World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா

ஹிஷி னீமீபீவீணீ ணீஸீபீ tலீமீ ஜீஷீஜீமீ ணீஸீ ணீssணீuறீt ஷீஸீ tலீமீ sமீஜீணீக்ஷீணீtவீஷீஸீ ஷீயீ நீலீuக்ஷீநீலீ ணீஸீபீ stணீtமீ

அமெரிக்கச் செய்தி ஊடகமும் போப்பும் -- திருச்சபையையும் அரசையும் பிரிப்பதன் மீதான தாக்குதல்

By Bill Van Auken
6 April 2005

Back to screen version

ரோமன் கத்தோலிக்க சமயம், நாட்டின் சமயம் என்ற புராதன அந்தஸ்தைப் பெற்றுள்ள நிலையில் உலகில் இன்னமும் 10 நாடுகள் இருக்கின்றன. அந்த நிலையில், அவற்றுள் ஒன்றாக அமெரிக்கா இல்லை. ஆனால் கடந்த சில நாட்களாக அமெரிக்க அரசாங்கமும் பரந்த செய்தி ஊடகமும் இரண்டாம் ஜோன் போலை முடிவில்லாமல் உயர்த்திப் போற்றிவரும் நிலையை பார்க்கும்போது அவ்வாறுதான் இருந்தது என்று ஒருவர் ஒருபோதும் ஊகிக்க முடியாது.

ரோமாபுரி திருச்சபை தலைவரின் மறைவிற்காக, புஷ் நிர்வாகம் அமெரிக்காவில் கொடிகள் அரைக் கம்பத்தில் பறக்கவிடப்பட வேண்டும் என்ற உத்தரவை பிறப்பித்துள்ளதுடன், இறுதிச் சடங்குகளில் கலந்து கொள்ளுவதற்கு அமெரிக்க ஜனாதிபதி வத்திக்கானுக்கு பறந்து செல்லவும் இருக்கிறார். இந்த இரு நடவடிக்கைகளுமே, அரசியல் அமைப்பில் திருச்சபையும் அரசாங்கமும் தனித்தனியே இயங்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ள அடிப்படை இருக்கும் ஒரு நாட்டில் முன்னோடியில்லாத வகையில் செய்யப்படுகின்றன; அரசு ஆதரவு கொடுக்கும் சமயத்திற்கு, விரோதம் காட்டிய வகையில் ஊக்கம் பெற்ற புரட்சியின் விளைவாக அது இருந்தது.

பல நாட்களாக எதிர்பார்க்கப்பட்டிருந்த இந்த 84 வயதான மதகுருவின் மறைவை அமெரிக்க மக்களுக்கு மிகப் பெரிய வகையில் சமய பிற்போக்குத்தனம், மூட நம்பிக்கை இவற்றை கொடுக்கும் வகையில் செய்தி ஊடகம் ஆர்வத்துடன் பற்றிக் கொண்டுள்ளது. போப்பை சூழ்ந்துள்ள பகட்டாரவாரம் மிகத் திறமையுடன், ஈராக்கில் போரும் மரணங்களும் என்பதில் இருந்து அமெரிக்காவிலேயே பெருகிவரும் பொருளாதார நெருக்கடியின் அடையாளங்கள் போன்ற மற்ற செய்திகள் வரை அனைத்தையும் மூழ்கடித்து விட்டது

மிகப் பரந்த முறையில் இச்செய்தியை பற்றிய தகவல் அளித்தமை மனத்தை மரக்க அடிக்கச் செய்துள்ளது. சோகத்தில் ஆழ்த்தும், பொருளற்ற, கடந்த புதனன்று போப்பின் இறப்பு என்று போப் இறப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னரே தொடங்கிய நிகழ்ச்சியில் இருந்து வரவிருக்கும் வெள்ளியன்று முடியவிருக்கும் இறுதி ஊர்வலக் காட்சிவரை, அனைத்து முக்கிய செய்தித் தொலைக் காட்சி இணைய தளங்களும், முடிவில்லா வகையில் வத்திக்கான் நகரத்தில் இருந்து நேரடிக் காட்சிகளை ஒளிபரப்பிக் கொண்டு, தொலைக் காட்சி வர்ணனையாளர்களும் நிருபர்களும் போட்டி போட்டுக் கொண்டு மிகத் தாழ்ந்த போலிப் புகழாரம் சூட்டிய வண்ணம் இருக்கின்றனர்.

ஒரு வத்திக்கான் அறைக்காப்பாளர் (Chamberlain) போப்பின் மண்டையோட்டில் ஒரு வெள்ளிச் சுத்தியலை வைத்துத் தட்டி அவர் இறந்துவிட்டாரா என உறுதிபடுத்திக் கொள்ளும் நிகழ்வு தொடங்கி, கத்தோலிக்க சடங்குகளைப் பற்றிய முடிவில்லாத விவாதமும் இடையிடையே மூச்சு விடாமல் போப்பின் ஆன்மிக மாண்பின் உயர்வைப் பற்றிய அறிவிப்புக்களும் தொடர்ந்து நிகழ்ந்து வருகின்றன. கடினமான பகுப்பாய்வு இந்நிகழ்வை பற்றிக் கிடையாது என்பது ஒருபுறம் இருக்க, சிறிதேனும் புறநிலை ஆய்வு என்பது காட்டப்படாமல் வெற்றுத்தனமான முறையில் பேசிக் கொண்டிருந்த தொலைக்காட்சி அறிவிப்பாளர்கள் சமய காலர் பட்டையைக் கூட அணிந்து கொண்டு தங்களுடைய அறிவிப்புக்களை கொடுத்திருக்கலாம் எனத் தோன்றுகிறது.

சற்றே நிதானத்துடன் கூடிய மதிப்பீடு ஒன்றில், "ஒரு நூற்றாண்டிற்கு ஒருமுறை தோன்றக்கூடிய மனிதர் என்று கூறுவதா அல்லது சமய மறுமலர்ச்சியின் தீர்க்கதரிசி என்பதா என்பது ஆய்ந்த கூறப்பட வேண்டிய விஷயமாகும்" என்று CNN கூறியது

இத்தகைய நிலைப்பாட்டில் இருந்து, கத்தோலிக்க திருச்சபை வரலாற்றளவில் பிற்போக்கு கோட்டையாகவும் அறிவியல், சமூக முன்னேற்றம் இவற்றை எதிர்க்கும் மையமாகவும் இருந்தது என்று எவரேனும் கற்பனை செய்தும் பார்க்க முடியுமா? ஜனநாயக உரிமைகளை விரிவாக்குவதற்காக தற்காலத்தில் நிகழ்ந்த ஒவ்வொரு போராட்டமும், வத்திக்கானுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட வெளிப்படையான போராட்டம் ஆகும்; திருச்சபையானது மாபெரும் முதலாளித்துவ புரட்சிக்காலங்களில் மக்களாட்சிக்கு எதிராக நிலப்பிரபுத்துவம் மற்றும் முடியாட்சி ஆகியவற்றை வலுவுடன் காத்திருந்ததோடு மட்டும் இல்லாமல், தொழிலாள வர்க்கம் மற்றும் சோசலிசம் இவற்றிற்கெதிராக பின்னர் முதலாளித்துவத்துடனும் இணைந்திருந்தது.

அமெரிக்க மக்கட்தொகையில் கிட்டத்தட்ட 23 சதவிகிதம் என்று, 65 மில்லியன் அமெரிக்க கத்தோலிக்கர்கள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. திருச்சபை கோட்பாடுகளில் நம்பிக்கை உடையவர்களில் பலருக்கும் போப்பின் மரணம் உண்மையான துக்கம் கடைப்பிடிக்கும் நேரமாக இருக்கும் என்பதில் ஐயம் இல்லை. ஆனால் பரந்த செய்தி ஊடகத்தில் உறைந்த ஒப்பாரி காட்சிகளில் காட்டப்படுவது போல் உணர்வுகள் மிகப்பரந்த தன்மையில் விமர்சனமற்று, புத்திகெட்டத்தனமாக ஒன்றும் போய்விடவில்லை.

அதிகம் அறிந்திருக்கப்படாத போலந்து நாட்டைச் சேர்ந்த சமய குருவான கரோல் வோஜ்டைலா 1978ம் ஆண்டும் போப்பரசின் தலைவராக தேந்தெடுக்கப்பட்டார்; அவர் ஒரு மனிதர், பெரும் துறவியல்ல. அரசிற்குள்ளேயே அரசு என்ற ஒரு அமைப்பின் தலைவராக அவர் இருந்தார்: அது மகத்தான பன்னாட்டு நிறுவனம் போல் விளங்குகிறது; அதனுடைய சொத்துக்கள் பில்லியன் கணக்கான டாலர்கள் ஆகும்; அவற்றின் தொடக்கங்கள் திருச்சிபை வரலாற்றில் கொண்டிருந்த அந்தஸ்தான உலகில் மிகப் பெரிய, கடுமையான ஒடுக்குமுறை பண்ணையார் என்பதில் இருந்து ஏற்பட்டிருந்தவை ஆகும்.

வோஜ்டைலா மிகத் திறமையுடன் கூடியவர் என்பதில் ஐயம் ஏதுமில்லை. ஒரு முன்னாள் நடிகரும், தேர்ந்த அரசியல் நுட்பத்தைக் கொண்டவராகவும் இருந்த அவர், தன்னுடைய திறமைகளை அவர் மிகச் சிக்கல் வாய்ந்த ஸ்ராலினிச ஆட்சிக்குட்பட்டிருந்த திருச்சபை-அரசு உறவுகளை நேர்த்தியாக இயக்கியவராவார். திருச்சபை, உலக விவகாரங்களில் அவர் ஆற்றிய பங்கு பகுப்பாய்விற்கு உகந்ததேயாகும்.

போப் இரண்டாம் ஜோன் போலை பலரும் திருச்சபைக்குள் மறு சீர்திருத்தத்தின் தலைவர் என்று உணர்கின்றனர்; 1960களில் கத்தோலிக்க படிமுறை அதிகார அமைப்பு, தீவிரப்போக்கு கருத்துக்களின் அலை சர்வதேச தொழிலாளர் வர்க்கத்திடையே பெருகிய போதும், ஒடுக்கப்பட்ட நாடுகளில் இருந்த மக்களிடையே தோன்றிய புத்தெழுச்சியையும் கண்டு அவற்றிற்கு ஏற்றவாறு தன்னை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று, இரண்டாம் வத்திக்கானில் கொண்டு வந்த, பல புதுக்கருத்துக்களையும் இவர் மாற்றி, பழைய நிலைப்பாட்டை கொண்டுவந்தவராவர்

பிறப்புத் தடுப்பு, கருக்கலைப்பு, பால் உணர்வு போன்ற பிரச்சினைகளில் புதுப்பிக்கப்பட்ட கடுமையான தன்மையை காட்டிய நிலைப்பாட்டுடன் அவர் பரந்த முறையில் அடையாளம் கண்டு கொள்ளப்பட்டார். "வாழ்வின் பண்பாடு" என்பதை அவர் வளர்த்த விதம், கத்தோலிக்க திருச்சபை ஓரின திருமணத்திற்கெதிராக புனிதப் போரை நடத்தியது ஆகியவை, ஜோர்ஜ் டபுள்யூ புஷ்ஷிற்கும் வலதுசாரி குடியரசுக் கட்சிக்கும் எளிதில் ஏற்றுக் கொள்ளக் கூடிய பிரச்சாரக் கருவியாக அமைந்து, புஷ்ஷின் மறு தேர்தல் பிரச்சாரத்தில் அச்சாணியாகவும் இருந்தது.

1980களின் ஆரம்பத்தில், வத்திக்கான் றேகன் நிர்வாகத்துடனும் சிஐஏ உடனும் கொண்டிருந்த புனிதமற்ற உடன்பாட்டை ஒட்டி, இரண்டாம் ஜோன் போல் எப்பொழுதும் தொடர்புபடுத்திப் பேசப்படுவார். அக்காலக்கட்டத்தில் அமெரிக்க ஏகாதிபத்தியம் சோவியத் ஒன்றியத்தின் வலிமையை கட்டுப்படுத்தவேண்டும் என்ற மூலோபாயத்தில் இருந்து அதன் பொறிவை உருவாக்கும் நோக்கத்துடன் பொருளாதார, அரசியல், இராணுவ அழுத்தங்களை தீவிரப்படுத்த வேண்டும் என்று மாற்றிய நேரமாகும்.

1984ம் ஆண்டு வரை வத்திக்கானுக்கும் அமெரிக்காவிற்கும் இடையே முறையான தூதரக உறவுகள் இருந்ததில்லை; அந்த ஆண்டில்தான் றேகன் நிர்வாகம் அதை ஏற்படுத்தி மிகப் பிற்போக்கான சதித்திட்டத்தின் உச்சக்கட்டம் மேற்கொள்ளப்பட்டது. அத்தகைய உறவுகள் இந்நாடு தோற்றுவிக்கப்பட்ட கோட்பாடுகளுக்கு முற்றிலும் எதிரிடையானவை ஆகும்.

அந்தக் கோட்பாடுகள் 1960ம் ஆண்டு அப்பொழுது ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக இருந்த ஜோன் எப். கென்னடியினால் சுருக்கமாகக் கூறப்பெற்றன; "திருச்சபையும் அரசாங்க அதிகாரமும் முற்றிலும் பிரிந்து இருக்கும் அமெரிக்காவில்தான் எனக்கு நம்பிக்கையுண்டு; எந்தக் கத்தோலிக்க சமய குருவும் ஜனாதிபதிக்கு (அவர் கத்தோலிக்கராக இருந்தால்) எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று சொல்லக் கூடாது; எந்த புரட்டஸ்டான்ட் பாதிரியும் அவருடைய திருச்சபை மக்களுக்கு யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்று கூறக்கூடாது..."

ஒரு பகுத்தறிவற்ற முறையில் கம்யூனிச எதிர்ப்பாளராக இருந்த போப் சிஐஏ, மற்றும் அமெரிக்க அரசுத்துறையுடன் ஒத்துழைத்தமை அவருடைய தாயகமான போலந்துச் சூழ்நிலைகளுக்கும் அப்பால் சென்றது; போலந்தில் இவர் பெருகிய அதிருப்தியில் இருந்த போலந்து தொழிலாளர்களை வாஷிங்டனுடைய நோக்கங்களுக்கு அடிபணியச்செய்வதில் முக்கிய பங்கை கொண்டிருந்தார்.

உலகின் 1.1 பில்லியன் கத்தோலிக்கர்களின் தாயகமாக இருக்கும் இலத்தீன் அமெரிக்காவில், போப் திருச்சபை ஏழைகளுடன் அடையாளம் காணப்பட்டு சமூக மாற்றங்களுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்ற வலியுறுத்தலை கொண்டிருந்த விடுதலை இறையியல் இயக்கத்தை மிகத் தீவிரமாக ஒடுக்கினார். இந்த இயக்கம் இரண்டாம் ஜோன் போலின் தலமையிலான வத்திக்கான் விடுதலை இறையியல்வாதிகளின் ஆதரவாளர்களை, ஐரோப்பாவில், சமயக் கொடும் விசாரணையின் நவீனகால பதிப்புக்கு உட்படுத்தினார்.

அமெரிக்க ஆதரவு பெற்றிருந்த சர்வாதிகாரியான ஒகுஸ்டோ பினோசே, போப் ஆசிர்வதித்ததுடன், பல்லாயிரக்கணக்கான கத்தோலிக்க பாதிரிமார்கள், பெண் துறவியர், தொழிலாளர்களை இராணுவமும், சிஐஏ ஆதரவு பெற்றிருந்த முறையாக அமைக்கப்பட்டிருந்த பயங்கரவாதிகளும் எல் சால்வடோர், குவாதிமாலா மற்றும் நிகராகுவாவில் படுகொலை செய்தபோது வாளாவிருந்தார். ஆர்ஜென்டினாவின் பாசிச இராணுவ ஆட்சியின் கொலைகாரர்களுக்கும், சித்திரவதை செய்தவர்களுக்கும் பொது மன்னிப்பு வேண்டும் என்று வத்திக்கான் வாதிட்ட நிலையில், சர்வாதிகாரத்தை தைரியத்துடன் எதிர்த்து நின்று, "காணாமற் போய்விட்டவர்களை" திருப்பிக் கொடுங்கள் என்ற கோரிக்கையை கொண்டுவந்திருந்த Plaza de Mayo உடைய Mothers அமைப்பினருக்கு பேட்டி கொடுக்கக்கூட போப் மறுத்துவிட்டார்.

இந்த உண்மையான வரலாறு முழுவதும், மக்களின் செய்தி ஊடகப் பிரச்சார முழக்கத்தில் இருந்து கடுமையாக தணிக்கை செய்யப்பட்டுவிட்டன. இதேபோல் ஒதுக்கப்பட்ட விவாதத்திற்குரிய தலைப்புக்கள்தாம் அமெரிக்காவிலேயே கத்தோலிக்க திருச்சபையில் வெளிப்பட்டுள்ள நெருக்கடியாகும்; இங்கு பாதிரிமார்கள் எண்ணிக்கை குறைந்து கொண்டுவருகிறது, தொடர்ச்சியான சிறார் பாலியில் அவதூறுகள் நிறைந்துள்ளன; அவற்றைப் பற்றிய வழக்குகளை போப்பிற்கு நெருக்கமானவர்கள் மறைத்துவிட முயலுகின்றனர்.

இத்ககைய மிகப் பெரிய ஒருதலைப்பட்சமான பிரச்சாரம் மறைந்த போப்பிற்காக மேற்கொள்ளப்பட்டுள்ளதின் நோக்கம் என்ன? சிறிதும் வெட்கம் இன்றி டெர்ரி ஷியாவோ வழக்கில் இருந்து கவனக்குவிப்பை சிறிதும் இடைவெளி இன்றி, கண்கொட்டாமல் வத்திக்கான் மீது மாற்றியது ஒன்றும் தற்செயல் நிகழ்வு அல்ல.

முந்தையதில் அது சமய வலதுசாரிக் கருத்திற்கு ஒலிபெருக்கி போல் துணையாக நின்று மிகச் சிறிய அளவில் இருக்கும் வலதுசாரி வெறியர்களின் குரலை மக்கள் குரல் போல் ஒலிக்கச்செய்ய உதவியது. பிந்தையதில், கடும் விசாரணை, நிலப்பிரபுத்துவ முறையிலான அறிவியலுக்கு எதிரான ஒடுக்கு முறை மற்றும் குரோதம் ஆகியவற்றைக் கொண்டிருந்த போப்பாண்டவர் நிறுவன அமைப்பை உலக மரியாதைக்குரிய பொருளாக மாற்ற உதவியுள்ளது.

இதனால் ஏற்பட வேண்டும் என்று நினைக்கப்பட்ட விளைவு ஒன்றுதான்: அதாவது இடைவிடாத பகுத்தறிவற்ற தன்மை, பிற்போக்குத்தனம் பொய்கள் இவைற்றை கையாண்டுகூட சுதந்திரமான மற்றும் விமர்சன சிந்தனைப் போக்கு மூச்சுத் திணற அடிக்கப்பட வேண்டும். முழுமையாகத் தகவல் கொடுக்கும் நிலையில், அதிகாரபூர்வ கருத்துக்கள், உணர்வுகள் இவற்றை ஏற்க மறுக்கும் எவரையும் செய்தி ஊடகம் மனத்தளர்விற்கு உட்படுத்தலாம்; அவர்கள்தான் மற்றவர்களுடன் ஒத்திராமல், தனித்துப் போய்விட்டனர் என்று உணரவைக்கலாம். சுருக்கமாகக் கூறினால் அச்சுறுத்துவதுதான் நோக்கமாகும்.

பெருநிறுவனக் கட்டுப்பாட்டிற்குள் இருக்கும் செய்தி ஊடகம் இதே அடிப்படையான செயல்பாட்டைத்தான் ஈராக்கியப் போருக்கு அரசாங்கம் முரசு கொட்டியபோதும் செய்தது; மிகப் பரந்த அளவிலும் பெருகியும் வந்த மக்களது எதிர்ப்பை ஒதுக்கி வைத்தது; அமெரிக்க மக்களை போலிக் காரணங்களுக்காக, அது செப்டம்பர் 11 தாக்குதலுக்கான விடையிறுப்பு என்று நம்பவைத்து, அவர்களை அச்சுறுத்தி திகிலடையச்செய்ய அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு ஒத்துழைத்து உதவியது.

போப்பிற்கு அதிகாரபூர்வமான இரங்கலும், செய்தி ஊடகம் முழங்காலிட்டு ரோமாபுரிக்கு காட்டும் வணக்கமும், இறுதிப் பகுப்பாய்வில் ஆளும் அமைப்பிற்குள்ளே உள்ள எந்தப் பிரிவும், திருச்சபை, அரசாங்கம் பிரிந்து செயல்படவேண்டும் என்ற முக்கிய கருத்து உட்பட அமெரிக்கா நிறுவப்பட்டிருப்பதற்கு மிக அடிப்படையாக உள்ள ஜனநாயகக் கோட்பாடுகளை காக்கும் திறனையோ, விருப்பத்தையோ கொண்டிருக்கவில்லை என்பதைத் தெளிவுபடுத்துகிறது.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved