்கியுள்ளார். அமெரிக்க அரசியலமைப்பின் மரபார்ந்த வடிவமைப்பை நிராகரிக்கும் வகையில் அவர் எழுதியதாவது: "இறுதியில் நாம் ஒரு சட்டபூர்வமாக ஆளும் நாடு, (மக்களாலான நாடு அல்ல) என்று கூறும்போது, சில நேரங்களில் சட்டம் தனக்காக வாழவில்லை என்பதை மறந்துவிடுகிறோம். சட்டத்தின்பின், அதற்கும் மேலாக என்றுகூட வாதிடுவேன், சரி, தவறு பற்றிய உலகரீதியான சட்டம் உள்ளது. நம்முடைய மதிப்புகள் நம்முடைய சட்டங்களை வரையறை செய்யவேண்டுமே ஒழிய, எதிர்மாறான வழியில் இல்லை."

இந்த மாத தொடக்கத்தில், அரசியலமைப்பு ரீதியாக திருச்சபையும் அரசாங்கமும் பிரிக்கப்பட்டிருக்கவேண்டும் என்பதை உடைத்துக்்கொண்டு செல்லுவதாக உள்ள, பத்துக்கட்டளைகள் கென்டக்கியிலிருந்தும், டெக்சாசிலும் அரசாங்கக் கட்டிடங்களில் வைக்கப்பட்டது பற்றிய இரு வழக்குகளில் உயர் நீதிமன்ற நீதிபதி அன்டோனில் ஸ்காலியா, அப்பொழுது இது பற்றிய சொல்வாதங்களின் போது கூறியவற்றைத்தான் டிலேயின் நிலைப்பாடும் எதிரொலிக்கிறது.

சமய புராதன கருத்துக்களை அரசாங்கம் சித்தரிப்பது முற்றிலும் பொருத்தமே என்று ஸ்காலியா அறிவித்தார். பத்துக் கட்டளைகள் அடங்கிய கற்படிவங்கள் "அரசாங்கம் வருகிறது, தன்னுடைய அதிகாரத்தை கடவுளிடம் இருந்து பெறுகிறது என்ற உண்மையின் அடையாளமாகும். என்னைப் பொறுத்தவரையில் அது அரசாங்க நிலைப்பாட்டில் மிகப் பொருத்தமான அடையாளமாகும் எனத் தோன்றுகிறது."

அவர் தொடர்ந்தார்: "இது ஒரு ஆழ்ந்த சமயச் செய்தி ஆகும்; ஆனால் இது பெரும்பாலான அமெரிக்க மக்களால் நம்பப்படும் ஓர் ஆழ்ந்த சமய செய்தியாகும்; எப்படி கடவுள் ஒருவர்தான் என்ற நம்பிக்கை என்பது பெரும்பான்மையான அமெரிக்க மக்களால் பகிர்ந்து கொள்ளப்படுகிறதோ, அதேபோல்தான் இதுவும். நம்முடைய மரபுகளின்படி அரசாங்கம் இதைப் பிரதிபலிப்பதில் தவறு ஏதும் இல்லை. அதாவது நாம் சமய அளவில் சகிப்புத் தன்மை காட்டும் சமுதாயம்தான்; ஆனால் பெரும்பான்மை, சிறுபான்மையினரின் கருத்துக்களுக்கு சமயத்துறையில் மதிப்புக் கொடுப்பதுபோல், சிறுபான்மையினரும் பெரும்பான்மையினர் தன்னுடைய நம்பிக்கையான கடவுளிடம் இருந்து ஆளுமை வருகிறது என்பதைப் பொறுத்துக் கொள்ளவேணடும்; இந்த விஷயமே இவ்வளவுதான்."

அமெரிக்க புரட்சிக்கு தலைமை தாங்கி சுதந்திரப் பிரகடனத்தையும் அமெரிக்க அரசியல் அமைப்பையும் எழுதியவர்கள், தங்கள் அதிகாரத்தை கடவுளிடம் இருந்து பெறுவதாக கூறிக்கொள்ளும் ஆட்சியாளர்களுக்கு எதிராக கிளர்ச்சி செய்துள்ளனர். அவர்கள் அரசாங்கங்கள் தங்களுடைய சட்ட நெறியை சமய உத்தரவில் பெறவில்லை என்றும் ஆளுபவர்களுடைய விருப்பத்தில் இருந்து பெறுகின்றனர் என்றும் இது மக்களுடைய வாக்குகள் மூலம் வெளிப்படுகிறது என்றும் கூறினர். ஸ்காலியா, டிலே மற்றும் புஷ் ஆகியோர் 200 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட அமெரிக்க அரசியலமைப்பு, ஜனநாயக மரபுகளை, மிகப் பின்தங்கிய, பிற்போக்குத்தனமான கிறிஸ்தவ அடிப்படை கூறுபாடுகளின் சமய சர்வாதிகாரத்திற்காக நிராகரிக்கின்றனர்.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved