World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா

Pope John Paul II: a political obituary

போப் இரண்டாம் ஜோன் போல் : ஓர் அரசியல் இரங்கற் குறிப்பு

By Marius Heuser and Peter Schwarz
6 April 2005

Back to screen version

போப் இரண்டாம் ஜோன் போலை ஒரு தற்கால துறவி எனறவகையில், வத்திக்கானின் இறப்புச் சடங்குகள் பற்றிய புனிதப் புதிர் மற்றும் ஆடம்பரத்தை திறனாய்வின்றி அடுக்கடுக்காக செய்தி ஊடகம் வர்ணித்து வெளியிட்டதை விட, கிட்டத்தட்ட வேறு எதுவும் இரண்டாம் ஜோன் போலின் ஆளுமை பற்றியோ, தற்கால வரலாற்றில் அவர் பங்கு பற்றியோ ஆய்ந்தமைந்த முறையில் எதுவும் எழுதப்படவில்லை. கரோல் ஜோசப் வோஜ்டைலாவின் வாழ்க்கையை ஆதிக்கம் செய்த அரசியல் பிரச்சினைகள் மற்றும் அக்கறைகள் மற்றும் அவருடைய 27 ஆண்டு போப் பதவியில் நிறைந்திருந்த செயல்கள் பற்றி அபூர்வமாய் (அரிதாய்) விவாதிக்கப்படுகின்றன.

பல நூற்றாண்டுகளாக ரோமானிய கத்தோலிக்க திருச்சபை, அரசியல் பிற்போக்குத்தனத்தின் தளமாக, அது புரடெஸ்டான்ட் சமயசீர்திருத்தத்தை எதிர்த்தபொழுது, முதலில் நிலப்பிரபுத்துவ அமைப்பின் தூணாகவும், பின்னர் முதலாளித்துவ ஆட்சியின் தடுப்புக்காவல் சுவராகவும் விளங்கி வந்துள்ளது. திருச்சபையின் தலைவராக அமரும் மனிதருடைய தனிக் குணநலன்கள் ஒரு புறம் இருந்தாலும், அவருடைய பங்கே ஆழ்ந்த அரசியல் தன்மையைத்தான் கொண்டிருக்கும்.

அரசியலிலும், சமயத்திலும், ஆழ்ந்த பிற்போக்குக் கருத்துக்களை ஒருங்கே இணைந்திருந்த ஒரு மனிதரை போப் பதவி இரண்டாம் ஜோன் போலிடம் கண்டிருந்தது; அவருக்கு கணிசமான செயலாற்றும் அனுபவமானது, முதலாளித்துவ மற்றும் ஸ்ராலினிச ஆட்சிகள் இரண்டுடனும் இருந்தது. கடந்த இருபத்தி ஐந்து ஆண்டுகளில் குலுக்கியெடுத்த பல நிகழ்வுகளில் அவர் திரட்டியிருந்த அனுபவம் முக்கிய பங்கினை ஆற்ற அவருக்குக் கை கொடுத்தது

கரோல் ஜோசப் வோஜ்டைலா மே 18, 1920ல் போலந்தில் இருக்கும் வாடோவைஸ் என்ற சிறுநகரத்தில் ஆஸ்திரிய பேரரசின் முன்னாள் அதிகாரி ஒருவரின் மகனாக பிறந்தார். 9 வயதிலேயே தன்னுடைய தாயாரையும்; 21வயதில் தந்தையாரையும் இழந்து விட்டிருந்தார். ஒரு நல்ல மாணவர் என்று கருதப்பட்டிருந்த அவர், தத்துவம், மற்றும் இலக்கியத்தை கிரோகோவில் 1938ல் படிக்கத் தொடங்கி நாடக அரங்குகளிலும் தேர்ந்த ஆர்வத்தை வளர்த்துக் கொண்டிருந்தார். ஜேர்மனிய ஆக்கிரமிப்பின்போது அவர் பலவந்த உழைப்பிற்கு நிர்பந்திக்கப்பட்டார். இக்காலக் கட்டத்தில்தான் அவர் பாதிரியாராக வேண்டும் என்ற முடிவிற்கு வந்தார். 1942ம் ஆண்டு கிராகோ உயர் மேற்றிராணியார் (Archdiocese) பாதிரிமார்கள் கல்விக்கூடத்தில் (அப்பொழுது தலைமறைவாகச் செயலாற்றி வந்திருந்தது) சேர்ந்தார்.

நவம்பர் 1, 1946 அன்று அவர் ஒரு பாதிரியாராக திருமுழுக்காட்டப்பட்டார். இதற்கு அடுத்த இரண்டு ஆண்டுகள் அங்கு அவர் St. John of the Cross கல்வி அமைப்பில் இறையியலிலும் தியானத்திலும் முனைவர் (டாக்டர்) பட்டத்தை பெற்றார். பின் அவர் தன்னுடைய கல்வியையும் போலந்தில் தொடர்ந்தார். பட்டப்படிப்பிற்கு பின்னர் லுப்லின் இல் 1954ம் ஆண்டு கத்தோலிக்க பல்கலை கழகத்தில் ஆசிரிய பணியை மேற்கொண்டார்.

செப்டம்பர் 28, 1958 அன்று அவர் பிஷப்பாக (மேற்றிராணியார்) பொறுப்பேற்றுக் கொண்டார்; 1964ம் ஆண்டு கிராகோவின் தலைமைக் குருவாகப் பதவியேற்றார். இவருடைய வாழ்விலும், வத்திகனுடைய நலன்களிலும் இது ஒரு மிக நெருக்கடியான ஆண்டாக இருந்தது. போப் பனிரெண்டாம் பைஸ் அந்த ஆண்டு இறந்தது, ஸ்பெயின், இத்தாலி மற்றும் ஜேர்மனியின் பாசிச ஆட்சிகளுடன் போப்பின் ஒத்துழைப்பு மற்றும் ஐரோப்பிய யூதர்களை பூண்டோடு அழிப்பதை எதிர்க்க வத்திகன் மறுத்தது ஆகியவற்றால் மோசமான இழிவிற்காளாகியிருந்த திருச்சபையின் ஆட்சிக்காலத்தை ஒரு முடிவிற்கு கொண்டுவந்தது.

பனிரெண்டாம் பைஸிற்குப் பின்னர் இருபத்தி மூன்றாம் ஜோன் (1958-1963). மற்றும் ஆறாம் போல் (1963-1978) என்று போப் பதவியில் தொடர்ந்திருந்தனர்; இவர்கள் கத்தோலிக்க சடங்குகள் மற்றும் சமய நடைமுறையில் தொலை விளைவுடைய மாற்றங்களுக்கு ஏற்பாடு செய்திருந்தனர்; அவற்றில் வட்டார மொழிகளில் பிரார்த்தனைகள், மற்றய தாராள சீர்திருத்தங்களும் அடங்கும். இருபத்தி மூன்றாம் ஜோனும், ஆறாம் போலும் கத்தோலிக்க கோட்பாட்டில் உட்குறிப்பாக இருந்திருந்த செமிட்டிய-எதிர்ப்பில் இருந்து திருச்சபையை ஒதுக்கவும் முயன்றிருந்தனர்.

கிராகோவில் ஆர்ச்பிஷப் என்ற பதவி வகித்தபோது, வோஜ்டைலா போலந்தில் இருந்த ஸ்ராலினிச ஆட்சியுடன் பூசலை எதிர் கொண்டார். அவ்வாட்சியின் அரசியல் அதிகாரத்தை அவர் எதிர்க்கவில்லை; ஆனால் கத்தோலிக்க திருச்சபை தன்னுடைய கருத்தியல் செல்வாக்கை தக்கவைத்துக் கொள்ளும் என்று வற்புறுத்தினார். இந்த முறையில் ஒரு திருச்சபையை புதிய தொழில் நகரமான நோவா ஹுடாவில் கட்டுவதற்கு அவரால் முடிந்திருந்தது. 1967ம் ஆண்டு வோஜ்டைலா ஒரு கார்டினலாக நியமனம் பெற்றார்.

1978ம் ஆண்டு அக்டோபர் 16 அன்று போப்பாண்டவராக வோஜ்டைலா தேர்ந்தெடுக்கப்பட்டமை பெரும் பரபரப்பான விஷயமாக இருந்தது. ஒரு டச்சுக்காரரான ஆறாம் அட்ரியான் புனிதப் பீட்டரின் இருக்கையில் ஓராண்டு காலம் இருந்ததற்கு பின்னர், 455 ஆண்டுகளில் முதல் தடவையாக இத்தாலியரல்லாதவர் ஒருவர் கத்தோலிக்க திரு அதிகார படியின் உச்சியில் தலமையேற்றார். இரண்டு இத்தாலிய வேட்பாளர்களுக்கு இடையே பல போட்டிகள் நடந்த பின்னர், எட்டாம் வாக்குச் சுற்றில் 111 கார்டினல்களில் 94 பேர் போலந்து பாதிரியாருக்கு ஆதரவாக வாக்களித்தனர். 58 வயதில் புதிய போப் அசாதாரண இளைமையுடன் இருந்தார்.

இந்த முடிவின் அரசியல் பொருள் பிழையின்றி இருந்தது. 1960களின் முடிவில் இருந்து, வளர்ச்சியடைந்த மேற்கு ஐரோப்பிய முதலாளித்துவ நாடுகளும் ஸ்ராலினிச ஆட்சிக்குட்பட்டிருந்த கிழக்கு ஐரோப்பாவும் மீண்டும் மீண்டும் சமூக பூசல்களின் வன்முறையினால் அதிர்வுற்றிருந்தன. வோஜ்டைலாவுக்கு முன் பதவியில் இருந்த 23வது ஜோனும் ஆறாம் போலும் இந்த சமூக எழுச்சிக்கு விடையளிக்கும் வகையில் திருச்சபை கொள்கைவழியில், திருச்சபை உள்ளாட்சியில் சீர்திருத்தம் போன்றவற்றை கொண்டுவருவதில் ஈடுபட்டிருந்தனர்.

1960களின் முதல் பகுதியில் இரண்டாம் வத்திக்கான் குழு திருச்சபை கோட்பாடுகளை ஓரளவு தளர்த்துதல், கூடுதலான முறையில் பிஷப்புக்களும், சாதாரண மக்களும் பங்கு பெறும் வகையமைத்தல் என்ற முறையில் அத்தகைய சீர்திருத்தங்களுக்கு வழிவகுத்திருந்தது. 23வது ஜோன் கூடுதலான தளர்வுடைய கொள்கையை, சோவியத் ஒன்றியத்தை பொறுத்த வரையில் காட்டினார்; பின்னர் அவருடைய முயற்சி ஆறாம் போலினால் தொடரப்பட்டிருந்தது. இருவருமே ஸ்ராலினிச ஆட்சிகளுடன் நெருங்கிய தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்ள முயன்றனர்.

முதலாம் ஜோன் போல் என்ற பெயரில் அல்பினோ லூசியனி, ஆறாம் போலுக்குப் பின் 1978ல் பொறுப்பை மேற்கொண்டார்: அத்தகைய போக்கைத்தான் அவரும் பின்பற்ற விழைந்திருந்தார். ஆனால் 33 நாட்கள் மட்டுமே பதவியில் இருந்தபோது புதிய போப் அவருடைய படுக்கையில் இறந்திருந்த நிலையில் காணப்பட்டார். இவர் இறந்ததற்கான சரியான காரணங்கள் தெளிவுபடுத்தப்படவில்லை; ஏனெனில் வத்திக்கான் அவருடைய சடலத்தை பரிசோதனைக்கு உட்படுத்த மறுத்துவிட்டது.

திருச்சபையின் மிக உயர்ந்த பதவியை வோஜ்டைலா பொறுப்பு எடுத்துக் கொண்டமை அரசியலிலும், கருத்தியலிலும் ஒரு புதிய திருப்பு முனையாகும். புதிய திருச்சபை தலைவர் விரைவில் ஒரு மீட்பாளரான போப் என்று கருதப்பட்டார்; திருச்சபையை நவீன காலத்திற்கு எதிர்ப்பு தரும் சக்தியாக வெளிப்படையாகவே மாற்ற விரும்பினார். துறவியர்கள் மற்றும் கன்னி மேரி வழிபடலை வளர்க்க பெரும்பாடு பட்டார்; தனிப்பட்ட முறையிலும் இவர் அதற்கு தன்னை அர்ப்பணித்து கொண்டார்; கடுமையான சமூக அறநெறி வேண்டும் என்று வாதிட்டதுடன், ரோமாபுரியின் அதிகாரத்தை திருச்சபை மண்டலங்கள் மீதும் வலிமைப்படுத்தியதோடு, குற்றங்காண்கின்ற சமய தத்துவ போதகர்களையும் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தார். அரசியல் அளவில் ஒரு போலந்து நாட்டை சேர்ந்தவரை நியமனம் செய்தது லியோனிட் பிரெஷ்நேவின் தலைமையிலுள்ள மாஸ்கோ தலைமைக்கு அரசியல் ரீதியாக ஒரு சவாலை பிரதிநிதித்துவம் செய்தது.

போப்பாண்டவரும் சொலிடாரிட்டி இயக்கமும்

போப்பின் தேர்தல் நேரத்தின்போது, தொழிலாள வர்க்கத்திற்கும் ஆட்சி புரிந்துவந்த ஸ்ராலினிச ஆட்சிக்கும் இடையே போலந்தில் பூசல்கள் வியத்தகு முறையில் பெருகின. தொழிலாளர்களின் 1956ம் ஆண்டு கிளர்ச்சி இரத்தம்தோய்ந்த வகையில் அடக்கப்பட்ட பின்னர், போலந்து பல தொடர்ச்சியான மோதல்களால் ஆட்டம் கண்டிருந்தது. 1970ம் ஆண்டு விலைவாசி நடவடிக்கைகளுக்கு எதிரான வேலைநிறுத்த அலை கட்சி மற்றும் அரசாங்கத்தின் தலைவராக இருந்த வ்லாடிஸ்லாவ் கோமுல்காவை இராஜிநாமா செய்ய வைக்கும் கட்டாயத்தை ஏற்படுத்தியது. அவருக்குப் பின் ஆட்சிக்கு வந்த எட்வார்ட் கியரக் விலைவாசி உயர்வுகளை திருப்பி பெறவேண்டியதாயிற்று.

1976ம் ஆண்டு கியரக் மீண்டும் விலைவாசிகளை உயர்த்த முற்பட்டபோது, வேலை நிறுத்தங்கள், மக்களுடைய ஆர்ப்பாட்டங்கள், சாலைத் தடை அரண்கள் ஆகியவை ஏற்பட்டன. அதைத் தொடர்ந்த ஆண்டுகளில் தொழிலாளர்கள் பாதுகாப்புக் குழு மற்றும் சுயாதீன தொழிற்சங்கங்கள் நிறுவும் குழுக்கள் ஆகியன ஏற்படுத்தப்பட்டன; 1980ம் ஆண்டு மீண்டும் விலைவாசி ஏற்றத்திற்கு எதிரான வேலைநிறுத்த புதிய அலைகளுக்கு பின்னர், இந்த அமைப்புக்கள் இணைந்து தொழிற்சங்க ஐக்கிய இயக்கமாக (சாலிடாரிட்டி) ஒன்றுபட்டு, மில்லியன் கணக்கான தொழிலாளர்களின் ஆதரவைப் பெற்றது

போலந்தில் இத்தகைய சக்திவாய்ந்த தொழிலாளர் இயக்கங்களின் எழுச்சி பெரும் கவலையுடன் கிழக்கு, மேற்கு ஐரோப்பிய நாடுகளின் அரசாங்கங்களால் கவனிக்கப்பட்டன. சோவியத் ஒன்றியத்திற்கும் ஏனைய கிழக்கு ஐரோப்பிய நாடுகளுக்கும் போலந்தின் இயக்கம் பரவுவது என்பது ஸ்ராலினிச ஆட்சியை அச்சுறுத்தும் என்று மட்டும் இல்லாமல் மேலை நாடுகளிலும் தொழிலாளர்களுடைய புதிய போர்க்குணமிக்க போராட்டங்களுக்கு ஊக்கம் கொடுத்தது. 1970 களின் நடுப்பகுதியில் அத்தகைய போராட்ட அலைகள் சமூக ஜனநாயக மற்றும் தொழிற்சங்க அதிகாரத்துவத்தின் இணைந்த முயற்சிகளால் தடுத்துநிறுத்தப்பட்டிருந்தன.

ஜேர்மனியின் அதிபரான, ஒரு சமூக ஜனநாயகக் கட்சியாளரான ஹெல்மூட் சிமித், தன் இயல்பின்படியே போலந்து நாட்டின் தொழிலாளர்களுக்கு எதிராக கியரக்கின் அரசாங்கத்திற்கு தொடர்ச்சியாய் ஆதரவை அளித்தார். சிமித், கியரக்குடன் தனிப்பட்ட நட்பையும் தக்க வைத்துக்கொண்டிருந்தார்.

இரண்டாம் ஜோன் போல் போலந்திலும், கிழக்கு ஐரோப்பாவிலும் வன்முறை புரட்சி தோன்றவதால் ஏற்படும் விளைவுகளை நன்கு அறிந்திருந்தார். ஸ்ராலினிச ஆட்சி இடது பக்கத்தில் இருந்து என்று இல்லாமல் வலதுபக்கத்தில் இருந்து கவிழ்க்கப்படுவதை அவர் உறுதிப்படுத்தினார்; இதற்கு அவர் போலந்தின் தொழிலாள வர்க்கத்தினுள் இருந்த ஏகாதிபத்திய சார்புடைய தலைமைக்கு ஆதரவை தந்திருந்தார். இம்முயற்சியில் அவருக்கு சிஐஏ- இன் உதவி கிடைத்திருந்ததோடு மட்டுமின்றி, சிஐஏ மற்றும் அமெரிக்க அரசுத்துறையின் பிணைப்பில் இருந்த AFL-CIOவின் பல்வேறு வெளிநாட்டு நடவடிக்கைகளின் ஆதரவும் கிடைத்திருந்தது.

இரண்டாம் ஜோன் போல் மற்றும் திருச்சபையானது, ஸ்ராலினிசத்திற்கு எதிராக கொண்டிருந்த விரோதப் போக்கு செய்தி ஊடகத்தால் ஜனநாயகத்திற்கு அர்ப்பணிப்பு என்று சமன்படுத்தி பேசப்பட்டது. இது ஒரு கோரமான சிதைவாகும். கத்தோலிக்க திருச்சபையானது நிலப்பிரபுத்துவ சமூகப்பிரிவு என்ற வகையில் சமய குருமார்களின் அதிகாரத்தையும் செல்வத்தையும் உயர்த்திப் பிடித்த பொழுது புரெட்டஸ்டாண்ட்டிசம் தோன்றிய காலத்திற்கு திரும்பிச்செல்லும்,.500 ஆண்டுகளுக்கும் மேலாக ஜனநாயகத்தின்பால் மிகவும் வளைந்து கொடுக்காத விரோதப் போக்கை கொண்டிருந்த ஓர் அமைப்பிற்குப் போப் தலைமை தாங்கியிருந்தார்.

ஸ்ராலினிசத்தின் மீது திருச்சபை கொண்டிருந்த விரோதப் போக்கானது, ஸ்ராலினிசத்தின் ஜனநாயக விரோத, சாதிமுறை போன்ற அதிகாரத்துவத்தின் ஆட்சியால் மட்டும் அல்ல; சொல்லப்போனால் அவை அனைத்துமே திருச்சபையிலேயே அதன் நிறுவன முறையில் உட்செயல்பாடுகளுக்கு ஒத்துத்தான் இருந்தன. திருச்சபை படிமுறை அமைப்பே ஒரு சாதி போலத்தான் இருந்து முதலாளித்துவத்திற்கும் முற்பட்ட சமுதாயத்தில் தோன்றி, இப்பொழுது முதலாளித்துவ சமூக உறவுகளில் வேரூன்றியுள்ளது.

சொல்லப் போனால், உலகத்தில் மிகப் பெரிய வகையில், சொத்துக்களுக்கு உரிமையுடைய ஒற்றை நிறுவனம் கத்தோலிக்க திருச்சபையே ஆகும். எனவேதான் திருச்சபை குருதி தோய்ந்த, ஆனால் முதலாளித்துவ சொத்துடமையை ஏற்றிருந்த, லத்தீன் அமெரிக்க சர்வாதிகாரங்களுக்கு அது ஆதரவைக் கொடுத்தது, ஆனால் சொத்துரிமைகள் தேசியமயமாக்கப்பட்டிருந்ததின் அடிப்படையில் அமைந்திருந்த சோவியத் மற்றும் கிழக்கு ஐரோப்பிய ஸ்ராலினிச ஆட்சிகளை எதிர்ந்திருந்தது.

இந்த அடிப்படையிலேயே பிற்போக்குத்தனமான முறையில், கத்தோலிக்க திருச்சபை Solidarity இயக்கத்துடன் வெளிப்படையாக சேர்ந்து கொண்டது. தான் நியமனம் பெற்ற எட்டு மாதங்களுக்குள், புதிய போப் தன்னுடைய "புனிதப் பயணத்தை" போலந்திற்கு மேற்கொண்டு, கூடுதலான பயணங்களை 1983லும் 1987லும் மேற்கொண்டார். ஜனவரி 1980ல் இரண்டாம் ஜோன் போல், லேக் வலேசா தலைமையில் வந்திருந்த Solidarity இயக்கப் பிரதிநிதிகளுக்கு பேட்டி கொடுத்தார். பல ஆதாரங்களில் இருந்தும் வத்திக்கான் குறைந்தது $50 மில்லியனாவது தொடர்ந்து வந்த ஆண்டுகளில் தொழிற் சங்கங்களின் ஆதரவிற்காக திரட்ட முடிந்தது.

ஆயினும், வத்திக்கானுடைய இந்த நோக்கம் ஒன்றும் தொழிலாளர்களுடைய சமூக கோரிக்கைகளுக்கு ஆதரவு கொடுப்பதற்காக அல்ல. மாறாக, அவ்வியக்கத்தை பிற்போக்கான கத்தோலிக்க கருத்தியல், போலந்து தேசியம் இவற்றின் செல்வாக்கின்கீழ் வைத்துக் கொண்டு, அது இருக்க கூடிய ஒழுங்கிற்கு ஒரு சர்வதேச சவாலாக வளர்ந்துவிடக்கூடாது என்பதை உறுதிப்படுத்துவதற்காகும். 1500 ஆண்டுகளுக்கு மேலாக அதிகாரத்தையும் ஒழுங்கையும் பாதுகாக்கும் அனுபவத்தை நன்கு கொண்டுள்ள கத்தோலிக்க படிமுறையில் அமைந்த அதிகார அமைப்பு, போலந்தில் வளர்ந்திருந்த மக்கள் இயக்கம் போன்றவை வெறும் செயலற்ற முறைகளின் மூலம் கட்டுப்படுத்தி அடக்கப்பட்டு விட முடியாது என்பதையும், வேறு திசையில் அதன் இயக்கம் செயலூக்கத்துடன் செல்வாக்கு செலுத்த விடவேண்டும் மற்றும் திருப்பப்படவேண்டும் என்பதையும் நன்கு உணர்ந்திருந்தது.

ஒரு போலந்து நாட்டவரை போப்பாக நியமித்தமை, போலந்தில் கத்தோலிக்க திருச்சபையை ஏற்கனவே உறுதிப்படுத்தியதை சிறப்பித்துக் காட்டியது. வோஜ்டைலா தன்னுடைய போலந்து நிலைப்பாடுகளை பற்றி குறிப்பிடுவதில் சலிப்பு அடைந்ததே இல்லை; மேலும் போலந்து தேசியத்தை புகழ்ந்தும், போலந்துதான் ஒரு கிறிஸ்தவ நாடு என பெருமிதத்துடன் கூறுவதையும் வழக்கமாக கொண்டிருந்தார். 1979ம் ஆண்டு ஜூன் மாதம் வார்சோவின் வெற்றிச் சதுக்கத்தில் பெரும் களிப்புடன் இருந்த ஒரு கூட்டத்தில் பேசுகையில், "போலந்து நாடு மனிதகுலம், மனித சமுதாயத்தின் வளர்ச்சி ஆகியவற்றிற்கு ஆற்றிய பங்களிப்பு" பற்றி பெரிதும் புகழ்ந்து பேசி, இது ஏசுபிரான் வழிமூலம்தான் நன்கு அறிந்து கொள்ளப்பட்டு, பாராட்டப்பட முடியும் என்றும் கூறினார். இவருடைய உரையின் முத்தாய்ப்பாக, "ஒரு நீதி நிறைந்த ஐரோப்பா என்பது சுதந்திரமான போலந்து ஐரோப்பிய வரைபடத்தில் இல்லை என்றால், ஏற்படுத்தப்படமுடியாது" என்று கூறினார்.

போலந்தில் போப்பின் தலையீடு இல்லாமல், நிகழ்வுகள் இறுதியில் மிகப் பெரிய வேலையின்மைக்கும் போலந்து தொழிலாளர்களை கடும் வறுமைக்கும் இட்டுச்சென்ற பேரழிவுப்பாதையை அரிதாகத்தான் எடுத்திருக்கும். தொடக்கத்தில் கத்தோலிக்க போக்கு மட்டுமின்றி வலுவான மதசார்பற்ற, சோசலிசப் போக்கு Solidarity இயக்கத்தில் இருந்து வந்தது. ஆனால் ஸ்ராலினிச ஆட்சியை எதிர்ப்பதற்கு இவை திறமையான முன்னோக்கை கொண்டிருக்கவில்லை.

வத்திக்கானுடைய குறுக்கீடு, இந்த இயக்கம், லேக் வலேசாவினை சுற்றி கத்தோலிக்க-தேசிய பிரிவின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்படுவதற்கு கணிசமான பங்கைப் பெற்றிருந்தது; வலேசா லெனின் கப்பற்கட்டும் தளத்தின் போர்க்குணம்மிக்க தொழிலாளர் தலைவர் என்ற தன்னுடைய தனிப் புகழுடன் கத்தோலிக்க தீவிரவாதி என்ற பெயரையும் இணைத்திருந்தவர் ஆவார். போப்பின் பங்கை அவர் வெளிப்படையாகவே ஒப்புக் கொண்டுள்ளார். 1989ம் ஆண்டு, அவர் அறிவித்தார்: "Solidarnosc தொழிற் சங்கத்திற்கும் எனக்கும் இடையே உள்ள ஒற்றுமையுணர்வுகள் இந்தப் பெரிய போலந்துக்காரரும், மகத்தான மனிதருமான இரண்டாம் ஜோன் போல் இல்லாவிடில் சிந்தித்தும் பார்க்கப்பட முடியாதது ஆகும்."

Solidarity இயக்கத்திற்கு போப் அரசியல் மற்றும் நிதி ஆதரவு கொடுத்தாலும், அவர் ஆட்சிக்கு எதிராக நேரடியான மோதலில் இதை பயன்படுத்திக்கொள்ளுவதை நிறுத்தித்தான் வைத்திருந்தார். பலமுறையும் அவர் நிதானப்போக்கு, தன்னடக்கம் ஆகிய குணநலன்களுக்கு அழைப்பு விடுத்தார். அரசாங்கத்துடனான மோதல்கள் வன்முறைகளாக கூடுதலாக ஏற்பட்ட வகையில், Solidarity அதிகரித்த வகையில் தலையிட்டு தொழிலாளர்களை அடக்கியும் கட்டுப்பாட்டிற்குள்ளும் வைத்தது.

Solidarity அதிகாரத்திற்கு ஆசைப்பட்டது கிடையாது என்பதை வலேசா இடையறாமல் வலியுறுத்தி வந்தார். "நாம் ஆட்சி செய்ய விரும்பவில்லை; மாறாக அரசாங்கத்திடம் இருந்து ஒப்புதலைப் பெற விரும்புகிறோம்; அவர்கள் ஆட்சி நடத்தும்போது திறம்படச் செயல்படுகிறார்களா என்பதை பரிசோதிக்கத்தான் விரும்புகிறோம்." Wojciech Jaruzzelski 1981 டிசம்பரில் இராணுவ சட்டத்தை பிரகடனப்படுத்தி பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களையும் ஐக்கிய தலைவர்களையும் கைது செய்திருந்தாலும், பின்னர் போப் காட்டிய பொறுமையுணர்வை வெளிப்படையாக ஒப்புக் கொண்டார். போப் இறந்தபின் கொடுத்த ஒரு தொலைக்காட்சிப் பேட்டியில் அவர் கூறினார்: "அந்த நேரத்தில் சமூக உணர்வுகளை தூண்டிவிடும் முயற்சிகளில் ஈடுபடாமல் அவர் பெரும் பொறுமை காட்டினார்."

பின்னர், ஸ்ராலினிச ஆட்சி பொறிவிற்கு பின்னர் தொழிலாள வர்க்கத்தின் முன், அதன் தலைவர்கள் பதவிக்கு வந்தபோது முதலாளித்துவ மீட்பிற்கு ஒத்துழைத்து Solidarity இயக்கம் தன்னை இழிவுபடுத்திக் கொண்டமை எவ்வளவு விரைவாக நடத்தப்பட்டது என்பது பற்றி, போப் அதிகரித்த வகையில் கவலைப்பட்டார். ஓரளவு நியாயத்துடன், இதன் விளைவாக கத்தோலிக்க திருச்சபையின் செல்வாக்கு இடர்பாடுகளுக்கு உட்படக்கூடும் என்றும் புதிய ஒழுங்குமுறைக்கு ஆபத்து ஏற்படலாம் என்றும் அவர் கருதினார்.

1991 மற்றும் 1993ல் அந்நாட்டிற்கு விஜயம் செய்திருக்கையில் மேற்கத்திய முதலாளித்துவத்தை அப்படியே ஏற்றுக் கொள்ளுவதற்கு அவர் எச்சரிக்கை தெரிவித்தார். 2003ல் போலந்திற்கு கடைசியாக வந்திருந்தபோது அவர் இன்னும் வெளிப்படையாகவே பேசினார். சுதந்திரத்திற்கு கொடுக்கப்பட்டுள்ள விலையை ஒருவர் மறந்தால், அவர் "அராஜகத்தில்" இருந்து அதிக தொலைவில் இல்லை என்று குறிப்பிட்டார். Solidarity இயக்கம் அரசியலில் இருந்து புறத்தே இருக்க வேண்டும் என்று உபதேசித்த அவர் போலந்தில் இருந்த கடுமையான அநீதிகளையும் சுட்டிக் காட்டினார்: ஊதியங்கள் வழங்கப்படாமை, சிறு வர்த்தகங்கள் துடைத்துக் கட்டப்படும்நிலை, தொழிலாளர்கள் விடுமுறை நாட்கள் மற்றும் குடும்பத்துடன் நேரத்தை செலவழிக்க அனுமதி இல்லை போன்றவற்றை அவர் குறிப்பிட்டார்.

இரண்டாம் ஜோன் போலும் அமெரிக்காவின் சோவியத் ஒன்றியம் பற்றிய கொள்கையும்

கத்தோலிக்க திருச்சபை ஒரு போலந்து நாட்டினரை போப்பாக நியமித்தமை, சோவியத் ஒன்றியத்திடம் அமெரிக்கா கொண்டிருந்த வெளியுறவுக் கொள்கையில் மாற்றம் ஏற்பட்டதுடன் நெருக்கமான பிணைப்பை கொண்டிருந்தது. ஜனாதிபதி ஜிம்மி கார்ட்டரின் தலைமையின் கீழ், இன்னும் வெளிப்படையான முறையில் அவருக்கு பின்வந்த ரோனால்ட் றேகனின் கீழ், சமாதான நிலைப்பாடு, மோதலுக்கு வழிவிட்டது.

கிராக்கோவின் ஆர்ச்பிஷப் என்ற முறையில் வோஜ்டைலா ஏன்கனவே, மிக அதிகமான முறையில் ஜிம்மி கார்ட்டர் நிர்வாகத்தில் தேசியப் பாதுகாப்பு ஆலோசகராகப் பதவி ஏற்றிருந்த, போலந்தில் பிறந்திருந்த ஜ்பிக்னீவ் பிரிஜேஜென்ஸ்கி (Zbigniew Brzezinski) உடன் கடித தொடர்பை கொண்டிருந்தார். வோஜ்டைலாவிற்கு முன் பதவியில் இருந்தவருடைய இறுதிச் சடங்குகளுக்கு வந்திருந்த பிரிஜேஜென்ஸ்கி 1978ம் ஆண்டு, வோஜ்டைலா திருச்சபை தலைவராக நியமன போப் தேர்தல் நடைபெற்ற காலம் முழுவதும் ரோம் நகரில் இருந்தார்.

இந்த ஒத்துழைப்பு றேகன் ஜனாதிபதி பதவிக்காலத்தில் இன்னும் தீவிரமாயிற்று. வத்திக்கானுக்கு அப்பொழுது அமெரிக்க தூதராக இருந்த ஜேம்ஸ் நிக்கல்சன் வாஷிங்டனுக்கும் வத்திக்கானுக்கும் இடையே, சோவியத் ஒன்றியத்திற்கு எதிராக இருந்த "மூலோபாய உடன்பாடு" பற்றி பேசியுள்ளார். கார்ல் பெர்ன்ஸ்டைன் மற்றும் மார்கோ போலிடி என்ற செய்தியாளர்கள், வத்திக்கானுடைய இரகசிய தூதரக முறை பற்றி எழுதியுள்ள நூலில், சிஐஏ இயக்குனரான வில்லியம் பேசியும் துணை இயக்குனருமான வெர்னான் வால்டெர்சும் தொடர்ச்சியான இரகசிய விவாதங்களை 1981ம் ஆண்டு போப்புடன் நடத்தினர் என தெரிவித்துள்ளனர். இந்த விவாதத்தின் முக்கிய தலைப்பானது Solidarity இயக்கத்திற்கு சிஐஏ கொடுத்த நிதி மற்றும் தளவாடச் சேவை பற்றியதாக இருந்தது.

மாஸ்கோவில் உள்ள அதிகாரத்துவம், தீவிர வெளி அழுத்தம் மற்றும் உள் சமூக அழுத்தம் இவற்றின் இணைந்த தன்மைக்கு முதலாளித்துவ மீட்பை முன்னெடுப்பதன் மூலம் பதில் கொடுத்தது. மிகைல் கோர்பச்சேவ் சோவியத் ஒன்றியத்தின் கம்யூனிஸ்ட் கட்சி தலைவராக ஏற்றம் பெற்றமை, பார்ப்பதற்கு விந்தையாக இது தோன்றினாலும், ரோமின் புனித தலைமைக்கு வோஜ்டைலாவைக் கொண்டு வந்த அதே புறநிலை மாற்றங்களில்தான் அதன் மூலத்தைக் கொண்டிருந்தது. போலந்தில் நடைபெற்ற நிகழ்வுகள் கிரெம்ளின் அதிகாரத்துவத்திற்கு பெரும் அதிர்வைக் கொடுத்திருந்தன. முடிவில் அதேபோன்ற போக்கு சோவியத் ஒன்றியத்திலும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக முதலாளித்துவ சொத்துடைமையை அறிமுகப்படுத்துவதன் மூலம் அதன் ஆட்சிக்கான புதிய தளங்களை ஏற்படுத்தியது. இதுதான் கோர்ப்பச்சேவின் பெரஸ்துரோய்காவின் முக்கியத்துவம் ஆகும்.

1989ம் ஆண்டு டிசம்பர் மாதம், கோர்ப்பச்சேவ் சோவியத் ஒன்றியத்தின் கம்யூனிஸ்ட் கட்சியின் முதலும் இறுதியுமான பொதுச் செயலாளராக போப்பை சந்தித்தார். 3 ஆண்டுகளுக்கு பின்னர், கோர்ப்பச்சேவ் போப்பைக் கீழ்க்கண்ட சொற்களினால் புகழ்ந்தார்: "கிழக்கு ஐரோப்பாவில் அந்த ஆண்டுகளில் நடந்தவை அனைத்தும் இந்தப் போப் இல்லாவிடில் உறுதியாக நடந்திருக்க முடியாது."

போப்பும் தென் அமெரிக்காவும்

போலந்திலும், கிழக்கு ஐரோப்பாவிலும் தன்னுடைய தலையீட்டை இரண்டாம் ஜோன் போல் "சுதந்திரம்", "உரிமைகள்" என்ற போர்வையில் மறைத்தாலும், அவருடைய அரசியலின் பிற்போக்குச் சார்பு தென்னமெரிக்காவை பொறுத்தவரையில் வெளிப்படையாக தெரிந்தது. அங்கு ஆளும் செல்வந்த தட்டுக்களுடன் அவர் சேர்ந்து கொண்டு, அடக்கப்பட்டவர்களுடன் இணைந்து வலதுசாரி இராணுவ சர்வாதிகரங்களுக்கு எதிராக நடந்த போராட்டங்களில் ஈடுபட்டிருந்த "சுதந்திரம் நாடும் இறையியல்வாதிகள்" என அழைக்கப்பட்டவர்கள் மீது கட்டுபாட்டினை விதித்தார்.

1983ம் ஆண்டு அவர் முதல் முறையாக நிகராகுவாவிற்கு சென்றிருந்தபோது, இரண்டாம் ஜோன் போல் வெளிப்படையாக, சான்டினிஸ்டா அரசாங்கத்தில் அமைச்சர் பதவியை மற்ற இரு பாதிரியார்களுடன்கூட சேர்ந்து ஏற்றுக்கொண்டிருந்த பாதிரியார் எர்நெஸ்டோ கார்டினலை கண்டனத்திற்கு உட்படுத்தினார். 1995ம் ஆண்டு மற்றொருமுறை நிகராகுவாவிற்கு சென்றிருந்தபோது, Iglesia Popular (People's Church - மக்கள் திருச்சபை) அமைப்பை, தவறாக கிறிஸ்தவ உலகம் முழுமைக்கும் உள்ள "கிறிஸ்துவர்கள் புரட்சி வகையில் ஈடுபட்டுள்ள" அமைப்பு என்று அழைத்தார். அதே நேரத்தில் வலதுசாரி ஆர்ச்பிஷப்பும் சான்டினிஸ்டாசின் கடுமையான எதிரியுமான மிகுவெல் ஒபான்டோ பிரேவோவை கார்டினல் பதவிக்கு உயர்த்தினார்.

கணக்கிலடங்காத விடுதலை உணர்வு கொண்டிருந்த இறையியல்வாதிகள் இரண்டாம் ஜோன் போலினால் பதவியில் இருந்த அகற்றப்பட்டு அவர்களுக்கு பதிலாக பிற்போக்குத்தன பிஷப்புக்கள் அல்லது பாதிரியார்கள் நியமனம் பெற்றனர். Le Monde Diplomatique இல் Francois Houtard எழுதியதாவது: "தென்னமெரிக்காவில் அடிமட்டத்தில் அமைந்துள்ள திருச்சபைக் குழுக்கள், தன்னாட்சி, ஏழைகள் பாதுகாப்பு இவற்றில் ஆர்வம் காட்டிய வகையில், ஒதுக்கப்பட்டுவிட்டதுடன் சில அழிக்கவும் பட்டன. அவர்களுடன் தொடர்பு கொண்டிருந்த பாதிரிமார்கள் பதவியில் இருந்து அகற்றப்பட்டதுடன் சமூக நலன்களில் இருந்தும் ஒதுக்கப்பட்டனர்; அதே பெயரில் சில சமயம் புதிய அமைப்புக்களும் ஏற்படுத்தப்பட்டன..."

அதே நேரத்தில் வலதுசாரி சர்வாதிகாரிகளின் ஆதரவாளர்கள் திருச்சபையில் மிக உயர்ந்த பதவிகளுக்கு ஏற்றம் பெற்றனர். ஆர்ஜென்டினாவின் இராணுவ சர்வாதிகாரியான Pio Laghi உடைய போப்பின் பிரதிநிதியும், சிலிய சர்வாதிகாரத்தின் போப் பிரதிநிதியான Angelo Sodano உம் இன்று கார்டினல் அந்தஸ்தை பெற்றுள்ளனர்.

பினோசே இன் சர்வாதிகார, கொலைகாரத்தனமான ஆட்சி சிலியில் நடைபெற்றதை சோடனோ கீழ்கண்டவாறு புகழ்ந்தவராவார்: "மிகப் பெரிய படைப்புக்களிலும் சிறிய பிழைகள் இருக்கக் கூடும். சித்திரப் படைப்பின் பிழைகளில் கவனம் செலுத்தாமல், பொது உயர்வு நிலையில் கவனத்தை கொள்ளுமாறு நான் உங்களுக்கு ஆலோசனை கூறுவேன்." 1998ம் ஆண்டு, முன்னாள் சர்வாதிகாரி லண்டனில் இருந்தபோது, பினோசே க்கு எதிராக கைது உத்தரவு பிறப்பிக்கப்பட்டபோது, போப் தாமே வெளிப்படையாகவே சிலிய பாசிச தளபதிக்கு ஆதரவை தெரிவித்தார்.

ஒரு தீவிர செமிட்டிய எதிர்ப்பாளராக இருந்த நாஜிக்களுடனும், முசோலினியின் ஆட்சியுடனும் ஒத்துழைத்திருந்த போப் ஒன்பதாம் பைஸிற்கு துறவிப்பட்டம் கொடுக்கும் முயற்சிகளில் ஈடுபட்டமை பின்னர் கிரோவேஷியாவில் இரண்டாம் உலகப்போர் காலத்தில் பாசிச ஆட்சிக்கு நெருக்கமாக இருந்த கார்டினல் ஸ்டெப்நியாக்கிற்கும் துறவிப்பட்டம் கொடுக்கும் முயற்சிகளில் ஈடுபட்டமை, இன்னும் கூடுதலான வகையில் இரண்டாம் ஜோன் போலின் வலதுசாரி கொள்கைப் பிடிப்பின் நேர்த்தியான வெளிப்பாடுகளாகும்.

பழமைவாத திருச்சபை கொள்கைகள்

மிகப்பிற்போக்குத்தனமான கத்தோலிக்க திருச்சபையின் பிற்போக்குக் கொள்கைவழியின் நிலைப்பாட்டில் இருந்து கூட, இரண்டாம் ஜோன் போலின் திருச்சபை கொள்கைகள் பிற்போக்குத்தனமானவை எனக் கருதப்பட்டன. 1960களில் இரண்டாம் வத்திக்கான் குழுவினால் தொடக்கப்பட்டிருந்த சீர்திருத்தங்களின் நடைமுறையை முற்றிலும் என்றில்லாவிட்டாலும் உணர்வை மாற்றும் தன்மையைத்தான் கொண்டிருந்தார்.

முதலில், மடோன்னா (Virgin Mary, mother of Jesus; picture or statue of the Virgin), துறவிகள் பற்றிய அவரது வழிபடல் உள்ளது. 473 பேரின்பநிலை எய்தச்செய்ததில், கடந்த 400 ஆண்டுகளில் இவருக்கு முன் பதவியில் இருந்தவர்களைவிட இருமடங்கு புதிய துறவிகளை உருவாக்க இவர் வகை செய்துள்ளார்.

Evangelium Vitae எனப்படும் திருச்சபை அறநெறி கோட்பாட்டு தொகுப்பு, பாலியல் நடைமுறைகள் எவ்வாறு இருக்க வேண்டும் எனக் கூறுவது, கருக்கலைப்பை நிராகரிப்பதுடன் எவ்விதமான பிறப்பு தடையையும் நிராகரிக்கிறது. உயிர்களை தோற்றுவிக்கும் கருத்து இல்லாத பாலியல் நடவடிக்கைகள் அனைத்துமே பெரும் அறம் பிறழ்ந்த செயலாகத்தான் கருதப்படுகிறது. ஆணுறைகளும் கண்டனத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளன; ஆபிரிக்காவிலும் உலகின் ஏனைய பகுதிகளிலும் பரவிவரும் AIDS நோயின் பேரழிவு தரும் நிலையை காணும்போது இந்தக் கொள்கை இன்னமும் கூடுதலான சமூக அழிவை கொடுப்பதுடன் மனிதாபிமானமற்ற நிலைப்பாட்டையும் காட்டுகிறது. ஜேர்மனியில் பிஷப்புக்களும் திருச்சபை உறுப்பினர்களும் கடுமையாக எதிர்த்துள்ள போதிலும், ஜேர்மனியில் கருவுற்றிருக்கும் மகளிருக்கு சட்டபூர்வமான கருக்கலைப்பை நாட்டின் சட்ட வடிவிற்குள் அறிவுறுத்தும் குழுக்களில் இருந்து திருச்சபை விலகிக் கொள்ளவேண்டும் என்று போப் வலியுறுத்தியுள்ளார்.

பிற்போக்குத்தன்மை நிறைந்த திருச்சபை உயர் அலுவலர்களை நியமிக்கும் கொள்கையினாலும், போப் பலமுறை பூசல்களை சந்தித்துள்ளார். சூரில் வுல்ப்காங், கோலோனேயில் ஜோஷம் மெய்ஸ்நெர், வியன்னாவில் ஹன்ஸ் ஹெர்மன் கிரோம், புனித போல்டெனில் குரட் க்ரென் ஆகிய திருச்சபை மண்டலங்களில் பிற்போக்குத்தனமான பிஷப்புக்களை நியமித்த வகையில் அவர் பெரும் எதிர்மறை விவாதங்களை உருவாக்கியுள்ளார். விமர்சன இறையியல்வாதிகளான Lenardo Boff, Eugen Drewermann, Hans Küng, Tissa Balasuirya போன்றோர் தங்களுடைய படைப்புக்களை வெளியிடுவதில் இருந்து தடை செய்யப்பட்டுள்ளதுடன், கற்பிக்கவும் தடைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

சுவிஸ் நாட்டை சேர்ந்த இறையியல்வாதியான ஹன்ஸ் குங் 1980ம் ஆண்டு ஒரு கட்டுரையில் போப்பை குறைகூறியதற்காக ஆசிரியர் தொழிலில் இருந்து தடை செய்யப்பட்டார்; இவர் திருச்சபையின் உட்சூழ்நிலை மற்றும் இரண்டாம் ஜோன் போலின் பங்கை பற்றி விளக்குவதாவது: "நெருப்புப் பிடிக்கும் வகையிலான எண்ணிக்கையில் துறவியரை அதிகப்படுத்திய வகையில் (போப்) அதிகாரத்தை செலுத்தி பின்னணியில் இருக்கிறார்; அதேநேரத்தில் சர்வாதிகார முறையில் அவருடைய தீவிர விசாரணையை திருச்சபையில் செல்வாக்கில்லா இறையியல்வாதிகள், பாதிரியார்கள், துறவிகள், பிஷப்புக்கள் ஆகியோருக்கு எதிராகவும் எல்லாவற்றிற்கும் மேலாக விமர்சன சிந்தனையால் தனிச்சிறப்புப்பெற்றிருந்த நம்பிக்கையாளர்களையும் அவர்களுடைய சீர்திருத்த ஆற்றலுக்காக கடும் விசாரணை முறையில் தண்டனைக்குட்படுத்துகிறார்." தன்னுடைய காலத்தில் இருந்த ஷேனு, கோங்கர், டி லூபெக், ரஹனெர், டேல்கர்ட் டி சார்டின் போன்ற முக்கியமான இறையியல்வாதிகளை பன்னிரெண்டாம் பைஸ், துன்புறத்தி விசாரணை நடத்தியது போலவே, இரண்டாம் ஜோன் போலும் (அவருடைய பெரும் விசாரணைத் தலைவரான Ratzinger ம்) Schillebeeckx, Balasuirya, Boff, Bulanyi, Curran மற்றும் பிஷப் Gaillot (Evreux), ஆர்ச் பிஷப் Hunthausen (Seattle) ஆகியோரை இத்தகைய துன்புறுத்தும் விசாரணைக்கு உட்படுத்தியுள்ளார். இதன் விளைவு : கண்டனப்படுத்துதல், அச்சத்தை ஏற்படுத்துதல், சுதந்திரமின்மை ஆகியவை மிகப் பரந்த முறையில் உள்ள ஒரு திருச்சபைதான் உள்ளது: பிஷப்புக்கள் தங்களை ரோமானிய கவர்னர்களாக நினைத்துச் செயல்படுகின்றனரே ஒழிய திருச்சபைக்கு வருபவர்களின் ஊழியர்கள் என்று நினைப்பதில்லை; தர்க்கவாதிகள் முறைசார்ந்து எழுதுவார்கள், அல்லது எழுதவே மாட்டார்கள்."

விமர்னம் செய்யும் குரல்கள் இவ்வாறு அமைதிப்படுத்தப்பட்ட பின், அடிப்படை வாதிகளும் கடுமையாக படிமுறைநிலையில் அதிகாரச் செல்வாக்குடைய Opus Dei அமைப்பும்தான் திருச்சபை அதிகார வகைகளில் செல்வாக்கை கொள்ள முடிகிறது. Opus Dei உறுப்பினர்கள் பலரும் பிஷப்புக்களாகவும், கார்டினல்களாகவும் நியமனம் பெற்றுள்ளனர். இந்த அமைப்புத்தான் இப்பொழுது கத்தோலிக்க திருச்சபையின் மைய நிர்வாகப் பிரிவான Curia வில் கணிசமான செல்வாக்கை கொண்டு அடுத்த போப் தேர்தலில் குறிப்பிடத்தக்க பங்கைக் கொள்ளக்கூடும்.

இந்த ஓபஸ் டெய் அமைப்பு 1928ம் ஆண்டு, மாட்ரிட்டின், ஜெசூட் பாதிரியாரான ஜோஸ்மரியா எஸ்கிரிவாவினால் நிறுவப்பட்டது; உலகெங்கிலும் 80,000 உறுப்பினர்களை கொண்ட இந்த அமைப்பு ஒப்புமையில் சிறியதுதான். பாசிச ஸ்பெயினில் பிராங்கோவின் ஆட்சியில் அது செழித்து நின்றது; அதன் உறுப்பினர்கள் 10 பேர் மந்திரிப் பதவிகளில் இருந்தனர்.

இறந்து 27 ஆண்டுகளுக்குப் பின்னரே இரண்டாம் ஜோன் போலினால் 2002ல், பேரின்பநிலை அடைந்ததாக உயர்த்தப்பட்ட எஸ்கிரிவா, "ஸ்பானிய திருச்சபையை காப்பாற்றியவர்" என்று ஹிட்லரை விவரித்திருந்தார். இந்த அமைப்பு ஒரு இரகசிய சங்க வகையில் செயல்பட்டுவந்தது: இதனுடைய விதிமுறைகள் மெளன விரதத்தில் இருந்து அடிக்கடி பிரார்த்தனைகள் செய்யவேண்டும், மற்றும் தன்னையே சவுக்கினாலும், பெல்ட்டினாலும் அடித்துத் துன்புறுத்துக் கொள்ளவேண்டும் என்றெல்லாம் உள்ளன. ஆண்மை நிறைந்த தலைமை வேண்டும் என்ற வகையை பிரச்சாரம் செய்வதுடன் பெண்களை "இழிந்தவர்" என்று வரையறுத்து அவர்கள் தாழ்ந்து நடக்கவேண்டும் என்றும் கடுமையாக கீழ்ப்படிந்து வாழவேண்டும் என்றும் கோருகின்றது.

இவருக்கு முன்பு பதவியில் இருந்தவர்கள் பலருக்கும் எதிரிடையான வகையில் இரண்டாம் ஜோன் போல் ஏனைய சமயங்களை பொறுத்தவரையில் ஒரு வெளிப்படையான கொள்கையை கொண்டிருந்தார். ஒரு புரெடஸ்டான்ட் திருச்சபைக்கு விஜயம் செய்திருந்த முதல் போப்பாக (1983ல்) இவர் இருந்தார், ஒரு யூத தேவலாயத்திற்கு (1986) விஜயம் செய்ததுடன், (2001ல்) ஒரு மசூதிக்கும் சென்றுள்ளார். 1986ம் ஆண்டில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் உலக பிரார்த்தனை கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டு, பல சமய மக்களும் ஒன்றாக பிரார்த்திக்கின்றனர். 2000ம் ஆண்டில், போப் இன அழிப்பு நினைவகத்திற்கு இஸ்ரேலுக்கு விஜயம் செய்தார் மற்றும் திருச்சபை வரலாற்றில் கிறிஸ்துவர்கள் செய்த பாவங்களுக்கு மனிப்புக் கோரினார்; பாரிய யூதஇன அழிப்பு பற்றி போப் பன்னிரெண்டாம் பைஸ் மெளனம் சாதித்ததை அவர் மறுதலிக்காமல் இவ்வாறு செய்தார்.

சகிப்புத் தன்மை பற்றிய இத்தகைய வெளிப்பாடுகள் தோன்றியமை, சமயத்தை நெருக்கடிகளில் தத்தளிக்கும் முதலாளித்துவ சமுதாயத்தை நிலைநிறுத்தும் தூணாக செயல்படவேண்டும் என்ற நோக்கத்தை கொண்டு வந்தவை ஆகும். ஆனால் அவருடைய உபதேசங்களில் இரண்டாம் ஜோன் போல் முற்றிலும் இதற்கு எதிரிடையான வகையில்தான் பொறுத்துக் கொள்ள முடியாதவற்றை கூறியுள்ளார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்புதான் மற்ற பிரிவுகளுடன் ஒன்றாக திருப்பலி செய்வதை தடை செய்து ஓர் ஆணையை பிறப்பித்தார். "Domius Jesus" என்ற அறிக்கை போப்பினால் ஆதரவு பெற்றது, இது மற்ற சமயங்களை அவற்றின் கணிசமான குறைகளுக்காக விமர்சிக்கும் அதேவேளை, சீர்திருத்த திருச்சபையை திருச்சபை என்று ஏற்க மறுக்கிறது.

திருச்சபையின் நெருக்கடி

இவருடைய வலதுசாரி கருத்துக்கள் ஒருபுறம் இருக்க, இரண்டாம் ஜோன் போல் ஒடுக்கப்பட்டவர்களுக்கு பாதுகாப்பாளனாக தன்னைக் காட்டிக்கொண்டால்தான், நிறுவப்பட்டுள்ள ஒழுங்கமைப்பிற்கு திருச்சபை ஒரு தூணாகச் செயல்பட முடியும் என்பதை எப்பொழும் ஆழமாக நனவுடன் இருந்தார். கத்தோலிக்க சமுதாய கொள்கைவழிகள் பற்றி பல தொகுப்புக்களை எழுதியுள்ளார்: இவற்றில் முதலாளித்துவ வன்முறைகளையும் சமூக கெடுதல்களையும் கண்டித்துள்ளார், கியூபாவிற்கு சென்றிருந்தபோது அவர் புதிய தாராள கொள்கையையும் அதன் விளைவுகளையும் தீவிரமாக விமர்சித்தார்.

இத்தகைய விமர்சனம் முதலாளித்துவ ஒழுங்கிற்கு எதிராக எவ்விதத்திலும் இயக்கப்படவில்லை. தொழிலாள வர்க்கத்தின் முக்கியத்துவம் வாய்ந்த சக்தியாக 19ம் நூற்றாண்டின் கடைசிப் பகுதியில் சோசலிசம் முதலில் தோன்றியதில் இருந்தே, அதனுடைய செல்வாக்கிற்கு மாற்றீடு என்னும் முறையில் திருச்சபை ஒரு சமூக கொள்கைவழியை முன்வைக்க முற்பட்டது; சோசலிச புரட்சியை கண்டனத்திற்கு உட்படுத்தும்பொழுது, முதலாளித்துவ அமைப்பு பற்றி மட்டுப்படுத்தப்பட்ட விமர்சங்களை செய்து, மற்றும் தொழிலாளர்கள், ஏழைகள் இவர்களை பற்றி பரிவுணர்வுடன் பேசுதல் அதில் அடங்கும். இந்த மரபிற்குள் முறையாகவே இரண்டாம் ஜோன் போல் செயலாற்றினார். இவ்வாறு அவர் கொள்கையளவில் சோசலிசத்தை நாத்திக கோட்பாடு என்று சமய வெளியீடான "Centesimus Annus" இல் நிராகரித்துள்ளார்.

இந்தத் தொடர்பில்தான் முதலாம், இரண்டாம் ஈராக்கிய போர்களுக்கு எதிராக போப் கொண்டிருந்த தெளிவான நிலைப்பாட்டை அறியவேண்டும். 1500 ஆண்டுகள் பழமையான மரபுகொண்ட, கத்தோலிக்க படிநிலை அதிகார அமைப்பு, முதலாளித்துவ அரசியல் வாதிகள் பற்றுக் கொண்டுள்ள குறுகிய கால நோக்கை விட, நீண்டகால நோக்கைத்தான் சிந்திக்கும். மத்திய கிழக்கில் இரக்கமற்ற முறையில் அமெரிக்கா நடந்துகொள்ளுவது நீண்ட காலப் பார்வையில், கத்தோலிக்க திருச்சபை உட்பட, உலக முதலாளித்துவ அமைப்பு அனைத்தையும், உறுதியற்ற தன்மைக்கு இட்டுச் செல்லும் என்பதை வத்திக்கான் நன்கு அறியும்.

இரண்டாம் ஈராக்கியப் போர் தொடக்குவதற்கு சற்று முன்னரே, போப் ஈராக்கிய துணை பிரதம மந்திரியான, ஒரு கிறிஸ்தவரான, டாரிக் அஜிசை வரவழைத்தார்; மேலும் வாஷிங்டன், பாக்தாதுக்கு தூதர்களை அனுப்பி போரை நிறுத்தும் முயற்சியை கொண்டார். போரை கண்டனத்திற்கு உட்படுத்தி அவர் கூறியதாவது: "வலிமை உடையவர்கள் வலிமை அற்றவர்கள்மீது நிகழ்த்தும் போர், முன்பு எப்பொழுதும் இல்லாத வகையில் ஏழைகளுக்கும், பணக்காரர்களுக்கும் இடையே இருக்கும் ஆழ்ந்த பிளவுகளை வெளிப்படுத்தியுள்ளது."

அமைதி, சமூக இணக்கம் பற்றிய இரண்டாம் ஜோன் போலின் சொற்சித்திரங்கள் அவருடைய சிந்தனை அரசியல் இவற்றில் இருந்து எதிரடையாக உள்ளன; மிகப் பொறுப்புடனும் பிரச்சார நோக்குடனும் மேற்கொள்ளப்பட்ட 100க்கும் மேலான வெளிநாட்டு பயணங்கள் கத்தோலிக்கர்கள் எண்ணிக்கைப் பெருக்கம் அவருடைய காலத்தில் அதிகமாகியுள்ளதில் இருந்த பங்கை காட்டுகின்றன. கத்தோலிக்க திருச்சபையின் உறுப்பினர்கள் இப்பொழுது ஒரு பில்லியனுக்கும் மேலாக உள்ளனர்; இவற்றில் பாதிப்பேர் தெற்கு, வட அமெரிக்காவில் வசிக்கின்றனர்.

ஆயினும், இந்த எண்ணிக்கை ஒன்றும் திருச்சபை மிகப் பெரிய நெருக்கடியில் இருப்பதை மறைக்க இயலாதவை ஆகும். ஒட்டுமொத்த மக்கள்தொகை பெருகிய அளவிற்கு ஏற்ப திருச்சபை உறுப்பினர்கள் எண்ணிக்கை வளர்ச்சி இருக்கவில்லை. மக்களில் ஒரு விகிதத்தினர் திருச்சபையில் பெருகியுள்ளனர் என்பது எங்கு கத்தோலிக்கர்கள் சிறுபான்மையில் உள்ளனேரோ, அதாவது ஆபிரிக்க, ஆசிய பகுதிகளில் சில என்று, அங்குதான் உள்ளது. விகிதாசார முறையில் இலத்தீன் அமெரிக்காவில் இது தேக்க நிலையிலும், ஐரோப்பா, வட அமெரிக்காவில் சரிவையும்தான் கண்டுள்ளது. இலத்தீன் அமெரிக்காவில் கத்தோலிக்க திருச்சைபை தன்னுடைய நிலைப்பாட்டை இழந்து கொண்டிருப்பதாக பரவலாக குறிக்கப்பட்டுள்ளது; இவ்விடங்களை பல்வேறு புரொட்டஸ்டான்ட் நற்செய்தி குழுக்களிடம் கத்தோலிக்க திருச்சபை இழந்துவிட்டது.

செய்தி ஊடகம் இரண்டாம் ஜோன் போலை கிட்டத்தட்ட துறவிப்பட்டத்தில் இருத்தும் முயற்சிகள் இருந்தாலும், பரந்த மக்கட்திரளின் மீது திருச்சபையின் பிடி தொடர்ந்து சரிந்துதான் போய் உள்ளது; கத்தோலிக்கர் என்று தங்களை கூறியிருப்பவர்கள் கூட, கத்தோலிக்க சமய குருமார்களை மிகவும் இழிவாகக் கருதுகின்றனர். திருச்சபை மண்டலங்களில் தீவிரமாக செயல்படுபவர்கள் இல்லாதநிலை திருச்சபை பல நாடுகளில் எதிர்கொண்டுள்ள நிதி நெருக்கடியில் பிரதிபலிப்பாகிறது. அமெரிக்காவில் கத்தோலிக்க பள்ளிகள் டெட்ராயிட் உட்பட பல பெரிய நகரங்களில் மூடப்பட்டு வருகின்றன.

அண்மையில் பாதிரிமார்கள், மற்ற திருச்சபை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட பல பாலியில் அவதூறுகள் நெருக்கடியை தீவிரப்படுத்தியுள்ளன. இரண்டாம் ஜோன் போல், அவர் ஆட்சியின் போது, குழந்தைகளுக்கு எதிராக நடந்த பரந்திருந்த பாலியல் கொள்கை முறையை மறைக்க முற்பட்டார் என்பது இப்பொழுது மிகத் தெளிவாக உள்ளது.

அமெரிக்க, அயர்லாந்து, ஆஸ்திரிய மற்றும் பல திருச்சபைகளிலும் இந்தத் தவறுகளை மறைத்ததில் அவர் பங்கும், பின்னர் கண்டுபிடிக்கப்பட்ட பின் அவற்றின் முக்கியத்துவத்தை குறைத்துக் கூறியதும் பாலியல் நெறிகளில் வத்திக்கானின் பாசாங்குத்தனத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. சாதாரண மக்களின் பாலியல் வழங்கங்கள் என்று வரும்போது, இடைவிடாமல் திருச்சபை அற உபதேசம் செய்வதற்கு முற்றிலும் மாறான வகையில் இது உள்ளது; இரண்டாம் ஜோன் போல் மற்றும் வத்திக்கான் முழுவதுமே பாதிரி சாதி அதிகாரத்துவம் இவற்றிற்கு கண்காணிப்பில் இருந்து விதிவிலக்கு அளிக்கும் வகையில் முக்கிய அக்கறையை கொண்டுள்ள நிலையும் அடிக்கோடிட்டு காட்டப்பட்டுள்ளது.

இரண்டாம் ஜோன் போல் ஒரு கவர்ச்சிகரமான ஆளுமையை பெற்றிருந்தார்: திருச்சபைக்கு ஏற்பட்டிருந்த நீண்ட கால சரிவை ஓரளவிற்கு சமன் செய்து அந்த அமைப்பை ஒற்றுமையுடன் பிணைத்து வழிநடத்தினார். அவருடைய மறைவு இந்தப் புராதன, இடைக்கால, பிற்போக்கு அமைப்பின் உள் மற்றும் வெளி அழுத்தங்களை அதிகரிக்கும். இரண்டாம் ஜோன் போலின் இறப்பை பயன்படுத்தி திருச்சபையை வளர்க்கும் முறையில் எந்த அபத்தமான அளவிற்கு செய்தி ஊடகங்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன என்பதே அந்த அமைப்பிலுள்ள நெருக்கடியின் வெளிப்பாடு ஆகும்; அதை காக்கின்ற முதலாளித்தவ ஒழுங்கிலுள்ள நெருக்கடியின் வெளிப்பாடும் ஆகும்.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved