World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா

The media, the entertainment industry and Michael Jackson

செய்தி ஊடகம், பொழுதுபோக்குத் தொழில் துறையும் மற்றும் மைக்கல் ஜாக்சனும்

By David Walsh
17 March 2005

Back to screen version

மைக்கல் ஜாக்சன் பாலியல் துஸ்பிரயோகத்தில் ஈடுபட்டதாக அரசுத் தரப்பு குற்றம் சாட்டியுள்ள வழக்கு இப்பொழுது மூன்றாம் வாரமாக கலிஃபோர்னியாவில உள்ள சான்டா மாரியாவில் நடக்கிறது, மார்ச் 14 அன்று பாதிக்கப்பட்ட சிறுவனுடைய சாட்சியம் அரசு தரப்பு வாதத்திற்குப் பெரும் சரிவை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது. குற்றம் சாட்டப்பட்டுள்ளவரின் வக்கீல் தோமஸ் மெசரோ ஜூனியர் கேள்விகளுக்கு விடையளிக்கையில், 15 வயதான பாதிக்கப்பட்ட பையனே கூறியுள்ள சாட்சியத்தின்படி, தான் ஒரு பள்ளி அதிகாரியிடம் புகழ்பெற்ற பாடகர் தன்னை துஸ்பிரயோகப்படுத்தவில்லை என்று கூறியதை ஒப்புக் கொண்டான்.

மீண்டும் அரசாங்க வக்கீல் தோமஸ் ஸ்னீடனால், மறுநாள் விசாரணைக்குட்படுத்தப்பட்ட போது, ஜாக்சன் மீது குற்றம் சாட்டிய சிறுவன் தன்னுடைய வகுப்பு மாணவர்கள் கேலியைத் தவிர்ப்பதற்காக துஸ்பிரயோகத்திற்கு உள்ளானதை மறுத்ததாகச் சாட்சியம் கூறினான். இருந்தபோதிலும்கூட, பள்ளி அதிகாரியிடம் அவன் இதுபற்றி உரையாடினான் என்று ஒப்புக் கொண்டது, அவன்மீது உள்ள நம்பகத்தன்மை பற்றி வினாக்களை எழுப்பியுள்ளது, ஜாக்சனை 10 கடுமையான குற்றங்களுக்காக, 20 ஆண்டுகள் வரை சிறையில் தள்ளலாம் என்ற கருத்துடைய மாவட்ட வக்கீலின் முயற்சிகளுக்கும் பாதிப்பு ஏற்படக்கூடும்.

புகழ்பெற்ற நவீனப் பாடகர் 13 வயதுச் சிறுவனை, பெப்ருவரி 2003ல் தனது நெவர்லாந்து பண்ணை வீட்டில் பாலியல் துஸ்பிரயோகத்தித்திற்கு உட்படுத்தினார் என்பது அரசு தரப்பு வாதமாகும். ஆனால் ஜாக்சனுடைய வக்கீல், இச்சிறுவனுடைய குடும்பத்தில் பணம் பெறுவதற்காக இதேபோல் ஐயத்திற்குரிய குற்றச் சாட்டுக்களை சுமத்தும் வரலாறு இருந்ததாகவும், இந்தக் குற்றச்சாட்டும் அத்தகைய முயற்சிகளில் ஒன்றுதான் என்றும் வாதிடுகிறார்.

விசாரணையின் முதல் வாரங்களில், அரசு தரப்பு வழக்கறிஞர்கள் குற்றம் சாட்டியுள்ள சிறுவன், அவனுடைய சகோதரன் மற்றும் சகோதரியைச் சாட்சிக் கூண்டில் நிறுத்தினர். இரண்டு சிறுவர்களுமே பாடகருக்கு எதிராக பல குற்றங்களை சுமத்தினர்: அவர் இவர்களை மது அருந்துவதற்கு ஊக்கம் கொடுத்தார், பாலியல் ஏடுகளைப் படிப்பதற்குக் கொடுத்தார் அதன் பின்னர் வரம்புமீறித் தகாத வகையில் இருவரில் மூத்தவனைத் தொட்டார் என்றெல்லாம் கூறப்பட்டது. குற்றம் சாட்டப்பட்டுள்ளவரின் வக்கீலோ சாட்சிகளின் கூற்றுக்களில் இருக்கும் முரண்பாடுகளை வெளிப்படுத்தி இச்சிறுவர்களுக்குப் பொய் சொல்லுவதற்குத் தக்க பயிற்சி கொடுக்கப்பட்டுள்ளது என்று வாதிட்டுள்ளார்.

ஜாக்சன் விசாரணை செய்தி ஊடகத்தின் சமீபத்திய பரபரப்புச் செய்தியாகப் போய்விட்டது, இது அளவுக்கு அதிகமான விபரிக்கப்படுவதுடன், முடிவில்லாத வகையில் பெருநிறுவனக் கட்டுப்பாட்டிற்குள் இருக்கும் "செய்திகள்" வெளியிடுவோர் பொதுஉணர்வுகளைக் களங்கப்படுத்தும் வகையில் ஒழுங்கற்ற வகையில் தகவல்கள் கொடுக்கப்படுகின்றன. இந்த விசாரணையின் இழிவான தன்மை எவருக்கும் ஆச்சரியத்தைக் கொடுக்கவில்லை. தற்கால அமெரிக்க பொதுவாழ்வின் தனிநபர்மயமாக்கலும், இழிந்த தன்மையுமான கூறுபாடுகளான பணம், புகழ், ஒரு குறுகுறுப்புடனான ஆர்வத்துடன் பாலியிலில் நாட்டம் ஆகியவற்றால் உருக் கொடுக்கப்படும் ஒரு வழக்கு வேறு எவ்விதத்தில் இயக்கப்பட முடியும்?

இந்தக் காட்சியில் பல வேறுபாடான கூறுபாடுகளையும் காணவியலும். முதலில், "மைக்கேல் ஜாக்சனுடைய துன்பம்" தொடர்ந்து செல்கிறது. கடந்த வியாழனன்று பாடகர் கிட்டத்தட்ட மயக்கம் அடையும் நிலைக்கு வந்துவிட்டார். நீதிமன்றத்திற்குக் குறிப்பிட்ட நேரத்திற்கு வரத்தவறிவிட்டு, நீதிபதிக்குச் சீற்றத்தை ஏற்படுத்தி, அவருடைய ஜாமீனை ரத்து செய்வதாக அச்சுறுத்தும் அளவிற்கு போய்விட்டது. ஜாக்சனோ ஒரு மருத்துவமனையில் அவசரப் பிரிவில் அவருடைய முதுகைப் பரிசோதிப்பதற்காகச் சென்றிருந்து, நீதிமன்றத்திற்கு பஜாமா, செருப்புக்கள், ஜாக்கெட் இவற்றை அணிந்து ஒரு மணி நேரம் தாமதமாக வந்திருந்தார். இந்த நிலையில் நவீனப் பாடகரைப் பார்த்தவுடன் அவருடைய முன்னாள் "ஆன்மிக ஆலோசகரான" ராபி ஷமுலே போடீச், ஒரு தொலைக் காட்சிப் பேட்டியாளரிடம் துர்பிரயோக விசாரணை முடிவதற்குள்ளேயே பாடகர் இறந்து விடுவார் எனத் தாம் கருதுவதாகக் கூறினார்.

ஜாக்சன், சாட்டப்பட்டுள்ள குற்றங்களைப் பொறுத்தவரையில், குற்றவாளியா அல்லது நிரபராதியா என்பது பற்றி நமக்குத் தெரியும் எனக் கூறவில்லை. ஆனால் அவர் ஆழ்ந்த உளைச்சலுக்கும் உட்பூசல்களுக்கும் உட்பட்ட மனிதர் என்றும் மிக விந்தையான நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடியவர் என்பது நன்றாகவே புலப்பட்டுள்ளது. அவருடைய வாழ்க்கையின் பெரும்பகுதி பொதுமக்களின் புகழாரத்திற்கு உட்பட்டுள்ளதால், விசாரணையின் முடிவு எப்படி இருந்தபோதிலும், ஜாக்சனைப் பொறுத்தவரையில் பெரும் பாதிப்பிற்குட்பட்டுத்தான் வெளிவருவார். ஒரு சிறுவனைப் துஸ்பிரயோகத்திற்குட்படுத்துபவர், "அரக்கர்" என்று சித்தரித்துக் காட்டியுள்ள பிறகு, அவற்றில் இருந்து அவர் தப்ப முடியுமா என்பது கேள்விக்கு உரியதுதான். அவருடைய நிதி நிலைமையும் பெருகிய முறையில் அபாயத்திற்கு உட்பட்டுள்ளது.

துஸ்பிரயோகம் செய்த குற்றம் நிரூபிக்கப்பட்டாலும், நிரூபிக்கப்படாவிட்டாலும், ஜாக்சனைப் பொறுத்தவரை உளவியல் மருத்துவ சிகிச்சை அவருக்கு தேவை என்பது வெளிப்படையேயாகும். மிகத் தீவிரமான அத்தகைய சிகிச்சைகூட அமெரிக்காவின் பொதுவெளிச்சத்தில் வாழ்க்கை முழுவதையும் நடத்தி வந்திருக்கும் ஒருவருக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பை முற்றிலும் சரிப்படுத்திவிட முடியுமா என்பதும் கேள்விக்கு உரியதேயாகும்.

அமெரிக்க "கேளிக்கை வணிகம்" (show business) கடுமையான முறையில் மன்னிப்பு வழங்காத வகையில் நடந்து கொள்ளுவது போல் வேறு எந்தச் சமூகத் தொழிற்துறையும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. கணக்கிலடங்கா திறமையான நபர்களின் குருதிகள் படிந்த கரங்களைத்தான் இத்துறை கொண்டுள்ளது. குறுகிய காலத்தில் ஏராளச் சொத்துக் குவிப்பு, பொதுமக்களிடம் இருந்து ஒரு மாவீரனுக்குரிய மரியாதையைப் பெறுதல் (பல நேரமும் போட்டி, காழ்ப்புணர்வு ஆகியவையும் கலந்தது), மற்றும் இடைவிடா வணிக முறையிலான கோரிக்கைகளுக்கு உட்படுத்தப்படுதல் என்பது பல நேரமும் ஒருவரை உடலளவிலே, கலைப்படைப்பு முறையிலோ அல்லது இரண்டிலுமோ கூட மாய்த்துவிடக் கூடிய தன்மையைக் கொண்டுள்ளது ஆகும்.

"இத்துன்பம்" பற்றிய ஒப்புமை முற்றிலும் பொருத்தமற்றது அல்ல. "Super Star" இனை மையமாக கொண்ட பொழுது போக்குத் துறையின் ஓரளவு மக்களுடைய விருப்புகளை கவனத்திற்கு கொண்டுள்ளது. அதிலும் அமெரிக்காவில் இன்றைய நிலையில் பெரும்பாலான மக்கள் உணர்வு மற்றும் அறிவுஜீவித நிலையில் திசை தெரியாமல் நிற்கும் நிலையில் இது கூடுதலாகத்தான் உள்ளது.

இந்தியானாவில், ஹரி என்ற இடத்தில் ஒரு தொழிலாளவர்க்க குடும்பத்தில் வந்த ஜாக்சன் தன்னுடைய பார்வையாளர்களை பற்றி நனவாக இருப்பதுடன், அவர்களுக்கு கடமைப்பட்டுள்ளதாக உணர்ந்துள்ளார். பொது மக்களிடையே இடைவிடாப் புகழைப் பெற்றுத் திகழ வேண்டும் என்பது அவரிடத்தில் ஒரு அழுத்தத்தையும், கோரிக்கையையும் ஏற்படுத்தியுள்ளது மற்றும் இது ஒரு பெரிய சுமக்க முடியாத, கனமான சிலுவையாகவும் அவருக்கு உள்ளது. தனது புகழாரங்கள், தவறுகள் எனப்கூறப்படுபவை செய்துவிட்டதாக கருதப்பட்டால் மிக விரைவில் முற்றிலும் எதிரான விளைவுகளை மக்களிடையே ஏற்படுத்திவிடும் என்பதை அவர் உணரவேண்டும்.

ஆனால் தொழிற்துறையில் நிதித் தேவைகளின் கடுமையான இடைவிடா கோரிக்கை, மக்களுடைய உணர்வுக் கோரிக்கைகளைவிட எப்பொழுதும் அதிகமாகவேதான் இருக்கிறது. பின்னர் பல பேரழிவுகளைக் கொடுக்கும், மிகத் திறமையுடன் தொய்வு இல்லாமல் செயலாற்றிக் கொண்டிருக்கும் உயர் படைப்பாளி இயந்திரமாக இலாபத்தைப் பெறுவதற்கு இந்தத் துறையில் பயன்படுத்திக் கொள்ளப்படுவது முழுமையாக்கப்பட்டிருப்பது போல், உலகில் வேறு எங்கும் காண்முடியாது.

ஆனால் ஒரு கலைஞரால் இந்த உண்மை முழுமையாக அறிந்து கொள்ளப்படுவதில்லை என்பதுதான் உண்மை; பொழுதுபோக்குத் துறையின் நிர்வாகியின் நிலைமையும் அவ்வாறுதான்--- ஆனால் செய்தி ஊடகத் தொகுப்பான இரத்தக் காட்டேரியின் தேவைகளோ தவிர்க்க முடியாமல் பாடகர் அல்லது கலைஞரின் படைப்புத் திறனையும், வாழ்வையையும் கூட உறிஞ்சி எடுத்து விடுகிறது. இறுதியில், பொழுதுபோக்குத் துறைக்குக் கிடைக்கும் நன்மை, கலைஞரின் இழப்பில்தான் உள்ளது. இதை மாற்றியும் கூற முடியும்: தனிப்பட்ட பாடகரோ, நடிகரோ தன்னுடைய ஆன்மாவை முழுமையாக விற்க மறுத்து விடும்போது, பதிவு செய்யும் நிறுவனமோ அல்லது திரைப்படத் தயாரிப்பு நிறுவனமோ சூறையாடப்படுகிறது. இது ஒரு போராட்டம்; பல நேரமும் மரணம் வரை நீடிக்கும் போராட்டம் ஆகும்.

பெரும்பாலானவர்களைவிடக் கடுமையான வாழ்க்கைப் போக்கை ஜாக்சன் "முழுமையாக" கொண்டிருந்தார். கிட்டத்தட்ட தன் வாழ்நாள் முழுவதும், ஒரு நட்சத்திரமாகத் திகழ்ந்த அவர் தான் இருக்கும் இன்றைய நிலைக்கு இசை வணிக அறிவை அதிகம் பெற்றிருந்ததுதான் காரணம். 2003இல் இவர் கைது செய்யப்பட்ட போது, நாம் எழுதியிருந்தோம்: "ஜாக்சனுடைய உடல் மாற்றத்தால் எதற்காக எவரேனும் வெளிப்படையாக அதிர்ச்சி அல்லது சீற்றத்தை அடையவேண்டும்? கலாச்சாரத்தின் சொந்த வாதங்களைத்தான் அவர் பின்பற்றியுள்ளார்; அதன் இடையறா போலியான உண்மையற்ற நிலைப்பாட்டிற்கு அடிமையாக இருந்த விதத்தில், அவற்றின் கோரமாக இருந்தாலும், தர்க்க பூர்வமான முடிவிற்குத்தான் சென்றுள்ளார்."

"இவருடைய பக்குவமற்ற நிலை இதே உண்மைகளுடன்தான் பிணைந்திருப்பது போல் தோன்றும் -- அதாவது காட்சி வணிகக் பிராணியாக (show business cocoon) செலவிடப்பட்ட முழு வாழ்க்கை, ஒரு குறிப்பிட்ட காலத்தின் மிக மகத்தான சக ஊழியர்கள் அவருடைய ஒவ்வொரு ஆசையையும் பூர்த்தி செய்வதற்கு என்றே ஆர்வத்துடன் நின்றிருந்தனர். "பீட்டர் பான் மனப்பான்மை" என்று கூட இதைக் கூறலாம்; வெளிப்படையாகத் தெரிந்திருந்த போலித் திருமணம், இவருடைய மூன்றாம் குழந்தைக்கு ஒரு துணைத் தாயார், அனைத்துமே மோதல்கள் நிறைந்த கோரிக்கைகளின் தொகுப்பில் சிக்கி அல்லாடும் ஒரு மனிதனைத்தான் காட்டுகின்றன." (See "Michael Jaskson's Tragedy")

வலதுசாரிகளின் இலக்கு

அதே நேரத்தில், மைக்கேல் ஜாக்சனுடைய விசாரணை அமெரிக்காவின் வினோதமான, வளர்ச்சியற்ற அதிகாரபூர்வ அரசியல் வாழ்விலும் உரிய இடத்தைப் பெற்றுள்ளது. சான்டா பார்பாரா மாவட்ட அரசு வக்கீலான ஸ்னெட்டன் ஒரு சொந்த எதிர்ப்பையும் ஐயத்திற்கு இடமின்றிக் கொண்டிருக்கிறார். 1993இல் இதேபோன்ற குற்றச் சாட்டுக்களைச் சுமத்தியிருந்தபோது, பாடகரைத் தண்டனைக்கு உட்படுத்தமுடியாமல் போன பின்னர், இவர் ஜாக்சனுடைய பாடல்கள் ஒன்றில் மறைமுகத் தாக்குதலுக்கு உட்பட்டிருந்தார். எவ்வாறாயினும், ஒரு குடியரசுக் கட்சியின் பிற்போக்குச் "சட்ட, ஒழுங்கு" காப்பாளரான ("வெறி நாய்" என்ற புனைப்பெயர் சூட்டப்பட்டிருந்த) ஸ்னெட்டன், ஜாக்சன் மீது காட்டிய விரோதப்போக்கு இன்னும் கூடுதலான உள்நோக்கங்களை கொண்டிருந்தது.

தாராளவாதத்தின் சின்னம் என்று கருதப்பட்ட ஜாக்சன், அதிதீவிர வலதுக்கு மிகவும் கண்டனத்திற்குரியவராக நினைக்கப்பட்டார்: அமெரிக்க மக்கள் கொண்டுள்ள திசை திரும்பிய சீற்றத்தின் ஒரு பகுதியை இப்பிற்போக்குக் கூறுபாடுகள் மனித இலக்குகள் மீது திருப்பின; அந்த இலக்குகளில் ஒருவர்தான் இந்த மனிதர் ஆவார். இனவாதம், ஓரினசேர்க்கை குற்றச்சாட்டு இவை அவர்களுடைய தாக்குதலுக்கு அடித்தளத்தில் நிரம்பியிருப்பவை ஆகும். கீழ்த்தர உணர்வைத் தூண்டிவிடும் வலதுசாரி, எப்பொழுதும் சாக்கடையை நாடும் வலது சாரி, ஜாக்சன் நிகழ்த்தியதாகக் கூறப்படும் குற்றச் சாட்டுக்களுக்கு ஆயுட்காலத் தண்டனை, விதையை அழித்துவிடல், தூக்கிலிடுதல் போன்ற தண்டனைகள் கூடப் போதாதவை என்று கருதுகிறது.

இத்தகைய பாலியல் சூனிய வேட்டைக்காரர்கள் தாங்கள் துரத்த வேண்டிய இலக்கைப் பற்றி வெளிப்படையாகவே ஆர்வத்தைக் காட்டி ஈர்க்கவும்படுகின்றனர். இங்கு நாம் அமெரிக்காவின் கடுந்தூய்மையாளர் (Puritan) மரபு முற்றிலும் வெளிப்பட்டு நிற்பதைக் காண்கிறோம். கிளின்டன்-லுவின்ஸ்கி அவதூறு சம்பவம் செய்தி ஊடகத்தில் கீழ்த்தர உணர்வையும், வக்கிர உணர்வையும் மடை திறந்தது போல் வெளிப்படுத்தியது இன்னும் முடிவைக் காணவில்லை. வலது சாரி, பாசிச ஆர்வமுடைய குழுவிடம் தாங்கள் வெறுக்கும் நபரிடம் மட்டமான குணங்கள் உள்ளனவா என்று துருவித் தேடும் இயல்பு பற்றிய தாகவேட்கை, மிகைப்படுத்தப்பட்டாலும், புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்டாலும், தீராத வேட்கையாகத்தான் உள்ளது.

தன்னுடைய பங்கிற்கு, செய்தி ஊடகத்தின் முக்கிய பிரிவுகள், ஜாக்சன் விசாரணை போன்ற வழக்குகளில், இரட்டைக் கொள்கைகளை செயல்படுத்துகின்றன. ஒரு புறம் தொலைக்காட்சி வலைபின்னல்களும் செய்தித்தாள்களும் ஒன்றோடு ஒன்று போட்டியிட்டு மக்களுக்கு ஏராளமான சமீபத்திய கீழ்த்தரக் குற்றச் சாட்டுக்களை வாரி வழங்குகின்றன. மறுபுறத்தில், தலையங்கம் எழுதுபவர்களும், கட்டுரையாளர்களும் இத்தகைய வழக்கிற்குக் கொடுக்கப்படும் கவனத்தைப் பற்றி புலம்புவதுடன் இவ்வளவு விவரங்கள் கொடுத்தும் திருப்தியடையாத மக்களின் வீழ்ச்சியடைந்துவிட்ட அறநெறித் தன்மையைப் பற்றி எழுதுகின்றனர்.

மக்களுக்கு ஈர்ப்பு இருந்தாலும் இல்லையென்றாலும், ஜாக்சன் விவகாரத்தில் ஒருவித அலுப்பு வந்துவிட்டது என்ற உணர்வு ஏற்பட்டாலும், அவர்கள் எதிர்பார்ப்பது போல் நடக்கவில்லை. செய்தி ஊடகம் வெளிப்படுத்தும் அவதூறுகள் ஒன்றைத் தொடர்ந்து ஒன்று கடிகாரம் வேலைசெய்வது போல் வெளிவருகின்றன. ஒவ்வொன்றும் தேசிய கவனத்தின் ஈர்ப்பிற்கு கொண்டு செல்லப்படுகிறது, அடுத்தது பின்னால் இருந்து அடுத்ததுவந்து முட்டும் வரை அது முதலிடம் வகிக்கிறது.

ஒரு இரண்டு வாரங்களுக்கு பெரும் புகழ் பெற்றவர் பற்றிய அவதூறோ அல்லது மிகக் கொடூரமான கொலை நிகழவில்லை என்றால், செய்தி ஊடகமும் அதன் பேசும் முகங்களும் தளர்ச்சி அடைகின்றன. Kobe Bryant, Martha Stewart, Scott Peterson, Robert Blake மற்றும் Jackson வழக்குகள், பொது மக்களின் அறிவு, கெளரவமான நிலைப்பாடு ஆகியவற்றின்மீது, ஒரு தொடர்ந்த, நீண்ட, இழிவான தாக்குதலாகப் பிணைந்து வெளிவருகின்றன.

அமெரிக்கச் செய்தி ஊடகம் "மஞ்சள் பத்திரிக்கையின்" பெரிய விரிவாக்கம் என இருக்க வேண்டும் என்ற அடிப்படையான போக்கைக் கொண்டிருக்கிறது; பரபரப்பு ஊழல்கள், அவதூறுகள் வெளிப்படுத்தப்படுதல், என்பவை "கெளரவமான" ஏடுகளுக்குள் கூட நடைமுறையாகி வருகின்றன. சமூக முரண்பாடுகள், பதட்டங்கள் ஆகியவை பெருகி வரும் நாடாக அமெரிக்கா உள்ளது; இவற்றில் பலவும் வெளிப்படையாக விவாதிக்கப்படுவது இல்லை. செல்வந்ததட்டிற்கும் மற்ற மக்களுக்கும் இடையே இருக்கும் பெரும் பிளவு, செய்தி ஊடகத்தைப் பொறுத்தவரையில் இரகசியமாகத்தான் இருக்கும்.

அப்படி இருந்தபோதிலும்கூட செய்தி ஊடக ஸ்தாபனங்கள் அன்றாட அமெரிக்க வாழ்வில் இருக்கும் மன நிறைவற்ற தன்மை, தவிக்கும் தன்மை இவை எவ்வாறு பல நேரமும் வன்முறையான, சமூக விரோதச் செயல்களாக வெளிப்படுகின்றன என்பதை நன்கு அறிந்துள்ளது. "மஞ்சள் பத்திரிக்கை" பணியே இந்த மக்கள் விரோதத்தைப் பயன்படுத்திக் கொள்ளுவது, அதேநேரத்தில் இதற்கு அடிப்படையில் உள்ள முதலாளித்துவத்தில் இருக்கும் சமூக உறவுகள் பற்றி மத்தியப்படுத்துவதை இல்லாமற் செய்துவிடவேண்டும் என்பதே அதன் எண்ணம். குழப்பம் நிறைந்த, மிகக்கூடுதலான ஊதியம் பெறும் கலைஞர்கள், பாடகர்கள் பால் இருக்கும் விரோதப் போக்கு, ஏன் பெருநிறுவனங்களின் தனிக்குற்றவாளிகள் மீது இருக்கும் அத்தகைய விரோதப் போக்கு கூட எளிதில் திரித்துத் திசைதிருப்பப்பட்டுவிடலாம்.

மேலும் ஈராக் போர், அதன் இறப்புக்கள் கொடுமைகள் இவற்றில் இருந்து கவனத்தைத் திருப்பும் தேவையும் உள்ளது, மேலும் சிரியா, ஈரான், மற்றும் பல அமெரிக்க ஏகாதிபத்திய நலன்களுக்கு எதிராக இருக்கும் இலக்குகள் மீதி புதிய ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளைத் தயாரிப்பதற்கான நடவடிக்கைகள் மீதும் கவனத்தைத் திருப்ப வேண்டும் என்ற கட்டாயம் ஊடகத்திற்கு உள்ளது.

மைக்கேல் ஜாக்சன் சட்டப்படி என்ன முடிவைக் காண்பார் என்பது தெளிவாக இல்லை. ஒவ்வொரு நாளும் தன்னுடைய குரலை மாற்றிக் கொள்ளும் ஊடகமும் எவ்வாறு முடிவு இருக்க வேண்டும் என்பது பற்றியும் முடிவெடுக்கவில்லை. பாடகர் தண்டனை பெற்று ஒரு பாலியல் கொள்ளைக்காரர் என்று முத்திரையிடப்படலாம்----இந்த முடிவு பல செய்தி ஊடக இயக்குனர்களுக்குப் பெரு மகிழச்சி தரும் விளைவாக இருக்கலாம். மாறாக, ஜாக்சன் "குற்றமற்றவர்" எனக் கூறப்பட்டு ஓரளவு பழைய புகழிற்குத் திரும்பக் கூடிய வாய்ப்பும் உள்ளது. அப்படி ஏற்பட்டால் பாடகர் மக்களுடைய உள்ளத்தை விட்டு எந்தநாளும் நீங்காமல்தான் இருந்தார் என்ற நினைப்புத்தான் நம்மிடையே எஞ்சி இருக்கும்.

எப்படிப்பார்த்தாலும், செய்தி ஊடகத்தின் சர்க்கஸ் அங்கிருந்த நகர்ந்து அடுத்த இடத்திற்குச் செல்லும், தன்னால் விளைவிக்கப்பட்டுள்ள இழிநிலையைப் பற்றி அது சிறிதும் பொருட்படுத்தாமல் தன்வழியே செல்லும்.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved