World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா

Bush, Congress intervene in Terri Schiavo case: political thuggery in the service of reaction

டெரி ஷியாவோ வழக்கில், புஷ், காங்கிரஸ் தலையீடு: பிற்போக்குத்தனத்திற்கு உதவுவதில் அரசியல் அயோக்கியத்தனம்

By the Editorial Board
21 March 2005

Use this version to print | Send this link by email | Email the author

கடந்த 15 ஆண்டுகளாக உயிர்க்காப்பு கருவிகளின் துணையுடன் வாழ்ந்த டெரி ஷியாவோ விஷயத்தில் காங்கிரசும் புஷ் நிர்வாகமும் தலையிட்டது, முற்றுமுழுதான அரசியல் அயோக்கியத்தனம் மட்டுமல்லாது ஒரு குடும்பச் சோகத்தை மிகப் பிற்போக்கான அரசியல் காரணங்களுக்காக சுரண்டிய நிகழ்வாகும். இது ஒரு ஒழுக்க நெறிவகையில் இழிசெயல் என்று மட்டும் அல்லாமல், அடிப்படை ஜனநாயக உரிமைகளின் மீதும் நேரடித் தாக்குதல் ஆகும்.

மிகத் தனிப்பட்ட, அந்தரங்கமான அக்கறைகளில் அரசாங்கம் தடையின்றி தன் அதிகாரத்தை செலுத்தலாம் என்று வலியுறுத்துவது அமெரிக்க ஆளும் தட்டு மற்றும் அதன் அரசியல் முகவர்கள் சென்று கொண்டிருக்கும் அரசியல் திசையை பற்றிய ஆபத்து நிறைந்த எச்சரிக்கையாகும். காங்கிரஸ் மூலம் திணிக்கப்பட்ட அவரசரச் சட்ட வரைவிற்கு ஆதரவாக மதவெறிக்கு பகிரங்கமாக அழைப்புவிட்டுள்ளதுடன், மைக்கேல் ஷியாவோ, அவருடைய வழக்கறிஞர் மற்றும் தன்னுடைய உயிர்காக்கும் ஆதரவுக் கருவிகளை அகற்றக்கோரும் ஷியாவோவின் முடிவை ஏற்ற புளோரிடா நீதிபதி ஆகியோருக்கு எதிராகச் சிறிதும் மறைவு இன்றி வன்முறையை தூண்டும் நிகழ்வுகளும் ஏற்பட்டுள்ளன.

வைத்தியர்கள், இனி திரும்ப அடையமுடியாத உணர்வற்ற நிலையில்தான் (vegetative state) உள்ளார் என்று ஷியாவோவைப் பற்றி அறிவித்த பின்னர், ஒரு குடும்பத்தின் உள்பூசலை இழிந்த, மிருகத்தனமான முறையில் பயன்படுத்திக்கொள்ளக் கருதுதல், காங்கிரஸில் உள்ள அவருடைய குடியரசு நண்பர்களும், புஷ்ஷும் சமீபத்தில் செய்துள்ள அரசியல் ஆத்திரமூட்டும் முயற்சியாகும். கருக்கலைப்பு உரிமைகள், ஓரினத் திருமணம், பள்ளிப் பிரார்த்தனை போன்ற, பல முறை நிகழ்ந்திருக்கும் "சூடு பிடிக்கும்" பிரச்சினைகளை தொடக்கும் வகையிலான வடிவில் இவர்கள் இதிலும் மிகப் பிற்போக்கான, அறியாமை நிறைந்த சமூகக் கூறுபாடுகளை தூண்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

அமெரிக்க நாட்டின் அரசாங்க அதிகாரம் அனைத்தின் நெம்புகோல்களையும் தன்வயத்தே கொண்டுள்ள பெரும் பிற்போக்களார்கள், இத்தகைய முறையில்தான் பெரும்பாலான மக்கள் எதிர்க்கும் வலதுசாரி கொள்கைகளுக்கு ஒரு சமூக தளத்தை ஏற்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். தங்களுடைய எதிர்ப்புக்களை மக்கள் இராணுவாதம், போர், சமூக பாதுகாப்பு நலத்திட்ட தகர்ப்புக்கள், மருத்துவ பாதுகாப்பு, உதவிகள் தகர்ப்பு, ஜனநாயக உரிமைகள் தாக்கப்படுதல் போன்றவற்றிற்கு எதிராக நன்றாகவே வெளிப்படுத்தியுள்ளனர். புஷ் மற்றும் அவருடைய குழுவிற்கு பின் ஆதரவாக அமெரிக்க செல்வந்தர் தட்டின் மிகக் கூடுதலான கொள்ளையடிக்கும் மற்றும் குற்றம் சார்ந்த பிரிவுகள் துணை நிற்கின்றன; அவர்கள்தான் பெருவணிக இலாப முறை, இழிவான முறையின் மிகப் பெரிய முறையில் தனியார் சொத்துக் குவிப்பு இவற்றைத் தொடருவதற்கு எதிர்ப்புக்காட்டப்படும் சட்டரீதியான மற்றும் அரசியல் தடைகள் அனைத்தையும் அகற்றிவிடும் இத்தகைய திட்டங்களை செயல்படுத்துகின்றனர்.

அமெரிக்க மக்களுடைய அடிப்படை உரிமைகளின்மீது நடத்தப்படும் தாக்குதலுக்கு, விருப்பத்துடன் துணை நிற்கும் தன்மையைத்தான் ஜனநாயகக் கட்சியும் கொண்டுள்ளது என்பதையே ஷியாவோ விவகாரம் நிரூபித்துக் காட்டுகிறது.

ஷியாவோவின் விவகாரத்தை, "வாழ்வதற்கான உரிமை" என்று இலக்காகக் காட்டும் கிறிஸ்தவ அடிப்படைவாதக் குழுக்களின் தூண்டுதலின் பேரில் செயலாற்றும் காங்கிரஸ் குடியரசுக் கட்சியினர், உயிர்வாழ ஆதரவு தரும் சாதனங்களை நிறுத்திக் கொள்ள அனுமதி கொடுத்த புளோரிடா நீதிபதியின் முடிவை மாற்றுவதற்காக கடந்த வாரம் பல தொடர் முயற்சிகளை மேற்கொண்டனர்.

கூட்டரசு காங்கிரஸுன் கீழ் பிரிவும் செனட் மன்றமும் ஞாயிறன்று ஓர் அவசரக் கூட்டத்தில் "தெரெசா மாரி ஷியாவோவின் பெற்றோர்களின் நன்மைக்காக" என்ற சட்ட வரைவை பரிசீலனை செய்யக் கூடின; இந்த சட்ட வரைவின்படி பெற்றோர்கள் கூட்டாட்சி நீதிமன்றத்தில் உயிர் ஆதரவு சாதனங்கள் நிறுத்தப்படக்கூடாது என்று வாதிட அனுமதிக்கப்படுவர். ஜனாதிபதி புஷ் தன்னுடைய டெக்சாஸ் கிராபோர்ட் பண்ணையிலிருந்து வாரவிடுமுறைக்கு முன்னரே பறந்து திரும்பி, சட்ட வரைவில், கிறிஸ்தவ வலது சக்திகளிக்கு இரைபோட வெளிப்படையாக நடந்து கொள்ளும் வகையில் கையெழுத்திடுவதற்கு வந்து விட்டார்.

புஷ், மற்றும் காங்கிரஸ் இந்த விவகாரத்தில் முழுமையாக காட்டியுள்ள வெட்கங்கெட்ட பாசாங்குத்தனத்தின் பிரதிபலிப்பாக, வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் ஸ்காட் மக்கிளெல்லன் உயிர் வாழ்தல், இறத்தல் போன்ற ஷியாவோ விவகாரங்களில், ஜனாதிபதி மிகக் கவனமான சிந்தனையும், விவாதமும் தேவை என்ற கருத்துக் கொண்டிருப்பதாக தெரிவித்தார். டெக்சாஸ் மாநில ஆளுனராக இருந்தபோது 152 கைதிகளை தூக்கிலிடுவதற்கு ரப்பர் ஸ்டாம்ப் போல் முத்திரையிட்டு, அவர்களுடைய இறப்பிற்கெதிரான முறையீடுகளுக்கு ஒரு கைதிக்கு சராசரி 15 நிமிடம் கூடச் செலவழிக்காத ஒரு நபர் இக்கருத்தை கொண்டிருப்பதாக, அவருடைய செய்தி தொடர்பாளர் கூறுகிறார். "மனித உயிருக்கான மரியாதை" என்ற வகையில் புஷ்ஷின் வெள்ளை மாளிகையின் வரலாற்றில் ஈராக்கில் முழு நகரங்களும் தகர்க்கப்பட்டவை, அமெரிக்க சிறப்புப் படைகள், CIAஇன் மரணக்குழுக்கள் உலகெங்கிலும் அனுப்பிவைக்கப்பட்ட செயல்கள் மற்றும் மிகப் பரந்த அளவில் பயன்படுத்தப்படும் சித்திரவதை முறைகள் ஆகியவையும் அடங்கியுள்ளன.

கிறிஸ்தவ அடிப்படைவாத வெறியர்களினது அமைப்புக்கள் புஷ்ஷாலும் குடியரசுத் தலைவர்களாலும் வளர்க்கப்படுகையில், அமெரிக்க மக்களில் மிகச் சிறுபான்மையினராக உள்ள அவர்களுடைய ஆதரவாளர்கள் ஷியாவோ விவகாரத்தில் வெள்ளை மாளிகையும், காங்கிரசும் செய்துவரும் திரித்த செயல்களை பெரிதும் பாராட்டியுள்ள நிலையில், கடந்த சில நாட்களில் நடைபெறும் சம்பவங்களை கண்ணுற்று பெரும்பாலான அமெரிக்க மக்கள் நம்ப முடியாமல் திகைத்து நிற்கின்றனர். (பல கருத்துக் கணிப்புக்களும் அரசியல் உந்துதல் பெற்ற கூட்டரசின் இத்தகைய தலையீடு, ஒரு குடும்ப வாழ்வின் மிக அந்தரங்கமான பகுதிக்குள் வருவதற்கு ஆதரவில்லை என்றுதான் தெரிவிக்கின்றன.) உலகில் எஞ்சியுள்ள பகுதிகளோ இத்தகைய மனிதாபிமானமற்ற, இழிசெயலின் காட்சியைக் கண்டு அருவெறுப்பு அடைந்துள்ளது.

அமெரிக்க முதலாளித்துவ அரசியலில் காணப்படும் பல போக்குகளை ஷியாவோ விவகாரம் நன்கு புலப்படுத்தியுள்ளது: குடியரசுக் கட்சியினுள் கிறிஸ்தவ வலது அடிப்படையினரின் கொண்டுள்ள தீர்மானகரமான செல்வாக்கு, பிற்போக்குத் தனத்திற்கு எதிராக ஜனநாயகக் கட்சி காட்டும் கோழைத்தனம் மற்றும் அடிபணிந்து நிற்கும் நிலைப்பாடு, இந்த முழு வழிவகையில் இருந்தும் பெரும்பாலான அமெரிக்க மக்கள் முற்றிலும் ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளவை ஆகியவை இதில் அடங்கும்.

பெரும் அதிர்ச்சி, கூடுதலான மருந்து உட்கொள்ளல் அல்லது வேறு மருத்துவச் சிக்கல்களின் விளைவாக, உயிரிருந்தும் உணர்வற்ற நிலையில் இருக்கும் 35,000 அமெரிக்க மக்களில் டெர்ரி ஷியாவோவும் ஒருவராவர். இவர் 1990இல், பொட்டாசிய சமசீரற்ற தன்மையினால், உடல் நலச் சரிவிற்குட்பட்டு, எந்த பிரதிபலிப்பையும் உடல் காட்டாத நிலையில் அப்பொழுது முதல் இருந்து வருகிறார். மூச்சுமட்டும் அவரால் விடமுடிகிறதே ஒழிய வேறு எந்த செயலுக்கும் நரம்பு மூலம் உட்செலுத்தப்படும் நீர், உணவு இவற்றிற்கும் நம்பியிருக்க வேண்டியுள்ளது. இந்தப் பெண்மணியின் மூளைச் செயல்பாடு நடைமுறையில் பூஜ்யம் என்றே கூறவேண்டும்; இதற்குக் கணக்கிலடங்கா நரம்பு மற்றும் மற்றைய மருத்துவர்களுடைய ஆய்வு உறுதி கொடுக்கிறது. இந்த நிலையில் இருந்து சாதாரண வாழ்விற்கு எந்த நோயாளியும் மீண்டு வந்ததாக ஆதாரமான குறிப்பு எதையும் காண்பதற்கில்லை; மாறாக கோமா நிலையில் இருந்து பல ஆண்டுகளுக்குப் பின்னர், ஏன் சில சமயம் தசாப்தங்களுக்கு பிறகும் மீண்டும் ஓரளவு சகஜ நிலைக்கு வந்ததாக ஆதாரங்கள் உள்ளன.

அவருடைய கணவர் மைக்கேலுக்கும், ஷியாவோவுடைய பெற்றோர்களான ரொபேர்ட் மற்றும் மேரி ஷிண்ட்லர் ஆகியோருக்கும் இதுபற்றி கருத்து வேறுபாடு உள்ளதால் ஷியாவோவின் விவகாரம் பெருமளவில் நீதிமன்ற விசாரணைகளுக்கு உட்பட்டுள்ளது. தன்னுடைய மனைவி உயிரிருந்தும் உணர்வற்ற நிலையில் தன்னை வைத்திருக்கக் கூடாது என விருப்பத்தை தெரிவித்துள்ளதாக மைக்கேல் ஷியாவோ தொடர்ச்சியாக கூறிவந்துள்ளார். அவருடைய சாட்சியம் பல நீதிமன்ற விசாரணைகளில் ஏற்கத்தகுந்ததாகத்தான் இருந்திருப்பதுடன், உயிருடன் இருக்கும் கணவன் என்றவகையில் தன்னுடைய மனைவியின் உயிராதரவுச் சாதனங்கள் பற்றி முடிவெடுக்கும் உரிமை பொதுவாக நீதிமன்றத்தில் ஏற்கப்பட்டுள்ளது.

ஷிண்ட்லர்கள் பழமைவாத கத்தோலிக்கர்கள்; திருச்சபை கோட்பாடுகளின் மரபு வழியிலான விளக்கங்களை கடைப்பிடிப்பவர்கள் ஆவர். தங்களையே ஏமாற்றிக் கொள்ளுதல் என்ற முறையிலோ, அல்லது "மிகத்தீவிர வலது" ஆதரவாளர்களின் செல்வாக்கிற்கு உட்பட்டோ, ஷிண்ட்லர்கள் டெர்ரி ஷியாவோவின் நிலைமை பற்றி அப்பட்டமான பொய்க்கூற்றுக்களை தெரிவித்துள்ளனர்; உதாரணமாக, எந்தவிதமான நரம்பியல் மருத்துவ ஆதாரமும் இல்லாமல் அவர்கள் தாங்கள் பேசுவதற்கு டெர்ரி செவிமடுப்பதாகவும், சில நேரங்களில் பேசக் கூடச் செய்வதாகவும் தெரிவிக்கின்றனர்.

சாதாரண சூழ்நிலையில் இந்தக் குடும்ப சோகம் உள்ளூர் நீதிமன்றத்திலேயே முடிந்திருக்க வேண்டும்; அரசியலமைப்பு வழிவகைகளில் மிகப் பெரிய மாற்றத்திற்கு ஒரு போலிக் காரணமானது ஒரு புறம் இருக்க, ஒரு பெரிய தேசிப் பிரச்சினையாகக்கூட பெரிதாகி இருந்திருக்காது. ஆனால், குடியரசுக் கட்சியின் சமூக தளத்தின் முக்கிய அடிப்படையாக இருக்கும் கிறிஸ்தவ வலது குழுக்களின் அரசியல் தலையீட்டால் இது பேருரு பெற்றுவிட்டது.

2003ல் தன்னுடைய மனைவியின் உயிர் ஆதரவுச் சாதனங்களை நிறுத்த வேண்டும் என்று மைக்கேல் ஷியாவோ முதலில் ஒரு நீதிமன்ற உத்தரவைப் பெற்ற பின்னர், புளோரிடாவின் கவர்னரான குடியரசுக் கட்சியை சேர்ந்த ஜெப் புஷ் (ஜோர்ஜ் டபுள்யூ புஷ்ஷின் சகோதரர்) மற்றும் குடியரசுக் கட்சியின் கட்டுப்பாட்டிற்குள் இருந்த மாநில சட்டமன்றத்தினரும் குறுக்கிட்டு "டெர்ரியின் சட்டம்" என்பதை இயற்றி கையெழுத்திட்டனர்; இதன்படி இப்பெண்மணியின் விவகாரத்தில் மட்டும் உயிர் ஆதரவு கொடுக்கும் சாதனங்கள் நிறுத்தப்படக் கூடாது என்று தடை விதிக்கப்பட்டது.

பின்னர் இந்தச் சட்டம் புளோரிடாவின் தலைமை நீதிமன்றத்தால் செல்லத்தக்கது அல்ல என்று நிராகரிகப்பட்டு, வழக்கு மீண்டும் பைனெல்லாஸ் குறுநிலப்பகுதிக்கு அனுப்பப்பட்டது; அங்குதான் டெரி ஷியாவோ ஒரு மருத்துவ வசதி இல்லத்தில் இருக்கிறார். கடந்த வாரம் இந்த நீடித்த சட்டப் பூசலின் முடிவாக சுற்று நீதிமன்ற நீதிபதி ஜோர்ஜ் கிரீர், மைக்கேல் ஷியாவோ உயிர் ஆதரவு கொடுக்கும் சாதங்களை நிறுத்தலாம் என்று உத்தரவிட்டதுடன் தன்னுடைய நீதிமன்றத்தில் இதுபற்றி எந்த மேலதிக விசாரணையும் கூடாது என்றும் உத்தரவிட்டார்.

ஷிண்ட்லர்களுக்கு ஆதரவு கொடுத்து வரும் கிறிஸ்தவ வலதுசாரி குழுக்கள் புளோரிடா சட்டமன்றத்தில், பிரதிநிதிகள் பிரிவில், ஒரு சட்டத்தை கொண்டு வந்து உயிர் ஆதரவு கருவிகள் நிறுத்தப்படக் கூடாது என்று கூறின. ஆனால் புளோரிடாவின் செனட்டு மன்றம் அந்தச் சட்டத்தை தோற்கடித்துவிட்டது. ரம்பா நகரத்தில் ஒரு கூட்டரசு நீதிபதி, ஷிண்ட்லர்கள் இந்த வழக்கை நீதிபதி கிரீருடைய மன்றத்தில் இருந்து ஒரு கூட்டரசு நீதி மன்றத்திற்கு மாற்றுவதற்கு அனுமதி அளிக்க மறுத்துவிட்டார்.

இதற்கு அடுத்த நடவடிக்கை காங்கிரஸுக்கு ஒரு முறையீடு செய்வதாகும்; இதில் கீழ் பிரிவான பிரதிநிதிகள் கடந்த புதனன்று கூட்டரசு நீதிமன்றங்களுக்கு, ஒரு நெருங்கிய குடும்ப உறுப்பினர் உயிர் பிரிதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தால், அத்தகைய உயிர் ஆதரவு கருவிகள் வழக்கில் அதிகார வரம்பு பெற்றவை என்ற சட்டத்தை இயற்றியது இது ஆயிரக்கணக்கான மற்றவர்களுக்கு இதுபோன்ற வழக்குகளை தொடருவதற்கு அழைப்பு விடுத்தல் போன்றதாகும். ஆனால் மேல்பிரிவான செனட் மன்றமோ, இன்னும் குறுகிய முறையில் தயாரிக்கப்பட்டிருந்த சட்டவரைவை பரிசீலனைக்கு எடுத்துக் கொண்டது; ஷியாவோ வழக்கிற்கு மட்டும் பொருந்தும் வகையில் இது இருந்தது; ஏனெனில் சில ஜனநாயகக் கட்சினர் மிகப் பரந்த அளவிலான மன்றச் சட்டவரைவிற்கு எதிர்ப்புக்களை தெரிவித்தனர். இதன்பின்னர் இரண்டு பிரிவுகளும் இரண்டு வார ஈஸ்டர் விடுமுறையை எடுத்துக் கொண்டு சட்ட வரைவைக் கைவிடுவது போல் செயல்பட்டன.

ஆனால் வெள்ளிக்கிழமையன்று மிக விரைவான கதியில் நிகழ்வுகள் நடந்தேறின. கிறிஸ்துவ அடிப்படைவாத குழுக்கள் தேசிய சட்ட மன்றத்தின் இரு பிரிவுகளையும் செயலற்ற தன்மைக்காக கண்டனம் தெரிவித்ததுடன், பதிலடி கொடுக்கப்படும் என்று குடியரசுக் கட்சி தலைமையையும் அச்சுறுத்தின. இதன்பின் இரு பிரிவுகளின் குழுக்களும் மைக்கல் ஷியாவோ நீதிமன்றத்தில் சாட்சியம் கொடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டது மட்டுமில்லாமல், மூளை-இறந்திருந்த நிலையில் உள்ள அவர் மனைவியும் சாட்சியம் கொடுக்க வேண்டும் எனக் கூறியது. இதைத்தவிர, டெர்ரி ஷியாவோ உயிர் ஆதரவுக் கருவிகள் நிறுத்தப்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்ற அச்சுறுத்தல்களும், ஒரு கூட்டரசு சாட்சியத்தில் குறுக்கிடுவு, ஒரு ஆகக்கூடிய குற்றமாக சட்டத்தில் கொள்ளப்படுவதற்கு இடமிருக்கிறது.

குழுவின் இந்த உத்தரவுகளை நீதிபதி கிரீர் நிராகரித்தார்: இந்த வழக்கில் காங்கிரசிற்கு அதிகார வரம்பு இல்லை என்று அவர் கூறினார். "சட்டமன்ற அமைப்புக்களோ அவற்றின் நிறுவனங்களோ ஒரு நீதிமன்ற நடவடிக்கையில் தலையிடக் கூடாது என நான் கருதுகிறேன்" என்று அரசாங்க சீர்திருத்த மன்றக் குழுவின் வக்கீலிடம் அவர் தெரிவித்தார். "நீங்கள், உங்கள் குழு, இன்று ஏதேனும் செய்யவேண்டும் என்ற நினைத்திருக்கும் உண்மை, ஒரு நெருக்கடிக்காலத்தை தோற்றுவித்துவிடாது" என்றும் அவர் குறிப்பிட்டார். வெள்ளிக் கிழமை பிற்பகலில் டெர்ரி ஷியாவோவுக்கு உணவளிக்கும் குழாய் துண்டிக்கப்பட்டது.

மன்றக் குழு பின்னர் அமெரிக்க தலைமை நீதிமன்றத்திற்கு ஒரு அவசர முறையீட்டைக் கொடுத்து, உணவளிக்கும் குழாய் பழையபடி பொருத்தப்படவேண்டும் என்று கோரியது. கையெழுத்திடா மதிப்பீடு ஒன்றில் நீதிமன்றம் இந்த முறையீட்டை வெள்ளி இரவன்று நிராகரித்தது.

வெள்ளி இரவன்றே, செனட்டு மன்றத்தின் பெரும்பான்மை கட்சி தலைவரான பில் பிரிஸ்ட், மற்றும் மன்றத் தலைவர் ஹாஸ்டெர்ட் (இருவருமே குடியரசுக் கட்சியினர்), மன்றக் குழுக்கள் சட்டம் பற்றி நடவடிக்கைகளுக்காக வார விடுமுறையின்போதும் செயல்படும் என்றும் அவர்கள் "திருமதி ஷியாவோவின் உயிரை காப்பாற்றுவதற்கான ஒரு வாய்ப்பை சட்டமியற்றும் வகையில் ஓர் உடன்பாடு காண்பதற்கு உறுதியுடன் இருப்பதாகவும்" அறிவித்தனர்.

ஞாயிற்றுக் கிழமையன்று சட்டவரைவை ஏற்றுக் கொள்ளுவதற்காக விடுமுறையில் இருந்து நெருக்கடிக் கூட்டத்திற்கு வருமாறு சட்ட மன்றத்திற்கு பிரிஸ்ட் மற்றும் ஹாஸ்டெர்ட் அழைப்பு விடுத்தனர்; ஷிண்ட்லர்கள் மேல்முறையீடு செய்வதற்காக கூட்டரசு நீதிமன்றங்களும் ரம்பா நகரில் திறந்து வைக்கப்பட்டன. இந்தச் சட்டவரைவு நிறைவேறவேண்டும் என்றால் ஒருமித்த கருத்து தேவை என்று இருந்தது; இதற்கு செனட்டில் இருந்த ஜனநாயக கட்சியினர் உடன்பட்டாலும், கீழ்பிரிவில் இருந்த சில புளோரிடா ஜனநாயகக் கட்சியனர் தடுத்து நிறுத்திவிட்டனர். மன்ற விதிகளின்படி 12:01 மு.ப என்ற மிக முந்தைய நேரத்தில்தான் முறையாக மன்றக் கூட்டம் நடைபெறும் என திட்டமிடப்பட்டது; அப்பொழுது பெரும்பான்மை வாக்குகள் மூலம் அது இயற்றலாம் எனவும் கொள்ளப்பட்டது; திங்கள் காலை புஷ் இதில் கையெழுத்திடுவார் என்றும் ஷிண்ட்லர்கள் கூட்டரசு நீதிமன்றத்திலே அன்றே வழக்குத் தொடரலாம் என எதிர்பார்க்கப்பட்டது.

இத்தகைய பாராளுமன்ற திரித்தல் முறைக்கு இணையாக, மிக அசாதாரணமான சொற்ஜாலங்கள், பாசாங்குதனம் ஆகியவையும் சேர்ந்து கொண்டன. காங்கிரஸின் குடியரசுக் கட்சியினர் பொதுவாகக் கூட்டாட்சி நீதிமன்றம் வரம்பு மீறிச் செயல்படவிடாமல், "மாநிலங்களின் உரிமைகளைப் பாதுகாப்பவர்கள்" என்று கூறிக்கொள்ளுபவர்கள் ஆவர்; ஆனால் இதிலோ அவர்கள் கூட்டரசு நீதித்துறைத் தலையீட்டை பிரத்தியேகமாக மாநில நீதிமன்றங்கள் நடத்திவந்த வழக்கில் தலையிடுவதற்கு உந்துதல் கொடுத்தனர். "குடும்ப மதிப்பீடுகள்" பற்றி அவர்கள் உபதேசித்து வந்தாலும், தன்னுடைய மனைவியின் சொந்த விருப்பத்தின் அடிப்படையில் மைக்கேல் ஷியாவோ ஒரு முடிவை எடுக்கும் உரிமையை நசுக்க முற்படுகின்றனர். தொழிலாளர்கள் நலன்கள், ஏழைகள் நலன்களை இவற்றைச் சூறையாடுவதற்காக, "குறைந்த செயல்புரியும் அரசாங்கம்" மட்டுமே தேவை என்று வாதிடும் அவர்கள், அனைத்து அந்தரங்க உரிமைகளையும் கிழித்தெறிந்து அரசாங்கத்தின் ஆணை ஒன்றை தனி நபர்களின் சொந்த விஷயங்கள்மீது செலுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

ஷிண்ட்லர்களின் ஆதாரமற்ற கூற்றுக்களுக்கு நம்பகத் தன்மை கொடுக்கும் வகையில் செனட்டு உறுப்பினர் பிரிஸ்ட் தன்னுடைய மருத்துவர் என்ற பின்னணியை பயன்படுத்தினார். மிகப் பரந்த அளவில் ஒளிபரப்பப்பட்ட டெர்ரி ஷியாவோ காட்சியைப் பரிசீலித்தபின்னர் (இதில் அந்தப் பெண்மணி திறந்த கண்கள், திறந்த வாய் என்ற தோற்றத்தில் இருக்கிறார்), "தொடர்ச்சியான உயிரிருந்தும் உயிரற்ற நிலை" என்ற கருத்து பிழை என்ற முடிவிற்குத் தான் வந்துள்ளதாகக் கூறினார்.

பிரிஸ்ட் ஒரு இதய அறுவை மருத்துவர் ஆவார்; அவர் நரம்பியல் நிபுணர் அல்லர்; எந்த உயர்நிலையில் உள்ள மருத்துவரும் குறிப்பாக தயார்செய்யப்பட்டுள்ள ஒளிப்படக் காட்சியின் அடிப்படையில் ஒரு மருத்துவக் கருத்தை முன்வைக்க மாட்டார். இங்கு மருத்துவ காரணிகளை காட்டிலும், அரசியல் காரணிகளே முடிவெடுக்கும் தன்மையை கொண்டிருந்தன. 2008ம் ஆண்டு ஜனாதிபதி நியமனத்தில் ஒரு கண் பிரிஸ்டுக்கு உண்டு; இதற்கு கிறிஸ்துவ வலதுசாரிகளின் ஆதரவு மிக முக்கியமானது ஆகும்.

மன்றப் பெரும்பான்மைக் கட்சித் தலைவரான ரொம் டீலே, மரண தண்டனை, ஈராக்கில் அமெரிக்கா நடத்தும் போர் இவற்றிற்கு ஆர்வமுடைய ஆதரவாளர் ஆவார். இவர் மூளை இறந்து போயிருக்கும் ஒரு பெண்ணிற்கு உணவு செலுத்தும் குழாயை அகற்றுவதை "மருத்துவ முறையிலான பயங்கரவாதம்" என்று கண்டனத்திற்குட்படுத்தி இருக்கிறார். ஊழல் குற்றச் சாட்டுக்கள் ஏராளமானவற்றில் சிக்கியுள்ளதால் பல வாரங்களாகப் பெரும் கவனத்துடன் அவற்றைத் தவிர்த்து வந்திருந்தாலும், இப்பொழுது தொலைக்காட்சி காமிராக்கள் முன்னால் நின்று, டிலே அறிவிக்கிறார்: "தற்பொழுது புளோரிடாவில் பாதுகாப்பு அற்ற அமெரிக்க குடிமகள் ஒருவருக்கு எதிராக கொலை நடத்தப்படுகிறது." என்றார்.

இத்தகைய குடியரசுக் கட்சியில் அவநம்பிக்கை தரும் செயல், கையெழுத்திடப்படாத ஒரு பக்கக் குறிப்பு செய்தி ஊடகத்திற்குக் கசியவிட்டிருப்பதின் மூலம் அடிக்கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளது; இது குடியரசு செனட்டு உறுப்பினர்களுக்கு "பேச வேண்டிய கருத்துக்கள்" என்பதைத் தொகுத்துக் கூறி வழங்கப்பட்டுள்ளது. இந்தக் குறிப்பு அறிவிக்கிறது; "இது ஒரு முக்கியமான அறநெறிப் பிரச்சினையாகும்; உயிருக்கு ஆதரவு என்ற அடித்தளம் செனட் இந்த முக்கியப் பிரச்சினையை விவாதிக்கிறது என்பதை அறிந்து மெய்சிலிர்த்துப் போகும்." மேலும் பிளோரிடாவின் ஜனநாயக செனட் உறுப்பினர் பில் நெல்சன் அடுத்த ஆண்ட் மறுதேர்தலுக்கு நிற்பதின் வாய்ப்பையும் இல்லாதொழிக்கும் ஒரு சந்தர்ப்பத்தை கொடுத்துள்ளதாக மேற்கோளிட்டுள்ளது; "இது ஒரு அரசியல் பிரச்சினை; ஏனென்றால் புளோரிடாவின் செனட்டரான நெல்சன் ஏற்கனவே இந்தப் பிரச்சினையில் ஒத்துழைக்க மறுத்துவிட்டார் என்பதுடன் ஜனநாயகவாதிகளுக்கும் இது ஒரு கடினமான பிரச்சினையாகும்."

ஷியாவோ விவகாரத்தின் முக்கிய கூறுபாடுகளில் ஒன்று கிறிஸ்தவ வலதுகளுடன் கிட்டத்தட்ட மன்றத்தின் இரு பிரிவுகளிலும் உள்ள ஜனநாயகக் கட்சி உறுப்பினர்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு கொடுத்ததாகும். செனட் மன்றத்தின் சிறுபான்மைக் கட்சித் தலைவரான ஹாரி ரீட், (இவரே ஒரு கருக்கலைப்பிற்கு எதிர்ப்பாளர் ஆவார்), சடுதியில் தன்னை, ஷியாவோ வழக்கில் சிறப்புச் சட்டம் இயற்றும் திட்டத்துடன் பிணைத்துக் கொண்டு, 44 உறுப்பினர்கள் கொண்ட முழு ஜனநாயக உட்குழுவையும், இந்தச் சட்டத்திற்கு எதிர்ப்புக் கூறவோ, தடை செய்யவோ கூடாது என்று தன்னுடைய செல்வாக்கின் மூலம் செய்து விட்டார்.

மறுநாள் வாக்கெடுப்பிற்கு வகை செய்யும் வகையில், செனட் மன்றத்தின் கூட்டம் சனியன்று நடைபெற்றபோது, இரண்டு குடியரசுக் கட்சிக்காரர்களும் ஒரு ஜனநாயகக் கட்சிக்காரரும்தான் மன்றத்தில் இருந்தனர்; ஒரு பிரபல தாராளவாதியான Iowa வுடைய செனட்டர் டாம் ஹார்கின் சட்டவரைவை இயற்றத் துணை நின்றார். செனட்டு மன்றம் ஞாயிறன்று ஒருமித்த கருத்துடன் இந்தச் சட்ட வரைவே ஏற்றது; இது இயற்றப்பட்டதற்கு ஒவ்வொரு ஜனநாயக செனட் உறுப்பின்களும் பொறுப்பாவார். சில மன்ற ஜனநாயக உறுப்பினர்கள் தனிப்பட்ட முறையில் சட்ட வரைவு இயற்றப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து அசாதாரணமான முறையில் நள்ளிரவிற்கும் அப்பால் கூட்டம் நடந்தபோது, மன்றத்தின் ஜனநாயககட்சி தலைமை சட்ட வரைவிற்கு ஒப்புதல் தெரிவித்தது.

இதனை ஒட்டி, மைக்கேல் ஷியாவோவின் வக்கீல் ஜோர்ஜ் பெலோஸ் ஒரு வர்ணனை கொடுத்தார்: இதில் தொடக்க முயற்சியாக இருந்த சாட்சியம் கூறவேண்டும் என்ற ஆணைகளை அவர்தான் "அடாவடித்தனம்" என்று கூறியிருந்தவர்: மேலும் அதே கருத்தைத்தான் அவர் மைக்கேல் ஷியாவோ தன்னுடைய மருத்துவ விருப்பங்களை நிறைவேற்றும் உரிமையைப் பறிக்கும் சட்டவரைவைப் பற்றியும் அவ்வாறுதான் கூறினார். "இது வெறுக்கத்தக்கது; அருவெறுப்பை தருவது; அமெரிக்க மக்கள் அனைவருமே எச்சரிக்கை உணர்வுடன் இருப்பது நல்லது" என்று பெலோஸ் கூறினார். ஜனநாயகவாதிகளை பொறுத்தவரையில் "அவர்கள் டெர்ரி ஷியோவின் விருப்பத்திற்கு ஆதரவு கொடுக்கவில்லை என்றால் சிறுபான்மையினரின் கட்சி என்ற தகுதிக்கு ஏற்றவர்கள் அல்லர்" என்றும் கூறினார்.

தன்னுடைய குடும்ப விவகாரத்தில், அரசியல் உந்துதலுடன் அரசாங்கம் குறிக்கீடு செய்துள்ளதை மைக்கேல் ஷியாவோ ஒரு தொலைக்காட்சிப் பேட்டியில் கண்டனத்திற்கு உட்படுத்தியுள்ளார். "டெர்ரி இதைத்தான் விரும்பினார். இதுதான் அவருடைய விருப்பம்" என்று CNN க்கு வெள்ளியன்று அவர் தெரிவித்தார். அரசாங்கம் "என்னுடைய சொந்த வாழ்க்கையைக் காலில் போட்டு மிதித்துள்ளது" என்று அவர் சேர்த்துக் கொண்டார். "தான் அறிந்திராத ஒருவருடைய வாழ்க்கையில் சட்ட மன்றம் குறுக்கிட்டுவிட்டது. இது வருந்தத் தக்கது. எனக்கு இதைச் செய்தார்கள் என்றால், நாளை நாட்டில் ஒவ்வொருவருக்கும் இதை அவர்கள் செய்யக் கூடும்."

இந்த எச்சரிக்கையை நாம் மிகவும் கவனத்திற்கு எடுக்கவேண்டும். ஷியாவோ வழக்கு எந்த அளவிற்கு அமெரிக்காவில், தங்களுடைய அடிப்படை சமயக் கொள்கைகளை, அவற்றை ஏற்காத பெரும்பாலான மக்கள் மீது சுமத்துவதற்கு வலது சாரி வெறியர்களுடைய சர்வாதிகாரப் போக்கு இருக்கிறது என்பதை நிரூபித்துக் காட்டுகிறது.

புளோரிடாவில் பைனெல்லாஸ் பார்க்கில் உள்ள மருத்துவ வசதி இல்லத்திற்கு வெளியே நடக்கும் நிகழ்வுகளைச் செய்தி ஊடகங்கள் தெரிவிக்கையில், "டெர்ரியைக் காப்பாற்ற வேண்டும்" என்ற காரணத்திற்காகக் கூடியிருப்பவர்கள் எந்த அளவிற்கு முட்டாள்த்தனத்திற்கு உட்பட்டுள்ளனர் என்பதைத் தெரிவிக்கின்றன. ஒப்புமையில் குறைவான ஆர்ப்பாட்டக்காரர்கள்தான் உள்ளனர்; அவர்களின் பலர் தீவிர வலதுசாரி எதிர்ப்பு அணியினரின் பகுதியே ஆவர். ஒரு கருத்தின்படி அவர்களில் பெரும்பாலானவர்கள் கடந்த ஆண்டு அலபாமா தலைமை நீதிமன்றத்திற்கு வெளியே நின்று மிகப் பெரிய பத்துக் கட்டளைகள் நினைவுச் சின்னத்தை அகற்றுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்தவர்கள் ஆவர்; மற்றும் சிலர் கருக்கலைப்பு நிலையங்களில் மறியல் ஆர்ப்பாட்டத்தை நடத்துபவர்கள் ஆவர்.

இதில் இருந்தவர்களில் கிறிஸ்துவப் பாதுகாப்புச் சங்கத்தின் பாட்ரிக் மகோனே, ஆபரேஷன் ரெஸ்க்யூவின் (Operation Rescue) ராண்டால் டெரி இருவரும் உள்ளனர்; இருவருமே கருக்கலைப்பு நிலையங்களின் வன்முறையில் ஈடுபட்டவர்கள் ஆவர். சில எதிர்ப்பாளர்கள் வன்முறையைத் தூண்டும் வகையில் அட்டைகளை ஏந்தி நின்று, நீதிபதி கிரீரை "நீதிமுறைப்படி கொலைகாரர்" எனக் குற்றம்சாட்டுவதுடன், டெர்ரிக்கும் பதிலாக மைக்கேல் ஷியாவோவுடைய உயிர் காப்புக்கள்தான் அகற்றப்படவேண்டும் என்றும் கூறுகின்றனர்.

சனிக்கிழமை காலை, மருத்துவ வசதி இல்லத்திற்குள் நுழைய முற்பட்டபோது, மூன்று பேர் அனுமதியின்றி நுழைவதற்காக கைது செய்யப்பட்டனர். அவர்களுள் ஒருவர் ஜேம்ஸ் "போ" கிரிட்ஸ் ஆவார்; இவர் முன்னாள் வியட்நாம் போரின் கிரீன் பெரெட்டின் தளபதி ஆவார்; பாசிச போராளிகள் வட்டங்களில் இவர் முக்கிய பங்கு பெற்றிருந்ததுடன் தீவிர வலதுசாரிக் குழுவின் சார்பின் ஜனாதிபதி வேட்பாளராகவும் போட்டியிட்டிருந்தார்.

இத்தகைய கூறுபாடுகளுக்கும் தேசிய சட்ட மன்ற தலைமைக்கும் இடையே விந்தையான பல தொடர்புகள் உள்ளன. குறிப்பாக டிலே நீதிபதி கிரீர், மைக்கேல் ஷியாவோ மற்றும் ஷியாவோவின் வக்கீல் ஜோர்ஜ் பெலோஸ் ஆகியோருக்கு எதிராக வன்முறை கட்டவிழ்க்கப்பட வேண்டும் என்று அழைப்பு விடுவதில் நேரடி ஆர்வத்தை காட்டியுள்ளார். இவர் கிரீரின் உத்தரவை "காட்டுமிராண்டித்தனமானது" என்று தாக்கியுள்ளார்: பெலோசை "தீமையின் மொத்த உருவம்" என்று விவரித்துள்ளார்: ஷியாவோவைக் கூட தனிப்பட்ட முறையில் தாக்கிக் கூறியுள்ளார். "இந்தப் பெண்மணியை இவ்வாறு நடத்தியுள்ள ஒரு மனிதனிடம் எனக்குச் சிறிதும் மதிப்புக் கிடையாது. எத்தகைய மனிதன் இவன்" என்று அவர் கேட்டுள்ளார்.

ஷியாவோ வழக்கின் சட்டபூர்வ, அரசியலமைப்பு தாக்கங்கள் மிகவும் பிற்போக்குத்தனமானவையாகும். இந்தச் சட்டவரைவு சட்ட மன்றத்தின் இரு பிரிவுகளிலும் மிக அவசரமாக நினைவேற்றப்பட்டமை முன்னொருபோதும் நடக்காத ஒன்றுமட்டுமல்லாது, இது டெர்ரி ஷியாவோ மற்றும் அப்பெண்மணியின் பெற்றோர்களுக்கு மட்டும் பொருந்தும் என இயற்றப்பட்டுள்ளது. இதே தர்க்கத்தைப் பயன்படுத்தித்தான் அமெரிக்கத் தலைமை நீதிமன்றம் தன்னுடைய முடிவை புஷ் எதிர் கோர் வழக்கிலும் கொடுத்து, 2000 ஜனாதிபதித் தேர்தல்களின் முடிவையும், புஷ்ஷிற்கு வெள்ளை மாளிகையைக் கொடுத்ததின் மூலம் தீர்த்து வைத்தது.

ஒரு குறிப்பிட்ட மாநில நீதிமன்ற முடிவை ஒரு தனியார் வழக்கில் மாற்றிவிட வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் ஒரு சட்டத்தை இயற்றியதில் மூலம், காங்கிரஸ் அமெரிக்க அரசியலமைப்பின் கட்டுப்படுத்தி-சமநில்படுத்தும் (checks and balances) முறையான செயல்பாட்டை தடைக்குட்படும் விதத்தில் நடந்து கொண்டுள்ளது. சட்டத்தின்படி ஆட்சி என்றில்லாமல் வெள்ளை மாளிகையை அலங்கரிக்கும், ஒரு சிறிய பெரும்பான்மையை காங்கிரஸில் கொண்டுள்ள ஒரு கட்சியின் முழுமையான அதிகார செயற்பாட்டை உயர்த்தும் முறையை நோக்கிய ஒரு பாரிய அடியெடுத்துவைப்பாகும்.

Top of page