WSWS :Tamil
:
செய்திகள்
ஆய்வுகள்
:
ஆசியா
:
இந்தியா
Indian Stalinists reaffirm support for
Congress-led regime committed to neo-liberal policies
இந்திய ஸ்ராலினிஸ்டுகள், புதிய தாராளவாத கொள்கைகளை ஏற்றுள்ள காங்கிரஸ்
தலைமையிலான ஆட்சிக்கு தங்கள் ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்துகின்றனர்
By Keith Jones
7 April 2005
Use this
version to print |
Send this link by email |
Email the author
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) இன் 18வது தேசிய மாநாட்டின் ஆரம்ப
கூட்டம் புதன்கிழமை அன்று நடைபெற்றபோது, CPM
இன் இரண்டு மூத்த தலைவர்கள் 11 மாத கால ஐக்கிய முற்போக்கு கூட்டணி (United
Progressive Alliance) இன் அரசாங்கத்திற்கு கட்சியின்
தொடர்ந்த ஆதரவை நெறிப்படுத்திக் காக்கும் வகையில் தங்களுடைய உரைகளை நிகழ்த்தினர்.
மாநாட்டின் முக்கிய தீர்மானத்தின் சொற்களிலேயே, ஐக்கிய முற்போக்கு கூட்டணி "அதற்கு
முன்பு ஆட்சியில் இருந்த கூட்டணி போலவே தாராளவாத கொள்கைகள் மற்றும் தனியார் மயத்தை தொடர்ந்து வருகிறது"
என்பதை சிபிஎம் தலைமை ஒப்புக் கொண்டுள்ளது. "இந்த அரசாங்கம் அந்தப் போக்கை மாற்றிக் கொள்ள
விரும்பவில்லை மற்றும் சாராம்சத்தில் அதே கொள்கைகளைத்தான் அதாவது இந்து பாரதீய ஜனதா கட்சியின் (BJP)
தலைமையில் இருந்த தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு பின்பற்றியதைத்தான் தொடர்ந்து வருகிறது" என்றும்
தீர்மானத்தில் தொடர்ந்து கூறப்பட்டுள்ளது.
CPM இன் அரசியற்குழு உறுப்பினரும்
முன்னாள் மேற்கு வங்காள முதல் அமைச்சருமான ஜோதி பாசு, இந்திய முதலாளித்துவத்தின் மரபுவழியிலான ஆளும்
கட்சியும், ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் மேலாதிக்கம் செலுத்தும் பங்காளியுமான காங்கிரஸ் இது பற்றி
தன்னைத்தானே உள்ளாய்வு செய்துகொள்ள வேண்டும் என்றார். "பொறுப்பற்ற முறையில் தாராளமயம் ஆக்குதல்,
தனியார் மயமாக்குதல் என்ற அதே பொருளாதார கொள்கைகளை இது தொடர்ந்து பின்பற்றலாமா? இதனுடைய
கொள்கைகளுக்கும் பிஜேபி இன் கொள்கைகளுக்கும் இடையே ஏதேனும் வேறுபாடு உண்டா?" என்று வினவினார்.
உண்மை என்னவென்றால், 1991ல் இருந்து 1996 வரை பதவியில் இருந்தபோது,
தேசிய பொருளாதார வளர்ச்சியில் இருந்து அந்நிய மூதலீட்டை ஈர்த்தல் மற்றும் ஏற்றுமதி அடிப்படையிலான
வளர்ச்சி இவற்றின் மீதாக குவிமையப்படுத்தி, இந்திய முதலாளித்துவத்தின் மூலோபாயத்தில், காங்கிரஸ்தான்
நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டது. கூட்டாட்சி அரசாங்கம் மாநில அரசாங்கங்கள் என்று, மேற்கு வங்காளத்தில்
CPM தலைமையிலான அரசாங்கம் உட்பட, இந்தியாவில் உள்ள
அரசாங்கங்கள் அனைத்தும், தேசிய ரீதியாக நெறிமுறைப்படுத்தப்பட்ட பொருளாதாரத்தை தகர்ப்பதில்
பங்குகொண்டிருந்தபின், அதனுடன் தொடர்புள்ளதாக பொதுத் துறை பிரிவுகளை விற்கும் பணிகள், பொதுச்
செலவுகளை குறைத்தல், விலைவாசிக்கு ஆதரவு கொடுத்தல், நிர்வாகத்தின் தேவைகளுக்கேற்ப தொழிலாளர்களை
மேலும் கட்டுப்பாட்டிற்குள் வைக்கச்செய்வதற்கான உந்துதல் ஆகியவற்றில் ஈடுபட்டுள்ளன.
CPM இன் பொதுச் செயலாளர்
ஹர்கிஷன் சிங் சுர்ஜித், இவருடைய உரையை, இவருடைய உடல்நலக் குறைவு காரணமாக கட்சியின் இன்னொரு தலைவர்
படித்தார், "தற்போதைய நிலமையின் தேவைகளை கருதித்தான்" ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கத்திற்கு
சிபிஎம் இன் ஆதரவு கொடுக்கப்பட்டிருக்கிறது என்று கூறினார். பின்னர் இறுதியாக ஒரு "மூன்றாம் மாற்று"
("Third alternative")
காங்கிரஸ், BJPஐ
அடுத்து வரவேண்டும் என்றும் "இந்த எமது அடிப்படை செயற்பட்டியலை சிபிஎம் கைவிட்டுவிடவில்லை" என்றும் அவர்
கூறினார்.
இதையே வேறுவிதமாகக் கூறினால், சிபிஎம், காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியில்
இருக்கும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்கு தொடர்ந்து அது பதவியில் நீடிப்பதற்கு ஆதரவு கொடுக்கும்.
சோவியத் ஸ்ராலினிச அதிகாரத்துவத்தின் வெளிநாட்டு கொள்கை தேவைகளுக்கு ஏற்ப
காங்கிரஸ் கட்சியின் கொத்தடிமையாக இருந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி
(CPI)
பிளவடைந்தபின் CPM
1964ம் ஆண்டு நிறுவப்பட்டது.
கார்ல் மார்க்ஸ், மற்றும் வி.இ. லெனினுடைய சர்வதேச புரட்சிகர சோசலிச
மரபிற்கு தானே வாரிசு என்று CPM
கூறிக்கொள்ளுகிறது. எந்த அளவிற்கு இது உண்மை என்பது, தொடர்ந்து சலுகை மிக்க அதிகாரத்துவத்தின் அரசியல்
பேச்சாளராக இருந்து சோவியத் தொழிலாள வர்க்கத்திடம் இருந்து அதிகாரத்தை கவர்ந்து, சோவியத்
யூனியனுக்குள்ளேயே பாரிய படுகொலைகளை சோசலிஸ்டுக்கள் மீது நடாத்தியிருந்த ஜோசப் ஸ்ராலினுக்கு இக்கட்சி
இன்னும் தொடர்ந்து போற்றிவரும் நிலைப்பாட்டில் இருந்து நன்கு அறியப்படலாம்.
மற்றொரு விதத்தில், சர்வதேச முதலாளித்துவத்துடன் இணைந்து முந்தைய விக்டோரியா
காலத்து சுரண்டல் முறையை தொழிலாள வர்க்கத்தின் மீது சுமத்தி வரும் சீனக் கம்யூனிஸ்ட் கட்சிக்கு
CPM இன் புகழாரம்
ஆகும். "சீனாவின் விரைவான பொருளாதார வளர்ச்சியும், பன்முகமாக விரிந்துள்ள முன்னேற்றமும் சர்வதேச
அரங்கில் அதை ஒரு பெரிய சக்தியாக வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறது" என்று சிபிஎம் இன் 18வது மாநாட்டு
தீர்மானம் கூறுகிறது. "....சீன அரசாங்கமும் கம்யூனிஸ்ட் கட்சியும், சீனாவின் விரைவான வளர்ச்சி, அது
பூகோள முதலாளித்துவத்துடன் தொடர்பு கொண்டதால் வெளிப்பட்டுள்ள வேலையின்மை, வட்டார ஏற்றத்தாழ்வுகள்
மற்றும் ஊழலின் வளர்ச்சி ஆகியவற்றை எதிர்த்துப் போராடி வருகின்றன" என்றும் தீர்மானம் தெரிவிக்கிறது.
குறைந்த முக்கியத்துவம் கொண்டாலும் கூட, இயல்பை புலப்படுத்தும், இதன் மூன்றாம்
நடவடிக்கையாக இருப்பது CPM
இன் முடிவான சிறீலங்காவின் ஜனதா விமுக்தி பெரமுனா (JVP)
வின் தலைவர்களை அதன் மாநாட்டிற்கு சகோதரத்துவ பிரதிநிதிகளாக அழைத்தல் என்பது ஆகும். ஜேவிபி
சிறிலங்காவின் ஐக்கிய சுதந்திரக் கூட்டணி (United
Freedom Alliance) அரசாங்கத்தின் ஒரு உறுப்புக்
கட்சியாக உள்ளது; அது மக்களை ஈர்க்கும் சொற்றொடர்களைக் கூறுகிறது; மாவோ மற்றும் காஸ்ட்ரோவைப்
புகழ்கிறது, ஆனால் தமிழ் இனப் பழிப்புவாதத்தை மிகத் தீவிரமாகக் காட்டும் கட்சியாக இருக்கிறது.
தற்போதுள்ள சமூக ஒழுங்கிற்கு முட்டுக் கொடுக்கும் தூண்
தன்னைத்தானே பெரும் நாட்டுப் பற்றுடைய கட்சி என்று சொல்லிக் கொள்ளும்
CPM
இந்தியாவின் முதலாளித்துவ ஒழுங்கின் இடது கன்னையாகும்.
இந்தியாவை உலக முதலாளித்துவத்திற்கான குறைவூதிய உற்பத்தி, அலுவலக நடைமுறை
மற்றும் ஆராய்ச்சித் துறையாக மாற்றுதற்கான இந்திய முதலாளித்துவ வர்க்கத்தின் உந்துதலால் தோற்றுவிக்கப்பட்ட
சமூக நெருக்கடி, CPM-க்கு
முன்னோடியில்லாத வகையில் அதிகார வராந்தாக்களில் பெரும் செல்வாக்கைக் கொடுத்துள்ளது.
கடந்த மே மாதத்தில் அதிகாரத்திற்கு வந்து இன்றளவும் அதைத் தக்க வைத்துக்
கொண்டிருக்கும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கம், பாராளுமன்றத்தின் இடது முன்னணி ஆதரவினால்தான்
அவ்வாறு இருக்க முடிகிறது; இடது முன்னணி என்பது CPI
உட்பட பல கட்சிகள் நிறைந்த கூட்டணியாகும், இருந்தாலும் அது
CPM இன்
ஆதிக்கத்தில்தான் உள்ளது.
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கம் அமைக்கப்படும்போது, காங்கிரஸ் கட்சி,
சில உயர் மந்திரிப் பதவிகளை ஏற்குமாறு இடது முன்னணியையும் கோரியது. ஆனால்,
CPM
வலியுறுத்தியதின் விளைவாக இடது முன்னணி அதற்கு மறுத்துவிட்டது. இதற்கு கொடுக்கப்பட்டுள்ள முக்கிய காரணங்களில்
ஒன்று, ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்கு எதிர்க்கட்சியாக பிஜேபி ஏகபோக உரிமையைக் கொண்டுவிடும் என்ற
அச்சம் இருந்ததாகும். அது
ஒரு புதிய அரசாங்கத்தை உருவாக்க உதவும் என்றாலும் அது மக்களுக்கு
பிடிக்காத கொள்கைகளை தொடரும் என்பதை CPM
தலைமை நன்கு அறிந்திருந்தது என்பதைத்தான் அந்த அறிக்கை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
இதற்குப் பின்னர், CPM
காங்கிரஸ் தலைமையின் அழைப்புக்களுக்கு இணங்கி UPA
முழு ஐந்து ஆண்டு வரைகாலமும் பதவியில் இருப்பதற்குப் பொது அறிக்கை மூலமே ஆதரவு கொடுத்ததுடன் கட்சித்
தலைவர் ஒருவர் இந்தியாவின் பாராளுமன்ற கீழ்சபையான லோக் சபாவிற்கு தலைவராக நியமனம் பெறுவதையும்
ஏற்றுக் கொண்டது.
CPM -ம் இடது அணியும் குறைந்தபட்ச
வேலைத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதை கண்காணிக்கும் ஒரு குழுவில் பங்கு கொண்டுள்ளதின் மூலம் அரசாங்கத்துடன்
முறையாக பிணைக்கப்பட்டுள்ளன; அந்த உடன்பாடு ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகள் ஏற்படுத்திக்
கொண்டுள்ள ஒப்பந்தமாகும்; ஆனால் CPM-ம்
இடது அணியும் அது வரையப்படுவதற்கு பெரிதும் உதவின.
காங்கிரஸ் கட்சி இடது முன்னணியை அராங்கத்துடன் இணைந்நு நிற்க வேண்டும் என்பதில்
ஆர்வம் காட்டிய காரணம் பாராளுமன்ற எண்ணிக்கைக்காக மட்டும் அல்ல. பிஜேபி இன் புதிய தாராளவாத
கொள்கைகளுக்கு எதிரான மக்களின் எதிர்ப்பு அலை இருந்த காரணத்தினால், தானே வியக்கும் அளவிற்கு காங்கிரஸ்
அதிகாரத்திற்கு மீண்டும் வந்தது. சிபிஎம் தலைமையிலான இடது அணியையும் அரசாங்கத்துடன் தொடர்புடையதாக
செய்துகொள்ளுதல் தொழிலாளர்களை வீட்டுக்கு அனுப்புதல், ஆலைகளை மூடுதல் போன்றவற்றின் மீதான
கட்டுப்பாடுகளை அகற்றுதல் உள்பட புதிய தாராளவாத சீர்திருத்தங்களின் புதிய அலைக்கு மக்களின் எதிர்ப்பைக்
கடப்பதற்கு சிறந்த வழிமுறைகளை கொண்டிருக்கும் என்று அது விரைவில் முடிவிற்கு வந்தது.
இந்த மதிப்பீட்டிற்கு பெரு வணிகம் ஒத்துக் கொள்ளுகிறது என்பது, புதிய
அரசாங்கத்திற்கு தடைகொடுத்து, அதை உறுதியற்றதாக்கும் பிஜேபி இன் முயற்சிகளுக்கு எத்தகைய முக்கியத்துவமும்
பெருநிறுவனச் செய்தி ஊடகத்தால் கொடுக்கப்படுவதில்லை என்பதில் இருந்து நன்கு புலனாகும்.
25 சதவிகித இராணுவச் செலவினங்கள் உயர்வு உள்பட, பொருளாதாரத்தின் புதிய
பிரிவுகளில் வெளிநாட்டு முதலீட்டிற்கு அனுமதித்தது, குறைந்தது ஒரு நபருக்காவது ஏழைகளில் வீடுகளில் இருக்கும்
ஒருவருக்கு ஆண்டு ஒன்றுக்கு 100 நாட்களாவது ஊதிய வேலை கொடுப்பது என்ற உறுதிமொழி அமுலாக்கப்படாதது
போன்ற அரசாங்கத்தின் செயல்கள் CPM
தலைவர்களுக்கு அரசாங்கத்திற்கு எதிரான மக்களுடைய சீற்றம் தங்கள் மீதும் பாயும் என்ற பயத்தை
ஏற்படுத்தியுள்ளது.
இடது முன்னணியின் அழுத்தத்திற்கு விடை கொடுக்கும் வகையில் ஐக்கிய முற்போக்கு
கூட்டணி சில நிதானமான சமூகநல செலவுகள் அதிகரிப்பை பெப்ரவரி பட்ஜெட்டின் போது அறிவித்தது என்றாலும்
அதேநேரத்தில், நிதி மந்திரி, அத்தகைய நடவடிக்கைகளினால் நெருக்கடி பெருகிவிடக் கூடாது என்பதில்
அரசாங்கம் உறுதியாக உள்ளது என்று கூறிவிட்டார்.
உண்மை என்னவென்றால் இந்தியா மிகப்பெரிய சமூக அதிர்வுகளின் விளிம்பில் நின்று
கொண்டிருக்கிறது. 14 ஆண்டுகால புதிய தாராளவாத கொள்கைகள் கூடுதலான பொருளாதார பாதுகாப்பின்மை,
ஆழ்ந்துள்ள வறுமை, பெருகிய சமூக சமத்துவமின்மை ஆகியவற்றைத்தான் தோற்றுவித்துள்ளன. கிராமப்புற இந்தியா
பல தசாப்தங்களில் இல்லாத மிகக் கடுமையான விவசாய பிரச்சினைகளை சந்தித்துக் கொண்டிருக்கிறது.
வேலையின்மை கிராமப்புறத்திலும், பெரும் நகரங்களிலும் தலைவிரித்தாடுகிறது.
இதற்கு மாறாக, முதலாளித்துவ வர்க்கம் பிஜேபி தோல்வி அடைவதற்குக்
காரணமாக இருந்த தேர்தல் பிரச்சார அறிவிப்பான "இந்தியா ஒளிர்கிறது" என்பதில் நம்பிக்கை கொண்டுள்ளது.
அது உலக அரங்கில் இந்தியா மிகப் பெரிய சக்தியாக வெளிப்படும் என்றும் இதற்குக் காரணம் வெளிநாட்டு முதலீடு
நாட்டிற்குள் பெருகி வருவதும், இந்தியாவின் இராணுவ வலிமையும்தான் என்றும் நம்புகிறது; அல்லது குறைந்த அளவில்
நம்பவாவது முயல்கின்றது.
ஆனால் முதலாளித்துவ வர்க்கம் தன்னுடைய பேரவாக்களையும் விழைவுகளையும்
வெடிப்பத்தன்மை நிறைந்த சமசீரற்ற தன்மைகளும் முரண்பாடுகளும் நிறைந்த ஓர் உலக முதலாளித்துவ
பொருளாதாரத்தின் மீது அடிப்படையாக கொண்டுள்ளது. அந்த முரண்பாடுகள் தங்களுடைய கடுமையான
வெளிப்பாட்டை அமெரிக்காவில் கொண்டுள்ளன; அமெரிக்காவின் மலைபோன்ற நடப்புக் கணக்குச் சிரமங்கள், வணிக
மற்றும் பட்ஜெட் பற்றாக்குறைகள் ஆகியவற்றில் அவை வெளிப்பட்டுள்ளன. மிகப் பெரும் வல்லரசுகள் புவி-அரசியல்
போட்டியை தீவிரமாக மேற்கொண்டிருக்கும் நேரத்தில் அது உலக அரங்கில் நுழைகிறது. உலகப்
பொருளாதாரத்தில் ஒரு சரிவு அல்லது அந்நிய முதலீட்டில் ஒரு குறைவு என்று கூறினால் 1997ம் ஆணடு தோன்றிய
தெற்கு ஆசிய நெருக்கடி போன்ற வகையில் மீண்டும் ஒரு நெருக்கடி ஏற்படலாம்.
இந்த நிலைமையில்தான்
CPM மற்றும் இடது முன்னணி இரண்டும் தொழிலாள வர்க்கத்தையும்
ஒடுக்கப்பட்டுள்ள மக்களையும் காங்கிரஸ் தலைமையில் இருக்கும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி யிடம் பிணைக்க
முயல்கின்றன.
இவ்வாறு செய்கையில் அது இரண்டு வாதங்களை முன்வைக்கின்றது. முதலில் குறைந்த
பட்ச திட்டத்தின் மூலம் புதிய தாராளவாத கொள்கைகள் தாமதப்படுத்தப்படலாம் அல்லது சில பிரிவுகளில் இல்லாமற்
செய்யப்பட்டுவரலாம் என்பதாகும்; இந்த வாதம் பெருகிய வகையில் நியாயப்படுத்தமுடியாமல் போய்விட்டது. இரண்டாவது
வாதம் ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்கு ஆதரவு கொடுத்தல் என்பது இந்து மத மேலாதிக்கத்தை நாடும் பிஜேபி
அதிகாரத்திற்கு வராமல் தடுக்கும் என்பது ஆகும்.
பிஜேபி என்பது நிச்சயமாக கடுந்தீமை நிறைந்த பிற்போக்கு சக்திதான். ஆனால்
அது தொழிலாள வர்க்கம் சமூக நெருக்கடிக்கு தன்னுடைய சொந்த தீர்வை முன்னெடுத்தலின் மூலம் மட்டுமே
போராடப்படவும் தோற்கடிக்கப்படவும் முடியும்; அதன் பதில் பயன்படுத்தப்பட்டு ஒடுக்கப்பட்ட மக்களை தனக்குப்
பின்னால் அணிதிரட்டிக்கொள்ளும்.
எத்தனையோ தசாப்தங்களாக இந்து தேசிய வலதுகள், இந்திய அரசியலில் ஓரங்கட்டப்பட்ட
சக்தியாக இருந்து வந்துள்ளனர். அது அதிகாரத்திற்கு போட்டியிடும் வலிமையை கொண்டுள்ளது என்றால், இந்திய முதலாளித்துவ
வர்க்கம் அதன் சிதைந்துபோன சுதந்திரத்திற்கு பிந்தைய தேசிய செயல்திட்டத்தை, தொழிலாள வர்க்கம் மற்றும்
ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிரான ஒரு புதிய தாக்குதலுக்கானதாக மாற்ற முடிந்தது; அதற்குக் காரணம் வர்க்க
முறையிலான ஒத்துழைப்பும், இந்திய ஸ்ராலினிச கட்சிகளால் பின்பற்றப்பட்ட தேசிய கொள்கைகளும்தான். பல தசாப்தங்களாக
CPM
மற்றும் அதன் சகோதர அமைப்பான CPI
ஆகியன ஏகாதிபத்திய எதிர்ப்பு மற்றும் நிலப்பிரபுத்துவ பிற்போக்கை எதிரத்து போராடல் என்ற பெயரில்
தொழிலாள வர்க்கத்தின் நலன்களை ஏதேனும் ஒரு முதலாளித்துவ கட்சிக்கு கீழ்ப்படுத்தி வைத்தன மற்றும்
தொழிலாள வர்க்கத்தை போர்க்குணமிக்க தொழிற்சங்க போராட்டங்களில் அடைத்து வைத்தன.
இந்தியாவில் உள்ள தொழிலாளர்கள் மற்றும் சோசலிச எண்ணங்கொண்ட உழைப்பாளிகள்
மற்றும் அறிவுஜீவிகள் ஆகியோர் முன் ஒத்திவைக்கப்பட முடியாது எதிர்கொண்டுள்ள பணி, சர்வதேச தொழிலாள
வர்க்கத்துடன் ஒத்திசைவில் ஏகாதிபத்தியத்தையும் தேசிய முதலாளித்துவத்தையும் எதிர்த்துப் போரிடும் தொழிலாள
வர்க்கத்தின் புதிய வெகுஜன சோசலிசக் கட்சியைக் கட்டி எழுப்புவதாகும்.
Top of page |